உறவாக வேண்டுமடி நீயே 9

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 9


மறுநாள் நந்திதா பபுலிடம் பேசியதை தங்கத்திடம் சொல்ல, முன்பிருந்த தங்கமாக இருந்தால் இப்படி ஒன்றா என்று யோசித்திருப்பார். ஆனால் எப்பொழுது அபியைப் பார்த்தாரோ அன்றிலிருந்து அவர் மனதில் வேறு ஒரு கணக்கும் கேள்வியும் இருந்ததனால் அவரால் மறுக்க முடியவில்லை. இதில் அதிகம் எதிர்ப்பு போதும்பொண்ணுவிடமிருந்து தான் வந்தது. ஆனால் அதையும் தன் கலகல குணத்தால் பபுலுவும் பிடிவாதத்தால் நந்திதாவும் மாற்றினார்கள்.

போதும் பொண்ணுக்கு நல்வாழ்வு அமைந்ததால் தங்கம் சமயுரத்தாளுக்கு தன் வேண்டுதலை நிறைவேற்ற நினைத்தவர் குடும்பத்தோடு செல்வதால் மணிமேகலையையும் அவர் அழைத்தார். அபியை அன்றைய விழாவில் பார்த்ததிலிருந்து இப்பொழுது எல்லாம் ஒட்டுதல் முன்பை விட அதிகமாகவே மேகலையிடம் இருந்தது அவருக்கு. அதன்படியே அனைவரும் ஒரு நாள் கோவிலில் இருக்க, தன் தாயைப் போனில் அழைத்தவன், “என்னமா பூஜை எல்லாம் முடிந்ததா இன்னும் இருக்கிறதா? என்று அபி கேட்க

“இன்னும் இல்லை அபிப்பா. அரைமணி நேரம் ஆகுமென்று நினைக்கிறேன். அது முடிந்ததும் நான் வந்துவிடுவேன்” எப்பொழுது வீட்டுக்கு வருவீர்கள் என்பதை அறியத் தான் மகன் கேட்கிறானோ என்ற எண்ணத்தில் இவர் பதில் தர,

“ஓ அப்படியா? நான் இந்தப் பக்கமாக வந்தேன். சரி அங்கேயே இருங்க. நான் வருகிறேன்” என்று சொன்னவன் தாய் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தவன் அவரைத் தேடி கோவில் போக, அங்கு விளையாடிக் கொண்டிருந்த வேணி வழக்கம் போல் அவனை பார்த்ததும் ஓடி வந்து “அபிப்பா!” என்று அவன் காலைக் கட்டிக் கொள்ள, அந்த முயல் குட்டியைத் தூக்கிக் கொண்டு இவன் தாயிடம் வர, அவரோ நந்திதா, போதும்பொண்ணு, பபுல் என்று இளையவர்களுக்கு விபூதி வைத்து விட்டவர் இறுதியாக அபி தோளிலிருந்த வேணிக்கு வைத்து விட்டு அவர் திரும்ப,

“ம்மா! எனக்கு இல்லையா? எனக்கும் உங்கள் கையால் வைத்து விடுங்க” என்று இவன் வழக்கம் இல்லாமல் கேட்க, மகன் கேட்டதில் ஒரு வினாடி ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் தன்னை மறந்து நின்றவர்,

“உனக்கு இல்லாததா அபிப்பா?” என்றவர் ‘அம்மா! உலகத்தை ஆளும் சமயபுரத்தாளே! என் சந்தோஷத்திற்காக இன்று விபூதி வைக்க சொல்லும் என் பிள்ளை நாளைக்கு அவன் வாயாலேயே கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டும் தாயே!’ என்ற வேண்டுதலுடன் தான் பெற்ற நாத்திகனுக்கு விபூதியை வைத்தார் அவர்.

அவர் வேண்டுதல் படி மகன் திருமணத்திற்கு சம்மதிப்பதை விட இவள் தான் உன் மருமகளென்று ஒருத்தியைக் கொண்டு வந்து நிறுத்தப் போகிறான் என்பது பாவம் அபியின் அம்மாவிற்குத் தெரியாமல் போனது.

பபுலுவின் பாட்டியும் பப்லும் போதும்பொண்ணு திருமணத்திற்கு சம்மதித்ததால் இவர்கள் இருவரும் அதிகம் இல்லாமல் எப்பொழுதாவது வெளியே சென்று வந்தார்கள். அப்படி ஒரு நாள் போதும்பொண்ணுவும் பபுலுவும் வெளியே சென்றவர்கள் கூடவே வேணியையும் அழைத்துச் செல்ல, ஒரு ஷாப்பிங் மால் உணவகத்தில் அவளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து தங்கள் அருகிலுள்ள இருக்கையில் அமரவைத்து விட்டு இருவரும் வேணியை மறந்து பேசிக்கொண்டிருந்தனர் அ பபுல் உரிமையாக அவள் கையைப் பிடித்தவன்,

“ஆமா அதென்ன போதும்பொண்ணு? தமிழன்ஸ் வெக்கும் பேர் எல்லாம் அழகா சுத்த தமிழ்ல இருக்கும்னு தெர்யும். ஆனா உன் பேர் டிப்ரென்டா இர்க்கே! அது ஏன்?” என்று இவன் கேட்க

“அது... நீங்கள் என் கையை விடுங்கள் நான் சொல்கிறேன்” இவளிடம் தயக்கம்.

“நீ என்கிட்ட ப்ரீயா பழகணும் தான் நான் உன்னை வெளிய கூட்டிட்டு வந்தது. அப்றம் என்ன கையை பிடிக்காத அப்டி இப்டினு ஆர்டர் போடற?” இவன் அதட்டவும்

“அது வந்து… எனக்கு முந்தி அஞ்சு பொண் கொழந்தைங்க என் ஆத்தாவுக்குப் பொறந்துச்சாம். அதுலயே அலுத்து சலித்து கெடந்தவங்களுக்கு ஆறாவதா நானும் பொட்ட புள்ளையா பொறக்கவே, போதும்பொண்ணுனு பேர் வெச்சுப்புட்டாங்க. அப்டி வெச்சாக்கா அடுத்ததும் பொண்ணு பொறக்காதுனு ஒரு நம்பிக்கை தான். ஆனா அதுக்கெல்லாம் வழியே இல்லாம நான் பொறந்த ரெண்டு மணி நேரத்துலயே என்ஆத்தா போய் சேர்ந்துட்டா.

இது இப்பவும் எங்க ஊர் பக்கம் நடக்குற வழக்கம் தான். அஞ்சு பொண்ணுங்களைப் பெத்தா அவன் ஆண்டி. பொட்ட புள்ளைங்கள வளர்த்துக் கட்டிக் குடுக்கறது ரொம்ப கஸ்டம். இன்னும் நெறைய கஸ்டத்த அடுக்கிகிட்டே போலாம். அதுக்கு தான் பொம்பள புள்ளையே வேண்டாம்னு சொல்லி வெக்கிற பேர் தான் இது” இவள் குரலில் துன்பமும் துயரமும் கலந்திருந்தது.

“அப்போ உன்க்கு முன்னாடி பொறந்தவங்க எல்லாம் எங்க?”

“அவங்க எல்லாரும் கொழந்தையா இருக்கும் போதே செத்துட்டாங்க. யாரும் மிஞ்சல. நான் மட்டும் தான் உசுரோட இருக்கேன்” இவள் கசந்த படி சொல்ல

“அதாவது என் உசுர எடுக்க! அப்டி தான?” இப்படியே சிரிப்பும் பேச்சுமாய் இவர்கள் இருக்க, பக்கத்தில் அமர்ந்திருந்த வேணியோ வாங்கிக் கொடுத்த சாக்லேட் ஐஸ்கிரீம் தீர்ந்ததும் இருவருக்கும் தெரியாமல் அங்கிருந்து வெளியே வந்தவள் அந்த தளம் முழுக்க வேடிக்கை பார்த்த படி இருந்தவள், ஓரிடத்தில் அபியைப் பார்த்து விட்டு தன் வழமை போல “அபிப்பா!” என்ற அழைப்புடன் அவன் காலைக் கட்டியிருக்க,

“ஓ பிரின்சஸ்! இங்கே யாருடன் வந்தீங்க?” கொஞ்சிய படி அவளைத் தூக்கியவன், குழந்தையான அவளுக்கு என்ன சொல்லத் தெரியும்? “பொண்ணு அத்தை!” என்று இரண்டு முறை சொன்னவள் பின் இப்போது தான் தான் தனியாக வந்ததை உணர்ந்து உதட்டைப் பிதுக்க, அப்பொழுது தான் அவனுக்கே தெரிந்தது அவளைச் சுற்றி தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பது. உடனே கோபத்தின் உச்சிக்கே சென்றவன் போனை எடுத்து நந்திதாவுக்கு அழைக்க, அது ரிங் போனதே தவிர எடுக்கப் படவில்லை. இரண்டு முறை அழைத்தவன் அதன் பிறகு வேணியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் வந்து விட்டான். இவன் வேணியுடன் வந்தது மேகலைக்குத் தெரியாது. அவளைக் கட்டிலில் படுக்க வைத்தவன் அங்கேயே அமர்ந்து ஆபீஸ் கோப்புகளில் மூழ்கி விட.

இங்கோ வேணியைக் காணாமல் எல்லோரும் ஒரு வழி ஆனார்கள். சாயங்காலம் காணாமல் போனவள் இரவு ஏழு ஆகியும் கிடைக்காததால் எல்லோரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, மேகலாவும் தங்கம் வீட்டுக்கு சென்று விட்டார். குழந்தையைப் பதட்டத்துடன் தேடுவதிலிருந்த நந்திதா ஏழுமணிக்கு மேல் அபியை அழைக்க,

“என்ன வேணியைக் காணோமென்று தேடிக்கொண்டு இருக்கிறாயா?” எடுத்தவுடனே இவன் இப்படி கேட்கவும்,

“யூ ராஸ்கல்! அப்போது நீங்க தான் கடத்திக் கொண்டு போய் வைத்திருக்கீங்களா?” இவள் கத்த

“அடச்சீ! என் பெண்ணை நான் ஏன் கடத்தப் போகிறேன்? நல்லவேளை இதை நீ என் எதிரிலிருந்து கேட்கவில்லை” என்று இவனும் எகிறியவன் பின் நடந்ததைச் சொல்லி அவளை வீட்டுக்கு வரச் சொல்ல, மொத்த குடும்பமும் அடித்துப் பிடித்து அபி வீட்டில் குழுமியது.

மேகலா தான், “நீ செய்றது கொஞ்சம் கூட சரியில்லை அபிப்பா. எங்கள் எல்லோரையும் விட பெற்றவள் என்னமா துடித்துப் போய்விட்டாள் தெரியுமா? ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் என்ன டா நீ?” அவர் கோபப்பட்டு கேட்க

“யார்? இவளா பெற்றவள்?” அபி நந்திதாவைப் பார்த்துக் கேட்ட கேள்விக்கு மணிமேகலை கூட ஒரு நிமிடம் ஆடிப் போனார்.

“நீங்கள் பேசுவது செய்தது எதுவும் சரியில்லை அபி” நந்திதா கோபத்தில் கொதிக்க

“நோ... நோ... சே அபிரஞ்சன்!” அவளின் வார்த்தையைத் திருத்தியவன் “இப்படி செய்ததால் தான் அடுத்த முறை இந்த தவறை நீ செய்ய மாட்டாய். அங்கு என்னைத் தவிர வேறு யார் கையிலாவது வேணி போயிருந்தால் இப்படி தான் நிதானமாக வந்து கேள்வி கேட்பாயா? உன்னால் வேணியைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் என்னிடம் விட்டுவிடு நான் வளர்த்துக் கொள்கிறேன்” என அழுத்தம் திருத்தமாக இவன் சொல்ல

“வேணி என் மகள்” என்று மேலும் தொடர்ந்தவளை, அவ்வார்த்தையோடு இடை மறித்தவன்

“அப்படியா?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளிடம் கேட்க, முதல் முறையாக அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்தாள் நந்திதா.

இதையெல்லாம் பார்த்த மேகலைக்கு இவ்வளவு நாள் இல்லாமல் முதல் முறையாக ‘இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ இருக்குமோ?’ என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. மேலோட்டமாக நந்திதா கணவனை விட்டுப் பிரிந்திருக்கிறாள் என்பதாகத் தான் அவருக்குத் தெரியும். ஆனால் இன்று அபி வேணியிடம் உன்னை விட தனக்கு மட்டும் தான் உரிமை இருப்பது போல் பேசி நடந்து கொள்ளவும் அவர் மனதிலோ பல கேள்விகள் எழுந்தது. பின் எல்லோரும் எப்படி எப்படியோ பேசி பல உறுதிகளைக் கொடுத்த பிறகு தான் வேணியை விட்டான் அந்த முரடனான அபிரஞ்சன்.

தாய் அறியாத சூழல் இருக்கிறதா என்ன? தங்கத்தைப் போலவே மேகலையின் மனதிலும் பல கேள்விகள் எழத் தான் செய்தது. தாயின் முகத்தில் குழப்பங்களைப் பார்த்தாலும் அதை ஒதுக்கிவிட்டு நடமாடினான் அபி.

இப்படியான குழப்பங்களில் அவர் இருக்க, ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு நெடுஞ்சாலையில் நந்திதா கரை ஓட்டிக் கொண்டிருக்க, ஓரிடத்தில் அவள் கார் பஞ்சராகவும், இறங்கி காரின் டிக்கியைத் திறந்து இவள் ஸ்டெப்னியை எடுக்க கை வைத்த நேரம்,

“இங்கே என்ன செய்கிறாய்?” என்று நெருக்கமா கேட்ட அபியின் குரலில் தூக்கி வாரிப் போட்ட படி இவள் விலகவும்,

“ஹே! ரிலாக்ஸ்… நான் தான்! என்ன நடந்தது?”

“டயர் பஞ்சர்” இவள் சுருக்கமாகச் சொல்ல

“வீட்டுக்குத் தானே போகிறாய்? சரி என் கூட வா. இப்போது நாம் கிளம்பினாலே இரவு பத்து மணி ஆகும் வீடு போய் சேர்வதற்கு” எங்கே அவள் வர மாட்டேன் என்று சொல்வாளோ என்பதற்காக இவன் முதல் முறையாக தன்மையாகச் சொல்ல, அவளோ மறுக்க வாய் திறந்த நேரம், இவர்கள் நின்றிருந்த சாலையோர மரங்களுக்கு இடையில் ஏதோ சலசலப்பான சத்தம் கேட்கவும்,

“யுகா!” என்ற சொல்லுடன் அவளை இழுத்த படி இவன் கார் மறைவில் ஒளிய, டமால்…. டமால்… என்ற சத்தத்துடன் இரண்டு கண்ணாடி பாட்டில்கள் சாலையில் விழுந்து நொறுங்கியது. அது நந்திதாவுக்கு வைத்த குறி என்பதை இவன் உணர்ந்து கொள்ள, அவளோ அவன் சட்டையை இறுக்கி பற்றிய படி அவன் மார்பில் முகம் புதைத்திருந்தாள்.

இருவரும் சாலையில் காரின் மறைவில் அமர்ந்து இருந்ததால் சத்தங்கள் குறைந்ததும் இவன் எழுந்திருக்கப் பார்க்க, அவளோ விடுவதாக இல்லை. “ஹலோ! மேடம், இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கப் போவதாக உத்தேசம்? வீட்டுக்குப் போக வேண்டாமா?” அவன் கேட்ட கேள்வியில்

அப்பொழுது தான் அவள் அவனை அணைத்திருப்பதை உணர்ந்து அவன் மறந்தும் தன்னை அமைதி படுத்த அணைக்கவில்லை என்பதை அறிந்து விலகியவள், தான் பற்றியிருந்த அவன் சட்டையை மட்டும் விடவேயில்லை அவள். கூடவே “எங்கேயும் போக வேண்டாம்” என்று அவள் கெஞ்ச

“உனக்காக இரவு முழுக்க உன்னுடன் இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பேன் என்றெல்லாம் கனவுலேயும் நினைக்காதீங்க மேடம். நானெல்லாம் அப்படிப் பட்டவன் இல்லை” இவன் அலட்டிக்கொள்ளாமல் அவளுக்கு பதில் தர, அவனை முறைத்தவள்

“உங்களுக்குக்கு ஏதாவது ஆகப் போகிறது என்று தான் இப்போது போக வேண்டாம் என்று சொல்கிறேன்”

“பெரிய வீராதி வீரி! சூராதி சூரி! இதற்கு போய் பயப்படுகிறாய்! என்ன? உயிர் தானே போகும்? உன் எதிரியோட உயிர் தானே? போனால் போகட்டும் விடு” இவன் விட்டேந்தியாக பதில் தர

“அப்படி போகிற உயிர் என்னைக் காப்பாற்ற வந்து தானே போகுது!” இவளும் அவனுக்கு பதில் தர

“அப்போது என் உயிர் போனால் பரவாயில்லை. ஆனால் அது உன்னைக் காப்பாற்றும் முயற்சியில் போகக் கூடாது. அப்படி தானே? ஆனால் என் உயிர் அவ்வளவு சீக்கிரம் போய்விடாது யுகா! அதை முதலில் மனதில் வைத்துக்கொள்” இவன் அவளுக்குப் பாடம் எடுக்க, அப்பொழுதும் அவன் சட்டையை விடவில்லை அவள்.

“சரி அப்போது நானும் உங்களுடன் எழுந்து வருகிறேன்” அவள் பிடிவாதத்தைப் பார்த்தவன்,

“இந்நேரம் வந்தவர்கள் இரண்டு கிலோ மிட்டர் தூரம் தாண்டி போயிருப்பார்கள். சரி எழுந்திரு” என்றவன் அவளை மறைத்தார் போல இவன் முன்வந்து நின்றான். அவன் சொன்னதைப் போல அங்கு யாரும் இல்லை என்றதும் அவள் காரைப் பூட்டி விட்டு இவன் காரில் அவளை ஏற்றியவன் குடிக்கத் தண்ணீர் கொடுத்து

“ஆமாம் இன்றைக்கு யாரையாவது கேள்வி கேட்டாயா அதாவது உன் பாஷையில் left &right வாங்கினியா? நீ தான் நீதி நேர்மையென்று திரிபவளாயிற்றே! நன்றாக யோசித்து சொல்” என்று கேட்க

திரும்பவும் அவனை முறைத்தவள் “அப்படி பார்த்தால் நீங்கள் தான் எனக்கு மிகப்பெரிய எதிரி! நீங்கள் அனுப்பிய ஆட்கள் தான அவர்கள் எல்லாரும். அவர்களை முன்னே அனுப்பிவிட்டு பின்னால் என்னைக் காப்பாற்றுகிற மாதிரி வந்தீர்களா?” இவளும் விடாமல் அவனைக் கொட்ட

“இதைத் தான் நல்லதற்கே காலம் இல்லையென்று சொல்வது. ஒரு வேலையாக இந்தப் பக்கம் வந்தவன் உன்னைப் பார்த்துவிட்டு என்ன ஏதென்று கேட்டேன் பார் என்னைச் சொல்ல வேண்டும். அடுத்த முறை பார்த்தாலும் அப்படியே விட்டுவிட்டு போகிறேன் பார்”

“போங்கள் போங்கள். ஆனால் உங்கள் ஆட்களுக்கு முன்பு எனக்கு தகவல் கொடுங்கள் நான் தப்பித்து விடுகிறேன்”

“அப்போது வந்தவர்கள் நான் அனுப்பிய ஆட்கள் என்று சொல்கிறாய் இல்லையா?” இவன் குரலை உயர்த்த, அவளோ ஜன்னல் புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“அந்த கண்ணாடி உடைந்ததே எங்கேயாவது உடம்பில் கிழித்து காயம் இருக்கிறதா பார். ஹாஸ்பிடல் போய்விட்டு போகலாம்”

‘அதான் அப்படி இழுத்து கொண்டு காப்பற்றினாயே! பிறகு எப்படி படும்?’ என்று நினைத்தவள் “அப்படி எதுவும் இல்லை நீங்கள் வீட்டிற்கே போகலாம்”

“சாப்பிட ஏதாவது ஹோட்டலில் நிறுத்தவா? வேண்டாம் நீ மிகவும் படபடப்பாய் இருக்கிறாய். பேசாமல் நீ கொஞ்ச நேரம் தூங்கு. வீடு வந்ததும் நான் எழுப்புகிறேன்”

“நீங்கள் தனியாக எப்படி ஓட்ட முடியும்?”

“எனக்கு பழக்கம் தான் நீ தூங்கு” அவன் சொன்னதும் தூங்கவேண்டுமா என்ற எண்ணத்தில் இவள் முழித்துக் கொண்டு வர, ஆனால் அவளையும் மீறி உடல் அசதியில் தூங்கித் தான் போனாள் அவள்.

சற்று நேரத்திற்கெல்லாம் “யுகா யுகா” என்று அவன் குரல் அவளை எழுப்பவும்,

“வீடு வந்துவிட்டதா?” என்ற படி அவள் எழ, இல்லை இவர்கள் வீட்டிற்கு இன்னும் தூரம் இருப்பதாகவே அவர்கள் நின்றிருந்த சாலையோர பலகை காட்டியது. அவன் முகம் ரௌத்ரமாக இருக்கவும்,

“ஏன் இங்கே நிறுத்துனீர்கள்?” இவள் கேட்க

“முதலில் உன் மேனேஜருக்கு போன் போட்டு அவர் எங்கே இருக்கிறார் பாரதி எங்கே வீட்டு நிலவரம் என்னவென்று கேள்” இவன் சொல்ல

“என்ன இப்போதா? மணி ஒன்பதரை ஆகிறது” இவள் தயங்க

“நான் சொன்னால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். ஆபீஸ் விஷயமாக ஏதோ ஃபைல் பற்றி கேட்கிற மாதிரி பேசு”

அதன்படியே இவள் கேட்க அங்கு எந்த கலவரமும் இல்லாமல் அவர் தூங்கிக் கொண்டு தான் இருந்தார். ஆனால் பாரதி தான் நண்பர்களுடன் ஏதோ பார்ட்டிக்குப் போனவள் வர இரவு பதினோரு மணி ஆகும் என்றார்.

இவள் அனைத்தையும் சொல்ல, “அப்போது எனக்கு வந்த தகவல் சரி தான். நாம் இப்போது சீக்கிரம் அங்கே போக வேண்டும் யுகா”

“எங்கே? ஏன்?” அவள் கலவரமாய் கேட்க

“வா சொல்கிறேன்” என்றவனின் கையில் கார் சீறிப் பாய்ந்தது.

அபியின் சீற்றத்திற்கும் நந்திதாவின் கலவரத்திற்கும் காரணமாக அப்படி யாருக்கு என்ன நடந்தது? இதோ சற்று பின்னோக்கி நகர்வோம்…

இரவு பாரதி தன்னுடன் படித்த கல்லூரி தோழி ஒருத்தியை சென்னைக்கு பஸ் ஏற்றி அனுப்பி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவளின் போன் அழைக்கவும், எடுத்துப் பேசியவள் கை கால் வெடவெடக்க,

“என்ன டா சொல்ற? அப்படியா சொன்னா சுவாதி? சரி நீ இடத்தைச் சொல். நான் போய் பார்க்கிறன்” என்று அவசரமாகக் கேட்டவள் நண்பன் சொன்ன இடத்தை மனதில் குறித்துக் கொண்டு வேகமாகத் தன் ஸ்கூட்டியை இயக்கினாள் அவள்.

ஒரு உயர் தர ஹோட்டலின் முன் வண்டியை நிறுத்தியவள் உள்ளே ரிசப்ஷனில் சுவாதி என்ற பெயரில் யாராவது ரூமில் தங்கி இருக்கிறாரா என்று கேட்க, அங்கிருந்த மங்கையோ அறை எண் சொல்லி “go straight and turn right then turn left. that last room” என்று சொல்ல

இவளிருந்த பதட்டத்தில் அந்த மங்கை சொன்னபடியே போனவள் இறுதியாக இடதுக்குப் பதில் மீண்டும் வலது எடுத்து கடைசி அறையின் கதவை ஓடிச் சென்று இரண்டு முறை தட்டி விட்டு இவள் திறக்க முற்பட, உள்ளிருந்தபடி கதவைத் திறந்தான் துருவன்.

அந்த நேரத்தில் இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை

‘இந்த நேரத்தில் இவள் இங்கே எங்கே?’ என்ற படி அவன் நிற்க, பாரதியோ வியர்க்க விருவிருக்க அவனை தாண்டி உள்ளே வந்தவள் “சு.. சுவாதி.. சுவாதிக்கு என்ன ஆனது?” என்று திணறிய படி சுற்றும் முற்றும் பார்த்தபடி இவள் கேட்க,

“யார் சுவாதி? என்ன விஷயமாக அவர்களைத் தேடுற? அதுவும் இவ்வளவு பதட்டமா”

“என் காலேஜ் மேட். இன்றைக்கு தான் எங்கள் நண்பர்கள் குரூப் எல்லோரும் சந்தித்தோம். இவள் காதலிக்கும் பையனுக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்று மிகவும் வருத்தப்பட்டு பேசினா. நாங்கள் எல்லோரும் தான் எப்படி எப்படியோ பேசி சமாதானம் செய்து அனுப்பினோம்.

திடரென்று எனக்கு போன் வந்தது. அவள் இந்த ஹோட்டலில் இந்த நம்பர் ரூமில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மற்றவர்கள் எல்லோரும் தூரமாக இருப்பதால் இங்கு வர நேரமாகும் என்பதால் நீ பக்கம் இருந்தால் போய் காப்பாற்று என்று சொன்னார்கள்” இவள் மூச்சு வாங்க சொல்ல

“யார் சொன்னது? எங்கே போனைக் கொடு. ரூம் நம்பர் ஒழுங்காக கேட்டாயா?” இப்போது இவனிடமும் பதட்டம் இருந்தது.

யார் என்று நெற்றியைத் தேய்த்து யோசித்தவள் “அவன் எங்களுடைய குரூப் இல்லை. கல்லூரியில் இரண்டு முறை பார்த்தபொழுது அக்கா என்று பேசி இருக்கிறான்” இவள் இழுக்க,

“சரி அவனை போனில் அழைத்துப் ஒழுங்கா விவரம் கேட்டு பேசு”. துருவன் சொன்னபடியே செய்தவள் அது சுவிட்ச் ஆப் என்று வரவும் குழப்பத்துடன் எதிரில் நின்றவனை நிமிர்ந்து பார்க்க.

“என்ன பாரதி?”

“போன் சுவிட்ச் ஆப்னு வருகிறது”

“வாட்!?” இவன் முகமும் குழப்பத்தைத் தத்து எடுக்க, “சரி சுவாதி நம்பருக்கே போன் செய்”

இப்பொழுதும் அவன் சொன்னதையே மேற்கொண்டவள் முகத்தில் கலவரத்துடன் கட்டிலில் தொப்பென அமர்ந்து “நாட் ரீச்சபிள் என்று வருகிறது” அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

அவள் முகத்தைப் பார்த்தவன் “ஹே! இரு என்னவென்று பார்ப்போம். முதலில் இந்த தண்ணீரைக் குடி” என்று சொல்லி அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை அவள் கையில் திணித்தவன் “நீ இன்றைக்கு முழுக்க உன் நண்பர்களுடன் இருந்திருக்க. அங்கே சுவாதி பேசியது முதல் கடைசியாக எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பியது வரை உன்னை யாரோ ஒருவன் அருகிலிருந்து கண்காணித்து இருக்கிறான்.

அது கூடத் தெரியாமல் நீ அவர்கள் விரித்த வலையில் விழுந்திருக்க. அவ்வளவு முட்டாளா பாரதி நீ?” என்று கோபப் பட்டவன் “ஆனால் உன்னை எதற்கு இங்கே வரவழைக்க வேண்டும்? அப்படி யார் இதை செய்திருப்பா?” என்று சொல்லியபடி யோசித்தவன் “சரி இப்போது உன் குரூப்பில் இன்று இருந்த வேறு யாருக்காவது போன் செய்”

இவள் அதை செய்ய மொபைலை எடுக்க, வெளியே கதவு தட்டப்பட்டது. இந்த அறை கதவை விட்டால் தானே லாக் செய்து கொள்ளும் கதவு அது. இவர்கள் இருவரும் பேச்சு சுவாரசியத்தில் அதை மறந்து போனார்கள்.

இருவரும் யோசனையுடன் இருக்கவும் இன்னும் பலமாக கதவு தட்டப் பட்டது. “ஒருவேளை என்னுடைய நண்பர்கள் யாராவது இருக்குமோ?” என்று சொல்லியபடி இவள் திறக்க எழுந்திருக்க,


“நீ இரு பாரதி” என்றபடி போய் கதவைத் திறந்த துருவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார்கள் மூன்று பெண் போலீஸ் மற்றும் நான்கு ஐந்து ஆண் போலீஸ்காரர்கள்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 9
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN