நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 55

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மூர்த்தி வியப்பாக குமரனை பார்த்தான்.

"நீ இப்போதாவது திருந்தியது எனக்கு ரொம்ப சந்தோஷம் மூர்த்தி.."

"உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா அண்ணா..?"

"கோபம்தான்.. ஆனா உன்னை மன்னிக்க முடியும் என்னால.. ஆனா முத்து மாமாவை என்னைக்குமே மன்னிக்க முடியாது.. அவர் நினைச்சிருந்தா அம்மாவை காப்பாத்தி இருக்கலாம்.. உனக்குதான் அம்மா மேல கோபம்.. ஆனா அவரு உனக்கும் நம்ம வீட்டுக்கும் இடையில் பிரிவினை வரணும்ன்னுதான் அம்மாவை காப்பாத்தாம விட்டிருக்காரு.."

மூர்த்தி இம்முறை குமரனை அணைத்துக் கொண்டான். "என்னை மன்னிச்சிடுங்க அண்ணா.. நான் இவ்வளவு நாளும் முட்டாளா இருந்துட்டேன்.." என்றான் கண்ணீரோடு.

முத்து லாக்அப்பில் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தார். மூர்த்தி வருவதை கண்டதும் கதவருகே ஓடி வந்தார்.

"பெயில் வாங்கிட்டு வந்துட்டியா..?" என்றவரை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே பக்கத்து லாக்அப் கதவை திறந்தார் குமரன்.

"அவன் உங்களுக்கு பெயில் வாங்கிட்டு வரல.. உங்களோடு சேர்ந்து ஜெயில்ல இருக்க வந்திருக்கான்.." என்ற குமரன் மூர்த்திக்கு கையை காட்ட அவன் லாக்அப்புக்குள் சென்று ஒரு ஓரமாக அமர்ந்தான்.

"அவன் ஏன் ஜெயில்ல இருக்கான்..?" முத்து புரியாமல் அதிர்ச்சியோடு கேட்டார்.

"அவன் அப்ரூவராக மாறி இங்கே வந்திருக்கான் மாமா... நீங்க செஞ்ச குற்றங்கள் எல்லாத்துக்கும் அப்ரூவராக மாறிட்டான்.."
குமரன் சொன்னதை கேட்டு முத்து பற்களை கடித்தார். எல்லோரும் ஒன்று சேர்ந்து அவரது காலை வாரி விட்டதை போல உணர்ந்தார்.

இனியன் அதிவேகமாக பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்.

"மெதுவா போங்க.." சந்தியா கெஞ்சலாக சொன்னாள். அவன் குறும்பு சிரிப்பு சிரித்துவிட்டு ஆக்ஸிலேட்டரை அதிகமாக திருகினான். சந்தியா பயந்து போய் கண்களை மூடி அவனை கட்டிக் கொண்டாள். அவனுடைய பைக்கில் ஏறியது முட்டாள்தனம் என நினைத்தாள்.

இனியன் மருத்துவமனை முன்னால் தன் பைக்கை நிறுத்தினான். சந்தியாவின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது அவனுக்கே கேட்டது. 'ஸ்பீடு ஜாஸ்தியோ..?' என நினைத்தான். ஆனால் பைக் நின்று வெகுநேரம் ஆனபிறகும் சந்தியா மூடிய கண்களை திறக்கவேயில்லை. அதனால் வண்டி நின்றதை உணரவும் இல்லை.

இனியன் தன் ஹெல்மெட்டை கழட்ட முயன்றான். ஆனால் அவள் அவனோடு ஒட்டிக் கொண்டிருந்ததால் அவனால் அசையவும் முடியவில்லை.
"ஹாஸ்பிட்டல் வந்துடுச்சி.." என்றான் மெல்லமாக. சந்தியா சட்டென எழுந்து நேராக அமர்ந்தாள்.

சுற்றிலும் பார்த்து விட்டு அவசரமாக கீழே இறங்கினாள்.

"லிப்டுக்கு தேங்க்ஸ்.." என்றவள் மருத்துவமனை கட்டிடத்தை நோக்கி ஓடினாள்.

"ஏய், பொண்ணே.." இனியன் கத்தி அழைக்கவும் சட்டென நின்றவள் தன்னைத்தான் அழைக்கிறானா என்ற சந்தேகத்துடன் திரும்பி பார்த்தாள்.

அவன் தன் ஹெல்மெட்டை கழட்டி பெட்ரோல் டேங் மேல் வைத்தான். தலைமுடியை ஒரு ஓரமாக ஒதுக்கியவாறே திரும்பி பார்த்தான். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா.

அவன் தலையை தொட்டு காட்டினான். அவள் புரியாமல் பார்த்தாள். அவன் மீண்டும் தன் தலையை தொட்டு காட்டிவிட்டு அவளது தலையை குறிப்பிட்டான். சந்தியா ஒன்றும் புரியாமல் தன் தலையை தொட்டு பார்த்தாள். ஹெல்மெட் தலையில் இருப்பதை கண்டவள் சிவந்த முகத்தோடு அவனை நோக்கி ஓடினாள்.
ஹெல்மெட்டை கழட்டி அவன் கையில் தந்தவள் "ஸாரி மறந்துட்டேன்.." என்றாள் விழிகள் படபடக்க.

அவள் தந்த ஹெல்மெட்டை வாங்கிக் கொண்டவன் அதை வைத்துவிட்டு அவளை பார்த்தான். "நான் ரியான்.." என்றான் அவள் முன்னால் தன் கையை நீட்டியபடி.

"சந்தியா.." தயக்கமாக அவனது கையை குலுக்கினாள் அவள்.

"உன் நம்பர் தரியா..?" தலை சாய்த்து விழி விரித்து அவன் கேட்க அவளுக்கு தன் கால்களில் ஏதோ சிரமம் என தோன்றியது. ஏனெனில் அவனது விழியசைவிற்கே துவண்டு விழும் நிலையில் இருந்தாள் அவள். இதுவரை எந்தவொரு ஆணையும் ஏறெடுத்தும் பார்க்காதவள் இன்று இவனது பார்வையில் தன் மனதை இழந்து கொண்டிருந்தாள். இருவரும் சந்தித்து ஒற்றை நாள் கூட முழுதாக முடியாதபோது இது எப்படி சாத்தியம் என்று தனக்குள் குழம்பினாள் அவள். முதல் பார்வை காதலை இதுவரையிலும் நம்பாதவள் அவள். ஆனால் அவனை பார்க்கும்போது எல்லாவித பைத்தியக்காரதனத்தையும் நம்ப தோன்றியது அவளுக்கு.

அவள் தன்னை விழியெடுக்காமல் பார்ப்பதை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான் இனியன்.

"நம்பர் தரியா..?" அவன் தன் கண்களில் இன்னும் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டி அவளை பார்த்து கேட்க சந்தியாவுக்கு உடல் சிலிர்த்தது.

"இது எப்படி சாத்தியம்..? பார்த்த ஒரே நாளுல காதல் கூட வருமா..?"

அவள் தன் கண்களை மூடி மூடி திறந்தாள்.

அவன் தன் தொண்டையை செருமிக் கொண்டு அவளை பார்த்தான். கழுத்தை மறுபக்கம் சாய்த்து அவன் அவளது கண்களை பார்த்தான். அவனது கண்கள் நட்சத்திரம் போல் மின்னியதை உணர்ந்தாள் அவள்.

"வாவ்.. கண்கள் கூட மின்னுது.." அவளும் தலை சாய்த்து பார்த்தாள்.

இனியன் சிரிப்போடு அவளது மூக்கின் மேல் சுட்டு விரலால் தொட்டான். "என் கண்ணை விட உன் கண் ரொம்ப மின்னுது.."

சந்தியா மூச்சி விட மறந்து விட்டாள். "இவ்வளவு நேரம் சத்தமா வெளிய பேசிட்டனா..?"

அவன் கழுத்தை பின்னால் சாய்த்து கலகலவென சிரித்தான். சிரித்து முடித்து விட்டு அவளை பார்த்தான்.

தன் சுட்டு விரலால் அவள் கன்னத்தில் கோலம் போட்டான். "நீ ரொம்ப க்யூட்டா இருக்க.." என்றான் அவள் கண்களை பார்த்து.

அவன் முன் சிலையாக நின்றாள் அவள். அவனை தாண்டி அந்த புறமாக உலகமென என்ற ஒன்று உள்ளதையே மறந்து விட்டாள். அந்த நொடியில் அந்த நிமிடத்தில் அவன் மட்டுமே அவளது பிரபஞ்சமாக தோன்றினான்.

"நீ ரொம்ப அழகா இருக்க.." அவன் குரல் அவளது மனதை வருடி சென்றது.

"ஃபோன் நம்பர் தரியா..?" என்றான் மீண்டும் ஒருமுறை.

அவள் தலையசைத்தாள். "என்கிட்ட ஃபோன் இல்ல ரியான்.." என்றாள் அவள்.

'ரியான் யாரு..?' என நினைத்தவனுக்கு தான்தான் அவளிடம் தன் பெயரை மாற்றி சொல்லி இருக்கிறோம் என நினைத்து மானசீகமாக நெற்றியை அறைந்துக் கொண்டான்.

அவளிடம் போன் இருக்காது என்பதை அவன் ஏற்கனவே யூகித்துதான் வைத்திருந்தான். அதனால்தான் வரும் வழியில் புதிதாக இரண்டு ஃபோனை வாங்கி வந்தான்.

ஒரு ஃபோனை கையில் எடுத்தான் அவன். அவன் கையிலிருந்த போனை கண்டு அவனை வியந்து பார்த்தாள் அவள். "எந்த அளவுக்கு பணக்காரன்..? செமையா பைக்.. செம மாடலாக ஃபோன்.." அவளை மீண்டும் மூக்கின் மீது தொட்டான் இனியன்.

"நீ இதேமாதிரி மனசுக்குள்ள பேச வேண்டிய எல்லாத்தையும் வெளியவே பேசிட்டா எனக்கு இன்னும் ரொம்ப வசதியா இருக்கும்.." என்றான். இது எல்லாம் அவளது தாத்தாவின் பணத்தில் வந்தது என தெரிந்தால் எப்படி அதிர்ச்சி அடைவாள் என நினைத்து உள்ளுக்குள் சிரித்தான் அவன்.

சந்தியா அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒன்று கலந்தவளாக அவனை பார்த்தாள். வெட்கம் அவளை அவனிடமிருந்து விலகி ஓட சொன்னது. ஆனால் அவனுடன் அவள் உணர்ந்த ஓர் ஈர்ப்பு அவளை அவன் அருகிலேயே நிற்க வைத்தது.

அவள் கையை பிடித்தவன் தன் கையிலிருந்த ஃபோனை அவள் கையில் வைத்தான். போனையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள் அவள்.

"இந்த ஃபோன் உனக்குத்தான்.. என் நம்பர் அதுல இருக்கு.. தேவைப்படும்போது கூப்பிடு.." என்றவன் ஒற்றை கண்ணை அடித்து சொல்ல சந்தியாவின் முகம் குப்பென சிவந்து போனது.

விழிகள் படபடக்க தரையை பார்த்தாள். "இந்த ஃபோன் எனக்கு வேண்டாம்.. எங்க வீட்டுல தெரிஞ்சா திட்டுவாங்க.." என்றாள்.

அவளது கன்னம் பற்றி அவளை தன் முகம் பார்க்க வைத்தான். "பார்த்தவுடன் வர காதலை நானும் நம்பியதே இல்லை.. ஆனா நேத்து உன்னை பார்த்த பிறகு பல ஜென்மம் கழிச்சி எனக்கு என் ஆன்ம காதலி எனக்கு கிடைச்சது போல இருந்தது.. உன் கண்ணுல என் மொத்த உலகமும் இருப்பதா பீல் பண்றேன்.."
சந்தியா அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"நான் பொய் சொல்லுறதா நினைக்கிறதானே.. ஆனா உனக்கு இது புரியாது.. நீ என்னில் பாதின்னு எனக்கு தோணியது உனக்கும் ஒருநாள் தோணும்.. தேவைப்படும் போது கால் பண்ணு.." என்றவன் அவள் சிலையாக நிற்கும் போதே அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகும் வெகுநேரம் வரை அங்கேயே நின்றுக் கொண்டிருந்தவள் தன் தோளில் ஒரு கை படவும் சுயநினைவுக்கு வந்து திரும்பி பார்த்தாள்.
"ஏன் இப்படி இங்கே சிலை போல நின்னுட்டு இருக்க..?" என்றான் மகேஷ்.

"அது.. வந்து.. நான் சும்மா போற வர பஸ்ஸையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்.." என்றவள் தன் கையிலிருந்த ஃபோனை அவன் பார்க்கும் முன் கை பைக்குள் மறைத்து வைத்தாள்.

"பஸ் வேடிக்கை பார்க்கற வயசா இது..? சரி நீ போய் சக்தியை பார்த்துட்டு இரு.. நான் போய் சாப்பிட்டுட்டு உடனே வந்துடுறேன்.."

"சரி மாமா.." என்றவள் மருத்துவமனை கட்டிடம் நோக்கி நடந்தாள். மகேஷ் அருகிலிருந்த ஹோட்டலை நோக்கி நடந்தான்.

"இட்லி நாலு கொடுப்பா.." என்றபடி அமர்ந்தவனின் எதிரே கூலிங் கிளாஸை மாட்டியபடி அமர்ந்தான் இனியன்.

"இங்கே இரண்டு தோசை கொடுங்க.." என்ற இனியனை பார்க்கும் போது மகேஷிற்கு மனதிற்குள் ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு தோன்றுவது போலிருந்தது.
"நீங்க இதே ஊரா தம்பி..?" என மகேஷே அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.

"வெளியூர்.." என்றவன் அவனிடம் மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல் தன் ஃபோனை கையில் எடுத்தான்.

புது ஃபோன் சூப்பராக இருப்பது போல தோன்றியது. 'ஹாய்' என சந்தியாவிற்கு ஒரு மெஸேஜை அனுப்பினான்.

அவன் முன் தோசை பரிமாறப்பட்ட நேரத்தில் மகேஷ் தன் ஃபோன் ஒலிக்கவும் எடுத்து பேசினான். எதிர் முனையில் குமரன் பேசினார்.

"மூர்த்தி உங்க அப்பா பண்ண அத்தனை குற்றங்களுக்கும் தானும் உடந்தையாக இருந்ததா சொல்லி அவனே வந்து என்கிட்ட சரணடைஞ்சிட்டான்.."

"ஓ.." என்றவன் அதற்கு மேல் ஏதும் பேசாமல் இருக்க அந்த பக்கம் குமரன் பெருமூச்சு விட்டார்.

"ஏதாவது சொல்லு மகேஷ்.."

"இதுல நான் சொல்ல என்ன மாமா இருக்கு..? யார் என்ன குற்றம் செஞ்சா என்ன.. யார் சரணடைஞ்சா என்ன..? என்னில் பாதி சக்தி.. அவ இங்கே ஹாஸ்பிட்டல்ல படுத்திருக்கும் போது நான் எதை பத்தி மாமா பேசுவேன்..?" என அவன் சோகமாக கேட்க இனியன் புரை ஏறிய தலையை தட்டிக் கொண்டான்.

'என்னில் பாதியா..? இதை இப்பதானே நான் சந்தியாக்கிட்ட சொல்லிட்டு வந்தேன்.. அதுசரி.. தகப்பனை போலத்தானே நானும் இருப்பேன்.'

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN