நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இனியனின் கண்கள் சந்தியாவை தொடர்ந்தது. அவள் அந்த கட்டிடத்தை விட்டு வெளியே நடந்தாள். அவள் ஏன் பாதியில் செல்கிறாள் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது. அது அவனுக்கு கோபத்தைதான் தந்தது.

ஐந்து வருடங்கள் பிரிந்திருந்தாலும் கூட அவள் தன் மீது உள்ள கோபத்தை குறைத்துக் கொள்ளவில்லை என்பது புரிந்தது. அவளின் திமிருக்கு நல்ல பாடம் புகட்ட நினைத்தான் அவன்.

அவள் அந்த அறையை தாண்டுகையில் அவளின் ஒற்றை கொலுசு ஒன்று கழண்டு விழுந்தது. அதை கவனிக்காமல் அவள் சென்று விட்டாள்.

"நீங்க இந்த வட்டத்து திருடர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் ஏதாவது சொல்ல விரும்புறிங்களா..?" என ஒருவர் அவனிடம் மைக்கை நீட்டி கேட்டார்.

"அவங்களை வேற வேலை தேடிக்க சொல்றேன்.. நான் யாருக்கும் கருணை காட்ட மாட்டேன்.. சட்ட ஒழுங்கு எனக்கு ரொம்ப முக்கியம்.." என அவன் சொன்னதும் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுந்து நின்றார்.

"உங்க அம்மா ஒரு போலிஸ்.. ஆனா உங்க அப்பா ரவுடி.. இது எப்படி ஒத்துவரும்..?" என்றார் அவர்.

இந்த கேள்வியால் சக்தியின் முகம் வாடிப்போனது. மகேஷ் அந்த பத்திரிக்கையாளரை முறைத்தான்.

இனியன் புன்னகை மாறா முகத்தோடு கேள்வி கேட்டவரை பார்த்தான்.

"தப்பு செய்றது எங்க அப்பாவாவே இருந்தாலும் சொந்தம் பந்தம் பார்க்காம எங்க அம்மா அவரை அரெஸ்ட் பண்ணிடுறாங்க.. பிறகென்ன உங்களுக்கு பிரச்சனை..?"

மற்றொருவர் எழுந்து நின்றார்.

"உங்க அப்பா செய்ற கட்டப்பஞ்சாயத்து பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க..? ஒரு போலிஸ் குடும்பத்துல ரவுடியும் இருப்பதை இந்த சமுதாயம் எப்படி எடுத்துக்கும்ன்னு நினைக்கிறிங்க..?"

"இனி அவர் கட்டப்பஞ்சாயத்து ஏதும் செய்யும் அவசியம் இருக்காது.. அவர் அதையும் மீறி சட்டத்துக்கு புறம்பா ஒரு விசயம் செய்யும் போது நானே அவரை அரெஸ்ட் பண்ணுவேன்.."

பத்திரிக்கையாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சற்று நேரத்தில் கை தட்டல் பறந்தது. அவர்கள் ஏன் கை தட்டினார்கள் என்று இனியனுக்கு புரியவில்லை.

குமரன் அவனை பெருமையோடு பார்த்தார். அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்பினர்.

"சூப்பரா பதில் சொன்னடா மாப்பிள்ளை.." என்றார் குமரன்.

அனைவரும் அங்கிருந்து கிளம்பிய பிறகு மேடையை விட்டு கீழே இறங்கி வந்தான் இனியன்.

"நான் கட்டப்பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் இருக்காதா..? ஏன்..?" என சந்தேகமாக கேட்டான் மகேஷ்.

"நீங்க செய்ற வேலையை செய்யதான் இனி நான் இருக்கேனே.." என மகேஷின் காதில் சொன்னான் அவன். மகேஷ் குறும்பாக சிரிக்க அவர்கள் இருவரையும் மற்றவர்கள் சந்தேகமாக பார்த்தனர்.

"எப்படி இருக்க இனியா..?" பொன்னி கண்ணீரை துடைத்தபடி கேட்டாள்.

"நல்லாருக்கேன் பாட்டி.. உங்களை தினம் தினம் நினைச்சிப்பேன்.‌." என்றவன் அவளை கட்டிக்கொண்டான்.

"நானும் உன்னை தினம் நினைப்பேன்.. என் பேரன் கண் காணாத தேசத்துல இருக்கிறதை நினைச்சா எனக்கு சாப்பாடு கூட இறங்காது‌.." என அவள் சொல்ல சக்தி அலுப்போடு தன் கண்களை சுழற்றினாள்.

"வீட்டுக்கு போகலாமா..? இல்ல இங்கேயே செண்டிமென்டல் டிராமா போட போறிங்களா..?" என்றாள் சக்தி.

பொன்னி அவளை முறைத்து பார்த்தாள். "நீ வாடா செல்லம் நாம வீட்டுக்கு போவோம்..‌ என் பேரன் வரானேன்னு உனக்கு பிடிச்ச எல்லாம் சமைச்சி வச்சிருக்கேன்.." என்றவள் அவனின் கை பற்றி அழைத்துத் கொண்டு வெளியே நடந்தாள்.

வாசலருகே வந்ததும் "பாட்டி ஒரு நிமிஷம்.." என்றவன் அவளிடமிருந்து விலகி நடந்தான்.

அறை வாயிலில் காவலாக நின்றிருந்தவனின் முன்னால் வந்தவன் "உங்க பாக்கெட்டுல இருக்கற கொலுசு எனக்கு சொந்தமானது.." என்றான். சந்தியா தவற விட்ட கொலுசை அவன்தான் எடுத்து தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.

அந்த காவலாளி அவனை ஒரு மாதிரியாக பார்த்தான். "நீங்க கொலுசு கூட போடுவிங்களா..?" என்றான் ஆச்சரியத்தோடு.

"ஆமா.. பூனைக்கு மணி கட்டின மாதிரி நானும் கொலுசை கட்டிப்பேன்.. தேவையில்லாத கேள்வி கேட்காம கொலுசை எடு.." என்றான் எரிச்சலோடு.

அவன் தயக்கமாக கொலுசை அவனிடம் தந்தான். கொலுசை தின்று விடுவதை போல பார்த்தவன் எதிரில் இருப்பவன் ஒரு மாதிரியாக பார்ப்பதை உணர்ந்து கொலுசை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

சந்தியா வீட்டிற்கு வந்ததும் தனது அறைக்கு வந்து சேர்ந்தாள். இனியனை பற்றி நினைக்க நினைக்க நிஜமாகவே தலைவலி வந்து விட்டது அவளுக்கு. அவனின் உருவம் கண்ணுக்குள்ளேயே இருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு இருந்த அரை குறை அழகுக்கே முதல் நாளே காதலில் விழுந்தவள் இவள். இன்று வீரமும் துணிவுமாக ஆளை சாய்க்கும் அழகில் ஆண்மகனாக வந்து நின்றவனை கண்டு தன் வீராப்பில் விரிசல் ஏற்பட்டதை உணர்ந்தாள்.

தன்னை தானே நொந்தபடி அறையின் கட்டிலில் அமர்ந்தவள் அறையில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை கண்டு குழம்பினாள். அவள் கழட்டி ஓரமாக வைத்திருந்த அவர்களின் திருமண புகைப்படம் மீண்டும் சுவற்றில் ஆடிக் கொண்டிருந்தது. புத்தக அலமாரியில் புதிதாக பல புத்தகங்கள் இருந்தது. அலங்கார மேஜை மீது ஆண்கள் பயன்படுத்தும் சில பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சரியாக பூட்டாமல் இருந்த துணி அலமாரியை திறந்து பார்த்தாள். அலமாரியின் ஒரு புறத்தில் ஆண்களுக்கான உடைகள் வரிசையாக தொங்கிக் கொண்டிருந்தது.

"மல்லிக்கா.." என இவள் கத்தி அழைத்ததில் உடனே அங்கு ஓடி வந்தாள் வீட்டின் வேலையாள் மல்லி.

"என்ன சந்தியா ம்மா..?" பதட்டமாக கேட்டாள் அவள்.

"இது யார் டிரெஸ்..? இது ஏன் என் ரூம்ல இருக்கு..? என் ரூமை இப்படி ஏன் மாத்தி வச்சிருக்கிங்க..?" என்றாள் கோபத்தோடு.
மல்லி தன் வாய் மீது கை வைத்து தன் சிரிப்பை அடக்கினாள்.

"அதெல்லாம் சின்ன தம்பியோடது.. நம்ம டிரைவர்க்கிட்ட அவரோட பொருளையெல்லாம் கொடுத்து விட்டிருந்தாரு.. பொன்னி அம்மாதான் அது எல்லாத்தையும் உங்க ரூம்ல வைக்க சொன்னாங்க.." என்றாள்.

சந்தியாவிற்கு சுவற்றில் முட்டிக் கொள்ள தோன்றியது. பாட்டியின் மீது ஆத்திரமாக வந்தது.

"சரி நீங்க போங்க.." என்றவள் அவள் சென்றதும் அலமாரியை திறந்தாள்.

இனியனின் உடைகளை வன்மத்தோடு பார்த்தாள். அந்த உடைகள் அனைத்திற்கும் நெருப்பு வைக்க தோன்றியது அவளுக்கு. பற்களை கடித்தபடி வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

இவ்வளவு நாளாக நினைவிலும் கனவிலும் கொடுமை செய்தவன் இப்போது நிஜத்தில்.. அதுவும் அதே வீட்டில் அவளின் அறையில் வசிக்க போகிறான். அவளுக்கு இதை நினைக்க நினைக்க ஆத்திரம்தான் அதிகமானது.

வெகுநேரம் இதே யோசனையில் இருந்தவள் பொன்னியின் குரலை கேட்டதும் சட்டென எழுந்து ஹாலுக்கு ஓடினாள்.

"பாட்டி உனக்கு என்ன பைத்தியமா.. எதுக்கு என் ரூம்ல‌‌.." பொன்னியை திட்டியபடியே ஹாலுக்கு வந்தவள் வாசலில் நின்ற இனியனை கண்டு மீதியை சொல்லாமல் வாயை மூடிக் கொண்டாள்.

"எதுக்குடி இப்படி காட்டு கத்தல் கத்திட்டு இருக்க..?" என கேட்ட பொன்னி "மல்லி சீக்கிரம் ஆரத்தியை எடுத்துட்டு வா.." என்றாள்.

இனியன் சந்தியாவை புருவம் உயர்த்தி யோசனையுடன் பார்த்தான். சந்தியாவிற்கு அவன் பார்வை படும் இடத்தில் நிற்க விருப்பம் இல்லை. அதனால் திரும்பி நடந்தாள்.

சக்தி மகேஷை ஓரக்கண்ணால் பார்த்தாள். "நான் இந்த வீட்டு மருமகதானே..? உங்க அம்மா எனக்காக ஒருநாள் ஆரத்தி சுத்தி இருப்பாங்களா..?" என்றாள் குற்றச்சாட்டாக.

அவள் மெல்லமாக பேசியதால் மகேஷை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை. மகேஷ் சக்தியின் காதருகே தன் முகத்தை கொண்டு சென்றான். "எங்க அம்மா உனக்கு ஆரத்தி சுத்தலன்னா என்ன..? உனக்காக என்னையே தந்திருக்காங்க.. உனக்கு நான் போதாதா..?" என்றான் சிணுங்கல் குரலில். முகம் சிவந்து தலை குனிந்த சக்தி அதன் பிறகு எதுவும் பேசவில்லை.

மல்லி கொண்டு வந்து தந்த ஆரத்தியை கையில் வாங்கிய பொன்னி இனியனின் பக்கம் திரும்பினாள்.

"பாட்டி.. சந்தியாவை என் கூட நிற்க வச்சி ஆரத்தி சுத்துங்க.. அவ இல்லாம ஆரத்தி சுத்திக்க ஏதோ மாதிரியா இருக்கு.." என்றான் இனியன்.

அறைக்கு செல்ல ஓரடி எடுத்து வைத்த சந்தியா இவன் சொன்னதை கேட்டு திரும்பி பார்த்து அவனை முறைத்தாள். 'பிராடு.. பொய் காதலை சொல்லி என்னை ஏமாத்தியதை போல இப்ப மொத்த குடும்பத்தையும் ஏமாத்துறான்..' அவனை உள்ளுக்குள் திட்டி தீர்த்தாள் அவள்.

மற்றவர்கள் பார்க்கும் முன் தனது அறைக்கு சென்று விட வேண்டும் என நினைத்து திரும்பினாள். "என் பேரன் சொன்னது காதுல விழலையா..? வந்து இவன் கூட நில்லு.." என்றாள் பொன்னி. சந்தியாவிற்கு நெஞ்சம் சோகத்தில் விம்மியது. இதுவரை பாசத்தை மட்டும் காட்டிய பாட்டி கூட இன்று அவனால் அதிகாரத்தை காட்டுகிறாளே என நினைத்து வருந்தினாள் சந்தியா.

தரையை பார்த்தபடி நடந்து வாசலுக்கு வந்தாள். அவனை பார்க்கவும் பிடிக்கவில்லை. பாட்டியை பார்க்கவும் கூட பிடிக்கவில்லை அவளுக்கு.

தரையில் கண் பதித்து இருந்தவளின் கையை வலிய கரம் ஒன்று பற்றியது. அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்த கரம் இனியனுடையது என்பதை அறிவாள் அவள்.

தயக்கமாக நின்றவளை தன் அருகாமையில் இழுத்து நிறுத்தினான் இனியன். அவளை பற்றியிருந்த கையின் பிடிமானம் இறுகியது. தன்னுடையவள் என்ற உணர்வு அவனுக்கு சிறு கர்வத்தை தந்தது.

'என் கையை உடைக்க போறானா இவன்..? பங்ஷன்ல இருந்து பாதியிலேயே வந்துட்டேன்னு பழி வாங்க போறானா..?' பயத்தோடு யோசித்தாள் சந்தியா.
பொன்னி இருவருக்கும் ஆரத்தியை சுற்றினாள். இனியனின் நெற்றியில் பொட்டு வைத்தவள் சந்தியாவின் குனிந்த தலையை குழப்பமாக பார்த்தாள்.
"இப்பதான் புது பொண்ணுன்னு நினைப்பா உனக்கு..?" என பொன்னி கேட்டது சந்தியாவின் காதில் விழவேயில்லை.

தனது யோசனையில் இருந்தவளின் முகத்தை பற்றி நிமிர்த்தினான் இனியன். சிலையாக நின்று அவனை பார்த்தாள் அவள். சிந்தனையின் உலகை விட்டு வெளி வந்தவள் அவனை விழியெடுக்காமல் பார்த்தாள். கனவு போல இருக்கும் இந்த நெருக்கம் தொடர வேண்டும் என்று ஒரு குரலும் இந்த நொடியே முடிய வேண்டும் என்றும் இரு வேறு குரல் அவளின் மனதுக்குள் ஒலித்தது‌.

அவளின் முகத்தை பார்த்த இனியனுக்கு தன்னை சுற்றி ஒரு உலகம் இருப்பதே மறந்து போனது.

"அவனை பார்வையாலேயே தின்னுடாத.." என பொன்னியின் குரல் கேட்கவும் இனியன்தான் முதலில் சுய நினைவிற்கு வந்தான். சந்தியா பாட்டியின் குரலால் குழம்பிய நேரத்தில் அவளின் முகத்தை பாட்டிக்கு நேராக திருப்பினான் இனியன்.

பாட்டி சந்தியாவின் நெற்றியிலும் பொட்டை வைத்த பிறகு ஆரத்தி தட்டை மல்லியிடம் தந்தாள்.

மல்லி ஆரத்தி தட்டோடு வாசலுக்கு செல்ல இனியன் சந்தியாவின் கை பிடித்தபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

நட்புக்களுக்கு வணக்கம்.. நான் இதை முதல்லயே சொல்லி இருக்கணும்.. இது ஒரு ஹேட் லவ் ஸ்டோரி.. ஆணாதிக்கம் அதிகமா தெரியும்.. ஆனா கதை முழுசா அதுவே இருக்காது.. கதையை கடைசி வரை படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. பாதியிலயே ஹீரோவை பிடிக்கல அதனால கதையையும் பிடிக்கலன்னு சொல்லிடாதிங்க..

LIKE
COMMENT
FOLLOW
SHARE
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top