துளி 15

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கண்ணாக கருத்தாக உனை
காப்பேன் உயிராக
உனை கண்டேன்
கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..


ஹிக்கடுவ கடற்கரை முருகைக்கற்பாறைகளுக்கு பெயர் போனவை.. இலங்கையில் செழித்திருக்கும் வளங்களில் இதுவும் ஒன்று.. செழித்திருப்பதோடு வெளிநாட்டுப்பயணிகளை கவருவதன் மூலம் இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு இக்கற்கள் பெரிதும் உதவுகின்றன... அல்கா இனத்தை சேர்ந்த இக்கற்கள் இலங்கையின் கரையோர பிரதேசத்தில் பரந்து விரிந்து கிடக்கின்றது... முருகைகற்பாறைகளின் வளர்ச்சிக்கு 20 பாகை சி - 30 பாகை சி வெப்பநிலையும் 30 - 35 % உப்புச்செறிவும் கொண்ட சமுத்திர நீரும், சூரிய ஒளி உட்புகக்கூடிய அவசியமாகும்...இலங்கையில் சுமார் 171 வகையான முருகைக் கற்பாறைகள் காணப்படுகின்றன. அவற்றில் 18 உள்நாட்டுக்குரிய இனங்களும் 163 சாதிகளும் உள்ளடங்குகின்றன... மனிதனின் பல சுயநலமான செயற்பாடுகளால் அவற்றின் இருப்பு பாதிக்கப்படுகின்ற போதிலும் அரசின் சில பாதுகாப்பு நடவடிக்கைகளால் இவ்வளங்களை இன்றளவும் பாதுகாக்க முடிகின்றது....
கடலுக்கடியில் நந்தவன மலர்களின் படையெடுப்பு போல் பல வண்ணங்களில் தொடராய் நீண்டிருக்கின்ற கற்களை கைகளால் தொட்டுணரும் வரை அவை கற்களென்று கண்டறியமுடியாது... சிற்பி செதுக்கிய சிலையை விட செம்மையாக செதுக்கப்பட்ட அந்த பூக்கற்கள் பார்பவர்களை கையால் தொட்டு வருட உந்தும்....
சூரியனின் செங்கதிர் தெறித்து ஜொலிஜொலிக்கும் அந்த கற்பறைகளின் அழகை கண்டு ரசிப்பதற்காகவே பல புகைப்பட கலைஞர்களும் பல சுற்றுலாப்பயணிகளும் அவை திரண்டிருக்கும் இடம் நோக்கி படையெடுப்பர்..
தேவ்வும் அவனது குழுவினரும் அங்கு வந்திறங்கியதும் அபி படகுச்சவாரிக்கான பற்றுச்சீட்டினை வாங்கிவந்தான்...
அவன் வந்ததும் இரு குழுவினராக பிரிந்து இரண்டு சிறு படகுகளில் கடலில் சவாரிசெய்தனர்..
அந்த படகு சிறியதென்பதால் கடலலைகளின் ஆர்பரிப்பில் அது சற்று அதிகமாகவே ஆடியபடி மிதக்க படகில் சென்றவர்களுக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது....அந்த படகு மற்றைய படகுகள் போல் அல்லாது சற்று வித்தியாசமாக இருந்தது....
மேல்புறம் உள்ளிருப்பவர்களுக்கு வெயில் படாதவாறு மூடப்பட்டும் உள்ளே படகின் அடிப்பகுதியின் நடுவில் கண்ணாடி பொறுத்தப்பட்டும் இருந்தது...
அந்த கண்ணாடியினூடாக கடலினுள்ளே இருப்பவற்றை தெளிவாக காணலாம்...
மோட்டார் படகில் பதினைந்து நிமிடம் பயணம் செய்ததும் முருகைக்கற்பாறைகள் சூழ்ந்திருக்கும் கடலின் நடுப்பகுதியை வந்ததடைந்தது படகு... அங்கு வந்ததும் படகு ஓட்டுனர் மோட்டரை நிறுத்திவிட படகு அலைகளின் அசைவில் ஆடிக்கொண்டே நின்றது...
அப்போது படகோட்டி அந்த கண்ணாடியினூடு பார்க்கச்சொல்ல அனைவரும் பார்த்து பிரம்மித்தனர்...
சிவப்பு,பச்சை,நீலமென்று பல வண்ணங்களில் இருந்த முருகைக்கற்பாறைகளை அக்கண்ணாடியினூடாக தெளிவாக பார்க்க முடிந்தது.... படகோட்டி துடைப்பை கொண்டு மெதுவாக படகை அசைக்க படர்ந்திருந்த முருகைக்கற்பாறை தொடரை அனைவரும் கண்டு மகிழ்ந்தினர்...
அவரவர் தொலைபேசியில் அவற்றின் அழகையினை புகைப்படமாக சேமிக்க எண்ணி அதற்கான வேலையில் சிலர் இறங்கியிருக்க ஜோடிகளாய் வந்திருந்தவர்கள் தத்தமது ஜோடிகளோடு இணைந்து அவற்றின் அழகை கண்டு ரசித்தபடியிருந்தனர்.. அந்த பாறைகளின் இடுக்குகளிலிருந்து சில மீன்கள் வர அவற்றையும் தம் தொலைபேசியின் உதவியுடன் புகைப்படமாக சேமித்துக்கொண்டனர்...
அவற்றை பார்த்து முடித்ததும் படகுகள் இரண்டும் கரைக்கு வந்தது....
நிம்மிக்கு இவ்வாறு படகில் பயணிப்பது முதல் முறையென்பதால் படகின் குலுங்கல் அவளையும் குலுக்கிட கரைக்கு வந்ததும் அனைத்தையும் வாந்தியெடுத்து சோர்வடைந்தாள்....
அவளை தாங்கிக்கொண்ட அபி அவள் சுத்தப்படுத்த உதவிவிட்டு அவளை ஓரமாக அமரவைத்து அவள் அருந்துவதற்கு நீர் கொடுத்தான்...
மருத்துவமனை சொல்வோமா என்று கேட்டதற்கு நிம்மி மறுத்துவிட அவள சற்று நேரம் ஓய்வாக இருக்கும்படி கூறிய அபி மற்றையவர்களை கடலில் சென்று விளையாடும் படி கட்டாயப்படுத்த மற்றவர்களும் அங்கிருந்து சென்றனர்...
அபி நிம்மியோடு அமர்ந்துகொண்டு அவளை கவனித்துக்கொண்டான்...
மற்றவர்கள் கடலின் கரையிலிருந்து அந்த கடற்கரையின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்... அப்போது கபிலன் தேவ்வை கடலினுள் தள்ளிவிட பின்னாலேயே அஜய்,முபாரக்,அக்ஷய் என்று அனைவரும் கபிலனை கடலில்தள்ளியபடி தாமும் கடல்நீரில் விழுந்து விளையாடினர்...
பெண்களனைவரும் கரையில் நின்று காலை நனைத்தபடியிருக்க ஸ்ரவ்யா காலில் ஏதோ இடறியதை உணர்ந்து அதை கையில் எடுத்தாள்....
அது சிப்பி.... அங்கு அதுமட்டுமின்றி கடல் நீரில் அடிபட்டு வந்த எண்ணிலடங்காத சிறு சிப்பிகள் கரையொதுங்கியிருந்தன.... ஸ்ரவ்யா மற்றைய பெண்களையும் அழைத்துக்கொண்டு சிப்பிகளை சேகரிக்கத்தொடங்கினாள்... வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் இருந்த சிப்பிகளை தேர்வு செய்து சேகரித்தவள் அதை ஒரு பையில் பத்திரப்படுத்திக்கொண்டாள்...
அப்போது அபியும் நிம்மியும் அங்கு வந்தனர்.. அபி கடலிற்குள் குதித்து தன் நட்புகளுடன் இணைந்துகொள்ள நிம்மி ஸ்ரவ்யாவுடன் இணைந்து சிப்பிகளை சேகரிக்கத்தொடங்கினாள்...
பெண்கள் அனைவரும் சற்று நேரத்தில் களைத்துவிட அனைவரும் தாம் சேகரித்த சிப்பிகளுடன் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டனர்....
சற்று நேரத்தில் ஆண்களனைவரும் கரைக்கு வர தேவ்வின் கையில் ஒரு சிறு சங்கு இருந்தது...
அதை கண்ட ஸ்ரவ்யா அவனருகே செல்ல மற்றவர்களும் அவளின் பின்னே சென்றனர்...
தேவ்வின் கையிலிருந்து அதை வாங்கிய ஸ்ரவ்யா
“அப்பு... எப்படி எடுத்த??”
“நாங்க குளிச்சிட்டு இருந்தப்போ காலில் அகப்பட்டது... இது ஒன்று தான் இருந்தது.. அதான் எடுத்துட்டு வந்தேன்..” என்று தேவ்கூற ஸ்ரவ்யா அதை மற்றவர்களுக்கும் காட்டினாள்...
அப்போது நிம்மி அபி “நீ என்னடா எடுத்துட்டு வந்த???” என்று கேட்க ஒரு மார்க்கமாக சிரித்த அபி
“நீ இப்படி கேட்பனு தெரிந்து தான் நானும் ஒன்று எடுத்துட்டு வந்தேன்... நீ கண்ணை மூடி கையை நீட்டு...” என்று கூற நிம்மியும் அவன் சதி தெரியாமல் கையை நீட்டினாள்..
அவள் கையில் சிறு நண்டை வைத்த அபி கண்ணை திறந்து பார்க்கச்சொன்னான்..
கண்ணை திறந்து பார்த்த கையிலிருந்த நண்டை தூக்கியெறிந்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டு அலற அபியோ அவள் செய்கையில் சிரித்தான்..
மற்றனைவரும் அவனோடு சேர்ந்து சிரிக்க தேவ்வோ
“ஏன்டா அவளை இப்படி பயங்காட்டுற??பாரு நல்லா பயந்துட்டா...”
“பயப்படட்டும்... அதுக்கு தான் இப்படி பண்ணேன்...” என்று கூறி சிரிக்க தேவ்வோ நிம்மியை சமாதானப்படுத்தினான்...
“நிம்மி... பயப்படாத... அது சின்ன நண்டு தான்.. அது எதுவும் செய்யாது.. பாரு நீ கத்துன கத்துல துண்டைக்காணோம்... துணியைக்காணோம்னு எங்கேயோ ஓடிடுச்சி. கண்ணை முழிச்சிப்பாரு...” என்று கூற அவன் வார்த்தை தந்த நம்பிக்கையில் கண்ணை திறந்து பார்த்தவள் சுற்றும் முற்றும் பார்த்து எதுவும் இல்லையென்று உறுதிப்படுத்திக்கொண்டாள்....
தன்னருகே சிரித்தபடியிருந்த அபியை கண்டு கடுப்பானவள் அவனை அடிக்க துரத்த அவனோ அவளிடமிருந்து லாவகமாக தப்பித்து அவளோடு விளையாடிபடியிருந்தான்...மற்றவர்கள் அவர்களது விளையாட்டை ரசித்தபடியே உடைமாற்றி வந்து அவ்விடத்தில் அமர்ந்திட அஜய் அங்கிருந்து தனியாய் வந்தவன் தன் அலைபேசியில் யாருடனோ தீவிரமாக பேசியபடியிருக்க அதை கவனித்த தேவ் எழுந்து அவனருகே சென்றான்...
அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாய் இருந்தவன்
“என்னாச்சு அஜய்... ஏன் ஒருமாதிரி பதட்டமாக இருக்கீங்க...??”
“தேவ் பிரச்சினை கொஞ்சம் சீரியஸாக போகுது.....”
“என்னாச்சு அஜய்???”
“பேபியோட அப்பாவுக்கு பேபி மனநல காப்பகத்தில் இல்லைங்கிற விஷயம் தெரிந்து போயிருச்சு...”
“என்ன சொல்லுறீங்க அஜய்??? அவருக்கு தெரிய வாய்ப்பில்லைனு சொன்னீங்களே...”
“ஆமா தேவ்.... ஆனா எப்படியோ அதை தெரிந்துக்கொண்டு கொழும்பில் இருக்கிற வீட்டின் அட்ரஸை தேடி வந்திருக்காரு... யாரும் வீட்டில் இல்லாததால் பக்கத்து வீட்டுல சொல்லிட்டு போயிருக்காரு... பக்கத்து வீட்டுல வேலை செய்றவங்க சீதா ஆண்டியோட சிஸ்டர்-இன்-லா.... அவங்க சொன்னதாக இப்போ தான் சீதா ஆண்டி கால் பண்ணாங்க...”
“வந்தது நிச்சயம் சூட்டியோட அப்பா தானா அஜய்??”
“ஆமா தேவ்.... ஆஸ்பிடலில் போய் கலாட்டா பண்ணி தான் இந்த அட்ரஸை வாங்கியிருக்காரு... என்னோட ப்ரெண்டின் கசின் அங்கு டாக்கராக இருக்காரு... அவரு தான் சொன்னாரு...”
“அடுத்து என்ன பண்ண போறோம் அஜய்...??”
“பேபியோட பாதுகாப்பு தான் இப்போ ரொம்ப முக்கியம் தேவ். அவர் கண்ணுல இவ பட்டா நிச்சயம் பேபியை கூட்டிட்டு போயிருவார்...”
“அவளை நான் இப்போவே என்னோட ஊருக்கு அழைச்சிட்டு போறேன் அஜய்..”
“நிஜமாத்தான் சொல்லுறீங்களா தேவ்..”
“ஆமா அஜய்.. சூட்டியை இப்போ கொழும்பு கூட்டிட்டு போறது பாதுகாப்பில்லை... நான் ஊருக்கு கூட்டிட்டு போறேன்... கொழும்பில் அவங்க அப்பா ஏதாவது பிரச்சனை பண்ணால் நமக்கு துணைக்கு யாரும் இல்லை... என்னோட ஊருனா என்னால் சமாளிக்கமுடியும்.. சூட்டிக்கும் அது தான் பாதுகாப்பு...”
“சரி நீங்க சொல்லுறபடியே செய்யலாம்...”
“அஜய் இந்த பிரச்சனைக்கு என்ன தான் முடிவு...??நாம ஏதாவது செய்யனும் அஜய்... பிரச்சனையை கண்டு ஓடி ஒதுங்குவதால் எந்தவித பலனும் இல்லை...”
“நீங்க சொல்றது சரிதான் தேவ்... ஆனால் பேபியோட அப்பாவை எதிர்க்கிறது அவ்வளவு சுலபமான விஷயமில்லை... அவருக்கு பணபலம், அரசியல் பலம்னு எல்லாமே இருக்கு தேவ்... சரியான ஆதாரமில்லாமல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கமுடியாது.. அதோடு அவரை ஆட்டுவிக்கிற நபர் யாருனு இன்னும் சரியாக தெரியலை.. அது தெரிந்தால் ஏதாவது பண்ணமுடியும்...”
“அஜய்... சூட்டி லாயர் அங்கிள்னு ஒருத்தரை சொன்னா அவரை தெரியுமா உங்களுக்கு??”
“ஆமா... பேபியோட பேமிலி லாயர்.....”
“அவருகிட்ட உதவி கேட்டா??”
“கேட்கலாம் தான்.. ஆனால் அவரை நம்பலாமானு மனசுக்குள்ள ஒரு தயக்கம்...”
“ஏன் அஜய் அப்படி?? அவரும் சூட்டியின் அப்பாவோட செயல்களுக்கு கூட்டுனு நினைக்கிறீங்களா??”
“அவர்மேல ஒரு சின்ன சந்தேகம் இருக்கு தேவ்... “
“ஓ.... சூட்டி சொன்னதை வைத்து பார்த்தால் அவரு நல்லவரு மாதிரி தான் தெரியிது.. ஆனால் ஏன் உங்களுக்கு அவர் மேலே சந்தேகம் அஜய்??”
“அவருக்கும் பேபியோட அப்பாவுக்கும் இடையில் ஏதோ வெளியுலகிற்கு தெரியாத ஒரு கொடுக்கல் வாங்கல் இருக்குனு எனக்கொரு தகவல் வந்தது. அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்காததால அது இப்போதைக்கு வெறும் தகவல் தான்....ஆனா... “
“புரியிது அஜய்... இதை வேற மாதிரி நாம டீல் பண்ணிக்கலாம்.. சூட்டி அந்த லாயர்கிட்ட பேசனும்னு நேற்று இரவு திவ்யாகிட்ட சொல்லிட்டு இருந்தா... நான் அதை பார்த்துக்கிறேன்... எனக்கொரு உதவி பண்ண முடியுமா??”
“சொல்லுங்க தேவ்.... “
“நான் சூட்டியை கூட்டிக்கிட்டு இப்போவே நுவரேலியா கிளம்புறேன்... நீங்க சேகரித்ததாக சொன்ன ஆதாரங்களை எனக்கு மெயிலில் அனுப்புங்க....அதை காட்டி சூட்டிக்கிட்ட கேட்டா அவகிட்ட இருந்து இன்னும் தகவல் கிடைக்கலாம்..”
“சரி தேவ்.. நீங்க சொன்னபடியே செய்யலாம்...” என்று அஜய் கூறியதும் அங்கிருந்து நகர்ந்த தேவ் அந்த நொடியே ஸ்ரவ்யாவை கிளப்பிக்கொண்டு நுவரேலியாவிற்கு கிளம்பினான்...
மற்றவர்கள் என்னவென்று கேட்டதற்கு ஏதேதோ காரணம் கூறியவன் ஸ்ரவ்யாவோடு அங்கிருந்து கிளம்பினான்...
ஸ்ரவ்யாவும் என்னவென்று விசாரிக்க தேவ்வோ போகும் வழியில் கூறுவதாக கூறி அவளை தற்காலிகமாக அமைதிப்படுத்தினான்...
பஸ்ஸில் ஓரமாக ஒரு இருக்கையில் ஸ்ரவ்யாவை அமரவைத்தவன் அவனும் அருகில் அமர்ந்துகொண்டான்.. பஸ் கண்டக்டரிடம் இருவரிடமும் டிக்கட் வாங்கியதும் ஸ்ரவ்யா என்னவென்று விசாரிக்க தேவ்வும் அவள் தந்தை அவளை தேடி வந்ததை கூறினான்..
தந்தை என்ற பெயரை கேட்டதும் நடுங்கியவளை அணைத்து ஆசுவாசப்படுத்தியவன்
“பயப்படாத சூட்டி... உன்னை பத்திரமாக பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு... இந்த முறை அவரா நானானு பார்த்திடுவோம்....”
“எனக்கு உன்னை நினைத்து தான் பயமாக இருக்கு அப்பு..அவரால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் நான் உயிரோடு இருக்கவே மாட்டேன்..”
“ஹேய் லூசு.. அதெல்லாம் எதுவும் நடக்காது... அப்படியெதுவும் நடக்க நடக்கவிடமாட்டேன்..இப்போ நுவரேலியா போறது கூட நம்ம பாதுகாப்புக்கு தான்.. அங்கே போய் மற்றதை யோசிக்கலாம்...”
“நீ என்னை விட்டு போயிடமாட்டல்ல??”
“நான் எப்பவும் உன்னை விடமாட்டேன்...நம்புடி சூட்டிபேபி..” என்று அவளை அணைத்து முன்னுச்சியில் முத்தமிட அவளும் அவன் மார்பில் பாந்தமாய் சாய்ந்துகொண்டாள்..
அவள் அவ்வாறே உறங்கிவிட இருவரும் பின்னிரவில் நுவரேலியாவை வந்தடைந்தனர்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN