நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 64

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாலை மங்கி கொண்டிருந்தது.

மகேஷ்க்கு குமரன் சொன்ன விசயம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்தது.

சக்தி இருந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் மகேஷ்.

இனியன் சக்தியின் காலை பிடித்து விட்டுக் கொண்டிருந்தான். அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் மகேஷை கண்டதும் தன் முகத்தில் சிறு வெறுப்பை படற விட்டான்.

"நான் உங்க அம்மாவை கடத்திட்டு போக வரல.. சும்மா முறைக்கறதை நிறுத்து.." என்ற மகேஷ் சக்தியின் மறுபக்கம் வந்து அமர்ந்தான்.

"சக்தியை கத்தியால குத்தியன் போலிஸ்ல சரணடைய நீதான் காரணமா..?" என்றான் இனியன் முகம் பார்த்து.

இனியன் அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தான். "ஆமா.. நான்தான் அவனை மிரட்டி சரண்டர் ஆக சொல்லி அனுப்பி வச்சேன்.. உங்க அப்பனை போட்டு தள்ளதான் போனேன்.. ஆனா.."

"ஆனா பணத்தை கண்டதும் போன வேலை மறந்துடுச்சி.. அதானே.." என்றவனை எரிச்சலோடு பார்த்தான் இனியன்.

"ஆமா.. நான் உங்க பணத்தை எடுத்துட்டு கண் காணாத தேசம் ஓடிட்டேன்.. நீங்க என்னை துரத்தி பிடிச்சி கேள்வி கேட்கிறிங்க.." கடுப்போடு சொன்னான்.

இனியனின் மூக்கை பிடித்து திருகினான் மகேஷ். "உனக்கு மூக்கு மேல கோபம் வருது.. இந்த பணம் சொத்தெல்லாம் உனக்கு சேர வேண்டியதுதானே..? அதை நீ எடுத்துட்டு போனா என்ன..? குப்பையில கொட்டினாதான் எனக்கென்ன..? என்னோட ஒரே சொத்து இவதான்.." என்றவன் சக்தியை கண்கள் மின்ன பார்த்தான்.
"அப்ப சந்தியா..?" இனியனின் கேள்வியால் அவனை குழப்பமாக பார்த்தான் மகேஷ்.

"சந்தியாவை இதுல எதுக்கு இழுக்குற..?" புரியாமல் கேட்டான் அவன்.

"இந்த நடிப்பை என் அம்மாவோடு வச்சிக்கங்க.. உங்களுக்கு என் அம்மாவை விட சந்தியாவைதான் ரொம்ப பிடிச்சிருக்கு.. அவ மேலதான் உங்களுக்கு ரொம்ப பாசம்.."

இனியனை அதிர்ச்சியோடு பார்த்தான் அவன். "பைத்தியகாரா.. இவ மேல வச்ச நேசமும் அவ மேல வச்ச பாசமும் எப்படிடா ஒன்னாகும்..? சக்தியோடு எனக்கு இருப்பது காதல்டா.. இவ என்னோட ஒரே ஒருத்தி.. என் உயிர்.. என் வாழ்க்கைடா.. சந்தியா எனக்கு பொண்ணு மாதிரி.. என் அக்கா என் மேல காட்டிய பாசத்தை நான் அவ பொண்ணு மேல காட்டுறேன்.. நீ எப்படிடா இது இரண்டையும் ஒன்னு சேர்த்து யோசிக்கற.."

இனியனின் முகத்தில் குழப்பம் சூழ்ந்தது. "ஆனா உங்க அப்பா உங்களுக்கும் சந்தியாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா பேசிக்கிட்டாரே..?" என சந்தேகமாக கேட்டவனுக்கு மகேஷ்க்கும் சந்தியாவிற்கும் இடையில் உள்ள பந்தம் அப்பா மகள் பந்தம் என தெரிந்ததும் குற்ற உணர்ச்சியும் குழப்பமும் பிடித்துக் கொண்டது.

"அவருக்கு நான் ஆயிரம் முறை சொல்லிட்டேன் எனக்கு சந்தியா பொண்ணு மாதிரின்னு.. ஆனா அவர் கேட்காம எனக்கும் சந்தியாவுக்கும் இடையில் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாரு.. சக்தி பிரகனென்டா இருந்த விசயமும் சக்திக்கு அவங்க விசம் தந்த விசயமும் தெரிஞ்சது. இவளை என் நிழலை விட்டு விலக்காம பார்த்துக்க ஆசைப்பட்டேன்.. ஆனா சாதி பேரை சொல்லி எங்களை பிரிச்சி வச்சிட்டாங்க இவங்க.. சந்தியாவுக்கும் எனக்கும் கல்யாண ஏற்பாடு செய்ற விசயத்தை இவக்கிட்ட சொன்னேன்.. அதுக்கு முன்னாடி நான் ஆயிரம் முறை கெஞ்சி கேட்டும் என்னோடு வாழ வராதவள் சந்தியா வாழ்க்கைகாக எங்க வீட்டுக்கு வந்தா.." என்றவன் பெருமூச்சோடு சக்தியை பார்த்தான்.

"இவளுக்கு கொஞ்சம் கூட என் மேல அக்கறையே இல்ல.. எத்தனை வருசமா கெஞ்சி கேட்டேன்.. பாவி ஒரு கண் சைகை கூட காட்டல.." என்றவன் இனியனை பார்த்தான். "எனக்கு இவதான் வாழ்க்கை துணை.. இவ கூட இருந்தாலும் இல்லனாலும் இதான் நிஜம்.. எங்க அப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற முயற்சியில் ஒரு ஆயிரம் பொண்ணை பார்த்திருப்பாரு.. அத்தனை தடை தாண்டி இவளை கை பிடிச்சிருக்கேன் நான்.."

இனியனின் சந்தேகம் தீரவில்லை. "ஒருவேளை இதுக்கு மேலயும் உங்க அப்பா எங்க அம்மாவை துரத்தி விட்டுட்டு உங்களுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிட்டா..?"

மகேஷ் இந்தபுறம் இருந்தபடியே இனியனின் கையை எட்டி பிடித்தான். இனியன் மகேஷின் முகத்தை பார்த்தான். "என் சக்தியை யாராலும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது.. இவ்வளவு நாள் நான் சன்னியாசி.. அதனால எனக்கு கல்யாணம் செய்ய எங்க அப்பா முயற்சி பண்ணாரு.. ஆனா இப்ப நான் குடும்பஸ்தன்.. தலைக்கு மேல பையனை வச்சிக்கிட்டு நான் உங்க அம்மாவை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ண முடியுமா சொல்லு..? அப்புறம் ஊரே கேட்கும் பையனுக்கு கல்யாணம் பண்ணுற வயசுல இங்கே அப்பன் கல்யாணம் பண்றான்னு.. எனக்கு இது தேவையா..?" என அவன் கேட்க இனியன் முகத்தில் முதல்முறையாக சிறு புன்னகை மலர்ந்தது.

மகேஷின் மீது முதல் முறையாக சிறு நம்பிக்கை வந்தது. தந்தையாக ஏற்றுக் கொள்ள அவன் மனமும் முடிவு செய்தது.

இனியனின் சிரிப்பு மகேஷின் நெஞ்சில் புது நம்பிக்கையை மலர செய்தது.

"உன் அப்பா நான் இங்கே குத்துக் கல்லு மாதிரி இருக்கேன்.. ஆனா நீ யாருன்னு சந்தியாக்கிட்ட போய் சொல்லியிருக்க.."

இனியன் தலையை குனிந்தான். "ஸாரி.." என்றான்.

"எதுக்கு..?"

"என் அம்மாவோட வாழ்க்கை நாசமாக முக்கிய காரணம் சந்தியாவோட அப்பாதான்.. அதுவும் இல்லாம உங்க அப்பாவோட ஒரே செல்லமும் உங்க செல்லமும் அவதான்..." இனியன் என்ன சொல்ல வருகிறான் என மகேஷ்க்கு புரியவில்லை.

"நான் இங்கே வந்த காரணமே உங்களை பழி வாங்கதான்.."

"ஓ.. பழி வாங்க வந்தியா..? நீ என்னை ஏதாவது ஒன்னு செஞ்சா அது உங்க அம்மாவையும் சேர்த்து பாதிக்கும்.." என்றான் யோசனையோடு.
"ம்.. அது எனக்கு ஏற்கனவே தெரியும்.. அதான் பழி வாங்க சந்தியாவை தேர்ந்தெடுத்தேன்.."

மகேஷ் சட்டென எழுந்து நின்றான். "அவ சின்ன பொண்ணு.. அவளுக்கும் நம்ம குடும்ம விசயத்துக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்ல.. நீ அவளை ஏதும் திட்டி வச்சிடாத.. அவ அப்பாவி.." மகேஷுக்கு அவன் பதில் சொல்லவில்லை.

தன் கை விரல் நகத்தை கடித்து துப்பியவனின் முகத்தில் குற்ற உணர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. மகேஷ்க்கு மூளைக்குள் என்னவோ உரைத்தது.
"அவளை என்ன திட்டி வச்ச..? எதுவா இருந்தாலும் சொல்லு.. நான் அவக்கிட்ட பேசிக்கிறேன்.."

இனியன் மறுப்பாக தலையை அசைத்தான். அவன் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.

"எனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க.." என்றவன் தன் உதட்டை அழுந்த கடித்தபடி மகேஷை பார்த்தான்.

"உன் அம்மாவை நான் என்னைக்கும் கை விட மாட்டேன்.. பிறகு ஏன் தேவையில்லாம சந்தியாவை இதுல இழுக்கற..?"

"இது உங்க வாழ்க்கை சம்பந்தப்பட்டது இல்ல.. எங்க வாழ்க்கை சம்பந்தப்பட்டது.." என்றவன் தன் முகத்தை துடைத்தபடி மகேஷை நிமிர்ந்து பார்த்தான்.

"உங்களை பழி வாங்கறதா நான் அவளை பழி வாங்கிட்டேன்.." என்றவன் நெற்றியை தேய்த்தான். அவன் முகத்தில் கவலையும் சோகமும் இருந்ததை கண்டும் கூட மகேஷால் எதையும் சரியாக கணிக்க முடியவில்லை. இனியனின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு கன்னத்தில் விழுந்தது.

இனியனின் முகத்தை பற்றி தன் பக்கம் திருப்பினான். "என்ன பண்ணன்னு சொல்லு.. அப்பா நான் கூட இருக்கும் போது எதுக்கும் நீ கவலைபட தேவையில்ல.. அவக்கிட்ட நான் பேசுறேன்.."

இனியன் மகேஷின் பார்வையை சந்திக்கவில்லை.

"காதலிக்கறதா சொல்லி நான் அவளை ஏமாத்திட்டேன்.." என்றவனின் தோளில் தட்டி தந்தான் மகேஷ்.

"நான் அவக்கிட்ட பேசிக்கிறேன் விடு.." என்றவனின் கையை தட்டி விட்டான் இனியன்.

"உங்களுக்கு ஏன் நான் சொல்ல வருவது புரியவேயில்லை.. உங்களை பழி வாங்கறதா நினைச்சி நான் அவளை நம்ப வச்சி ஏமாத்திட்டேன்.. எங்களுக்குள்ள எல்லாம் நடந்தாச்சி.. அவளுக்கும் எனக்கும்.." அவன் முடிக்கும் முன்னால் "எழுந்து வந்தேன்னா நாலு செருப்பாவது பிஞ்சி போற மாதிரி உன்னை அடிக்க போறேன்டா பரதேசி நாயே.." என்று ஒலித்தது சக்தியின் குரல்.

மகேஷுக்கும் ஆத்திரமாக வந்தது இனியன் மேல். அவன் இனியனை அறைய நினைத்த நேரத்தில்தான் சக்தியின் குரல் குறுக்கிட்டது. சக்தி எழுந்து விட்டதை கண்டவன் இனியனை முறைத்துவிட்டு சக்தியின் அருகே வந்தான்.

"குடிக்க தண்ணி வேணுமா..?" என்றான் அக்கறையோடு.

அவள் தலையசைத்ததும் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவளை குடிக்க வைத்தான். தண்ணீரை குடித்ததும் இனியனை கொலை வெறியுடன் பார்த்தாள் சக்தி. அவள் மயக்கத்தில் இருந்த போது யாரெல்லாம் அவளிடம் பேசினார்களோ அது அத்தனையையும் அவளால் கேட்க முடிந்தது. இனியன் தன் அருகே இருப்பது கனவென நினைத்தவள் அவனும் மகேஷும் பேசும் சத்தம் கேட்டு நிஜத்தை ஓரளவு யூகித்துக் கொண்டாள். அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் போதே முழு மயக்கமும் அவளுக்கு தெளிந்து விட்டது. தந்தையும் மகனும் பேசி கொள்வதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தவள் இனியன் சொன்ன சேதியால் தன் தலையில் கல் விழுந்ததை போல உணர்ந்தாள்.

"நீ பூமியில இருப்பது வேஸ்ட்.. நான் குணமாகி வரும் முன்னாடி எங்கேயாவது கண் காணாத தேசத்துக்கு போய் செத்து தொலைஞ்சிடு.." வார்த்தை முழுக்க வன்மமாக அவள் சொல்லவும் மகேஷ்க்கு மனம் வருந்தியது. ஆயிரம்தான் மகன் தப்பு செய்து விட்டாலும் கூட தன் மகனை அவள் இப்படி திட்டியதில் அவனுக்கு சிறிதும் உடன்பாடில்லை.

இனியன் அவர்கள் எதிரே நின்று சொட்டு சொட்டாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தான். அவனின் நிலை கண்டு மகேஷின் மனம் மெழுகாக உருகியது. யார் தவறு செய்தாலும் தனது கையால் பேசுபவன் இன்று தப்பு செய்தது மகன் என வந்து விட்டதால் வார்த்தைகளால் கூட திட்ட தயங்கினான். தனது வீக் பாயிண்ட் சக்தி என இவ்வளவு நாளாக நினைத்தவனுக்கு இப்போதும் கூட தெரியவில்லை அந்த வீக் பாயிண்ட் இனியன்தான் என.

"நீ கருவுலயே சாகாம விட்டதை நினைச்சி நான் இன்னைக்கு வேதனை படுறேன்.. உன்னை போல ஒரு மகனை.." அவள் மேலும் பேசும் முன் அவளது வாய் மீது தன் கையை வைத்து அவளை பேச விடாமல் செய்தான் மகேஷ்.

"இவனுக்காக நான் சந்தியாக்கிட்ட மன்னிப்பு கேட்கறேன்.. அவ கால்ல கூட நான் விழறேன்.. ஆனா இவனை நீ திட்டாத விடு.. சின்ன பையன் ஏதோ தெரியாம கோபத்துல தப்பு பண்ணிட்டான்.." என்றவன் இனியன் பக்கம் திரும்பினான்.

"இதுக்கு ஏன் அழற..? நான் அவகிட்ட பேசிக்கிறேன் விடு.. நீ கவலைபடாம இரு.. இதுக்காகவா கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்ட..? தப்புக்கு பரிகாரம் கல்யாணம் கிடையாது.. அது தண்டனையாகிடும் இரண்டு பேருக்கும்.."

இனியன் கண்ணீரோடு நிமிர்ந்து மகேஷை பார்த்தான். "நான் அவளை நேசிக்கிறேன்.. எனக்கு அவ வேணும்.." என்றான். பொம்மை வேண்டும் என்பதை போல கேட்டான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT
SHARE
FOLLOW
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top