🌹பாகம் 22🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நீண்ட நாள் கழித்து நிம்மதியாக தூங்கி எழுந்த ருத்ரன் அதிகாலையிலே எழுந்து விட்டிருந்தான். பசிக்கு உணவு தந்து பக்குவமாய் தலை பிடித்து மாத்திரை உதவியின்றி நிம்மதியாக உறங்க வைத்தவளை நேரில் கண்டு நன்றி கூற வேண்டும் என எண்ணம் எழ உடனே எழுந்து விட்டான்.

பொழுது புலர இன்னும் நேரம் இருந்தது. அதிகாலை பனியின் குளிர் காற்று ஜன்னல் வழியே அவன் நாசி தடவி சென்றது.கால்கள் தன்னிச்சையாகவே மயூராவின் அறையை நோக்கி நகர்ந்தது. இரவு அவனுக்கு சேவை செய்வதிலே கழிந்துவிட்டதால் மயூரா இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள். குழந்தை போல் உறங்குபவளின் கண்கள் பழைய குறுகுறுப்பை தொலைத்து விட்டிருந்தது.

ருத்ரன் மெல்ல அவள் அருகில் சென்றான். குளிருக்கு சுகமாய் கனத்த கம்பளியை கழுத்து வரை போர்த்திக் கொண்டு உறங்கிகுபவளை அப்படியே கட்டிக் கொள்ளலாம் என்று தோன்றியது அவனுக்கு.உறக்கத்தில் அசந்து அவன் நின்ற பக்கம் திரும்பியவளின் கை போர்வையிலிருந்து வெளிப்பட்டு அருகில் இருந்த தலையணையை அணைத்துக் கொண்டது.

அவள் கையில் ஒளிந்திருந்த இரகசியத்தை கண்டு கொண்டவனின் முகமோ கோடி சூரியன் போல் பிரகாசித்தது. அவளை எழுப்பாமல் மெல்ல அவள் தலை கோதி விட்டு ருத்ரன் அவ்விடம் விட்டு அகன்றான்.அன்றைய விடியல் அவனுக்காகவே விடிந்தது போல் இருந்தது. உற்சாகாமாய் ஜாக்கிங் முடித்தவன், எல்லோரிடமும் சிரித்த முகமாகவே வளைய வந்தான்.

ஐந்து வருடங்கள் கழித்து மீண்ட அவன் புன்னகை. அவன் மனதையும் உயிரையும் எப்பொழுதும் களவாடும் களவாணி மயூராதான் என்பதை முழுவதும் புரிந்துக் கொண்டான்.சற்று தாமதமாகவே மயூரா எழுந்து காலைக்கடன்களை முடித்தாள். வயிறு பசிக்கவும் கீழே இறங்கியவள், சாப்பாடு மேஜையில் மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த ருத்ரனைக் கண்டாள்.

மனதிற்குள் "பார்ரா நேத்து நைட் வெயில வாடின கீரை தண்டு மாதிரி இருந்தான், இன்னைக்கு என்னான்னா பிரெஷ்சா பறிச்சு வெச்ச ஆப்பிள் மாதிரி பளபளக்கிறானே. எல்லாம் என் நேரம் '' மயூரா மனதிற்குள் கறுவியவாறே சாப்பிட அமர்ந்தாள்.

அவளைப் பார்த்து உல்லாசமாய் விசிலடித்தவாறே ருத்ரன் கண்ணடித்தான்.மயூராவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. அவனை முறைத்தவாறே தோசையை உள்ளிறக்கினாள்.அப்பொழுது ருத்ரன் "ரொம்ப நன்றி செல்லக்குட்டி, என் வலியை சரி செஞ்சதுக்கு. ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியாக தூங்கினேன். அது சரி, நீ நல்லா தூங்கனியா?'' எதுவும் அறியாதவன் போல கேட்டான்.

மயூரா திடுக்கிட்டாள். "அடப்பாவி கிராதகா, நைட் எல்லாம் உனக்கு தலை அமுத்தியே கை கழண்டு போயிடுச்சு. இதுல எப்படிடா நான் தூங்கியிருப்பேன்?'' மனம் இவ்வாறு புலம்ப,

"நைட்ல ஒரு கோட்டானுக்குத் தலைவலியாம். அது பண்ண அழிச்சாட்டியத்தில் என் தூக்கம் போச்சி மாமா. இப்போ என்னான்னா அந்த கோட்டான் பிரெஷ்சா தோசை மொக்கிட்டுல யிருக்கு '' மயூரா கூலாய் கூற ருத்ரனுக்கு புரையேறியது.

"ஏய் கருப்பாயி என்னையா கோட்டான்னு சொல்ற? உனக்கு என்ன கொழுப்பு?'' ருத்ரன் எகிற,

"டேய் என்னை கருப்பாயினு கூப்பிடாதே மாடசாமி, உன் மண்டைய பொளந்திடுவேன் '' பதிலுக்கு மயூரா மல்லு கட்ட,
ஒரு கட்டத்தில் இருவருக்குமே சிரிப்பு வந்தது. ஐந்து வருடங்களில் தொலைந்து போயிருந்த அவர்களின் இயல்பான சம்பாஷனைகளும், சண்டைகளும், திரும்ப கிடைத்தது போல இருந்தது இருவருக்கும்.

அங்கே வந்த மதுவும் "வாவ் எத்தனை வருஷம் கழிச்சு இந்த ரெண்டு அறந்தவால்களைப் பார்க்கிறேன். வயசு ஆச்சுனுதான் பேரு, ரெண்டு பேரும் சிண்டு பிடிக்கறது நிப்பாட்டவே இல்லை. எனிவே ஐ அம் ஹாப்பி. என் அக்கா மாமா இப்படி அடிச்சிக்கிறது எவ்ளோ இன்பமாயிருக்கு''மது குதூகலித்தாள்.

மயூரா அவளை முறைத்தவாறே எழுந்து கிச்சனுக்குள் செல்ல, ருத்ரன் மது காதை செல்லமாய் திருகினான்.
"உனக்கு கல்யாணம் வந்ததும், எங்களையே கலாய்கிற தைரியம் வந்திருச்சு வாலு. எல்லாம் அவன்.. அதான் உங்க அக்காவோட வக்கீல் .. அந்த வண்டு முருகன் கூட இருக்கிற தெம்புதானே '' ருத்ரன் கேலி செய்ய மது வெக்கத்தில் சிரித்தாள்.

மயூரா திரும்பவும் ஹாலுக்கு வந்ததும், அவளுக்காய் காத்திருப்பவன் போல் ருத்ரனும் " மயூரா இன்னிக்கு உனக்கு பிரீ னா நாம இன்பவனம் போய்ட்டு வரலாமா? மது வெட்டிங்கு அவங்களை அழைக்கணும் இல்ல . அப்பா அன்னிக்கே எல்லோருக்கும் அழைப்பு வெச்சிட்டாரு. எல்லோருக்கும் புது துணி கூட எடுத்துயிருக்கு. நாம போய் குடுத்திட்டு வரலாமா?''

மயூராவும் வந்ததிலிருந்து இன்பவனம் பக்கம் செல்லவே இல்லை. ருத்ரன் அழைக்கவும் அமிர்தம் பாட்டி சிவராம் தாத்தாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

"சரி மாமா போகலாம் ''

இன்பவனம் ஐந்து வருடங்களில் பெரிதும் மாறி யிருந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள் அன்பு மட்டும் அப்படியே இருந்தது. தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த அமிர்தம் தான் முதல் முதலில் மயூராவைக் கண்டது.

"என் கண்ணம்மா வந்துட்டியா '' வாஞ்சையாய் அவளை அணைத்துக் கொண்டார்.
பாட்டினு மயூராவும் அவரைக் கட்டிக் கொண்டாள். மெல்ல அவள் காதருகே "டேய் பாப்பா, இவன்தானே அந்த நெட்டக் கொக்கு? உன் மாடசாமி ருத்ரன்?'' ஓரக் கண்ணால் ருத்ரனை அளந்தவாறே அமிர்தம் கேட்க மயூரா ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

"நோட் பாட், பார்க்க நல்லாதான் இருக்கான் '' பாட்டி கண்ணடித்தார்.

"இந்த கடங்காரன விடுங்க பாட்டி, தாத்தா எங்க, இன்ப வனம் வந்ததும் ஒரு சுற்று பெருத்துப் போய்ட்டிங்க போல ''மயூரா சொல்லி சிரிக்க,

"அந்த மனுஷன் சொன்ன மாதிரி செஞ்சிட்டாரு மயிலே. அம்புஜம் மாமி பின்னாலே இந்த மனுஷன் அலைஞ்சிண்டு இருக்காரு. இப்போ கூட பாரு , அங்கதான் மாமி கூட கதையடிச்சிட்டு இருக்காரு ''
பாட்டி சொல்ல மயூரா தோட்டத்திற்கு அருகே இருந்த பெஞ்சில் பார்வையை ஓட்டினாள்.

சிவராமன் தாத்தா அம்புஜம் பாட்டிகிட்ட ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் .
அட பாவி தாத்தா. சொன்ன மாதிரி சைட் அடிக்க வந்துட்டியே. மயூரா ஆச்சர்யமடைந்தாள்.
"இந்த ஓல்ட்மேன்னை விடு, இவரோட சீனியர் ஜொள்ளு வழியரத பார்க்கறியா?'' பாட்டி இப்படி கேட்கவும் மயூராவிற்கு வியப்பு கூடியது.

"அது யாரு பாட்டி நம்ப தாத்தாவுக்கே சீனியர். அதுவும் இங்க?''
"எல்லாம் உன் யோகி தாத்தா தான். வந்து பாரு உன் யோகி தாத்தா லூட்டிய '' அமிர்தம் கூற மயூரா கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. அருகில் இருந்த ருத்ரன் நிலையும் அதுவே.

"யோகி தாத்தா வா? அவர் சிங்கிள்தானே? எப்போ எப்படி யார்கிட்ட சிக்கினாரு பாட்டி '' மயூரா கேட்க,
"அத நீயே உன் கண்ணால பாரு '' தோட்டத்திற்கு மறுகோடியில் இருந்த ரோஜா வனத்தை சுட்டிக் காட்டினார்.
அங்கே அஞ்சனை பாட்டி ரோஜா மலர்களை கொய்து கொண்டிருக்க, யோகி தாத்தா அவர் பின்னாலே பூக் கூடையுடன் அலைந்துக் கொண்டிருந்தார்.

"ஐயோ பாட்டி, அவங்க ரெண்டு பேரும் பிரன்ட்ஸ் தானே. இப்படி பேசிட்டு போறது எல்லாம் நாம தப்பா நெனைக்கலாமா?'' மயூரா வெள்ளந்தியாக கேட்க,

"அட மக்கு மயிலே, என் அண்ணனும் அஞ்சனை அண்ணியும் காலேஜ் டைம்லே லவ்வர்ஸ் டி''அமிர்தம் பாட்டி இடியை இறக்கினார்.

"என்னது லவ்வர்ஸ் ஆ?'' மயூரா ருத்ரன் கோரசாக வாய் பிளக்க.

"எஸ் மை சைல்ட்ஸ். அவங்க லவ்வர்ஸ் தான்''

"அப்போ தாத்தா ஏன் அவங்கள கட்டிகல? ஏன் ரெண்டு பேரும் இப்படியே காலத்தை தள்ளிட்டாங்க '' மயூரா கேட்க,

"ஹ்ம்ம்ம், அதுதான் விதி போல, உன்னை மாதிரி ஜாலி டைப் தான் யோகி அண்ணா, அஞ்சனை அண்ணி அவனுக்கு எதிர்பதம். ஏதோ ஒன்னு அவங்களை ஈர்த்துச்சு, எதுவோ ஒன்னு அவங்களை பிரிச்சிடுச்சு.''
" வாழ்க்கை அண்ணாவுக்கு விளையாட்டு மாதிரி, அஞ்சனை அப்படி இல்லை, எல்லாமே கணக்கு, திட்டம் செயல்னு நுணுக்கமா இருப்பாங்க. யோகி அண்ணாக்கு அதெல்லாம் செட் ஆவாது. அவன் ஒரு பிரீ பெர்ட் மாதிரி. அவனுக்கு ஒரு தேடல், அஞ்சனைக்கு ஒரு தேடல். ரெண்டு பேரும் ஒரு கட்டத்தில் இந்த உறவு சரி வராதுனு பிரிஞ்சாங்க. அதுவும் லைப்ல நல்ல பார்ட்னர் வந்தால் கல்யாணம் பண்ணிக்கணும் சத்தியம் வேற '' பாட்டி நிறுத்தினார்.

"மேல சொல்லுங்க பாட்டி, அப்புறம் அவங்க லைப் எப்படி போச்சு?'' மயூரா ஆர்வமுடன் கேட்க,

"அண்ணா ஊரு சுத்த ஆரம்பிச்சான். சொத்து சுகத்து மேலே அவனுக்கு ஈர்ப்பு இல்லை, நெறைய மக்களை பார்த்து நெறைய விஷயங்களை கத்துக்கிட்டான். யோகா, சித்த வைத்தியம் அது இதுனு, அவன் இளமை அதுலே கரைஞ்சிடுச்சி.அஞ்சனையும் படிச்சு முடிச்சு, கணித பேராசிரியர் ஆயிட்டாங்க. எண்கள் தான் அவங்களோட தேடல்களா இருந்துச்சு. ரெண்டு பேருக்குமே வேற யார் மேலயும் காதலும் வரல. இப்படியே காலத்தை ஓட்டிட்டாங்க.''

"அஞ்சனை அண்ணி வால்பாறைல தான் இருந்தாங்க. அவங்க தான் பிள்ளை இல்லைனு எனக்கு குறையே தெரியக் கூடாதுன்னு கார்டனிங், பூவேலை அது இதுனு கத்துக் வெச்சாங்க. இப்போ ரெண்டு பேருக்கும் வாழ்க்கையில தேடுன விஷயங்கள் அயர்ச்சிய குடுத்திருச்சு போல . சில வருஷங்களுக்கு முன், அண்ணா என்னை பார்க்க வர்ற அப்போதான் அஞ்சனைய பார்த்தது.அது வரைக்கும் அவனும் வால்பாறையை எட்டிப் பார்க்கல. அவங்களுக்குனு சொந்தம்னு யாரும் இல்லை. அண்ணாவும் ஒண்டிக்கட்டை. என்கூட வர்றியானு இங்க கூட்டிக் கிட்டு வந்திட்டான்.''

"அருமையா வாழ வேண்டிய வாழ்க்கைய அத தேடறேன் இத தேடறேனு ரெண்டு லூசுங்களும் தொலைச்சிடுச்சிங்க. பட், அந்த தேடல்கள் கூட அவங்கள் லவ் முன்னுக்கு தோத்து போயிடுச்சி, உண்மையான காதல்தான் நேசிக்கறவங்கள் கனவை கூட சேர்த்து நேசிக்க வைக்கும் போல ''.

"அந்த விஷயத்தில் இவங்க லக்கிதான். மனசுக்கும் கனவுக்கும் மரியாதை குடுத்தனாலேதான் என்னவோ லைப்ல திரும்பவும் அவங்க சேர்ந்திட்டாங்க. இரை தேடி பறந்த பறவைகள் கூடு வந்து சேர்ந்திட்டாங்க.
"இதுக்கு மேலே எத தேட போறாங்க இவங்க. லைப் ல தேடி அலைஞ்ச விஷயங்களை இனியாச்சும் பகிர்ந்து வாழட்டும்.
காதலுக்கு வயசு இல்லைதானே மயிலு?'' மயூராவை அர்த்தபுஷ்டியோடு
அமிர்தம் கேட்டார்.

* தொடரும் 😁
 

Author: KaNi
Article Title: 🌹பாகம் 22🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN