துளி 16

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தேவ் தாம் வருவதை பற்றி தன் குடும்பத்தாருக்கு தெரிவித்திருந்ததால் அவனையும் ஸ்ரவ்யாவையும் அழைத்து செல்ல தேவ்வின் தந்தை பஸ் தரிப்பிடத்திற்கே வந்து காத்திருந்தார்...
பஸ்ஸிலிருந்து ஸ்ரவ்யாவை அழைத்துக்கொண்டு தம் பைகளுடன் இறங்கிய தேவ் தன் தந்தையை பார்த்து
“ஐயா... நீங்க எதுக்கு வந்தீங்களே... நாங்களே வந்திருப்போமே...”
“அதுக்கு என்ன ராஜா...இராத்திரி நேரத்துல நீ எப்படி புள்ளையை கூட்டிட்டு தனியாக வருவனு தான் நானே தம்பிராசை கூட்டிட்டு வந்தேன்.. பஸ் டிக்கியில ஏதும் பேக் இருக்கா..??”
“இல்லை ஐயா... இது மட்டும் தான்...”
“சரி வா.. போகலாம்.. அம்மாடி போகலாமா..??” என்று கேட்டபடியே தேவ்வின் தந்தை முன்னே நடக்க அவரை தேவ்வும் ஸ்ரவ்யாவும் பின்தொடர்ந்தனர்...
இரவுநேரமென்பதால் குளிர் சற்று அதிகப்படியாகவே இருக்க தேவ்வோ செய்வதறியாது நின்றான்..
திடீரென கிளம்பியதால் அவர்கள் இருவரும் ஸ்வெட்டர் எடுத்துவரவில்லை. ..
தேவ்விற்கும் குளிரில் தேகம் நடுங்க அவனிற்கு மேல் ஸ்ரவ்யா நடுங்கினாள்...
“ஐயா ஸ்வெட்டர் ஏதும் எடுத்துட்டு வந்தீங்களா??”
“அச்சோ... பார்த்தியா மறந்துட்டேன்... இந்தாப்பா.. அம்மா இரண்டு பேருக்கும் ஸ்வெட்டர் கொடுத்தாங்க... சீக்கிரம் போட்டுக்கோங்க...” என்று கொடுக்க அதை விரைந்து வாங்கியவன் ஸ்ரவ்யாவிற்கு அணிவித்துவிட்டு அவனும் அணிந்துகொண்டான்...
சற்று நேரத்தில் அவன் குளிர் மட்டுப்பட்டுவிட ஸ்ரவ்யாவோ இன்னும் குளிரில் நடுங்கினாள்..
அவள் கைகளை சூடு பறக்க தேய்த்தும் அவளின் குளிர் அடங்கவில்லை...
அதற்குள் அவர்களை அழைத்து செல்ல வந்திருந்த ஆட்டாவினருகே வந்துவிட அவளை உள்ளே அமர வைத்தவனிடம்
“ராஜா... ஆட்டோ பின்னுக்கு ப்ளாஸ்க் இருக்கு.. அதுல காட்டதண்ணி இருக்கு.. அதை ஊற்றி பிள்ளைக்கு கொடு...” என்று கூற தேவ்வும் பிளாஸ்கில் இருந்த பிளேன்டீயை ஸ்ரவ்யாவிற்கு கொடுத்தான்...
அது குடித்ததும் ஸ்ரவ்யாவிற்கு சற்று குளிர் அடங்கியது...
“இப்போ எப்படி இருக்கு ஸ்ரவ்யா...??”
“ம்ம்.. இப்போ பரவாயில்லை...”
“சரி ராஜா.. வீட்டுக்கு போகலாம்.. நீ உள்ளே ஏறு...” என்று தேவ்வின் தந்தை கூற தேவ் உள்ளே ஏறியதும் அவனது தந்தையும் உள்ளே ஏறி ஆட்டோ கிளம்பியது....
ஸ்ரவ்யா ஆசுவாசப்பட்டதும் தேவ் ஆட்டோ ஓட்டுனரான தம்பிராசுவிடம் நலம் விசாரிக்க தொடங்கினான்..
“ராசண்ணே... எப்படி இருக்கீங்க??”
“நான் நல்லா இருக்கேன்டா... நீ எப்படா ஊருக்கு வந்த?? அம்மா சொல்லவே இல்லை....”
“நான் வந்து ஒரு மாசமாச்சுண்ணே.. கொழும்புல கொஞ்சம் வேல இருந்துச்சு.. அதான் ஒரு மாசம் அங்கேயே தங்கவேண்டியதாக போயிடுச்சு.... அதுசரி அண்ணி.. அப்புறம் அம்மா எல்லாரும் எப்படி இருக்காங்க??”
“எல்லாரும் நல்ல இருக்காங்கடா... இனிமே இங்கதானா??? இல்ல மறுபடியும் வெளிநாடு போறியா???”
“இன்னும் அதப்பத்தி முடிவு பண்ணலண்ணே... அப்படியே போறதுண்ணாலும் ஐயாவையும் அம்மாவையும் கூட்டிட்டு தான் போவேன்..”
“அதுவும் சரிதான்... என்ன ஐயா தேவ் உங்களை கூட்டிட்டு போகப்போறேன்னு சொல்லுறான்......??”
“அடப்போடா... எனக்கு இந்த வெளிநாடெல்லாம் வசதிப்படாது... நமக்கு எப்பவும் இந்த தோட்டமும் வளவும் தான்.... அவன் போகனும்னா ஆசைப்பட்டா அம்மாவை கூட்டிட்டு போகட்டும்... “
“அதுசரி.... அம்மா அப்படியே உங்களைவிட்டு போயிருமாக்கும்.... டேய் தேவ் நீ கல்யாணம் பண்ணி உன்பொண்டாட்டியை கூட்டிட்டு தான் வெளிநாடு போகனும்.... அம்மாவும் ஐயாவும் அங்க வராது....” என்று கூறி சிரிக்க தேவ்வும்
“ஆமாண்ணே. . அம்மா போகும்போதே சொன்னிச்சு.... போறது சரி... அதையோ ஐயாவையோ அங்க கூப்பிடக்கூடாதுனு...”
“அவங்க இங்கேயே பொறந்து வளர்ந்து பழகிட்டாங்க.... இனி புது இடம்ங்கிறது கொஞ்ச கஷ்டம் தான்....” இவ்வாறு பேசியபடியே வீட்டை வந்தடைந்தனர்....
வீட்டு வாசலில் தேவ்வையும்,ஸ்ரவ்யாவையும்,தேவ்வின் தந்தையையும் இறக்கிவிட்ட தம்பிராசு அங்கிருந்து கிளம்பினான்....
வாசலில் அவர்களின் வரவுக்காக காத்திருந்த தேவ்வின் அன்னை தேவ்வையும் ஸ்ரவ்யாவையும் உள்ளே அழைத்து சென்று அமரவைத்தார்....
அவர்களிருவருக்கும் குடிக்க எடுத்துவர கிளம்பிய அன்னையை தடுத்த தேவ்
“அம்மா சாப்பிட ஏதாவது எடுத்து வைங்க... வர்ற வழியில இவ எதுவும் சாப்பிட... வரும் வழியெல்லாம் ஒரே சத்தி(வாந்தி)... அவளுக்கு ஏதாவது சாப்பிடக்கொடுங்க... எனக்கு ஒரு டீ மட்டும் தாங்க....” என்று கூற தேவ்வின் அன்னை ஸ்ரவ்யாவை கவனித்துக்கொள்ள தேவ் குளித்து உடைமாற்றி வந்தான்....
ஸ்ரவ்யாவிற்கு உணவு கொடுத்து அவளை படுக்கவைத்த தேவ்வின் அன்னை தேவ்வைத்தேடி வர அவன் தன் தந்தையோடு உரையாடிக்கொண்டிருந்தான்..
அவனுக்கு தன் கையிலிருந்த தேநீர் கோப்பியினை கொடுத்தவர்
“என்ன தம்பி பிரச்சினை.... எதுக்கு திடுதிடுப்புனு அங்கேயிருந்து கிளம்புன??” என்று தேவ்வின் அன்னை கேட்க நடந்ததனைத்தையும் சொன்னான் தேவ்...
அதை கேட்ட தேவ்வின் அன்னை
“அப்போ ஸ்ரவ்யா என் என் அண்ணே மகளா???”
“ஆமாமா.... சூட்டி மாமாவோட மக தான்....”
“அண்ணே ஏ இப்படி பண்ணுது... பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காம இந்த புள்ளையை இப்படி பாடாய் படுத்தியிருக்கே.... நீ ஏன்டா இத்தனை நாளாய் இந்த விஷயத்தை சொல்லலை??”
“எனக்கே இன்னைக்கு தான்மா தெரியும்....”
“எல்லாம் சரிடா... இப்போ என்ன பண்ணபோற??” என்று தேவ்வின் அன்னை கேட்க
“அதுதான்மா தெரியலை... என்ன செய்றதுனா தெரியாமல் தான் அவளை இங்க கூட்டிட்டு வந்துட்டேன்... மாமாகிட்ட இருந்து எப்படி சூட்டியை காப்பாத்துறதுனு தெரியலை.....”
“பேசாமல் நீ அந்த புள்ளையை வெளிநாட்டுக்கே கூட்டிட்டு போயிறேன்...”
“கூட்டிட்டு போயிடலாம்மா.. ஆனா அவ இப்போ நம்மலால தான் இத்தனை பிரச்சினையில மாட்டியிருக்கா... தாத்தா சொன்னபடியே சொத்தில் பாதியை என் பெயரில் எழுதியிருக்காரு.. அதை என்கிட்ட சேர்க்கனும்னு தான் அவ இத்தனை பாடுபட்டு இருக்கா.... அதோடு தாத்தா ஆசைபட்டபடி சொத்தை நல்லகாரியங்களுக்கு உபயோகப்படுத்தனும்னு பிரியப்படுற...”
“உயிரை விட சொத்து முக்கியமில்லையேடா....”
“நானும் அதை தான் அவகிட்ட சொன்னேன்... ஆனால் அவ ஒத்துக்கமாட்டேங்கிறாமா... அவ அப்பாகிட்ட இருந்து சொத்தை எப்படியாவது மீட்கனும்னு நினைக்கிறா....”
“சே... பாழாய் போன பணமும் சொத்தும் ஒரு மனிதனை எப்படி பாடாய் படுத்துது...”
“ஸ்ரவ்யாவுக்கு சொத்துமேல எந்த ஆசையும் இல்லை.. ஆனால் எதற்காக இந்த பிரச்சினையை இத்தனை தூரத்திற்கு பெரிது படுத்துறானு எனக்கும் புரியலை...”
“இல்லை ராஜா.. காசு பணங்கிறதை தாண்டி உரிமைனு ஒரு விஷயம் இருக்கு... இன்னொருத்தருக்கு உரிமையான விஷயத்தை வேறொருத்தர் கையாடல் பண்ணுறது ரொம்ப தப்பான விஷயம்... அது தான் அந்த பிள்ளையும் நினைக்குதோ தெரியலை...” என்று தேவ்வின் தந்தை கூற தேவ்வின் அன்னையோ
“அந்த சொத்து தான் பிரச்சினைனா நம்ம பெயரில் உள்ள சொத்தை அண்ணனிற்கே எழுதிக்கொடுத்திடலாம்... சொத்தை விட நிம்மி முக்கியம்பா...”
“எனக்கும் அது புரியிதுமா.... ஆனால் இப்போ அது மட்டும் பிரச்சினை இல்லை... அவ வாழ்க்கையோட அவ அப்பா விளையாடியிருக்காரு...அவரு மட்டும் இல்லை.. அவருக்கு கூட்டா பரத்னு ஒருத்தனும் சூட்டியோட வாழ்க்கையில் விளையாடியிருக்காங்க...இதுக்கெல்லாம் அவங்க பதில் சொல்லியாகனும்...”
“எல்லாம் சரிதான் தம்பி... ஆனால் ஏதோ மனசுக்கு பயமாக இருக்கு..”
“எல்லாம் சரியாகும்னு நம்புவோம்மா.... அவ ரொம்ப நொந்து போயிருக்கா... நீங்க தான் அவளை பழைய ஸ்ரவ்யாவாக மாற்றனும்....”
“டேய் அவ என் அண்ணன் பொண்ணு... நானும் அவளுக்கு அம்மா மாதிரி தான்.... அண்ணி ஸ்தானத்துல இருந்து அவளை நான் நல்லா பார்த்துக்கிறேன்.. நீ இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன முடிவுனு யோசி...”
“சரிமா... நான் அதை பார்த்துக்கிறேன்... ஐயா நாளைக்கு ப்ரின்சிபல் சாரை பார்த்துட்டு வருவோமா??”
“சரி ராஜா... நாளைக்கு வேலைக்கு போற வழியில பார்த்துட்டு போகலாம்... இப்போ நீ போய்படு... நேரமாச்சி..” என்று கூறி அனைவரையும் உறங்க அனுப்பினார்...
தேவ்வின் அன்னை ஸ்ரவ்யாவோடு படுத்துக்கொள்ள தேவ் அவன் தந்தையோடு படுத்துக்கொண்டான்...
மறுநாள் வழமைபோல் விடிய ஸ்ரவ்யாவை தன் மகள் போல் தாங்கிக்கொண்டார் தேவ்வின் அன்னை.... அன்னையின் அன்பை தொலைத்தவளுக்கு அவரது கலங்கமில்லாத அன்பு ஆதரவாகியது... அவரோடு முன்பை விட இப்போது உரிமையோடு உறவாடினாள்...
அவர்களோடு தேவ்வும் இடையிடையே சேர்ந்துகொள்ள அவர்களிடையே அழகான ஒரு உறவுப்பாலமொன்று உருவாகியது.. ஸ்ரவ்யாவும் தன் பிரச்சினைகளை மறந்திருந்தாள்...
இவ்வாறு ஒரு வாரம் கடந்திருக்க அன்று தேவ்வின் அன்னை காலையில் வேலைக்கு சென்றிருக்க தேவ் உறங்கிக்கொண்டிருந்தான்....
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஸ்ரவ்யா காலையிலேயே தலைக்கு குளித்திருந்தாள்... அன்று ஏனோ ஸ்ரவ்யாவிற்கு சேலை உடுத்தினால் என்னவென்று தோன்றிட பக்கத்து வீட்டு அக்காவின் துணையோடு சேலை உடுத்தினாள் ஸ்ரவ்யா....
இரண்டு நாட்களுக்கு முன் தேவ்வின் பையை அபி கொழும்பிலிருந்து அனுப்பியிருக்க அதில் அவன் தன் அன்னைக்கென்று வாங்கியிருந்த சேலைகளை தன் அன்னைக்கு எடுத்துக்கொடுக்க அதிலிருந்து தேவ்வின் அன்னை ஒரு புடவையை ஸ்ரவ்யாவிற்கு கொடுத்தார்... அதை மகிழ்வுடன் வாங்கிக்கொண்டவள் அதை பத்திரப்படுத்தியிருந்தாள்...
அதனை இப்போது உடுத்தியிருந்தவள் சுவாமிக்கு விளக்கேற்றி வணங்கினாள்....
சுவாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தவள் என்ன செய்யலாமென்று யோசிக்க அப்போது தான் தேவ் எழவில்லையென்ற நினைவு வந்தது...
அவனை எழுப்பலாம் என்று யோசித்தவள் பின் தன் முடிவை மாற்றிக்கொண்டு சமையலறைக்கு சென்று தேவ்வின் அன்னை பிளாஸ்கில் ஊற்றிவைத்திருந்த தேநீரை தேநீர் கோப்பையிற்கு மாற்றியவள் அதை எடுத்துக்கொண்டு தேவ் படுத்திருந்த அறைக்கு வந்தாள்...
தேவ் தலைக்கு கையை கொடுத்தபடி உறக்கத்திலிருக்க ஸ்ரவ்யா அவன் உறங்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள்.....
அவள் நின்றிருந்த இடத்திற்கு எதிரே ஆளுயரக்கண்ணாடி மாட்டப்பட்டிருக்க அதில் அவள் விம்பம் தென்பட்டிருந்தது.
இளம் நீலநிற காட்டன் சேலையில் இருந்தவளது கழுத்தில் சிறு ஆரம் மட்டுமே...காதிலும் மெல்லிய அவள் சேலைக்கேற்ற நிறத்தில் இரு ஜிமிக்கிகள் ஆடியபடியிருக்க அதுவே அவளை பேரழகியாய் காட்டியது... குளித்திருந்ததால் தலை முடியை சிறு க்ளிப் கொண்டு இணைத்திருந்தவளது நெற்றியில் சிறு வட்ட வடிவ சிவப்பு பொட்டும் விபூதிக்கீற்றும் மட்டுமே.....
அவளது இரு தோள்களிலும் அவள் கூந்தல் படர்ந்திருக்க அது அவள் வனப்பை பெருக்கியது.. பெண்ணிற்குரிய அனைத்து அங்க லட்சணங்களையும் பிறப்பிலே பெற்றவள் சேலையில் மன்மதனை மயக்கிய ரதியாய் நின்றிருந்தாள்....
தன் விம்பத்தை பார்த்து ரசித்தவள்
“நீ சாரியிலும் செம்மையா தான் இருக்கு ஸ்ரவ்யா... அப்புவோட செலெக்ஷன் எப்பவும் சூப்பர் தான்...” என்று தனக்கு தானே பேசிக்கொள்ள அப்போது தேவ்
“அப்படியா சூட்டி..” என்று கேட்டபடி தேவ் எழுந்து அமர்ந்தான்...
“எழும்பிட்டியா... இந்தா டீ...” என்று தேவ்விடம் தேநீர்கோப்பையை நீட்ட அதை வாங்கிக்கொண்டான் தேவ்...
“சாரியில சூப்பரா இருக்க சூட்டி...”
“நிஜமாவா???”
“ஆமா.... அதுசரி என்ன திடீர்னு சாரி உடுத்தியிருக்க??”
“ஏதோ தோனுச்சு...”
“ம்ம்... எந்த ட்ரெஸ் போட்டாலும் நீ சூப்பரா இருப்ப....சாரிக்கு செம்ம டக்கரா இருக்க...”
“ஆஹான்.... அப்படியா??”
“ஆமா சூட்டி... இந்த சாரி வாங்கும் போதுகூட உனக்கு இவ்வளவு அழகாக இருக்கும்னு நினைக்கலை...”
“ஏய்... பொய் சொல்லாத... நீ இதை அத்தைக்கு தானே வாங்குன??”
“இதை போய் யாராவது அம்மாவுக்கு வாங்குவாங்களா?? அதோடு அம்மா இந்த மாதிரி உடுத்தமாட்டாங்க....”
“அப்போ எனக்கு தான் வாங்குனியா அப்பு...??”
“ஆமா... உனக்குனு தேடி அலைந்து பார்த்து வாங்கியது....”
“எப்போ வாங்குன??”
“கனடாவில் இருந்தப்போ....”
“நிஜமாகவா...”
“ஆமா... ஏனோ இந்த சாரியை பார்த்ததும் உனக்கு மட்டும் தான் நல்லா இருக்கும்னு தோனிச்சு... அப்போ என் மனசுல உன் மீது கோபம் தான் இருந்தது. . ஆனாலும் கூட வாங்கனும்னு தோனிச்சு... வாங்கிட்டேன்... வாங்கினப்போ இதை எப்பவும் உன்கிட்ட கொடுக்கமுடியாதுனு தான் நினைச்சேன்... ஆனால் நீ இப்போ அதை கட்டிக்கிட்டு என் முன்னாடி நிற்கிற...” என்று தேவ் கூற அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தவள்
“எப்படி அப்பு கோபமாக இருக்கும் போது கூட என்னை பற்றி நினைக்கிற??? நிச்சயம் அந்த நொடியில் என்மேல வெறுப்பு மட்டும் தான் இருந்திருக்கும்...”
“இல்லை சூட்டி.... எப்பவுமே நான் உன்னை வெறுத்ததில்லை... எனக்கு உன்மேல வருத்தம் தான் இருந்தது... நீ என்னை போனு சொல்லியிருந்தா கூட நான் கவலைபட்டிருக்க மாட்டேன்...ஆனால் நீ பணத்திற்காகனு சொன்னது தான் கோபமாக மாறிவிட்டது... அதனால தான் நான் உன்னை பார்க்கக்கூடாது பேசக்கூடாதுனு இருந்தேன்.... ஆனால் என் மனசு எப்பவும் உன்னை பற்றி மட்டும் தான் நினைக்கும்..ரொம்ப சந்தோஷமாக இருந்தால் நீயும் கூட இருந்திருக்கலாமேனு தோன்றும்... ரொம்ப கவலையாக இருந்தால் உன்கூட பேசினால் நல்லா இருக்கும்னு தோன்றும்...சொல்லப்போனா ஒவ்வொரு நிமிஷமும் உன்னை மிஸ் பண்ணேன் அப்பு....”
“சாரி அப்பு... “
“ஹேய்... எதுக்கு சாரியெல்லாம்... ஏதோ சொல்லனும்னு தோன்றியது சொன்னேன்...நீயும் என்னை எவ்வளவு மிஸ் பண்ணனு எனக்கு தெரியும்...”
“சும்மா சொல்லாத... உனக்கு எப்படி தெரியும்.. நீ தான் என்னோட லவ்வையே புரிந்துக்கொள்ளாத மங்குனி சாமியாராச்சே...”
“அது என்னவோ உண்மை தான்... ஆனா தெரியும்..”
“எப்படி தெரியும்...”
“அது.. கொஞ்சம் இரு வர்றேன்...” என்றவன் எழுந்து சென்று இரண்டு டையரியோடு வந்தான்.
அதை கண்ட ஸ்ரவ்யா
“ஹேய் அப்பு.. இது என்னோட டையரி... இது எப்படி உன்கிட்ட?? அது உன்னோடது தானே... இன்னும் வச்சிருக்கியா??”
“இது உன்னோடது தான்.. அது என்னோடது தான்.. நீ மட்டும் நான் வாங்கிக்கொடுத்த டையரியை கவனமாக வைத்திருக்கலாம்... நாங்க வைத்திருக்ககூடாதா??”
“சரி...சரி...என்னோட டையரியை தா...”
“ம்ஹூம்.. அது முடியாது... இனி அது எனக்கு சொந்தம்....”
“அது என்னோடது...”
“இல்லை.. இனி உன்னோடது எல்லாம் என்னோடது..”
“அப்படியா... அப்போ உன்னோட டையரியை தா..”
“அதுவும் முடியாது.. ஏன்னா என்னோடது எல்லாம் என்னோடது..”
“ஓஹோ... அப்படியா விஷயம்...” என்றவள் அவன் சுதாகரிக்கும் முன் அவன் கையிலிருந்த அவனது டையரியை பறித்துக்கொண்டு ஓட முயல தேவ்வோ அவளை தடுக்கும் விதமாக பின்னாலிருந்து அவள் முந்தானையை பிடித்து இழுத்தான்..
அவன் இழுத்ததில் நிலை தடுமாறியவள் அவன் மடியில் விழ தேவ்வோ அவளை வளைத்து பிடித்துக்கொண்டு
“மாட்டுனியா?? எங்க ஓடப்பார்க்குற?? நல்லபிள்ளையாக டையரியை கொடுத்துட்டு போ..” என்று அவளிடமிருந்து டையரியை வாங்கியபடி அவள் முகம் பார்த்தபோது அவளது முகமோ செம்மை பூசி நின்றது...
ஸ்ரவ்யா தேவ்வின் மடியின் விழுந்ததும் அவளை சிறைப்படுத்த முயன்றவனின் கைகள் வெற்றிடமான இடுப்பில் பதிந்திட அவனது ஸ்பரிசம் பெண்ணவளுக்கே உரித்தான உணர்வுகளை தூண்டிட அதன் விளைவால் வெட்கம் வந்து அவளை ஆட்கொண்டது....இதற்கு முதல் அவன் ஸ்பரிசம் உணர்ந்திருந்தாலும் இன்றுணர்ந்த ஸ்பரிசம் அவள் இதுவரை அனுபவித்திடாத அவஸ்தையை உருவாக்க அதை கட்டுப்படுத்த முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள் ஸ்ரவ்யா...
இதை எதையும் உணராத தேவ் அவளின் இந்த திடீர் அமைதியிலும் வெட்கத்தால் சிவந்த வதனத்தாலும் பயந்தவன் அவள் கன்னங்களை மெதுவாக தட்டி
“சூட்டி... என்னாச்சு.. ஏன் ஒரு மாதிரி இருக்க??” என்று கேட்க அதில் சுயவுணர்வு பெற்றவள் அவனிடமிருந்து விலகி எழுந்து நின்றவள் அவன் டையரியை அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர முயன்றாள்...
அவளது திடீர் மாற்றத்தில் குழம்பியவன் அவள் கைப்பிடித்து தடுத்து எழுந்தவன்
“ஹேய்... என்னாச்சு... ஏன் திடீர்னு சைலண்டாகிட்ட?? எதனால உன்னோட முகமெல்லாம் திடீர்னு சிவந்திடுச்சு..?? உடம்புக்கு முடியலையா??” என்றபடி தேவ் அவள் நெற்றியில் கைவைத்து பார்க்க முயல அதை தடுத்தவள்
“அ...அது.. அது..அதெல்லாம் எதுவும் இல்லை... நான் போறேன்...”
“ஹேய்.. என்னாச்சு சூட்டி....உடம்புக்கு முடியலைனா சொல்லு... டாக்டர்ட போயிட்டு வரலாம்..”
“இ..இல்..இல்லை.. எனக்கு எதுவும் இல்லை... நான்.. நல்ல தான் இருக்கேன்....” என்றபடியே அவள் மீண்டும் ஓட முயல அவளை தடுத்து தன்புறம் திருப்பியவன்
“இப்போ எதுக்கு ஓடுற?? மறைக்காமல் என்ன நடந்ததுனு சொல்லிட்டு போ..” என்று அவள் நிலைமை புரியாது தேவ் நச்சரிக்க ஸ்ரவ்யாவோ கடுப்பானவள் சுற்றும் முற்றும் பார்த்தவள் அவன் எதிர்பாரா நேரத்தில் அவன் இதழ்களை கவ்விவிட்டு உடனே விடுதலையடைத்துவிட தேவ்வோ அவளது இந்த செயலில் உறைந்து நின்றான்..
அவனை கண்டு சிரித்தவள் “இது தான் நடந்தது.. போதுமா...” என்றுவிட்டு அங்கிருந்து சென்று மறைந்தாள்..
நடந்த சம்பவத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள தேவ்விற்கு சில விநாடிகளானது...
சுயவுணர்வு பெற்றவன் அவள் இதழ் தீண்டிச்சென்ற தன் அதரங்களை தொட்டு பார்த்தவனுள் இனம்புரியாததொரு உணர்வு பட அது தந்த அவஸ்தையில் உடல் சிலிர்த்தவன் அதை ரசித்தபடியே குளிக்க சென்றான்...
அன்று முழுவதும் ஸ்ரவ்யா சேலையிலேயே சுற்ற தேவ்வின் கண்களும் அவள் பின்னாலேயே சுற்றியது.. அதை கவனித்தும் கவனியாதது போல் ஸ்ரவ்யா போக்கு காட்டினாள்... தேவ்வும் அவளை எவ்வாறேனும் தனியாய் சந்தித்திட துடிக்க அவளோ அதற்கு இடம்கொடாமல் தன் அத்தையோடு நேரத்தை கழித்தாள்...
மாலை நான்கு மணியளவில் தேவ்வின் தூரத்து உறவினரொருவர் இறந்த செய்தி கேள்விப்பட்டு தேவ்வின் அன்னையும் தந்தையும் கிளம்பிட தேவ்விடம் தனியாக சிக்கினாள் ஸ்ரவ்யா...
தன் அன்னை தந்தை சென்றதும் கதவை மூடிவிட்டு வந்தவன் ஸ்ரவ்யாவை தேட அவளோ தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள்...
ஸ்ரவ்யாவின் அருகே அவளை இடித்துக்கொண்டு அமர்ந்த தேவ்வை முறைத்தவள் சற்று தள்ளி அமர தேவ்வும் மீண்டும் அவளை உரசிக்கொண்டு அமர்ந்தான்..
“தள்ளி உட்காரு அப்பு..”
“முடியாது சூட்டி... என்ன பண்ணுவ??”
“ப்ச்.. இப்போ உனக்கு என்ன வேண்டும்??”
“காலையில ஏன் உன்னோட முகம் அப்படி சிவந்திருந்துச்சுனு காரணத்தை சொல்லு... நான் போயிர்றேன்..”
“அது...அது... எதுவும் இல்லை...”
“இல்லையே.. ஏதோ இருக்குனு மேடம் எதோ செய்திட்டு போனீங்க??”
“அது... அது.. அது.. நான் போறேன்...” என்று ஸ்ரவ்யா எழ முற்பட அவளை தடுத்த தேவ்
“எங்க போற...?? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ..”
“அப்பு.. ப்ளீஸ்...என்னை விடு...”
“பதில் சொல்லு விடுறேன்... இல்லைனா காலையில் நீ செய்ததை இப்போ நான் செய்வேன்..” என்றவன் உதட்டை குவித்து காட்டினான்..
“இல்லை. எதுவும் இல்லை... குளிருக்கு தான் அப்படி சிவந்தது... வேற எதுவும் இல்லை...”
“அப்படி தெரியலையே....இப்பவும் தான் குளிருது... ஆனா உன்னோட முகம் சிவக்கலையே...”
“அ..அது....”
“அது தான் என்ன காரணம்னு கேட்குறேன்...”
“ரொம்ப படுத்துற அப்பு...”
“ஆஹான்... யாரு படுத்துறா நானா??? காலையில இருந்து என்னை நீ பாடாய் படுத்திட்டு இப்போ நான் படுத்துறேன்னு சொல்லுறியா???”
“நான் என்ன படுத்துனேன் உன்ன??”
“என்ன படுத்துனியா?? காலையிலேயே ஆளை தூக்குற மாதிரி வந்து முன்னாடி நின்னது மட்டுமல்லாமல் சும்மா இருந்த பையனை கிஸ் பண்ணி அவனை சுத்தலில் விட்டிருக்க.... இதெல்லாம் சரியா சொல்லு??? சோ இதுக்கு இப்போ உனக்கு பனிஷ்ட்மண்ட் தரப்போறேன்..”
“அது...அது... நான் வேணும்னு பண்ணலை... நீ.. நீ... திடீர்னு இடுப்பை பிடித்ததும் எனக்கு ஒரு மாதிரி வெடவெடனு வந்திடுச்சு.... பதட்டத்துல ஏதோ என்னை அறியாமல் அப்படி பண்ணிட்டேன்....”
“ஓ... அறியாமல் பண்ணிட்ட... அப்போ நிச்சயம் தண்டனை கொடுத்தே ஆகனும்...”
“வேணாம் அப்பு.... ப்ளீஸ்... நான் எதுவும் வேணும்னு பண்ணலை...”
“ஆனால் நான் இப்போ வேணும்னு தான் தண்டனை கொடுக்கப்போறேன்...” தன் இருக்கையிலிருந்து எழுந்து ஸ்ரவ்யாவின் முன் நின்றவன் அந்த இருக்கையிலியே அவள் அசையமுடியாதபடி தன் கைகளால் அரணிட்டான்....
ஸ்ரவ்யாவோ இருக்கையோடு ஒட்டியபடி வார்த்தைகளால் மட்டும் மறுக்க தேவ்வோ அவள் இதழ் நோக்கி குனிய பயத்தில் கண்ணை மூடிக்கொண்டாள் ஸ்ரவ்யா...
அவள் இதயம் தாறுமாறாய் துடிக்க அடிவயிற்றில் இனம்புரியாததொரு இன்ப அவஸ்தை... அவள் உணர்ச்சிகள் கிளர்ந்தெழவென்று பல்வேறு அவஸ்தைகளில் சிக்குண்டிருந்தவளை காக்க வந்தான் ஒரு சிறுவன்..
யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு தேவ் ஸ்ரவ்யாவிடமிருந்து விலகினான்...
“யார்டா இது சிவபூஜை வேளை கரடி மாதிரி..” என்று வாய்விட்டு புலம்பியபடி தேவ் கதவை திறக்க சென்றிட தன்னிலை மீண்ட ஸ்ரவ்யாவோ தப்பித்தோம் என்று எண்ணிக்கொண்டாள்...
வெளியே நின்றிருந்த சிறுவன் தேவ்விடம் அவன் தந்தை அழைத்து வரச்சொன்னதாக கூற தான் வருவதாக கூறி அவனை அனுப்பி வைத்தான்..
உள்ளே வந்த தேவ் ஸ்ரவாயாவிடம்
“ஐயா வரச்சொல்லியிருக்காரு... நான் என்னன்னு பார்த்துட்டு வர்றேன்.. வந்து உனக்கு பனிஷ்மண்ட் தரேன்.... அவன் மட்டும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா பனிஷ்மண்ட்டில் இருந்து நீ தப்பிச்சிருக்க மாட்ட...”
“இப்போ கூட நான் ரெடி உங்க பனிஷ்மண்டுக்கு...” என்று ஸ்ரவ்யா நக்கலாக கூற
“கொடுக்கமுடியாதுங்கிற தைரியத்துல தானே பேசுற.. இன்னைக்கு தப்பிச்சிட்ட.. இன்னொரு நாள் உன்னை கவனிச்சிக்கிறேன்...”
“ஐயம் வெயிட்டிங்...”
“சரி கவனமாக இரு... நான் பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு இருக்க சொல்லுறேன்...” என்றவன் பக்கத்து வீட்டு பெண்ணை ஸ்ரவ்யாவின் துணைக்கு இருத்திவிட்டு தேவ் கிளம்பினான்...
தேவ் சென்றதும் அவன் பையிலிருந்து இருவரது டையரியையும் எடுத்தவள் அதை தன் பையில் பத்திரப்படுத்திக்கொண்டாள்....
பக்கத்து வீட்டுப் பெண் டீவியில் மூழ்கிட தேவ்வின் டையரியை எடுத்து படிக்கத்தொடங்கினாள் ஸ்ரவ்யா.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN