என் நெஞ்சுநேர்பவளே -11

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
11


தலை லேசாய் வீங்கி புடைத்திருக்க அதன் மேல் ஐஸ் கட்டியை வைத்துக் கொண்டிருந்தான் கார்த்தி..

"ப்பா என்னா அடி... நல்ல வேளை அது பிளாஸ்டிக் ஜாடியா இருந்ததால இதோட போச்சு... இல்லைனா மச்சான் சிதறு தேங்கா தான் உன் தலை... "என்று சொல்லி லேசாய் வைத்து அழுத்த,

"ஸ்ஸ் வலிக்குது டா எரும.. மெதுவா வை.. "

"சார் மச்சி ... ஆமா எதுக்கு திடிர்னு அந்த புள்ள உன்னைய அடிச்சுது...."

"என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்... கீழ என் பென் விழுந்துருச்சு... அதை எடுக்க தான் அவ கிட்ட போனேன்.. எதுக்கு அடிச்சான்னே தெரியல.. "

"இவ்ளோ பிளான் பண்ணி அந்த புள்ளைய இங்க வர வச்சதுக்கு உன் மண்டை வீங்குனது தான் மிச்சம்... "

"அடேய் வாய மூடு.. அவ காதுல விழுந்தா சமாதி கட்டிருவா.."என்று சொல்ல வாய் விட்டு சிரித்தான் கார்த்தி...

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க அருகில் உள்ள பேக்கரியில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தாள் ஆரதி...

"ஏன்டி நான் பாட்டுக்கு கத்திட்டே இருக்கேன்.. நீ எனக்கென்னனு ஜூஸ் குடிச்சுட்டு இருக்க... அவர அடிச்சு மண்டைய ஒடச்சிட்டு இப்படி ஒன்னுமே நடக்காத மாதிரி எப்படி டி இப்படி உக்காந்து இருக்க.. " என்று கத்திக் கொண்டிருந்தாள்..

"ஸ்ஸ்ஸ்.. இப்ப எதுக்குடி இப்படி குதிச்சுட்டு கிடக்க... "

"இந்தாரு ரதி.. அன்னைக்கு கல்யாணத்தப்பவும் பிரச்சனை பண்ணுன.. இன்னைக்கு அடிக்கவே செஞ்சுட்ட..அப்படி உனக்கும் அந்த சாருக்கும் என்ன தான் பிரச்சனை..அவரை உனக்கு முன்னாடியே தெரியுமா... "

"எனக்கு எந்த சாரையும் தெரியாது...மோரையும் தெரியாது... இதுக்கும் மேல இத பத்தி கேக்காத... "

"சரி விடு..அவரை பத்தி கேக்கல.. ஆனால் அவர்கிட்ட வந்து சாரி மட்டும் கேளு... "

"கண்டவன்கிட்ட எல்லாம் என்னால சாரி கேக்க முடியாது... "

கண்டவன அடிக்க மட்டும் முடியுமோ.. "

"ப்ச் வீண் பேச்சு வேண்டாம்.. வா வீட்டுக்கு போலாம்.. "

"நீ அவர்கிட்ட வந்து சாரி கேக்காம நான் எங்கயும் வரமாட்டேன்.. "

"வராத போ... "என்றவள் கைப்பையை தூக்கிக் கொண்டு விடுவிடுவென வெளியே சென்றவள் அதே வேகத்திலேயே திரும்பி வந்தாள்..

"ரஞ்சிமா.. அவன் கிட்ட எல்லாம் மன்னிப்பு கேக்க முடியாது.. நான் வேணும்னா உன்கிட்ட கேட்டுக்கவா.. "

ரஞ்சியோ அவள் புறம் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்...

"சரி சரி... மூஞ்சிய ஒன்ற முழத்துக்கு தூக்கி வைக்காத.. அவன் கிட்ட சாரி கேட்டு தொலைக்கிறேன்... வா... "

"இது நல்ல புள்ளைக்கு அழகு... "என்ற ரஞ்சி அவளை அவசரமாக இழுத்துக்கொண்டு ஆராதனைக்குள் நுழைந்தாள்... பின்னே வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விட்டால் என்ன செய்வது என்ற அவசரம்..

அறைக்குள் அனுமதி பெற்று உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்தான் ஆதி.. பின்னர் ரஞ்சியிடம்,

"வாங்க ரஞ்சி..இந்த பார்ம்ல உங்க டீடெயில்ஸ் எல்லாம் எழுதி சைன் பண்ணி குடுத்துட்டு போங்க... ஒரு வாரத்துல வந்து ஜாயின் பண்ணிக்குங்க.. "என்று எதுவுமே நடக்காதது போல் பேச ரஞ்சிக்குத் தான் சங்கடமாக இருந்தது..

ரதியோ மனதில் 'ஓவரா சீன் போடாதடா..'

ரஞ்சி தான் "சார் அது வந்து... "என்று தயங்கி இழுக்க..

"என்னாச்சுமா எதாவது டவுட் இருக்கா.. தெரிஞ்சதை மட்டும் எழுதி குடுங்க போதும்.. "

"ஓகே சார்" என்றவள் ரதியிடம் "ஹேய் சாரி கேளு டி.. "

"ப்ச்.. இரு.. "என்றவள் பின் எங்கோ பார்த்து "சாரி.... "என்க.. அவனோ அது காதில் விழுந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை...

"கொஞ்சம் சத்தமா தான் கேட்டுத் தொலையேன்.. "என்று எரிச்சல் பட்டாள் ரஞ்சி..

"ஹலோ மிஸ்டர் ஆதிரன்... "என்று சத்தமாக அழைக்க, ரஞ்சி தலையில் அடித்துக்கொண்டாள்..

"எஸ் மேடம்... " என்ற அவன் பதிலில் ரதியின் பல் நறநறக்கும் சத்தம் அவன் காது வரை சென்றது...

அருகில் இருந்த கார்த்தி டேபிள் மேல் இருந்த பேப்பர் வைட்டை டக்கென எடுத்துக்கொண்டான்.. பின்னே அவன் காதிலும் அந்த சத்தம் விழுந்ததே..
அவனையும் சேர்த்தே முறைத்தவளை ரஞ்சி இடித்து "கேளுடி.. "

"ச்ச இவ வேற உசுர வாங்குறா.. "

"மிஸ்டர் ஆதிரன் உங்களை அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் "என்று செய்தி வாசிப்பது போல் சொல்லி முடித்தாள்..

"ஒன்னும் பிரச்சனை இல்ல மேடம்.. ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிடீங்க போல.. நான் எதும் பெருசா எடுத்துக்கல.."

'ஏன் பெருசா தான் எடுத்துக்கோ.. எனக்கு என்ன வந்துச்சு... '

"ஓகே மேடம்.. இந்த பார்ம் பில்லப் பண்ணி குடுங்க.. "என்று ஒரு பேப்பரை நீட்டினான்..

அதை வாங்கி சின்சியராக நிரப்பி அவனிடமே குடுத்தாள்.... அதை வாங்கிப் படித்தவன் உதடுகள் அடக்க முடியா சிரிப்பில் துடித்தன...

பெயர் குப்பம்மா.. வயது இன்னும் பொறக்கவே இல்ல... படிப்பு ஒண்ணாவது பெயிலு.. அட்ரஸ் நடு ரோடு... கையெழுத்து போடும் இடத்தில் போடா லூசு என்று எழுதியிருக்க, அதை பார்த்தவன் சிரிக்காமல் இருக்க ரொம்பவே சிரமப்பட்டான்..

ரஞ்சியும் எழுதி கொடுத்து விட இருவரும் கிளம்பி விட்டனர்.. அவர்கள் போன பின் கார்த்தி ஆதியிடம்,

"ஏன்டா வேலைக்கு வருவாங்கன்னு நினைக்கிற.. "

"வருவாங்கன்னு தான் நினைக்கிறன்.. "


ஆராதனையை விட்டு வெளியில் வந்த ரதியின் முகத்தில் ஒருவித இறுக்கம் இருந்தது... உள்ளடக்கிய கோவம்.. அதையும் தாண்டி ஒரு மூலையில் கொஞ்சம் வேதனை.. குட்டியூண்டு சந்தோசம்....

வெறுப்பாய் வீசி எறிந்த அவள் காதல் இந்த நேரத்தில் கொஞ்சமாய் எட்டி பார்த்தது மனதில்... 'முன்னைக்கு ரொம்பவே சூப்பரா இருக்கானே.. என்ன ஓவர் கெத்து காமிக்கிறான்... அதான் கடுப்பாவுது... சரி இவன் இங்க எதுக்கு கம்பெனி ஆரம்பிச்சுருக்கான்... சென்னைல தானே ஆரம்பிச்சுருக்கணும்..'

இப்படியாய் சென்ற ரதியின் மன ஓட்டத்தை டிராபிக் போலீஸ் போல் தடுத்து நிறுத்தினாள் ரஞ்சி..

"என்னடி வீட்டுக்கு கிளம்பற ஐடியா இருக்கா இல்லையா..."என்று கேட்கவும் எதுவும் பேசாமல் வண்டியை இயக்கினாள்...

"ரதி என்னைல இருந்து வேலைக்கு வரலாம்... "

"வேலைக்கா!!! எங்கடி..? "

"ஆராதனைக்கு தான்.. "என்ற பதிலில் சட்டென வண்டியை நிறுத்தி இருந்தாள் ரதி...

"அந்த வேலை ஒன்னும் வேண்டாம்.. வேற பக்கம் போகலாம்.. "

"ஏன் அங்க என்ன பிரச்சனை... "

"அவன் மூஞ்சியெல்லாம் தினமும் பாக்க முடியாது.. "

"ஏனாம்...? "

"பாக்க பனைமரம் மாதிரி ஹைட்டா இருக்கான்.. ஒவ்வொரு தடவையும் அண்ணாந்து பேச வேண்டி இருக்கு.. அதனால் பிடிக்கலை.. "

"இல்ல தெரியாம தான் கேக்குறேன்.. ஒருவேளை நீ கிறுக்கா.. இல்லை நீ பேசறதெல்லாம் கேக்குற நான் கிறுக்கா.. இதெல்லாம் ஒரு காரணமுன்னு வெளிய சொல்லிராத... சிரிச்சே செத்து போயிருவாங்க... ஒழுங்கு மரியாதையா சொல்லு உனக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை.. உனக்கு அவரை முன்னாடியே தெரியுமா.. "

"எனக்கு எவனையும் தெரியாது.. உனக்கு என்ன நாளைல இருந்து அங்க வேலைக்கு போவணும்.. அவ்ளோ தான.. சரி போலாம்.. அவ்ளோதான்.. இனிமேட்டுக்கு அவன தெரியுமா இவனை தெரியுமான்னு என்கிட்ட கேக்காத.. அப்பிடி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்... "

"நான் எதுவும் கேக்கல.. ஆனால் அதுவா தெரிய வரும் போது உனக்கு இருக்குடி புஜை.... "

"அப்போ பாத்துக்கலாம் போடி... "

என்னதான் இணைபிரியா தோழிகள் ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பர்சனல் இருக்கும்.. அதை அவர்களாக சொன்னால் தவிர இருவரும் மற்றவரை துருவுவதில்லை...

இருவரும் வீட்டிற்கு வர ரஞ்சி அவர்கள் வீட்டினுள் சென்றுவிட ரதி வண்டியை நிறுத்திவிட்டு தங்கள் வீட்டிற்குள்ளே வந்தாள்...

வரவேற்பறையில் அமர்ந்திருந்த சிவகாமியை கண்டவள் ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்...

"அம்மாச்சி.. எப்ப வந்தீங்க..? எங்க மீசக்காரரை காணோம்.. "

"காலைல வந்தேன் தங்கம்.. தோட்டத்துல வேல கெடக்கு.. அதேன் நான் மட்டும் வந்தேன்..."

"ஆமாம் !!நீங்க எப்படி உங்க ஜோடிப் புறாவை விட்டுட்டு வந்தீங்க...அப்புச்சிய தனியா விட்டுட்டு நீங்க எங்கயும் வர மாட்டீங்களே...

"சும்மாதான் தங்கம்.. நம்ம சுபி கண்ணாலம் தள்ளி போயிட்டே இருக்குல்ல.. அதான் சுபி ஜாதகத்த ஜோசியர்கிட்ட போய் காட்டிட்டு வந்தேன்.. ராகு கேது இருக்கறதால தான் ரொம்ப தள்ளிப் போவுதுன்னு சொன்னாங்க.. கூடிய சீக்கிரம் நல்ல மாப்பிளை அமையும்னு சொன்னாங்க.. புறவு ஒரு ஜாதகம் வந்துச்சு.. பொருத்தம் பார்த்தேன்.. நல்லா பொருந்தி போயிருக்கு.. மாப்பிளைய பத்தியும் அவுக வீட்ட பத்தியும் நல்ல விதமா தான் சொல்றாக..அதான் ஒரு எட்டு வந்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்... "

"ஐ.. சூப்பர் அம்மாச்சி... எப்படியோ நம்ம சுபிக்கு ஏத்த மாதிரி நல்ல மாப்பிளை கிடைச்சா போதும்.. "

"மாப்பிளை சென்னைல சொந்தமா கம்பெனி வச்சிருக்காரு..விசாரிச்சதுல நல்ல பையன்னு தான் தங்கம் சொன்னாங்க.. ஆனா எதுக்கும் நாமலும் ஒருதடவை நல்லா விசாரிச்சுட்டு முடிவு எடுப்போம்... "

"சரி அம்மாச்சி.... "என்றவள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு தன் அறைக்கு செல்ல,

"அப்படியே தங்கத்துக்கு ஒரு நல்ல பையன் அமைஞ்சுட்டா ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா கூட முடிச்சிடலாம்.... "

"ஆமாம்மா... இவளுக்கும் வயசு ஏறிட்டு போகுதுல்ல... "

என்ற இவர்களின் சம்பாஷணையில் திகைத்து நின்றாள் ஆரதி.. அவள் மனதில் சட்டென சிரித்துப் போனான் ஆதிரன்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN