நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 59

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா இனியனை தயக்கமாக பார்த்தாள்.

"நீ தயங்க வேண்டாம்.. பயப்படவும் வேண்டாம்.. நீ என்னை நம்பி உன்னை கொடுத்த.. நான் உன்னை என்னவளா மாத்திக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. நீ ரெடியாகி வா.. நான் நம்மோட கல்யாணத்தை பத்தி உன் மாமாக்கிட்ட பேசுறேன்.."

சந்தியா தயக்கமாக தலையசைத்து விட்டு குளிக்க சென்றாள்.

அவள் குளித்து விட்டு வந்தபோது இனியன் அங்கே இல்லை. அவளுக்குள் சட்டென ஏமாற்றம் வந்து சேர்ந்தது. அவளது ஏமாற்றம் அதிகமாகும் முன் அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் இனியன்.

"எங்கே போனிங்க..?" அதிர்ச்சியாக கேட்டாள் அவள்.

"அம்.. எதிரில் இருந்த ரூம்ல இருந்த பாத்ரூம்க்கு போய் குளிச்சிட்டு வந்தேன்.."

"எங்க பாட்டி பார்த்திருந்தா..?"

"யாரும் என்னை பார்க்கல.. அப்படியே பார்த்தாலும் அவங்களை சமாளிக்க என்னால முடியும்.." என்றவன் தலையை துவட்டியபடியே அவளை பார்த்தான்.

"நீ அழகா இருக்க.." என்றான் கண்ணடித்து.

சந்தியா முகம் நொடியில் சிவந்து போனது.

"இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு.. இரண்டு நாள் முன்னாடி வரை யாருன்னு கூட தெரியாதவங்க இன்னைக்கு மொத்த வாழ்க்கையாக மாறுவது ரொம்ப விசித்திரம் இல்ல.." என கேட்டவளை சிரிப்போடு தன்னோடு அணைத்துக் கொண்டான் அவன்.

"இதுதான் லைப்.. நாளைக்கு என்ன நடக்கும்ன்னு தெரியாம வாழ்வதுதான் லைப்.." என்றவன் அவளை தன்னோடு அழைத்து வந்து கட்டிலின் மீது அமர வைத்தான். அவள் முன்னால் மண்டியிட்டான்.

அவளது கையை பற்றி அவளது புறங்கையின் மீது கோலம் போட்டான்.

"நான் உன்கிட்ட சில விசயங்கள் சொல்ல போறேன் சந்தியா.. நான் சொல்றதை கேட்டு நீ என்னை வெறுக்க மாட்டேன்னு நம்புறேன்.." என்றவன் பெருமூச்சோடு அவளை பார்த்தான்.

அவள் குழப்பமாக அவனை பார்த்தாள்.

"என் பேர் இனியன்.." என்றவனை குழப்பமாக பார்த்தாள் சந்தியா.

"அப்புறம் ஏன்.." அவள் கேள்வியை கேட்டு முடிக்கும் முன்பு அவனே தொடர்ந்தான்.

"நான் முழுசா சொல்லிடுறேன் சந்தியா.. என் பேர் இனியன்.. உன் மாமன் மகேஷோட மகன்.." அவன் சொன்னதை கேட்டு சட்டென தன் கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள் அவள்.

அவனை நம்பாமல் பார்த்தாள்.

"நான் சொல்றதை உன்னால நம்ப முடியாதுன்னு தெரியும்... ஆனா உன்கிட்ட உண்மையை சொல்லுறது என் கடமைன்னு நினைக்கிறேன்.. என் அம்மா சிவசக்தி.. என் அப்பா மகேஷ்வரன்.."

சந்தியாவின் கண்கள் ஆச்சரியத்தில் மின்னியது.

"அப்படின்னா அந்த குழந்தை சாகலையா..?" என்றாள் அவனது முகத்தில் இருந்த மகேஷின் சாயலை கவனித்தபடி.

"எந்த குழந்தை..?" என்றவன் யோசித்து விட்டு புரிந்துக் கொண்டவனாக ஆமோதித்து தலையாட்டினான்.

"அந்த குழந்தை சாகல.. உங்க அப்பா எங்க அம்மாவுக்கு விஷத்தை தந்தாரு.. ஆனா நான் சாகும் முன்னாடி எங்க செல்வா மாமா எங்க அம்மாவை காப்பாத்தி ஆக்ரா கூட்டிட்டு போயிட்டாரு.." என்றவன் தான் தன் மாமா வீட்டில் வளர்ந்த கதையை சொன்னான்.

"ஸாரி.. எங்க அப்பாவால்தான் நீங்க இத்தனை வருசமா அனாதையா இருந்திருக்கிங்க.." என்றவளது கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான் இனியன்.

"மன்னிப்பு கேட்க வேண்டியது நீ இல்ல.. கட்டின மனைவியை காப்பாத்த துப்பில்லாத உன் மாமன்தான் மன்னிப்பு கேட்கணும்.." என்றவனின் வார்த்தையில் இருந்த கசப்பை கண்டு சந்தியாவிற்கு திக்கென்றது.

"மாமா நல்லவர்.." என்றவளை கண்டு வெறுப்பாக சிரித்தான் அவன்.

"தன்னை நம்பி வந்த ஒருத்தியை காப்பாத்த துப்பில்லாதவன் நல்லவன் கிடையாது.. சரி விடு.. எனக்கும் அவனுக்கும் செட்டாகாது.. இதை பத்தி பேசி நீயும் நானும் பகையாக வேண்டாம்.. எனக்கு இப்படி ஒரு அப்பாவும் குடும்பமும் இருப்பது எனக்கும் சமீபத்தில்தான் தெரிஞ்சது.. அவனை போட்டு தள்ளதான் இங்கயே நான் வந்தேன்.." என அவன் சொல்ல அவள் அதிர்ச்சியோடு வாய் மீது கை வைத்தாள்.

"ஆனா நான் இங்கே வந்தபோது என் அம்மா ஹாஸ்பிட்டல் போயிட்டாங்க.. அவங்க உன் மாமனை ரொம்ப விரும்பறாங்க.. அதனால அவனை கொன்னு என் அம்மாவோட வெறுப்புக்கு ஆளாக எனக்கு இஷ்டம் இல்ல.. அப்பதான் நீ என் கண் முன்னால வந்த.." அவன் மேலும் சொல்லும் முன் அதிர்ச்சியோடு எழுந்து நின்றாள் சந்தியா.
அவளின் சிறு இதயம் சின்ன சின்ன ரத்த துளியாக உடைவதை உணர்ந்தாள் அவள்.

"என்னை பார்த்தவுடனே உங்க அப்பாவை பழி வாங்க நல்ல சான்ஸ் கிடைச்சிடுச்சி.. அதனால என்னை காதல்ங்கற பேர்ல ஏமாத்த.." அவளை மேல பேச விடாமல் கை காட்டி தடுத்தான் அவன்.

"ஆரம்பத்துல அப்படிதான் ப்ளான் பண்ணேன்.. ஆனா உன்னை ஏமாத்த மனசு வரல.. நானும் உன்னை உண்மையா லவ் பண்றேன்.." என்றவனை கண்டு கசப்பாக சிரித்தாள் அவள்.

"எப்போதிருந்து இந்த உண்மையான காதல்.. நேத்து நைட்ல இருந்தா.." என அவள் கேட்க அவன் முகம் அடிப்பட்டது போலானது. தான் விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்டதை புரிந்துக் கொண்டான். ஆனால் தான் அவள் மீது கொண்ட காதலை அவளுக்கு புரிய வைக்க நினைத்தான்.

"நீ நினைக்கற மாதிரி இல்ல சந்தியா.. நேத்து நைட் நான்.. நான்.." அவன் வார்த்தை வராமல் திணறினான். அவள் மீது தான் உண்மை காதலை கொண்டிருப்பதை இன்று காலையில் அவளது கண்ணீரை கண்ட பிறகே உணர்ந்தான் அவன். நேற்று இரவு வரையிலுமே அவன் மனதில் பழி வாங்கும் எண்ணம் மட்டுமே இருந்தது. அவளை ஏமாற்றி விட்டது தவறு என புரிந்து கொண்டவனுக்கு இனிமேலும் அவளை ஏமாற்ற மனம் வரவில்லை.

அவள் தலையை பிடித்தபடி கட்டிலில் அமர்ந்தாள்.

"உன் அப்பாவையும் என் அப்பாவையும் பழி வாங்க என்னை யூஸ் பண்ணியிருக்க.." என்றவளது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.

"ஆனா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கேன்.." என்றவனை வெறுப்பாக பார்த்தாள்.

"உன் பரிதாபத்தால் கட்ட போற தாலிக்கயிறு எனக்கு தேவை கிடையாது.. என் மனசுக்குள்ள வாழுற காதல் இப்படியே இருக்கட்டும்.. நீ ஒன்னும் எனக்கு வாழ்க்கை பிச்சை போட தேவையில்லை.. நீ எனக்காகவும் என்னோட இந்த உதவாத கண்ணீருக்காகவும் உன் ப்ளானை மாத்திக்க வேண்டாம்.. உன் ப்ளான் சக்ஸஸ்.. உன் பழி வாங்கும் படலம் வெற்றி அடைஞ்சாச்சி.. என் கண்ணீரை பார்த்து காலம் முழுக்க என் அப்பாவும் என் மாமாவும் மனசுக்குள்ள நொந்து சாவாங்க.. உன் வேலை முடிஞ்சது.. நீ கிளம்பலாம்.." என்றவளுக்கு மனதில் உண்டான வலி அவளது உயிரையும் சேர்த்து வாட்டி வதைத்தது.

இனியன் தனது முட்டாள்தனத்தை நினைத்து தன் மீதே ஆத்திரம் கொண்டான்.

"ஸாரி சந்தியா.. ஆனா நான் உன் மனசை கஷ்டப்படுத்த நினைக்கல.." என அவன் கூற அவள் தன் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

"நீ எனக்காக மனம் வருந்த தேவையில்ல.. என் மேல உனக்கு உண்டானது வெறும் பரிதாபம்தான்.. அதை காதல்ன்னு நம்பி கவலைபட வேண்டாம்.. நீ இங்கிருந்து கிளம்பலாம்.." என்றவள் கதவை நோக்கி கையை காட்டினாள்.

இனியன் தனது தோல்வியை உணர்ந்தான். அவளை பழி வாங்க வந்து தான் பலியானதை புரிந்துக் கொண்டான்.

தன் மனதில் உண்டான காதலை அவள் இப்போதைக்கு நம்ப மாட்டாள் என்பதை புரிந்துக் கொண்டான். அவளது கோபம் தீர்ந்த பிறகு கெஞ்சிப் பார்க்கலாம் என முடிவெடுத்து வெளியே நடந்தான்.

"யார் நீ..?" சந்தியாவை தேடி வந்த பொன்னி சந்தியாவின் அறையில் இருந்து வெளியே வந்த இனியனை கண்டு குழப்பமாக கேட்டாள்.

பொன்னியின் சத்தம் கேட்டு வெளியே வந்த சந்தியா "அவன் என் பிரெண்ட்.. அவனை பத்தி நீங்க யாரும் தெரிஞ்சிக்க வேண்டாம்.." என்றாள் வார்த்தையெல்லாம் வெறுப்பை மட்டும் நிரப்பி.

இனியன் முகம் கவிழ்ந்தான். பொன்னி இருவரையும் மாறி மாறி பார்த்தாள். இனியனின் குற்ற உணர்ச்சி நிரம்பிய முகமும் சந்தியாவின் கண்ணீர் கரை காய்ந்த முகமும் பொன்னிக்கு பலவித சந்தேகத்தை உண்டாக்கியது. அவர்கள் இருவரிடமும் தன் சந்தேகத்தை அவள் கேட்க நினைத்த நேரத்தில் சந்தியாவின் போன் ஒலித்தது.

முகத்தை துடைத்துக் கொண்டு போனை எடுத்தாள் அவள்.

"சந்தியாம்மா.." எதிர் முனையில் மகேஷின் குரல் கரகரத்து ஒலித்தது.
சந்தியா அனிச்சையாக இனியனை நிமிர்ந்து பார்த்தாள். தனக்கு இப்படி ஒரு மகன் இருப்பது மாமாவுக்கு தெரிந்தால் எந்த அளவிற்கு சந்தோசப்படுவார் என நினைத்தாள். ஆனால் தன் மகனின் கேவலமான புத்தி தெரிந்தாள் எந்த அளவிற்கு மனம் நொந்து போவார் என்பதையும் எண்ணி பார்த்தாள்.

"சொல்லுங்க மாமா.." என்றாள் இனியனை பார்த்தபடியே.

"நேத்து நைட் சக்தி.." அவன் வார்த்தை வராமல் திணறினான்.
சந்தியாவின் முகம் நொடியில் இருளடைந்தது.

"அத்தைக்கு என்ன ஆச்சி மாமா..?" என அவள் கேட்க இனியன் அதிர்ச்சியாக அவளை பார்த்தான்.

"நேத்து அவளை யாரோ தோள்பட்டையில் கத்தியால குத்திட்டாங்க.. இப்ப ஆபரேசன் முடிச்சி ஐசியூவில் இருக்கா.." என அவன் சொல்ல இவள் அதிர்ச்சியோடு வாய் மீது கை வைத்தாள்.

"அத்தையை யாரோ நேத்து நைட் கத்தியால குத்திட்டாங்களாம்.." என்றாள் இனியனிடம். இதை கேட்டு அவன் முகத்தில் இருந்த மொத்த ரத்த ஓட்டமும் நின்று போனது.

அவன் தன் பாக்கெட்டிலிருந்த பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினான்.

"மாமா நான் ஹாஸ்பிட்டல் வரேன்.." என்றவள் போன் இணைப்பை துண்டித்து விட்டு இனியனை பின்தொடர்ந்து ஓடினாள்.

"சந்தியாம்மா.." தன்னை அழைத்த பொன்னியை திரும்பி பார்த்தாள் அவள்.

"நான் ஹாஸ்பிட்டல் போறேன் பாட்டி.. சாப்பிட்டுட்டு டேப்ளட் சாப்பிட்ட பிறகு வீரய்யாவை ஆட்டோ பிடிச்சி கொடுக்க சொல்லி நீங்க வாங்க.." என்றவள் பொன்னியின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே ஓடினாள்.
இனியன் நடுங்கும் கரங்களோடு பைக்கை ஸ்டார்ட் செய்தான். அங்கே ஓடி வந்த சந்தியா பைக்கில் ஏறி அமர்ந்தாள். அவளிடம் எதையும் கேட்கும் பேசும் மனநிலையில் இல்லாத இனியன் பைக்கை வேகமாக செலுத்தினான்.

மகேஷ் ஐசியூவின் வெளியே பைத்தியக்காரன் போல அமர்ந்து இருந்த நேரத்தில் அங்கு வந்தார் குமரன்.

"மகேஷ் என்ன ஆச்சி..?"

அவன் அவரை நிமிர்ந்து பார்த்தான். அவனது கண்கள் ஈரத்தால் மின்னியது. "நேத்து நைட் நான் பார்மஸி போன நேரத்துல யாரோ அவளை கத்தியால குத்திட்டாங்க மாமா.." என்றான்.

அவனது கை கால் நடுங்குவதை கண்ட குமரன் அவனை தன்னோடு அணைத்துக் கொண்டார். "அவ குணமாகிடுவா மகேஷ்.. நீ பயப்படாத.. அவ எத்தனையோ மன கஷ்டத்தை பார்த்தவ.. இந்த உடல் வலியை தாங்கி குணமாக.." அவரது வார்த்தை பாதியிலேயே நின்று போனது.
அவரது குழப்ப முகம் கண்ட மகேஷ் அவரது பார்வை போன திசையை பார்த்தான். அங்கே அவன் நேற்று ஹோட்டலில் பார்த்த இளைஞன் இவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அவனின் பின்னால் சந்தியாவும் வந்தாள்.

"இனியா.." அதிர்ச்சியோடு கேட்ட குமரனை கண்டுக்கொள்ளாமல் ஐசியூவிற்குள் நுழைய முயன்றான் அவன். ஆனால் அவன் நுழையும் முன் அவனை கை பிடித்து நிறுத்தினான் மகேஷ்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN