நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

52. வாசமென வந்த சுவாசமே

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பொழுது அழகாக விடிந்திருந்தது.

கதிர் தயாராகி ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தான். மைவிழி இருந்த அறைக்குள் நுழைய முயன்றவனை வாசலிலேயே நெஞ்சின் மீது கை வைத்து நிறுத்தினான் சரண்.

அவனை கொலை செய்யும் ஆத்திரத்தோடு பார்த்தான் கதிர்.

"ஓவரா பண்ணாத சரண்.." என்றான் கோபத்தை அடக்கியபடி அவனை பார்த்தான்.

"இங்கே ஏன் வந்திங்க..? நான்தான் டைவர்ஸ் வாங்கிக்கன்னு சொன்னேன் இல்லையா..?" என்றபடி அங்கு வந்தார் மைவிழியின் அப்பா.

"டைவர்ஸ்.. டைவர்ஸ்ன்னு சொல்றிங்க.. உங்களுக்கா நான் தாலியை கட்டினேன்..? சும்மா பேசணும்ன்னு பேசிட்டு இருக்காதிங்க.. என் பொண்டாட்டி ஒன்னும் செத்து போகல.. அவளோட வாழ்க்கையில் முடிவு எடுக்க அவளுக்கு தெரியும்.. அவ எழுந்த பிறகு அவளே எதுவா இருந்தாலும் சொல்லட்டும்.." என்றவன் சரணின் கையை தட்டிவிட்டு வெளியே நடந்தான். வராந்தாவில் வரிசையாக இருந்த நாற்காலியில் ஒன்றில் அமர்ந்தான்.

"அவ என்னை பிடிக்கலன்னு சொன்னா.. நான் அவளை பிடிக்கலன்னு சொன்னேன்.. ஆனா யாரும் எங்க பேச்சை கேட்கல.. எங்களோட பிடிவாதத்துக்கோ எங்களோட விருப்பு வெறுப்புக்கோ முக்கியத்துவம் தராம கட்டாய கல்யாணம் பண்ணி வச்சாங்க.. இன்னைக்கு நாங்களா பேசி பழகி செட்டான பிறகு டைவர்ஸ் வாங்கி தராங்களாம்.. *** வெளக்கெண்ணைங்க.. லாபமோ நஷ்டமோ எங்க வாழ்க்கையை எங்களுக்கு பார்த்துக்க தெரியாதா..?" காற்றோடு புலம்பிக் கொண்டிருந்தவனை அந்த வழியில் சென்றவர்கள் ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றனர்.

"எதுக்கு இப்படி லூஸு மாதிரி உளறிக்கிட்டு இருக்க..?" என்றபடி அவனருகே வந்து அமர்ந்தாள் ருத்ரா.

"இவங்க யாரு எங்க வாழ்க்கையில் குறுக்க வர..?" ஆத்திரத்தோடு கேட்டான் கதிர்.

"அவங்க அவளோட பெத்தவங்க.. அவங்களுக்கு எல்லா ரூல்ஸ்ம் இருக்கு.. ஆனா கட்டின பொண்டாட்டியை அவ விருப்பத்துக்கு மாறா நடத்தத்தான் எந்த புருசனுக்கும் ரூல்ஸ் கிடையாது.."

"ருத்ரா.. தயவு செஞ்சி எழுந்து தூரமா போயிடு.. ஏற்கனவே ஆத்திரத்துல இருக்கேன்.. அப்புறம் அடிச்சி பல்லை உடைச்சி வச்சிடுவேன்.. அட்வைஸ் கருமத்தையெல்லாம் அவளோட அப்பனுக்கு போய் சொல்லு.. என்கிட்ட வந்து சொல்லாத.. வாழ்கையில் சின்னதா தடுமாற கூடாதா.. அப்படியே ஆளாளும் அட்வைஸ் *** பண்ணிக்கிட்டு வந்திடுறிங்க.."

அவன் எரிந்து விழுந்தான். ருத்ரா அவனருகே அமர்ந்ததற்கு வருத்தப்பட்டாள்.

***
"சத்தியமா நான் அழவே மாட்டேன்.." வாலுபையனின் குட்டி உள்ளங்கையில் தன் உள்ளங்கையை வைத்தாள் மைவிழி.

"நாளைக்கு நான் உனக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிட்டு வரேன்.." என்ற வாலுபையன் அவளோடு கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு கிளம்பி போனான்.
அதன் பின்னர் தினமும் ஆரஞ்சி மிட்டாயோடு அவளை பார்க்க வந்தான் அவன். அவளால் அவனுக்கு ஆரஞ்சி மிட்டாயும் புளிப்பு சுவையும் பிடித்து போனது. தினமும் ஆரஞ்சி மிட்டாயை சுவைத்தபடி தண்டவாளத்தின் மீது நடப்பது இருவருக்கும் பிடித்தமான ஒரு வேலையாக மாறி போனது. ஆனாலும் கூட தினமும் தண்டவாளத்தின் மீது கருங்கற்களை அடுக்கி வைத்து தங்கம் வெள்ளி வரவழைக்கும் சோதனையை மேற்கொள்ளாமல் இல்லை இருவரும்.
ஒரு மாதமாக அவர்களுக்குள் இருந்த நட்பு நன்றாக வளர்ந்தது.

மறுநாள் தனக்கு பிறந்த நாள் என வாலுபையனிடம் சொன்னாள் மைவிழி. அவளுக்கு பிடித்த ஆரஞ்சி மிட்டாயோடு சேர்த்து டெய்ரி மில்க் சாக்லேட்டும் வாங்கி வருவதாக சொன்னான் அந்த வாலுபையன்.

மறுநாள் அவனுக்காக வந்து காத்திருந்தாள் மைவிழி. நேரம் மட்டும் சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் அவன் வரவில்லை. மாலை மங்க ஆரம்பித்தது. ஆனால் வாலுபையன் வரவேயில்லை. அவள் அன்று முழுக்க அங்கு காத்திருந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு வீடு திரும்பினாள். தனது வீட்டிற்கு செல்கையில் அவளுக்கு ஏனோ அழுகையாக வந்தது. ஆனால் அவளுக்கு அழ பிடிக்கவில்லை.

அதன் பிறகு மறுநாளும் அந்த வாலுபையன் வரவில்லை. அதன்பிறகு வந்த எந்த நாளிலுமே அவன் அவளை பார்க்க வரவே இல்லை. அவளது வாழ்க்கையிலிருந்து வாலுபையன் என்ற ஒரு கதாபாத்திரம் காணாமல் போய்விட்டது. ஆனால் தினமும் தண்டவாளத்தின் மீது அமர்ந்து அவனுக்காக காத்திருப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

காலம் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது. ஆனால் அவன் வரவே இல்லை.

"மைவிழி.." என்ற குரல் ஒன்று கேட்டது.

"வாலுபையா.." ஆவலோடு திரும்பினாள் அவள்.

அவள் முன்னால் வாலுபையன் புன்னகையோடு நின்றிருந்தான். மைவிழி அழகு சிரிப்போடு எழுந்து நின்றாள். "இவ்வளவு நாள் ஏன் என்னை பார்க்க வரல.." என கேட்டவள் தன் விரல் நீட்டி அவனது கன்னம் தொட்டாள். அவன் சிரிப்போடு காற்றில் கரைந்தான். தன் முன்னால் மறைந்தவனை கண்டு குழம்பி போனாள் மைவிழி.

"மைவிழி.." மீண்டும் ஒரு குரல் கேட்டது. தயக்கமாக திரும்பி பார்த்தாள். யாரும் அவளது பார்வைக்கு தென்படவில்லை.

"மைவிழி.." இவ்வளவு நேரம் மெதுவாக கேட்ட குரல் இப்போது சத்தமாக கேட்டது. அவள் முன் தெரிந்த ரயில் தண்டவாளம் மறைந்து இருட்டு மட்டுமே தென்பட்டது. கண்களை மூடி மீண்டும் திறந்தாள். ஆனால் கண்களை திறக்கவே கடினமாக இருந்தது. சிரமத்தோடு கண்களை திறந்தவளின் முன்னால் செழியனின் முகம் தென்பட்டது. குழம்பிபோய் மீண்டும் கண்களை மூடி திறந்தாள். இவ்வளவு நேரம் கண்டது அனைத்தும் மனதில் நின்ற நினைவுகள் என புரிந்துக் கொண்டவள் எழுந்து அமர முயன்றாள்.

"எழாத விழி.. படுத்துக்கோ.." என்றான் செழியன்.

அவளுக்கு நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தது. சுற்றிலும் பார்த்தாள். தான் ஹாஸ்பிட்டலில் இருப்பதை புரிந்துக் கொண்டாள்.

"உடம்புல எங்கேயாவது வலிக்குதா விழி..?" கவலையோடு கேட்டான் செழியன்.

"இல்ல.." என்று தலையசைத்தவளது கண்கள் கதிரை தேடியது.

கடைசியாக அவனது நெஞ்சில் சாய்ந்து இருந்தது நினைவுக்கு வந்தது. தான் எந்த அளவிற்கு அவனை கோபப்படுத்தி விட்டோம் என்பது புரிந்ததும் அவளுக்கு உடனடியாக பயம் வந்தது. கதிர் தன்னை மன்னிப்பானா என்று கவலைப்பட்டாள்.

அப்பா அவளருகே வந்து அவளது நெற்றியை தொட்டு பார்த்தார். காய்ச்சல் அதிகமாக இல்லை. ஆனாலும் நெற்றி கொஞ்சம் சூடாகவேதான் இருந்தது.
செழியன் எழுந்து வெளியே நடந்தான். கதிர் தலையை பிடித்தபடி அமர்ந்திருப்பதை கண்டவன் அவனருகே சென்று அவனது தோளில் கை வைத்தான். கதிர் கடுப்போடு நிமிர்ந்து பார்த்தான்.

"என்ன..?" நெருப்பாக இருந்தது அவனது ஒற்றை வார்த்தை.

"மைவிழி எழுந்துட்டா.." செழியன் இதை சொன்னவுடன் விருட்டென எழுந்த கதிர் அவள் இருந்த அறையை நோக்கி ஓடினான்.

மைவிழி சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தாள். "இந்த பாலை குடி.." என்று டம்ளரை நீட்டினான் சரண்.

மைவிழி அவனை சந்தேக கண்களோடு பார்த்தாள். 'பாலுல விஷம் ஏதும் கலந்துட்டானா..?' மனதில் இயல்பாக தோன்றியது கேள்வி.

"விழி.." என அழைத்தபடி அந்த அறைக்குள் ஓடி வந்தான் கதிர். அவளருகே வந்தவன் நொடியில் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவனது செய்கையால் அவளுக்கு முகம் சிவந்து போனது. அவள் அவனை திருப்பி அணைக்க முயலும் முன் அவனை அவளிடமிருந்து விலக்கி தூர தள்ளினான் சரண்.

"இவ பக்கத்துல வந்தா உன்னை கொன்னுடுவேன்.." என சரண் சொல்லவும் மைவிழிக்கு தான் இன்னும் கனவுலகில் இருப்பது போல தோன்றியது.

மைவிழியின் அப்பா அவளது கேசத்தை வருடினார். அமர்ந்திருந்தவளை தன் வயிற்றில் சாய்த்துக் கொண்டு கதிரை முறைப்போடு பார்த்தார். அவர் பேச தொடங்கும் முன் கதிரின் அப்பாவும் அம்மாவும் அந்த அறைக்குள் வந்தனர்.

அவர்களை கோபத்தோடு பார்த்தவர் "உங்க பையனை இங்கிருந்து கூட்டி போங்க.." என்றார்.

மைவிழி குழப்பமாக அப்பாவை பார்த்தாள்.

"இப்பதான் மைவிழியே எழுந்துட்டா இல்லிங்களா..? அவக்கிட்டயே எதுவானாலும் கேட்டுடலாமே.." என்றார் கதிரின் அப்பா.

"அவக்கிட்ட கேட்க என்ன இருக்கு..? அவளை இனி உங்க பையனோடு நாங்க அனுப்பறதா இல்ல.. அவனை இங்கிருந்து கிளம்ப சொல்லுங்க.. கூப்பிட்ட நாளுல டைவர்ஸ்.." சரண் அடுத்த வார்த்தை பேசும் முன் பாய்ந்து வந்து அவனது தாடையில் ஒரு குத்து விட்டான் கதிர்.

சரண் "அம்மா.." என கத்தியபடி தன் தாடையை பிடித்த நேரத்தில் மைவிழியும் "அம்மா.." என பயந்து கத்தியபடி கண்களை மூடினாள்.

அங்கிருந்த மற்றவர்கள் கதிரை தடுக்க முயலும் முன் அவனே மைவிழியின் கத்தல் சத்தம் கேட்டு புத்தி தெளிந்து சரணை தன்னிடமிருந்து விலக்கி தள்ளினான்.

பற்பல உணர்ச்சிகளோடு தலையை கோதியபடி மைவிழியின் அருகே வந்தான். அவளது அப்பா நந்தி போல நடுவில் நின்றார். கதிர் தனது மனம் இருந்த நிலையில் யாருக்கும் மரியாதை தரும் நிலையில் இல்லை. அதனால் மறித்து நின்றவரை விலக்கி நிறுத்தி விட்டு அவளருகே வந்தான்.

மைவிழி குழப்பமாக அவனை பார்த்தாள். அவளது தாடையை பற்றி அவளது கண்களை பார்த்தான் அவன். "ஸாரி.. நான் செஞ்சது எல்லாமே தப்புதான்.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சிடு.. நீ இல்லன்னா எனக்கு உலகமே இல்லன்னு உனக்கே தெரியும்.. உங்க அப்பா டைவர்ஸ் வாங்கிட்டு போக சொல்றாரு.. உனக்கு டைவர்ஸ் கொடுக்கற எண்ணமோ இல்ல என்னை பிரியற எண்ணமோ இல்லன்னு எனக்கு தெரியும்.. ஆனா அதை நான் உன் வாயால் கேட்க ஆசைப்படுறேன்.. உனக்கு என்னை விட்டு பிரிஞ்சி போக ஆசையா..?" ஒரே மூச்சில் கேட்டு முடித்தான் அவன்.

அவள் கண்கள் ஆச்சரியத்தில் மின்னியது. இல்லையென தலையாட்டியவளை அவன் தன் நெஞ்சோடு சாய்த்து கொள்ள இருந்த நேரத்தில் அவனை மைவிழியிடமிருந்து பிரித்து விலக்கி தள்ளினார் அவளின் அப்பா.

"இந்த டிராமா பண்ற வேலையை வேற எங்கேயாவது வச்சிக்க.." என்றான் சரண். கதிர் அவனை முறைத்து பார்க்க அவன் தன்னை தன் அப்பாவின் பின்னால் மறைத்துக் கொண்டான்.

"என்னப்பா ஆச்சி..? ஏன்ப்பா இப்படி எல்லோரும் வித்தியாசமா நடந்துக்கறிங்க..?" குழப்பமாக மெல்லிய குரலில் கேட்டாள் மைவிழி.

"என்ன நடந்ததுன்னு நீதான்ம்மா சொல்லணும்.. இவன் உன்னை என்ன பண்ணான்..? எதுக்கு உனக்கு இவ்வளவு காய்ச்சல் வந்தது..? உன் கை காலெல்லாம் கண்ணாடி குத்திய காயம் எப்படி வந்தது.?" அப்பா கேள்வி கேட்கவும் அவள் தடுமாற்றத்தோடு கதிரை பார்த்தாள். தன் கைகளில் மருந்து பூசப்பட்டு இருந்த காயங்களையும் பார்த்தாள்.

"அவன்.. அவர் என்னை எதுவும் பண்ணல அப்பா.. அன்னைக்கு மழையில நனைஞ்சிட்டேன்.. அதான் காய்ச்சல் வந்துடுச்சி.. காய்ச்சலோடு எங்க வீட்டு கண்ணாடி பூஜாடியை கை தவறி கீழே தள்ளி விட்டுட்டேன்.. அது உடைஞ்சி சிதறி என் கையில காயம் பண்ணிடுச்சி.." அவள் தலை குனிந்து சொன்னாள்.

அவள் 'எங்க வீட்டு..' என சொன்னதில் கதிருக்கு உடம்பெல்லாம் புல்லரித்து போனது. அவளை தன் கையணைப்பில் கொண்டு வர துடித்தான். ஆனால் அவன் செய்து விட்ட தவறை அவள் பொய் சொல்லி மறைத்ததை கண்டு அவனுக்கு குற்ற உணர்வாகவும் இருந்தது.

"அவன் பண்ண தப்புக்கு நீ ஏன் பொய் சொல்ற..? அவனுக்கு பயப்படுறியா..?" என்ற சரண் தன் போனிலிருந்த அவர்கள் வீட்டின் அலங்கோல புகைப்படத்தை காட்டினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top