நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 52

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்து ஏற்பாடு செய்த கொலையாள் இனியன் கையில் துப்பாக்கியை கண்டதும் பயத்தில் ஓரடி பின்னால் நகர்ந்து நின்றான்.

"யார் நீ..?" என்றவனை வெறுப்போடு பார்த்தான் இனியன். அவனை அதே இடத்தில் சுட்டுக் கொல்ல துடித்தது அவன் மனம். ஆனால் தான் இப்படி ஏதாவது அவசரப்பட்டு செய்து விட்டால் பின்னர் அம்மா தன்னை என்றுமே மன்னிக்க மாட்டாள் என்பதை அறிவான். அதனால் தன் முன் கோபத்தை கட்டுப்படுத்த ரொம்ப முயன்றான்.

"நான் யாருங்கறது உனக்கு முக்கியம் கிடையாது.. அந்த பணத்தை என்கிட்ட கொடு.. சக்தி மேடத்தை நீதான் கொலை பண்ண முயற்சி பண்ணன்னு நீயே போலிஸ்ல போய் சரணடைஞ்சிடு.." என்றான் இனியன் துப்பாக்கியால் அவன் நெற்றிக்கு குறி பார்த்தபடியே.

"நீ என்ன பைத்தியமா..? நான் ஏன் போலிஸ்ல போய் சரண்டையணும்..? நான் எந்த சக்தியையும் கொல்லல.. என்கிட்ட எந்த பணமும் இல்ல.."
அவன் தைரியத்தை மனதுக்குள் பாராட்டினான் இனியன்.

"நீ போய் போலிஸ்ல சரண்டைஞ்சா நீ உயிரோடாவது இருப்ப.. இல்லன்னா நான் உன்னை இங்கேயே கொன்னு இந்த மாந்தோப்புலயே புதைச்சிடுவேன்.." என்றான் துப்பாக்கியால் அவனது நெற்றியை அழுத்தமாக அழுத்தியபடியே.

கொலைக்காரன் அவனிடமிருந்து விலக முயல இனியன் துப்பாக்கியில் சைலண்சரை மாட்டி அவன் காலருகே சுட்டான். துப்பாக்கியின் குண்டு அவன் காலை மைக்ரோ மீட்டர் இடைவெளியில் தள்ளி மண்ணில் பாய்ந்தது.

கொலைக்காரன் எக்கச்சக்கமாக பயந்து விட்டான். அவன் முகம் நொடியில் வியர்த்து விட்டது. துப்பாக்கியையும் இனியனையும் மாறி மாறி பார்த்தான்.

"என்ன அப்படி பார்க்கற..? எனக்கு சரியா குறி வைக்க தெரியலன்னு நினைக்கிறியா..? .. உனக்கு சந்தேகம்ன்னா சொல்லு உன் கையையோ காலையோ சுட்டு காட்டுறேன்.." என்றவன் துப்பாக்கியை அவன் கழுத்துக்கு கீழே கொண்டு வர கொலைக்காரன் தன் கையிலிருந்த மூட்டையை போட்டுவிட்டு தன் இரு கைகளையும் மேலே தூக்கினான்.

"இந்த பணம் முழுக்க நீயே வச்சிக்க.. என்னை உயிரோடு விட்டுடு.." என்றான் கெஞ்சலாக.

"உன்னை கொல்ல எனக்கும் விருப்பம் இல்ல.. ஆனா நீ போலிஸ்ல சரண்டையல்லன்னா நான் உன்னை தேடி வந்து கொல்வேன்.."

"இல்ல.. வேணாம்.. வேணாம்.. நானே போலிஸ்ல சரண்டைஞ்சிடுறேன்.." என்றவன் அந்த மாந்தோப்பை விட்டு வேகமாக வெளியே ஓடினான். தூரத்தில் மாந்தோப்பு காவலாளி அவனை கண்டு கையை பிடித்து நிறுத்தினான்.

"என்னப்பா நீ பேயை பார்த்த மாதிரி பயந்து ஓடுற..?" என்றான் குழப்பமாக.

"பேயெல்லாம் இல்ல.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. நான் போறேன்.." என்றவன் அவன் கையிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடினான். காவலாளி அவனை விசித்திரமாக பார்த்துவிட்டு மாந்தோப்பை சுற்றி நடக்க ஆரம்பித்தார்.

இனியன் பண மூட்டையோடு சுவற்றின் மீதேறி வெளியே குதித்தான். அவன் குதித்த நேரத்தில் அவனை காவலாளி பார்த்து விட்டான்.

"ஏய்.. யாருடா நீ..?" என கேட்டுக் கொண்டே ஓடியவன் மதில் சுவரேறி அந்த பக்கம் பார்த்தபோது ஈ காக்கை கூட அவன் கண்ணுக்கு தட்டுபடவில்லை.

"ஒருத்தன் சுவரேறி குதிச்ச மாதிரி இருந்துச்சே.. ஏன் ஒருத்தரும் கண்ணுல படல.." என தனக்கு தானே கேட்டவனுக்கு திடீரென பயம் பிடித்துக் கொண்டது.

"இந்த மாந்தோப்புல புதைக்கப்பட்ட காதலர்களோட ஆவி இந்த மாந்தோப்பையே சுத்துதுன்னு அன்னைக்கே ஒருத்தன் என்கிட்ட சொன்னான்.. நான்தான் அதை நம்பாம போயிட்டேன்.." என்றவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் பார்க்கும் திசையெங்கும் இருட்டில் ஆங்காங்கே உருவங்கள் நிற்பது போலவே இருந்தது. மாமரங்கள் யாவம் பூதமாக கண்ணில் பட்டது. நடுங்கியபடியே குடோனுக்கு சென்றவன் வெளிச்சத்தை கண்டதும் பயம் மறந்து அங்கேயே தங்கி விட்டான்.

இனியன் மாந்தோப்புக்கு வரும் முன் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தன் பயண பையை வைத்து விட்டுதான் வந்தான்.

மணி நடுநிசி ஆகிக் கொண்டிருந்தது. தனது ஹோட்டல் அறையில் நுழைந்தவன் கதவை தாளிட்டு விட்டு மூட்டையிலிருந்த பணத்தை கட்டிலின் மீது கொட்டினான்.

"இவ்வளவு பணமா..? பரம்பரை சொத்தா..? இல்ல கட்டப்பஞ்சாயத்து பண்ணியே சம்பாதிச்சதா தெரியல.." என்றவன் பண கட்டை எடுத்து முகர்ந்து பார்த்தான்.

"எல்லாமே புது பணம் .. உங்ககிட்ட இவ்வளவு காசு இருந்து என்னங்கடா பிரயோஜனம்..? உங்க காசை வச்சி அன்பை விலைக்கு வாங்க முடியுமா..?" அந்த பணத்தை தன் பேக்கில் நிறைத்து வைத்து விட்டு உறங்க ஆரம்பித்தான்.

குமரன் வீட்டின் காலிங்பெல் நடுநிசி நேரத்தில் ஒலித்தது. குமரன் அரை தூக்கத்தோடு எழுந்து வந்து கதவை திறந்தார். அவரது வீட்டு வாசலில் ஒருவன் பயத்தோடு நின்றுக் கொண்டிருந்தான்.

"யாருப்பா நீ..? ஏன் இப்படி பயந்து போய் இருக்க..?" என்றார்.

"ஸார் நான்தான் போலிஸ் இன்ஸ்பெக்டர் சக்தியை கத்தியால் குத்தினேன்.. அவங்களை கொலை பண்ண சொன்ன ஆளை நான் சொல்றேன்.. நான் அப்ரூவரா மாறுறேன்.. எனக்கு தண்டனையும் பாதுகாப்பும் கொடுங்க.."

அவன் சொன்னதை கேட்டு குமரன் குழம்பி போனார்.

"சக்தியை நீ கத்தியால குத்திட்டியா..?" அதிர்ச்சியோடு கேட்டவருக்கு யாருமே நடந்த விசயத்தை சொல்லவில்லை.

அவசரமாக தன் போனை எடுத்தவர் மகேஷின் நம்பருக்கு அழைத்தார். நடு இரவில் அவன் குரல் தூக்க கலக்கத்தில் கேட்காமல் சோகமாக கேட்கவும் ஓரளவு விசயத்தை யூகித்து விட்டார் இவர்.

"சக்திக்கு என்ன ஆச்சி..?" என்றார் பதற்றத்தோடு.

"யாரோ அவளுக்கு கத்தி வீசிட்டாங்க மாமா.. ஜஸ்ட் மிஸ்ஸுல உயிர் தப்பிச்சா.. ஆனா ரொம்ப சீரியஸ் கன்டிசன்லதான் இருக்கா.." மகேஷ் சொன்னது கேட்டு அதிர்ச்சியடைந்த குமரன் தன் எதிரில் நிற்பவனை நெருப்பாக பார்த்தார்.

"அந்த யாரோ இப்ப என் முன்னாடிதான் இருக்கான்.. அப்ரூவரா மாறுறேன்னு என்னை தேடி வந்திருக்கான்.."

"அவனை கொன்னுடுங்க மாமா.. நானே கூட அவன் சாவுக்கு பொறுப்பேத்துக்கிட்டு ஜெயிலுக்கு போறேன்.. இல்லன்னா அவனை அங்கேயே பிடிச்சி வைங்க.. நானே வந்து அவனை கண்டம் துண்டமாக வெட்டி போடுறேன்.." என்றான் ஆத்திரத்தோடு மகேஷ்.

குமரன் அவன் சொன்னதை கேட்டு எரிச்சலடைந்தார். "ஏன் உங்க அப்பாவை காப்பாத்தவா..?" என இவர் கேட்கவும் அவன் அந்த புறம் மௌனமாகி விட்டான்.

"சக்தியோட ஒரே எதிரி உன் அப்பாதான்.. அவரோட சாதி வெறிக்கு அவர் சக்தியை பலிக் கொடுக்க நினைக்கிறது உனக்கும் நல்லாவே தெரியும்.. அவரை அடக்க இப்பதான் நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு.. அந்த சான்ஸையும் வேஸ்ட் பண்ணிட்டு உன் பொண்டாட்டியை எமனுக்கு தர போறியா..?"

"நான் அதை யோசிக்கல மாமா.. நீங்க உங்க இஷ்டப்படியே செய்ங்க.."

"சரி நான் அப்புறம் போன் பண்றேன்.." அவனுடனான அழைப்பை துண்டித்தவர் தன் டிரைவரை போனில் அழைத்தார். டிரைவரை உடனே கிளம்பி வீட்டுக்கு வர சொன்னவர் போனை வைத்து வட்டு தன் முன் நின்றிருந்தவனை பார்த்தார்.

"உனக்கு எப்படி திடீர் ஞானயோதயம் வந்துச்சி..?" என்றார்.

அவன் இனியனின் துப்பாக்கியை நினைத்து உடம்பு நடுங்கியபடி குமரனை பார்த்தான்.

"செஞ்ச தப்புக்கு பிரயாசித்தம் தேடுறேன் ஸார்.." என்றவனை குமரனால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் தானாக வந்து சரணடைந்தவனுக்கு அதிக அழுத்தம் தர கூடாது என எண்ணி அமைதியாகி கொண்டார்.

டிரைவர் காரோடு வந்ததும் கைதியை தன்னோடு அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

மறுநாள் கண்விழித்த முத்து தலைவலியோடு எழுந்து அமர்ந்தார். அவர் கண்களில் முதலில் தென்பட்டது ரகசிய அறையின் சாவிதான். எப்போதும் தன்னிடம் இருக்கும் சாவி ஏன் இன்று மேஜை மேல் உள்ளது என குழப்பத்தோடு எழுந்தார். போதை தந்த தலைவலியோடு சாவியை கையில் எடுத்தவர் ரகசிய அறையை திறந்தார். உள்ளே ஒற்றை ரூபாய் கூட இல்லை. பகீரென நெஞ்சை பிடித்தபடி அமர்ந்தவர் அவசரமாக தன் போனை எடுத்து மகேஷை அழைத்தார்.

"ஹலோ.. மகேஷ்.. மாந்தோப்பு குடோன்ல வச்சிருந்த பணம் காணாம போயிடுச்சி.." என்றார் அவசர குரலில்.

"அந்த பணம் காணாம போனா என்ன..? எது நாசமா போனா எனக்கென்ன..? என் பெண்டாட்டி சாக கிடக்கறா.. உங்களுக்கு உங்க பணம் முக்கியமா போச்சா..?"

'அப்படின்னா இன்னும் அவ சாகலையா..?' என சிந்தித்தவர், "டேய் அந்த பணத்தை நான் உனக்காகதான்டா சேர்த்து வச்சேன்.." என்றார்.

எதிர் முனையில் வெறுப்பாக சிரித்தான் மகேஷ். "எனக்கு உங்க பணம் வேணாம் .. எனக்கான பொக்கிஷம் என் பெண்டாட்டி மட்டும்தான்.. அவளோடையே என்னால சேர்ந்து வாழ முடியல.. என் பொண்டாட்டியோட காதல் தராத சந்தோசத்தை உங்க பணம் எனக்கு தராதுப்பா.. என் புள்ளையை நீங்க கொன்னிங்க இல்ல..? சக்தி மட்டும் குணமாகி எழலன்னா நானும் செத்துதான் போகபோறேன்.. என் புள்ளை இல்லைன்னு நான் எப்படி அழறனோ அதே மாதிரி நீங்களும் அழப்போறிங்க.." என்றவன் தொடர்ப்பை துண்டித்துக் கொண்டான்.

முத்து செல்போனையே வெறித்து பார்த்தார். தன் மகன் பணத்துக்காகவேனும் தன் பேச்சை கேட்பான் என அவர் கொண்டிருந்த மலையளவு நம்பிக்கை அடியோடு இன்று அழிந்து விட்டது. நெற்றியில் கை வைத்தபடி அமர்ந்திருந்தவர் மகேஷ் சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்த்தார். 'ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஆனால் இவனும் ஏதாவது பண்ணிப்பானா..? என் குடும்பத்தோட வாரிசே இவன்தான்.. இவனுக்கு ஏதாவது ஆகிட்டா இந்த குடும்பத்தோட பெருமை, எங்க குலத்தோட வம்ச வரலாறுன்னு எல்லாமே அழிஞ்சிடுமே..' யோசனையில் இருந்தவரின் காதில் குறட்டை சத்தமொன்று கேட்டது. திரும்பி பார்த்தார்.

மாந்தோப்பு காவலாளி கயிற்று கட்டில் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் அருகே சென்று கட்டிலை கவிழ்த்து விட்டார் முத்து.

தரையில் பொத்தென எழுந்தவன் விதிர்த்து போய் எழுந்து நின்றான். முத்துவை கண்டவன் அனிச்சையாக கையை கட்டிக் கொண்டான்.

"நேத்து நைட் யாருடா மாந்தோப்புக்கு வந்தது..?" என்றார் ஆத்திரத்தோடு.

"நீங்கதான்ய்யா ஒருத்தனை கூட்டி வந்து குடோன்ல உட்கார வச்சி சரக்கடிச்சிட்டு இருந்திங்க.."

முத்துவின் நினைவில் சட்டென வந்து போனான் அவர் சக்தியை கொல்ல ஏற்பாடு செய்திருந்த கூலிக்காரன். 'அவன்தான் பணத்தை எடுத்துட்டு போயிருப்பான்..' என்றவர் உடனடியாக வெளியே கிளம்பினார்.

குமரன் தன் அலுவலக அறையில் வேலையில் மூழ்கியிருந்தபோது அங்கே காற்றாக வந்து நின்றார் முத்து.

"எங்க மாந்தோப்புல வச்சிருந்த பணத்தை யாரோ திருட்டிட்டு போயிட்டாங்க.. உடனே கேஸ் எழுதிட்டு அவனை கண்டுபிடி.." என அவசரமாக சொல்லியவரின் கையில் விலங்கை மாட்டினார் ஒரு போலிஸ்.

"குமரா.. என்ன இது..?" என்றவரை மேலும் கீழும் பார்த்த குமரன் "எங்க டிபார்ட்மெண்டை சேர்ந்த சக்தியை நீங்க ஆளை வச்சி கொலை பண்ண முயற்சி செஞ்ச குற்றத்துக்கு உங்களை அரெஸ்ட் பண்றோம்.." என்றார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN