உறவாக வேண்டுமடி நீயே 6

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 6

“ஹலோ AR சார், வெல்கம் வெல்கம்! with pleasure சார்” முகமெல்லாம் பிரகாசமாக வரவேற்றவள் “உங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கேன் சார். பட் நேற்று தான் உங்களைப் பார்க்க முடிந்தது” அவள் சாதரணமாகச் சொல்ல

“நீங்கள் யுகநந்திதா P.A இல்லையா? அப்போது நல்ல விதமாக இருக்காது..” அதாவது என் எதிரிகள் என்னைப் பற்றி தப்பான மூலாம் பூசியிருப்பார்கள், அதைத் தானே கேள்விப் பட்ட என்ற அர்த்தத்தில் அவன் சொல்ல

“என்றைக்குமே கரித் துண்டை யாராலும் வைரமென்று ஏற்றுக் கொள்ள முடியாது தான் சார்” அதாவது உங்களைப் பற்றி யாரும் இல்லாததைச் சொல்லவில்லை என்ற பதிலை இவள் கொடுக்க, அபிக்கு கை முஷ்டி இறுகியது என்றால் துருவனோ

‘ஐயோ! இவள் பேசியே ஆப்பு வைத்துவிடுவாள் போலவே!’ என்ற பயத்தில் “என்ன ணா சாப்பிட வந்தீர்ககளா? சாப்பிட்டீர்களா?” என்று அண்ணனிடம் கேள்வி கேட்டு இவன் திசை திருப்ப

“நான் வந்தது இருக்கட்டும். உனக்கு நான் என்ன வேலை கொடுத்தேன் அதை முடிக்காமல் நம் ஸ்டேட்டஸ் தெரியாமல் இங்கென்ன உனக்கு வெட்டி அரட்டை?” அவன் வள்ளென்று விழவும்

தான் இவர்களுக்குக் கீழே என்பதை அபி சொல்லிக்காட்டவும், அதை உணர்ந்த பாரதியின் முகம் ஒரு நொடி கூம்பிப் போனாலும் அடுத்த நொடியே அவனுக்குப் பதில் கொடுக்க இவள் சண்டைக்கோழி போல் தலையைச் சிலுப்பிய நேரம் கண்களால் கெஞ்சினான் துருவன்.

அந்த கெஞ்சலை மீற முடியாமல் “excuse me! U pls continue.. I wil b back” என்றவள் இருவரையும் நிமிர்த்து பார்க்காமல் restroom சென்று விட, அதே நேரம் டேபிள் மேலிருந்த அவள் கைப்பேசியிலிருந்து

“கும்முறு டப்பர

கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு

கும்மாறா..” என்ற பாடலுடன் அழைப்பு வரவும், துருவனோ அண்ணனை சங்கடமாக பார்க்க

“நல்ல ரசனை இல்ல? இந்த பாடலுக்கு மேடம் கம்பி மேல் நடப்பதும், சார் கீழே நின்று மேளம் தட்டுவதும் நினைக்கவே செமையா இருக்கு டா துருவன்!” என்று எள்ளலுடன் அபி சொல்ல, அந்த சுழ்நிலையிலும் அவள் ஜீன்ஸ் பேண்டிலும் தான் கோட் சூட்டிலுமாக அப்படி ஒன்றை கற்பனை செய்து பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. இவ்வளவு சொல்லியும் தம்பி கோபப் படாமல் சிரிப்பதைப் பார்த்தவன் “அதே பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா டா?” என்க அதற்குள் பாரதி வந்துவிட, அவளுக்கு மறுபடியும் அழைப்பு வரவும் “சாரி guys.. i am going to leave.. bye” என்றவள் இன்முகத்துடனே வெளியேறினாள் பாரதி.

“சார் இப்போது ஆபீஸ் வருகிறீர்களா இல்லை hutch dog வேலையைப் பார்க்கப் போகிறீர்களா?” இப்போதும் அதே எள்ளல் அபியிடம்.

“உங்கள் கூடவே ஆபீஸ் வரேன் ணா” என்று சாதாரணமாகப் பதில் கொடுத்தாலும் மனதிற்குள் மட்டும் ‘அப்போது பாரதியை அண்ணனுக்குப் பிடிக்கவில்லையா?’ என்ற கேள்வி மட்டும் இருந்தது.

அபிக்கு பாரதியைப் பிடிக்காமல் இல்லை. தம்பிக்குப் பிடிக்கும் என்ற காரணத்தினாலேயே வெறும் பெயரளவில் தெரிந்த பாரதியைப் பிடித்திருந்தது. ஆனால் இந்த பாரதி அதிலும் நந்திதாவின் P.A என்று தெரிந்த பிறகும் இப்பொழுது அவள் கொடுத்த பதிலிலும் அவனுக்கு சுத்தமாய் அவளைப் பிடிக்க வில்லை. அதனால் தான் என்றும் யாரிடமும் பேசாத அவன் அந்தஸ்தை வைத்து இன்று அவளிடம் பேசியது.

மாலை வண்ண விளக்குகளில் அந்த ரிசார்ட் சொர்க்க லோகமென மின்னியது. எல்லோரும் மேல்தட்டு வர்க்கத்தினர் என்பதற்கு அடையாளமாக நடை உடை பாவனையில் மட்டுமில்லாமல் நுனிநாக்கு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தத்தம் குடும்பங்களை அறிமுகப் படுத்தியபடி உரையாடிக் கொண்டிருந்தனர். பார்த்தசாரதி சாரும் கிரண் சாரும் வாசலிலே நின்று ஒற்றுமையாக வந்தவர்களை வரவேற்ற படி இருந்தார்கள்.

இவர்கள் இருவரும் சண்டை போட, இவர்கள் பிள்ளைகளோ ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணை என்ற பாடத்தைப் பரிமாறிக் கொள்ள அவர்கள் பிடிவாதத்தில் இவர்களும் இறங்கி வந்து இருவரின் திருமணத்திற்கும் சம்மதித்து விட அதற்கான அறிவிப்பாகவும் நந்திதாவை கவுரவிப்பதற்காகவும் தான் இன்றைய விழா நடந்து கொண்டிருந்தது.

பிள்ளைகள் தொழிலை எடுத்த பிறகு பொதுவாக மணிமேகலை எந்த விழாவிலும் கலந்துகொள்வது இல்லை. அதனால் இன்றைய விழாவில் அபியும் துருவனும் மட்டுமே வந்திருந்தனர். அபிக்கு நந்திதா அவள் கணவனுடன் வருவாளோ என்ற சின்ன குறுகுறுகுப்பு. அதனால் அங்கு வந்தவனோ யாரிடம் என்ன பேசினாலும் அவளைத் தான் பார்வையால் தேடினான். இவன் தாயைத் தேட அவளின் முயல் குட்டியோ வழக்கம் போல “அபிப்பா!” என்ற அழைப்புடன் ஓடி வந்து அவனின் காலைக் கட்டிக் கொண்டது.

அதில் தன் நிலை பெற்றவன் “வாவ் பேபி! நீயும் வந்திருக்கிறாயா? யாருடன் வந்த பேபி?” என்று இவன் சுற்றும் முற்றும் பார்த்த படி கேட்க

அதே நேரம் அங்கு வந்த தங்கம் “நிங்கள நோக்காம் பட்டில்ல தம்பி.. இனி ஞங்களெல்லாம் இவ நோக்க மாட்டா” என்று குறை பட

“ஹலோ ஆன்ட்டி! நீங்கள் எப்படி இங்கே?”

“என்ட மோள கூட வந்தது தம்பி. இவளோட அம்மே இருந்தா வேணி யாருடோவும் போக மாட்டா. பட்சே நிங்கள தேடி வந்துட்டா. வரு.. என்ட மோள அறிமுகப் படுத்துறன்” என்ற படி அவர் அழைத்துச் செல்ல

அவரைப் பின் தொடர்ந்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ தைக்க, அவன் எது இருக்கக் கூடாது என்று நினைத்தானோ அதற்கு எதிர் மறையாக தூரத்தில் அழகான சில்வர் கலரில் காலர் வைத்த குர்த்தாவில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த யுகநந்திதாவைத் தான் நெருங்கினார் தங்கம். கண்கள் சுருங்கி விரிய அவளை அப்படியே தன் பார்வைக்குள் இழுத்துச் சுருட்டிப் புதைத்தவனுக்கு நாணேறிய வில்லென உடல் விறைத்தது.

“ராணிமா! இவரு.. ஞான் பரஞ்ஞதில்ல மேகலானு.. அவங்களண்ட மகன். பேர்..”

“அபிரஞ்சன்!” அவரை முந்திக் கொண்டு இவன் பதில் தர, அன்று தான் புதிதாக பார்ப்பது போல் இருவரும் பரஸ்பரம் அறிமுகப் படுத்திக் கொள்ள அப்பொழுது அவனிடமிருந்து “அம்மா” என்ற சொல்லுடன் நந்திதாவிடம் தாவினாள் திருவேணி.

மகளை வாங்கி அணைத்துக் கொண்டவள் “பேபி! அம்மா என்ன சொல்லியிருக்கேன் உன்னிடம்? வெளியில் வந்தால் உன் ஏஜ் பிள்ளைகளோடு விளையாட வேண்டுமென்று சொல்லியிருக்கேன் இல்ல? இப்படி அம்மா பாட்டியென்று மாறி மாறி எங்கள் கைகளிலேயே இருக்கக் கூடாது கோ...கோ... மை பேபி சமர்த்து இல்ல?” என்று மகளுக்கு அவள் எடுத்துச் சொல்ல

“ம்ம்ம்... ஓகே ம்மா” தேன் சிட்டு என தன் தலையை அசைத்தவள் தாய் சொல்லுக்குக் கட்டுப்பட்டு கீழே இறங்கப் போனவள் பின் அபியிடம் தாவி அவன் கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பதித்தவள் “பை அபிப்பா” என்று சொல்லி விட்டு தன் சகாக்களுடன் விளையாட ஓடி னாள் திருவேணி. அவளைக் கண்காணிக்க தங்கமும் சென்று விட, ‘கடைசியில் வேணி உன் மகள் தானா?’ என்று மனதிற்குள் குறித்துக் கொண்டவன்

“அப்புறம் உன் கணவர் வரவில்லையா?” இது தான் அவளிடம் அவன் கேட்ட முதல் கேள்வியாக இருந்தது.

“அவருக்கு வேலை அதிகம். வேலை நிமித்தமாக வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கிறார். அதனால் வரவில்லை” இவள் எந்த தயக்கமும் இல்லாமல் சொல்ல

“மகள், மனைவியை விட அப்படி என்ன வேலை? அதுவும் மேடம் பெரிதாக சாதித்திருக்கிறீர்கள். அதை அவர் பாராட்ட இங்கிருக்க வேண்டாமா?” கண்ணில் கூர்மையுடன் இவன் கேட்க

“என்றைக்கும் என் வெற்றிக்கும் சாதனைக்கும் அவர் தான் முழு முதல் காரணம் எனும் போது சம்பிரதாயத்திற்காக அவர் வந்து வாழ்த்த வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை. he is always back bone of my victory” அவள் குரலிலும் முகத்திலும் பற்றற்ற பெருமை பொங்கி வழிந்தது.

தன் புருவங்களை உயர்த்தியவன் “ஓ... குட்..” என்று சொல்ல அதன் பிறகு இருவருக்கும் தனித்துப் பேச நேரம் இல்லாமல் போனது. என்ன தான் அவளுக்குத் திருமணம் ஆனதை அவன் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அவனையும் மீறி அவனுக்குள் வெறுமையும் ஒரு வெற்றிடமும் குடி கொள்ளத் தான் செய்தது.

இவன் மனதிற்குள் ஆயிரம் அலைகள் அடித்தாலும் இவன் பார்வை என்னமோ நந்திதாவிடம் தான் இருந்தது. தன்னை ஜெயித்தாள் என்பதை விட இப்படி ஒரு வழியில் தன்னை ஜெயித்து விட்டாளே என்பது தான் அவனுக்கு அடங்காத பேரலையாய் பொங்கியது.

நந்தித்தா யாரிடம் பேசினாலும் மகளிடம் ஒரு பார்வை வைத்திருந்தாள். அதிலும் ஒரு சில ஆண்கள் அவளை நெருங்கும் போது தாய்க்கே உள்ள எச்சரிக்கை உணர்வுடன் அவள் பார்க்க, அதே வேணி அபியிடம் இருந்தால் மட்டும் அந்த உணர்வே இல்லாமல் இருப்பதைக் கண்டவனுக்கு ‘அப்படி நான் மட்டும் என்ன டி ஸ்பெஷல்?’ என்பதை தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான் அந்த சண்டிராஜன்.

விழா முடிய தூங்கி விட்ட வேணியைத் தன் தோளில் சுமந்த படி நந்திதாவிடம் வந்தவன் “நான் உன்னிடம் பேசவேண்டும்” என்க

“எதைப் பற்றி? என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றினா நான் பேசத் தயாராக இல்லை. கறாராக பதில் வந்தது அவளிடமிருந்து.

“ம்ஹும்... உன் வாழ்க்கையைப் பற்றி பேசவோ கவலைப்படவோ எனக்கு என்ன இருக்கு? பிசினஸ் பற்றி பேச மட்டும் தான் நமக்குள் இருக்கு?” இவன் விட்டேந்தியாக பதில் தர

ஒரு நொடி அவன் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்தை விழுங்கிய படி மவுனம் காத்தவள் “ம்... சொல்லுங்கள்.. என்ன பேசவேண்டும்?” இப்போது பழைய நந்திதாவாக திரும்பி இருந்தாள்.

“வீட்டிற்கு தானே போகிறாய்? வா போய்க்கொண்டே பேசுவோம்”. அதாவது நான் அழைத்து போகிறேன் என்று அவன் சொல்ல

“இல்லை.. நான் டிரைவருடன் வரவில்லை. self driving.. அம்மாவை அழைத்துக்கொண்டு போகவேண்டும். அதனால் இங்கேயே இப்பவே சொல்லுங்கள்”

“அவ்வளவு தானே? உன் கார் சாவியைக் கொடு. துருவன் அவர்களை அழைத்துக்கொண்டு போவான். நீ என் கூட வா” அவனிடம் பிடிவாதம் இருந்தது.

‘இது என்ன பிடிவாதம்?’ என்று உள்ளுக்குள் குமைந்தவள் “அதெல்லாம் வேண்டாம். எதுவாக இருந்தாலும் நாளைக்குப் பேசலாம்” இவளும் பிடிவாதம் பிடிக்க,

“இன்றே நான் உன்னிடம் பேசியாக வேண்டும். அதுவும் இப்போதே! நாளைக்கு நீ கேம்ப் போகிறாய் என்று தெரியும். சோ be quite and come with me” அதிகாரமாய் அவன் குரல் ஒலிக்க, ‘ச்சீ.... போடாவென்று போகலாம் தான். ஆனால் பேபி அவனிடம் இருக்காளே!’ என்ற எண்ணியவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.

அங்கு துருவனிடம் தங்கத்தை அழைத்துப் போகச் சொல்லியவன் “நீ இவர்கள் வீட்டிலேயே இரு துருவா. நான் நந்திதாவை டிராப் செய்யும் போது உன்னை பிக் அப் செய்கிறேன்” என்றவனிடமிருந்து நந்திதா மகளை வாங்கித் தங்கத்திடம் கொடுக்க நினைக்க

“வேணியும் நம்முடன் தான் வருகிறாள்” அவன் குரல் திரும்ப அதிகாரத்துடன் ஒலித்தது. அந்தக் குரலுக்கு ‘இவர் யார் உங்களை அதிகாரம் செய்ய?’ என்ற கேள்விப் பார்வையை தங்கம் மகளிடம் வீச

அதைத் தவிர்த்தவள் “நீங்கள் கிளம்புங்க அம்மே. நான் வேணியை அழைத்துக்கொண்டு வருகிறேன்” மகளின் பதிலில் ‘நம் ராணிமா வா இது?’ என்ற கேள்வியுடன் மனதில் பாரம் ஏற கிளம்பினார் அவர்.

வேணியைப் பின்புற சீட்டில் அணையாக குஷன் கொடுத்துப் படுக்க வைத்தவன் நந்திதாவை முன்புறம் ஏறச் சொல்ல, அவள் ஏறியதும் குழந்தைக்காக கார் மிதமான வேகத்தில் சென்றது.

“உன் புருஷனுக்கு அப்படி என்ன வேலை? குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு! வேணி ரொம்ப ஏங்கிப் போய் இருக்கிறாள்” குற்றம் சாட்டும் குரலில் அவன் கேட்க

“என் பர்சனல் லைப் பற்றிப் பேச மாட்டேன் என்று சொன்னீர்கள்” இவள் நினைவுபடுத்த

அவளை ஆழ்ந்து பார்த்தவன் “உன் வாழ்க்கையைப் பற்றி கவலை இல்லையென்று தான் நானும் சொன்னதாக ஞாபகம். ஆனால் வேணி வாழ்க்கைப் பற்றி கவலைப் படமாட்டேனென்று சொன்னேனா?”

“வேணி என் மகள்! நேற்று பார்த்த நீங்களெல்லாம் கவலைப் படுகிற அளவுக்கு நான் அவளை வைக்க மாட்டேன்”

“நீ வைக்க மாட்டாய். ஆனால் உன் புருஷன் வைக்கிறானே! அதிலும் அந்தக் குழந்தையோட ஏக்கங்களை யாரோ ஒருவர் பூர்த்தி செய்வார் என்ற எண்ணத்தில் எங்கேயோ உட்கார்ந்து இருக்கானே!”

“யாரோ ஒருவர் இல்லை, நிச்சயம் நான் பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை அவளுடைய அப்பாவுக்கு நிறையவே இருக்கு” அதை திடத்துடன் சொல்லும் போதே நந்திதாவுக்கு தொண்டை அடைத்தது.

காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவள் குடிக்கத் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டியவன் “வேணி அவள் அம்மா மாதிரி இல்லை.. ரொம்ப சமர்த்து!” சிறு கேளியுடன் அந்த வார்த்தையைச் சொன்னானோ?

தண்ணீரைக் குடித்தவள் ”ம்ம்ம்.... நிச்சயமாக... அவள், அவள் அம்மா மாதிரி முகமும் அழகுமே தவிர குணம் பாசம் பேச்சு எல்லாம் அவள், அவள் அப்பா மாதிரி!” இவள் உணர்ந்து சொல்ல

“ஹா.... ஹா.... இது தான் செல்ப் டப்பா என்பது. எப்படியோ சந்துல நீ அழகியென்று சொல்லிக்கொள்கிறாய். ஆனாலும் வேணி அப்பாவைப் பற்றி பேசும்போது கண்ணில் என்னமாக பளிச் பளிச்சென்று ஒளிர்கிறது! அவ்வளவு பிடிக்குமா அவரை?” மனதில் ஒருவித வெறுமையுடனும் பொறாமையுடனும் உணர்ந்தவன் அதை குரலில் காட்டாமல் அவன் கேட்க

“நீங்க பிசினஸ் விஷயமாக பேச வேண்டும் என்று தான் சொன்னீர்கள்” இவள் கறாராக மறுபடியும் நினைவு படுத்த

“அப்.....பா....ஆஆ... என்ன கறார் பேச்சு!” என்று போலியாக வியந்தவன் “ஆனாலும் ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும். எது அம்மாவுக்கும் பொண்ணுக்கும் பொருத்தம் இருக்கோ இல்லையோ ஒன்று மட்டும் இருக்கு. பொண்ணு டார்க் சாக்லேட் என்றால் அம்மா மைல்ட் சாக்லேட். இருவரின் நிறத்தையும் ஒப்பிட்டு இவன் கூற

“நீங்கள் மில்கி ஒயிட் கலர் என்பதால் எங்க கலரை ஒன்றும் கலாய்க்க வேண்டாம்” சுள்ளென்று நந்திதா பதில் கொடுக்க

“நான் கலாய்க்கவில்லை நீ சொன்ன மாதிரி அழகை வர்ணிக்கிறேன்” அபி விடுவேனா என்று இருக்க

“போதும்...” அவள் காரை விட்டு இறங்க முற்பட

“ஓகே... ஓகே... லீவ் இட்” என்றவன் காரை ஸ்டார்ட் செய்த படி என் குணம் உனக்குத் தெரிந்து இருந்தும் எப்படி உனக்கு அன்று பிசினஸ் விஷயமாக பேசவேண்டும் என்று தோன்றியது? அதாவது என்னை சந்தித்து பேசி என் எண்ணத்தை மாற்றலாம்னு?” இவன் கேட்க

‘இதைக் கேட்கவா இப்போது வரச் சொன்னாய்?’ என்பது போல் பார்த்தவள் “கரெக்ட் தான்.. பட் நான் சொன்ன பிசினஸ் டீல் பற்றி யோசிப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தான் மிகவும் நன்றாகத் தெரிகிறது. வெறி பிடித்த மிருகமாக ரத்த ருசி கண்ட அரக்கனாக யாரைப் பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய ராஜ்யம் மட்டுமே அமைய வேண்டுமென்று நினைக்கிற ஒரு சைக்கோவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று! அதனால் பேசி பார்க்க நினைத்தது தவரோ?” அவளுக்கு சொல்லும் போதே மூச்சு வாங்கியது.

அவள் பேச்சில் கோபப் படாமல் “ஹா... ஹா... well said well said இவ்வளவு தூரம் என்னைத் தெரிந்து வைத்தும் என்னிடம் பேச வந்தாய் பார்.. அங்கே தான் ஏதோ இருக்கு..” அவன் புருவ மத்தியில் முடித்து விழ சொல்லவும்.

“உங்களால் பல பெண்களுக்கு பாதிப்பு விளைகிறது எனும்போது அதைத் தடுப்பதே என் நோக்கம். இதை எடுத்துச் சொன்னால் புரிந்து கொண்டு மாறுவீர்கள் என்று நினைத்தேன்”

“நான் ஏன் மாறவேண்டும்? இப்படி இருப்பதால் நான் பெற்றது எவ்வளவு தெரியுமா? கார், வீடு, தொழில் மட்டுமே விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு இருக்கிறது. வருஷம் கிடைக்கும் லாபம் மட்டுமே பல கோடி தாண்டும். கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கவும் என் கண்ணசைவைப் பார்த்து வேலை செய்யவும் ஆயிரம் வேலையாட்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் பல அமைச்சர்களே என் அப்பாயின்மெட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அவர்கள் கட்சிக்கு செலவு செய்யும் ரிசர்வ் பேங்க் நான் தான்!” குரலிலும் முகத்திலும் பெருமை பொங்கி வழிய அடுக்கியவன் கோபப்படாமல் இப்படி எல்லாம் கூற,

அனைத்தையும் அமைதியாகக் கேட்டவளோ பின், “வெற்றி பெற்று வந்தால் அணைத்து முத்தமிடவும் தோல்வி கண்டால் மடி தாங்கி தலை கோதவும் மனைவி இருக்கிறாளா? ஆயிரம் செல்வங்கள் இருந்தாலும் அப்பா என ஓடி வந்து உங்கள் காலைக் கட்டிக்கொள்ள மகளோ மகனோ இருக்கிறார்களா? உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உலகமே அழ வேண்டாம். இல்லை என்றால் குறைந்த பட்சம் உங்களைச் சுற்றி இருப்பவர்களாவது துடிதுடித்து உண்மையாக கண்ணீரைச் சிந்துவார்களா? சரி.. அது கூட வேண்டாம். உங்களை, ஐயா! மவராசனா இருப்ப! என்று வாழ்த்த நாற்பது பேர் வேண்டாம். ஒரு நான்கு பேர் இருக்கிறார்களா?” இவள் பேச ஆரம்பிக்கும் போதே கிரீச்..... என்ற சத்தத்துடன் காரை நிறுத்தியிருந்தவன்

“இதெல்லாம் பெற்றிருந்தால் தான் வாழ்க்கையா?” அவனிடமிருந்து விட்டேந்தியாக கேள்வி வர

“அப்போது நீங்கள் சொன்னதெல்லாம் பெற்றால் தான் வாழ்க்கையா?” இவளும் விடுவதாக இல்லை.

“அப்போது நான் சொல்வதுக்கு ஒத்துக்கொண்டு என் வழிக்கு வர மாட்டாய்” இவன் குரலில் கோபம் தாண்டவம் ஆடியது.

“நெவர்! உங்கள் வழி வேறு. என்றைக்குமே நான் வர முடியாது. ஆனால்...”

“ஆனால் என்ன? என் தொழிலையே அழித்து விடுவாயா? அதையும் தான் பார்ப்போம்” என்றவனின் கையில் கார் சீறிப் பாய்ந்தது.

அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு “நீ கேம்ப் போனால் உன்னைப் பிரிந்து வேணி இருப்பாளா?” அதாவது உன்னை நான் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்பதாக அவன் கேட்க

“என் பெண்ணுக்கு சந்தோஷம் கஷ்டம் நஷ்டம் பிரிவு எல்லாவற்றையும் எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் சொல்லிக் கொடுத்து தான் வளர்த்திருக்கிறேன்” நச்சென அவளிடமிருந்து வந்த பதிலில் கண்ணை மூடி ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன்

“டேக் கேர்.. உனக்காக அல்ல. வேணிக்காக!” என்று சொல்ல

“ம்ம்ம்... ” என்ற தலையசைப்புடன் அவள் விலகிச் செல்லவும் தான் இறங்கி கார் சாவியைத் தம்பியிடம் கொடுத்தவன்


“நீ டிரைவ் செய் டா” என்று கட்டளையிட, ‘என்னது! இங்கிருக்கும் வீட்டுக்கு நானா?’ என்று பேய் முழி முழித்தபடி காரை ஓட்டினான் துருவன். அவனுக்கு இன்று பார்க்கும் அண்ணன் புதிதல்லவா?
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 6
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN