நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

62. வாழ்வின் தவம் நீ

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதிரின் வாயை தன் கையால் பொத்திக் கொண்டிருந்த அப்பா அவனை முறைப்போடு பார்த்தார்.

"உனக்கெல்லாம் கள்ளிபால் ஊத்தி இருக்கணும்டா.." என்றார்.

அவரது கையை தன் வாய் மீது இருந்து எடுத்தவன் அவரை அதே கோபத்தோடு பார்த்தான்.

"வயசாகி போச்சி.. பேரன் பேத்தியை கொஞ்சுற வயசுல பாரின் சரக்கு கேட்குதோ உங்களுக்கு..?" என்றான்.

அவன் அம்மா என அழைத்து விட்டது கேட்டு அம்மா மீண்டும் ஒரு முறை அகம் மகிழ்ந்தாள். தன் புன்னகையை தனக்குள் வைத்தபடி பொய் கோபத்தோடு ஹாலுக்கு வந்தாள் அவள். மைவிழியும் அவளை தொடர்ந்து வந்தாள்.

"புள்ளை இல்லா வீட்டுல கிழவன் துள்ளி விளையாடிய கணக்கா பாரின் சரக்கு கேட்குதோ..? பிபி, சுகர்ன்னு புலம்பறது மறந்து போச்சோ..?" என அவள் கோபமாக கேட்க அப்பா தன் இரு காதுகளையும் பொத்தியபடி தலை குனிந்து அமர்ந்தார்.

அம்மா பத்து நிமிடத்திற்கு பாடம் எடுத்து விட்டு கிச்சனுக்கு திரும்பினாள். மைவிழிக்கு அப்பாவை பார்க்க பரிதாபமாக இருந்தது. கதிரை பொய்யாக முறைத்தாள். அவன் பழிப்பு காட்டி சிரித்தான். அவள் அவனை முறைத்தபடியே கிச்சனுக்கு திரும்பினாள்.

கிச்சனுக்குள் நுழைந்தவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள் அம்மா. "தேங்க்ஸ் ம்மா.. என் பையன் என் முகத்தை கூட பார்க்க மாட்டேன்.. கடைசி நேரத்துல கூட அவன் முகம் பார்க்காம செத்துட போறேனோன்னு நினைச்சி ரொம்ப நாள் பயந்திருக்கேன் ம்மா.. ஆனா அவன் இன்னைக்கு என்னை அம்மான்னு கூப்பிட்டுட்டான்.. இதுக்கு நீதான் காரணம்ன்னு எனக்கு நல்லா தெரியும் ம்மா.. என் ஆயுசுக்கும் நான் உனக்கு நன்றி கடன் பட்டிருக்கேன் ம்மா.."

மைவிழி அவளின் கண்களை துடைத்து விட்டாள். "இதுல நான் ஏதும் பண்ணல அம்மா.." என்றாள்.

அன்று இரவு உணவை நால்வரும் ருசித்து சாப்பிட்டனர். மைவிழி மற்ற நாட்களை விடவும் அன்று அதிகமாக சாப்பிட்டது போல தோன்றியது கதிருக்கு.

இரவில் கதிர் தூங்கலாம் என நினைத்து தனது அறைக்குள் நுழைந்த நேரத்தில் "கதிர்.." என அழைத்தார் அப்பா.

அவன் திரும்பி பார்த்தான். எதிரில் இருந்த அறையில் நின்றிருந்த அப்பா கையை கட்டியபடி அவனை பார்த்தார்.

"இந்த ரூம்ல பேன் ஓடல.. எனக்கு ஏசி இல்லன்னா தூக்கமே வராது.. நீ இந்த பேனை கூடவா சரி பண்ணி வச்சிருக்க கூடாது..?" என அவர் உதடு சுழித்து கேட்டார்.

அவன் நெற்றியில் அடித்தபடி அந்த அறைக்குள் நுழைந்தான். "பெரிய மன்னர் பரம்பரைன்னு நினைப்போ..? உங்க வெட்டி சீனை வேற யாராவது இளிச்சவாயன்கிட்ட காட்டுங்க.." என்றவன் ஸ்விட்ச் போர்டை கழட்டி பேனுக்கான ஒயரை கனெக்சனில் தந்தான்.

"அடப்பாவி.. நீயேதான் கனெக்‌ஷனை கட் பண்ணி வச்சிருக்கியா..? இது ஏன்டா..?" ஆச்சரியத்தோடு கேட்டார் அவர்.

"இந்த பேன் கனெக்‌ஷனை கட் பண்ணாதான் எனக்கு லவ் கனெக்‌ஷனாகுன்னு ஒரு நிலைமை.. அதான் கட் பண்ணி விட்டேன்.."

அப்பாவிடம் கண் அடித்து சொல்லியவன் குறும்பு சிரிப்போடு திரும்பினான். அறை வாசலில் இடுப்பில் கை வைத்தபடி நின்று இருந்தாள் மைவிழி.

குறும்பு சிரிப்பு இப்போது அசட்டு சிரிப்பாக மாறி போனது கதிருக்கு.
"இங்கே என்ன பண்ற டார்லிங்..?" என்றவனின் காதை பிடித்து இழுத்துக் கொண்டு எதிர் அறைக்கு சென்றாள் மைவிழி.

"ஏன்டி.. என் காதை தனியா கட் பண்ண போறியா..?" என கேட்டான் அவன்.

அறைக்குள் வந்ததும் அவன் காதை விட்டு விட்டு கதவை தாளிட்டாள் மைவிழி.

"பிராடு பயலே.. பேன் ரிப்பேர்ன்னு என்னையே நல்லா ஏமாத்திட்ட இல்ல.. உனக்கு நல்லா பொய் பேச வருது.. இது தெரியாம நான் ஏமாந்து போயிட்டேன்.." என்றவளின் கன்னம் கிள்ளினான் கதிர்.

"காதல்ல பிராடு பண்ணாதவன் யாருமே இல்ல.. கடவுளுக்கு காதல் வந்தாலும் பிராடுதான் பண்ணுவாரு.." என சொல்லி பல்லை காட்டினான்.

அவள் அவனை மேலும் கீழுமாக பார்த்து விட்டு சென்று கட்டிலில் விழுந்தாள். அவன் சின்ன சிரிப்போடு அவள் அருகே படுத்தான்.

"நீ கோபப்பட்டா கூட அழகுதான்.." என அவளின் தாடையை பிடித்து கொஞ்சியவன் அவளின் வயிற்றின் மீது கையை போட்டான்.

"எருமை மாடே.." என கத்தியவள் அவனது கையை தூரமாக தள்ளி விட்டுவிட்டு எழுந்து அமர்ந்தாள். சரியாக பன்னிரெண்டு நாட்கள் கூடுதலாகி இருந்தது. ஆனால் எந்தவித அறிகுறியும் தெரியாததால் அவள் சற்று குழப்பதில் இருந்தாள். இருந்தாலும் கதிரின் கரங்கள் சற்று அழுத்தமாக வயிற்றின் மீது விழுந்து விடவும் சற்று பயந்து போய் விட்டாள்.

"ஸாரி.. அடி விழுந்துடுச்சா..? நான் சும்மாதான் கையை விசிறினேன்.. ஸாரி விழிம்மா.." என அவன் வருத்தமாக சொன்னான்.

அவன் மீது கோபப்பட அவளுக்கு மனம் வரவில்லை. "பரவால்ல விடு.." என்றவள் அமைதியாக தலையணையில் தலையை சாய்த்தாள்.

அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன் "வயிறு வலிக்குதா.?" என்றான்.

இல்லையென தலையை அசைத்தவள் தனக்குள் ஏதேதோ யோசித்தாள். 'ஒருவேளை நான் பிரகனென்டா இருக்கேனா..? ஆனா எனக்கு ஏன் எந்த சிம்டம்ஸும் தெரியல.. ஞாயித்து கிழமை ஹாஸ்பிட்டல்ல கேட்டு பார்க்கலாம்..' என முடிவு செய்தாள்.

அந்த வாரம் முழுக்க அந்த வீடு முழு கலகலப்போடு இருந்தது. கதிர் அம்மாவோடு அதிகம் பேசவில்லை. ஆனாலும் தேவைக்கேனும் ஒன்றிரண்டு வார்த்தைகளை பேசினான்.

கதிருக்கும் மதுபாலனுக்கும் இடையில் இருந்த நட்பு முன்னேற்ற பாதையில் சென்றுக் கொண்டிருந்தது. மதுபாலனின் நகைச்சுவை பேச்சை கதிர் பெரிதும் விரும்பினான்.

சனிக்கிழமை இரவு உணவு சாப்பிடும் போது அம்மா தான் வெளியூர் போக இருக்கும் விசயத்தை சொன்னாள்.

"எதுக்குமா கொச்சின் வரைக்கும் போறிங்க..?" சிணுங்கலாக கேட்டாள் மைவிழி.

"போட்டோகிராபி விசயமா போறேன் ம்மா.. நாலு நாளுல திரும்பி வந்துடுவேன்.. தினமும் உனக்கு போன் பண்றேன்.." என சொன்னாள் அம்மா.

"தனியா அவ்வளவு தூரம் போகணுமா..? அப்பா நீங்க துணைக்கு போய்ட்டு வாங்களேன்.." என்றான் கதிர் அக்கறையோடு.
"எனக்கு ஆபிஸ்ல வேலை இருக்குடா.."

"எப்பதான் வேலை இல்லாம இருக்கு..? ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி சமயத்துல கூட துணைக்கு போகலன்னா அப்புறம் ஏன் புருசனா இருக்கணும்..?" என்றான் கதிர் காரமாக.

கதிர் சொன்னது அம்மாவின் மனதை தொட்டு விட்டது.

போட்டோக்கிராபி அவார்ட் ஒன்றில் முதல் முறையாக கலந்து கொண்டது அவளுக்கு நினைவுக்கு வந்தது. யாரும் தெரியாத அந்த இடத்தில் எதுவும் தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள் அவள். பல இடங்களில் இருந்து பலரும் வந்து கலந்துக் கொண்ட விழாவிற்கு தான் வராமலேயே இருந்திருக்கலாம் என நினைத்தபோது சக கலைஞனாக அறிமுகமான ஒருவனை இன்று நினைத்து பார்த்தாள். பல மொழி பேசிய அவ்விடத்தில் அவன் தமிழை பேசியதே இருவரும் நண்பராக வழி வகுத்து விட்டது. போட்டோக்கிராபி சம்மந்தப்பட்ட அனைத்து விழாவிலும் இருவரும் கலந்துக் கொண்டனர். அவள் அந்த இடங்களில் அவளை காமத்தோடு பார்க்கும் ஆண்களை நிமிர்ந்து பார்த்து முறைத்து இருக்கலாம். இல்லையேல் கண்டும் காணாதது போல் அவ்விடத்தை விட்டு அகன்று அவர்களின் கண்களுக்கு தென்படாத இடத்தில் நின்று இருக்கலாம். ஆனால் அவள் அதை விடுத்து தன் அருகில் நின்றவனின் முதுகு பக்கம் போய் நின்று விட்டாள். தன்னிடம் பாதுகாப்பை எதிர் பார்க்கும் பெண்களிடம் அனைவரும் பாதுகாப்பை மட்டுமே தந்து விடுவதில்லையே. அவன் பாதுகாப்பு தந்தான். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையானது இறுதியில். அன்று முதல் நாள் மட்டும் கணவன் துணையாக வந்திருந்தால் அப்படி ஒரு துரதிர்ஷடம் அவள் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்காது.

எவனோ ஒருவனை நண்பனென பாதுகாப்பு என தேடியதற்கு பதிலாக அந்த இடத்தின் நிலவரம் அனைத்தும் கற்று தனக்கு தானே வேலியாகி இருந்திருப்பாள் அவள். அனைத்தையும் கற்ற பிறகு யாரும் பிறப்பதில்லை. அன்று அவளுக்கு திருமணம் முடிந்து இருந்தாலும் கூட அவள் இருபது வயதையே தாண்டவள். எதையும் தெரியாத இடத்திற்கு முதல் நாள் மட்டுமேனும் ஆசானாக இல்லையென்றாலும் நண்பனாகவும் துணைவனாகவும் கணவன் வந்திருந்தால் அவள் இத்தனை வருட தண்டனையை மகனிடம் அனுபவித்து இருக்க மாட்டாள்.

பழைய நினைவில் கலங்கிய கண்களை யாரும் அறியாதவாறு துடைத்துக் கொண்டாள் அவள். ஆனால் அவளை அவளின் கணவன் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

அவள் முதல் நாள் அவனை விழாவுக்கு அழைத்தது இன்றும் நினைவில் இருந்தது. "ப்ளீஸ்ங்க.. இரண்டே இரண்டு நாள்தான்.. கூட வாங்களேன்.. எனக்கு ஹோட்டல்ல ரூம் புக் பண்ண தெரியாது.. கால் டேக்ஸிக்கு போன் பண்ண கூட தெரியாது.."

"ஹோட்டல்ல போய் ரூம் வேணும்ன்னு சொல்லு.. கால் டேக்ஸி நம்பரை தேடி எடுத்து டெலிபோன்ல போன் பண்ணி உன் அட்ரஸை சொல்லு.. இதெல்லாம் ஒரு விசயம்ன்னு என்னை இரண்டு நாள் லீவு போட்டுட்டு உன் கூட ஊர் சுத்த கூப்பிடுற.."

"உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது..? நான் இது வரைக்கும் டிரெயின்ல கூட போனது இல்ல.. இப்ப எப்படி ப்ளைட்ல போவேன்..?" என்றவளை டை கட்டியபடியே நிமிர்ந்து பார்த்தான் அவன்.

"அப்படின்னா எங்கேயும் போகாம இங்கேயே இரு.. பொம்பளை புள்ளைக்கு எதுக்கு போட்டோக்கிராபி எல்லாம்..?" என அவன் கேட்டபோது அவள் கண்களில் கண்ணீர் உருண்டு விழுந்தது இன்றும் மனதில் அச்சிடப்பட்டு இருந்தது.

"எனக்கு போட்டோக்கிராபின்னா உயிர்.. எதுக்காகவும் இதை விட மாட்டேன்.." என்று கோபத்தோடு விமானம் ஏறியவள் விமானத்தில் இருந்து இறங்கும்போது தைரியத்தை கைக்கொள்ள மறந்து விட்டாள்.

அவரை பொறுத்தவரை அவள் சாதாரண மனைவி கதாப்பாத்திரம் என்றுதான் பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்தார்.

அவளுடைய பிரச்சனைகளை அவர் காது கொடுத்து கேட்கவும் முயன்றது இல்லை. இரு குழந்தைகளுக்கு பெற்றோர் என ஆன பிறகும் கூட அவருக்கு அவள் மீது அவ்வளவாக பிடிப்பு ஏற்படவில்லை.

அவளை அன்னிய ஆடவன் ஒருவன் தீண்டினான் என சேதி கேட்ட நாள்தான் அவர் வாழ்க்கையில் அவர் இடியினை மனதினில் வாங்கிய நாள். தான் தன்னை அறியாமலேயே அவள் மீது எந்த அளவு காதல் கொண்டு விட்டோம் என்பது அந்த நொடிதான் அவருக்கு புரிந்தது. தனக்கு மட்டுமே சொந்தமான அவளின் மனதில் வேறு ஒருவன் இடம் பிடித்து உள்ளான் என்ற சேதி ஒன்றே அவர் உடைந்து போக தேவையான ஒன்றாகி விட்டது.

சென்று விட்ட ஒருநாளை கூட அவரால் திரும்பி கொண்டு வர முடியவில்லை. சம்பாதித்த பணம் அத்தனையும் குப்பையென தென்பட்டது. தனது காதல் பொக்கிஷம் இத்தனை நாள் அனுபவித்த வலிகளும் வேதனையும் அவருக்கு ஆத்திரத்தை தந்தது. எவனோ ஒருவனின் வார்த்தைகளில் அவள் ஏமாற தானே காரணமாகி விட்டதை நினைத்து உள்ளுக்குள் உடைந்தார்.

அன்றைய நாளில் அவள் சொன்னது நினைவுக்கு வந்தது.

"நான் ஒன்னும் வேணும்ன்னு அவனோடு கொஞ்சிட்டு இருக்கல.. எனக்கு அவன் தேவைன்னா என்னைக்கோ உங்களையும் இந்த வீட்டையும் விட்டு போயிருப்பேன்.. கூடவே இருந்து துரோகம் பண்றோம் துரோகம் பண்றோம்ன்னு மனசுக்குள்ள செத்து போக ஆசையா எனக்கு மட்டும்..? நான் உங்களை எவ்வளவு விரும்புறேன்னு உங்களுக்கு சுத்தமா தெரியாது.. உங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் ஆபிஸ், வேலை இது மட்டும்தான்.. எனக்கு தெரிஞ்சது எல்லாம் போட்டோக்கிராபி மட்டும்தான்.. ஆல்கஹால் கலந்த டிரிங்க்ஸ் எதுன்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கு எந்த நாயோ என்னை தொட்டிருக்க விட்டிருக்க மாட்டேன்தான்.. அவன்கிட்ட இருந்து தப்பிக்க வழி தெரிஞ்சிருந்தா அவன் நடந்ததை உங்ககிட்ட சொல்லிடுவேன்னு சொல்லி மிரட்டியபோதெல்லாம் பணத்தை தந்து அவனை வாயை அடைச்சிருக்க மாட்டேன்தான்.. உங்ககிட்ட உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கற அளவுக்கு தைரியம் இருந்திருந்தா இன்னைக்கும் அவனுக்கு பணத்தை அழுதுட்டு வந்திருக்க மாட்டேன் நான்.. ஆமா அவன் என்னை தொட்டுட்டான்.. நான் கெட்டு போயிட்டேன்.. எனக்கு உங்களோடு வாழ எந்த தகுதியும் இல்ல.. நீங்களாவது இனி நிம்மதியா இருங்க.." என அவள் சொல்லியபோது அவரின் கரங்கள் அவளது கையை தானாக பற்றியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top