அன்னையோடு கோவிலை அடைந்தவன் கண்கள் அந்த வாலுப் பெண்ணையே தேடி அலைந்தது.கண்களில் கோவம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க,மலைக்கோவிலை நோக்கி முன்னேறுகையில் எதிர்ப்பட்வர்களுக்கு ஒரு சிரிப்பை உதிர்த்த வண்ணம் படியேறுபவனை பவானி பெருமையுடன் பார்த்தார் .

கோவக்காரன்தான். ஆனால் இடம் பொருள் அறிந்து தன்னை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மையுடையவன்தான் ருத்ரன்.ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்க போவது வேறு என அறியாமல் பவானி அவனோடு வந்துக் கொண்டிருந்தார்.

படிக்களில் வரிசையாக அகல் விளக்குகளில் தீபம் பிரகாசிக்க, பவானியும் அவருடைய கண்மணியை தேடிக் கொண்டே நகர்ந்தார்.

தொன்மையான அந்த சிவன் கோவிலே அவர்கள் குடும்பம் வழி வழியாய் வணங்கி வந்தது ஆகும்.சற்று நேரம் அந்த கருப்பாயீயை மறந்து, ருத்ரன் கண்மூடி சிவனை நினைத்து வேண்டி நின்றான்.

அப்பொழுது அவன் நாசியை காற்றில் மிதந்து வந்த மல்லிகை மணம் துளைக்க , சற்றே கண்களை திறந்துப் பார்த்தான். ஒரு கணம், இன்பமாய் அதிர்ந்த மனம், மறு கணம் கடுமையாக மாறிவிட்டதை அவன் கண்களின் சிவப்பே உணர்த்தியது.

அப்படி அவனை ஸ்தம்பிக்க வைக்க அவளால் மட்டுமே முடியும் என்பது பலதடவை அவன் உணர்ந்த ஒன்றே.

"சிவன் உனக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும் மகனே'' அருள் சொல்வது போல் பாவனைக்

காட்டிக்கொண்டிருந்தது, சாட்சாத் அவனுடைய பிசாசு முத்துகருப்பாயி @ ஆருஷி மயூரா தேவியேதான் .

சந்தன வண்ண பட்டில் தாளம் பூ அரக்கு பார்டர் போட்ட பாவாடையும் அரக்கு வண்ணத்தில் தாவணியும், காதுகளில் அவள் பேச பேச சேர்ந்து பேசத்துடிக்கும் குடை ஜிமிக்கிகளும், இடை வரை நீண்ட கூந்தலில் நெருக்கி கட்டி வைத்த மல்லிகை சரமும், நெற்றியில் வைத்த சாந்து பொட்டும், அதற்கு வாகாய் அள்ளி பூசியிருந்த திருநீறும், குறுகுறுத்த கண்களில் இட்ட மையும் ஆருஷி பக்தி பழம் மாதிரியே காட்சியளித்தாள்.

சிலமணித்துளிகள்தான் மனம் அவள் வசம் சரிந்தாலும், ருத்ரன் சுதாகரித்துவிட்டான். அவளும் அவனை மேல் இருந்து கீழ் அளந்தவாறே நின்றிருந்தாள்.

உடைத்த கோதுமை வண்ணம் அதற்கு தோதாய் அரக்கு வண்ண சட்டை, பட்டு வேஷ்டி, முறுக்கு ஏறிய உடம்பும், ஆறடி ஐந்து அங்குல உயரமும், காது வரை நீண்டிருந்த அலை அலையாய் சுருளும் முடியும், தீர்க்க பார்வையும், ஒவ்வொரு பௌர்ணமிக்கே கிடைக்கும் ஸ்பெஷல் தரிசனம் என்பது போல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதற்குள் சற்று முன்பு நடந்த தரமான சம்பவம் அவன் நினைவில் வர, மயூராவின் செவியை பிடித்து ருத்ரா திருகினான்.

"ஏண்டி கருப்பாயீ, எதுக்குடி என் சட்டையை பொசுக்கி வெச்சிருக்கே? உன்னை யாரு என் ஷர்ட் அயர்ன் பண்ண சொன்னது? அது பவி என் பர்த்டேக்கு வாங்கி கொடுத்தது. போட கூட இல்ல இன்னும். அதுக்குள்ள நாசம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத பிள்ளை மாதிரி இங்க வந்து ஷோ காமிச்சுட்டு இருக்கியா? '' ருத்ரா சண்டை போட தயாராக,

"போச்சிடா, மயிலு இன்னிக்கு உன்னைதான் அந்த சிவன் காப்பாத்தணும் போல இருக்கே . இது தெரியாம நீ அவனுக்கே அருள் வாக்கு சொல்லிட்டு இருக்கியா? ''பவானியின் மைண்டு வாய்ஸ் தந்தியடிக்க, மயூரா அதிர்ச்சியுற்றவளாய் அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

அப்பொழுது அவன் முதுகு பின்னாலிருந்து ஒரு ஜோடி மையிட்ட கண்கள் எதுவும் சொல்லி விடாதே என்பது போல் மயூராவைப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருந்தன.

அந்த கண்களுக்கு சொந்தக்காரி மயூராவின் அன்பு தங்கை மதனிகா பிருந்தா தேவியாகும்.

ருத்ரனின் கோவத்துக்கு மயூராவால் ஈடு கொடுக்க இயலும். அப்பாவி மதனிகா அவன் கோவத்தை தாங்கவே மாட்டாள். ஆக இது உன் வேலைதானா? வழக்கம் போல் அந்த தவறுக்கும் மயூராவே ஆஜரானாள்.

மயூரா :"யாராச்சும் வேணும்னு செய்வாங்களா மாமோய் ? ஏதோ ஞாபகத்தில் சூடு கொஞ்சம் அதிகம் வெச்சு தேய்ச்சிட்டேன். அது பொசுக்குன்னு தீஞ்சிடுச்சி. தொர காட்டன் சட்டை எல்லாம் போட மாட்டிங்களோ? பட்டு சட்டை பக்குனு பத்திக்கிச்சு .நான் என்ன பண்ண மாடசாமி?'' படு கூலாக அவனிடம் பேச அவளால் மட்டும்தான் முடியும்.

தவறுக்கு மன்னிப்பு கூட கேட்காமல், தன் மேலதான் தப்பு இருப்பது போல் பேசும் அவளை அப்படியே விட்டு வைக்க அவன் என்ன கிருஷ்ண பரமாத்மாவா? ருத்ரன் ஆயிற்றே.

"ஏண்டி ஒரு சாரி கூட சொல்லாம, என்னையே தப்பு சொல்றியா நீ? உன்னை யாருடி என் சட்டையை அயர்ன் பண்ண சொன்னது? ஏதாச்சும் வம்படியா பண்ணி என் உசுர வாங்கறதே பொழப்பா வெச்சிருக்கே. இவளும் உன் கூட தானே இருக்கா. பாரு எவ்ளோ அடக்கமா அமைதியா இருக்கா '' மதனிகாவை பார்த்து கூறியவாறு மயூராவை வறுக்க ஆரம்பித்தான்.

மயூரா பார்வை மதி மீது படிந்து மீண்டது. மதி முகத்தில் அசடு வழிந்தது . "யாரு இவள் உனக்கு நல்லவள், பண்றத பண்ணிட்டு பம்மரத பாரு, டேய் நெட்ட கொக்கே , உன் நல்லவள் பண்ண வேலைக்கு நான் இல்ல உன்கிட்ட மண்டகப்படி வாங்கறேன். எல்லாம் என் நேரம் '' மயூரா மனதுக்குள்ளே ருத்ராவை வைது

கொண்டிருந்தாள்.

இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே நின்றால் மயூராவின் கொதி நிலை அதிகரித்து விடும் . அதற்குள் யோகி தாத்தா வந்து விட நிலைமை கட்டுக்குள் வந்தது.

"என்ன சிவா மயிலுகிட்ட மல்லுக்கு நிக்கற, பூஜைக்கு நேரம் ஆயிடுச்சு, எல்லோரும் சந்நிதிக்கு வாங்க, உங்க அப்பா அம்மா அங்க காத்துகிட்டு இருக்காங்க.அப்புறம் வெச்சிக்கோ உன் பஞ்சாயத்த'' யோகி தாத்தா எல்லோரையும் கிளப்பினார்.

Last edited:
Author: KaNi Article Title: 🌹மையலுடைத்தாய் மழை மேகமே -பாகம் 2🌹 Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.