1

அன்றும் டாக்டர். அர்ஜுன், கவுன்சிலிங்-க்கு வந்த ஒருவருடய மன இறுக்கத்தை தளர்த்துவதற்காக பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச பேச கவுன்சிலிங்-க்கு வந்தவருக்கு கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக கொட்டியது. அவர் வெளியில் செல்லவும், கவுன்சிலிங்-க்கு வந்தவருடைய அப்பா,

“நன்றி டாக்டர் அய்யா..!!! என் புள்ள அவன் பொண்டாட்டி செத்ததுல இருந்து, அழுகாம கொள்ளாம இருந்து, யாரு என்ன சொன்னாலும் கவனிக்காம பேய் அடஞ்ச மாதிரி இருந்தான். அவன் பொண்டாட்டி மேல உயிரா இருந்தான். ஆனா, அவ செத்த செய்தி தெரிஞ்ச அப்பகூட அழாம இருந்தான். அந்த நிமிஷத்துல இருந்து உணர்ச்சியற்ற ஜடமா இருந்தான். அவன் அழுதுட்டா, பழைய மாதிரி ஆகிடுவான்-னு தான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன் டாக்டர். அழுதுட்டான்... இனி பழைய மாதிரி ஆகிடுவான்-ல?“ என்று அவர் கண்ணீர் மல்க கேட்க.

“நிச்சயமாங்க. கண்டிப்பா உங்க மகன் பழைய மாதிரி ஆகிடுவார். நான் சொல்லுறேன். தைரியமா போயிட்டு வாங்க.” என்றபடி சுருக்கங்கள் நிறைந்த அந்த முதியவருடைய கைகளை ஆதரவாக பிடித்தான் அர்ஜூன்.

அந்த வயோதிகர், மீண்டும் அர்ஜூனுக்கு நன்றி கூறிவிட்டு, தன் மகனை அழைத்துக்கொண்டு அவன் வீட்டை விட்டு சென்றார். அவரை அனுப்பிவிட்டு தன் அறைக்கு சென்றவனின் ஃபோன் ரிங் அடித்தது. ஃபோனை எடுத்து காதுக்கு கொடுத்தான்,

“ ஹலோ..!! டாக்டர் அர்ஜூன் ஸ்பீக்கிங்.. “, என்றவனின் எதிர்முனையில்..

“நான் பிரபாகரன் பேசுறேன் டா.” என்று அர்ஜூனின் தோழன் குரல் தளதளக்க..

“பிரபா..என்னடா ஆச்சு? ஏன்டா அழுற?”

“என் தம்பி ப்ரனீஷ் இருக்கான் ல?....”

“ஆமா டா. ப்ரனீஷ்-க்கு என்ன?”

“ப்ரனீஷ் ஒரு மாதிரி ஆகிட்டான் டா. முன்னலாம் எப்படி இருந்தான்? நீட்டா, சட்டை-லாம் அயர்ன் பண்ணி, க்ளீன் ஷேவ் பண்ணிட்டு, முகம் மலர சிரிச்சுட்டு இருப்பான்ல? இப்பலாம் அப்படி இல்ல டா. முடியெல்லாம் கலஞ்சு.. தாடி வளர்த்துகிட்டு.. டிரெஸ்-லாம் கசங்கி.. ஆளே வேற மாதிரி ஆகிட்டான் டா. யாரு கூடவும் பேச மாட்டேங்குறான். முகத்துல சிரிப்பே போச்சு டா அவனுக்கு..”

“ அவன் மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதாவது நடந்துச்சா டா?”

“அவன் ஒரு பொண்ண விரும்புனான் டா. அந்த பொண்ணு இவன் கண்ணு முன்னாடியே இறந்துடுச்சு. அன்னைல இருந்து இப்படி ஆகிட்டான் டா. பிரம்ம பிடிச்ச மாதிரி ஆகிட்டான். நீ தான் டா அவன எப்படியாவது சரி பண்ணனும். அவன பழைய மாதிரி ஆக்கி குடுத்துடு டா அர்ஜூன்.”

“ நீ வருந்தாத பிரபா. ப்ரனீஷ்-அ எப்படியாச்சும் பழைய மாதிரி ஆக்கி கொடுத்துடுறேன். இனி கவலைய விட்டுரு. நாளைக்கே நான் கிளம்பி மொரிஷியஸ் வர்றேன். ஏர்போர்ட் வந்து என்னைய பிக்-அப் பண்ணிக்கோ டா.”

“ரொம்ப சந்தோஷம் டா அர்ஜூன். நானே ஏர்போர்ட் வந்து கூட்டிட்டு போறேன்.” என்று கூறிவிட்டு ஃபோனை கட் செய்தான் பிரபாகரன்.

ப்ரனிஷின் கதையைக் கேட்ட அர்ஜூனின் மனம் கனத்தது. திரும்பி சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தனது மனைவி ஷர்மிளாவின் போட்டோவை பார்த்தான். அதை நோக்கி நடந்துப் போனவன்,கண்ணிலிருந்து வழிந்த நீரை துடைத்துவிட்டு, டேபிளின் மீதிருந்து ஒரு பையை எடுத்தான். அதிலிருந்த மாலையை கண்ணில் நீர் வழிய எடுத்து, ஷர்மிளாவின் போட்டோவிற்க்கு போட்டுவிட்டான்.

“ஷர்மி.. ப்ரனீஷோட கதைய கேட்டதும் எனக்கு உன் நியாபகம் வந்துடுச்சு மா. நீயும் இப்படி தானே என் கண் முன்னாடி......” என்று அவன் கூறி முடிப்பதற்க்குள், அவனுக்கு வருத்தத்தில் தொண்டை அடைத்தது. தண்ணீர் எடுத்து குடித்தவன், இழுத்து மூச்சு விட்டபடி ஷர்மிளாவின் போட்டோவைத் தொட்டு கண்ணீர் விட்டான்.

“அந்த பொண்ணோட சாவுக்கு ப்ரனீஷ் காரணம் இல்ல. ஆனா, உன் சாவுக்கு நானே காரணமா ஆகிட்டேனே..!!! “ என்றபடி அவளின் போட்டோவின் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தான். பின் தனது பத்து வயது மகள் ப்ரீத்தியின் நியாபகம் வர.. தனது தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் ஷர்மிளாவின் புகைப்படத்தை பார்த்து,

“நான் செஞ்ச இந்த குற்றத்துக்கு என்னைக்கோ நான் போலீஸ்-ட்ட சரன்டர் ஆகிருக்கணும். நம்ம பொண்ணுக்காக தான் நான் இன்னும் அத செய்யல ஷர்மி.. அவ வாழ்க்கைல நல்ல நிலைமைக்கு வந்துட்டா, நான் சரண்டர் ஆகிடுவேன்.” என்று அர்ஜூன் கூறிக்கொண்டிருக்கும் போதே..

“அப்பா.....” என்றபடி ப்ரீத்தி, அர்ஜூனின் இடுப்பைக் கட்டிக்கொண்டாள். திரும்பி மகளைப் பார்த்தவன்,

“ப்ரீத்தி செல்லம்...ஸ்கூல் முடிஞ்சுடுச்சா?”

“முடிஞ்சுடுச்சு அப்பா.. இன்னைக்கு தான் கடைசி எக்ஸாம். அப்பறம் ஜூன்-ல தான் ஸ்கூல்.. லீவுக்கு எங்கப்பா போகலாம்?” என்று தனது மகள் கேட்கவும், அவளைத் தூக்கிக்கொண்டு டைனிங் டேபிள் மேல் உக்கார வைத்தவன்..

“பிரபா அங்கிள்-ல பார்க்க போகலாமா?” என்று தன் பெரிதாக விரித்தப்படி கேட்டான் அர்ஜூன்.

“ஆனா, பிரபா அங்கிள் மொரிஸியஸ்-ல இருக்காங்கல?” என்று கேள்வியாக புருவத்தை சுருக்கி, தனது நாடியைத் ஒரு விரலால் தட்டியப்படி யோசிக்க ஆரம்பித்தாள். தன் மகள் யோசிக்கும் விதத்தை ரசித்தவன்..

“ஹாஹாஹா...ஒய் பாப்பு..! ரொம்ப யோசிக்காத டா மா. நம்ம இன்னைக்கு நைட் மொரிஸியஸ்-க்கு போறோமே..!” என்றப்படி அவளை உலுக்க.. ப்ரீத்தி குஷியில் அப்படியே டேபிளிலிருந்து குதித்தாள்.

“அப்படியா???? சூப்பர் அப்பா... ஹய்யா ஜாலி..ஜாலி..” என்றபடி டான்ஸ் ஆட..

“பாப்பு.. இப்படியே டான்ஸ் ஆடிட்டு இருந்தீங்கனா, எப்போ கிளம்புவீங்க..? 6 மணிக்கு ஏர்போர்ட் போனா தான், 9.45 ஃப்ளைட்–அ பிடிக்க முடியும். வாங்க.. கிளம்ப ஆரம்பிப்போம்..” என்றவுடன் இருவரும் வேகவேகமாக அவரவர் அறைக்குச் சென்றனர்.

சற்று நேரம் கழித்து வெளியே வந்த ப்ரீத்தி தனது தந்தையிடம் ஒடினாள்..

“அப்பா..அப்பா..தலை சீவி விடுங்க.. தலை சீவி விடுங்க..” என்கவும், அவள் கையிலிருந்த சீப்பை வாங்கிக்கொண்டு அவளுக்கு தலைவாரி விட்டான் அர்ஜூன்.

ஐந்து மணிக்கே இருவரும் தயாராகி காரில் ஏறி, சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இருவருக்கும் பயனச்சீட்டு வாங்கிக்கொண்டு அன்று இரவு 9.45 மணி அளவில் மொரிஸியஸ் விமானத்தில் அர்ஜூனும், ப்ரீத்தியும் ஏறினர்.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.