நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

71. உன் கை பிடித்த கண்ணாலன் நான்

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாட்கள் அதன் போக்கில் சென்றுக் கொண்டிருந்தன. ரேகாவின் அறிவுரைகள் தினமும் மணி கணக்கில் நீண்டன.

மைவிழியை ரேகாவின் பொறுப்பில் விட்டுவிட்டு கனடா கிளம்பிய அதியன் ஒரே வாரத்தில் மொத்தமாக திரும்பி வந்துவிட்டான். (அடுத்த கதையோட ஹீரோ இவர்தான்.. அதான் சொந்த நாட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டேன்.) விஷ்வாவும் அவனும் இணைந்து இங்கேயே புது பிஸ்னஸை ஆரம்பித்து விட்டனர்.

மைவிழி ரேகாவின் வீட்டிற்கு வந்த முதல் நாளே மைவிழியின் மொத்த குடும்பமும் அவளை தேடி வந்தது. அம்மா அவ்வளவாக பேசவில்லை. ஆனாலும் வயிற்றில் உள்ள குழந்தையை பற்றி நலம் விசாரித்தாள். இது என்ன பாச கணக்கு என மைவிழிக்கு புரியவில்லை. சில உறவுகள் விசித்திரம்தான். அதை குறை சொல்லி பயனில்லை என்பது மிக தாமதமாக புரிந்தது அவளுக்கு.

அவள் இப்படி தனியாக வந்து இருப்பதற்காக பாட்டி வழக்கம் போல குத்தி காட்டி திட்டினாள். ஆனால் சில திட்டுகளை எதிர்த்து பேசி நிறுத்த முடியாது. ஆனாலும் கூட அதை சகித்து கொள்வதால் ஏதும் குறைந்து விட போவதில்லை என்பதை புரிந்து கொண்டாள் அவள்.

அப்பா அவளை காணாமல் வருத்தப்பட்டதாக சொன்னார்.

சரண் அவ்வப்போது பார்க்க வந்து இரண்டடி தள்ளி நின்று நலம் விசாரித்தான்.

கதிரின் குடும்பம் தினமும் அவளை பார்க்க வந்தனர். "கதிரை துரத்தி விடுகிறோம். நீ வீட்டிற்கு வா.." என அவளை அழைத்தனர்.

ஆனால் மைவிழி ரேகாவோடே இருந்து கொள்வதாக சொல்லி விட்டாள்.

ருத்ரா தன்னிடம் இருந்த ரெக்கார்டை மைவிழியிடம் தந்து சென்றாள். அதை கேட்டதும் மைவிழிக்கு பாலா மீது கோபமும் கதிர் மேல் பரிதாபமும் வந்தது‌. இப்படி ஒருத்தியிடம் ஏமாந்து போனதற்கு இப்போதைய தண்டனை சரிதான் என எண்ணி இருந்து கொண்டாள்.

தினமும் யாராவது ஒருவர் ஆரஞ்சி மிட்டாயோடு அவளை பார்க்க வந்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் ரேகா மிட்டாயை பிடுங்கி வைத்து கொள்வாள். அவள் மிட்டாய் அதிகம் உண்ண கூடாது என்பது அவளின் உத்தரவு.

பிரசாத் தன் அண்ணன் செய்த தவறுக்கு ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டு விட்டான். பழைய நினைவுகளை மறக்க முடியா விட்டாலும் கூட அவனை புன்னகையோடு பார்க்க ஆரம்பித்தாள் அவள்.

அவள் வயிறு கொஞ்சமாக வளர்ந்து விட்டது.

கதிர் அம்மாவிடம் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டான். காதலென்று சாயம் பூசி தனது தவறுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டவனுக்கு அம்மாவின் தவறுக்கு நியாயம் வழங்கும் தகுதி இல்லை என்பதை புரிந்துக் கொண்டான். பாலாவின் கணவனுக்கு புகைப்படம் அனுப்பியது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் உணர்ந்தான்.

ஒருநாள் பாலாவை காண வந்தான் அவளின் கணவன். அவனை கண்டதும் பொய் சிரிப்பு சிரித்தவளை கண்டு கசந்த சிரிப்பு சிரித்தான் அவன்.

"உன் காதலும் பொய்.. நீ என்னோடு வாழ்ந்த வாழ்க்கையும் பொய். பிறகேன் பொய்யா சிரிக்கற..?" என அவன் கேட்க அவளின் முகம் கறுத்து போனது.

"நீ என்னை பொய்யா நேசிச்ச பாலா. ஆனா நான் உன்னை உண்மையா நேசிச்சேன். கதிர் எனக்கு போட்டோ அனுப்பும் முன்னாடியே உன்னை பத்தி எனக்கு முழுசா தெரியும். வாழ்க்கையில அதிகமா அடிப்பட்டவன் நான். அதனாலதான் நீ திருந்துவன்னு நினைச்சேன். ஆனா நீ கடைசி வரை திருந்தல. இந்த வீடு உனக்கு பிடிச்சிருக்குன்னு தெரியும். அதனாலதான் உனக்கு இதை தந்தேன். இப்பவும் நான் மாசாமாசம் பணம் தருவது கோர்ட்டுல சொன்னாங்களேன்னு இல்ல. உன் மேல நான் வச்சிருக்கற காதலால.. உனக்கு என்ன வேணுமோ அதை என்கிட்டயே கேளு பாலா.. ஆனா அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்காத.. உனக்கு பணம்தான் முக்கியம்ன்னா எவ்வளவு பணம் வேணாலும் நான் தரேன். என்னை விட நல்ல அழகான புருசன் வேணாலும் நானே தேடி கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.." என்றவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

பாலா முதல்முறையாக உண்மையாக அழுதாள். ஏன் அழுகை வந்தது என்பதை அவளால் உடனடியாக புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் தன் மீதும் தன் கேரக்டர் மீதும் மனசாட்சி வெட்கப்படும் அளவிற்கு ஏதோ தவறு உள்ளது என்பதை புரிந்து கொண்டாள்.

கதிர் தன்னை காதலிக்கவில்லை என சொன்னதை தாங்கிக்கொள்ள முடியாமல்தான் மைவிழியை கண்காணித்துக் கொண்டிருந்தாள் பாலா. அவள் கர்ப்பமாக இருப்பது தெரிந்து கொண்டவள் அன்றே அவள் வரும் முன் அவளது வீட்டிற்கு சென்றாள். எதேச்சையாக நிகழ்வது போல தனது முன்னால் காதலையும் பொய் கர்ப்பம் பற்றியும் அவளிடம் சொன்னாள். மைவிழி அந்த வீட்டை விட்டு சென்றது பாலாவுக்கு அதிக சந்தோசத்தை தந்தது. ஆனால் மைவிழி இல்லாமல் கதிர் பைத்தியக்காரன் போல மாறியதைதான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கதிர் தன்னை நேசிக்கவில்லை என்பதை அப்போதுதான் முழுதாக புரிந்துக் கொண்டாள் பாலா. அவனை தன் திசைக்கு திருப்ப அவளால் என்றுமே முடியாது என்பதை அறிந்துக் கொண்டவளுக்கு அன்றே பாதி மனம் வெட்டுப்பட்டு விட்டது. இன்று மீதியை கணவனும் வெட்டி சென்று விட்டான். கதிர் காதல் இல்லையென சொல்லி மனதை உடைத்தான். ஆனால் கணவனோ தன் காதலை சொல்லி மனதை உடைத்து விட்டான். தன் கணவனின் காதலுக்கு தான் தகுதி இல்லாதவள் என்பதை அவன் உணர்த்தி சென்று விட்டான். அதுவே அவளுக்கு மிக பெரிய தண்டனையாகி விட்டது.

ஒருநாள் மாலையில் வேலையிலிருந்து வீடு திரும்பினான் கதிர். அவன் வீட்டிற்குள் நுழையும் முன்பே மைவிழியின் சிரிப்பொலி அவனது காதுகளில் ஒலித்தது.

சிறு சந்தேகத்தோடு உள்ளே சென்றவன் மைவிழியும் அம்மாவும் ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டான்.

மைவிழி அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் அவன் ஏதும் சொல்லாமல் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான்.

மைவிழி குழப்பமாக அவன் சென்ற திசையை பார்த்தாள். அம்மா காப்பி போடுவதாக சொல்லி அங்கிருந்து எழுந்து சென்றாள்.

மைவிழி தயக்கத்தோடு தனது அறைக்குள் நுழைந்தாள். கதிர் தன் முகத்தை உள்ளங்கையில் புதைத்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான்.

மைவிழி தயக்கத்தோடு அவன் முன் வந்து நின்றாள்.

"ஏன் இப்படி இருக்க..? நான் வந்தது உனக்கு பிடிக்கலையா..?" என அவள் கேட்க சட்டென நிமிர்ந்து பார்த்தான் அவன்.

"ரொம்ப சந்தோசத்துல இருக்கேன் விழி. அதான் என்ன பண்றதுன்னு தெரியல.." என்றவன் குழப்பமாக சொல்ல அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

"ஒன்னும் பண்ணாத.. ஆரஞ்சி மிட்டாய் வாங்கி கொடு.." என அவள் கேட்கவும் எழுந்து சென்று அலமாரியை திறந்தவன் ஆரஞ்சி மிட்டாயோடு திரும்பி வந்தான்.

"இந்தா ஆரஞ்சி மிட்டாய்.." என அவளிடம் மிட்டாயை நீட்டினான்.

மைவிழி மிட்டாய் ஒன்றை சுவைக்க ஆரம்பித்த நேரத்தில் அவள் முன் தலையில் அணியும் கிளிப் ஒன்றை நீட்டினான். அன்று பொருட்காட்சியில் இவள் கையில் எடுத்த அதே கிளிப் இது.

"அன்னைக்கே வாங்கிட்டேன் நான். ஆனா உன்கிட்ட கொடுத்தா திட்டுவியோன்னு கொடுக்கல.." என்றவன் தயங்கி தயங்கி அவளை பார்த்தான்.

"என்ன அப்படி பார்க்கற..?" என கேட்டாள் அவள்.

"உனக்கு என் மேல கோபம் போயிடுச்சா..?"

மைவிழி பெருமூச்சோடு தலையசைத்தாள். "கோபம் இல்ல.. வருத்தம். இது எப்பவும் மறையாது. காலம் முழுக்க அந்த பொண்ணு காட்டிய போட்டோ என் கண்ணுலயே இருக்கும். நான் எப்போதாவது சோகமா இருந்தேன்னா அப்ப புரிஞ்சிக்க. அதுக்கு முதல் காரணம் அந்த போட்டோதான்னு.."

கதிருக்கு இது சிறு சறுக்கல்தான். வாழ்வில் சரியென்று நினைத்து செய்யும் விசயங்கள் சில நேரங்களில் மிக பெரிய தவறாகி விட கூடும் என்பதை நன்கு அறிந்துக் கொண்டான் கதிர்.

"உன்னை சோகமா இருக்க விடாம பார்த்துப்பேன் நான்.." என்றான் அவன் தன் காதல் மீது கொண்ட நம்பிக்கையுடன்.

மைவிழி தன் வாழ்க்கையில் புது நம்பிக்கை கொண்டவளாக அவன் நெஞ்சில் சாய்ந்தாள். என்றோ அவன் செய்தது வாழ்க்கை முழுக்க தன் நெஞ்சில் உறுத்தி கொண்டிருக்கும் என்பதை அறிவாள் மைவிழி. அந்த உறுத்தலை அவன் முன் வெளிக்காட்டாமல் வாழ்வதுதான் தன் வாழ்வின் மிக பெரிய சவால் என்பது அவளுக்கு புரிந்தது.

கதிரும் தான் சொல்லியது போலவே அவளை சோகம் தாக்காமல் பார்த்துக் கொண்டான்.

அவள் ஆசையோடு வைத்த செடிகள் அத்தனையும் பூக்கள் பூத்தன. அதோடு அவள் மனமும் சற்று நிம்மதியாக இருந்தது.

சில வருடங்களுக்கு பிறகு

அதியன் மைவிழியிடம் சிறு உதவி கேட்டிருந்தான். அவனது வேலைக்கு சம்பந்தமான சில பொருட்களை தேர்ந்தெடுக்க இவளிடம் கேட்டிருந்தான் அவன்.

மைவிழியும் அவனோடு இணைந்து கடைக்கு சென்றிருந்தாள். வாங்க வேண்டியதை வாங்கி முடித்த நேரத்தில் பல மணி நேரங்கள் கடந்து சென்று விட்டது.

அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவர்களின் வீட்டின் முன் அவளை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து சென்றான் அதியன்.

பிற்பகல் நேரத்தில் வீடு அமைதியாக இருப்பதை கண்டு ஆச்சரியத்தோடு உள்ளே நுழைந்தாள் மைவிழி.

டிவி சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. டிவியின் முன்னால் தூங்கி கொண்டிருந்தான் கதிர். அவனின் நெஞ்சில் அவர்களது ஒரு வயது குழந்தை கவிழ்ந்து படுத்து உறங்கி கொண்டிருந்தது. அவர்களை சுற்றிலும் ஏகப்பட்ட பொம்மைகள் இறைந்து கிடந்தது.

பொம்மைகளை கண்டதும் மைவிழிக்கு சலிப்பாக இருந்தது. தினமும் பொம்மைகளை எடுத்து அடுக்கி வைப்பதே அவளுக்கு மிக பெரிய வேலையாக இருந்தது.

"கதிர்.." மைவிழி உரத்த குரலில் அழைக்கவும் அவனின் கரம் அனிச்சையாக குழந்தையை சுற்றி வளைத்தது. கண்கள் விழித்து பார்த்தவன் மைவிழியை கண்டதும் எழுந்து அமர்ந்தான்.

குழந்தையை ஸோபாவின் மீது கிடத்தியவன் முகத்தை துடைத்தபடி எழுந்து நின்றான்.

"எப்ப வந்த..?" என்றான் தூக்க கலக்கம் முழுதாய் கலையாமல்.

"இப்பதான்.." என்றவள் அவனின் நெஞ்சில் இருந்த ஈரத்தை சுட்டி காட்டினாள்.

"உன் பொண்ணு ஜொல்லு விட்டிருக்கா.." என்றாள்.

அவன் குழந்தையை அன்போடு திரும்பி பார்த்தான். அவர்களின் செல்ல மகள் அவள். அவள் பிறந்தபோது மைவிழியை விட அதிகம் பதறியவன் கதிர்தான். தன் மகளை அவன் கையில் சுமந்த நொடி அவனே புதிதாய் பிறந்த சந்தோசத்தை அடைந்தான்.

"இதே நான் ஈரம் பண்ண போது என்னை பழிச்ச நீ. ஆனா இன்னைக்கு இதை ரசிக்கற.. இதான் வித்தியாசம். நீ பெத்த குழந்தைன்னா உசத்தி. யாரோ பெத்த குழந்தை நான் தாழ்த்தி.." என அவள் சொல்ல அவன் மொத்த தூக்கமும் கலைந்து போனது.

"நீ தாழ்த்தி கிடையாதும்மா.. நான் அப்படி சொல்லவும் இல்ல.." என ஆரம்பித்தவன் முன்னால் கை காட்டி நிறுத்தினாள் மைவிழி.

"அப்படின்னா இதுக்கு மேல அப்படி சொல்வியோ..?" என குறுக்கு கேள்வி கேட்டாள் மைவிழி.

அவளோடு வார்த்தை போரில் வெல்ல தன்னால் முடியாது என்பதை புரிந்து கொண்டான் அவன்.

"ஏன் சொல்லணுமா..?" என கேட்டவனை புரியாமல் பார்த்தாள் அவள். அவன் குறும்பு பார்வையோடு அவளை நோக்கி நடந்தான். அவனது பார்வை ஒன்றே அவளை நிலை தடுமாற செய்தது‌.

மைவிழி தீடீரென தன்னை தாக்கிய நாணத்தோடு பின்னால் நகர்ந்தாள்.

"தூங்கி எழுந்த முகத்தோடு என் பக்கத்துல வராத.." என சொன்னவளை சட்டென தன் பக்கம் இழுத்து அணைத்து கொண்டவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்.

"உன் ஒவ்வொரு செய்கையையும் நான் ரசிப்பேனே தவிர கிண்டல் செய்ய மாட்டேன். என் பொண்ணு எனக்கு உசத்திதான். ஆனா நீ தாழ்த்தின்னு சொல்ல என்னால முடியாது. ஏனா தன்னை தானே தாழ்த்தின்னு யாரும் சொல்ல மாட்டாங்க.." என சொன்னவனை குழப்பமாக நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

"ஏனா நீயும் நானும் ஒன்னுதான்.. உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சி உசத்தின்னோ தாழ்த்தின்னோ என்னால சொல்ல முடியாது.." என்றவன் அவளின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்தான்.

அவங்க என்னத்தையோ காதல் வசனம் பேசிட்டு இருக்கட்டும்.. வாங்க நாம அடுத்த கதைக்கு போகலாம்..

முடிவுற்றது..

எனது அன்பு நட்புள்ளங்களுக்காக...

இந்த கதை எப்படி இருந்துச்சின்னு உங்களோட மேலான கருத்தை சொல்லுங்க நட்புள்ளங்களே. கதை எந்த இடத்துலயாவது சொதப்பி இருந்தாலோ இல்ல கரெக்டா வந்திருந்தாலோ சொல்லிட்டு போங்க..

கதையோடு இணைந்து இருந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றிகள். வோட் பண்ணவங்களுக்கும் கமெண்ட் பண்ணவங்களுக்கும் ரொம்ப நன்றிகள்.


சைலண்ட் ரீடர்ஸ் உங்க எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

புது கதையில் ஹீரோ அதியன். நாயகி செங்கா. நாயகி எந்தன் நேசம் கதையில் வந்த ஒரு சின்ன கேரக்டர். காதல் சர்வாதிகாரம் முடிஞ்சதும் அதியன் கதை ஆரம்பிக்க போறேன் நட்புக்களே..

personal bio:

பெயர்; செவ்வந்தி (அ) செவ்வந்தி துரை
இதுவரை எட்டு கதைகள் புத்தகமா வந்திருக்கு.. ஆன்லைன்ல தனியா இரண்டு கதைகள் முடிச்சி இருக்கேன்.. இப்ப இரண்டு கதைகள் ஆன் கோயிங்க் நாவல்களா போயிட்டு இருக்கு.. காதல் சர்வாதிகாரம் இங்கே இருக்கு.. வெதின்ஸா நகரத்து இராஜகுமாரி இதுல இந்த தளத்துல இருக்காது.. மத்த மூன்று நாவல்களும் இங்கே இருக்கு..

நான் ஒரு ப்ளாக்கரும் கூட.. sevanthidurai.blogspot.com என்ற தளத்திலும் என் கதைகளையும் கவிதைகளையும் நீங்க படிக்கலாம்

சோசியல் மீடியாஸ்ல செவ்வந்தி துரைன்னு தேடினா என் ஐடி இருக்கும்..

நன்றிகளுடன் செவ்வந்தி துரை
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top