நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 53

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்து தன் கையிலிருந்த விலங்கை பார்த்துவிட்டு அதிர்ச்சியோடு குமரனை பார்த்தார்.

"நான் ஏதும் பண்ணல குமரா.."

"நீங்க வச்ச ஆள் அப்ரூவரா மாறிட்டாரு மாமா.. அதனால் நீங்க உண்மையை ஒத்துக்கிட்டா நல்லாருக்கும்.." முத்து தனக்குள் நொந்துக் கொண்டார் இப்படி ஒரு உதவாக்கரையை வேலைக்காக எடுத்ததை நினைத்து.

"அவன் பொய் சொல்றான் குமரா.. எங்க பணம் முழுசா அவன் திருடிட்டு வந்துட்டான்.. அதை மறைக்க இப்படி பொய் சொல்றான்.."

"நீங்கதான் மாமா பொய் சொல்றிங்க.. அவன் தானா வந்து சரணடைஞ்சிருக்கான்.. அவன்கிட்ட நீங்க சொல்ற எந்த பணமும் இல்ல.. எதுவும் பேசாம போய் லாக்அப்புல உட்காருங்க.. மீதியை கோர்ட்ல பேசிக்கலாம்..."

முத்து தனக்கு நடப்பதை நம்ப முடியாத நிலையில் இருந்தார்.
"இந்த விலங்கை அவிழ்த்து விடு.. நான் ஒரு போன் பண்ணிக்கிறேன்.."

குமரன் கண் சைகை காட்டியதும் அருகிலிருந்த காவலர் கை விலங்கை கழட்டினார். முத்து தன் ஃபோனை எடுத்து மகேஷ்க்கு அழைத்தார்.

"ஹலோ மகேஷ்.. போலிஸ் என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.."
எதிர் முனையில் மகேஷ் கசப்பாக சிரித்தான். "அப்பா.. என் மன வேதனை ஏன் உங்களுக்கு புரியவே இல்ல.. என் பொண்டாட்டி.. என் மொத்த வாழ்க்கை.. இங்கே சாக கிடக்கறா.. என்னால என்னை பத்தியே எதுவும் சிந்திக்க முடியல.. இங்கே என் மேல லாரி ஏறினா‌ கூட எனக்கு பீலே ஆகாதுப்பா.. அவ்வளவு மனசு உடைஞ்சிடுச்சி.. என் நிலமையை‌ உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது... அதெல்லாம் அனுபவிச்சி‌ பார்த்தாதான் தெரியும்.." என்றவன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் ஃபோன் காலை துண்டித்து கொண்டான்.

முத்து மானசீகமாக நெற்றியில் அறைந்துக் கொண்டார். 'அவ செத்து தொலையும் வரை இவனுக்கு பிடிச்ச பைத்தியம் தீராது‌ போல..'
மூர்த்திக்கு அழைத்தவர் அவன் அழைப்பை எடுக்கும் வரை பதட்டத்தோடு காத்திருந்தார். அவரை சுற்றியிருந்த காவலர்கள் அவரை ஓர கண்ணால் பார்த்து ஒருவருக்கொருவர் கிசுகிசுவென என்னவோ பேசிக் கொண்டனர்.

"ஹலோ மூர்த்தி.. என்னை போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. சீக்கிரம் பெயில் ரெடி பண்ணிட்டு வா.." அவர் அதற்கு மேல் பேசும் முன் அவர் ஃபோனை வாங்கி காலை துண்டித்தார் குமரன்.

"நீங்க பேசியது போதும்.." என்றவர் அருகிருந்த காவலரிடம் கை காட்டினார்.

"இவரை‌ அவரோட செல்லுக்கு கூட்டி போங்க.."

முத்து குமரனை முறைக்க முயன்ற தன் கண்களை தரையில் பதித்தபடி காவலரோடு இணைந்து நடந்தார்.

இனியன் தன் ஃபோன் ஒலிக்கும் குரல் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்தான். செல்வாதான் அழைத்திருந்தான்.

"ஹலோ மாமா.."

"இனியா என்ன பண்ற..?" என்ற செல்வா தன் குரலில் இருந்த பதட்டத்தை‌ மறைக்க முயன்றது இவனுக்கு நன்றாக தெரிந்தது.

"நைட்டெல்லாம் ஒரே பாட்டு கச்சேரி மாமா.. இப்படி ஒரு கல்யாணமெல்லாம் பார்க்க சான்ஸே இல்ல.." என இவன் பொய்யை அடுக்க ஆரம்பித்தான்.

"உன் அம்மா ஹாஸ்பிட்டல இருக்கா இனியா.."

"என்னாச்சி மாமா.."

"யாரோ அவ கழுத்துக்கு கத்தி வீசிட்டாங்க.. இப்போ‌ நல்லாருக்கா.. ஆனா இன்னும் கண் விழிக்கல.. அவளுக்கு போன் ஏதும் பண்ணிடாத.. அவ ஃபோன் இப்ப உன் அப்பாக்கிட்ட இருக்கும்.. உன் அம்மாவையே இப்படி ஆக்கிட்டவங்க நீ இருக்கற விசயம் தெரிஞ்சா உன்னையும் கூட ஏதாவது பண்ணிடுவாங்க.."

"சரி மாமா.. நான் அம்மாவுக்கு போன் பண்ணல.. அவங்க நல்லா ஆன உடனே எனக்கு தகவல் சொல்லுங்க.." என்றவன் இயல்பாய் பேசி விட்டு ஃபோனை வைத்தான்.

அவனுக்குள் ஆத்திரம் நெருப்பாக எரிந்தது. அம்மாவை இப்படி செய்து விட்ட மொத்த குடும்பத்தையும் ஒட்டு மொத்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என அவன் மனம் காட்டு கத்தல் கத்தியது. அரைமணி நேரத்தில் குளித்து முடித்தவன் தன் பேக்கை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

சக்தியின் அப்பா அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். இரவு சக்தியோடு தங்க அவரால் முடியவில்லை. அதனால் இப்போது காலையிலேயே மகளை பார்க்க அவசரமாக கிளம்பினார். அவருக்கு சக்தியின் காதல் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதனால்தான் இவ்வளவு நாளும் மகேஷுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் இப்போது சக்திக்கு இப்படி ஆகி விட்டதில் இவருக்கு முத்து மேல் பயங்கர கோபம். முத்து மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தன் மகள் நல்வாழ்வு வாழ்ந்திருப்பாள் என எண்ணினார்.

அவசரமாக அவர் வீட்டை பூட்டி விட்டு கிளம்பினார். இனியன் அதே நேரம் அந்த வீட்டின் பின் கதவில் இருந்த பூட்டை சோதித்துக் கொண்டிருந்தான். ஆட்கள் யாரேனும் தன்னை கவனிக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே பூட்டிற்கு தன் கையிலிருந்த சாவிகளை பொருத்தி பார்த்துக் கொண்டிருந்தான்.

வரும் வழியில் எந்த பூட்டையும் திறக்கும் எக்கச்சக்கமான சாவிகள் இருந்த ஒரு சாவி கொத்தை வாங்கி வந்திருந்தான். அதிலிருந்து ஒவ்வொரு சாவியாக முயற்சி செய்து பார்த்தவனுக்கு பதினெட்டாவது முயற்சியில் பூட்டு திறந்து கொண்டது.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தான். உள் பக்கம் கதவை தாளிட்டு கொண்டான். பலமுறை வீடியோ காலில் பார்த்த வீடு இதுதானா என வீட்டை சுற்றி பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான்.
வீட்டு சுவற்றில் பாட்டியின் புகைப்படம் மாலையோடு இருந்தது. சமையல் மேடையில் ஓட்டல் சாப்பாடு இருப்பது தெரிந்தது. தாத்தாதான் வீடு மொத்தமும் சுத்தம் செய்து உள்ளார் என்பதை புரிந்து கொண்டான்.

சக்தியின் அறைக்குள் நுழைந்தவன் அலமாரியை திறந்தான். வரிசையாக அடுக்கிய புடவைகள் இருந்தது. 'இதுல அம்மா அதிகம் யூஸ் பண்ணாத இடம் எதுவா இருக்கும்..?' என யோசித்தவன் ஒரு ஓரத்தில் பழைய கால புடவைகள் அடுக்கி இருந்ததை கண்டான்.

"இது பாட்டி புடவைங்க.. அம்மா ஞாபகார்த்தாமா வச்சிருக்காங்க.. இதை யூஸ் பண்ண மாட்டாங்க.." என தனக்கு தானே கூறிக் கொண்டவன் அந்த புடவைகளை எடுத்து கீழே வைத்தான். தன் பேக்கிலிருந்த பணத்தில் முக்கால்வாசியை எடுத்து அடுக்கி வைத்தான். பணம் அந்த இடத்தில் இருப்பது தெரியாதது போல் கவனமாக புடவைகளை அடுக்கி வைத்தான். தான் வந்த வேலை முடிந்தது என அவன் நினைத்து திரும்ப நினைத்தபோது அவனது கை பட்டு சக்தியின் புடவை ஒன்று கீழே விழுந்தது. எடுத்து இருந்த இடத்தில் வைக்க போனவன் அவ்விடத்தில் ஒரு டைரி இருப்பதை கண்டான். ஆர்வம் தாளாமல் அதை எடுத்து பிரித்தான்.

மகேஷின் புகைப்படம் முதல் பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அடுத்த பக்கத்தை புரட்டினான். மகேஷும் சக்தியும் தங்கள் முதல் திருமணத்தன்று எடுத்த புகைப்படம் இருந்தது.

'எனக்கு என்னவோ ஆயிடுச்சி.. எனக்கு காலேஜ்ல ப்ரொபசர் நடத்துற பாடம் புரியவே இல்ல.. மகேஷ் முகமே ஞாபகத்துல இருக்கு.. அவன் எதுக்கு இப்படி ஆளை‌ அடிக்கற மாதிரி பார்க்கறான்னு தெரியல.. அவனை எனக்கும் பிடிச்சிருக்கு.. ஆனா அதை எப்பவுமே வெளியே சொல்ல மாட்டேன்.. ஏனா என் காதலால் அவன் வீட்டுலயும் என் வீட்டுலயும் சண்டை மட்டும்தான் வரும்..'

இன்னும் சில பக்கங்களை புரட்டினான். 'என்னால் என் காதல் தர டார்ச்சரை தாங்க முடியல.. அவனை பார்க்கலன்னா செத்துடுவேன்னு தோணுது..'
..

'இன்னைக்கு அவன் கட்டிய தாலியை கழட்டி அவன் கையிலயே கொடுத்துட்டு வந்துட்டேன்.. அந்த பிராடு என்னை ஏமாத்தி கூட்டி போய் கல்யாணம் பண்ணிருக்கான்.. ஆனா அவன் அவசரத்தால் இரண்டு ஊருக்கு நடுவுல கலவரமே வந்திருக்கும்.. தாலியை கழட்டி தர மனசே இல்ல.. அதுக்கு பதிலா செத்துடலாம்ன்னு தோணுச்சி.. ஆனா எனக்கு அவன் முக்கியம்.. அதான் கழட்டி தந்துட்டு வந்துட்டேன்.. பார்க்கலாம் மறுபடியும் விதி எங்களை எப்ப சேர்த்து வைக்குதுன்னு..'
...

'இன்னைக்கு நான் ஆக்ராவில் என் குழந்தையை விட்டுட்டு வந்துட்டேன்.. ஒரு வருசம் முன்னாடி நான் கர்ப்பமாக இருப்பது தெரிஞ்சி ரொம்ப சந்தோசப்பட்டேன்.. ஆனா அந்த மகேஷ் எருமை வழக்கம் போல சொதப்பி வச்சிட்டான்.. அவன் விஷம் குடிச்சிட்டான்.. இதையே என்னால தாங்க முடியாம இருந்த போது அவனோட அப்பாவும் மூர்த்தியும் என்னை அவங்க மாந்தோப்புக்கு கடத்திட்டு போய் வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்துட்டாங்க.. ஆனா நல்ல நேரத்துல செல்வா வந்து என்னை காப்பாத்தி அவனோடு என்னை ஆக்ரா கூட்டிட்டு போயிட்டான். அங்கே என் பெரியம்மா என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க.. ஆனா எனக்கு மகேஷ் நினைவு அதிகமா வந்தது. இங்கே அவன் பைத்தியமாவே மாறிட்டான்னு தெரிஞ்சதும் என்னால அங்கே இருக்கவே முடியல.. இங்கே இருந்தா என் குழந்தை உயிருக்கு ஆபத்துன்னு தெரியும்.. பல்லை கடிச்சிட்டு ஒரு வருசம் அங்கே இருந்தேன்.. குழந்தை பிறந்தது. அசலா அவனை போலவே.. அதை அவன்கிட்ட சொல்ல கூட எனக்கு கொடுப்பினை இல்ல.. இவன் பைத்தியமா செத்துட கூடாதுன்னு குழந்தையை பெரியம்மாக்கிட்ட விட்டுட்டு வந்துட்டேன்.. ஆனா இப்ப குழந்தை நினைவா இருக்கு.. அழுவானான்னு பயமா இருக்கு..'

இனியன் தன் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டான்.

'நான் மகேஷை அடியோடு வெறுக்கறேன்.. அவன் கலையையும் சாமிநாதனையும் அவன் மாந்தோப்புல வச்சி கொன்னு புதைச்சிட்டான்.. அவன் சொன்னதை நம்பவே முடியல.. ஆனா அவன் இவ்வளவு அடிச்சி சொன்ன பிறகு என்னால எதையும் தெளிவா சிந்திக்க கூட முடியல.. அவன் ஒரு கொலைக்காரனா மாறிட்டான்.. எனக்கு பைத்தியம் பிடிக்குது.. இதுக்கு மேல அவனுக்கும் லைப் இல்ல.. எனக்கும் லைஃப் இல்ல..'
...

'என்னால அவனுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரத்தையும் கலெக்ட் பண்ண முடியல.. அவனால் இன்னைக்கு எங்க ஆபிசர்க்கிட்ட நான் திட்டு வாங்கினேன்.. அவன் என்னை பார்த்து நக்கலா சிரிச்சிட்டு போறான்.. எனக்கு அவனுக்கும் நடுவுல இருந்த காதல் மறைஞ்சிட்டு இருக்கற மாதிரி எனக்கு பயமா இருக்கு.. அவன் கட்டப்பஞ்சாயத்து ரவுடியா வளருறான்.. நான் போலிஸா கடமைகளை செய்றேன்.. எங்களுக்குள்ள இருக்கற காதல் செத்துடுமோன்னு பயமா இருக்கு.. அவன் மேல எந்த அளவுக்கு கோபம் இருக்கோ அதை விட அதிகமாக காதலும் இருக்கு..'
..

'இனியனுக்கு உடம்பு சரியில்லன்னு செல்வா சொன்னான்.. எனக்கு இப்பவே இனியனை பார்க்கணும் போல இருக்கு.. ஆனா மகேஷ் ஒருத்தனோட கையை உடைச்சிட்டான்.. அவனை கூட்டிட்டு கோர்ட்டுக்கு நடக்கிறேன்.. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..? குழந்தையை நினைச்சி அழுகையாக வருது.. ஆனா இந்த மகேஷ் என்னை உயிரோடு சாகடிச்சிடுவான் போலிருக்கு..'

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN