நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 60

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் தன் கை பிடித்து நிறுத்திய மகேஷை திரும்பி பார்த்தான். அவனின் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொண்டான்.

மகேஷை முறைத்து விட்டு குமரனை பார்த்தான். "இன்னும் ஒரு நிமிஷத்துல இந்த ஆள் இங்கிருந்து போயாகணும் மாமா.. இல்லன்னா நான் இந்த ஆளை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்.."

"இனியா நீ இங்கே என்ன பண்ற..?" குழப்பமாக கேட்டார் அவர். அவர் இதை கேட்டதும் சந்தியாவிற்கு தன் பெரியப்பா மீது கோபமாக வந்தது.

"அப்படின்னா உங்களுக்கும் இவனை பத்தி தெரிஞ்சிருக்கு இல்லையாப்பா..?" என சந்தியா கேட்க அவர் நெற்றியை தேய்த்து விட்டபடி அவளை பார்த்தார்.

"நீ நினைக்கற மாதிரி இல்லம்மா.."

"மாமா.. இங்கே என்ன நடக்குது..? யார் இவன்..?" என்றான் மகேஷ்.

"நான் யாருங்கறது உங்களுக்கு எதுக்கு..? இந்த இடத்தை விட்டு நீங்க போனா அதுவே போதும்.." என்றவன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்.

சக்தி ஐசியூ பெட்டில் மானிட்டர் உதவிகளோடு படுத்திருப்பதை கண்டவன் கை நடுங்க அவள் அருகே சென்று அமர்ந்தான். அவளின் கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

"அம்மா.. நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும்மா.. எனக்கு எந்த உரிமையும் பெருமையும் தேவை இல்ல.. நீ இருந்தா போதும்.. தயவு செஞ்சி சீக்கிரம் கண்ணை விழிச்சிக்கம்மா.. நீ இல்லன்னா என்னால இந்த பூமியில வாழவே முடியாது.. ப்ளீஸ்.. இதுக்கு மேலயும் எனக்கு கஷ்டம் தராத.. உன்னோட காயங்கள் எனக்கு வலியை தருதும்மா.." என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு நிமிர்ந்தான். அவளை விழியெடுக்காமல் விழிகளில் இருந்து கண்ணீர் சொட்டாக சொட்டாக விழுந்தது.

ஐசியூவிற்குள் சென்றவனை குழப்பமாக பார்த்த மகேஷ் அவனை தொடர்ந்து உள்ளே செல்ல முயன்றான். ஆனால் அதற்குள் அவனை பிடித்து நிறுத்தினார் குமரன்.

"அவன் பார்த்துட்டு வரட்டும்.. அப்புறமா பேசிக்கலாம்.."

"ஆனா ஏன்..? யார் இவன்..? என் பொண்டாட்டியை விட்டு என்னை ஏன் போக சொல்றான்..?" என்றான்.

"அவன் உங்க சீமந்த புத்திரன் மாமா.." சந்தியா வெறுப்போடு சொல்ல அவன் குழப்பமாக அவளை பார்த்தான். குமரனிடம் தன் குழப்பத்திற்கான பதிலை தேடினான். அவரோ பதில் ஏதும் சொல்லாமல் தரையை பார்த்தார்.

"அவர்க்கிட்ட பதிலை எதிர்பார்க்காதிங்க மாமா.. இத்தனை வருசமா சொல்லாதவர் இன்னைக்கு மட்டும் சொல்லிடவா போறாரு.. இப்ப உள்ளே போனவனோட பேரு இனியன்.. சக்தி அத்தைக்கும் உங்களுக்கும் பிறந்தவன்.. அன்னைக்கு என் அப்பா சக்தி அத்தைக்கு விஷம் கொடுத்தபோது அவங்க வயித்துல இருந்த குழந்தை சாகும் முன்னாடியே செல்வாப்பா காப்பாத்திடாரு.. கருவுல சாகாம தப்பிச்சி பிழைச்சி பிறந்தவன் நம்ம எல்லோரையும் சாகடிக்க இன்னைக்கு வந்திருக்கான்.." என்றாள் வெறுப்பாக.

மகேஷ்க்கு இந்த விசயம் ஆயிரம் விதமான உணர்ச்சிகளை தந்தது. ஆயிரம் கேள்விகளை தந்தது.

'அன்னைக்கு சக்திக்கிட்ட ஐ லவ் யூ சொன்னது என் மகனா..? செல்வாவோட தத்து மகன்னு சக்தி சொன்ன இனியன் என் மகன்தானா..? ஆனா ஏன் என்கிட்ட இதை அவ சொல்லல..?' அவன் அதற்கு மேல் யோசிக்க கூட தைரியம் இல்லாமல் நாற்காலியில் அமர்ந்தான்.

"மகேஷ் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.. உன் அப்பாவுக்கு பயந்துக்கிட்டுதான் அவ இதை உன்கிட்ட சொல்லல.. உன் அப்பா அவளையே இத்தனை முறை கொலை செய்ய முயற்சி பண்ணிட்டாரு.. இப்படி ஒரு மகன் இருப்பது தெரிஞ்சா அவனுக்கும் ஏதாவது தீங்கு நடந்துடுமோன்னு பயந்துதான் அவ இதை சொல்லல.."
குமரனை கோபமாக பார்த்தான் மகேஷ்.

"அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா மாமா..? என்னால என் குழந்தைக்கு பாதுகாப்பு தர முடியாதா..?"

"கட்டின பொண்டாட்டிக்கே பாதுகாப்பு தர முடியல.. இதுல குழந்தையோட பாதுகாப்பு ஒன்னுதான் கேடா..?" விஷமாக கேட்டபடி ஐசியூ அறையிலிருந்து வெளியே வந்தான் இனியன்.

அவனை கண்டு டக்கென எழுந்து நின்றான் மகேஷ். அவனது கையை பற்ற முயன்றான். ஆனால் இனியன் கடைசி நேரத்தில் தன் கையை பின்னுக்கு இருத்துக் கொண்டான்.

"உனக்கு ஏன் என் மேல இவ்வளவு கோபம்..?" பல்லை கடித்தபடி கேட்டான் மகேஷ்.

"உங்க மேல நான் ஏன் கோபப்படணும்..? ஸ்கூல் காலேஜ்ல அப்பன் பேரு தெரியாதவன்னு என்னை எல்லோரும் கிண்டல் பண்ணும் போது நீங்களா வந்து ஆறுதல் சொன்னிங்க..? இத்தனை வருசமா உங்க அப்பாவுக்கு பயந்து என் அம்மா என்னை விட்டு பிரிஞ்சி இருந்தபோது நீங்களா அவங்களுக்கும் எனக்கும் பாசத்தை காட்டினிங்க..? செல்வா மாமா வொய்ப் என்னை ஒவ்வொரு முறையும் அப்பனை போல ஏமாத்துகாறன்னு சொல்லி திட்டும் போதெல்லாம் நீங்களா வந்து என் கண்ணீரை துடைச்சி விட்டிங்க..? எந்த உரிமையில் உங்க மேல கோபப்படுறது..?"

மகேஷின் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அவனை கண் கலங்க பார்த்தான். அவனது வாழ்நாள் வலியை ஒற்றை நொடியில் அனுபவித்து தீர்த்தான். இனியனின் கோபத்தில் இருந்த நியாயத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது அவனால். ஆனால் இதில் தன் தவறு ஏதும் இல்லையே என்று குமுறினான்.

இனியன் சொன்னதை கேட்டு சந்தியாவிற்கு இதயம் வலித்தது. அவன் அனுபவித்த துயர்கள் அவள் கண் முன் வந்து போனது. தனது அப்பாவும் தாத்தாவும் செய்த தவறால் அவன் எவ்வளவு சிரமத்தை சந்தித்து விட்டான் என்பதை புரிந்துக் கொண்டாள். ஆனால் இது அத்தனைக்குமாக தன்னை பழி வாங்கி விட்டானே என நினைத்து ஆத்திரப்பட்டவள் தன் கலங்கும் கண்களை மறைக்க வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

இனியன் மகேஷை கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் சந்தியாவின் முக மாற்றத்தையும் அவளது கலங்கிய கண்களும் அவனது பார்வையில் விழத்தான் செய்தது. அவள் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பி தன் கண்களை திருப்பிக் கொண்டபோது அவனுக்கு இதயத்தில் ஈட்டி பாய்ந்த உணர்வு உண்டானது.

"உன் வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது.. ஆனா இதுல என் தப்பு என்ன இருக்கு..? இப்படி ஒரு பையன் இருப்பதை அவ என்கிட்ட சொல்லவே இல்ல.. நீ இருப்பது தெரிஞ்சிருந்தா உன்னை இப்படி கண்காணாத ஊருல வளர விட்டிருப்பேனா..? நீ கருவுல அழிஞ்சிட்டங்கற சேதியை கேட்டு உயிர் வரைக்கும் வலியை அனுபவிச்சேன் நான்.. உன்னை பத்தி ஒருத்தர் கூட எனக்கு ஒரு குறிப்பு கூட சொல்லல.. என் வாரிசு நீ.. என் ரத்தம் நீ.. உன்னை பத்தி தெரிஞ்ச செகண்டே நான் இவ்வளவு பீல் பண்றேன்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா உன்னை விட்டிருப்பேன்னு நினைக்கிறாயாடா..?"

மகேஷ் பேசியதை கேட்டு இனியனுக்கு கண்ணெல்லாம் கலங்குவதை போல உணர்வு ஏற்பட்டது.

"என் அம்மாவை ஏமாத்திட்டு இருக்கற மாதிரி செண்டிமெண்டலா பேசி என்னையும் ஏமாத்த வேணாம்.. என் அம்மா உங்களை நேசிக்கறாங்க.. அதனாலதான் உங்களை நான் சும்மா விடுறேன்.. அவங்களை பார்த்துக்க நான் இருக்கேன்.. நீங்க இங்கிருந்து கிளம்புங்க.. இனி என் அம்மாவை பார்க்க வராதிங்க.."

இனியனை அதிர்ச்சியோடு பார்த்தான் மகேஷ். அவனை செவிலில் ஒரு அறை தர தோன்றியது அவனுக்கு. ஆனாலும் பல்லை கடித்து கோபத்தை அடக்கியபடி அவனை பார்த்தான்.

"அவ என் பெண்டாட்டி.. அவளை நான் பார்க்க கூடாதுன்னு சொல்ல உனக்கு உரிமை கிடையாது.. என்னதான் பெத்த புள்ளையாவே இருந்தாலும் என் சக்திக்கு பின்னாடிதான் எவனும்.."

இனியன் அவனை கண்டு நக்கலாக சிரித்தான். "அவங்களை எவனோ கத்தியால குத்திட்டு போயிருக்கான்.. அப்போது இந்த வெறிதனமான பாசம் எங்கே போச்சி..?"

மகேஷ் அவனுக்கு பதில் சொல்ல முயலும் முன் "மகேஷ்.." என அழைத்தபடி அங்கு வந்தான் செல்வா. முகமெல்லாம் வியர்த்து போய் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவசரமாக வந்து நின்றவன் பதற்றத்தில் இனியனை கவனிக்கவில்லை.

மகேஷ் அவனை கண்டு நிம்மதி பெருமூச்சி விட்டான். ஆனால் வேகமாக வந்த அவனோ மகேஷின் தாடையில் ஒரு குத்து விட்டான்.

மகேஷக்கு தெரியும் தான் அடித்தால் நண்பன் தாங்க மாட்டான் என.

அதனால் ஏற்கனவே அடக்கிக் கொண்டிருக்கும் கோபத்தோடு இதையும் சேர்த்து அடக்கியபடி அவனை பார்த்தான்.

"உன் வீட்டுல இருக்கும் போது எவனோ அவளை கத்தியால குத்திட்டாங்கன்னு சொன்ன.. நைட் ப்ளைட் ஏறுற நேரத்துக்கு மறுபடியும் அவளை எவனோ கத்தியால குத்திட்டான்னு சொல்ற.. என் தங்கச்சிக்கு ஏதாவது ஒன்னுன்னா கேள்வி கேட்க கூட யாரும் இல்லைன்னு நினைச்சிட்டியா நீ..? உனக்கு என்ன அவ்வளவு அசால்ட்..? நீ ஒரு ரவுடி.. உனக்கு எத்தனை எதிரின்னு உனக்கு தெரியும்.. அவ ஒரு போலிஸ்.. அவளுக்கு எத்தனை எதிரின்னும் உனக்கு தெரியும்.. ஊரை சுத்தி எதிரிங்க.. எவன் எப்ப என்ன பண்ணுவான்னு தெரியாது.. ஆனா எது வேணாலும் எப்போது வேணாலும் நடக்கும்ன்னு உனக்கே நல்லா தெரியும்.. எல்லாம் தெரிஞ்சிருந்தும் அவளை தனியா விட்டுட்டு போயிருக்க.."

செல்வா அவனிடம் காட்டு கத்தல் கத்திக் கொண்டிருந்தான். செல்வா விட்ட குத்தில் மகேஷின் உதட்டில் காயம் ஏற்பட்டது. உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்தபடி அவனை பார்த்தான். "ஸாரிடா.. தப்பு என் மேலதான்.. நான்தான் கவனமா இருக்க தவறிட்டேன்.." என்றான் சிறு குரலில்.

செல்வா தலையசைத்துவிட்டு அவனை தலை முதல் கால் வரை பார்த்தான். "உனக்கு ஒன்னும் ஆகலையே.." என்றான் அக்கறையோடு.
இல்லையென தலையசைத்தவனை தன்னோடு அணைத்துக் கொண்டான் செல்வா. "இன்னொரு முறை அவளுக்கு ஏதாவது ஆச்சின்னா நான் உனக்குதான் முதல்ல சமாதி கட்டுவேன்.. புரிஞ்சதா..?"

"புரிஞ்சது.." என்ற மகேஷ் அவனை விட்டு விலகி நின்றான். செல்வாவுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த இனியன் பல்லை கடித்தபடி கையை இறுக்கமாக மடக்கியபடி தலையை குனிந்து நின்றுக் கொண்டிருந்தான். அவனது மனநிலையை மகேஷால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் தனது மனநிலையை அவன் கவனிக்க தவறி விட்டானே என்று ஆதங்கமாகவும் இருந்தது.

"ப்ளைடை விட்டு இறங்கியதும் நேரா இங்கேதான் வந்திருப்ப போல.. வீட்டுல அம்மா இருப்பாங்க.. நீ வீட்டுக்கு போய் குளிச்சி சாப்பிட்டுட்டு அப்புறமா ஹாஸ்பிட்டல் வா.. உன் தங்கச்சியை நான் பார்த்துக்கறேன்.."

"சக்தியை பார்த்துட்டு அப்புறம் கிளம்பறேன்.." என்றவனிடம் தலையை அசைத்தவன் "வீட்டுக்கு போகும் போது அவனையும் கூட்டி போ.. பசியோடு இருப்பான்னு நினைக்கிறேன்.. சாப்பிட்டுட்டு வரட்டும்.."

யாரை சொல்கிறான் என புரியாமல் திரும்பி பார்த்தான் செல்வா.

இனியன் கோபத்தில் முகம் சிவக்க நின்றுக் கொண்டிருப்பதை பார்த்தவன் மகேஷையும் அவனையும் மாறி மாறி பார்த்தான்.

"அப்பனை மாதிரியே எப்படிடா அடங்கா பிடாரியாவே பிறந்திருக்க நீயும்.. நான் அத்தனை முறை சொன்னபோது பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டின.. ஆனா பொய் சொல்லிட்டு இங்கே வந்திருக்க.. உன் கண்ணுக்கு என்னை பார்த்தா எப்படிடா தெரியுது..?" என கோபத்தோடு கேட்டான் செல்வா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN