நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 56

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகேஷ் இனியனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு குமரனின் வார்த்தைகளை கேட்க ஆரம்பித்தான்.

"நீயே இப்படி சொன்னா எப்படி மகேஷ்..? உங்க அப்பா ஜெயிலுக்கு போக போறாரு.." என்றார் குமரன் எதிர் முனையில்.

"அவர் ஜெயிலுக்கு போறதுக்கு நான் என்ன பண்ணட்டும் மாமா..? என்னோட அப்பா ஜெயிலுக்கு போறாருன்னு அழட்டா..? இல்ல இனி என் பொண்டாட்டிக்கு எதிரின்னு யாரும் இல்லைன்னு நினைச்சி சிரிக்கட்டா..? சக்தி கழுத்துல கத்தியால குத்தப்பட்டு ஹாஸ்பிட்டல்ல படுத்திருக்கா.. அவ கண்ணு விழிச்சிட்ட பிறகும் கூட எனக்கு பயம் முழுசா போகல.. அவ நார்மலா எழுந்து நடமாடும் வரை நான் பைத்தியம் போலதான் இருப்பேன்.. அவரால இனி என் சக்தியை எதுவும் பண்ண முடியாது.. அது மட்டும்தான் என்னோட ஒரே நிம்மதி.." என்றவன் அவர் மீண்டும் பேசும் முன் ஃபோன் அழைப்பை துண்டித்து ஃபோனை கீழே வைத்தான்.

தலையை கோதி விட்டபடி நாற்காலியில் தலை சாய்த்து அமர்ந்தான். 'அவர் இனி ஜெயிலுக்கு போனா என்ன.. போகாட்டிதான் என்ன..? என் சக்தியோட வலிகள் எல்லாம் மறைஞ்சிட போகுதா..? இல்ல அழிஞ்ச என் வாழ்க்கை திரும்பி வந்துட போகுதா..? இல்ல கருவுலயே செத்து போன என் குழந்தை உயிரோடு திரும்பி வர போகுதா..?' மனதின் கஷ்டத்தை குறைக்கும் வழி அறியாமல் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

கழுத்தில் கட்டோடு ஹாஸ்பிட்டல் பெட்டில் படுத்திருக்கும் சக்தியின் முகம் நினைவில் அப்படியே இருந்தது. உணவை கடமைக்கென்ன உண்டு விட்டு எழுந்தான்.

அவன் பில் பணத்தை தரும்போது இனியனும் அவன் அருகில் நின்று கேஷ் கவுண்டரில் பணத்தையும் பில்லையும் தந்தான். இனியனை பார்க்கும்போதெல்லாம் மகேஷின் உள்ளம் இனம் புரியா ஒரு உணர்வை சந்தித்தது. அதை சரியாக அவனால் உணர்ந்து கொள்ள முடியா விட்டாலும் கூட அந்த பையனுக்கும் தனக்கும் இடையில் ஏதோ ஓர் உறவு இருப்பதாக அவனுக்கு தோன்றியது.

"தம்பி நீங்க எந்த ஊர்..? இதுக்கு முன்ன நான் உங்களை இங்கே பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை.."

"நான் வெளியூர்.. சும்மா ஒரு வேலையா இங்கே வந்திருக்கேன்.." என்றவன் ஹோட்டல்காரர் தந்த மீதி பணத்தை வாங்கி கொண்டு வெளியே நடந்தான்.

இனியனை பின்தொடர்ந்து வெளியே வந்தான் மகேஷ். இனியன் போகும் திசையை தன்னை மறந்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் மகேஷ்‌.

இனியன் ஹாஸ்பிட்டல் நோக்கி நடந்தான். மகேஷும் அதை கண்டு அவன் பின்னால் நடந்தான். 'இவன் ஏன் ஹாஸ்பிட்டல் போறான்..? ஒருவேளை உடம்பு ஏதும் சரியில்லையா..? ஆனா பார்க்க நல்லாத்தானே இருக்கான்..? ஒருவேளை அவனோட சொந்தக்காரங்க யாருக்காவது உடம்பு ‌சரியில்லையா..?' தான் ஏன் அவனை பற்றி இவ்வளவு சிந்திக்கின்றோம் என்ற நினைவே இல்லாமல் அவனை பின் தொடர்ந்து கொண்டிருந்தான் மகேஷ்.

இனியனுக்கு மகேஷ் தன்னை பின்தொடர்வது தெரிந்தது. நடையை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தான். மகேஷ் அவனையே விழியெடுக்காமல் பார்த்தான்.

"பாலோவ் பண்றிங்களா..?" என இனியன் கேட்க மகேஷ் முதலில் குழம்பி போனான். பின்னர் இல்லையென தலையசைத்தான்.

"என் பொண்டாட்டி இந்த ஹாஸ்பிட்டல்லதான் இருக்கா.." என்றான் மகேஷ்.

இனியன் தலையசைத்து விட்டு நடந்தான். மகேஷ் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

'எனக்கென்ன பைத்தியமா..? எதுக்கு இவனை பாலோவ் பண்ணேன்..? இவன் என்னை லூஸுன்னு நினைச்சிருப்பான்..' மனதுக்குள் புலம்பிக் கொண்டே சக்தி இருந்த அறை நோக்கி நடந்தான்.

மகேஷ் தன்னை பின் தொடரவில்லை என தெரிந்ததும் இனியன் மகேஷை பின் தொடர்ந்து நடந்தான்.

சக்தியின் அருகே அமர்ந்திருந்த சந்தியா மகேஷ் வந்ததும் மெலிதாக புன்னகைத்தாள்.

"அத்தைக்கு இப்போ கொஞ்சம் பரவால்ல மாமா.." என்றாள்.

மகேஷ் ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு அவளருகே அமர்ந்தான்.

சக்தி உறக்கத்தில் இருந்தாள். அவளது முகம் பார்த்து விட்டு சந்தியா பக்கம் திரும்பினான் மகேஷ். ''மூர்த்தி மாமா போலிஸ்ல சரணடைஞ்சிருக்காரு.." என்றான்.

சந்தியாவிற்கு இந்த செய்தி கேட்டதும் மனதுக்கு வருத்தமாக இருந்தது. ஒரு காலத்தில் ஆகாத தந்தையாக இருந்தாலும் கூட தந்தைதானே.. அதுவும் அவன் திருந்திய பிறகு அவனுக்கும் சந்தியாவுக்கும் இடையில் இருந்த பாசம் அதிகமாகி இருந்தது. அவளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.
மகேஷ் அவளது கரத்தை பற்றினான். "உனக்கு நான் எப்போதும் துணையா இருப்பேன் சந்தியாம்மா.. நான் உன் மேல வச்ச பாசத்தை எந்த சக்தியாலும்
பிரிக்க முடியாது.. உன் அப்பாவை விட அதிகமா நான் உன் மேல அக்கறையை வச்சிருக்கேன்.. அதனால எதுக்கும் கவலை படாதம்மா.."

சந்தியா சரியென தலையசைத்தாள். ஆயினும் கூட கண்ணோரத்தில் துளிர்த்த கண்ணீரை என்ன செய்வதென அவளுக்கு தெரியவில்லை.

"நான் போய் பாட்டியை பார்த்துட்டு வரேன் மாமா.." என எழுந்து நின்றாள். அவள் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் கூட அவள் குரல் உடைந்து விட்டதை வார்த்தைகளில் வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

சந்தியா உள்ளுக்குள் உடைவது கண்டு மகேஷ்க்கு மனது வலித்தது. ஆனால் வளர்ந்த பெண்ணான அவள் சீக்கிரம் அந்த வலியிலிருந்து மீண்டு விடுவாள் என நம்பினான்.

சந்தியா அந்த அறையை விட்டு வெளியே நடந்தாள். அந்த அறையின் ஜன்னலோரம் நின்றிருந்த இனியன் அவள் வெளியே வந்ததை கண்டு முகத்தை சுவர் புறம் திருப்பி கொண்டான். சந்தியா இனியனை கொஞ்சம் கூட கவனிக்கவே இல்லை. கால் போன போக்கில் நடந்தாள். மாடியின் படிகளில் ஏறியவள் மொட்டை மாடிக்கு வந்தாள்‌.

கண்களில் கண்ணீர் துளி துளியாக சிந்தியது. தாங்க முடியா அழுகையோடு கைகளில் முகம் புதைத்து தரையில் அமர்ந்தாள். கண்ணீர் ஆறாக பொங்கியது‌. ஆயிரம் முறை மகேஷ் தன் மீது பாசம் வைத்திருப்பதாக சொன்னாலும் கூட தாய் தகப்பன் தன்னோடு இல்லையே என்ற ஏக்கம்மும் தனது தனிமையையும் உணர்ந்தவள் அடக்க முடியாமல் அழுதாள்.

இனியன் ஜன்னலோரத்தில் நின்று தன் அம்மாவின் முகத்தை பார்த்து கொண்டிருந்தான். கழுத்தில் கட்டு போட்டு படுத்திருந்தவளின் வலியை அவன் உணர்ந்தான். மகேஷ் அவளது கன்னத்திலும் நெற்றியிலும் முத்தம் தந்தான். இனியன் முகம் சிவக்க திரும்பி நின்றான். அங்கு நிற்க அவனுக்கு என்னவோ போலிருந்தது. அதனால் சந்தியா போன திசையில் நடந்தான்.

மகேஷ் சக்தியின் கையை பற்றி அவளது புறங்கையில் சிறு முத்தமிட்டான். சக்தி சிரமத்தோடு கண்களை திறந்து பார்த்தாள். மகேஷை கண்டதும் மென்நகை புரிந்தாள். அவளை கண்டு அவனும் புன்னகை புரிந்தான். ஆனால் அவனது சிரிப்பு அவனது கண்கள் வரை எட்டவே இல்லை.

அவளது கன்னத்தில் கை வைத்து அவளை பார்த்தான். "எங்க அப்பா இப்ப ஜெயிலுக்கு போயிட்டாரு சக்தி.. அவரால இனி உனக்கு எந்த கஷ்டமும் இருக்காது.. ஆனா போன நம்மோட வாழ்க்கையையும் இறந்த நம்ம குழந்தையையும் யாராலயும் திருப்பி கொண்டு வர முடியாது.." என்றவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அவன் சொன்னதை கேட்டு சக்தியின் முகம் குப்பென வியர்த்து போனது. "உனக்கெப்படி தெரியும்..? உனக்கு என்ன தெரியும்..?" என்றாள் அதிர்ச்சியோடு.

"மூர்த்தி மாமா சொன்னார்.. நான் விஷம் குடிச்சி ஹாஸ்பிட்டல்ல இருந்த போது என் அப்பாவும் மூர்த்தியும் உனக்கு வலுக்கட்டாயமாக விஷத்தை தந்தாங்கன்னும் அதனால் நம்ம குழந்தை கருவுலயே செத்து போச்சின்னும் தெரியும்.." என்றவன் அவள் உள்ளங்கையில் முகம் புதைத்தான்.

"ஸாரி சக்தி.. என்னால் உன்னையும் நம்ம குழந்தையையும் பாதுக்காக்க முடியாம போச்சி.. என்னை மாதிரி ஒருத்தனை நீ காதலிச்சது தப்புன்னு எனக்கே புரியுது.." என்றவனால் அவளது உள்ளங்கை முழுக்க கண்ணீரால் நனைந்து போனது.

"மகேஷ்.." என்றவளை மேலும் பேச விடாமல் தலையை அசைத்தான் மகேஷ்.

"நான் எத்தனையோ பேருக்கு மறைமுகமா எத்தனையோ உதவிகள் செஞ்சிருக்கேன்.. ஆனா அந்த ஆண்டவன் நான் என்ன பாவம் செஞ்சேன்னு இவ்வளவு பெரிய தண்டனையை தந்தாருன்னு தெரியல.. எனக்கு என்னை நினைச்சே கேவலமா இருக்கு சக்தி.. என் அவசரத்தால் எல்லாத்தையுமே நாசம் பண்ணிட்டேன் நான்.. உன் வாழ்க்கை, என் வாழ்க்கை, உலகத்தையே பார்க்காத ஒரு குழந்தையோட வாழ்க்கை.. எல்லாத்தையும் நான்தான் நாசம் பண்ணிட்டேன்.."

"இ.. இல்ல மகேஷ்.." என்றவளின் கண்களிலும் கண்ணீர் வழிந்துக் கொண்டுதான் இருந்தது. மகேஷின் கண்ணீரே அவளது கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விட்டது.

"நம்ம குழந்தை.." அவள் முழுமையாக சொல்லி முடிக்கும் முன்பு அவளுக்கு மயக்கம் வந்து சேர்ந்து விட்டது. ரத்தம் அதிகப்படியாக வெளியேறி விட்டதாலும் கழுத்தின் காயம் தந்த வலி தாங்க முடியாததாக இருந்ததாலும் அவளால் ஐந்து நிமிடத்திற்கு மேல் சுய நினைவில் இருக்க முடியவில்லை.

அவள் மீண்டும் மயங்கி விட்டதை கண்ட மகேஷ் அவளது கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரை துடைத்து விட்டான். "ஸாரி சக்தி.." என்றவன் அவளது கன்னத்தின் ஓரம் முகம் வைத்து கண்களை மூடினான்.

இனியன் சந்தியாவை எங்கெங்கோ தேடி விட்டு கடைசியாக மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தான். சந்தியா அழுதபடி அமர்ந்திருப்பதை கண்டான். தன் நெஞ்சில் ஏதோ ஒரு வலி புறப்பட்டதை கண்டு நெஞ்சில் கை வைத்தான். 'என்ன ஆச்சி எனக்கு..?' தன்னையே கேட்டுக் கொண்டு சந்தியாவின் அருகே வந்து மண்டியிட்டான்.

அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான். சந்தியா திகைத்து நிமிர்ந்து பார்த்தாள். இனியனை கண்டவளுக்கு அவளையும் மீறி சோகம் குப்பென தாக்கியது. தான் ஏன் இப்படி வித்தியாசமான உணர்விற்கு உள்ளாகின்றோம் என்பதை அறியாமல் அவனது நெஞ்சில் முகம் புதைத்தாள். தேம்பி தேம்பி அழுதாள்.

"எங்க அப்பா ஜெயில்ல இருக்காரு.. எங்க அம்மா சொர்க்கத்தில இருக்காங்க.. இப்ப நான் அடிப்படையில் அனாதை.." என்றவள் தான் ஏன் இதை அவனிடம் சொல்லி கொண்டிருக்கிறோம் என்பதை உணரவேயில்லை.

'நான் இத்தனை வருசமா அனாதையாதான் இருந்தேன்.. அம்மாவும் அப்பாவும் உயிரோடு இருந்தும் அனாதையா இருந்தேன்.. காரணம் உன் குடும்பம்.. உன் அப்பா.. என் வலியும் என் அம்மாவோட வலியையும் இதயமே இல்லாத உங்க குடும்பத்துல யாருமே உணர முடியாது‌. உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தா அதை புரிஞ்சிக்க முடிஞ்ச உங்களால என் அம்மாவுக்கும் வலின்னு ஒன்னு இருக்கும்ன்னு புரிஞ்சிக்க முடியல.. உன் அப்பாவும் தாத்தாவும் ஜெயிலுக்கு போயிட்டதால அனாதையாக வளர்ந்த என் இளமை காலம் திரும்பி வர போறதில்ல.. ஆனா என் வலியை உங்க எல்லோருக்கும் தராம விட போறதில்ல நான்..' என நினைத்துக் கொண்டவன் அவளது நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN