நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 61

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செல்வாவின் முன்னால் தலை குனிந்து நின்றான் இனியன்.

"இவங்க வீட்டுல யாருக்கும் அம்மாவை பிடிக்கல.. எனக்காக அம்மா ஒன்னும் இவங்க வீட்டுல பிடிக்காத வாழ்க்கை வாழ தேவையில்லை.. அப்பா பேர் தெரியாம இத்தனை நாள் வாழலையா..? இவங்க தர உரிமையும் மதிப்பும் எனக்கு தேவையே கிடையாது.. அதனாலதான் இவங்களை போட்டு தள்ளிட்டு போகலாம்ன்னு வந்தேன்.."

இனியன் சொன்னது கேட்டு செல்வாவும் மகேஷும் அதிர்ச்சியோடு அவனை பார்த்தனர். குமரன் தான் காதில் கேட்ட விசயம் சரிதானா என்ற சந்தேகத்தோடு அவனை பார்த்தார்.

"ஆனா எங்க அம்மா இவரை ரொம்ப நேசிக்கறாங்க.. அதான் முடிவை மாத்திக்கிட்டேன்.. என் அம்மாவை எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்கு தெரியும்.. அதனால இவரை இங்கிருந்து போக சொல்லுங்க.."

செல்வா அவனை முறைப்போடு பார்த்தான். "எருமை மாடு.. இந்த வயசுலயே உனக்கு எதுக்குடா இவ்வளவு யோசனையும் வேலையும்.? பெரியவங்க நாங்க எதுக்கு இருக்கோம்..?" என கேட்டவன் அவனது தலையில் ஒரு தட்டு தட்டினான். இதை பார்த்துக் கொண்டிருந்த சந்தியா பொங்கிவந்த சிரிப்பை அடக்க வேறு திசைக்கு முகத்தை திருப்பினான்.

செல்வா இனியனை அடித்ததில் மகேஷ்க்கு உடன்பாடில்லை. தன் மகனை தன் முன்னால் அடிக்கின்றானே என்று செல்வா மீது கோபம் வந்தது. ஆனால் தான் ஏதாவது பேச ஆரம்பித்தால் அதற்கும் இனியன் ஒரு ஏழரையை தொடங்குவான் என தெரிந்து அமைதியாகி கொண்டான்.

இனியன் தலையை தேய்த்தபடி செல்வாவை பார்த்தான். "பெரியவங்க இருந்து மட்டும் என்ன பிரயோஜனம்..? என் அம்மா இவ்வளவு நாள் என்னை பிரிஞ்சி இருந்தாங்களே.. பெரியவங்க என்ன பண்ணீங்க..? நான் அம்மா அப்பா இல்லாம அனாதையாதானே வளர்ந்தேன்.. பெரியவங்க அப்போது என்ன பண்ணீங்க..? இன்னைக்கு என் அம்மா இப்படி பேச்சு மூச்சி இல்லாம ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களே.. பெரியவங்க என்னத்த பண்ணீங்க..? வயசு ஆகிட்டா எல்லோரும் பெரியவங்க ஆகிட போறதில்ல.."
அவனை வலிகளோடு பார்த்தான் செல்வா.

"அம்மா அப்பா இல்லாம வளர்ந்தவன்தான்டா நீ.. ஆனா உனக்கு எல்லாமுமா நான் இருந்தேனே.." என செல்வா கேட்டபோது இனியன் கண்களில் இருந்து கண்ணீர் துளிர்த்தது.

"உங்ககிட்ட எத்தனையோ நாள் கேட்டிருக்கேன் என் அம்மாவை பார்க்க கூட்டி போங்கன்னு.. வருசத்துல ஒருநாள்தான் என் அம்மா என்னை பார்க்க வருவாங்க.. இது போதுமா..? நான் மட்டும் என்ன பாவம் செஞ்சேன்..? இவர்தான் என் அப்பான்னு உங்களுக்கும் இத்தனை வருசமா தெரியும்.. ஒருநாள் என்கிட்ட சொன்னிங்களா..? அப்பன் பேர் தெரியாத பையன்னு எல்லோரும் திட்டும்போது தலை குனிஞ்சி நின்னேனே, அதுக்காகவாவது சொல்லி இருக்கலாம் இல்லையா..? நீங்க யாரும் பெரியவங்க கிடையாது.. எல்லோரும் சுயநலவாதிங்க.. என் மேல உங்களுக்கும் கூட அக்கறை கிடையாது.. அப்படி அக்கறை இருந்திருந்தா என் அப்பா யாருன்னு எனக்கு எப்பவோ சொல்லி இருப்பிங்க.. எனக்கு என் அம்மாவை தவிர யாரும் தேவையில்ல.. அப்பாவும் வேணாம்.. சொத்து வேணாம்.. மரியாதை மதிப்பு எதுவும் வேணாம்.. அதனால இங்கே இருக்கற நீங்க எல்லோருமே இங்கிருந்து போயிடுங்க.." என்றவன் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டு சொட்டாக உருண்டு கன்னத்தை தாண்டி சென்றது.

அவனையும் அவனது மனநிலையையும் மகேஷால் நன்றாக புரிந்துக் கொள்ள முடிந்தது.

"எதுக்கு இப்படியெல்லாம் பேசுற இனியா..?" வருத்ததோடு கேட்டான் செல்வா.

"உங்களுக்கு யாருக்குமே நான் சொல்ல வருவது புரியல.. எனக்கு என் அம்மா மட்டும் போதும்.. நீங்க யாருமே வேண்டாம்.." என்றவன் தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை கையில் எடுத்தான்.

அவனது கையிலிருந்த துப்பாக்கியை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் நின்றுக் கொண்டிருந்த ஐசியூ வராண்டாவில் அப்போது யாரும் இல்லாத காரணத்தால் இந்த விசயம் பெரியதாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

"என் அம்மாவையும் என்னையும் விட்டு எல்லோரும் போயிடுங்க.. இல்லன்னா நான் உங்க எல்லோரையும் சுட்டுடுவேன்.." என்றவன் துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டினான்.

"இது என்னடா கருமம்..? உனக்கு ஏதுடா துப்பாக்கி..?" செல்வா புரியாமல் கேட்டான்.

துப்பாக்கியை பார்த்து விட்டு தன் மாமனை பார்த்தான் அவன். "ஆக்ராவுல என் பிரெண்ட் ஒருத்தன் மூலமா வாங்கினேன்.. செகண்ட் ஹேண்ட் துப்பாக்கி.. என்னோட இத்தனை வருச சேமிப்பு பணம்.." என அவன் சொல்ல "அப்பாடா.." என தன் நெஞ்சில் கை வைத்தான் செல்வா.

செல்வாவை புரியாமல் பார்த்தான் மகேஷ். அவனது பார்வையை புரிந்துக் கொண்டான் அவன். "துப்பாக்கி வாங்க எங்க வீட்டு பத்திரம் எதையாவது அடமானம் வச்சிட்டானோன்னு பயந்துட்டேன்.." என்றவன் இனியனை பார்த்தான்.

"உன் அப்பனை மாதிரியே நீயும் ரவுடி ஆயிடாதே.. உன் அம்மா கண் விழிச்சா அப்புறம் அவ உன்னை துரத்தி துரத்தி அடிப்பா... கையில துப்பாக்கி இருப்பதால் நீ ஒன்னும் பெரிய அப்பாடக்கர் எல்லாம் கிடையாது.. இருபது வயசு தாண்டாத உனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வேலை.. மரியாதையா துப்பாக்கியை கீழே போட்டுட்டு வா.. உன்னை ஆக்ரா அனுப்பி வைக்கிறேன் நான்.. போய் காலேஜ் எக்ஸாமுக்கு படிக்கற வேலையை பார்ப்ப.." செல்வா அதிகாரமாக சொன்னான்.

செல்வாவின் பேச்சிற்கு இனியன் சிறிதும் அசரவில்லை. "நான் என் அம்மாவை விட்டு எங்கேயும் வரமாட்டேன்.. நீங்க எல்லோரும் முதல்ல இங்கிருந்து போங்க.. இல்லன்னா நிஜமா நான் சுட்டுடுவேன்.." என்றவன் டிரிக்கரில் விரல் வைத்தான்.

மகேஷ் சட்டென தன் கையை தூக்கினான். "ஓகே.. விடு நாங்க இங்கிருந்து போறோம்.. நீ அவளை கொஞ்சம் பத்திரமா பாரத்துக்க.." என்றான்.

மகேஷை செல்வாவும் குமரனும் புரியாமல் பார்த்தனர். "வாங்க.. நாம இங்கிருந்து போகலாம்.." என்றவன் அவர்களை இழுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்த பிறகு மகேஷிடமிருந்து தன் கையை விடுவித்து கொண்டு அவனை கோபமாக பார்த்தான் செல்வா.

"பைத்தியமா நீ..? கையில துப்பாக்கி வச்சிருக்கான்..? அவனை அப்படியே விட்டுட்டு எங்களை கூட்டிட்டு வெளிய வந்துட்ட..?" என்றான்.

"அவன் மன கஷ்டத்தோடு இருக்கான்டா.. அவனுக்கு கொஞ்சம் டைம் வேணும்.. திடீர்ன்னு ஆகாயத்துல இருந்து அப்பன் குதிச்சா இப்படிதான் கோபம் வரும் எல்லோருக்கும்.. இவ்வளவு நாளா என்னை பத்தி அவன்கிட்டயும் சொல்லல.. அவனை பத்தி என்கிட்டயும் சொல்லல.. அவன் நிலமையில் நான் இருந்திருந்தா எல்லோரையும் சுட்டுட்டுதான் பேசவே ஆரம்பிச்சிருப்பேன்.. அவன் உடம்புல சக்தி ரத்தம் பாதி கலந்துடுச்சி.. அதனாலதான் ஓரளவுக்கு அமைதி தெரிஞ்ச பையனா இருக்கான் அவன்.." என மகேஷ் சொல்ல அவனை நக்கலாக பார்த்தான் செல்வா.

"மகேஷ் சொல்வது சரிதான்.. இனியனுக்கு கொஞ்சம் டைம் தந்தா அவன் சரியா போயிடுவான்.. சக்தி பக்கத்துல இரண்டு நாள் இருந்தான்னா எல்லாமே சரியா போயிடும்.." என்றார் குமரன். குமரன் சொல்வதில் அர்த்தம் இருப்பதாக சந்தியாவிற்கும் தோன்றியது.
மகேஷின் வாதம் செல்வாவிற்கு ஒத்துவரவில்லை.

"புள்ளை பாசம் பொங்குதோ..? எருமை அவன் கோபத்துல எதையாவது பண்ணிட்டா அப்புறம் சக்தி என்னைதான்டா சாகடிப்பா.." என தலையை பிடித்தான் அவன்.

"இதுக்கு மேல அவனை பத்தி எதையும் சக்தி உன்கிட்ட கேட்க மாட்டா.. என் பையனை பார்த்துக்க எனக்கு தெரியும்.. அவனுக்கு நானே பொறுப்பா இருந்துக்கறேன்.. உனக்கு அந்த பெரும் கவலை வேண்டாம்.." என்றவன் மருத்துவமனை இரண்டாம் தளத்தில் சக்தி இருக்கும் அறையை நிமிர்ந்து பார்த்தான். அறையின் ஜன்னலருகே நின்றபடி இவர்களை பார்த்துக் கொண்டிருந்த இனியன் மகேஷின் பார்வையை கண்டு ஸ்கீரீனை இழுத்து விட்டு ஜன்னலை மறைத்தான்.

மகேஷோடு சேர்ந்து இனியன் செய்ததை பார்த்துக் கொண்டிருந்த செல்வா பெருமூச்சோடு தலையை கோதி விட்டுக் கொண்டான்.
"இவன் பண்றதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு பயமா இருக்குடா.." என்றான் செல்வா.

"எனக்கும் கொஞ்சம் பயமாதான் இருக்குடா.. எல்லாம் சக்தி கண் விழிக்கற வரைக்கும்தானே..? அவ கண் விழிச்சிட்டா எல்லாம் சரியா போயிடும்.." என நம்பிக்கையோடு கூறினான் மகேஷ்.

மகேஷ்க்கு இருந்த நம்பிக்கை குமரனுக்கும் இருந்தது. "நேத்து நைட் யார் ஹாஸ்பிட்டல் வந்து அவளை கத்தியால குத்தினாங்கன்னு நான் போய் கண்டுபிடிக்கறேன்.." என அவர் கிளம்ப அவரின் கையை பிடித்து நிறுத்தினான் மகேஷ்.

"அவளை கத்தியால குத்தியவன் சீனு.." என்றான்.

செல்வாவும் குமரனும் புரியாமல் அவனை பார்த்தனர்.

"நைட்டே நான் சிசிடிவியில் பதிவான எல்லாத்தையும் பார்த்துட்டேன்.. கலையோட அண்ணன் மகன் சீனுதான் இதையெல்லாம் பண்ணியிருக்கான்.. ரூம்க்குள்ள போகற வரை முகத்தை மறைச்சி துணி கட்டியிருந்தவன் வெளியே வரும்போது முகத்தை மறைக்க மறந்துட்டான்.. வந்த காரியம் வெற்றியடைஞ்ச சந்தோசத்துல இதை மறந்திருப்பான் போல.." என்றவன் தரையில் கிடந்த சிறு கல்லை காலால் உதைத்தான்.

"அவனை என்ன பண்ண..?" அவசரமாக கேட்டார் குமரன்.

"ஏதும் பண்ணல மாமா.. காலையில் சக்திக்கு யாரையாவது பாதுகாப்புக்கு விட்டுட்டு போய் அவன் கதையை முடிக்கலாம்ன்னு இருந்தேன்.. ஒருநாளோட சிறு வேலையா அது இருந்தது.. ஆனா இனியன் என் மொத்த வாழ்க்கையின் பாதையில குறுக்க வந்து நின்னுட்டான்.. அதான் இப்போ கொஞ்சம் குழப்பமா இருக்கேன்.. இந்த முறை நீங்களே அவனை அரெஸ்ட் பண்ணி ஜெயிலுல போடுங்க.. மறுபடியும் சிக்காமலா போயிடுவான்..?"

குமரன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் சென்ற பிறகு மகேஷை கண்கள் சுருக்கி பார்த்தான் செல்வா.

"ஏற்கனவே சோடாப்புட்டி.. இன்னும் எதுக்கு கண்ணை வேற சுருக்கி பார்க்கற..?" கிண்டலாக கேட்டான் மகேஷ்.

"இல்ல.. போலிஸூம் ரவுடியும் ஒன்னு சேர்ந்து இருப்பதை பார்த்து அவ்வளவு ஆச்சரியம் எனக்கு.."

"நான் நல்ல ரவுடிடா.. போலிஸால பிடிக்க முடியாத கெட்டவங்களை தூக்கி போட்டு மிதிக்கற நல்ல ரவுடி.. சரி நீ சந்தியாவோடு வீட்டுக்கு போய் குளிச்சி சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா இங்கே வா.." என்றான்.

"சக்தியை பார்க்கலாம்ன்னு வந்தேன்.. நீ பெத்து வச்சிருக்கற எருமை மாடு என் தங்கச்சியை நானே பார்க்க கூடாதுன்னு ஆர்டர் போடுது.. என் தங்கச்சியை நீ ஒருத்தன் காதலிச்சதுக்கு இன்னமும் நான் இம்சையை அனுப்பவிக்கிறேன்டா.." என்றவன் சந்தியாவை பார்த்து புன்னகை புரிந்தான்.

"நல்ல பொண்ணா இருக்காடா.. இவளை இனியனுக்கு பார்த்திருப்பதாவும் இவ பேரழகும்ன்னும் என் சித்தப்பா சொன்னாரு.." என அவன் கூற சக்தியின் அப்பாவோடு உரையாடிய நாள் சந்தியா கண் முன் வந்து போனது.

இனியன் யாரென தெரிந்துக் கொள்ள தான் அன்று எவ்வளவு ஆர்வம் காட்டினோம் என நினைத்தவளுக்கு இன்று தனது ஆர்வத்திற்கு கிடைத்த பரிசை எண்ணி கண்ணீர் துளிர்த்தது.

யாரையோ பழி வாங்க வேண்டுமென தன் மனதை உடைத்து விட்டனே என நினைத்தவளுக்கு நெஞ்சில் வலி குப்பென தாக்கியது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN