நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

சர்வாதிகாரம் 5

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன்னை அறைந்தவளை கோபத்தோடு பார்த்தான் இனியன். சந்தியாவிற்கு பயத்தில் கை கால்கள் நடுங்கியது. ஆனாலும் கோபத்தோடு அவனை முறைத்தாள்.

"நான் ஒன்னும் உன்னை மயக்கல.. வேற எவனையும் மயக்கல.. என்னை டார்ச்சர் பண்ணாம தள்ளி போ.." என்றவள் அவனின் நெஞ்சில் கை வைத்து அவனை பின்னால் தள்ளினாள்.

இரும்பில் வடித்த சிலையென இருந்தவனை அவளால் துளி கூட தள்ள முடியவில்லை. தோற்று போன முகமென அவனை வெறுப்போடு பார்த்தாள்.

"அஞ்சி வருசத்துல அழகு மட்டும் கூடல.. உன் திமிரும் அதிகமாகி இருக்கு.." என அவன் சொல்ல பயத்தில் அவள் தன் புடவை தலைப்பை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

"ஓவர் திமிரை குறைக்கதான் நான் இருக்கேனே.." என்றவன் அவள் அறைந்த கன்னத்தை தொட்டு பார்த்தான். அவ்வளவாக வலி ஏதும் இல்லையென்றாலும் கூட அவளிடம் அடி வாங்கியது தன் தன்மானத்திற்கு இழுக்கு என நினைத்தான்.

"என்னையே கை நீட்டி அடிக்கற அளவுக்கு திமிரா..? நான் திருப்பி அறைய ஒரு செகண்ட் கூட ஆகாது.. ஆனா ஒரே அடியில செத்துடுவ நீ.. அதனால அமைதியா இருக்கேன்.." என்றவன் அவளின் செல்போனை அவள் முன் கொண்டு வந்தான்.

"அஞ்சி வருசமா நான் ஓயாம போன் பண்ணேன்.. ஆனா ஒரு முறை கூட உனக்கு எடுக்க தோணல.. காரணம் கேட்டா என்னை பிடிக்கலன்னு சொல்ற.. என் காதலை உன்னால நம்ப முடியலன்னா எனக்கும் என் காதலை வெளிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை.. உன்கிட்ட காதல் பிச்சை எடுப்பேன்னு கனவுல கூட நினைச்சிடாத.." என்றவன் தலையை கோதிவிட்டுக் கொண்டு தள்ளி நின்று அவளை பார்த்தான். அவன் மனதில் இருந்த காதல் தேவதை அவனது இதயத்தை இரு கூராக வெட்டி எறிந்து விட்டாள். தான் மட்டும் முட்டாள் போல ஐந்து வருடமாக அவளை காதலித்த போது அவள் தன்னை மனிதனாக கூட மதிக்கவில்லை என்ற நிதர்சனம் அவனின் மனதை சுக்கல் நூறாக்கியது. தன் காதல் இப்படி தோற்று போவது அவனுக்கு பிடிக்கவில்லை.

"நீயா வந்து ஐ லவ் யூன்னு என்கிட்ட கெஞ்ச போற.. இவ்வளவு நாளா உங்க அப்பாவை பழி வாங்க நினைக்கல நான்.. ஆனா இனி பழி வாங்க போறேன்.. உயிரோடு மரண வலியை நீயும் உன் அப்பாவும் அனுபவிக்க போறிங்க.." என அவன் சொல்ல சந்தியா குழப்பமும் பயமுமாக அவனை பார்த்தாள்.

"என் அப்பாவை ஏதும் செஞ்சிடாத.." நடுங்கிய குரலில் அவள் சொல்ல கேலி சிரிப்போடு நாற்காலியில் அமர்ந்தான் அவன்.

"அப்ப உன்னை எது வேணாலும் செய்யலாமா..?" என கேட்டவன் அவளை தலை முதல் கால் வரை பார்த்தான். அவன் பார்வையில் உடல் கூசியவள் அருவெறுப்போடு தரையை பார்த்தாள்.

"உடனே என்னை காம கொடூரன் ரேஞ்சிக்கு நினைச்சிடாத.. நான் அந்த மாதிரி கிடையாது.. விருப்பம் இல்லன்னா கட்டின பொண்டாட்டி கூட எனக்கு கால் தூசிதான்.. உன் மேனியை ஆராதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.. ஆனா உன் திமிர் பிடிச்ச மனசை உடைச்சி காட்டுறேன் இருடி.. இனி உன் வாழ்நாள் எல்லாமே நரகம்தான்.." என்றவன் எழுந்து நின்றான்.

அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதை சொன்ன நொடியிலேயே உடைத்து விட்டன. தான்தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு. ஆனால் அவன் சொன்னது போல அவன் முன் கெஞ்சி நிற்க விருப்பம் இல்லை அவளுக்கு
அவளின் போனை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்ட இனியன் அந்த அறையை விட்டு வெளியே நடந்தான்.

"என் போன்.." என அவளின் குரலை கேட்டவன் நடப்பதை நிறுத்தி விட்டு அவளை திரும்பி பார்த்தான்.

"நான் பேச சொன்னா மட்டும்தான் நீ பேசணும்.. தேவையில்லா வார்த்தைகள் பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல.."
அவளின் கோபம் அதிகமானது.

"நான் ஒண்ணும் உன் அடிமை இல்ல.." என்றாள் அவள்.

"இனி அடிமைதான்.. புரட்சி பண்ண நினைக்காத. அப்புறம் தோத்துடுவ.. இது என் வீடு. நீ என் பொண்டாட்டி. என்னை கேள்வி கேட்க இங்கே யாருக்கும் உரிமை கிடையாது.. உனக்கும் உரிமை கிடையாது. என் அம்மாக்கிட்டயோ அப்பாக்கிட்டயோ இதை பத்தி சொல்ல நினைக்காத.. ஏனா உங்க அப்பனை ஆயுளுக்கும் ஜெயில்ல போடுற மாதிரி ஆதாரம் இருக்கு என்கிட்ட.. எந்த மகளும் தன் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்ப ஆசைப்பட மாட்டான்னுதான் நினைக்கிறேன்.. உனக்கு ஆசையா இருந்தா சொல்லு.. நானே நமக்குள்ள நடக்கறதை என் அம்மா அப்பாக்கிட்ட சொல்றேன்.." என அவன் சொல்ல சந்தியா முகம் வெளுத்து போனது.
அவன் சொல்வதில் எத்தனை பங்கு உண்மை இருக்கிறது என்பதை அவளால் கண்டறிய முடியவில்லை.

"எங்க அப்பா ஏற்கனவே தண்டனையை அனுபவிச்சிட்டார்.." என்றவளை நக்கல் சிரிப்போடு பார்த்தான் அவன்.

"நான் போலிஸ்காரன்.. இதை மறந்திருக்க மாட்டன்னு நினைக்கிறேன்.. அஞ்சி வருசத்துக்கு முன்னாடி தாத்தாவையும் உன் அப்பாவையும் ஜெயிலுக்கு அனுப்பி வச்சவனே நான்தான்.. அவங்களுக்கு எதிரான ஆதாரம் என்கிட்ட எத்தனை இருக்குன்னு உன்னால நினைச்சி கூட பார்க்க முடியாது. அதனால ஸ்மார்ட்டா சிந்திக்கறதை விட்டுட்டு நான் சொல்றதை மட்டும் செய்.. என் போன் காலை எடுக்கவே உனக்கு துப்பு இல்ல.. அப்புறம் உனக்கு எதுக்குடி போன் வெங்காயம் வேற.?" என்றவன் அவள் அதிர்ச்சியோடு நிற்பதை சலனமில்லாமல் பார்த்து விட்டு வெளியே நடந்தான்.

கதவை படீரென அவன் சாத்தி விட்டு செல்ல அவள் சுவரில் சாய்ந்து அமர்ந்து தன் கைகளில் முகம் புதைத்தாள். விழியோரம் கண்ணீர் துளிர்த்தது.

'உண்மையாவே அப்பாவுக்கு எதிரா ஆதாரம் வச்சிருப்பானோ..?' என நினைத்தவளுக்கு அவனின் அதிகாரம் புரிந்தது.

தனது வாழ்க்கை எந்த அளவிற்கு விந்தையாக மாறி போனது என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு சிரிப்பு வந்தது.

''சந்தியா.." பொன்னி கத்தி அழைத்ததில் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

கிச்சனிலிருந்து அவளை அழைத்த பொன்னி அவள் வந்ததும் தன் கையிலிருந்த கத்தியை அவள் கையில் தந்தாள்.

"என் பேரனுக்கு பொண்டாட்டி கையால சாப்பிடணுமாம்.. அதனால எல்லாத்தையும் சமைச்சி வச்சிடு.." என்றாள்.

சந்தியா தன் கையிலிருந்த கத்தியையும் பாட்டியையும் மாறி மாறி பார்த்தாள். இவ்வளவு நாளாக வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்து விட்டவள் இது வரை கிச்சன் பக்கம் வந்ததே இல்லை. எப்போதும் சமையற்காரர்கள் இருக்கும் அந்த வீட்டில் அவள் இதுவரை தண்ணீரை கூட சூடு பண்ணியது இல்லை. எனக்கு எல்லாம் தெரியும் என்று அனைவரிடமும் வெட்டி பேச்சு பேசியவளுக்கு இன்று இப்படி ஒரு விதி வந்து சேரும் என நினைக்கவேயில்லை.

இனியன் தன்னை தண்டிப்பது கூட ஒரு வகையில் சரி என நினைத்தவளுக்கு பாட்டி ஏன் இப்படி தன்னை சோதிக்கிறாள் என புரியாமல் நின்றாள்.

"பாட்டி எனக்கு சமைக்க தெரியாது.."

"எத்தனை வருசத்துக்கு இதே காரணத்தை சொல்லிட்டு இருக்க போற..? கல்யாணமான ஒரு பொண்ணுக்கு சமைக்க தெரியலன்னு யார்க்கிட்டயாவது சொன்னா சிரிப்பாங்க.. என் பேரனையே கட்டிக்கிட்டு இதே வீட்டுல நீ இருந்துட்டதால பரவாயில்ல.. இதே நீ வேற வீட்டுக்கு கல்யாணமாகி போயிருந்தா உன் வண்டவாளத்தை பார்த்து ஊரே சிரிச்சிருக்கும்.. இனியும் ஏமாத்திட்டு இருக்காம சமைச்சி பழக பாரு.. உன் மாமியாளுக்குதான் பூமி உடைஞ்சாலும் கவலை இல்ல.. வானம் உடைஞ்சாலும் வருத்தம் இல்ல.. மருமக எடுத்த பின்னாடியும் சமைக்க தெரியாம இருக்கா.. அவளை மாதிரி நீயும் இருக்காத.. நீ எப்படி சமைக்கணும்ன்னு மல்லி சொல்வா.. அவ சொல்றபடி கேட்டு செய்.." என்ற பொன்னி அங்கிருந்து வெளியே நடந்தாள்.

இவ்வளவு நாளும் கணவனுக்கு அடிமையென வாழ்ந்து விட்ட பொன்னிக்கு இந்த அதிகாரம் பிடித்திருந்தது. அந்த வீட்டில் தானே பெரியவள் என்ற எண்ணமும் தனது அதிகாரத்திற்கு அனைவரும் பணிந்து போகும் விதமும் அவளுக்கு பிடித்திருந்தது. ஐந்து வருடங்களாக சக்திக்கு மாமியாராக அதிகாரம் செய்தவள் இன்று மற்றொரு வாய்ப்பு கிடைத்ததும் சந்தியாவையும் அதிகாரம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

சந்தியாவை பரிதாபமாக பார்த்தாள் மல்லி.

"நான் என்ன பண்ணனும் அக்கா..?" அப்பாவியாக கேட்டவளுக்கு பாடம் எடுக்க தொடங்கினாள் மல்லி.

வெற்றி புன்னகையோடு ஹாலில் அமர்ந்திருந்தான் இனியன். அவன் அருகே வந்து அமர்ந்தாள் பொன்னி. தன்னருகே அமர்ந்தவளின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான் இனியன்.

அம்மா போடும் கோட்டில் நடந்து நல்ல பிள்ளையாக இருப்பதை விட பாட்டி தரும் அன்பில் மூழ்கிய செல்ல பிள்ளையாகவே இருக்க விரும்பினான் இனியன். ஐந்து வருட தொலைபேசி உரையாடல் இருவரையும் பாசத்தில் நெருக்கமாக்கி இருந்தது.

இனியனின் முகத்தில் சோகம் குடியேறியதை கண்ட பொன்னிக்கு மனம் துணுக்குற்றது.

"என்னப்பா ஆச்சி..? ஏன் சோகமா இருக்க..?" என்றாள் அவனின் தலையை வருடியபடி.

"எனக்கு மனசே சரி இல்ல பாட்டி.. சந்தியாவுக்கு என்னை பிடிக்கல.. நான் அவளோட அழகுக்கு தகுதி இல்லாதவன்னு சொல்லிட்டா.. அவளோட கால்தூசிக்கு கூட நான் சமம் கிடையாதுன்னு சொல்லிட்டா.. அனாதையா வளர்ந்தவனுக்கு இந்த வீட்டுடோட வாரிசா இருக்க தகுதி இல்லையாம்.." அவன் சொன்னதில் பொய் என்பதை ஒரு பங்கு கூட யாராலும் கண்டு பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு சோகம் நிறைந்த முகத்தோடு சொன்னான் அவன்.

பொன்னியின் பலவீனம் அனாதை என்ற வார்த்தைதான். தன் பேரன் அனாதையாக வளர்ந்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதற்காகவே சக்தியின் மீது வெறுப்பில் இருந்தாள். இப்போது சந்தியா தன் பேரனை இப்படி சொல்லி விட்டாள் என்ற செய்தி கேட்டதும் அவளுக்கு மனம் நொந்து போனது. அது கோபமாக உருவெடுத்தது. இனியனை தள்ளிவிட்டு எழ முயன்றவளை தடுத்தான் இனியன். பாட்டியின் முந்தானை புடவையை தன் முகத்தின் மீது போட்டுக் கொண்டான்.

"நீங்க அவகிட்ட ஏதும் கேட்காதிங்க பாட்டி.. நீங்க கேட்டாலும் அவ இல்லன்னுதான் சொல்வா.. ஆனா அவ சொன்ன எல்லாமே உண்மைதானே..? அவ அழகுல தேவதை.. நானோ கேவலமா இருக்கேன்.. அவ இந்த வீட்டோட வாரிசு.. நான் அனாதை.." என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் திணறுபவனை போல முகத்தை திருப்பிக் கொண்டான்.

பொன்னியின் மனம் பேரனுக்காக வருந்தியது. அவன் வார்த்தைகளால் சொன்னாலும் அந்த வார்த்தைகள் அவளுக்கு தந்த வலிகளும் கோபமும் மிகவும் அதிகமான ஒன்று.

"நான் இருக்கும் போது நீ இப்படி பேசலாமா ப்பா..? நீ என் குலத்தோட ஒரே வாரிசு.. அவ சொன்னான்னு நீ மனசு வருத்தப்பட்டா எனக்கும் மனசு வலிக்குதுப்பா.. அவளுக்கு நல்ல பாடமா நான் சொல்லி தரேன் நீ கவலைபடாத.. உன் அழகுக்கு ரம்பையும் ஊர்வசியும் பூமிக்கு வந்து காலடியில சரணடைவாங்க.. அப்படி இருக்கும்போது இவ சொல்றதை ஏன் காதுல வாங்கற நீ..? இவளுக்கு திமிர் அதிகம்.. இவ திமிரை நான் அடக்கி காட்டுறேன்.." என பொன்னி சபதம் போல சொன்னாள்.

இனியன் தன் முகத்தில் ஓடிய விஷம சிரிப்பை பாட்டி பார்க்காதது போல மறைத்துக் கொண்டான். அவன் எதிர்பார்த்தது போலவே பாட்டியின் கோபத்தை தூண்டி விட்டாயிற்று. இனி சந்தியா எப்படியெல்லாம் பாட்டியிடம் வாங்கி கட்ட போகிறாள் என்பதை நினைத்து மனம் மகிழ்ந்தான்.

'என்னையா பிடிக்கலன்னு சொன்ன..? மகளே இனிதான்டி உனக்கு கச்சேரியே..' என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE
COMMENT
FOLLOW
SHARE
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN