பூச்சரம் 5

ஒரு நாள் மதிவேந்தன் வெளியே கிளம்புவதற்காக கண்ணாடி முன் நின்று தலை சீவிக் கொண்டிருக்க, வெளிக் கூடத்திலிருந்து ஐயாருவின் குரல் உரத்து கேட்டது.

“அந்த செந்தில்நாதன் ரொம்பத்தான் பண்றான்லே. இப்டியே போனான்னு வெச்சுக்க, பொறவு இந்த சிவகுரு யாருனு அவனுக்கு காட்ட வேண்டி வரும்னு சொல்லி வைலே” என்றவர் துண்டை உதறி தோளில் போட்ட படி அவர் வெளியே செல்ல, கூடவே அவர் பின்னால் தலை கவிழ்ந்த படி சென்றார் மாறன்.

இவன் தன் அறையிலிருந்து வெளியே வர, ஐயாருவின் விறைத்த முதுகு தான் கண்ணில் பட்டது. சிறிது நேரம் யோசனையிலே நின்றவன் பின் ஒரு முடிவுடன் அவர்கள் பின்னே சென்றான் மதிவேந்தன்.

வழக்கமாக ஊர் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் அனைவரும் கூடியிருந்தனர். ஐயாரு வரவும், எழுந்து நின்று அனைவரும் அவருக்கு வணக்கம் சொல்ல, ஒரு தலை அசைப்புடன் சென்று தன் இருக்கையில் அமர்ந்தார் ஐயாரு.

“எதுக்குலே இப்போம் இந்த கூட்டம்” என்று அவர் கர்ஜனையுடன் ஆரம்பிக்க

ஒருவர் எழுந்து, “ஐயாருக்கு தெரியாத்து எதுவும் இல்ல. எல்லாம் ஒங்களுக்கு தெரிஞ்ச வெசயந்தேன். இன்னும் சொல்லப் போனா பழைய வெயசந்தானுங்க. நம்ப செந்தில்நாதன் ஐயா...” என்று எழுந்து நின்றவர் சொல்லிக் கொண்டே போக, ஐயாரு ஒரு பார்வை பார்க்க, பேசிக் கொண்டிருந்தவரின் பேச்சு பாதியிலேயே நின்றது.

பின் தன்னைச் சமாளித்தவர் ஒரு சாதியின் பெயரைச் சொல்லி இந்த சாதி தலைவரான செந்தில்நாதன் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் எனவும்

இடையில் புகுந்த ஐயாரு, “என்னலே இப்போம் என்ன சொன்னீரு? மறுக்கா சொல்லும்” என்று கேட்க

வார்த்தைகள் தந்தி அடிக்க, “கோரிக்க” என்றார் எழுந்து நின்றவர்.

“ம்ம்ம்.... மேலே சொல்லும்” என ஐயாரு சொல்லவும், அதற்குள் செந்தில்நாதனே எழுந்து

“எங்க இனத்துப் பிள்ளைங்க பள்ளிக்கூடம் போகவும் வயசானவங்க ஆஸ்பத்திரிக்கு போகவும் இப்போம் நாங்க போய்வர்ற வழி செரமமா இருக்குதுங்க. போய்ச் சேரவும் காலதாமதம் ஆகுதுங்க...”

“ஆனா அதத்தாம்லே ஒங்க பாட்டன் முப்பாட்டன் எல்லாம் கால காலமா பயன்படுத்திக்கிட்டு இருந்தாங்கடே” ஐயாருவின் குரலில் அப்படி ஒரு எகத்தாளம் தாண்டவம் ஆடியது.

அதை செந்தில்நாதன் கண்டு கொண்டாலும் விடுத்தவர், “ஆமாங்க ஐயா. அதை நாங்க மறுக்கலையே. அப்ப வேற வழி இல்லீங்க. ஆனா இப்ப அப்டி இல்லங்க. மாத்து வழி அரசாங்கமே போட்டுக் குடுத்துருக்கு. அங்கிட்டு நாங்க குறுக்கால வெரசா போறதுக்கு ஒங்க தென்னந் தோப்பு வழியா போக நீங்க சிறுசா வழி செஞ்சிக் குடுத்தீகனா நல்லா இருக்கும். பெருசா வேணாம் அவசரத்துக்கு ஒரு பிளஷர் போறதுக்கும் படிக்குத பிள்ளைங்க பள்ளிக்கூடம் போறதுக்காண்டியும் பாதை செஞ்சி குடுங்க. ஒரு மரத்தை கூட வெட்டுத வேலை இருக்காதுங்க”

“நீ யாருலே என்னைய அதிகாரம் பண்ண? எனக்கே உத்தரவு போடுறீயலோ?” என்று கர்ஜித்தவர் “அப்டி நான் செய்ய ஒத்துக்கிடலைனா என்ன செய்வீரு” என்ற நிமிர்வுடன் ஐயாரு கேட்க

“இதெல்லாம் அநியாயம் பார்த்துக்கிடுங்க. நாங்களும் சக மனசங்கதேன். வுட மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? பொறவு நான்....”

“என்னாலே? கோர்ட்டு போவியோ இல்ல மனுசஉரிமை ஆணையம் போவியோ? எங்கன போனாலும் என்னைய ஒண்ணும் செய்ய முடியாதுலே. அது என் பாட்டன் முப்பாட்டன் சொத்து இல்லலே, என் சொத்து. நான் வாங்கினதுடே. அதை பாதைக்கு குடுக்கச் சொல்லி எந்த அரசாங்கமும் எனக்கு ஆர்டர் போட முடியாதுலே. நீ கொஞ்சம் கூடி பணிவா கேட்டிருந்தேனு வெச்சுக்கவே, இந்த சிவகுரு யோசிச்சு இருப்பேன்லே. ஆனா நீ என்னையவே குடுக்கச் சொல்லி உத்தரவு இல்ல போடுறீரு! பொறவு நான் எங்கினக் கூடி தர யோசிப்பேன்லே? அதெல்லாம் தர முடியாதுடே” என்று தீர்மானமாக சொல்லிய படி எழுந்து நின்றவர்

“ஆனா நீ கெஞ்சி இருந்தாலும் ஒங்களுக்கு வுட்டுக் குடுத்திருக்க மாட்டேன்லே. ஏன்னா நீங்க என் சாதிக்காரங்க இல்லலே” என்றவர் தன் துண்டை உதறி தோளில் போட்ட படி விலகிச் சென்றார் ஐயாரு.

இது தான் ஐயாரு! அவருடைய உதடு மட்டும் இல்லை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஓடும் அத்தனை நாடி நரம்புகள் எல்லாம் உதிர்க்கும் ஒரே வார்த்தை என் சாதி, என் குலம், என் இனம் என்பது தான்!

கூட்டம் கலைய, அங்கு நின்றிருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மதிவேந்தனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்? வீட்டிற்குப் பெரியவரான ஐயாருவை கந்தமாறன் மாமாவே கேட்காத போது தான் கேட்டால் மட்டும் மாறிவிடுவாரா என்ன? அப்படியிருந்தும் அவன் கேட்கத் தான் செய்தான்.

அதற்கும், தான் இப்படி தான் என்ற பதிலைத் தான் தந்தார் ஐயாரு.

நவீனும் நரேனும் வேந்தனின் முகத்தைப் பார்த்தவர்கள், “விடுணே. இவுக நல்லது செஞ்சிருந்தா ஐயா படத்துல வார்ற சரத்குமாருக்கு ஒரு பாட்டப் பாடுத மாதிரி நாமளும் ஐயாத் துரை எங்க ஐயாத் துரைன்னு பாட்டு படிக்கலாம்ணே. ஆனா இவுக தான் அதுல வார்ற வில்லனாச்சே! பெறவு எப்டி இருப்பாக? இவுக இப்டி நடந்துக்கிடுலனா தான் அதிசயம்ணே” என்று இருவரும் கோரசாகச் சொல்ல, முகத்தில் கவலையுடன் விலகிச் சென்றான் வேந்தன்.

ஐயாருவிடம் பாதை தரச் சொல்லிக் கேட்ட செந்தில்நாதனின் பேரன் தான் தர்மா. இவன் நிலவழகியை விரும்ப, அவள் இவனை விரும்பவில்லை. ஒருவேளை காதல் இருவரையும் நேர்க்கோட்டில் சந்திக்கவைத்தால் அப்போது ஐயாருவின் முடிவு? அப்படிப்பட்ட சூழ்நிலையில் பார்ப்போம்.

அன்று தோட்டங்களுக்குப் பாத்தி கட்டி மடை மாற்றிக் கொண்டிருந்தான் மதிவேந்தன்.

“எலே மாப்ள! ஏலேய் மாப்ள!” என்று அங்கு இந்த வயதிலும் குழந்தையின் குதூகலத்துடன் ஓடி வந்தார் கந்தமாறன்.

“மாமோய்! பைய பைய… பைய வாரும்” இவன் சொல்லி முடிப்பதற்குள் வேந்தனை அலேக்காகத் தூக்கிச் சுற்றியிருந்தார் அவர்.

தன் தலையில் கட்டியிருந்த முண்டாசு சரிய, கையிலிருந்த மண்வெட்டியைக் கீழே போட்டவன் மண்ணும் ஈரமும் படிந்திருந்த கையால் மாமாவின் மீசையை முறுக்கியபடி “என்ன மாமோய் இன்னைக்கி இம்புட்டு சந்தோசம்?” என்று இவனும் ஆர்ப்பாட்டமாக கேட்க, அதேநேரம் நவீனும் நரேனும் அங்கு வந்தவர்கள்

“அண்ணே! சந்தனம் ஜவ்வாது பன்னீர நீ எடுத்து சேர்த்துக்கோ”

என்று நவீன் பாட

“எதுக்குடா….” வேந்தன்

“மல்லியப்பூ முல்லைப்பூவு அல்லிப்பூவு மாலை கட்டி கோர்த்துக்கோ”

என்று நரேன் பாட

“என்னடா சொல்றே…” வேந்தன்

“அது ஏன்தான் தெரியுமா நான் சொன்னா புரியுமா”

என்று அவன் மாமா பாட

“ஏன்?” என்ற ஆவலுடன் இவன் சுற்றி இருந்தவர்களைக் கேட்க

“ஹே.... ஹே.... ஹே.... என் அண்ணி பூந்தென்றல் வரப் போறா சீக்கிரமே புயல் காற்றா வரப் போறா....”

என்று நவீனும் நரேனும் கோரசாக பாடி ஆட

முகம் கொள்ளா சந்தோஷத்துடன் இவன் அப்படியா என்பது போல் மாமனைப் பார்க்க,

“ஆமாடே மாப்ள! என் மவ வாரா” என்று அவர் ஆமோதிக்க,

“மாமோய்!” என்ற கூச்சலுடன் அவரைக் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவன் கூடவே தன் மாமனைத் தூக்கி தட்டாமாலை சுற்றியிருந்தான் மதிவேந்தன்.

அந்த சந்தோஷமும் ஆட்டமும் பாட்டமும் அன்றைய இரவு வரை கந்தமாறனுக்கு நீடித்தது.

ஐயாரு குடும்பத்தின் பண்ணை வீடு ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக இருந்தது. அதனை ஒட்டி பல ஏக்கர் கணக்கில் வயற்காடு இருக்க, அதில் நிலக்கடலை என்று தானிய வகைகள் போட்டால் காவலுக்கு கந்தமாறன் தான் வந்து இங்கு தங்குவார்.

அப்போதெல்லாம் அவருடன் இங்கு வந்து விடுவான் வேந்தன். அந்த சிறு வயதிலேயே மாமாவுக்கு நான் தான் துணை என்பான். அங்கேயே தங்கி புழங்கும் அளவுக்கு எல்லா வசதியும் உள்ள பண்ணை வீடு அது.

அந்த வீட்டை ஒட்டி தளம் போட்ட மோட்டார் அறை ஒன்று சிறியதாய் இருக்க, அதற்கு நிழலாய் ஒரு கொய்யா மரம் அதன் மேல் படர்ந்த அழகிய கொடி சம்பங்கி என அதன் வாசமே இரவு நேரத்தில் அந்த இடத்தை ரம்மியமாய் காட்டும்.

அதனாலேயே வேந்தனுக்கு விவரம் அறியும் வயது வந்த பிறகு இந்த ரம்மியத்தை ரசிக்க சில நேரங்களில் இங்கு வந்து தங்கி விடுவான். அதுவும் இந்த மோட்டார் அறை தளத்தின் மேல் தான் படுப்பான். அவன் இங்கு தங்க அந்த ரம்மியம் மட்டுமா காரணம்? இல்லை இல்லை, அந்த சம்பங்கியை அங்கு வைத்தவளும் தான் காரணம்.

இன்று இரவு அப்படிப் பட்ட மோட்டார் தளத்தின் மேலே தான் மாமனும் மாப்பிள்ளையும் அமர்ந்து தண்ணி அடித்துக் கொண்டிருந்தார்கள்.

“பாட்...டுப் பா.....டவாஆஆஆ.....” என்று மாமன் பாட

“வ..... வாஆஆஆஆ....” என்று மாப்பிள்ளை அதையே தாளம் தப்பாமல் ராகம் இழுக்க

“பா....ர்த்....துப் பேச.....வாஆஆஆ......

பாடம்.... சொல்லவாஆஆஆ......

பறந்து..... செல்லவாஆஆஆ.....”

என்று இப்படி ஒவ்வொரு பாடல் வரிக்கும் ராகமிட்டபடி ஒவ்வோர் கிளாசாக சீம சரக்கைத் தன் வயிற்றுக் குள்ளே தள்ளிக் கொண்டு போதையில் இருந்தார் கந்தமாறன்.

“மாமோய்! நீ பறந்து போகாத” ஆள் காட்டி விரலால் தன்னையே சுட்டிக் காட்டியவன் “நான் பறந்து போய் ஒம்ம பொண்ணத் தூக்கிட்டு வருதேன் மாமோய்” என்று அவரை விட போதையில் இருந்த வேந்தன் இதை மட்டும் தெளிவாய் சொல்ல,

“ஒனக்கு இல்லாத உரிமையா மாப்ள? என் மவ பொறந்ததும் இவ தான் ஒன் பொஞ்சாதினு சொல்லி என் மவள நான் தானே ஒன் மடியில மொத மொத குடுத்தேன்? போய் தூக்குடே மாப்ள. என் மவள அப்டியே தூக்கிட்டு நாடு நாடா ஊர் ஊரா எங்க வேணா போ மாப்ள” என்று மாமன் அனுமதி தர

“மாமோய், ஐ லவ் யூ!” என்று சந்தோஷத்தில் வெட்கப் பட்டான் அவர் மாப்பிள்ளை.

“இத வரப் போற என் மவ கிட்ட சொல்லுடே மாப்ள” என்றவர் “இன்னும் செத்த நாள்ளே என் மவளுக்கு படிப்பு முடியுதுடே. அதேன் இந்த முறை வரும் போது என் மவ கிட்ட பேசப் போகுதேன்”

“என்னனு.... மா...மா.....” இவன் குரல் குழறியது.

“என் மாப்ள சிங்கக் குட்டி, நீ எங்கிட்டு தேடினாலும் கெடைக்காத வைரக் கட்டி, ஒன்னோட அப்பா... நான் ஒனக்கு பாத்து வெச்சிருக்குற மாப்ள இவன் தான். இது நீ பொறந்தப்போம் எழுதின ஒறவு இல்ல. சென்ம சென்மமா நீங்க ரெண்டு பேத்தும்தேன் புருசன் பொஞ்சாதி. அதத்தாம்ல அப்பா… இந்த பெறவியில முடிக்கப் போகுதேன். அதனால என் மாப்ளய கல்லாணம் செஞ்சிக்கிடுமானு சொல்லுதேன்” என்க

“அப்போ... இம்புட்டு சொன்னாதேன் ஒன் மவ என்னைய கெட்டிக்கிடுவாளா மாமா?” இவன் சுருதி இறங்கி கேட்க

“எலேய் மாப்ள! அவ என் மவ டே. நான் சொன்னா மறு பேச்சு இல்லாம ஒன்னைய இல்ல நான் யார காட்டுதாலும் கெட்டிக்கிடுவா. ஆனா இப்போம்வர இம்புட்டு நீளமா என் மவ கிட்ட நான் பேசுனது இல்லடே. அதேன் ஒரு அப்பாவா கொஞ்சம் கெத்து காட்டப் போகுதேன் மாப்ள” அவர் வெள்ளேந்தியாய் சொல்ல

“மாமோய் நீ இனிப்பு மாமா! {so sweet}. ஒன் மவ ஒன்னைய விட இனிப்பு மாமா!” என இவன் அசடு வழிய,

“எய்யா! என் மவதாம்லே எனக்கு சாமி, என் குலசாமி. என் அம்மனை நல்லா பாத்துக்கிடுவ இல்லடே?” என்று ஒரு தந்தையாய் அவர் கேட்க

“மாமோய்! சிரிப்பு மூட்டாதீரும். நீ பெத்து வச்சிருக்கிற அந்த பஜாரிதேன் என்னைய பாத்துக்கிடணும். எதுக்கும் முழுசா இப்பவே என்னைய பாத்துக்கிடு மாமா. கல்லாணத்துக்குப் பெறவு என் கெதி என்னாவோ” என்று விளையாடியவன்

“ஒன் மவள, என் பொஞ்சாதிய, என் பாப்புவ, ராணியாட்டும் இல்ல இல்ல.. ராணியாவே பாத்துக்கிடுவேன் மாமா” என்று அவரை அணைத்து வாக்கு கொடுக்க,

அதில் குளிர்ந்தவர், “என்னைய மாதிரி, ஒன் அம்மா மாதிரி ஒத்தையா புள்ள பெத்துக்காதடே மாப்ள. எப்டியோ எனக்கு ஒரு நாலு பேர புள்ளைங்களாச்சும் வேணும்டே” ஒரு கண்ணை மூடி தன் ஐந்து விரலையும் விரித்து அவன் முன் நீட்டிய படி அவர் சொல்ல

“என்ன மாமா நாலு சொல்லுத? நான் பத்துக்கு கொறையாம இல்ல கணக்கு பண்ணி வெச்சிருக்குதேன்?” இவன் மீசையை முறுக்க

“ஹா... ஹா... அட்ராசக்க! அட்ராசக்க! நீ பெத்து குடுடே மாப்ள. நான் வளக்குதேன். என் மவளத்தேன் என்னால வளக்க முடியல. என் பேர புள்ளைங்களயாச்சும் வளத்தெடுக்கணும்லே” என்று குதூகலமும் சோகமுமாய் சொன்னவர் அப்படியே அந்த தரையில் படுக்க

“மாமா! மாமா! இங்கிட்டு தூங்கிடாத மாமா. வா... நாம உள்ளார போலாம்... இங்கன பனி கொட்டுது”

“இது வைரம் பாஞ்ச ஒடம்பு மாப்ள. இந்த பனி எல்லாம் என்னய ஒன்னும் செய்யாதுலே”

“அதெல்லாம் பழைய கதை. இப்போம் ஒனக்கு வயசாயிட்டு மாமா” என்றவன் அவரைக் கைத் தாங்கலாய் கீழே அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைக்க,

அவன் கையைப் பிடித்தவர் “என் கூடவே நீயும் தூங்குடே மாப்ள” என்க

அந்த கட்டில் பெரியது என்பதால் அவருடனே இவன் படுக்க, அவன் மேல் கையைப் போட்டவர், “என் மவள நல்லா பாத்துக்க சாமி” என்ற முணுமுணுப்புடன் மகளைப் பற்றிய பல எதிர்கால கனவுகளுன் தூங்கிப் போனார் அவர்.

இன்றைய தினம் மாமனும் மருமகனும் போட்ட ஆட்டத்தின் விளைவால் படுத்திருந்த மதிவேந்தனின் எண்ணங்கள் அப்படியே பின்னோக்கிப் பயணித்தது...

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.