நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 65

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியன் மேல் இருந்த கோபம் சக்திக்கு சிறிதும் குறையவில்லை.

"அவ ஒன்னும் பொம்மை கிடையாது.. நீ வேணும்ன்னு சொன்னவுடனே வாங்கி தர..?" என்ற சக்தியை நடுங்கும் உதடுகளோடு பார்த்தான் இனியன்.
சந்தியா பொம்மையாக தெரிந்தாலோ இல்லையோ ஆனால் மகேஷின் கண்களுக்கு இனியன் குழந்தையாகதான் தெரிந்தான்.

"அவக்கிட்ட நான் பேசிறேன்.." என்றான் மகேஷ்.

சக்தி அவனது நெஞ்சின் மீது ஒரு குத்து விட்டாள். அவனுக்கு வலிக்கவில்லை ஆனால் அவளுக்கு கை கொஞ்சமாக வலித்தது.

"நீ என்ன மெண்டலா..? இவன் பண்ண தப்புக்கு இவனை போலிஸ்ல பிடிச்சி தராம சந்தியாக்கிட்ட பேசுறேன்னு சொல்ற.. உங்களுக்கு பொம்பள புள்ளை வாழ்க்கைன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா..?"

மகேஷ் தனக்கு சப்போர்ட் செய்வது இனியனுக்கு தெளிவாக புரிந்து போனது. இதுவரை சாதாரண இளைஞனாக இருந்தவன் இப்போது கெட்டுப்போகும் குழந்தையாக மாற தொடங்கி விட்டான்.

"நான் மட்டுமா தப்பு செஞ்சேன்..? அவ மேலயும்தான் தப்பு இருக்கு.. நான் ஒன்னும் அவளை ரேப் பண்ணல.." என சொன்னான் இனியன். தன் அருகே இருந்த தண்ணீர் டம்ளரை இனியன் மீது விசிறி அடித்தாள் சக்தி.

"தொடப்ப கட்டை பிஞ்சிடும் பார்த்துக்க.. அப்பாவி பொண்ணோட இன்னசன்டை யூஸ் பண்ணிக்கிட்டு இல்லாத நியாயமா பேசுற நாயே.. உன்னை முதல்ல யார் இங்கே வர சொன்னது..? என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியாதா..? எனக்காக பழி வாங்க நீ யாரு..?" கோபத்தில் பேசினாள் அவள்.

மகேஷ் கோபத்தோடு அவளை விட்டு விலகி எழுந்து நின்றான். "போதும் சக்தி.. அவன் என் மகன்..! என் மகனை என்கிட்ட இருந்து பிரிச்ச வச்சதுக்கு நான்தான் நியாயமா உன் மேல கோபப்படணும்.. அப்படி என்ன அவன் பெருசா தப்பு பண்ணிட்டான்னு இப்படி தேவையில்லாம திட்டிட்டு இருக்க..? சொந்த அத்தை மகளை காதலிக்கறது ஒன்னும் தப்பு கிடையாது.. காதலிக்கற இரண்டு பேரு என்ன பண்ணாலும் தப்பு கிடையாது.. இல்ல தப்புதான்னு நீ சொன்னாலும் எனக்கு பிரச்சனை கிடையாது.. நான் அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க போறேன்.. தப்புகள் கூட அதுக்கப்புறம் சரியென ஆகிடும்.." என்றவன் இனியனின் அருகே சென்று அவனை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"நீ எதுக்கும் கவலைபடாத இனியா.. உனக்கும் அவளுக்கும் கல்யாணத்தை நான் பண்ணி வைக்கிறேன்.."

இனியனுக்கு எதையோ சாதித்தது போல இருந்தது. சக்தி முறைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதை கண்டும் காணாதது போல இருந்து விட்டான்.
சக்திக்கு அவனை கொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் எழவே முடியாத தன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை அறிந்து அமைதியாகி கொண்டாள். ஆனால் அவன் மீது உள்ள கோபம் குறையாது என்பதை அறிவாள் அவள்.

அன்று மாலை சக்தியை பார்க்க வந்தாள் சந்தியா. அவள் சக்தியிடம் நலம் விசாரித்த பிறகு அவளை தனியாக அழைத்து சென்றான் மகேஷ். இனியனும் அவர்களோடு இணைந்து நடந்தான். அவனை சந்தேகமாக பார்த்தபடி தன் மாமனோடு நடந்தாள் சந்தியா.

"நான் ஒன்னு கேட்பேன்.. நீ சம்மதிக்கணும்.." என்றான் மகேஷ்.

"என்ன மாமா..?" குழப்பமாக கேட்டாள் அவள்.

மகேஷ் தன் பின்னங்கழுத்தை தடவியபடி அவளை தயக்கமாக பார்த்தான்.

"உனக்கும் இனியனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன் நான்.."

சந்தியா அதிர்ச்சியோடு மகேஷை பார்த்தாள். இனியனை கோபத்தோடு முறைத்தாள்.

"ஆனா ஏன் மாமா..? எனக்கு இன்னும் படிப்பே முடியல.."

"இந்த பையன் ஒரு லூஸு ம்மா.. இவன் பண்ண தப்புக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கறேன்.. உனக்கு அவன் முறை பையன்தானே.. அவன் பண்ண தப்பை மன்னிச்சி அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு.."

சந்தியா அதிர்ந்து போய் இனியனை பார்த்தாள். அவன் தலை கவிழ்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அவன் இதையெல்லாம் மகேஷிடம் சொல்வான் என அவள் எதிர் பார்க்கவில்லை. அதை விடவும் அவளுக்கு அதிர்ச்சி தந்த விசயம் மகேஷ் இனியனுக்காக மன்னிப்பு கேட்டதுதான். இன்று வந்த ஒருவனுக்காக மன்னிப்பு கேட்கும் மாமன் தனது மன நிலையை பற்றி ஒரு நொடி கூட யோசிக்கவில்லையே என மனம் உடைந்து போனாள். ஆனால் எந்த உணர்வையும் தன் முகத்தில் காட்டவில்லை அவள்.

"நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் மாமா.. எனக்கு வீட்டுல வேலை இருக்கு.. நான் கிளம்பறேன்.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

மகேஷ் வெற்றியோடு இனியனை பார்த்தான். இனியன் சிறு புன்னகை தந்து விட்டு சந்தியாவை பின் தொடர்ந்து ஓடினான். மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்தவள் சாலையில் நடக்க தொடங்கிய போது அவளின் கையை பிடித்து நிறுத்தினான் இனியன்.

சந்தியா திரும்பி பார்த்தாள். இனியன் மூச்சு வாங்கியபடி நின்றுக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொள்ள நினைத்தாள். ஆனால் அவன் கரம் இரும்பாக இருந்தது.

"என் கையை விடு.." என்றாள் பற்களை கடித்தபடி.

"மாட்டேன்.." என்றவன் அவளது கன்னத்தில் மற்றொரு கையை வைத்து அவளை தன் பக்கம் திருப்பி அவளது கண்களை பார்த்தான். அவளது கண்களில் இருந்தது வலிகள் மட்டுமே. அதை கண்டவனுக்கு மனம் வலித்தது.

"சந்தியா ஐ யம் ஸாரி.. ஐ லவ் யூ.. நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்.."

சந்தியாவிற்கு அவன் பேச பேச கோபம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

"நீ நினைச்சதை சாதிச்சிட்ட இல்ல.. இன்னும் இதுக்கு மேலயும் உனக்கு என்ன வேணும்..? நீ ஆசைப்பட்ட மாதிரியே என் அப்பாவுக்காக என்னை பழி வாங்கிட்ட.. அதுக்கப்புறமும் கோபம் தீராம என்னை கல்யாணம் பண்ணிக்க உன் அப்பாக்கிட்ட சம்மதம் வாங்கிட்ட.. உன் ஆசை தீர்ந்தது இல்லையா..? அத்தோடு என்னை விட்டுடு.. இதுக்கு மேலயும் உன் பொய்யையும் உன் நடிப்பையும் நம்ப நான் தயாரா இல்ல.. உன் ஆசைப்படி நான் மணமேடையில் மண பொண்ணா காத்திருப்பேன்.." என்றவளின் கண்களில் கண்ணீர் துளி ஒன்று வீழாமல் கலங்கிக் கொண்டு இருந்தது. அவள் சிரமப்பட்டு அந்த கண்ணீரை வீழ விடாமல் தடுத்து வைத்திருந்தாள்.

இனியனின் கரங்கள் தானாகவே அவளை விட்டு விலகியது. அவள் அவனை ஒரு முறை பார்த்து விட்டு அங்கிருந்து திரும்பி நடந்தாள். அவள் தூரத்தில் செல்லுகையில் தன் கண்களை துடைத்துக் கொள்வதை பார்த்தான் இனியன். அவளுக்கு தன் மேல் கோபம் என அறிந்துக் கொண்டவன் அந்த கோபத்தை தன்னால் அன்பாக மாற்ற முடியும் என நம்பினான்.

"நீ ரொம்ப தப்பு பண்ற மகேஷ்.. இனியன் பண்ணது ரொம்ப பெரிய தப்பு.. அவனுக்கு தண்டனை தருவதை விட்டுட்டு அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்காத.." என்றாள் கோபமாக சக்தி.

"இதுல யார் வாழ்க்கையும் கெடல சக்தி.. இதுதான் நல்ல முடிவு.. சின்ன பசங்க ஏதோ தப்பு பண்ணிட்டாங்க.. கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரியா போயிடும்.. இதுல சந்தியாவே சம்மதம் சொல்லிட்டா.. அப்புறம் உனக்கு என்ன வந்தது..?" என கேட்ட மகேஷை கொல்லும் வெறியில் இருந்தாள் சக்தி.
ஒரு வாரத்திற்கு பிறகு...

முத்து தனது லாக்கப்பில் யோசனையோடு அமர்ந்திருந்தார். கோர்டில் இன்னும் நான்கு நாட்களில் தீர்ப்பு வந்து விடும் என பேசிக் கொண்டனர். தன்னை இப்படி கொண்டு வந்து சிறையில் தள்ளி விட்ட சக்தியின் மீது அதிக அளவு ஆத்திரத்தில் இருந்தார் அவர். அவரோடு அந்த அறையில் இருந்த மூர்த்தி முத்து தன்னை அவ்வப்போது திட்டுவதையெல்லாம் காதில் வாங்கியும் வாங்காதது போல அமைதியாக இருந்தான்.

தனக்கு முன் நிழல் ஆடுவதை கண்டு நிமிர்ந்தான் மூர்த்தி. குமரன் தயக்கமாக நின்றுக் கொண்டிருந்தார்.

"என்ன அண்ணா.." என்றபடி அவரருகே எழுந்து வந்தான் மூர்த்தி.

குமரனின் பின்னால் நின்றுக் கொண்டிருந்த இனியன் முன்னால் வந்து நின்றான்.

"யார் இது..?" என கேட்ட மூர்த்தியிடம் திருமண பத்திரிக்கை ஒன்றை நீட்டினான் இனியன். மூர்த்தி குழப்பமாக அதை வாங்கி பிரித்து பார்த்தான். மணப்பெண் சந்தியா எனவும் மணமகன் மகேஷ் மகன் இனியன் எனவும் எழுதி இருந்தது.

மூர்த்தி அதிர்ச்சியோடு தன் எதிரில் நின்றவனை பார்த்தான்.

"இவன் இனியன்.. மகேஷுக்கும் சக்திக்கும் பிறந்த மகன்.." என குமரன் அறிமுகப்படுத்தி வைத்தான். இதை கேட்டு முத்து அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக எழுந்து வந்தார்.

"மகேஷோட பையனா..? ஆனா எப்படி..?" குழப்பமாக கேட்டார்.

"அன்னைக்கு சக்தி வயித்துல இருந்த குழந்தை சாகல.. உயிரோடு உருவாகி பிறந்து இன்னைக்கு இவ்வளவு பெரியவனா வளர்ந்தும் இருக்கான்.. இவ்வளவு நாள் செல்வாவோடு ஆக்ராவுல இருந்தவன் இப்ப இங்கே வந்துட்டான்.." குமரன் விளக்கினார்.

"என் பேரனா இது..?" ஆனந்த அதிர்ச்சியோடு கேட்டவரை மற்ற மூவரும் சந்தேகமாக பார்த்தனர்.

அவர்களின் பார்வையை உணர்ந்துக் கொண்டவர் அடுத்து ஏதும் பேசவில்லை.

"நீ உயிரோடு பிறந்து வளர்ந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்.." என்ற மூர்த்தி தன் கையில் இருந்த திருமண பத்திரிக்கையை குழப்பமாக பார்த்தான்.

"எதுக்கு இப்ப கல்யாணம்..?" என குழப்பம் தீராமல் கேட்டவனை தயக்கமாக பார்த்தான் இனியன்.

"எனக்கு சந்தியாவை பிடிச்சிருக்கு.. அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு.. அதனாலதான் இந்த கல்யாணம்.." என்றான்.

"ஆனா இப்படி சின்ன வயசுலயே பண்ண வேண்டிய அவசியம் என்ன..? மெதுவா படிச்சி முடிச்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாமே.." சந்தேகம் தீராமல் கேட்டான் மூர்த்தி.

"எல்லாம் அந்த ஆளுக்கு பயந்து பண்ற வேலைதான்.. அந்த ஆள் எப்ப என்ன பண்ணுவாருன்னே தெரியாதே.. என் அம்மாவும் அப்பாவும் பட்ட கஷ்டத்தை நானும் சந்தியாவும் அனுபவிக்க விரும்பல.." இனியன் சுலபமாக பழி அனைத்தையும் முத்து பக்கம் திசை திருப்பி விட்டான்.

முத்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாரே தவிர எதுவும் மறுத்து பேசவில்லை. மகன் திருமணம் செய்து தனக்கு வாரிசு பெற்று தருவான் என காத்திருந்தவருக்கு இவ்வளவு பெரியவனாக தன் வாரிசு வந்து நின்றது இன்ப அதிர்ச்சிதான். அவன் சக்தியின் மகன் என்பதில் அவருக்கு சிறு உறுத்தல்தான். ஆனால் மகேஷின் மகன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியே. ஆடு பகை குட்டி உறவு கதையென ஆனது அவர் மனம்.

மூர்த்தி முத்துவை திரும்பி பார்த்து விட்டு இனியனின் பக்கம் திரும்பினான்.

"உங்க சம்மதம் கேட்காம கல்யாண வேலைகளை ஆரம்பிச்சிட்டோம்.. மன்னிச்சிடுங்க.." என்ற இனியனின் தலையை தடவி தந்தான் மூர்த்தி.

"பரவால்லப்பா.. சந்தியா மேல எனக்கு இருக்கற பாசத்தை விட மகேஷ்க்கு பாசம் அதிகம்.. சக்தியும் மகேஷும் சேர்ந்து என்ன முடிவு எடுத்தாலும் சரியாதான் இருக்கும்.."

"நீங்க இரண்டு பேரும் கல்யாணத்துல கலந்துக்க ஸ்பெஷல் பர்மிசன் கேட்டிருக்கேன்.. நீங்க இரண்டு பேரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்.." என்ற இனியன் முத்துவை பார்த்தான். "யோவ் தாத்தா.. எங்க கல்யாணத்துக்கு சிரிச்ச முகத்தோடு வந்து சேரு.. உன் கிறுக்கு புத்திக்கு அங்கே வந்தும் வேலை தராதே.." என்றவன் மூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

அடுத்த அத்தியாயம் ஏதும் இல்ல நட்புள்ளங்களே..

கதையின் முடிவுரையையும் இன்னைக்கே அப்டேட் பண்ணிட்டேன்..

VOTE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN