பூவே: 2

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூவே: 2

மஞ்சள் பூசி நலங்கு வைபவத்தின் பாதியில் வந்தவன் போல, தன் மீதுள்ள மஞ்சளை ஒளிக்கதிர்களாய் ஏவி புத்துணர்வுடன் புதிய ஆரம்பமாக ஞாயிறை ஆட்சி செய்ய ஆரம்பித்தான், ஞாயிறவன்.

உன் காதல் வாசம்
என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே

தீராத காதல்
தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ

வான் பார்த்து ஏங்கும்
சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ

நீரின்றி மீனும்
சேறுண்டு வாழும்
வாழ்விங்கு வாழ்வாகுமோ

இன்னிசையில் அழைப்போசை அலற, பிரிக்க முடியாமல் கண்களை பிரித்து தன் கைபேசியில் மணியை பார்க்க, எட்டரை என காட்டி இலவசமாக தேதியும் கண்ணில் பட்டது. ஏதேதோ நினைவுகளுக்கு போகும் முன், மீண்டும் அழைப்போசை.

"ம்ச் இவ்ளோ சீக்கிரம் யாரது?" என தூக்கம் கலைந்த எரிச்சலுடன் தன் தோழியின்
கைபேசியினை எடுத்து பெயரை பார்த்தவள் அதே இடத்தில் வைத்துவிட்டு "ப்ரீத்தி.." என குளியலறை நோக்கி குரல் விட்டாள், பதிலில்லை. சற்றுமுன் கேட்ட தண்ணீர் சத்தம் கூட நின்றிருந்தது.

"ப்ரீத்திதிதி... அஜய் அண்ணா போன்ல" என மறுபடியும் அவள் கத்தியும் பதிலில்லை. 'பதில் செய்யேன்' என ப்ரீத்தியின் கைபேசி மீண்டும் மீண்டும் அடித்தது.

இம்முறை ப்ரீத்தி என அவள் ஆரம்பிக்கும் முன் சரியாக "இதோ வரேன்டி! ஏலம் போட்டு வித்திறாத என் பேர" என கூறியவள் துண்டினை கட்டிலில் போட்டு கைபேசியின் பச்சையினை தடவி பதில் பேச சாளரம் அருகே சென்றாள் ப்ரீத்தி தன் காதலனுடன்.

'என்றுதான் இந்த பாட்டிலிருந்து எனக்கு விடுதலை தருவாய்?' என போலி சலிப்புடன் கடவுளிடம் கேட்டவள் பல் துலக்க சென்றாள்.

ஆம், ப்ரீத்தியின் காதலனான அஜய்க்கு காலா திரைப்படத்தின் கண்ணம்மா பாடலில் அழுத்த திருத்தமான குரலில் தீ என்றழைக்கப்படும் தீக்க்ஷீதா பாடும் வரிகள் மீது கொள்ளை பிரியமாம்.

அவன் ப்ரீத்தியிடம் அப்பாடகியை புகழ, இவள் பொறாமையில் சண்டையிட்டு நம் நாயகியை இருவருக்கும் தீர்ப்பு சொல்ல அமரவைத்ததெல்லாம் ஒரு கதை.

சண்டை பிடித்தாலும் அஜய்க்கு பிடித்தது ப்ரீத்திக்கு பிடிக்காமல் போகுமா? இப்பாடலை அடிக்கடி கேட்பாள், கொஞ்சம் குரல் வளம் அழகாக இருக்கும் நம் நாயகியை பாட வைத்து கேட்பாள், இவை போதாக்குறைக்கு தனது கைபேசியின் அழைப்போசை ஆகிப்போனது அப்பாடாகியின் குரல்.

சலித்துபோனாலும் சிறுவயது முதல் எல்லா உறவாக உடனிருக்கும் தோழியின் மகிழ்ச்சியில் மகிழ்ந்து போனது அவள் உள்ளமும்தான்.

பேசி முடித்தவள் நீர் சொட்டும் தன் கருவனத்தை அவிழ்த்து துவட்ட, சாரலென அவ்வறை முழுதும் வீசியது. தன் ஆடையை ஆராய்ந்தவளை பார்த்த ப்ரீத்தி "வெளில போறோம்டா, அஜய் அழைக்க வரான்" என இதழில் குறுநகையும் மொழிந்தது. "என்ன ப்ரீத்தி தீடிர்னு அவுட்டிங்?" என அவள் கேட்டாள்.

"இல்லடா பிளான் செய்து போனாலே சண்டை வருதுடா அதான், நைட் தான் சொன்னான் இப்படினு" என சட்டென குரல் குறைந்து போக ப்ரீத்தியை மாற்றும் பொருட்டு "உங்க சண்டைக்கு என்னைய நாட்டாமை ஆக்கின ஆளாச்சே நீங்க" என அவள் சிரிக்க, குற்றச்சாட்டில் ப்ரீத்தியும் சிரித்தாள்.

"பின்ன என்கிட்டையே அந்த பாடகிய புகழ்ந்தா கோபம் வரதா..."என ப்ரீத்தி பொங்க, சிரித்தவள் "கொஞ்சம் வளருடி என்ன நீ குழந்தை போல..." என அவள் தோள் மீது கை போட்டு அவளோடு அமர்ந்தவள்

"ப்ரீத்தி லவ் பண்ணா அவங்களுக்குனு இடம் தரக்கூடாதா, அண்ணாவுக்கும் விருப்பு வெறுப்பு இருக்கும்ல, கெடுபுடியா இருக்காதடி... அவங்கள அவங்கள இருக்கவிடுமா. அப்புறம் சண்டை... சண்டை வரது சகஜம் தானே நம்ம போடாத சண்டையா, என்ன நீ பேசாத பேச்சா...முன்ன லவ் பண்ண ஆரம்பத்தில் ரெண்டு பேரும் காலேஜ் படிச்சீங்க, அப்புறம் அண்ணா வேலைக்கு போனாங்க, இப்போது நீயும் போற. எல்லா நிலையும் எல்லாருக்கும் ஒரே போல இருகாதில்ல. முரண்பாடு இருக்கத்தான் செய்யும். நீ பிஸின்னா அண்ணா லீவுல இருப்பாங்க, அண்ணா பிஸின்னா நீ லீவுல இருப்ப, ரெண்டு பேருக்கும் குடும்ப பொறுப்பு, வேலை பளு எல்லாமே இருக்கும்டா, கொஞ்சம் பொறுத்து போடி. முக்கியமா ரெண்டு பெரும் விட்டுக்கொடுக்காதிங்க, என்கிட்டையும் சரி யார்கிட்டயும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுத்தராம இருந்தாலே போதும் உங்க லவ் உங்கள விட்டு எங்கையும் போகாது... என்னாலயும் முடியலடி என்ன தூக்கி நிறுத்துற நீயே இப்படி துவண்டு போகலாமா? பாரு காலையிலே எவ்ளோ பேச வச்சிட்ட" என பேசி பெருமூச்சிவிட்டவளை ப்ரீத்தி கண்ணீருடன் அணைத்துக்கொண்டாள்.

யாரிடத்திலும் பேசுவது சுலபம். அச்சொல்லை செயலாக்குவது தானே பெரிய சவால்.

"கோபமோ சண்டையோ அத காட்டவும் ஒரு உரிமை வேணும்டி" என தன் அனுபவத்தில் ப்ரீத்தியிடம் கூறியவள் அணைப்பிலிருந்து விலகினாள்.

பின் தேதியை பார்த்த ப்ரீத்தி "ஜூனியர்" என அவளின் பட்ட பெயரை வைத்து அழைக்க நமட்டு சிரிப்புடன் ஏறிட்டாள் அவள்.

"ஏய்... இன்னைக்கு... நான்" என ப்ரீத்தி தடுமாற "ஒண்ணுமில்லடா நீ அஜய் அண்ணா கூட போ, தனா இருக்கானே நாங்க போறோம்" என்றாள் ஜூனியர் அமைதியாக (நாமும் அப்படியே அழைப்போம்)

ப்ரீத்தி சிகையை பின்னலிட ஆரம்பிக்க, அவளும் குளிக்க சென்ற நேரம், அவளது கைபேசி சிணுங்கியது. ப்ரீத்தி அதை எடுத்து மாமா என பேச ஆரம்பித்தாள் ஜூனியரின் தந்தையிடம்.

சத்தம் கேட்டு குளிக்க சென்றவளும் வந்திருக்க, ப்ரீத்தியிடம் கைபேசியை வாங்கி "அப்பா" என பேச ஆரம்பித்தவளின் வதனம் அந்த பக்கம் சொன்ன செய்தியை கேட்டு பளிச்சிட்டது.

பேசி முடித்தவள் ப்ரீத்தியிடம் "இன்னைக்கு நிச்சயமாம்" என கூச்சலிட அரண்டேவிட்டாள்.

ப்ரீத்தியின் மனப்போக்கை அறிந்தவள் 'ப்ரீத்தி லூசு எனக்கில்லை அபர்ணாக்கு" என அவள் கூறவே ப்ரீத்திக்கு உயிர் வந்தது.

தன் தோழியின் மனதை அறிந்த ப்ரீத்தியையும் விடவில்லை அம்மகிழ்ச்சி.

ஆனால், நம் நாயகியின் மகிழ்ச்சி வேறு. இதுவரை எந்த ஒரு சுபகாரியங்களையும் கண்டிறாதவள், அனுபவிக்காதவள் அவள். அவற்றினை பார்க்க அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு அவ்வளவே. கிடைக்காத பொருள் மீதுதானே ஆசையும் அதிகமாகும். அதுபோலத்தான் இதுவும்.

தனக்கும் இது போல யாவும் நடக்க வேண்டும் என பல ஆசையுடன் குளிக்க சென்றாள் அவள்.

இருவரின் உயிர் நண்பன் தனாதரனை ப்ரீத்தி அலைபேசியில் அழைத்தாள். எதிர்பக்கம் எடுத்ததும் ஆஆஆஆ.... பெரிய கொட்டாவி ஓசையே கேட்டது அவளுக்கு.

"டேய் தரன் இன்னும் எழும்பலையா நீ" என ப்ரீத்தி கேட்க, "இல்ல ப்ரீத்தி... என்ன இவ்ளோ? சீக்கிரம் போன் போட்டிருக்க" என கேட்டுக்கொண்டே அழுந்தமர்ந்தான்.

"எரும மணியை பாரு 9.30 ஆச்சு, வெயில் வெளில பல்ல காட்டுது இது உனக்கு சீக்கிரமாடா" என அவள் கேட்க, "தூக்கத்துக்கு ஏதுடி பகல் இரவு ம்ச் சரி என்னனு சொல்லு" என அவன் கேட்க

"தரன் மறந்துட்டியா என்ன... இன்னைக்கு நம்ம ஜூனியர்க்கு சோகமான டேல" என அவள் நியாபகம் படுத்த "அப்ப நமக்கு ஓசில சோறு சாப்பிடுற டே" என அவன் சிரிப்புடன் கூற "நமக்கு இல்லப்பா உனக்கு. இன்னைக்கு அஜய் வரான், நா வரல இரண்டு பேரும் போய்ட்டு வாங்க. இன்னைக்கு அவ வீட்டுக்கு வேற போறா அபர்ணாக்கு எங்கேஜ்மெண்ட் போல, ஈவினிங் வந்துருவா அழைச்சிட்டு போ பத்திரம்" என கூறி அவள் துண்டித்தாள்.

இன்று அவளுக்கு சோகமான நாளாம். பள்ளிப்பருவத்திலிருந்தே இப்படித்தான். இந்நாளில் சோகசித்திரமாக காணும் இவளை ப்ரீத்தியும் சரி, கல்லூரியில் நண்பனாக கிடைத்த தரனும் சரி இருவர் இல்லை யார் கேட்டாலும் பதிலில்லை.

பள்ளியில் படித்து கல்லூரி முடித்து, இதோ வேலைக்கு சென்றும் இந்த நாளை அவள் மறந்தது கிடையாது. வருடம் ஓடினும் யாருக்கும் அந்த காரணம் புலப்பட்டத்திலை. வற்புறுத்தி கேட்டாலும் எரிச்சலில் திட்டி விடுவாள். ப்ரீத்தி அழுத்தம் பிடித்தவள், அழுத்தக்காரி என திட்டுவது உண்டு. அதும் உண்மைதான்.

இவளை கொஞ்சம் மாற்றலாம் என தனாதரன் ப்ரீத்தியே இதை செயல்படுத்தினர் கல்லூரி படிக்கும் காலத்தில்.

அவளை வெளியே அழைத்து சென்று "நீ சோகமாவே இரு நாங்க காரணம் கேட்க மாட்டோம். எங்களுக்கு உன்காசுல ட்ரீட் மட்டும் வை அதுபோதும்" என அவள் சொற்ப நேரமாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என வருடாவருடம் இதனை கடை பிடித்தனர். அவளுக்கும் இவை பிடித்துதான் போனது. நண்பர்களுடன் ஒன்று கூடி பொழுது கழிக்க யாருக்குத்தான் கசக்கும்.

கெட்ட காலத்தை கூட அழகாய் மாற்றும் வித்தை நண்பர்களுக்கு மட்டுமே கடவுள் படைத்திருப்பான் போல.

ப்ரீத்தியும் கிளம்பி அவளிடம் "தனாகிட்ட பேசிட்டேன்..பத்திரம்" என விடைபெற்று அஜய்யுடன் பைக்கில் சென்றாள். ஓட்டும் அவனிடம் தன் தோழி கூறியவற்றை பற்றி கூற, அவனும் தலை அசைத்து ஆமோதித்தான். இருவரின் பயணமும் முதலில் தேவாலயத்தை நோக்கியிருந்தது.

வீட்டுக்கு சென்றாள், பல நாள் கழித்து. யாரும் அவளை வரவேற்கவுமில்லை. அதை அவள் எதிர்பாக்கவுமில்லை. யார் வீட்டிற்குள்ளோ நுழையும் மனதுடன் உள் சென்ற அவளை பரபரப்பாக வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த அவளது தந்தையும் தமையனும் வரவேற்த்தனர். பின் இவ்விருவரால் அவளும் அங்கு ஒன்றானாள்.

கண்ணன் - ராஜேஸ்வரி தம்பதிகளின் பிள்ளை செல்வங்களே அழகரும் அபர்ணாவும். தந்தை மகன் இவ்விருவரின் குட்டிமா தான் நம் நாயகி.

கண்ணன் அவருக்கு ரயில்வே துறையில் வேலை. ராஜேஸ்வரி இல்லத்தரசி. அழகர் ****பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுக்கிறான். அபர்ணா ஆங்கில துறையில் முதுகலை வரை முடித்திருந்தாள்.

தந்தையும் மகனும் ஓர் கூட்டணி என்றால் தாயும் மகளும் எதிர்கூட்டணி குட்டிமா விஷயத்தில்.

அபர்ணாவை பெண் கேட்டு வந்தது விஷ்வதியின் அண்ணன் அஸ்வினுக்கு தான்.


ஜாதகம் சகலம் யாவும் பொருந்தி வர, மாப்பிள்ளை பெண் இருவருக்கும் பிடித்தால் சிறிய நிச்சயம் போல இன்றே செய்து திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயத்தை வெகு விமர்சையாக வைத்து கொள்ளலாம் என இரு வீட்டினரும் முடிவெடுத்து அதன்படி இன்று அபர்ணா வீட்டில் பெண் பார்க்கும் படலம்.

சந்திரன் - அன்பரசி இணையின் மக்கள் தான் அஷ்வினும் விஸ்வதியும். விஸ்வதி அப்பா செல்லம் என்றால், அன்பரசியின் அன்பு அஸ்வினுக்கு மட்டும்தான்.

தந்தை தொழிலை அஸ்வின் படித்தவுடன் கையில் எடுத்திருக்க, விஸ்வதி அழகர் வேலை பார்க்கும் கல்லூரியில் படித்து கொண்டிருந்தாள். சந்திரனுக்கு அன்பரசி இன்றளவும் ஒரு குழந்தை தான். விஸ்வதியை தவிர்த்து தாய் தந்தை அஸ்வின் மூவருமே வந்திருந்தனர் அங்கு.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி இனிதே நடைபெற, அழகரின் வற்புறுத்தலில் நடுக்கூடத்திற்கு வந்தாள் அவள். அவளை கண்ணன் தான் இளைய மகள் என அறிமுகப்படுத்தினார்.

அபர்ணா, ராஜேஸ்வரியுடன் சேர்ந்து அன்பரசிக்கும் அவளை பிடிக்கவில்லை.

அஸ்வின், அபர்ணா இருவரும் மனமொத்து விருப்பம் என தெரிவிக்க, இருகுடும்பத்தினரும் அகமகிழ்ந்து பாக்கு வெற்றிலை மாற்றி சிறிய முறையில் நிச்சயம் செய்ய எல்லாம் நன்முறையில் நடந்து முடிந்தது.

மாப்பிள்ளை வீட்டினர் கிளம்ப, எல்லாவற்றையும் கண்ணார கண்டவள் தந்தை, அழகரிடம் கூறி தன் வீட்டுற்கு கிளம்பினாள். இருவரும் இயலாமையுடன் அவளை பார்த்தனர்.

சுற்றம் பெரிதாயினும் அவள் சம்பாதித்த நபர்களை விரலில் அடக்கிவிடலாம்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN