நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆக்ராவில் உள்ள தன் மாமன் வீட்டின் மொட்டை மாடியில் நின்றுக் கொண்டிருந்தான் இனியன். தமிழ்நாடு இருக்கும் திசை பக்கம் பார்த்தான். சந்தியா அவன் கண்களுக்கு தெரியமாட்டாள் என தெரிந்தும் கூட அதே திசையில் பார்த்துக் கொண்டிருந்தான். சந்தியா இருக்கும் திசையை பார்ப்பதே அவனுக்கு போதும் என்று இருந்தது.

சந்தியாவை அவன் கடைசியாக பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவளின் முகம் பார்த்து விட போகிறோம் என்ற எண்ணம் அவனது மனதை வானில் பறக்க வைத்தது.

அவனுக்கு மீசை கூட சரியாக அரும்பாத வயதிலேயே அவள் கழுத்தில் தாலியை கட்டிவிட்டான் இனியன். ஐந்து வருட பிரிவு அவனது காதலை பைத்தியக்கார நேசமாக மாற்றி விட்டிருந்தது.

சந்தியாவின் நினைவில் மூழ்கி இருந்தவனின் தோளில் கரம் ஒன்று விழுந்தது. திரும்பி பார்த்தான். மாமன் மகள் ரியா அவனை குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன ரியா..?''

"அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க.." என்றவள் அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு கீழே சென்றாள்.

அத்தை இவனை கண்டதும் புன்னகை ஒன்றை தந்தாள். தன் கையை பிடித்து இழுத்தபடி நடக்கும் ரியாவையும் அத்தையையும் பார்த்தான். ஐந்து வருடங்களுக்கு முன்புவரை இவனை ஒரு பொறுக்கியாகவும் தொல்லையாகவும் பார்த்த அதே அத்தை அவன் யாருடைய மகனென அறிந்ததும் இளவரசனை போல மரியாதை தந்து பார்த்துக் கொண்டாள். ரியாவுடன் ஏதாவது பேசினால் கூட குத்தம் என சொன்ன அவளே இப்போது ரியாவை அவனோடு பேசுவதற்கு தாராளமாக அனுமதி தந்திருக்கிறாள்.

ஐபிஎஸ் தேர்வில் அவன் வென்று விட்ட நாளிலிருந்து அவனை மருமகன் என்றுதான் அழைக்கிறாள் அத்தை.

இங்கே செல்வாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது இனியனுக்கு திருமணம் ஆகி விட்ட விசயம். இனியனின் திருமணம் ரகசியமாக வைக்கப்பட காரணம் சக்திதான்.

சக்திக்கு இனியன் மீதும் இனியன் சந்தியா மீது வைத்துள்ள காதலை பற்றியும் துளியும் நம்பிக்கை இல்லை. சிறு பிள்ளை தனமான அவனுடைய காதல் என்று வேணாலும் மாறிவிடும் என நம்பியவள் அவனுக்கு திருமணம் முடிந்த அன்றே ஆக்ராவிற்கு அனுப்பி வைத்து விட்டாள். அம்மாவின் சொல்லை இனியனால் தட்ட முடியவில்லை. தன் காதலின் உண்மை தன்மை பற்றி வாதாடி தோற்றவன் சோகம் நிரம்பிய முகத்தோடுதான் ஆக்ராவிற்கு கிளம்பினான்.

மகேஷ் மகனை பார்க்க மாதத்தில் மூன்று நான்கு முறை ஆக்ராவிற்கு வருவான். பல வருடங்கள் கழித்து கிடைத்த மகன் என்பதால் அவனை விட்டு விலகி இருக்க மகேஷால் முடியவில்லை. ஆனால் சக்தியின் கட்டளையையும் மீற முடியவில்லை. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகனை பார்க்க கிளம்பி விடுவான் மகேஷ்.

மகேஷ் காட்டிய அளவில்லா பாசமும், மகேஷ் தந்து செல்லும் அளவில்லா பணமும் இனியனை இன்னும் அதிகமாக கெடுத்து வைத்து விட்டது. அனைத்து இடங்களிலும் அவன் வைப்பதே சட்டம். கல்லூரியில் மற்ற மாணவர்கள் அனைவரும் அவன் பேச்சை கேட்டுதான் நடந்தாக வேண்டும். அவனை எதிர்க்க கூட யாரும் முயலவில்லை. வீட்டிலும் அத்தையும் ரியாவும் அவனுக்கு அதிக அளவு அன்பை தந்தனர்.

திமிரின் உச்சமாக இருந்தவன் ஐபிஎஸ் தேர்விலும் கலந்துக் கொண்டு வெற்றியும் பெற்று விட்டான். திமிரின் உச்சம் இப்போது சர்வாதிகாரத்தின் உச்சமாகவும் மாறி விட்டது.

"சாப்பாடு ருசி இல்லையா மருமகனே..?" என்ற அத்தையை நிமிர்ந்து பார்த்தான்.

"டேஸ்டாதான் இருக்கு அத்தை..'' என்றவனுக்கு அவளின் மருமகனே என்ற வார்த்தை நாராசமாக ஒலித்தது. அத்தை ரியாவுக்கும் அவனுக்கும் முடிச்சி போட முயன்று கொண்டிருப்பது அவனுக்கே தெளிவாக தெரிந்தது. அத்தைக்கும் மாமனுக்கும் இடையில் இவனால் சண்டை ஏதும் வந்து விட கூடாது என்று சக்தி என்றோ கட்டளை இட்டதற்காக இன்றும் அனைத்தையும் பொறுத்து போனான் இனியன்.

அவனுக்கு ரியா வேண்டாம் சந்தியாதான் வேண்டும். ஆனால் சக்தி இத்தனை நாளாக அவனது காதலுக்கு தடையாக இருந்து விட்டாள். இந்த ஐந்து வருடத்தில் சந்தியாவோடு போனில் கூட பேசியது இல்லை இனியன். நாளொன்றுக்கு ஓராயிரம் முறை போன் செய்து இருக்கிறான் இனியன். ஆனால் அவள் ஒருநாள் கூட ஃபோனை எடுத்ததே இல்லை. மகேஷிடம் தன் பிரச்சனையை சொல்ல நினைத்தான் இனியன். ஆனால் அவனும் அதன்பிறகு சக்தியின் பேச்சை கேட்டு சந்தியாவை தன்னிடமிருந்து பிரித்து வைத்து விடுவானோ என பயந்து அமைதியாக இருந்துக் கொண்டான் இனியன். இவனது பிரச்சனையை அறியாமல் அத்தை வேறு நொடிக்கு நூறு தரம் மருமகனே என அழைத்து அவனை கடுப்பாக்கி கொண்டிருந்தாள்.

இனியனது ஃபோன் ஒலித்தது. அவனது நண்பன் அழைத்திருந்தான். ஃபோன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"இனியா... எங்கே இருக்க.? இன்னும் பத்து நிமிசத்துல பார்ட்டி ஆரம்பிக்க போகுது.." என எதிரில் இருந்தவன் சொல்லவும் சட்டென எழுந்தான் இனியன்.

"சாப்பிடாம ஏன் எழுந்துட்ட..?" கரிசனமாக கேட்டாள் அத்தை.

"பிரெண்ட்ஸோடு பார்ட்டி அத்தை.." என்றவன் ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே நடந்தான்.

அவனுக்கு அவனது சொந்த ஊரிலேயே வேலை நிர்ணயம் செய்ய பட்டுவிட்டது. பணியில் சேர நாளை கிளம்ப இருக்கிறான். அதனால்தான் அவனது நண்பர்கள் அவசரமாக அவனுக்காக பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தனர்.

பார்ட்டி நடக்கும் ஹோட்டலின் முன்னால் தன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான். ஹால் எண் பதினொன்றுக்கு வர சொல்லி இருந்தார்கள் நண்பர்கள். பதினொன்றாம் எண்ணை கொண்ட ஹாலின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனை கை தட்டல்கள் வரவேற்றது. அவனது கல்லூரி நண்பர்களும் மற்ற நண்பர்களும் அந்த ஹாலில் நிரம்பி இருந்தனர். தகப்பன் பெயர் தெரியாதவன் என தினம் தினம் இவன் மனதை புண்படுத்தியவர்கள் இன்று இவனது அப்பா ஒரு செல்வந்தன் என தெரிந்ததும் வெறுப்பை கூட நட்பாக மாற்றிவிட்டனர்.

மது கிண்ணங்களை கையிலேந்தியபடி மாதுக்கள் சிலரும் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தனர்.

"இனியா.. கன்க்ராட்ஸ்.." ஆளாளும் வந்து அவனுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இனியனின் நெருங்கிய நண்பன் வெங்கட் தனது வாழ்த்தை சொல்லி விட்டு தனது நண்பர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு இனியனை அழைத்து சென்றான்.
சுற்றும் முற்றும் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்தவனின் முன்னால் மதுபான கோப்பை ஒன்று வைக்கப்பட்டது.

"அவன் ட்ரிங் பண்ண மாட்டான்.." என வெங்கட் சொல்லவும் அந்த கோப்பையை அருகில் இருந்த ஒருவன் எடுத்து ஒரே விழுங்கில் குடித்து விட்டு காலி கோப்பையை கீழே வைத்தான்.

"என்ன மனுசன்ப்பா நீ..? ட்ரிங்க்ஸ் பண்றது இல்ல.. எந்த பொண்ணையும் சைட் அடிக்கறது இல்ல.. உன்னை போல முனிவனுக்கு எதுக்கு சொத்து சுகமும் இப்படி வேலையும்..?" என்றான் அருகில் இருந்தவன் கேலியோடு.

"ட்ரிங்க்ஸ் பண்ண மாட்டேன்னு நான் என் அம்மாவுக்கு சத்தியம் பண்ணி தந்திருக்கேன்.." என்றபடி அருகே இருந்த குளிர் பானத்தை எடுத்து குடிக்க ஆரம்பித்தான் இனியன்‌.

"உன்னை போல அம்மா பிள்ளையை நான் பார்த்ததே இல்லை.." என்ற வெங்கட் "அவளை பாரேன்.. செம பிகர் இல்ல.." என்றான் ஓரு பெண்ணின் பக்கம் கையை காட்டி.

இனியன் அவன் கை காட்டிய பெண்ணை திரும்பி பார்த்தான். அழகான பெண்ணாகத்தான் இருந்தாள்.

"நல்ல பிகர்தான்.." என்றவன் அவள் பக்கமிருந்து திரும்பிக் கொண்டான்.

"அவ கம்பெனி வேணும்ன்னா சொல்லு.." என்றான் அருகில் இருந்தவன்.

"தேவையில்ல.." என்றவன் குளிர்பானம் குடிப்பதில் கவனத்தை செலுத்தினான்.

"சாமியாரா போக திட்டம் ஏதும் வச்சிருக்கியா..?" என்றான் வெங்கட் குழப்பமாக.

இனியன் தன் தலையை கோதியபடி நிமிர்ந்து அவனை பார்த்தான்.

"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி வெங்கட்.. நான் அவளை ரொம்ப விரும்புறேன்.. என்னால அவளை தவிர வேற யாரையும் சைட் அடிக்க முடியாது.." என அவன் சொல்ல சுற்றி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

"சாமியாரா போக போறேன்னு உண்மையை சொல்ல வேண்டியதுதானே..? இதுக்கு ஏன் இப்படி ஒரு படுபயங்கரமான ஜோக் சொல்ற..?" என கேட்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான் வெங்கட்.

ஆனால் இனியனின் முகத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படாததை கண்டு அவனை அதிர்ச்சியோடு பார்த்தான் வெங்கட்.

"அஞ்சி வருசமா உன் நிழல் போல இருக்கேன் நான்.. எனக்கு தெரியாம எப்படா கல்யாணம் பண்ண..?" என வெங்கட் கேட்க மற்றவர்களும் இனியனின் பதிலுக்கு காத்திருந்தனர்.

"அஞ்சி வருசம் முன்னாடி நான் இருபது நாளா காலேஜை கட் அடிச்சேனே.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?"

"ஞாபகம் இருக்கு.. ராக்கி கூட நீ துப்பாக்கியோடு யாரையோ கொலை பண்ண போயிருக்கறதா காலேஜ் முழுக்க வதந்தி பரப்பி விட்டானே.."

"ம்.. ஆமா.. அந்த இருபது நாள் கேப்லதான் எனக்கு கல்யாணம் ஆச்சி.. என் பொண்டாட்டி ஊர்ல எங்க வீட்டுல என் அம்மா அப்பாவோடு இருக்கா.." என்றவன் தன் ஃபோனை எடுத்து அதிலிருந்த சந்தியாவின் புகைப்படத்தை அவர்களிடம் காட்டினான்.

"டேய்.. நிஜமாவா இதுதான் பொண்டாட்டியா..? சூப்பரா இருக்காங்கடா சிஸ்டர்.." அங்கிருந்தவர்கள் சந்தியாவை புகழ்ந்து தள்ளினர்.

இனியன் ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

"இப்படி அழகான மனைவி இருக்கும் போது நீ யாரையும் சைட் அடிக்க கூடாதுதான்.. ஆனா நான் பேச்சிலராச்சே.. நானாவது இந்த கூட்டத்துல நல்ல பிகர் இருக்கான்னு தேடுறேன்.." என்றபடி அருகில் இருந்தவன் எழுந்து சென்றான்.

"ஊருக்கு எப்ப மச்சி..?" என்று ஒருவன் கேட்டான்.

"விடியற்காலை ஃப்ளைட் ஏற போறேன்.." என்றவனின் தோளை தட்டி தந்தான் வெங்கட்.

"பொண்டாட்டியை பார்க்க அவ்வளவு அவசரமா..?"

அவசரம்தான். மனைவியின் முகம் பார்ப்பது அவனுடைய ஐந்து வருட தவம். மனம் முழுக்க நிறைந்து இருந்த சந்தியாவை நேரில் பார்ப்பது அவனுடைய பேராசை.

பார்ட்டி இனிதாக நடைப்பெற்றது. இனியனின் பெயரை சொல்லி மற்ற அனைவரும் குடித்து கும்மாளம் அடித்தனர். நள்ளிரவு தாண்டும் நேரத்தில் இனியன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

நள்ளிரவில் காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த செல்வா இனியனை கோபமாக பார்த்தான்.

"எதுக்கு இப்படி நடுராத்திரியில் குடிச்சிட்டு வந்திருக்க..?" என்றான் கோபமாக.

"நான் குடிக்கல மாமா.." சலிப்போடு சொல்லியபடியே அவனை தாண்டிக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்தான் இனியன்.

செல்வாவும் அவனை பின்தொடர்ந்து அறைக்குள் வந்தான்.

"இங்கே நடுராத்திரி வரைக்கும் ஆட்டம் போட்டுட்டு வர மாதிரி ஊருலயும் இருக்காத.. உங்க அம்மா உன்னை தோலை உரிச்சிடுவா.. அப்புறம் உன்னால உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில்தான் சண்டை வரும்.." செல்வாவின் கண்களுக்கு இனியன் போலிஸ் அதிகாரியாக தெரியவில்லை. வம்பு செய்து அவனிடம் தினம் திட்டு வாங்கும் அதை பழைய இனியனாகதான் தெரிந்தான்‌.

"எனக்கும் தெரியும் மாமா.. நான் என்ன குழந்தையா..?" என கேட்டவன் கட்டிலில் சாய்ந்தான்.

செல்வா அவனை முறைப்போடு பார்த்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றான். இனியன் தன் கனவுலகில் சந்தியாவின் வரவுக்காக காத்திருந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை ஆரம்பம் எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க..

LIKE
COMMENT
SHARE
FOLLOW
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top