நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 57

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகேஷ் சக்தியின் அருகில் தன் சூழ்நிலையை மறந்து அமர்ந்திருந்தான். அவனது தோளில் கை ஒன்று விழுந்தது. குமரன் அவனை தாண்டி வந்து சக்தியின் அருகே அமர்ந்தார்.

"இப்ப எப்படி இருக்கா..?" என்றார் அவளின் முகத்தை பார்த்தவாறு.

"கொஞ்ச நேரம் முன்னாடி விழிச்சா.. ஆனா உடனே மயங்கிட்டா.." என்ற மகேஷ் சக்தியின் கையை தன் இரு கைக்குள் வைத்துக் கொண்டான்.

"சந்தியா எங்கே..?"

"அம்மாவை பார்க்க போயிருக்கா.. அம்மாவுக்கு தலைவலி.. நேத்துல இருந்து ஹாஸ்பிட்டல்லதான் இருக்காங்க.."

"சரி நான் போய் அவங்களை பார்த்துட்டு வரேன்.." என்றவர் மகேஷின் தோளில் ஆறுதலாக ஒரு தட்டு தட்டி விட்டு எழுந்தார்.

அவர் அந்த அறையை விட்டு வெளியே நடக்கையில் அங்கு வந்தார் சக்தியின் அப்பா. குமரனை கண்டதும் வெறுமையாக புன்னகைத்தார்.

"சக்தி குணமாகிடுவா அப்பா.. நீங்க எதுக்கும் கவலை படாதிங்க.." என்றார் குமரன். அவரும் பதிலுக்கு தலையசைத்தார். குமரன் வெளியே நடக்க அவர் சக்தியின் அருகே வந்து மகேஷுக்கு எதிர் பக்கமாக அமர்ந்தார்.

"நேத்து இருந்து இவளையே காவல் காத்துட்டு உட்கார்ந்திருக்கிங்க.. அம்மாவையும் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம் இல்ல..'' என்றார் மகேஷிடம்.

அவனுக்கு சக்தியை விட்டு செல்ல மனமில்லை. ஆனால் மாமனார் இப்படி சொல்லி விட்டாரே என்று தலையசைத்து விட்டு எழுந்து கிளம்பினான்.

சந்தியா தன் நெற்றியில் முத்தமிட்ட இனியனை அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள். அவள் நிமிர்ந்து பார்த்த பிறகே இனியன் தான் என்ன செய்து விட்டோம் என்பதை உணர்ந்தான். இருந்தும் உடனே தன் புத்தியை கூர் தீட்டிக் கொண்டவன் அவளது கன்னத்திலும் ஒரு முத்தத்தை பதித்தான். சந்தியாவின் மூச்சி தடைப்பட்டு நின்று விட்டது. அவனை விழிகள் படபடக்க பார்த்தாள்.

"எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு சந்தியா.. உன்னோடு வாழ ஆசைப்படுறேன்.. பார்த்த உடனே வந்த காதல்ன்னு என் காதலை சீப்பா நினைச்சிடாத.. உன்னை உயிருக்குயிரா காதலிக்கிறேன் நான்.." அவன் சொன்னதை கேட்டவளுக்கு இதயம் தாறு மாறாக துடித்தது.

ஒருநாள் முன்பு வரை யாரென்றே தெரியாதவன் அவன். ஆனால் இன்று அவன் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் அவளுக்கு சத்திய வார்த்தைகளாக தோன்றியது. அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் இதயம் ஓராயிரம் முறை மெழுகாக கரைந்தது.

'உனக்கு யாரும் இல்லன்னு நினைக்காத.. உன்னை உயிருக்குயிரா காதலிக்க நான் இருக்கேன்.. எனக்கு உறவுன்னு சொல்லிக்க யாருமே இல்ல.. நான் ஒரு அனாதை.. அம்மா யார்.. அப்பா யாருன்னு கூட தெரியாத அனாதை.. ஆனா உன்னை பார்த்த உடனே என் மொத்த சொந்தமும் நீதான்னு தோணுது.. நீ சம்மதிச்சா இந்த செகண்டே உன்னை கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி.. இந்த அனாதைக்கு ஒரு வாழ்க்கை தருவாயா நீ..?" அவன் கண்கலங்க கேட்டான்.

அவன் தான் ஒரு அனாதை என சொன்னதை கேட்டு சந்தியாவின் மனம் அவனுக்காக துடித்தது. அவனது சொற்களுக்கு நாம் விழுந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியவில்லை இந்த பேதை. அவனது கண்கள் ஈரத்தால் மின்னியதை கண்டவளுக்கு தன் இதயத்தில் ரத்தம் வழிவதை போலிருந்தது. அவன் அவளது முகத்தையே பார்த்தான்.

அவள் தன் வலையில் தானாக வந்து சிக்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அவளது மறு கன்னத்திலும் முத்தம் இட்டான். அவள் முகமோ செவ்வானமாக சிவந்துக் கொண்டிருந்தது. அவனது கை அணைப்பிலிருந்து சற்று விலகி அமர முயன்றாள். ஆனால் அவனோ அவளை தன்னோடு மேலும் இறுக்கிக் கொண்டான்.

மகேஷ் தன் அம்மா படுத்திருந்த பெட்டிற்கு வந்தான். அவளருகே குமரன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மகேஷ் அம்மாவின் அருகே அமர்ந்து அவளது நெற்றியில் தன் புறங்கையை வைத்து எடுத்தான். தலைவலி குறைந்து விட்டிருந்தது.

"இங்கே ஏன் வந்த மகேஷ்..? சக்தி பக்கத்துலயே இருக்க வேண்டியதுதானே.. அவ நம்ம வீட்டு மருமகள் ஆனதற்கு படாத பாடு பட்டுட்டா.." என்றாள் பொன்னி.

"சக்தி ஸ்ட்ராங்கான லேடி அத்தை.. அவ சரியா போயிடுவா.." என்றார் குமரன்.

மகேஷ் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அம்மாவிடம் திரும்பினான்.
"சந்தியா எங்கே..?" என்றான்.

"சந்தியாவா..? நான் பார்க்கலையே.." என பொன்னி சொல்ல மகேஷ் முகத்தில் குழப்ப ரேகை ஓடியது.

"உங்களை பார்க்க வரேன்னு சொல்லிட்டுதான் வந்தா.." என்ற மகேஷ் எழுந்து நின்றான்.

"அவ எங்கே இருக்கான்னு நான் போய் பார்க்கிறேன்.." என்றவன் கிளம்ப அவனோடு குமரனும் கிளம்பினார்‌.

"யாராவது பார்த்துட போறாங்க.. என்னை விடுங்க.." என்ற சந்தியாவை தன் கைப்பிடியிலிருந்து விடுவித்த இனியன் அவளருகில் நெருங்கி அமர்ந்தான்.

"உங்க அத்தை இப்ப எப்படி இருக்காங்க..?"

அவளை மேலும் கவிழ்க்க நினைத்தே அவன் சகஜமாக பேச ஆரம்பித்தான். ஆனால் இதை அறியாத அவளோ தன் குடும்ப விசயத்தில் அக்கறை காட்டுகிறானே என நினைத்து உள்ளுக்குள் பூரிப்பு அடைந்தாள்.

"இப்ப பரவால்ல.. கண் விழிச்சிட்டாங்க.. ஆனா ரொம்ப நேரத்துக்கு அவங்களால் சுய நினைவோடு இருக்க முடியல.. உடனுக்குடனே மயங்கிடுறாங்க.." அவள் சொன்னதை கேட்டு அவனுக்கு மனம் வலித்தது.

"ஆனா இதுக்கு மேல அவங்களுக்கு எந்த ஆபத்தும் வராது.. அவங்களுக்கு பகையா இருந்த எங்க தாத்தா இப்போ ஜெயிலுக்கு போயிட்டாரு.. அவர் ஜெயிலில் ரொம்ப நாள் இருக்கணும்ன்னு அவருக்கு எதிரா எங்க அப்பாவும் அப்ரூவரா மாறி ஜெயிலுக்கு போயிட்டாரு.." என்றவளின் குரல் கடைசியில் கரகரத்து போனது.
அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான் இனியன். "எங்க அப்பா இப்ப ரொம்பவே திருந்திட்டாரு.. அவரை விட்டு பிரிஞ்சி இருப்பது மனசுக்கு கஷ்டமா இருக்கு.." என்றவள் தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்.

"சரி விடு.. எல்லாம் சரியா போயிடும்.." அவன் சமாதானம் செய்ய முயன்றான்.

அவள் இல்லையெனும் விதமாக தலையசைத்தாள். "எங்க அப்பாவும் தாத்தாவும் ரொம்ப தப்பு பண்ணிருக்காங்க.. எத்தனை வருசம் ஜெயில்ல இருக்க போறாங்கன்னு தெரியல.." என்றவளின் கேசத்தை வருடி விட்டான் இனியன்.

"சந்தியா.." மகேஷின் குரலில் திடீரென கேட்கவும் இனியனை விட்டு விலகி சட்டென எழுந்து நின்றாள் சந்தியா.

"எங்க மாமா மொட்டை மாடிக்கு என்னை தேடி வராரு போல.." என்றவளின் குரலில் இருந்த பயம் கண்ட இனியன் சிரித்தபடியே அருகிலிருந்த தண்ணீர் தொட்டியின் பின்னால் சென்று மறைந்து நின்றான்‌.

அவன் சந்தியா விட்டு வந்த சில நொடிகளிலேயே மொட்டை மாடிக்கு மகேஷும் குமரனும் வந்தனர்.

குமரன் சந்தியாவின் அழுத முகம் கண்டு மனம் கலங்கினார். அவளை தன்னோடு அணைத்துக் கொண்டார். "சின்ன குழந்தை போல இதுக்கெல்லாம் அழலாமா..? உன் அப்பா பக்கத்துல இல்லன்னா என்ன நானும் மகேஷும் உன் கூட இருக்கோம் இல்லையா‌‌." என கேட்டவர் அவளின் முதுகை வருடி விட்டார்‌.

குமரனிடம் சரியென தலையசைத்தாள். ஆனாலும் சோகம் அதிகமாகத்தான் மாறியது‌. இனியனின் அருகில் சிறு‌ மன மாற்றத்தை உணர்ந்தவளுக்கு அந்த மாற்றம் குமரனின் அருகே கிடைக்கவில்லை.
மகேஷ் சந்தியாவின் அருகே வந்து அவளது தலையை வருடி விட்டான்.

"நீ அழாதம்மா.. நான் எப்படியாவது உன் அப்பாவை வெளியே கொண்டு வரேன்.." என்றான். அவனுக்கு அவனது செல்ல சந்தியா கண்ணீர் சிந்துவதில் துளியும் விருப்பம் இல்லை.

மகேஷ் சொன்னதை கேட்டு இனியனுக்கு கோபத்தில் முகம் சிவந்தது.

'அதானே பார்த்தேன்.. இவங்க குடும்பத்துல நல்லவங்க யாருமே கிடையாது.. பொண்டாட்டியை காதலிக்கிறதா ரீல் விட்டுட்டு இப்ப இவளோட அழுகைக்காக என் அம்மாவோட எதிரியை ஜெயில்ல இருந்து வெளியே கொண்டு வர பார்க்கறான்.. இவனையும் காதலன் கணவன்னு நம்புற என் அம்மாவைதான் சொல்லணும்..'

சந்தியா தன் முகத்தை துடைத்துக் கொண்டு மகேஷை பார்த்தாள்.

"நான் நல்லாதான் இருக்கேன் மாமா.. அவரே இப்பதான் திருந்தியிருக்காரு.. அவருக்கு ஒரு சந்தர்ப்பம் தருவோம்.. நீ கருணை காட்டுறேன்னு சொல்லி அவரோட பாவத்துக்கு பரிகாரம் செய்ய விடாம பண்ணிடாதிங்க.."

சந்தியாவை கர்வத்தோடு பார்த்தார் குமரன். "என் வம்சம்டா நீ.." என்றவர் அவளது நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தார்.

''இன்னைக்கு ஏன் எல்லோரும் முத்தமா தரீங்க.." சிறு குழந்தையாக சிணுங்கி கேட்டவளை அதிர்ச்சியோடு பார்த்தனர் மகேஷும் குமரனும்.
வாய் தாண்டி சென்ற வார்த்தையினை நினைத்து மானசீகமாக நெற்றியில் கொட்டிக் கொண்டவள் அவர்கள் இருவரையும் பார்த்து அரை குறையாக சிரித்தாள். "இப்ப பெரியப்பா முத்தம் தந்தது போல நான் ஹாஸ்பிட்டல் வர வழியில ஒரு ஸ்கூல் குழந்தையும் முத்தம் கொடுத்தது.. அதைதான் சொன்னேன்.." என்றவள் எவ்வளவோ முயன்றும் கூட தன் கன்னத்தில் படர்ந்து விட்ட செம்மையை தடுக்க முடியவில்லை.

மகேஷ் அவளை சந்தேகமாக பார்த்தார். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

சந்தியாவை நினைத்து இனியனுக்கு சிரிப்பு பொங்கியது. கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

"சரி வா.. நான் உன்னை வீட்டுல விட்டுட்டு அப்படியே ஆபிஸ் போறேன்.." என்றார் குமரன்.

மகேஷ் முன்னால் நடந்தான். சந்தியாவை அழைத்துக் கொண்டு குமரன் பின்னால் நடந்தார். குமரனின் கை பிடியில் இருந்தவாறே சந்தியா பின்னால் திரும்பி இனியன் இருந்த இடத்தை பார்த்தாள்.

அவனை பிரிவதால் ஏற்படும் ஏக்கத்தை அவளது கண்கள் அப்பட்டமாக காட்டி கொடுத்தது. அவளது விழிகளை கண்ட இனியன் தனது விழிகளை அசைக்க மறந்து விட்டான்.

அவள் அவனை பார்த்துக் கொண்டே நடந்தாள். அவள் தன் வலையில் முழுதாக விழுந்து விட்டதை புரிந்து கொண்டு மனதுக்குள் விஷம சிரிப்பு சிரித்தான் இனியன்.

அன்று இரவு வரையிலும் கூட சக்தி கண் விழிக்கவே இல்லை. அவள் கண் விழிக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம் என சொல்லி சென்றார் மருத்துவர்.

அன்று இரவு பொன்னி சந்தியாவோடு வீட்டிற்கு கிளம்பி விட்டாள். சக்தியின் அப்பாவும் மகேஷை சக்திக்கு துணையாக விட்டு விட்டு தன் வீட்டிற்கு கிளம்பினார்.

மகேஷ் சக்தியின் முகத்தையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஸார் இந்த இன்ஜெக்சன் தீர்ந்துடுச்சி.. மெடிக்கல் போய் வாங்கிட்டு வரீங்களா..? ஊசி இன்னும் அரை மணி நேரத்தில் போட்டாகணும்.." என்றபடி அவனிடம் மருந்து சீட்டை நீட்டினாள் நர்ஸ்.

அவன் மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு வெளியே சென்றான்.
பொன்னி தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.

சந்தியாவோ தனது அறையில் இருந்த குளியலறையில் குளித்து கொண்டிருந்தாள். இனியன் சந்தியா அறையின் ஜன்னல் வழியே உள்ளே குதித்த அதே நேரத்தில் சக்தியின் ஹாஸ்பிட்டல் அறையில் கத்தியோடு உள்ளே நுழைந்தான் ஒருவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN