மண்ணில் தோன்றிய வைரம் 6

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரு வாரங்களுக்கு பிறகு நிஷாவின் திருமணத்திற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தான் அஸ்வின்.

அதிகாலை ஐந்து மணிக்கு பிரம்மமுகூர்த்த வேளையில் திருமணம் என்பதால் அதிகாலை இரண்டு மணிக்கு பயணப்பட வேண்டும் என்று முடிவானது. கிளம்பும் நேரம் முடிவானதும் சித்ரா சாருவை தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு கேட்டுக்கொண்டாள். அதனை மறுத்த சாருவிடம்

“இங்க பாரு சாருமா.. நீங்க ஏர்லி மார்னிங் கிளம்புறீங்க.. அந்த நேரத்திலே நீ உங்க வீட்டுல இருந்து கிளம்பி வருவது அவ்வளவு பாதுகாப்பில்லை. அதோடு உன்னோட வீடும் இங்க இருந்து ரொம்ப தூரம்.. அதனால நீ கல்யாணத்திற்கு முதல் நாள் டிரைவரோடு இங்க வந்துரு. இங்க இருந்து கிளம்பி போகலாம். அப்போ எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்” என்று கூற இல்லை என்று சாரு மறுக்கும் முன்பு சித்ரா

“இந்த அம்மா சொன்னால் கேட்பியா மாட்டியா??” என்று கேட்க மறுபேச்சு பேசாது தன் தலையை டங்கு டங்கு என்று ஆட்டினாள் சாரு. இவ்வாறு அங்கு அவள் தங்குவது முடிவானதும் திருமணத்திற்கு முதல் நாள் வருகை தந்த சாருவிற்கு அன்றும் பிரம்மாண்ட வரவேற்புடன் தடல்புடலான விருந்துபசாரம்.. இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அஸ்வினின் கண்களுக்கு தெரிந்தது சாருவின் மகிழ்ச்சி மட்டுமே. எப்போதும் எதிரிலிருப்பவரின் கண்ணை பார்த்து பேசும் வழக்கமுடைய அஸ்வினிற்கு சாருவைவிடம் பேசும் சந்தர்ப்பத்தில் அவள் கண்கள் ஏதோ ஒரு சோகத்தை தத்தெடுத்து உயிர்ப்பற்று இருப்பதாய் தோன்றும். பல நாட்கள் அது தன்பிரம்மையோ என்று நினைத்திருந்தவன் சாரு தன் வீட்டிற்கு வந்து தன் குடும்பத்தாருடன் உறவாடுகையில் அவ்வுணர்ச்சி அவள் கண்களில் இருந்து விடைபெற்று கண்கள் உயிர்ப்படைந்ததாய் தோன்றியது. அந்த உயிர்ப்பு அவனது வீட்டில் இருக்கும்போது மட்டுமே சாருவின் கண்களில் இருப்பதையும் அவன் கவனிக்க தவறவில்லை. அந்த உயிர்ப்பையே அவன் மனம் விரும்புவதையும் அவன் மறுக்கவில்லை. இன்றும் அதே மலர்ச்சியுடன் இருந்தவளை காண்கையில் அவன் மனம் பரவசமடைந்தது.ஆனால் அவன் அதற்கான காரணத்தை அறியமுயலவில்லை. காரணம் ஒவ்வொரு முறையும் அவனது மனம் சாருவின் மகிழ்ச்சியில் பரவசமடையும் போது காரணம் அறிய முயன்ற மனமோ அங்கு இங்கு முரண்பட்டு கடைசியில் மனக்குழப்பத்தையே பதிலாக தந்தது. அதனால் அவன் அந்த விஷ பரீட்சையை செய்ய முயலவில்லை. அதற்கு பதில் தன் மனதினை அதன் போக்கிலே விட்டுவிட்டான். ஆனால் அந்த பரவசத்திற்கான காரணத்தை தான் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை.

தயாராகி ஹாலிற்கு வந்த அஸ்வின் சாருவிற்காக காத்திருக்கலானான். நேரமாகுவதை உணர்ந்து தன் சித்தியை அழைத்த அஸ்வின் அங்கு தன் சித்தி மற்றும் கவியுடன் வந்த சாருவை பார்த்து பேச்சின்றி நின்றான்.

வாடமல்லி பூ நிற சேலையில் பொன்னிற சரிகையுடைய பட்டு புடவையில் அழகுப்பதுமையாய் நின்றவளை பார்த்தவன் மூச்சுவிட மறந்து நின்றது புதுமையன்றே. சேலைக்கேற்ற அடுக்கு தட்டு ஜிமிக்கிகள் காதின் துளையினை கெட்டியாய் பிடித்து ஊஞ்சலாட அந்த சங்கு கழுத்தின் அழகினை மறைக்க விரும்பாத தங்க ஆரம் நெஞ்சுக்குழி வரை நீண்டுத்தொங்க, நானும் உங்கள் அழகு படுத்தும் சேவையில் என் பங்கை ஆற்றுவேன் என்ற ரீதியில் கோல்டும் பிங்கும் கலந்த அழகு படுத்தாமலே அவளது கைகளை அரணிட்டதால் ஒலி எழுப்பி அழகாய் மாறிய அந்த வளையல்களும் என்று ஆபரணங்கள் அவளது தோற்றத்தை ஒருபுறம் மெருகூட்ட அவளது அந்த வட்ட வடிவ வதனத்தில் விழிகள் கறுப்பு மையால் மைதீட்டப்பட்டு பார்ப்பவரை வா என்று அழைக்கும் ரீதியில் இருக்க மூடித்திறந்த இமைகளோ இளம் நீலமும் பொன்னிறமும் கலந்த அதிக ஒப்பனை என்று எண்ணத்தோன்றாத ரீதியில் கைவண்ணம் செய்யப்பட்டிருக்க இது கடவுளின் படைப்பா இல்லை மனிதனால் கற்பனையில் செதுக்கப்படும் சிலையா என்று அசத்திய வேளையில் அரிவாள் முனையாய் வளைந்திருந்த புருவங்கள் இரண்டிற்குமிடையே பிங்க் நிற பொட்டு மையப்புள்ளியாய் வீற்றிருந்து வீட்டின் மேலுள்ள சீலிங்கினை போல் குங்குமம் ஒற்றைக்கீற்றாய் பரந்திருந்திருக்க ஒப்பனை என்று பெயரில் அவளது அசாத்திய அழகு இன்னும் மெருகேற்றப்பட்டிருந்தது. நெற்றியின் இருமாங்கிலும் நீண்டுக்கொண்டிருந்த கூந்தல் காதின் பின்னால் ஹேர் பின்னினால் பொருத்தியிருக்க மீதி கூந்தல் லேசாகப் பின்னப்பட்டு தோளின் மீது படரவிடப்பட்டிருந்தது. இவ்வாறு அழகின் மொத்த உருவமாய் இருந்தவளை வாசனைப்பெற செய்யவென்று நெருக்கமாய் தொடுக்கப்பட்ட அந்த காட்டுமல்லிகை சரத்தினை சாருவின் தலையில் சித்ரா வைத்துவிட இவ்வளவு நேரம் ஏதோ குறைகின்றதே என்று குறைப்பட்ட அஸ்வினின் மனது பரவசமடைந்தது.அந்த மல்லிகைப்பூ சரத்தை எடுத்து சாரு முன்னாலிட அஸ்வினின் மனமோ அந்த செயலில் அவளிடம் மொத்தமாக சரணாகதியடைந்தது.
இப்படி அணுவணுவாக அவளிடம் சரணாகதியடையத் தொடங்கிய அஸ்வினை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது கவியின் குரல்

“சாரு சான்சே இல்லை. யூ ஆர் லுக்கிங் கார்ஜியர்ஸ்” என்று கூற அதை கேட்ட சாரு வாய் வார்த்தையாக

“தாங்கியூ” என்று கூறினாலும் மனதினுள் “ஊரில் உள்ளவங்க எல்லாம் சொல்றாங்க.. சொல்லவேண்டியது அப்படியே கல்லுமாதிரி இருக்குது.. இதுக்கெல்லாம் என்னைக்கு தான் பல்ப் பத்த போகுதோ தெரியலை. சாரு உன்நிலைமை ரொம்ப கஷ்டம் தான் போல” என்று மைண்ட் வாயிஸில் அஸ்வினை வருத்தெடுத்துக்கொண்டிருந்த சாருவிற்கு அஸ்வின் தன்னை அணுவணுவாய் சைட் அடித்த விஷயம் தெரிந்தால் என்ன செய்வாள்??

“ஆமா சாரு அப்படியே மகாலஷ்மி மாதிரியே இருக்க.. என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு. உன்னை கட்டிக்கப்போறவன் கொடுத்து வைத்தவன்” என்று சித்ரா கூற

அஸ்வினின் மனமோ
“அந்த கொடுத்து வைத்தவன் ஏன் நீயாக இருக்ககூடாது?” என்று கேள்வி கேட்க அந்த கேள்வியில் அதிர்ந்த அஸ்வின் தன் மனவோட்டத்தை கட்டுப்படுத்தும் வகையறியாது தடுமாற சாருவின் அந்த மென்னகை அவனை இன்னும் தடுமாறச்செய்தது.

அவனது முகபாவங்களை கவனித்த சித்ரா
“ஏன் கண்ணா ஒரு மாதிரி இருக்க?? உடம்பிற்கு ஏதும் பண்ணுதா” என்று கேட்க அவரை சமாளிக்கும் முகமாக

“இல்லை சித்தி நைட் தூங்க லேட் ஆகிரிச்சி.. அதான் கொஞ்சம் டயர்டா இருக்க.. கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்” என்று சமாளிக்க

“சரி பா இரண்டு பேரும் இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்.. இல்லைனா முகூர்த்தத்திற்கு போய் சேரமுடியாது” என்று கிளப்ப அஸ்வின் சித்ராவிடம்

“சித்தி வருணிடம் சொல்லிட்டேன். விடிந்ததும் இங்க வந்துரேன்னு சொல்லிட்டான். ஏதும் தேவைனா அவனிடம் சொல்லுங்க. நான் எப்படியும் ஈவினிங் வந்திடுவேன்” என்று கூறிவிட்டு சாருவை அழைத்துக்கொண்டு தன் வீட்டாரிடம் விடைபெற்றான் அஸ்வின்.

அந்த விடைபெறும் கேப்பில் எப்போதும் போல் அன்றும் அஸ்வினை சைட் அடித்தாள் சாரு. வான்நீல நிற புல்ஸ்லீவ் சர்ட்டும் பட்டுவேட்டி சட்டையுமாய் இருந்த அஸ்வின் படு ஹேன்சமாக இருந்தான்.அந்த புல்ஸ்லீவ் சேர்ட் ஸ்லிம்பிட்டாகையால் அது அவனது உடற்கட்டிற்கு அம்சமாய் பொருந்தியிருந்தது. எப்பொழுதும் போல் அன்றும் ஜெல்லின் உதவியுடன் வாரப்பட்டிருந்த அவனது தலை முடி இன்று சற்று வேறுவிதமாக சீவப்பட்டு சில முடிக்கற்றைகள் அவனது முன்னுச்சியை முற்றுகையிட்டிருந்தது. அது அவனை இன்னும் அழகாய் காட்ட அவன் கையசைத்து பேசும் போது வெளியில் வந்து தன் இருப்பை உணர்த்திய அந்த மெல்லிய தங்க சங்கிலி அவனது கம்பீரத்திற்கு இன்னும் பெருமை சேர்த்தது. அடிக்கடி மணிக்கட்டினை நாடிய அந்த ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தினை அவன் சரிசெய்த முறையும் அவன் சேர்ட்டினை மடித்துவிட்ட தோரணையும் சாருவை அவன் மீது மேலும் மேலும் மையல் கொள்ள செய்தது. இவ்வாறு இருவரும் ஒருவர் மனதை மற்றொருவர் புரிந்து கொள்ளாது சைட் அடிப்பதை சரிவர செய்தனர். வீட்டு வாசலில் நின்ற காரினுள் ஏற சாருவிற்காக கார் கதவினை அஸ்வின் திறந்துவிட அதனை கண்ட சாருவின் மனம் ஏகத்திற்கும் துள்ளியது. தன் மனதில் கொண்டாட்டத்தை முகத்தில் காட்டாது காரினுள் அமர்ந்தாள் சாரு. ஆனால் பாவம் அவள் அறியாத ஒன்று மூன்று வருட காலம் அவுஸ்ரேலியாவில் வாசம் செய்த அஸ்வினிற்கு இதெல்லாம் வழமையாக செயல் என்று.. காதல் கொண்ட மனம் காதலனின் வழமையான செயலை கூட தனக்கானது என்று எண்ணுவதில் வியப்பேதும்ஸஇல்லையே... சாரு காரில் ஏறியதும் கதவை சாற்றிவிட்டு முன் சீட்டில் அமர்ந்த அஸ்வின் தன் வீட்டாரிற்கு கையாட்டிவிட்டு டிரைவரிடம் காரை கிளப்ப சொல்ல காரும் கிளம்பியது....

இரண்டு மணி நேர பயணத்தின் பின் திருமணம் நடைபெறும் கோயிலின் வாசலில் நின்றது சாருவ் கார். சாரு மற்றும் அஸ்வின் காரிலிருந்து இறங்க சாருவின் தோழி மித்ரா வந்து சாருவை கோயிலினுள் அழைத்து செல்ல அஸ்வின் காரினருகே இருப்பதை கண்ட யாதவ் அவனருகே வந்தான். அஸ்வினை ஆரத்தழுவிய யாதவ் “மச்சி எப்படிடா இருக்க?? பார்த்து எவ்வளோ நாளாச்சி??? “

“நான் நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க ?? “

“ நீ வருவனு நான் நினைக்கவே இல்லை.. நீ காலேஜ் முடிந்தவுடனே அவுஸ்ரேலியா பறந்திட்ட.. அதற்கு பின் இன்னைக்கு தான் பார்க்கிறேன். ஏன்டா நாடுவிட்டு நாடு போனா எங்களை மறந்திருவீங்களாடா?”

“ஹாஹா அப்படி எல்லாம் இல்லை... அப்படியே பிசி ஆகிட்டேன் அதான் எல்லோருடைய காண்டாக்கும் விட்டுப் போய்விட்டது.”

“சும்மா எடுத்துவிடாத.. இன்னும் உன்கூடவே சுத்திட்டு இருப்பானே அந்த வருண் கூட கண்டாக்கில் தானே இருக்க..அவன் வரட்டும் அவனுக்கு இருக்கு... பயபுள்ள வாட்சப் குரூப்பில் கூட உன்னை பற்றி மூச்சுவிடவில்லை”

“இல்லைடா வருண் ஒன்றும் பண்ணலடா... அவனை நான் இங்கே வருவதற்கு முன்தான் கான்டக் பண்ணேன். அதுக்கே அவன் என் கன்னாபின்னானு திட்டிட்டான்.. நீ இதை கேட்டா மறுபடியும் எனக்கு தான் டோஸ் விழும்... மீ பாவம்..” என்று அப்பாவியாய் அஸ்வின் கூற அவனது பாவனையில் சிரித்த யாதவ்

“அவன் ஒருத்தனுக்காவது பயப்படுறியே..அது போதும். சரி வருண் வரவில்லையா??” என்று வருணை பற்றி விசாரிக்க

“இல்லடா.. அவன் ரிசப்ஷனுக்கு வரேனு சொன்னான். நானும் சரினு டிரைவர் வேலை பார்க்க சொல்லிட்டு வந்திருக்கேன்” என்று அஸ்வின் கூற அவனது பதிலிற்கான அர்த்தம் புரியாத யாதவ் அவனை பார்க்க அஸ்வின் தன் சித்தப்பாவின் நிலையையும் அதற்காக வருணை துணைக்கு நிறுத்திவிட்டு வந்ததையும் கூறினான். அதன்பின் யாதவ் கிருஷ்ணன் பற்றி விசாரித்து முடியும் வேளையில் அவனது மற்ற நண்பர் கூட்டம் அவ்விடத்திற்கு வந்து அவனை மணமகன் அறைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மணமகன் அறையினுள் நுழைந்த நண்பர் பட்டாளத்தை வரவேற்றான் ராக்கேஷ்.

“வாங்கடா.. உங்களை ஒரு இடத்தில் சேர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு” என்று ராக்கேஷ் கூற அக்கூட்டத்தில் இருந்த குணா

“இப்போ சேர்த்ததற்காக கஷ்டப்பட போற” என்று கூற அக்கூட்டமே கலகலத்தது.

“ஏன்டா சொல்ல மாட்ட ஷாலுவை கழட்டிவிட்டுட்டு வந்த நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலேயும் பேசுவ” என்று கூற ஷாலு என்ற பெயரை கேட்டதும் பம்மிய குணா

“ஏன்டா நான் ஒரு நாள் சந்தோஷமா இருப்பது உனக்கு பிடிக்கலையா?? அடிக்கடி அவ பெயரை சொல்லி ஏன் பீதியை கிளப்புற” என்று குணா அலற

“ஆமாடா குணா ஷாலுவினால் தான் நான் தப்பித்தேன். இல்லனா என் பொண்டாட்டியும் வந்து என்னை அவளுக்கும் அவ பிள்ளைக்கும் சேவகம் பண்ண வைத்திருப்பாள்”என்று ரவி தன் வீட்டு சமாச்சாரங்களை எடுத்துரைக்க என்று அவ்வறையே கேலியும் கிண்டலுமாய் இருந்தது.

“போதும்டா டேய். மாப்பிள்ளையை பார்க்க வந்தீங்களா இல்லாட்டி கல்யாணமே வேணாம்.இப்படியே எந்திரிச்சி ஓடிருங்கனு சொல்ல வந்தீங்களா “ என்று ராக்கேஷ் எகிற

“டேய் ராக்கேஷ் இதுவும் நல்லா ஐடியாவா தான் இருக்கு என்றுவிட்டு மாப்பிள்ளை ஆனந்திடம் வந்த குணா

“பிரதர் சூப்பர் சான்ஸ் கிடைத்திருக்கு. இப்படியே பின்வாசல் கதவு வழியா மண்டபத்தை விட்டு ஓடிடுங்க.. என் கல்யாணத்தப்போ இப்படி யாராவது சொல்லியிருந்தாங்கனா அன்னைக்கே இந்த ஊரை விட்டே ஓடியிருப்பேன். இந்த பய ரவி கூட அப்போ ஒரு வார்த்தை சொல்லியிருந்தானா நான் இன்னேரம் ஜாலியா கல்யாணத்திற்கு வந்த பொண்ணுங்களை சைட் அடிச்சிக்கிட்டு பேச்சுலராகவே இருந்திருப்பேன்.... இப்படி எல்லோரும் சேர்ந்து குழியில தள்ளி விட்டுட்டாய்ங்க. ஆனா இந்த கொடுமை உங்களுக்கு வராமல் நான் காப்பாற்றுகின்றேன்.. “ என்று ஆனந்திடம் சீரியஸாக கூற அவனோ

“ப்ரோ நான் இங்க இருந்து எங்க ஓடினாலும் அபி என்னை தேடி வந்து நல்லா மொத்திட்டு கல்யாணம் பண்ணிக்கோனு தாலியை நீட்டுவா.. எப்படியும் எனக்கு சங்கு கன்பார்ம் ..சோ அப்படி தர்ம அடி வாங்கி தாலி கட்டுவதை விட நான் இப்போவே மேடையில் சமத்தாம போய் இருந்துவிட்டால் எனக்கு அடி மிச்சம் “ என்று ஒரு மாடிலேஷனுடன் ஆனந் கூற அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

“என்ன பிரதர் பலமான அனுபவம் இருக்கு போல இருக்கே “ என்று குணா ஓட்ட அங்கு மீண்டும் ஒரு சிரிப்பலை எழுந்தது. இப்படி ஒருவர் மாறி ஒருவர் மாப்பிள்ளை ஆனந்தை வம்பிழுத்துக் கொண்டிருக்க மாப்பிள்ளையை ஐயர் அழைக்கிறார் என்ற குரலுக்கிணங்க அனைவரும் அறையை விட்டு வெளியேறினர். வெளியேறிய நண்பர் பட்டாளம் மணமேடைக்கு முன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து தம் வம்படிகளை தொடர்ந்த வண்ணம் இருந்தது. அப்போது அஸ்வினின் போன் ஒலிக்க அதனை எடுத்து பார்த்த அஸ்வின் ஏதோ மெசேஜ் அலர்ட் என்று எண்ணி இன்பாக்ஸை திறந்து பார்க்க அதில்

“ஓய் ரௌடி பேபி இன்னைக்கு ரொம்ப ஹேன்சமா இருக்கடா.. அப்படியே நச்சினு ஒன்னு குடுக்கலாம் போல இருக்கு” என்றிருக்க அஸ்வினிற்கு யார்டா இது என்று இருக்க

“ஹூ ஸ் திஸ்” என்று பதில் அனுப்பிவிட்டு போனை சைலண்ட் மோடில் போட்டு விட்டான். அந்த மெசேஜை அனுப்பிய சாருவோ அவனை மேடைக்கு பின் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்…

போனை சைலண்டில் போட்டவன் வைப்ரேட் மோடை மாற்ற மறந்ததால் மீண்டும் போன் அதிர்ந்தது. மேசேஜ் இன்பாக்ஸை திறந்து பார்த்தவன்
“ஓய் பேபி உன்னை மூன்று வருடத்திற்கு பிறகு பார்க்கிறேன் டா.. காலேஜ் டைமிலே சும்மா தாறு மாறா இருப்ப.. இப்போ வெளிநாடெல்லாம் போய்ட்டு வந்து சும்மா போலிவுட் ஹீரோ மாதிரி அட்டகாசமா இருக்கடா.. சும்மாவே நான் பிளாட்டு.. இப்போ உன்னை இந்த வேஷ்டி சட்டையில் பார்த்த பிறகு டோட்டல் பிளாட்டு... எப்படிடா இவ்வளவு ஸ்மாட்டா இருக்க??” என்று இருக்க கடுப்பான அஸ்வின் சுற்றும் முற்றும் யார்டா அது என்று தேட பதிலோ பூச்சியம் தான். இதற்கு இப்போதே முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய அஸ்வின் தன் மொபைலுடன் மண்டபத்தை விட்டு வெளியே வந்த அஸ்வின் அவ்விலக்கத்திற்கு அழைக்க எதிர்ப்பக்கம் எடுக்கப்பட்ட அடுத்த நொடி

“ஹலோ யாருங்க நீங்க... இப்படி தப்பு தப்பா மெசேஜ் அனுப்பிக்கிட்டு இருக்கீங்க.. ஏதும் பேசனும்னா நேரடியா வந்து பேசுங்க.. இப்படி எல்லாமா மெசேஜ் பண்ணி கடுப்படிக்காதிங்க...” என்று பொறிய ஆரம்பிக்க எதிர்ப்புறம் வாய்ஸ் சேன்ஜர் ஆப் மூலம் பேச ஆரம்பித்தாள் சாரு.

“என்ன ரௌடி பேபி இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க?? நான் உங்ககிட்ட நேரடியா வந்து பேசவில்லைனு கோபமா?? நான் பேச வரும்போது எல்லாம் நீங்க என்னை கண்டுக்காம போய்ட்டீங்க. அதுனால் தான் இப்போ போனில் பேசுறேன். என்னை கண்டுக்காம போனதற்கு இப்போ உங்களுக்கு ஒரு பனிஷ்மண்ட்... பனிஷ்மண்ட் என்னனா நான் யாருனு நீங்க தான் கண்டுபிடிக்கனும். அதுவரைக்கும் இப்படி போன் பண்ணி லவ் டாச்சர் குடுத்திட்டு தான் இருப்பேன். ஓகே பாய் தாலி கட்டுற நேரம் நெருங்கிருச்சி. நைட் பேசுறேன்” என்று ஒரு முத்தத்துடன் அவ்வழைப்பு துண்டிக்கப்பட்டது. அஸ்வினிக்கு சிறிது நேரம் ஏதும் விளங்கவில்லை. போனில் பேசிய பெண் கடைசியாக கொடுத்த முத்தமே அவனது சித்தத்தை கலங்க வைத்தது. என்னடா இது சோதனை என்று அஸ்வினின் மனம் சஞ்சலமடைந்தது. ஒருபுறம் சாருவின் புறம் சாயும் மனது மறுபுறம் இரு நிமிடங்களே அவனுடன் உரையாடிய அப் பெண்ணின் பேச்சில் சிக்கித்தவித்தது...இவ்வாறு ஊஞ்சலாடிய அவனது மனம் மண்டபத்தினுள் ஒளித்த மேளச்சத்தத்தில் தான் யோசிப்பதற்கு இடைவெளி விடுமாறு பணிக்க இச்சிக்கலை தற்காலிகமாக கிடப்பில் போட்டுவிட்டு மண்டபத்தினுள் சென்றான் அஸ்வின்.

அஸ்வின் மண்டபத்தில் நுழைந்த போது அங்கு அனைவருக்கும் மணமக்களை ஆசிர்வதிப்பதற்கான அட்சதை வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அட்சதை வழங்கும் பெண்ணிடம் அட்சதையை பெற்றுக்கொண்டு தன் நண்பர்கள் அமர்ந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டு திருமணத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அப்போது மணப்பெண் நிஷா அருகே நின்றுகொண்டிருந்த சாரு அவனது கண்களுக்கு தென்பட்டாள்.

மணப்பெண் அலங்காரம் இல்லாமலே ஜொலித்துக் கொண்டிருந்த சாருவை கண்டதும் இதுவரை நேரம் குழம்பித்தவித்த மனம் ஒரு மோனநிலைக்குள் சிக்குற காலையில் அவன் விட்ட சைட் அடிக்கும் வேளையை மறுபடியும் தொடங்கினான் அஸ்வின். அவளை சைட் அடிப்பதோடு நில்லாது அவனது கற்பனை அவர்களது கல்யாணம் என்ற எல்லைக்குள் சென்றது.மணப்பெண் அருகே நின்ற அவள் மணப்பெண்ணாய் மாறியிருக்க மணமேடையில் மணமகனாக இருந்த ஆனந் அஸ்வினாக மாறி இருந்தனர் அஸ்வினின் கற்பனை கதையில். அஸ்வின் அருகே மணப்பெண்ணிற்கே உரிய அலங்காரத்துடன் அமர்ந்திருக்க அவளது முகப்பூரிப்பு அவளது மணப்பெண் பாத்திரத்திற்கு பொருத்தமாய் இருக்க அவளது முகச்சிவப்பை காண்பதற்காக அஸ்வின் அவளது இடையை கிள்ள அவனது அவாவிற்கு ஏற்ப அவன் தீண்டலால் உண்டான கூச்சத்தை உடலின் சிறு அசைவினாலும் முகச்சிவப்பாலும் வெளிப்படுத்த அவளது அவஸ்தை புரிந்த போதிலும் அதில் மகிழ்ந்த மனதை மேலும் மகிழச்செய்ய எண்ணி மீண்டும் இடையைக் கிள்ள சென்ற கையை தடுக்கும் முகமாக சாரு அவனது கையை கிள்ள என்று செல்ல சீண்டல்கள் தொடர அதற்கு மேலும் சந்தர்ப்பம் வழங்கும் முகமாக ஐயர் அக்னி குண்டத்தில் இருவரையும் பூக்களை போட பணிக்க வேண்டுமென்றே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளது கைகளை தன் விரலால் வருடி அந்த திருமண சடங்கின் ஒவ்வொரு செயலிலும் தன்னவளை முகம் சிவக்கச் செய்து அதில் பரவசம் அடைந்துக்கொண்டான். இவ்வாறு அவனது கற்பனையாய் வெளிப்பட்ட சாருவுடனான அவனது திருமணக்கனவை என்று டேய் அடங்குடா டேய் என்ற ரீதியில் தடை செய்தது மேளச்சத்தமும் அதனைத்தொடர்ந்து ஒலித்த ஐயரின்

“கெட்டிமேளம்” என்ற குரலும். கனவு கலைந்து எழுபவன் போல் முழித்த அஸ்வினை

“டேய் என்னடா பார்த்திட்டு இருக்க??? அட்சதையை போடுடா..” என்று ரவியின் குரல் யதார்த்தத்தை உணர்த்த தன் கையில் இருந்த அட்சதையை தூவினான் அஸ்வின்.

திருமணம் முடிந்த நிஷாவும் ஆனந்தும் வலம் வரும் போது மீண்டும் அவனது கற்பனை படர்ந்து விரியத்தொடங்கியது. அவன் முன் செல்ல அவனது சிறுவிரலில் சாருவின் சிறுவிரல் கோர்க்கப்பட்டு நிஜத்தை தொடரும் நிழல் போல் சாரு பின் தொடர அவர்களது அக்னி வலம் ஆரம்பமாகியது. இடமிருந்து வலமாக ஆரம்பித்து அம்மிக்கல்லை இருவரும் நெருங்க ஐயர் மெட்டி அணிவிக்குமாறு பணிக்க தங்கள் அக்னி வலத்தை தற்காலிகமாக நிறத்துவிட்டு கோர்த்திருந்த விரல்களை பிரித்த அஸ்வின் மண்டியிட்டு நிலத்தில் அமர்ந்து அவன் முன் நின்ற சாருவை நோக்கி கண்ணடிக்க அவளது கன்னங்கள் இரண்டும் வெட்கத்தை தத்து எடுத்ததற்கு சான்றாக குங்கும நிறமாய் மாற “தம்பி நாழியாகுது” என்ற ஐயரின் குரலிற்கு மதிப்பளிக்கும் முகமாக சாருவிடம் காலை அம்மி மீது வைக்குமாறு கண்களாலே கூற அதை புரிந்த அவளோ தன் மெல்லிய கொலுசால் போர்த்தப்பட்டருந்த தன் மென்பாதங்களை தூக்கி அம்மியில் வைத்து அப்பாதங்களுக்கு போர்வையாய் இருந்த தன் சேலையினை சற்று தூக்கிபிடிக்க அஸ்வின் அவளது அந்த செயலில் மேலும் மதிமயங்க அவனது நிலை உணர்ந்த சாரு அவனை கண்களால் மிரட்ட அதன் விளைவாக அவனது இதழ்களில் ஒரு மென்னகை வந்து குடியேறியது. பின் அவளது வெண்ணிற தலையணை பஞ்சுபோல் மெத்தென்று இருந்த பாதத்தில் இருந்து நீண்டுக்கொண்டிருந்த நடுவிரலில் ஐயர் கொடுத்த மெட்டியை அணிக்கும் போது எங்கே மெட்டி அணியும் போது அந்த வெண்டைக்காய் விரல்கள் சிவந்துவிடுமோ என்ற ரீதியில் மெதுவாக அவன் அணிவித்து விட அவனது எண்ணம் அறிந்த சாரு க்ளுக் என்று சிரிக்க அவனது சிரிப்பில் தன் தலையினை உயர்த்தி என்னவென்று வினவி கண்ணடிக்க அவனது செயலில் மதிமயங்க தொடங்கிய மனதை கட்டுப்படுத்தும் வகையறியாது நிலைத்தினை நோக்க அதனை வெட்கம் என்று நன்குணர்ந்த அஸ்வின் அவளது பாதங்களை வருட அதில் இன்னும் சிவந்தது அவளது கன்னங்கள். அந்த நொடியில் எழுந்த அஸ்வின் அவளது முன்னிச்சியில் இதழ் பதிக்கையில்......

“டேய் அஸ்வின் என்னடா கண்ணை முழிச்சிட்டே தூங்குறியா?” என்ற ரவியின் குரல் அஸ்வினின் அந்த மோனநிலை கலைத்தது. அழகாய் சென்றுக்கொண்டிருந்த கனவு கலைந்தால் யாருக்கு தான் கோபம் வராமல் இருக்கும்??? தன் மோனநிலையை கலைத்த ரவியிடம் தன் கோபத்தை காட்டினான் அஸ்வின்.

“ஆமானு சொன்னா வந்து தாலாட்டு பாட போறியா??” என்று அஸ்வின் கோபத்தொனியில் கேட்க அவனது கேள்வியில் அவனை விசித்திரமாக பார்த்த ரவி

“டேய் இப்ப நான் கேட்டுட்டேனு இவ்வளவு கடுப்பாகுற??” என்ற ரவியின் கேள்வியில் தன் தவறினை உணர்ந்த அஸ்வின்

“ஐயோ சாரிடா நான் ஏதோ யோசனையில இருந்தேன். அதான் நீ எப்படி கேட்டோன கடுப்பாகிவிட்டது” என்று வருந்தும் தொனியில் அஸ்வின் மன்னிப்பு கேட்க

“சரி வா.. பொண்ணு மாப்பிள்ளையை விஷ் பண்ணிட்டு சாப்பிட போவோம். பசி வயிற்றை பொரட்டி எடுக்குது. ஏர்லி மார்னிங் கல்யாணத்தை வச்சி இவங்க படுத்துற பாடு இருக்கே... சப்பா... வாடா போவோம்” என்று அஸ்வினை அழைக்க தன் நண்பர் கூட்டத்துடன் மணமேடை சென்று மணமக்களை வாழ்த்திய போதும் அவனது பார்வை சாருவை தீண்டிச்செல்ல மறக்கவில்லை.

அதிகாலையில் திருமணம் என்பதால் காலை உணவு மட்டும் கோயிலின் பின்புறம் இருந்த மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு உணவறைக்கு வர மணமக்களின் குடும்பத்தாரும் அவர்களின் தோழர்களும் மட்டும் அங்கே குழுமி இருந்தனர். அந்த இடம் கேலி கிண்டல்களின் சலசலப்புடனும் மங்கள வாத்தியத்தின் ஒலியுடன் கலகலப்பாய் இருக்க அந்நேரம் சாருவின் அலைப்பேசிக்கு அழைத்தான் சஞ்சய். அங்கு இருந்த சத்தத்தினால் அவன் பேசுவது தெளிவாக கேட்காத காரணத்தினால் சாரு மண்டபத்திற்கு வெளியே சென்று பேசத்தொடங்கினாள். அவ்வாறு சஞ்சயுடன் பேசியவாறு அம்மண்டபத்தின் பின்புறம் இருந்த ஆற்றங்கரையின் அருகே வந்த சாரு அங்கிருந்த பாறையின் மீது கை வைத்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN