நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 62

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தியா இனியனை நினைத்து மனம் வருந்திக் கொண்டிருந்ததை செல்வாவும் மகேஷும் கவனிக்கவில்லை.

"என் சித்தப்பாவுக்கு இவளை ரொம்ப பிடிச்சி போச்சி.." என்ற செல்வா சந்தியாவை அன்போடு பார்த்தான். சந்தியா கரை தாண்ட முயலும் கண்ணீரை பெரும் முயற்சியோடு தடுத்தபடி கண்கள் எட்டா புன்னகையை அவனுக்கு தந்தாள்.

"இவனை நான் நேத்து ஹோட்டல்ல பார்த்தேன்டா.. ஒரு மாதிரியா முறைச்சான்.. இவனை பார்த்ததும் உள்ளுக்குள்ள என்னவோ மாதிரி இருந்தது.. ஆனா பாரு அவன் யாருன்னு என்கிட்ட சொல்லாம சந்தியாக்கிட்ட சொல்லிருக்கான்.." என சொல்லி மகேஷ் சிரிக்க சந்தியா தரையை பார்த்தாள்.

"எனக்கும் எதேச்சையாதான் தெரிஞ்சது மாமா.. அத்தைக்கு ரத்தம் தந்தது இவன்தான்.. அப்படிதான் எனக்கு பழக்கம் ஆனான்.. என்னவோ காலையில மனசு வந்து அவன் யாருன்னு என்கிட்ட சொல்லிட்டான்.. அவனுக்கு எப்படி உங்களை பிடிக்காதோ அதே மாதிரிதான் என்னையும் பிடிக்காது.. அவன் அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சதுக்கு என் அப்பாதான் முக்கிய காரணம்.. அதனால அவனுக்கு என் மேல ஏகப்பட்ட வெறுப்புதான் இருக்கு.." என்றவளின் குரல் கடைசியாக பேசும் போது உடைந்து போனது.

அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான் மகேஷ். "அவன் இப்ப ரொம்ப குழப்பத்துல இருக்கான்ம்மா.. கொஞ்ச நாளுல சரியா போயிடுவான்.. நீ இதை நினைச்சி கவலை படாத.. அவனுக்கு புத்தி தெளிஞ்சதும் அவன்கிட்ட நான் பேசுறேன்.." என ஆறுதல் சொன்னான் அவன்.

இனியன் ஜன்னல் ஸ்க்ரீனால் தன்னை மறைத்து கொண்டான். ஆனால் கீழே நடந்ததை ஓரமாக இருந்தபடி பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அவர்கள் பேசிக் கொண்டதை அவனால் கேட்க முடியவில்லையே தவிர அவர்களது முகப்பாவத்தை அவனால் நன்கு படிக்க முடிந்தது.

அவனது பார்வை மற்றவர்கள் மீது இருந்தாலும் கூட அதிகமாக சந்தியாவைதான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முகத்தில் தெரிந்த சோகமும் வலியும் அவனுக்கு வருத்தத்தை தந்தது. ஆனால் அந்த வருத்தம் அவனை முழுமையாக ஆக்ரமித்துக் கொள்ள விடாமல் சக்தியின் நிலை கண் முன்னால் வந்து போனது. சந்தியா கண்ணீரோடு மகேஷ் நெஞ்சில் சாய்ந்த போது இனியன் அதற்கும் மேல் அவள் படும் வேதனையை பார்க்க இயலாமல் மறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

சக்தியின் உடல் வலி அவளது முகத்திலும் தெரிந்தது. அதை பார்த்த இனியன் தான் இதுவரை பார்த்த சந்தியா முகத்தை முழுவதுமாக மறந்து விட்டான். தன் கையில் இறுக்கி பிடித்திருந்த துப்பாக்கியை இடுப்பில் சொருகியபடி சக்தியின் அருகே வந்து அமர்ந்தான்.

சக்தியின் முகத்தருகே தன் முகத்தை வைத்தான். "அம்மா.. நான் இனியன் வந்திருக்கேன்.. உன்னை பார்க்க நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா.. ஆனா நீ எனக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சியை தந்துட்ட.. நீ தூங்கியது போதும்மா.. எழுந்திரி சீக்கிரம்.. இனி நான் உன்னை விட்டு பிரியவே மாட்டேன்.. எனக்கு உடம்பு சரியில்லன்னா இங்கே நீ தனியா அழ வேண்டாம்.. நான் எப்பவும் உன் கூடவே இருக்க போறேன்.." அழுகையோடு விக்கி கொண்டே சொன்னான் அவன்.
செல்வா சந்தியாவோடு சேர்ந்து வீட்டிற்கு புறப்பட்டான். அவர்கள் அந்த பக்கம் போனதும் இந்த பக்கம் வந்து சேர்ந்தார் சக்தியின் அப்பா.

ஐசியூ செல்லும் தளத்திற்கான படியில் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்திருந்த மகேஷின் தோளில் தொட்டார் சக்தியின் அப்பா. மகேஷ் கண்களை திறந்து பார்த்து விட்டு சட்டென நேராக அமர்ந்தான்.

"இங்கே என்ன பண்றிங்க..?" என கேட்டார் அவர்.

"இப்படி நீங்களும் உட்காருங்க மாமா.." அவன் தன்னருகில் கையை காட்டினான். அவர் குழப்பதோடு அவன் அருவே அமர்ந்தார்.

"என்ன ஆச்சி மாப்பிளை..?"

"நேத்து நைட் நான் மெடிக்கலுக்கு போனபோது ஒருத்தன் சக்தியை கத்தியால குத்திட்டான்.. உடனே பதறாதிங்க.. நைட்டே ஆபரேசன் முடிஞ்சி இப்ப அவ நல்லாதான் இருக்கா.. ஆனா மயக்கம் தெளிய சில நாள் ஆகுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.."

"இப்படி ஒரு விசயம் நடந்தது தெரிஞ்சிருந்தும் அவளை தனியா விட்டுட்டு இங்கே உட்கார்ந்திருக்கிங்க..? இல்லாதவன் வீட்டு பொண்ணோட உசுரு உங்களுக்கு இளக்காரமா போச்சா..?" கோபத்தோடு திட்டி விட்டு எழுந்தவர் அடுத்த தளத்திற்கு செல்ல மேல் படியில் காலை வைத்தார்.

"அவளுக்கு பாதுகாப்பா இனியன் இருக்கான் மாமா.." என மகேஷ் சொன்னதும் அவர் திகைத்து போய் மீண்டும் அவன் அருகில் அமர்ந்தார்.

"இ.. இனியனா..? அது யாரு..?" அவர் எதார்த்தமாக கேட்க முயற்சிப்பது கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான் மகேஷ்.

"என் மகன்தான் மாமா.."

அவர் தன் முகவாயை தேய்த்து விட்டுக் கொண்டார். "சக்தி இதை வேணும்ன்னே உங்ககிட்ட மறைக்கல.. அவளையே ஏத்துக்காத உங்க அப்ப அவளோட குழந்தையையும் ஏத்துக்க மாட்டார்ன்னு நினைச்சிட்டா.. உங்ககிட்ட சொல்ல ரொம்ப முயற்சி பண்ணா.. ஆனா தனக்கு குழந்தை இருப்பதும் அதை உங்க வீட்டு ஆளுங்க கருவுலயே முயற்சி பண்ணதும் உங்களுக்கு தெரிஞ்சா நீங்க கோபத்துல அவங்களை ஏதாவது செஞ்சிட்டு ஜெயிலுக்கு போயிடுவிங்களோன்னு அவ பயந்துட்டா..நீங்க ரவுடியிசம் பண்றதே அவளுக்கு பிடிக்காது.. அதனாலதான் உங்களை கொலைக்காரனா மாத்த வேண்டாமேன்னு இதை ரகசியமா வச்சிட்டா.. இதுக்காக அவ மேல நீங்க கோபப்பட்டுடாதிங்க.. அவளுக்கு உலகமே நீங்களும் இனியனும்தான்.." என்றவரை அர்த்த பார்வை பார்த்தான் அவன்.

"நான் என்னைக்கு மாமா அவ மேல கோபப்பட்டிருக்கேன்..? அவதான் வருசம் முழுக்க என் மேல கோபமா இருக்கா.. எனக்கும் அவதான் உலகமே.. இப்ப இனியனும்.." என்றவனின் குரலில் சோகம் குடிக் கொண்டிருந்ததை அவரும் கவனித்தார்.

"என்ன ஆச்சி மாப்பிள்ளை..?"

மகேஷ் சுவற்றில் தன் தலையை சாய்த்துக் கொண்டான்.

"அவனுக்கு என்னை பிடிக்கல மாமா.. அம்மா அப்பா இல்லாம வளர வேண்டியதாயிடுச்சேன்னு அவன் எல்லார் மேலயும் கோபம்.. எல்லோர் மேலயும் இருக்கற கோபத்தை என் மேல மட்டும் காட்டுறான்.." என்றவன் தன் நெற்றியில் விழுந்த கேசத்தை ஒதுக்கி விட்டபடி சுவர் பார்த்தான்.

"அவன் தலையில நாலு போடு போட்டு நல்ல புத்தியா நான் சொல்றேன் மாப்பிளை.." என எழுந்தார் அவர்.

"அவன் கையில துப்பாக்கி வச்சிருக்கான் மாமா.."

அவர் மீண்டும் அவனருகே அமர்ந்தார். அவரை கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது.

"துப்பாக்கியா..?" என்றார் அவர் நம்ப முடியாமல்.

"துப்பாக்கியேதான்.. என் புள்ளையாச்சே.. அதான் அப்படியே இருக்கான்..?" என்றவன் பெருமூச்சி விட்டான்.

அவரும் நெற்றியை பிடித்தபடி படிக்கட்டில் சாய்ந்து அமர்ந்தார்.

"பாவம் என் சக்தி.. புருசனும் ரவுடி.. இப்ப புள்ளையும் ரவுடி.." மனதுக்குள் சொல்வதாக நினைத்து அவர் வெளியே சொன்னார். மகேஷ்க்கு மீண்டும் சிரிப்பு வந்தது. ஆனாலும் அதை வெளி வர விடவில்லை அவன்.

"நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க மாமா.. நான் இங்கேயிருந்து பார்த்துக்கறேன்.."

அவர் நிலையை புரிந்துக் கொண்டவராக எழுந்தார், "ஏதாவதுன்னா போன் பண்ணுங்க மாப்பிள்ளை.. இனிமேலாவது அவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துகங்க.. மறுபடியும் அவளை எவனாவது கத்தியால குத்தினான்னு சேதி வந்தா அப்புறம் நான் கத்தியை கையில எடுத்துடுவேன்.." மிரட்டல் குரலில் சொல்லி விட்டு சென்றார் அவர்,

அவர் சென்றபிறகும் வெகுநேரம் அதே இடத்தில் அமர்ந்திருந்தான் மகேஷ்.நேரம் சென்றுக் கொண்டே இருந்தது.

எத்தனையோ பேர் அவனை கடந்து சென்றனர். ஆனால் யாரையும் கவனிக்கும் சூழலில் இல்லை அவன். இனியன் சொன்னதையே மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தான். இனியனது தனிமையையும் வலியையும் அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அவனது மனதின் காயங்கள் அவனுக்கும் புரிந்தது. அவனது காயங்களையும் வலிகளையும் உடனடியாக தீர்க்க நினைத்தான் மகேஷ். ஆனால் எப்படி என்றுதான் புரியவில்லை.

வெகு நேரங்கள் கடந்த பிறகு எழுந்து நின்று தன் கை விரல்களை நெட்டி முறித்தான். சக்தியின் அறையை நோக்கி நடந்தான்.

தயக்கத்தோடு அறையின் கதவை திறந்தான் மகேஷ். இனியன் நாற்காலியில் அமர்ந்தபடி சக்தியின் அருகே தலை வைத்து உறங்கிக் கொண்டிருப்பதை கண்டவன் சத்தம் போடாமல் அறைக்குள் நுழைந்தான்.

இனியனின் அருகே வந்து அவனது உறங்கும் முகத்தை பார்த்தான்.
காலையில் அவனை சரியாக கவனிக்க முடியவில்லை அவனால். அதனால் இப்போது நின்று நிதானமாக அவனது முகத்தை ஆராய்ந்தான். தனது பிரதிபலிப்புதான் அவன் என்பது மகேஷ்க்கு நன்றாகவே தெரிந்தது. இதை ஏன் நேற்றே கவனிக்காமல் போனோம் என தன்னையே திட்டிக் கொண்டான். இனியனின் முகத்தில் சக்தியின் சாயல் குறைவுதான். ஆனால் இவனது சாயல் அதிகம்.. அதை புரிந்துக் கொண்டவனின் இதழில் புன்னகை இயல்பாக மலர்ந்தது.

சாமிநாதனின் குழந்தைகளும் செல்வாவின் குழந்தையும் இன்னும் சிறு பெண்களாக இருக்கையில் தனக்கு இப்படி வாலிப வயதில் மகன் இருப்பதை நினைத்து அவனுக்கு சிறு கர்வமும் தோன்றியது.

சக்தியையும் இனியனையும் மாறி மாறி பார்த்தான். தனது கனவு தனக்கு தெரியாமலேயே இவ்வளவு பெரியதாக உருவானதை நினைத்து சந்தோசப்பட்டான். ஆனால் அதன் வாழ்வின் ஓட்டத்தில் தான் ஒருவனும் இணைய முடியாமல் போனதை நினைத்து மனம் முழுக்க வலியை உணர்ந்தான்.

மகனை பிரிந்து இவ்வளவு நாளாக சக்தி எவ்வளவு வேதனை பட்டிருப்பாள் என எண்ணி மனம் துடித்தான். மகன் வார்த்தைகளாக சொன்ன வலிகள் தந்த காயத்தை விட சக்தி சொல்லாமல் விட்ட காயம் அவனுக்கு அதிக வலிகளை தந்தது.

அவள் தன்னோடு வாழ வர மாட்டேன் என மறுத்த போதெல்லாம் தான் அவளுக்கு தந்த பிரச்சனைகளை நினைத்து பார்த்தான். தன்னையும் சமாளித்துக் கொண்டு தனது தாய் பாசத்தையும் மனத்துக்குள் மறைத்துக் கொண்டு அவள் வாழ்ந்ததை நினைத்து அவனுக்கு கண்கள் கலங்கியது.

தனது காதல் அவளுக்கு எவ்வளவு வேதனைகளையும் வலிகளையும் தந்துவிட்டது என்பதை இன்று புரிந்துக் கொண்டான். சந்தோசம், மகிழ்ச்சி, சிரிப்பு, புன்னகை எனும் இன்பங்களை எதிர்பார்த்து காதலித்த இடத்தில் தான் அவளுக்கு வெறும் துன்பங்களை மட்டும் தந்து விட்டதை நினைத்து மனம் வருந்தினான்.

தன்னுடனான காதலில் ஆயிரம் துன்பங்கள் வந்தபோதும் தூரத்திலிருந்தாவது பார்த்தபடி தன் காதலை மனதில் வைத்து வாழ்ந்த சக்தியின் முகத்தை சற்று கர்வத்தோடும் பார்த்தான்.

இனியனையும் சக்தியையும் பார்த்தவன் தனது உலகம் முழுமையானதற்காக மகிழ்ந்தான். அருகே இருந்த போர்வையை எடுத்து இனியன் மீது போர்த்தி விட்டான். அவனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை கண்டவன் சத்தமில்லாமல் அதை தனது கையில் எடுத்துக் கொண்டான். துப்பாக்கியை திருப்பி திருப்பி பார்த்தவன் பெருமூச்சோடு அதை தன் இடுப்பில் சொருகி கொண்டான். ஐசியூவின் கதவை மெதுவாக சாத்திவிட்டு வராண்டாவில் இருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் மனைவிக்கும் மகனுக்கும் பாதுகாப்பாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN