உன்னுள் என்னைக் காண்கிறேன் 9

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 9
‘இவன் ஏதோ வேண்டுமென்றே என்னோடு கேம் விளையாடுகிறான். என்னை இவன் பிடியில் சிக்க வைக்க ஏதோ திட்டம் போடுகிறான். இல்லை எதையும் தீர ஆராயமல் இவன் வலையில் சிக்கக்கூடாது. பதட்டப்படாதே பொறுமை மித்ரா பொறுமை’ என்று உள்ளுக்குள் தனக்குத்தானே பாடம் எடுத்துக் கொண்டவள் பின் நிதானமாக.

“நீங்க என்ன சொல்றீங்க? என் தாத்தா ஜெயிலுக்குப் போகாமலிருக்க நீங்க தடுக்கப் போறீங்களா? அதற்குப் பதிலா நான் நீங்க சொல்றபடி எல்லாம் கேட்கணுமா? என்ன உளறல் இது?அப்படி அவர் ஜெயிலுக்குப் போகாமலிருக்க இந்நேரம் என்னவெல்லாம் செய்யணுமோ அனைத்தும் செய்திருப்பார். ஸோ உங்க உதவி எனக்குத் தேவையில்லை. அதனால் நீங்க சொல்றபடி நானும் கேட்டுத்தான் ஆகணும்னு எந்த அவசியமும் இல்ல” என்று மிடுக்காகக் கூறினாள்.

“அந்தப் பேப்பர்ஸ்லாம் படிச்சுமா இப்படி சொல்ற?” என்று ஆச்சர்யத்துடன் தேவ் கேட்க,

அப்படி அந்தப் பத்திரத்திலிருந்தது இது தான்... தனக்குத் தெரிந்த ஒருவருக்கு அவர் மகன் தொழில் துவங்க மித்ராவின் தாத்தாவிடம் ஷூரிட்டி கேட்க இவரும் பழகினப் பழக்கத்துக்காக நம்பி கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். அந்தப் பத்திர நகல் தான் அது.

ஆனால் அதனுடன் சேர்த்து கோர்ட் சம்மனின் நகலுமிருந்தது. அதில் பணம் கொடுத்த பைனான்ஸியர், மித்ராவின் தாத்தா தான் அந்தப் பணத்திற்கு முழுப்பொறுப்பு வட்டியுடன் சேர்த்து இவர் தான் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் அப்படித் தவறும் பட்சத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எழுதியிருந்தது. அதையும் மித்ரா படித்தாள்.

அதெப்படி ஷூரிட்டி போட்டது கைது வரை போகும்? ஏனெனில் இவர் யாருக்குப் போட்டாரோ அவரும் அவர் மகனும் ஊரைவிட்டு ஓடிவிட பணம் கொடுத்த பைனான்ஸ் ஆபிஸர் இப்போது சத்தியமூர்த்தி கழுத்தில் கத்தியை வைக்கிறார். ஆனால் இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும் மித்ரா அசராமல் அவனுக்குப் பதில் சொன்னது தான் தேவ்வுக்கு வியப்பாகயிருந்தது.

‘என் கிட்டயே அலட்சியமா? முன்னப் பின்னத் தெரியாத சின்னப் பெண்ணாச்சேனு விட்டா உனக்கு இவ்வளவு திமிரா? பாருடி பாரு உன்னைக் கேட்க வைக்கறனா இல்லையானு பாரு. நிச்சயம் என் பேச்சைக் கேட்டுத்தான் நீ நடப்ப அதைச் செய்வான்டி இந்த தேவ்’ என்று மனதுக்குள் சூளுரைத்தான் தேவ்.

அது எதையும் அவளிடம் காட்டிக் கொள்ளாமல் “இங்கப்பார் உங்களைப் பார்த்தாலும் அப்படி ஒண்ணும் வசதி படைத்தவர்கள் மாதிரி தெரியல. அப்படியேயிருந்தாலும் எண்பது லட்சம் என்பது உன் தாத்தாவைப் பொறுத்தவரை சற்றுப் பெரியத் தொகை”

அவள் இடையில் ஏதோ சொல்லவர..

கை உயர்த்தித் தடுத்தவன் “இரு இரு.. சும்மா உனக்கு மட்டும் தான் பேசத் தெரியும்னு நீ பாட்டுக்குப் பேசாத. நான் சொல்லி முடிச்சிடுறேன் அதையும் கொஞ்சம் கேள்” என்று கிண்டலாகக் கூறினான்.

இதற்கு மேல் இவனிடம் பேசமுடியாது என்ற பாணியில் மித்ரா சென்று கட்டிலில் அமர, அதையே தனக்குச் சம்மதமாக எடுத்துக்கொண்டு அந்த அறையிலிருந்த நாற்காலியை இழுத்து அவள் முன் போட்டு அமர்ந்து பேச ஆரம்பித்தான் தேவ்.

“அவசரப் படாத உன்கிட்ட நான் பாதி தான் சொன்னேன். இன்னும் முழுசா முடிக்கல அதுக்குள்ள துள்ளற. நீ இப்ப என்ன சொல்லவரேனு எனக்குத் தெரியும். உன் தாத்தாவுக்குச் சொந்தமா வீடும் கடையும் இருக்குதுனு தான சொல்ல வந்த? மூச்சுக்கு முன்னூறு தடவ என் தாத்தா வீடு என் தாத்தா கடைனு சும்மா பெருமை அடிச்சிக்கலாமே தவிர அதெல்லாம் இப்ப உன் தாத்தா பேர்லயேயில்ல” என்று நிறுத்தி அவள் பக்கத்தில் கட்டிலின் மேல் வைத்திருந்த அவன் பிரீஃகேசிலிருந்து இன்னொரு பத்திரத்தை எடுத்து நீட்டினான். மறுபடியும் ஒரு இடியா இதில் என்னயிருக்கிறதோ என்று நடுங்கியவாறு அதை வாங்கிப் படிக்கும் போதே அவனும் சொல்ல ஆரம்பித்தான்.

“உன் பெரியப்பா ஸாரி பெரியப்பாக்களெல்லாம் சேர்ந்து வீட்டையும் கடையையும் அவங்க பேருக்கு மாத்தி எழுதிக்கிட்டாங்க. ஏன்னா அதெல்லாம் உங்க தாத்தா உன் பேர்ல மாத்தற ஐடியாவுல இருந்திருக்கிறார். ஆனால் உன் உறவுகளுக்கு இது பிடிக்காம அவங்க பண்ண சதி வேலைதான் இவ்வளவும். இதெல்லாம் நான் கண்டுபிடிச்சது.

அதே மாதிரி இந்நேரம் வரை எனக்குக் கிடைத்த தகவல்படி உன் தாத்தாவால் அவ்வளவு பணத்தைப் புரட்ட முடியல. இன்றோடு உன் தாத்தா கேட்ட அவகாசமும் முடிந்துவிட்டது. காவல்துறையில் எனக்குத் தெரிந்த மேலதிகாரிகளை வைத்து நான் விசாரித்தவரை நாளைய தினம் உன் தாத்தா கைது செய்யப்படுவது உறுதி“ என்று நிதானமாகக் கூறியவன் இப்ப என்ன பேபி பண்ணப் போற என்று எண்ணியவாறு அவள் முகம் பார்த்தான் தேவ்.

அவள் சிந்திக்கச் சற்று இடைவேளை விட்டு “இங்க பார் உங்க தாத்தாவுக்கும் எனக்கும் எந்த சண்டையோ பிரச்சினையோ முன் விரோதமோயில்ல. இன்னும் சொல்லப் போனா உன் தாத்தாவை நான் பார்த்ததுக் கூடயில்ல. உன்னையே எனக்கு இப்போது தான் தெரியும். அப்படியிருக்க உன்னையோ உன் தாத்தாவையோ நான் ஏன் பழி வாங்கப்போறேன்? நீங்கள் எனக்கு வேண்டப்பட்டவர்கள் இல்லை தான். இருந்தும் உங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை என்னும் போது அதைப் போக்க என்னால் உதவ முடியும் என்று தான் கூறினேன்.

இதில் எங்கிருந்து என் கெத்தோ திமிரோ வருது? சரி என் உதவி வேண்டாம்னு சொல்லிட்ட, அப்ப நானும் செய்யல. உங்களால் எண்பது லட்சத்தைப் புரட்ட முடியும்னு சொல்ற. அப்ப அதுக்கூட சேர்த்து என் ஆறு லட்சத்தையும் புரட்டிக் கொடுத்துடு. எனக்கு வேண்டியது என் ஆறுலட்சம். அதைக் கொடுத்துட்டுப் போய்க்கிட்டே இரு. பணத்தைத் தவிர உனக்கும் எனக்கும் வேறு என்ன சம்பந்தம் இருக்கு சொல்லு” ஒரு பிசினஸ்மேனாக அவன் பேச.

அவள் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. ஆனால் யோசிப்பதற்கு அறிகுறியாக அவள் புருவம் மட்டும் சற்று நெறிந்துயிருந்தது. தேவ்வும் முடிவு உன் கையில் என்பது போல் அமைதியாக இருந்தான். பின் திடீர் என்று “நான் முதல்ல என் தாத்தா கிட்டப் பேசணும். அதற்குப் பிறகு தான் எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியும்” என்று உறுதியான குரலில் கூறினாள் மித்ரா.

‘எப்படிப் போனாலும் விட மாட்டறாளே. நீ இவ்வளவு புத்திசாலியாயிருக்கக் கூடாது பேபி...’ என்று அவளை மனதிற்குள் பாராட்டியவன் வழக்கம் போல் அதை வெளிக்காட்டாமல் “சரி பேசு வீடியோ காலே போட்டுத்தறேன்” என்றான் மிடுக்காக.

அவளோ அவசரமாக “இல்ல இல்ல என் தாத்தா கிட்ட ஸ்மார்ட் போன் இல்ல. ஸோ நீங்க காலே பண்ணுங்க” எனவும்தன் கையிலிருந்த கைப்பேசியில் அவள் தாத்தாவின் எண்களை ஒற்றி அவள் முன் நீட்டி “ஸ்பீக்கர் மோடில் போட்டு இருக்கேன் இப்படியே பேசு” என்றான்.

அவளுக்கும் அது சரி என்றேபட்டது. அதைக் கையில் வாங்கிக் காத்திருக்க அங்கே முழு ரிங் போனதே தவிர யாரும் எடுக்கவில்லை. தன் தாத்தாவுக்கு என்னமோ ஏதோ என்ற பயத்தில் அவள் உறைந்து போய் நிற்க.. “இருஇரு பார்க்கலாம்” என்று கூறி மீண்டும் அழைத்தான் தேவ். இம்முறை அவர்களை ஏமாற்றாமல் சத்தியமூர்த்தியே அழைப்பை எடுத்தார்.

“ஹலோ” தாத்தாவின் குரல் உடைந்திருந்தது.

“தாத்தா நான் மித்து பேசறேன்”

“மித்துகுட்டி நீயாடா? எங்கடா போன இவ்வளவு நாள்? எப்படிடாயிருக்க என்னடா ஆச்சி உனக்கு? இப்போ எங்கடாயிருக்க? இந்த தாத்தா வேணாமாடா உனக்கு? என்ன விட்டு ஏன்டா போன...” என்று குரல் தழுதழுக்க ஆயிரம் கேள்விகளைக் கேட்டார.அவர் குரலிலிருந்த பாசத்திலும் நீண்டநாள் கழித்துப் பேசுவதாலும் மித்ராவுக்குக் கண்களில் நீர் கோர்த்துவிட்டது. அதை அவனுக்குக் காட்டாமல் முகத்தைத் திருப்பியவள்,

“தா..த்..தா.. தாத்தா... நீங்க... எப்...” அழுகையால் அவள் பேசுவதற்குத் திணறவே,

அவளிடமிருந்து கைப்பேசியை வாங்கிய தேவ்“ ஐயா நான் தேவேந்திரபூபதி பேசறேன்.”

“தம்பி எதுக்குப்பா என் பேத்தி அழரா? என்ன நடந்துச்சி? நீங்க யாரு? இப்ப எங்கப்பாயிருக்கா என் பேத்தி...” என்று அவர் பதட்டப்பட.

“ஐயா முதல்ல நீங்க கொஞ்சம் அமைதியாயிருந்து நான் சொல்றதக் கேளுங்க! உங்கப் பேத்திக்கு ஒண்ணுமில்ல. அவ நல்லாத்தான் இருக்கா. நான் அவளுக்கும் உங்களுக்கும் வேண்டியவன் தான். இப்போதைக்கு இது போதும். நீங்க பயப்பட வேண்டாம் அவ பாதுகாப்பாகத் தான் இருக்கா” என்று அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டே ஜக்கிலிருந்த நீரைக் கண்ணாடித் தம்பளரில் ஊற்றி “இதைக்குடி” என்று கண்களாலேயே கூறி அவளிடம் நீட்ட.
அவளுக்கும் தேவைப்பட்டதால் அதைக் குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவள் சகஜநிலைக்கு வந்துவிட்டாள் என்பதை அறிந்தப்பின், “ஐயா இதோ மித்ராகிட்ட கொடுக்கறேன் பேசுங்க. இங்க டவர் கொஞ்சம் பிராப்ளம். அதனால் அவ பேசறது உங்களுக்கு விட்டு விட்டுத் தான் கேட்கும்” என்று கூறி மித்ராவிடம் கொடுத்தான் தேவ்.

“தாத்தா முதல்ல நான் கேட்கறதுக்குப் பதில் சொல்லுங்க. நீங்க ஏதாவது பணப் பிரச்சினையில் மாட்டிட்டு இருக்கீங்களா”

“மித்து உனக்கு எப்படி..”

“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க தாத்தா.”

“அதை எப்படிமா சொல்லுவேன்? உங்கப்பாவுக்கு நான் செய்த பாவம் தான் இப்போ என் தலையில விடிஞ்சிருக்கு. ஆனால் அதுல ஒருபாவமும் அறியாத உன்னை மீண்டும் அநாதையாக நிக்க வெச்சிட்டுப் போகப் போறேனே. அது தான் என்னாலத் தாங்க முடியலடா.”

“என்ன தாத்தா சொல்றீங்க?”

“ஆமாடா என் பிள்ளைகளே என்னை ஏமாத்திட்டாங்கடா. என்னையும் உன்னையும் நடுத்தெருவுல நிக்க வெச்சிட்டாங்கடா. நம்ப வெச்சுக் கழுத்தறுத்திட்டாங்கடா. என்னக் கடன்காரனா ஆக்கிட்டாங்கடா.”

“அதிலிருந்து வெளிவர ஏதாவது செய்தீங்களா ?”

“இல்லடா எந்த வழியும் இல்ல. எண்பது லட்சத்துக்கு நான் எங்கே போவேன் மித்துமா? என்கிட்ட அவ்வளவுப் பணம் ஏது ?”

“ஏன் நம்ப கடை என்னாச்சி? அதோட மதிப்பு இரண்டு கோடியாச்சே?”

“ஆமாம் இரண்டுகோடி தான். ஆனா இப்போ அது என் பெயர்ல இல்ல. போன மாதம் உன் பெரியப்பா கடையை விரிவுபடுத்தப் போறேனு கடைப்பத்திரம், வீட்டுப்பத்திரம் எல்லாம் கேட்டான். நானும் நம்பிக் குடுத்தேன். ஆனால் வீட்டையும் கடையையும் அவங்க மூணுப் பேருக்கும் சரிசமமா மாத்தி எழுதிக்கிட்டாங்கடா” என்று தேவ் கூறியத் தகவலும் பத்திரமும் உண்மை என்பதை அவருடைய குன்றல் குரலில் உறுதி செய்தார்.

“அப்போ இதுக்கு என்ன தான் வழி தாத்தா?”

“எந்த வழியும் இல்லடா. நாளைக்கு உன் தாத்தா ஜெயிலுக்குப் போவது உறுதி. ஆனால் அப்படி நடக்க உன் தாத்தா உயிருடன் இருக்கமாட்டேன்டா” என்று கதறி அழத் தொடங்கினார்.

“தாத்தா” என்று வீறிட்டாள் மித்ரா.

இதுவரை அவர்கள் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன்.
அவளிடமிருந்து கைப்பேசியை வாங்கி “ஐயா எந்த அவசர முடிவையும் இப்ப எடுக்காதீங்க. நிச்சயம் இதற்குவழி இருக்கும். நானும் உங்கப் பேத்தியும் கலந்து பேசி இதற்கு வழி இருக்கானு பார்க்கறோம்“ என்று அவருக்குத் தைரியம் சொல்லி அழைப்பைத் துண்டித்தான் தேவ்.

‘ஒரு ரூபாயா இரண்டு ரூபாயா எண்பது லட்சம்! அவ்வளவுப் பணத்திற்கு எங்கு போவது? அப்போ தாத்தா ஜெயிலுக்குப் போவது உறுதியா? இப்போ எதைச் செய்தால் அவர் போகாமல் தடுக்க முடியும்?’ என்று பல கேள்விகளைத் தன்னுள் கேட்டு உறைந்து அமர்ந்து விட்டாள் மித்ரா. அவள் யோசிக்க சற்று அவகாசம் கொடுத்து அவளுக்குக் குடிக்க பால் எடுத்து வர வெளியே சென்றான் தேவ்.

இனி மேல் கொண்டு என்ன செய்வது என்ற யோசனையில் கட்டிலில் சம்மனமிட்டு அமர்ந்து, தலை கவிழ்த்துத் கைகளால் தாங்கி அமர்ந்திருந்தாள் மித்ரா.

அவள் யோசிக்க அவகாசம் கொடுத்துச் சென்றவன் பால் டம்ளருடன் உள்ளே நுழைந்தவன் “முதல்ல இதைக் குடி” என்று அவள் முன் நீட்ட.

‘இவனுக்கு திடீர்னு புதுசா என் மேல அப்படி என்ன கரிசனம்?’ என்று நினைத்தவள் அதை வாங்காமல் அமர்ந்திருக்க.

“இப்போ இதைக் குடிச்சாத்தான் மேல் கொண்டு என்ன செய்யலாம்னு பேசி முடிவு எடுக்க முடியும். உன் தாத்தா கடைசியா சொன்னது நினைவிருக்கில்ல?” என்று அவன் கடுமை காட்ட மேல் கொண்டு மறுக்காமல் அதை வாங்கிக் குடிக்க அதுவரை அவள் முகத்தையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் தேவ்.

“இப்போ நான் நேரடியா விஷயத்துக்கே வரேன். உன் தாத்தா சொன்னத நீ கேட்டயில்ல? நாளைய தினம் என்ன நடக்கப் போகுது என்றதையும் கேட்டயில்ல? இப்ப என்ன சொல்ற? என்னால உன் தாத்தாவைக் காப்பாற்ற முடியும். அதை நான் செய்யவும் தயாராயிருக்கேன். ஆனா என் உதவியே வேண்டாம்னு நீ தான் மறுக்குற” என்று அவள் முகம் பார்க்க..

அவளோ, ‘நீ அது மட்டுமா சொன்ன? நீ கொடுக்கும் பணத்திற்கு என்னை வேலைக்காரியாவாயில்ல வேலை செய்ய சொல்லுற?’ என்று மனதில் கருவிக் கொண்டே அதையும் நீயே சொல்லித் தொலை என்பதுபோல் அவனைப் பார்க்க..

“நான் ஓர் பிசினஸ் மேன். எதையும் சும்மா செய்து எனக்குப் பழக்கமில்ல. அதிலும் உன் தாத்தாவை மீட்க நான் கொடுப்பது சின்னத் தொகையில்ல, எண்பது லட்சம்! அதேபோல் நீ என் ஆஸ்பிட்டலில் தங்கினதற்கான பில் ஒரு ஆறு லட்சம். இவை எல்லாத்தையும் நான் சும்மாத் தரமுடியாது. அப்படி நான் தர்றேனா அது உனக்காகத்தான், உனக்காக மட்டும் தான்…” என்று அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து நிதானமாகச் சொன்னான் தேவ்.

மித்ரா பொதுவாகவே ஆணாதிக்கத்தை எதிர்ப்பவள். அடங்கிப் போகிறவள் அல்ல. மற்ற பெண்களுக்கு நடக்கும் அநீதியைப் பொது இடம் என்று கூடப் பார்க்காமல் தைரியமாகத் தட்டிக்கேட்பாள். இன்று அவளுக்கே எனும் போது எப்படிப் பொறுப்பாள்? வெகுண்டெழுந்து “இப்ப என்ன சொல்லவறீங்க நீங்க? ஏதோ வேலைக்குத் தான் கூப்பிடறீங்கனுப் பார்த்தா தப்பான விஷயத்துக்குக் கூப்பிடற மாதிரி தெரியுது! எவ்வளவு திமிர்? என்னைப் பார்த்தா அப்படிப் பட்டப் பெண் மாதிரியா இருக்கு? இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க…” என்று முகத்தில் ரௌத்திரத்துடன் கட்டிலை விட்டு இறங்கியவள் தன் இரண்டு கைகளையும் அவன் கழுத்தை நெரிக்கும் விதமாகக் கொண்டுச் செல்ல…

அவனோ அவசரமாக, “நான் உன்னைத் தப்பான அர்த்தத்தில் கூப்பிடல. நான் நல்ல தாய் தந்தைக்குப் பிறந்தவன். பெண்களை மதிப்பவனும் கூட. எந்த ஒரு தப்பான எண்ணமும் இதுவரை உன்னிடம் எனக்கு வந்ததுயில்ல இனியும் வராது. நீயே சொல், உன்னைப் பார்த்த இரண்டு நாள்ள நான் ஒருமுறையாவது உன்னைத் தப்பானப் பார்வைப் பார்த்திருப்பேனா?“ என்று நிதானமாக அவள் கண்களைப் பார்த்துக் கேட்க

‘உண்மைதான் அவன் சொல்வது போல் இல்லைதானே…’ என்று நினைத்தவள் இல்லை என்று தலையாட்ட “உன்னிடம் மட்டும் இல்ல, எந்தப் பெண்ணிடமும் என்னால் அப்படி ஒரு பார்வையைப் பார்க்க முடியாது. ஏன்னா அந்தப் பார்வை என் மனைவிக்கு மட்டும்தான்“ என்றான் வசீகரிக்கும் புன்னகையுடன் தேவ்.

‘இதை எதற்கு என்கிட்ட சொல்லனும் அதிலையும் இப்படி ஒரு இளிப்பு வேற’ என்று வழக்கம் போல் மனதிற்குள் கருவ.. அவனே தொடர்ந்தான், “அதனால் அப்படி ஒண்ணும் கேட்க மாட்டேன். ஆனால்…” என்று நிறுத்தியவன் எழுந்து ஜன்னல் அருகில் சென்று இடது காலை மடித்து ஜன்னல் மேல் சாய்ந்து நின்று வலது கையைத் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள்விட்டபடியே சிறுது நேரம் மவுனமாக இருந்தவன் ஒரு பெருமூச்சுடன் இடது கையால் கேசத்தைக் கோதிக்கொண்டே அவளைப் பார்த்து, “நீ எனக்குக் கொஞ்ச நாள் என் மனைவியா நடிக்கணும்” என்று கூறி ஒரு பெரியக்கல்லைத் தூக்கி மித்ராவின் தலையின் மேல் போட்டான்.

மித்ராவுக்கோ ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. ‘இவன் என்னதான் சொல்றான்? நான் நல்லவன் வல்லவன் பெண்களை மதிப்பவன் அப்படி இப்படி சொல்லிட்டு இப்ப இவன் செய்யச் சொல்லும் காரியம் என்ன? இதற்குத் தான் இவன் எனக்கு வலை விரித்தானா? அப்படி இவன் செய்யச் சொல்லும் காரியத்தை நான் செய்வதால் எனக்குக் கிடைக்கும் பெயர் என்ன? அதுவும் அப்படி ஒரு கேவலமான வாழ்வுக்குத் தானே சமம்? அதை இவன் உணர்ந்தானா இல்லை உணர்ந்து தான் கேட்டானா? எப்படிப்பட்ட சுயநலம் பிடித்த அரக்கன் நீ? ச்சே...

கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி அடுக்கடுக்காகத் துன்பங்களைத் தருகிறாய்? நீ எவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்தாலும் எதிர்கொண்டு தாங்கியதற்காகவா இன்று என்னால் தாங்கவே முடியாத கஷ்டத்தைக் கொடுத்துப் பார்க்கிறாய்?. என் வாழ்கையில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இப்பொழுது நான் என்ன செய்வேன்?’ என்று உள்ளுக்குள் உடைந்தவள் மேற்கொண்டு என்ன சிந்திப்பது என்று தெரியாமல் பித்துப் பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் மித்ரா.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 9
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN