உன்னாலே உனதானேன் 16

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதிகாலையில் கண்விழித்த ரேஷ்மி வினயை தேட அருகில் வினய் இல்லை. நேரத்தை பார்க்க அது ஆறு முப்பது என்று காட்டியது. கட்டிலில் இருந்து எழும்ப முயன்றவளுக்கு உடலின் அயற்சி நேற்று இரவு நடந்த கூடலை நினைவு படுத்தியது. அந்நினைவுகள் பெண்ணிற்கே உரிய வெட்கத்தை உண்டுபண்ண தனக்குள் சிரித்துக்கொண்டாள் ரேஷ்மி. வெட்கத்திற்கு காரணமானவனோ தன்னுடைய காரில் அலுவலகம் நோக்கி பயணித்து கொண்டிருந்தான். இரவு முழுதும் உறங்காமல் யோசனையில் உழன்றவன் ரேஷ்மி விழிப்பதற்கு முன் தன் அன்னையிடம் சொல்லிக்கொண்டு ஆபிஸிற்கு கிளம்பிவிட்டான்.

இங்கு கட்டிலிலிருந்தவாறு நேற்றைய இரவின் இனிமைகளில் மூழ்கியிருந்தவள் தன்னிலை அடைந்ததும் வினயை தேட அவனோ அவளது கண்களுக்கு அகப்படவில்லை. இந்நேரத்தில் எப்போதும் அசந்து உறங்குபவன் இன்று எங்கு சென்றுவிட்டான் என்று தெரியாது குழம்பியவள் முதலில் சென்று குளித்துவிட்டு வரலாம் என்று தீர்மானித்து மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

வினயோ ஆபிஸ் செல்லும் வழியில் சாய்பாபா கோவிலை கண்டவன் காரை பார்க் செய்துவிட்டு கோவிலுக்குள் சென்றான். எப்போதெல்லாம் மனக்குழப்பத்தில் இருக்கின்றானோ அப்போதெல்லாம் சீரடி சாய்பாபா எழுந்தருளியிருக்கும் அவரது திருக்கோயிலுக்கு சென்று அவரை தரிசித்துவிட்டு அங்கு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வருவது வினயின் வழமை. ரேஷ்மியின் தாய் தந்தையின் மரணத்தின் பின் பாபாவை தரிக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தவன் இன்று தான் பாபாவை தரிசிக்க வந்திருந்தான். வாசலில் ஒரு பால் பக்கெட்டும் மல்லிகைப்பூமாலையையும் வாங்கியவன் பாபாவின் சன்னிதியை அடைந்தான். அப்போதுதான் காலை நேர பூஜை ஆரம்பித்திருக்க அதில் கலந்துகொண்டவனுக்கு ஒருவித அமைதி கிட்டியது.... பூஜையை தொடர்ந்து பாபாவின் பளிங்கு சிலையிற்கு பக்தர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பாலபிஷேகம் செய்யத்தொடங்கினர்.பாபாவை மனதில் நினைத்து ஓம் சாய்ராம் என்று துதித்தபடி பாலபிஷேகம் செய்து முடித்தவன் முகத்தில் புன்னகையோடு பக்தர்களை ஆசிர்வாசிக்கும் வகையில் பட்டாடடை போர்த்தப்பட்டு சம்மனமிட்டு அமர்ந்திருந்த ஆறடிக்கும் உயரமான அந்த வெண்பளிங்கு பாபா சிலையின் முன் சென்று வணங்கியவன் தான் வாங்கி வந்திருந்த மல்லிகைப்பூமாலையை பாபாவின் காலடியில் வைத்துவிட்டு சில நிமிடங்கள் கண்மூடி தியானித்தான். அந்த சில நிமிடங்கள் அவனது மனக்குழப்பத்தை நீக்கி மனதை இலேசாக்குவதாய் உணர்ந்தான்.

பாபாவை தொழுதுவிட்டு அங்கிருந்த தியான மண்டபத்திற்கு வந்தவன் சம்மனமிட்டு அமர்ந்து மனதை ஒருநிலை படுத்த முயன்றான். அவனது முயற்சி அவனுக்கு கைகொடுக்க குழப்பத்திற்கு தீர்வு கிடைக்காத போதிலும் மனம் சிறிது சமனப்பட்டதாக வினய் உணர்ந்தான். இப்போதைக்கு இதுவே போதும் என்றி தோன்றிட அங்கிருந்து வெளியேறியவன் மீண்டும் பாபாவை தொழுதுவிட்டு ஆபிஸிற்கு கிளம்பினான்.

கடவுளை நாடினால் துன்பம் விலகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அந்த துன்பத்திலிருந்து மீண்டுவர இறைபக்தி ஒரு வழியே... துன்பம் நிகழும் போது மனம் சமநிலை இழக்கும். அதன் விளைவால் மனம் சரியான முடிவை எடுக்க தவறிவிடும். அதிலிருந்து காப்பதே இறைபக்தி... இறைவனாய் வந்து எந்தவொரு துன்பத்திற்கும் தீர்வு கொடுப்பதில்லை... தீர்விற்கான வழியை தேட மனதை தூண்டுவதே இறைபக்தி.... இதை பலர் புரிந்துகொள்ளாது கடவுளை வசைபாடுகின்றனர். மானிடர்களின் அனைத்து செயல்களுக்கும் மானிடர்களே பொறுப்பாகும் பட்சத்தில் கடவுளின் வருகை அவசியம் என்று கூறுவது என்பது எந்த விதத்தில் நியாயம்???
இந்த நியதியை சரியாக புரிந்து கொண்ட வினய் பாபாவை சரணடைந்தான்..சரணடைந்தவனுக்கு மன அமைதி கிட்டியது... அது அவனது குழப்பங்களுக்கு தீர்வை யோசிக்க சந்தர்ப்பம் அமைக்கும் என்று வினய் நம்பினான்.

குளித்து முடித்துவிட்டு வந்த ரேஷ்மி வினயை தேடி அறையிலிருந்து வெளியே சென்றாள்.....அப்போது பூஜையறையில் தீபம் காட்டியபடி இருந்த வீரலட்சுமியை பார்த்த ரேஷ்மி அவரருகே சென்று நின்றுகொண்டவள் அவர் நீட்டிய தீபத்தை கண்களில் ஒற்றிவிட்டு கண்மூடி பிரார்த்தித்தாள்.

கண்களை திறந்ததும் ரேஷ்மியின் நெற்றியில் விபூதியை வைத்துவிட்டார் வீரலட்சுமி. வீரலட்சுமி நெற்றியில் விபூதியை வைத்ததும் அவர் காலில் விழுந்து வணங்கிய ரேஷ்மியிடம் குங்குமத்தை எடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னார் வீரலட்சுமி. அவர் சொல்படி செய்தவள் மீண்டும் இறைவனை தொழுதுவிட்டு வீரலட்சுமியோடு வெளியே வந்தவள் வினயை தேட

“ரேஷ்மி வினய் ஆபிஸில் ஏதோ முக்கியமான வேலை இருக்குனு அப்பவே கிளம்பிட்டான். நீ அசந்து தூங்கிட்டு இருந்ததால என்கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டான்...”

“ஓ.. சரி அத்தை.. நான் உங்களுக்கு காபி கலந்து எடுத்துட்டு வரட்டுமா???”

“ஆமா ரேஷ்மி.. இரண்டு பேருக்கும் கலந்து எடுத்துட்டு தோட்டத்துக்கு வா...” என்று கூறியவர் வீட்டிற்கு பின்புறமிருந்த தோட்டத்திற்கு சென்றார்.

ரேஷ்மியும் காபி கலந்துகொண்டு தோட்டத்திற்கு செல்ல அங்கு வீரலட்சுமி பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.
ரேஷ்மியை கண்டதும் கையிலிருந்து ஹோஸ் பைப்பை கீழே போட்டவர் நீரை அடைத்துவிட்டு ரேஷ்மியின் அருகே வந்தவர் அவள் கையிருந்த தன் காபி கோப்பையை வாங்கியபடி ஓரமாக போடப்பட்டிருந்து சிமெண்டு பெஞ்சில் அருகே ரேஷ்மியை அழைத்து சென்றார்.
இருவரும் சிமெண்டு பெஞ்சில் அமர்ந்ததும் தோட்டத்தை வேடிக்கை பார்த்தவாறு ரேஷ்மியிடம் உரையாடத்தொடங்கினார் வீரலட்சுமி.

“ ரேஷ்மி உன்கிட்ட ஒன்னு கேட்கனும்...”

“சொல்லுங்க அத்தை..”

“உனக்கு வினயை பிடிச்சிருக்கா??” என்று வீரலட்சுமியை கேட்க இப்படியொரு கேள்வியை வீரலட்சுமியிடம் இருந்து எதிர்பார்க்காதவள்

“அத்தை எதுக்கு இப்போ..” என்று தொடங்க வீரலட்சுமியோ

“ஹா.. சும்மா சொல்லுமா.. எதுக்கு தயங்குற???”

“ஆமா அத்தை...” என்று பதிலளித்தவளின் முகத்தில் ஆயிரம் செம்மை.

“ என் மகனுக்கு உன்னை பிடிச்சிருக்கா???” என்று வீரலட்சுமி தன் அடுத்த கேள்விக்கனையை தொடுத்தாள். அதற்கு வெட்கத்தில் தலை குனிந்து ஆமென்று பதில் சொன்னவளுக்கு நேற்றையை இரவு நினைவுகள் நினைவில் அதில் மங்கையவளின் கன்னத்தில் செம்மையை அள்ளி பூசியது...

“உனக்கு எப்படி அது தெரியும்???” என்று கேட்க

“அவங்க சொன்னாங்க...”

“அவனுக்கு நீ விரும்புறது தெரியுமா??” என்று வீரலட்சுமி தன் அடுத்த கேள்வியை தொடுக்க என்ன பதில் கூறுவதென்று ரேஷ்மிக்கு தெரியவில்லை. அவனது காதலை வார்த்தைகளாலும் செயலாலும் அவன் உணர்த்தியதை உணர்ந்தவளுக்கு தான் தன் காதலை உணர்த்தினோமா என்று தெரியவில்லை... அதனால் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

“என்ன ரேஷ்மி பதிலில்லையா?? உன்னால மட்டும் இல்லை... என்னால் கூட இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது... இது பல பெண்களுக்கு விடை தெரியாத கேள்வி.. இந்த கேள்விக்கு விடை தெரியாமல் தான் என்னோட வாழ்வை தொலைத்தேன்.” என்றவரது பதிலில் அதிர்ந்தாள் ரேஷ்மி.

“அத்தை..”

“ம்.... ஆமா ரேஷ்மி.... வினயோட அப்பாவும் நானும் பிரிந்ததற்கு காரணம் அவருடைய மன உணர்வுகளை நான் சரியாக புரிந்து கொள்ளாததும் அவர் என்னுடைய மனவுணர்வுகளை அறிய முயலாததுமே.... என் வாழ்க்கையை பாழாக்க விரும்பலைனு அவரு என்னை விட்டு விலகிட்டாரு... ஆனா அவரோட உணர்வுகளை உணராது அவரும் என்னைப்போல இந்த பந்தத்தை மதிக்கிறானு நானே யூகித்து நானும் அவருடைய மனவுணர்வுகளை புரிந்துக்கொள்ளவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டு பிள்ளைகள் என்றாகி பின்பு கூட எங்களுக்குள் காதல் இல்லை என்று நான் புரிந்துகொள்ளவில்லை. கவின் அப்பா என்னை விட்டு போனதும் அவரை நினைத்து நான் உடைந்து போனேனே ஒழிய அவருடைய விலகலுக்கான நியாயத்தை நான் புரிஞ்சிக்கலை. கட்டாயத்தின் பேரில் நடந்த கல்யாணம் என்றாலும் குழந்தை பிறந்ததும் மாறிட்டார்னு நான் நினைக்க அவரோ என்னுடன் சந்தோஷமாக இருப்பது போல் நடிச்சிட்டு தன்னுடைய முன்னாள் காதலியை நினைத்து குற்றவுணர்ச்சியில் துடிச்சிருக்கார். இந்த பிரிவு இருவருக்குமே சுப முடிவு என்று நினைத்து கவினோட அப்பா விலகி போய்ட்டாரு... ஆனா அவரை மனதால் கணவராக ஏற்று அவரும் என்னை விரும்பி மனைவியாக ஏற்றுக்கொண்டார் அப்படினு நினைத்து நான் அவருடன் வாழ்ந்த அந்த ஐந்து வருடங்கள் எல்லாம் கனவுனு நினைத்து மறந்திட்டு என்னால் வேறொரு வாழ்க்கையை எப்படி தேர்ந்தெடுத்துக்க முடியும்??

அவருடைய மனதை நான் ஏற்கனவே அறிந்திருந்தால் என் பிள்ளைகள் அப்பா இல்லாமல் வளர்ந்திருக்கமாட்டாங்க. சரியான புரிதல் இல்லாததால் பாதிக்கப்பட்டது என் பிள்ளைகள் தான். தனியொரு பெண்ணாக இந்த சமூகத்தில் நின்று போராடி பிள்ளைகளை வளர்ப்பது அவ்வளவு லேசான காரியமில்லை. அதனாலேயே எனக்குள் ஒரு கடினத்தன்மை வந்துவிட்டது. ஆனால் கவினும் அபியும் அந்த சின்ன வயதிலும் ரொம்ப பொறுப்பா இருந்தாங்க. அவங்க இரண்டு பேருக்கும் நான் எப்பவும் சொல்லுற விஷயம் மத்தவங்க உணர்வுகளுக்கு மரியாதை குடுங்க... அவங்க நிலைமையில் இருந்து அவங்க பிரச்சனையை யோசிங்க... யாரும் கெட்டவங்க இல்லை... சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் அவங்களை கெட்டவங்களா நடந்துக்க வைக்கிது.

என்னோட இரண்டு பிள்ளைகளும் என்னோட வளர்ப்பு தப்புனு யாரும் சொல்ல இதுவரைக்கும் வாய்ப்பு கொடுத்ததில்லை. அவங்க அப்பா இறந்த செய்தி கேள்விபட்டபோ கூட அங்க போய் அவங்களோட கடமையை செய்திட்டு தான் வந்தாங்க...
இதுவரை நான் கௌரவமாக இருக்கேன்னா அதுக்கு என் இரண்டு பிள்ளைகள் தான் காரணம்...பல இராத்திரிகள் கவினோட அப்பாவை நினைத்து நான் அழும் போது அபி வந்து என்னை இறுக்கமா கட்டிப்பிடிச்சி என் தலையை தடவிக்கொடுப்பான். அவனுக்கு அந்த வயசுல என்ன புரிந்ததோ தெரியலை என் முகம் கொஞ்சம் மாறுனா கூட வந்து என்னை அணைச்சிக்குவான். அவனை பார்த்து கவினும் என் காலை கட்டிக்கிட்டு தூக்க சொல்லுவான்.

என்னடா எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னு பார்க்கிறியா மா?? நான் பண்ண தப்பை நீயும் பண்ணிராத.. கவின் உன்னை விரும்புவது எனக்கு தெரியும்... ஆனா அவனும் ஆண்பிள்ளை...நம்மோட எல்லா உணர்வையும் அவனால் புரிஞ்சிக்க முடியாது. நீ என்ன நினைக்கிறனு அவனுக்கு தெரியாது.. அதே மாதிரி அவன் என்ன நினைக்கிறானு உனக்கு தெரியாது... அதனால நீங்க இரண்டு பேரும் பேசிகிட்டா தான் எதுக்கும் முடிவு வரும்... அப்படி பேசும் போது உங்க இரண்டு பேருக்கு இடையேயும் ஒரு நல்ல புரிந்துணர்வு வரும். அது உங்க மிச்ச வாழ்க்கையை பிரகாசமாக்கும். நீ உலக நடப்பு தெரிஞ்ச பொண்ணு... உனக்கு நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன்.மனசுல எந்தவித சந்தேகங்களையோ சுணக்கத்தையோ வைச்சிக்காதமா....

எனக்கு நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்கனும்... அது குறுகிய காலத்துக்கு மட்டும் இல்லாமல் உங்க வாழ்நாள் முழுதும் தொடரணும் அது தான் என்னோட ஆசை..” என்று வீரலட்சுமி தான் கூற நினைத்தை ரேஷ்மியிடம் சொல்லிமுடிக்க ரேஷ்மிக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை..

தன் அத்தைக்கும் இப்படியொரு சோக பக்கம் இருக்கும் என்று அவள் அறியவில்லை.. வினய் எப்போதும் தன் அம்மாவுக்கு பணிந்து நடப்பதற்கான காரணம் ரேஷ்மிக்கு புரிந்தது. வீரலட்சுமி கடுமையாக இருந்த போதிலும் அவரின் மென்மையை ரேஷ்மி தன் தாய் தந்தையை இழந்து நின்றபோது அறிந்து கொண்டாள். தனக்காக அவர் பார்த்து பார்த்து அனைத்தையும் செய்வதை கண்டவளுக்கு அவர் மீது இன்னும் மரியாதை கூடியது...

இன்றுகூட தன் மகனுக்காக மட்டும் பேசாது தன்னுடைய நல்வாழ்வையும் சுட்டிக்காட்டி பேசியது ரேஷ்மிக்கு தன் அன்னையை நினைவு படுத்தியது.......எந்தபெண்ணிற்கும் புகுந்தவீட்டு உறவுகள் சுகமாய் அமைந்துவிட்டால் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சி மட்டுமே நிலைத்துநிற்கும். ரேஷ்மிக்கும் அதே நிலையே... வினயாகட்டும் வீரலட்சுமியாகட்டும் ரியாவாகட்டும் அனைவருமே அவளது நலனை முன்னிறுத்தியே அனைத்தையும் செய்கின்றனர்.

இதை நினைத்தவளுக்கு தன் பெற்றோர் மகளை பாதுகாப்பான கூட்டில் சேர்த்துவிட்டோம் என்ற திருப்தியினாலேயே இவ்வுலகை விட்டு சென்றுவிட்டனர் என்று தோன்றியது.. அவ்வாறு தோன்றிய மறுகணம் அவளறியாமல் அவளது கண்கள் கலங்கியது.
அதை பார்த்த வீரலட்சுமி ஒரு பெண்ணாய் ரேஷ்மியின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டார். அது தந்த சுகத்தில் சற்று நேரத்தில் தெளிந்தாள் ரேஷ்மி. மெதுவாக வீரலட்சுமியை விட்டு விலக வீரலட்சுமியோ

“ஏன்மா நைட்டு சாப்பிடாமல் படுத்துட்ட??? வினய் கூட வேணாம்னு சொல்லிட்டான்??” என்று குறும்பாய் கேட்க ரேஷ்மியோ வெட்கத்தில் நெளிந்தாள்.

“ஹாஹா... சரி விடு.... எப்படியோ நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக இருந்தா போதும்... சரி நீ போய் சமையலை கவனி” என்று வீரலட்சுமி கூற அவரது கையிலிருந்த காபி கப்பை வாங்கியவள் தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்.

மாலை ஆபிஸ் முடிந்து வந்த வினய் அனைவரையும் ஹாலிற்கு வரவைத்து தான் திடீரென ஆபிஸ் அலுவல் காரணமாக ஒரு கிழமை யூ.எஸ் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னால் அவுட்டிங்கிற்கு வரமுடியாது என்று கூறியவன் அபியிடம் ரேஷ்மியை அழைத்துச்செல்ல கூறியவன் அபியின் துணைக்கு தன் நண்பன் தினேஷின் குடும்பமும் வருவதாக கூறினான். அபி மறுத்த போதும் வினய் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவாறு பேசி அபியை சம்மதிக்க வைத்தவன் இன்று இரவே தான் கிளம்ப வேண்டும் என்றும் தெரிவித்தான். கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்வதற்காக தன்னறைக்கு சென்றான் வினய். அதுவரை நேரம் அவன் கூறியவற்றை கேட்டிருந்த ரேஷ்மி வினயின் பின்னாலே சென்று தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டாள்...வினயோ பாக்கிங் வேலையில் இறங்கிவிட ரேஷ்மியை கவனிக்கவில்லை.

“வினய் கட்டாயம் போகனுமா?” என்று ரேஷ்மி கேட்க வினய் தன் வேலையை தொடர்ந்தவாறு

“ஆமா... ஆபிஸ் வர்க்... அதோடு என்னோட பிராஜக்ட் டெமொனாஸ்ரேஸனுக்கு நான் கட்டாயம் அங்க இருக்கனும்.” என்று கூறியபடி தன் வேலை தொடர அவனை பின்னாலிருந்து அணைத்தாள் ரேஷ்மி.
அவளது அணைப்பை எதிர்பாராதவன் அவளது அணைப்பில் மயங்கத்தொடங்கிய நேரம் அவனது மனமோ அவனது உறுதியை நியாபகப்படுத்தியது. அதனால் மனதால் ரேஷ்மியுடன் உரையாடத்தொடங்கினான் வினய்.

“சாரி ஷிமி... எனக்கு வேற வழி தெரியலை... என்னால் உன் முன் நடிக்க முடியலை... என்னோட ஒதுக்கம் உன்னை பாதிச்சிருமோனு எனக்கு பயமா இருக்கு...இந்த ஒரு வார பிரிவு நமக்குள்ள இருக்க இடைவெளியை குறைக்கும்னு நம்புறேன். உனக்காக தான் இதெல்லாமே... உனக்காக மட்டுமே தான். நீ எப்பவும் என்னோட ஷிமியா என்கூட சந்தோஷமாக இருக்கனும்.. அதுக்கு நீ உன் கூட்டை விட்டு முழுசா வெளிய வரணும்.. அதுக்கு இந்த ஒரு வார பிரிவு அவசியம்னு எனக்கு தோனுது.. இது உனக்கு புரியுமானு தெரியலை.... ஆனா எல்லாம் சரியாகும்னு நம்புறேன்..” என்று மனதால் பேசினான் வினய்.

இருவரும் அதே நிலையில் இருக்க தன் முதுகில் உணர்ந்த ஈரத்தில் உணர்வு பெற்ற வினய் ரேஷ்மியை பின்புறமிருந்த முன்னால் இழுக்க அவன் முன்னால் நின்றவளின் கண்ணில் இருந்து நீர் சொட்டியது. இதை பார்த்த வினய் உடனேயே ரேஷ்மியை இழுத்து அணைத்து கொண்டான்.

அவன் மார்பில் சாய்ந்தவளை சிறிது நேரம் அழவிட்டவன்

“ஓய் பொண்டாட்டி எதுக்கு இப்போ இந்த அழுகை..?? வன் வீக் தானேமா.. கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள பறந்து போயிடும்..... இதுக்கெல்லாம் யாராவது அழுவாங்களா??” என்று அவள் கண்களை துடைத்து விட அதில் அவன் முகத்தை நோக்கியவள்

“நான் ஒன்னு கேட்பேன்.. நீங்க உண்மையை சொல்லனும்..”

“மாட்டேன்.. பொய் தான் சொல்லுவேன்..” என்று அவன் கையணைப்பிலேயே ரேஷ்மியை வைத்துக்கொண்டு பதிலளிக்க அவனை முறைத்தாள் ரேஷ்மி..

அவளது முறைப்பை கண்டவனுக்கு புன்னகை அரும்பிட

“கூல்மா... சரி நீ கேளு... நான் உண்மையான பதிலை சொல்லுறேன்...” என்று வினய் கூறிட

“உண்மையாகவே நீங்க ஆபிஸ் விஷயமா தான் போறீங்களா?? இல்லை என்மேல் உள்ள கோபத்துல என்னை அவாய்ட் பண்ணுறதுக்காக போறீங்களா??” என்று ரேஷ்மி கேட்க வினயோ என்ன பதில் கூறுவதென்று தடுமாறினான்.

எங்கே உண்மையை கண்டுபிடித்துவிடுவாளோ என்ற பயத்தில்

“இதென்னமா கேள்வி...??? யாராவது பொண்டாட்டிக்கு பயந்து நாடுவிட்டு நாடு ஓடுவாங்களா??? உண்மையாகவே ஆபிஸ் விஷயமாக தான் யூ.எஸ் போறேன்... நம்புமா..” என்று அவளை நம்ப வைக்கும் முயற்சியில் வினய் கடினமாக உழைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ரேஷ்மியோ சந்தேகமாக பார்க்க அவளை திசை திருப்பும் முகமாக

“சரி உனக்கு அங்க இருந்து என்ன வாங்கிட்டு வரணும்??” என்று கேட்டு அவளை திசை திருப்பி ஒருவாறு அவளை சமாளித்தான்.
பாக்கிங் முடிந்ததும் உணவருந்த வந்த வினயிற்கு உணவு பரிமாறிய ரேஷ்மி அவனை பார்த்தபடி இருக்க அவளை அருகில் அமர்த்தி தன்னுடனேயே உணவருந்த செய்தான்.

அதிகாலை மூன்று மணிக்கு பிளைட் என்பதால் இரவு பதினொரு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான் வினய்.
அதுவரை நேரம் தங்கள் அறையில் ரேஷ்மியை அணைத்தவாறு அமர்ந்திருந்தான் வினய். நேரம் கடக்க அவளது முகத்தில் கவலையின் சாயல் கூடிக்கொண்டே செல்ல அதை பார்த்த வினயிற்கு தன்னுடைய முடிவு தவறோ என்று தோன்றத்தொடங்கியது.... இருப்பினும் அதற்கான அவசியம் இருப்பதை உணர்ந்தவன் ரேஷ்மியை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான்.

பதினொரு மணியளவில் கால் டாக்சி வந்துவிட அதை அறிந்த ரேஷ்மி வினயை கட்டிக்கொண்டு மீண்டும் கண்ணீர் வடிக்கத்தொடங்கினாள்... ஒருவாறு அவளை சமாதானப்படுத்திவிட்டு வெளியே வரமுயன்றவனை இறுக அணைத்து முகம் முழுதும் இதழ் பதிக்க தொடங்கினாள். அவளது வேகம் அவளது பிரிவுத்துயரை பறைசாற்ற வினயோ செய்வதறியாது விழித்தான். அவளை தடுத்து நிறுத்தியவன் அவளது இதழில் மென்மையால் இதழொற்றிவிட்டு அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன்

“ஷிமி வன் வீக் தான்மா.. வேலை முடிந்ததும் வந்திடுவேன். நீ சமத்து பொண்டாட்டியா இருப்பியாம். உன் வீட்டுக்காரரு சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்திருவேனாம்..” என்று அவளை சமாதானப்படுத்தியவன் ஏர்போட்டிற்கு கிளம்பினான்.

ஒருவாரம் இருவாரமாக மாறியிருக்க அன்று தாயகம் திரும்ப தயாராகிக்கொண்டிருந்தான் வினய்........கடந்த இரண்டு வாரமும் தொலைபேசியிலேயே காதல் பரிமாறிக்கொண்டனர் வினயும் ரேஷ்மியும்.

தினமும் இரவு ரேஷ்மிக்கு அழைப்பவன் அவள் உறங்கும்வரை உரையாடுவான். அதுவரை நேரம் வினயின் அருகாமையின்றி உள்ளுக்குள் உருகுபவள் அவனது அழைப்பில் உயிர்பெற்று காதலாய் உருகி பேசியபடியே உறங்கிவிடுவாள். வினயும் அவள் உறங்கும் வரை உறையாடுபவன் அந்த புறம் அமைதியானதும் அழைப்பை துண்டித்து விடுவான். என்ன பேசினர் என்று கேட்டால் இருவரின் பதிலும் தெரியாது என்று ஒன்றாகவே இருக்கும்.

இவ்வாறு இருவாரமும் கடந்திருக்க ரேஷ்மியின் பேச்சில் காதல் கரைபுரண்டு வெளிப்படுவதை வினய் உணர்ந்தான்.

அன்று ஒருநாள் இரவு உரையாடும் போது வினய்

“ஷிமி நான் ஒன்னு கேட்பேன் நீ அதுக்கு உண்மையான பதில் சொல்லனும்....”

“சொல்லுங்க வினய்...”

“உனக்கு லவ்னா பிடிக்காதா???” என்று ரேஷ்மியின் குழப்பத்தை அறிவதற்காக அவ்வாறு கேட்டான் வினய். ரேஷ்மியோ அதற்கு பதில் கூறாமல் இருக்க வினயோ

“ரேஷ்மி நீ பேசுறது எனக்கு கேட்கலைமா... கொஞ்சம் சத்தமா பேசு..” என்று வினய் சொல்ல அதை உண்மை என்று நம்பிய ரேஷ்மி ஹலோ ஹலோ என்று கூற

“ஆ.. இப்போ கேட்குது மா... நீ என்ன சொன்ன?? மறுபடியும் சொல்லு..” என்று வினய் கேட்க அப்போது தான் அவன் தன்னுடன் விளையாடுகிறான் என்று புரிந்துகொண்டாள் ரேஷ்மி..

“டேய் திருடா... உனக்கு கொழுப்பு ரொம்ப அதிகமாயிருச்சு..”

“ஆம் ஷிமி.. என்ன பண்ணுறது??மூன்று நேரமும் பாஸ்தா,பர்கர் பிரட்னு சாப்பிட்டு கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு... அங்க வந்து கம்மி பண்ணிக்கிறேன்...” என்று வினய் சீரியசாக சொல்ல அவனது பதிலில் சிரித்துவிட்டாள் ரேஷ்மி..

“ஏன் வினய் நீங்க எப்பவும் இப்படியா?? இல்லை இப்ப தான் இப்படியா???”

“தெரியலையேமா...” என்று இழுக்க மீண்டும் சிரித்தாள் ரேஷ்மி...

“சரி... இப்போ சொல்லு... உனக்கு லவ் பிடிக்குமா பிடிக்காத???” என்று தன் கேள்வியை நியாபகப்படுத்த

“இவ்வளவு நாள் பிடிக்கலை... ஆனா..” என்று ரேஷ்மி இழுக்க

“ஆனா...” என்று வினய் எடுத்து கொடுக்க

“ஆனா..இப்போ ஒரு மாயவன் என்னை காதல் வசியம் பண்ணிட்டான்.அவன் பண்ண வசியத்துல காதல் கசக்குதய்யானு சொல்லிட்டு இருந்த பொண்ணு காதலே காதலே தனிப்பெருந்துணையேனு பாட்டு பாடிட்டு இருக்கு...” என்று சொல்ல இப்போது சிரிப்பது வினயின் முறையானது.

“ஏன் ஷிமி உனக்கு வேற சிட்டுவேஷன் சாங்கே கிடைக்கலையா??” என்று கேட்க

“ஏன் அந்த பாட்டுக்கு குறைச்சல்??? அந்த பாட்டுல எவ்வளவு பீல் இருக்கு தெரியாமா???”

“லிரிக்ஸே இல்லாத பாட்டுல அப்படி என்ன ஷிமி பீல்..”

“சரி நான் சொல்லுற மாதிரி இப்போ செய்ங்க... உங்க லாப்டொப்பை ஆன் பண்ணி யூ டியூப்பில் அந்த சாங்கை சர்ச் பண்ணுங்க”

“ஹேய் இப்போ எதுக்கு??”

“சொன்னா கேளுங்க....”

“சரி கொஞ்சம் இரு...” என்று கூறியவன் அவனது லாப்டாப்பை ஆன் செய்து அவள் கூறியது போல் பாட்டை தேடியெடுத்தான்.

“எடுத்துட்டேன் ஷிமி...”

“சரி இப்போ உங்க ஹெட்செட்டை எடுத்து கணெக்ட் பண்ணி அந்த சாங்கை என்னை நினைச்சிட்டே கண்ணை மூடி கேளுங்க...”

“அது ஏன் ஷிமி உன்னை நினைச்சுட்டு கேட்கனும்???” என்று அவளை வேண்டுமென்றே வம்பிழுக்க

“சொன்னா மறுபேச்சு பேசாமல் அதை செய்யனும்...”

“சரிங்க மேடம்...கோவிச்சிக்காதீங்க..” என்று அவள் கூறியபடி செய்தான். ரேஷ்மியும் அந்த பாடலை கேட்கத்தொடங்கினாள்.

கொஞ்சும் பூரணமே வா
நீ கொஞ்சும் ஏழிசையே
பஞ்சவர்ணம் பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி
காதலே காதலே
தனிப்பெரும் துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ ...

என்று பாடலை இருவரும் மெய்மறந்து ரசித்திருந்தனர். சின்மயினின் குரலும், கோவிந் வசந்தனின் இசையும் அவர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்து சென்றது... பாடலின் வரிகளைவிட அந்த மெல்லிசையே அவர்கள் இருவரையும் கட்டிப்போட்டது...
பாடல் முடிந்ததும் வினயை அழைத்தாள் ரேஷ்மி... அவனுக்கோ அந்த பாடல் ரேஷ்மியின் அருகாமையை நினைவுபடுத்த அது தந்த மயக்கத்தில் தன்னிலை மறந்திருந்தான். இருமுறை வினயை அழைத்து பார்க்க அவனிடம் பதிலில்லை... அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் வினயிற்கு அழைத்தாள் ரேஷ்மி.

சில விநாடிகள் கடந்து அழைப்பு எடுக்கப்பட

“என்ன வினய் கண்ணை மூடி பாட்டை கேட்க சொன்னா கண்ணை மூடி தூங்கிட்டீங்க போல??” என்று கேலிக்குரலில் கேட்க எதிர்புறம் எந்தவித பதிலுமில்லை...

“வினய் லைன்ல இருக்கீங்களா??”

“ம்...”

“வினய் ஆர் யூ ஓல்ரைட்??”

“ஷிமி.... ஐயம் டெர்ரிப்லி மிஸ்ஸிங் யூ... உன்னை தனியா விட்டுட்டு வந்தது எவ்வளவு தப்புனு எனக்கு இங்கு வந்தப்பிறகு தான் புரிந்தது... நான் உன்னை எவ்வளவுக்கு லவ் பண்ணேன்னு இந்த பிரிவு எனக்கு உணர்த்திவிட்டது... இனிமே நீயா நினைத்தால் கூட உன்னை பிரிய விடமாட்டேன்... ப்ளீஸ் ஷிமி என்ன கோபமா இருந்தாலும் என்னை திட்டு சண்டைபோடு... ஆனா என்னை விட்டு போயிறாத.... நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சப்போ உன் மேல இப்படி பைத்தியமா இருப்பேனு நான் நினைச்சி கூட பார்க்கலை... ஆனா இப்போ இந்த நிமிஷம் நீ மட்டும் என்கூட இருக்கனும்னு தோனுது.... எப்பவும் என்கூடவே இருப்பியா ஷிமி...??” என்று வினய் கேட்க மறுபுறம் பதிலில்லை...

“தூங்கிட்டாளோ....?? அப்போ இவ்வளவு நேரம் பேசுனது எல்லாம் வேஸ்டா..???” என்று தனக்குள் கேட்பதாய் போனில் கேட்க ரேஷ்மியின் சிரிப்பு சத்தம் கேட்டது...

“அடிப்பாவி...அப்போ இவ்வளவு நேரம் நான் பேசுறதை எல்லாம் கேட்டுட்டு அமைதியா தான் இருந்தியோ??? நானும் நம்ம பொண்டாட்டி அசதில தூங்கிட்டா போலனு நினைச்சு ஒரு நிமிஷம் பீல் பண்ணிட்டேன்..” என்று வினய் கூற மீண்டும் ரேஷ்மியின் சிரிப்பு சத்தம்.

“சிரிச்சு சிரிச்சியே ஆள கொல்லுறடி... சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...” என்று வினய் கேட்க

“ம்ஹூம் சொல்லமாட்டேனே.... என்ன பண்ணுவீங்க??”

“நச்சுனு ஒரு இச்சு குடுப்பேனே..”

“ஹாஹா...நான் தான் உங்க பக்கத்துல இல்லையே.... எப்படி கொடுப்பீங்க??”

“ஆ... இப்படி தான்....” என்று ஒரு நீண்ட முத்தத்தை அழைப்பிலேயே கொடுத்தான்...

“ஹாஹா.... இது ஸ்ரோங் பத்தாது... சோ இதை அக்செப்ட் பண்ண முடியாது...” என்று ரேஷ்மி கூற வினயோ

“நான் பக்கத்துல இல்லைங்கிற தைரியத்தில தானே பேசுற... இரு வந்து வச்சிக்கிறேன்...” என்று செல்லமாக கடிந்து கொள்ள

“வாங்க... வந்து வச்சிக்கோங்க... கொஞ்சிக்கோங்க...ஐயம் வெயிட்டிங்..” என்று ரேஷ்மி சிரித்துக்கொண்டு கூற அவளுடன் சேர்ந்து சிரித்தான் வினய்.

இவ்வாறு தினமும் காதல் பரிமாறிக்கொண்ட இரு ஜோடிகளும் தாம் பரிமாறிய வேண்டிய சில முக்கிய விடயங்களை பரிமாறிக்கொள்ளவில்லை...அதை பரிமாற முயன்ற வேளைகளில் அவர்களது கேலியும் காதல் வார்த்தைகளும் அவர்களை உரையாடலை திசை திருப்பி வேறு பாதைக்கு அழைத்து சென்றுவிடும்.. இது தொடரவே இருவராலும் தாம் கூறவருவதை கூறாமலே உரையாடலை முடித்து கொண்டனர்.

அன்று தாயகம் திரும்ப தயாராகிக்கொண்டிருந்த வினயிற்கு ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கம்.... அவனது மனதை காரணமில்லாமல் ஏதோவொரு பயம் ஆக்கிரமித்திருந்தது.. அது எதனால் என்று புரியாதவன் தனக்குள் குழம்பியபடி இருக்க அந்நேரம் சரியாக அழைத்தாள் ரேஷ்மி...

“ஹேய் ஷிமி நீ இன்னும் தூங்கலையா??? இப்போ அங்க மணி ஒன்னா இருக்குமே??? இன்னும் தூங்காம என்ன பண்ணுற???” என்று மனைவியின் நலனில் அக்கறை கொண்ட கணவனாய் அவளை கடிந்து கொண்டான் வினய்...

“இல்லபா... மனசு ரொம்ப ஹாப்பியா இருக்கு... அதான் தூக்கமே வரலை.. அதான் உங்ககூட பேசலாம்னு கால் பண்ணேன்.... அதுசரி நீங்க பாக்கிங் எல்லாம் முடிச்சிட்டீங்களா?? எத்தனை மணிக்கு ஏர்போர்ட் கிளம்பனும்...??”

“முடிச்சிட்டேன் மா... நீ லிஸ்டு போட்ட எல்லாத்தையும் முட்டை கட்டி முடிக்கிறதுகுள்ள எனக்கு பெண்டு கழண்டுருச்சி...”

“ஹலோ... நானா கேட்டேன்... நீங்க தான் என்ன வேணும்னு சொல்லு ஷிமினு கெஞ்சினீங்க..பாவம் நம்ம வீட்டுக்காரர் ஆசைப்படுறானேனு சொன்னேன்... இப்போ என்னவோ நானே லிஸ்டு போட்டு உங்களை சுமந்துட்டு வர சொன்ன மாதிரி சொல்லுறீங்க???”

“ஹாஹா... நான் சுமக்குறதுனா உன்கிட்ட கேட்டுருக்கவே மாட்டேன்... பிளேன் தானே சுமக்குதுனு தான் நீ சொன்னதெல்லாம் வாங்கி மூட்டை கட்டுனேன்..” என்று ரேஷ்மியை மீண்டும் வம்பிழுக்க

“அப்போ நீங்க நான் சொன்னா எதையும் சுமக்கமாட்டீங்க???”

“இல்லையே???”

“நீ இங்க வா என்னை தூக்கிட்டு சுமக்க வைக்கிறேன்.அப்படி நான் செய்யல என் பேரு ரேஷ்மி இல்லை...”

“இந்த டீலுக்கு நான் ஓகேமா... ஒரு நாள் இல்லை... வாழ்நாள் முழுசும் உன்னை தூக்கிட்டு சுத்த ஐயா ரெடி....”

“அப்படீங்களா சார்.... சரி நீங்க வாங்களே...உங்களை நான் கவனிச்சிக்கிறேன்.”

“எப்படி கவனிச்சிக்கிருவ ஷிமி??? நான் யூ.எஸ் கிளம்புறதுக்கு முதல்நாள் என்னை கவனிச்சியே அப்படியா??” என்று வினய் கேட்க அந்தப்புறம் அமைதியானது...

“ஷிமி என்ன சைலண்டாகிட்ட??? என்னை அன்னைக்கு மாதிரியே கவனிச்சிக்குவியா?? இல்லை ஸ்பெஷல் கவனிப்பு ஏதும் இருக்கா??” என்று வினய் கேட்க

“சீ... போடா... திருடா... உனக்கு எப்பவும் இதே பேச்சுதான்..”

“ஆஹான்...”

“நான் வைக்கிறேன்...கவனமா வந்து சேருடா... என் ஸ்வீட் புருஷா... உம்மா...” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தாள் ரேஷ்மி...
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் இவ்வளவு நேரம் அடங்கியிருந்த கலக்கம் மீண்டும் வினயின் மனதில் தலைதூக்கத்தொடங்கியது...

அதுவும் இப்போது கலக்கத்துடன் சேர்ந்து கண்களும் கலங்கத்தொடங்க வினயிற்கு எதனால் இப்படி உணர்கிறேன் என்று தெரியவில்லை... அவனது மனமோ பயத்தில் பதறியபடியிருக்க அதை சமனப்படுத்த தெரியாதவன் குளியலறைக்குள் புகுந்து ஷவரின் கீழ் நின்றான்.
ஷவரில் இருந்து வடிந்த நீரின் குளுமை அவனது மனதை சற்று சமாதானப்படுத்தியபோதும் மனதில் இருந்த இனம்புரியாத கலக்கத்தை நீக்கவில்லை..நேரமாவதை உணர்ந்து தயாராகி வந்தவன் ஏர்போர்டிற்கு கிளம்பினான்.

அவனது மனதின் கலக்கத்திற்கான காரணத்தை அறிய நேரும் சந்தர்ப்பத்தில் வினயின் நிலை என்ன???
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 16
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN