பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 2

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
2

தேவனூர் கிரமாத்தில் பொழுது புலர தொடங்கிய காலை வேளையில் சூரிய கதிர்கள் பூமியில் தன் ஆதிக்கத்தை செலுத்த, மேசையின் மேல் இருந்த அலைபேசி 5.30 என ஒலி எழுப்பி மெத்தையில் படுத்திருந்த விசாகனை எழுப்பியது.

விசாகன் 26 வயது ஆண்மகன் ஈஸ்வர மூர்த்திக்கும் பார்வதி தேவிக்கும் ஆறு வருட காத்திருப்புக்கு பின் சஷ்டி விரதமிருந்து விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என்று பெயர் சூட்டி இருந்தனர். ஆறு அடிக்கும் குறையாத அவன் உயரமும் வேலை செய்தே உரமேரிய உடலும் அவனுக்கு கனகச்சிதமாய் இருந்தது. தாயின் சிவந்த நிறம் கொண்டு பிறந்தவன் தந்தையின் நிமிர்வையும் முக சாயலையும் பெற்று இருந்தான். எப்போதும் இறுக்கம் நிறைந்த அவன் முகத்தில் மருந்திற்கும் சிரிப்பில்லை கண்களை மூடியபடி போனை துழாவி எடுத்தவன் அதை அணைத்து வைத்து விட்டு எழுந்து குளிக்க சென்றான்...

வயது குறைவாய் இருப்பினும் அவனுடைய உழைப்பிற்கும் வயதிற்கு மீறிய பக்குவத்திலும் அந்த ஊரில் முக்கிய பிரமுகர்களில் விசாகனும் ஒருவனாய் இருந்தான். தாய் தந்தை இவனுடைய 17 வயதில் விபத்தில் இறந்துவிட பாட்டி தில்லைநாயகிதான் அவனை கண்ணும் கருத்துமாய் வளர்த்தார். சென்னை கல்லூரியில் தனக்கு விருப்பமான மோட்டார் என்ஜினியர் பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவன் டவுனில் மோட்டார் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் பேக்டரி ஒன்றையும் வைத்து நடத்த தகுந்த இடத்தை பார்த்து வருகிறான். படிப்பிற்கு தகுந்த வேலை செய்தால் போதும் என்று அப்படியே இருந்துவிடாமல் தந்தை விட்டுச்சென்ற அரிசி ஆலையும் அதைத்தொடர்ந்து பரம்பரை நில புலன்களை வைத்து அதிலும் விவசாயம் செய்து வருகிறான்.

குளித்து முடித்து வெளியே செல்ல தயாராகி வந்த விசாகனை "அய்யா ராசா" என்று பாட்டி தில்லைநாயகி யின் குரல் வெளியே செல்ல விடாமல் நிறுத்தி இருந்தது. தில்லைநாயகி எழுபதுகளின் வாசற்படியில் இருந்தாலும் உழைப்பு தந்த பரிசாய் சுறுசுறுப்புடன் திரிந்தார்.

வீட்டு நிர்வாகத்தையும் அவ்வப்போது வயல்களிலும் பார்வையை செலுத்திக்கொண்டு பேரன் மீது உயிரையே வைத்திருந்தவர் வெள்ளை வேட்டி கருப்பு சட்டை என்று வந்து நின்ற பேரனை ஏற இறங்க பார்த்ததும் "என்னய்யா ராசா.... இன்னைக்குன்னு பார்த்தா இந்த கருப்பு துணிய போடுவ? நல்ல நாள் அதுவுமா வேற ஏதாவது போட்டுட்டு போயா" என்றிட

வெறுப்பாக சட்டையின் கைகளை மடித்து விட்டபடி "என்ன நல்ல நாளு... எனக்கு எல்லா நாளும் ஒன்னு தான்". என்றவன் தன் சட்டையின் மேல்பட்டனை சரிசெய்து கொண்டே "ஏன் இதுக்கு என்ன? இதுவும் ஒரு கலரு தானே..." என்று கூறி அவரையும் வாயடைக்க வைத்தவன் "நான் டவுன் வரை போறேன் அப்பத்தா... வர கொஞ்சம் நேரம் ஆகலாம் எனக்காக காத்திருக்காம ராத்திரி சாப்பிடுங்க" என்றவன் தன் பைக்கின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பிட

வெறும் வயிறுடன் கிளம்பும் பேரப்பிள்ளையை கண்டு "இன்னும் மணி ஆகலையே ராசா இம்புட்டு வெள்ளனவேவா கிளம்புற.. சாப்பிட்டு போ ராசா உனக்கு புடிக்குமேன்னு பூரியும் கிழங்கும் வைச்சி இருக்கேன்". என்றிட இந்த வயோதிக காலத்திலும் தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அவருக்காக சாப்பாட்டு மேசையில் அமர்ந்தான். பேரன் சாப்பிட அமர்ந்ததும் எங்கிருந்த உற்சாகமும் அவரை வந்து சூழ்ந்து கொள்ள "ஏய் புள்ள சின்னகண்ணு... எங்க இருக்கவடி?? என் ராசா வந்து உட்கார்ந்து இருக்குது இங்க எடுத்தாடி அந்த பூரியை" என்று சமையலறையை நோக்கி குரல் கொடுக்க வகையாய் சமைத்ததை அவன் முன் பறிமாற ஆரம்பித்தவர் முதலில் இனிப்பிலிருந்து தொடங்கி ஒரு அறுசுவை உணவையே செய்து இருந்தார். இது எதற்காக என்பது அவனுக்கு தெரிந்தாலும் முகத்தினை விறைப்பாக வைத்துக் கொண்டே சாப்பிட அவன் சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் அமைதியாய் இருந்தார் தில்லைநாயகி.

பேரனின் முகத்தை பார்த்து பார்த்து தயங்கியபடி இருந்த தில்லைநாயகியை பார்த்த விசாகன் "என்ன அப்பத்தா என்ன சொல்லணும்?" என்றான் கையை துண்டில் துடைத்தபடி "அது ராசா இன்னைக்காவது ஒரு கோவிலுக்கு போயிட்டு போ ராசா" என்றிட

கண்களை இறுக்க மூடி திறந்தவன் அமைதியாக சென்று தாய் தந்தையின் உருவம் மாட்டப்பட்டு இருந்த இடத்திற்கு சென்று அவரின் படங்களுக்கு எதிரே நின்று கையெடுத்து கும்பிட்டவன் பாட்டியையும் நிற்க வைத்து சாஷ்ட்டாங்கமாக அவர் காலில் விழுந்திட பேரன் தன் கால்களில் விழவும் பதறிய தில்லை "அய்யா ராசா.. என்னய்யா இது? நல்லா இருய்யா... நீ நூரு வருசம் நல்லா இருக்கனும் எந்த குறையும் இல்லாமா" என்று கண்கலங்கி வாழ்த்தி அவனை எழுந்துகொள்ள சொல்ல எழுந்து நின்றவன் "போதுமா என் சாமியை கும்பிட்டாச்சி.. இப்போ நான் கிளம்பலாமா?" என்றிட்டான் தன் ஆளுமையான குரலில்.

பேரனின் மனம் தெரிந்து தான் கூறியது தவறு தான் என்று தனக்கு தானே பேசிக்கொண்டவர் "நான் ஒன்னும் சொல்லல சாமி நான் ஒன்னும் சொல்லல" என்று வாயை பொத்தியபடி வாசல் வரை வந்தவர் விசாகனை பார்த்து ராசா "சூதானமா போயிட்டு வாயா" என்று வழியனுப்பி வைத்தார்.

வழியிலேயே நண்பன் சுந்தரனிடமிருந்து போன் வர வண்டியை ஓரம் கட்டியவன் அதை ஸ்வைப் செய்து காதில் பொருத்த.
எடுத்ததுமே "பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்ள" என்றிட்ட சுந்தரனை பற்களை கடித்து

"பச் எதுக்குடா உயிர வாங்குற... எத்தனை வருஷமா தான் இந்த நாளை நியாபகப்படுத்தி வாங்கி கட்டிக்குவ... ஒழுங்கு மரியாதைய எல்லாத்தையும் மூட்டைகட்டி வீட்டுலயே வீசிட்டு வர்ர வழியை பாரு... இன்னைக்கு தேங்காய் லோடும் வெங்காய லோடும் போயாகனும்" என்று விஷயத்தை கூறி அன்று முடிக்க வேண்டிய வேலைகளையும் சேர்த்து பட்டியலிட்டு இருந்தான்.

விசாகனிடம் இருந்து இப்படி தான் பதில் வரும் என்று தெரிந்து வைத்து இருந்தவன் "போதும் மாப்ள உனக்கு இந்த நாள் பிடிக்கலனா விடு... அதுக்காக எனக்கு என் நண்பனோட பிறந்த நாள் மறக்க முடியுமா?" என்றவன் அவன் உஷ்ண மூச்சி வெளிவிடுவதை யூகித்தவனாய் "சரி சரி இதுக்கும் பொறியாத சீக்கிரம் வர பாக்குறேன்" என்றபடி போனை வைத்தான்.

நண்பனின் வார்த்தைகள் அவனை மகிழ்ச்சியடைய வைத்தாலும் இந்த நாளை நினைத்து அவனால் மகிழ்ச்சியடைய முடியவில்லை தாய் தந்தையரை இழந்தது முதல் காதல் தோல்வி வரை சந்தித்த இந்த நாளை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏழெட்டு வருட்களுக்கு முன் இருந்த விசாகன் தொலைந்து முற்றிலும் அழுத்தமான ஒருவனாய் மாறி இருந்தான். அதே சிந்தனையில் வண்டியை இயக்கி டவுனுக்கு வந்தவன் தான் நிலம் பார்க்க சொல்லி வைத்திருந்தவரை நேரில் சென்று பார்த்தான்.

அலுவலகத்தில் நுழைந்தவனை பார்த்த சண்முகம் "வா... வாங்க விசாகன் சொன்ன நேரத்திற்கு முன்னவே வந்துட்டிங்களே!" என்று வரவேற்றவர் "தம்பி என்ன சாப்பிடுறிங்க?" என்றிட

சம்பிரதயமாக வணக்கம் என்றவன் "பரவாயில்லை சார் எதுவும் வேணாம்.. உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா நாம இடம் பாக்கலாமா?" என்றான்.

அவனை சிரித்தபடியே ஏறிட்டவர் "முக சாயல்ல மட்டும் இல்லாம குணத்துலையும் உங்க அப்பாவை போலவே கடமையே கண்ணா இருக்க... அவர் கூட இப்படித்தான் ஒரு நிமிஷம் கூட வீணடிக்க விரும்ப மாட்டார் ரொம்ப தங்கமான மனுஷன் யார் கண்ணு பட்டுச்சோ பாதியிலையே போயிட்டார்" என்று அவனின் தந்தைக்காக வருத்தமாக பேச.

தாய் தந்தையரின் நினைவில் முகத்தில் கொஞ்சம் வருத்தம் படற அவர் அறியா வண்ணம் அதை மறைத்தவன் தன்னை நிலைபடுத்திக்கொண்டு போனை பார்த்துக்கொண்டே "நீங்க ஒரு நாலு ஐந்து இடம் பார்கலாமுன்னு சொல்லி இருந்திங்க ஒருவேல இடம் அமைஞ்சிடுச்சினா அப்போவே பேசிடுவோம்" என்றான். அவரின் பேச்சை மாற்றும் விதமாக

அவருக்கு என்ன புரிந்ததோ அவன் குரலில் அதோடு அவன் தந்தையின் பேச்சை நிறுத்தியவர் வேலை விஷயமாக பேச ஆரம்பித்து இருந்தார். பேசிக்கொண்டு இருந்தவன் தன் மணிக்கட்டை திருப்பி நேரத்தை பார்க்க நேரம் ஆவதை உணர்ந்த சண்முகம் "தம்பி கிளம்பலாமா பார்ட்டி வந்து இருப்பாங்க" என்றதும் சரி என்று தலை ஆட்டியவன் தனது வண்டியை எடுக்க விசாகன் பின்னால் ஏறிக்கொண்டார் சண்முகம்.

இரண்டு மூன்று இடங்களை கண்டவனுக்கு மனதிற்கு ஏனோ திருப்தியே ஏற்படவில்லை... எதற்குமே தலையாட்டமல் நிற்கும் விசாகனை ஏறிட்ட சண்முகம் "தம்பிக்கு என்ன மாதிரி இடம் வேணும். இது எல்லாமே நீங்க எதிர்பார்த்த மாதிரி இருந்த இடங்கள் தானே" என்றார் அவர்.

"ம் நான் சொன்னா மாதிரி தான் இருக்கு..." என்று தலையாட்டியவன் "ஆனா இன்னும் பெட்டரா எதிர்பார்க்குறேன். நீங்க முதலில் காமிச்ச ரெண்டுல பங்கு நிலங்கள் இருந்தது.. எந்த வில்லங்கமும் இல்லாத இடம் தான் வேணும் அப்புறம் சொத்து தகராறு பிரச்சனைன்னு என்னால அலைய முடியாது" என்றவன் 'போதும் டா சாமி இவ்வளவு நாளும் நான் அலைஞ்சிட்டு தானே இருக்கேன்.. இதுக்கும் சேர்த்து அலையனுமா?' என்று மனதிற்குள்ளே எண்ணிக் கொண்டான்

அவன் மனவோட்டத்தை அறியாதவரோ "தம்பி அதை நான் பார்த்து முடித்து தருவேனே.. அதுக்காகவா வேண்டாம்னு சொன்னிங்க" என்றார் சண்முகம் அதை வாங்க வைத்திடலாம் என்ற எண்ணத்தில்

"இல்ல சார் அது எனக்கு சரிபட்டு வராது என்றவன் வேற இடம் இருக்கிறதா சொன்னிங்களே அது பாக்கலாமா?" என்றான்.

நேரம் மதியம் இரண்டு கடந்து இருந்தது இப்போ முடியும் அப்போ முடியும் என்று நினைத்து காத்திருந் சண்முகத்தின் வயிற்றில் பசி ருத்ர தண்டவமாட "தம்பி எனக்கு பிரஷர் வேற, லோ சுகர் இருக்கு கொஞ்சம் சாப்பிட்டு போகலாமா?" என்றிட

அவர் அவ்வாறு சொல்லவும் சே அவர் கேட்கும் அளவிற்கு வைத்துக் கொண்டோமே என்று தன்னை திட்டி கொண்டவன் சண்முகத்தை ஒரு உயர்தர உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவருக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்தான்.

வயிற்றிற்கு வஞ்சனை இன்றி தின்றவர் முகத்தில் அப்போதுதான் புது தெம்பே வந்தது. அதே தெம்புடன் "தம்பி நீங்க தேடுறா மாதிரி இடம் ஒன்னு இருக்கு அதுவும் எந்த வில்லங்கமும் இல்லமா இருக்கும் நிலம் ஆனா பாருங்க கொஞ்சம் டவுனுக்கு அவுட்டர்ல இருக்கு... ரொம்ப நல்ல இடம் உங்களுக்கு பார்த்தவுடனே பிடிச்சிடும் என்று கூறியவர் அவரிடம் போன் பண்ணி சொல்லிடுறேன். அவருக்கு தகவல் கொடுக்கல முதல்ல காமிச்ச நிலங்களே உங்களுக்கு பிடிச்சிடும்னு நினைத்தேன்" என்றார் சண்முகம்.

விசாகனிடம் இருந்து சற்று ஒதுங்கி வந்தவர் மனதில் இந்த இடம் பிடிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடனே நிலத்தின் உரிமையாளரிடம் பேச ஆரம்பித்தவர் சிரித்த முகத்துடனே அவனை நெருங்கினார்.

"தம்பி போலாம் அவரு நீங்க பார்த்து உங்களுக்கு பிடிச்சி இருந்தா மேற்கொண்டு பேசலாம்னு சொல்லி இருக்கார். இப்போதைக்கு அவரால வரமுடியாதாம்" என்றிட "பரவாயில்லை" என்று கூறியவன் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு மாலை நான்கு மணியளவில் அவ்விடத்தை அடைந்தனர்.

விசாகனுக்கு அந்த இடத்தை பார்த்ததும் பிடித்து விட அந்த இடத்தை வாங்கும் எண்ணம் கொண்டவன் "சார் பத்திரத்தை பார்த்ததும் மற்றதை பேசி முடித்து விடலாம். அவருக்கு திங்கள் கிழமை பிரச்சினை இல்லனா அன்னைக்கே மேற்கொண்டு விஷயத்தை பேசிடலாம். நீங்க கேட்டு சொல்லுங்க" என்று தன் பங்கு சம்மதத்தை தெருவிக்க முகம் கொள்ளா சிரிப்புடன் அதை ஏற்றுக்கெண்டார் சண்முகம்.

வந்த வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு கிளம்ப நேரம் பாரக்க மணி 6 கடந்து இருந்தது மெல்ல இருள் சூழ பரவிய வானம் போக போக கும் இருட்டாக காட்சியளித்தது.

வரும் வழி கொஞ்சம் ஆள் அரவமற்று இருக்க வண்டியினை ஓரே சீராக ஓட்டி வந்தான் விசாகன். கரடுமுரடான பாதைகளும் ஆங்காங்கே நெளிவு சுழிவான வளைவுகளும் இருக்க எப்போதும் பயன்படுத்தும் பாதை என்பதால் மிக அனாயசமாக ஓட்டி வந்தான். ராசிபுரத்தை தாண்டும்போது கூட எதுவும் நிகழவில்லை சற்று தூரம் செல்லும் போதுதான் ரோட்டில் யாரோ படுத்து இருப்பதை போல உணர்ந்த போது நெஞ்சம் துணுக்குற்றது என்னவோ என்று... இருந்தும் வண்டியை செலுத்தியவன். வண்டியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் அது ஒரு பெண் என்று ஊர்ஜிதபடுத்திக் கொண்டான்.

வண்டியின் வேகத்தை குறைத்து இருந்தானே தவிர மொத்தமாய் நிறுத்தி விடவில்லை இந்த இடத்தில் இதுபோல ஓரிரண்டு முறை வழிப்பறி செய்து இருப்பதை பற்றி அரசல் புரசலாக கேள்விபட்டதில் கொஞ்சம் கவனமாகவே கையாள வேண்டி நினைத்தவன் அக்கம் பக்கம் கவனம் வைத்தபடியே வந்தான் பக்கத்தில் யாரவது மறைந்து இருக்கின்றார்களா என்று அதுபோல எதுவும் கண்களில் அகபடாமல் போகவே இது விபத்தோ என்று நினைத்து கொண்டே வண்டியை ஓட்டி வர அந்த உருவம் எந்த சலனமும் இல்லாமல் படுத்தே இருந்தது.

சாலையோர விளக்கிலும் வண்டியின் வெளிச்சத்திலும் அந்த பெண்ணின் அருகில் சென்றவனின் அரவம் கேட்டும் எழுந்து கொள்ளாமல் இருக்க அவளுக்கு ஏதாவது அடி பட்டுள்ளாத என்று ஆராய அருகில் செல்ல பேச்சு மூச்சு இல்லாமல் படுத்து இருந்தவளை பார்த்து கொஞ்சம் திக் என்று இருந்தது.

அடிபட்டு பெரியதாக காயம் என்று எதுவும் இல்லை சந்தேகமாக மூக்கு அருகில் கை வைக்க சீராண மூச்சு வருவதை பார்த்தவன் மயக்கமாக கூட இருக்கலாம்... என்று நினைத்து அவளை எழுப்ப முயன்றான்.

"இங்க பாருமா... இங்க பாரு" என்று கன்னத்தில் தட்டி மயக்கதை தெளிவிக்க முயன்றவனின் உதவியால் மெல்ல விழிகளை திறந்தவள் மிக அருகில் தெரிந்த விசாகனின் முகத்தை கண்டு வீல் என்று சத்தத்துடன் மறுபடி மயங்கி விழுந்தாள் தேவா என்கின்ற தேவசேனா....

(கோவிலுக்கு போனவ இங்க வந்து படுத்து இருக்கா)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN