பூ 13
ஜெயசந்திரனின் முகம் ஏனோ தெளிவில்லாமலும், மனதிற்கு நெறுடலாகவும் இருந்தது வீட்டிற்குள்ளயே இருந்தால் கோவிலில் நடந்ததையே நினைத்துக்கொண்டு இருப்போம் என்று நினைத்தவன் பைக்கை எடுத்துக்கொண்டு டவுன் வரையும் சென்று வரலாம் என கிளம்பவும் "எங்க போற நானும் வறேன்" என்றபடி முன்னால் வந்து நின்றாள் தேவா..
சில நிமிடங்கள் யோசித்து 'நானும் ஊருக்கு போயிட்டா இவ தனியா தான் இருக்கனும்' என்று எண்ணம் தோன்ற "சரி வா… " என்றவன் "ஆனா என்னை விட்டு எங்கேயும் போக கூடாது என் கூடவே இருக்கனும்" என்று அவளிடம் கூறிய பின்பே அவளை அழைத்து சென்றான்.
முதலில் தங்கைக்கு தேவையான சில பொருட்களை வாங்கியவன் பின்பு அவளை துணி கடைக்கு அழைத்து சென்றான். அவனுக்கும் சிலது பார்க்கலாம் என்று தான் சென்றான். கல்லூரிக்கு செல்ல என்று சில ஆடைகளை வாங்கியவள் பின் அண்ணனும் எடுக்க தானும் அவனுக்காக தேர்வு செய்த வண்ணம் இருந்தாள். அண்ணனின் மேல் ஒவ்வொன்றாக வைத்து வைத்து பார்த்தவளை சிரிப்புடன் பார்த்திருந்தான். "இதுவா இதுவா என்று யோசனையுடனே இருந்தவள் உனக்கு இது ரெண்டுமே ரொம்ப சூப்பரா இருக்கும் ரெண்டுமே எடுத்துக்கலாம் ணா" என்றிட தலை அசைத்து சரி என்றவன் அன்னைக்கும் தந்தைக்கும் எடுத்துக்கொண்டு ஐஸ்க்ரீம் பார்லருக்கு அழைத்து சென்றான். அண்ணனின் முகம் யோசைனையிலேயே இருப்பதையும் அவனிடம் ஏதோ ஒன்று குறைவதையும் கண்டவள் "என்ன நடந்துச்சின்னு நேத்துல இருந்து முகத்தை தூக்கி வைச்சிக்கிட்டு இருக்க?" என்றாள் குழந்தையின் சாயலில்
தங்கையின் கேள்வியில் அவளை பார்த்தவன் தலையை ஆட்டி "ஒன்னுமில்லடா" என்றான்.
"இல்ல ஏதோ இருக்கு… உன் முகம் நேத்துல இருந்தே சரியில்ல.. என்கிட்டயும் சரியா பேசலை" என்றாள் குற்றம் சாட்டும் தொணியில்
"ஒன்னுமில்ல செல்லம்மா" என்று சொல்ல வந்தவனை தடுத்தவள் "நீ தானே சொன்ன நான் மெட்சூர் ஆகிட்டேன் இப்போ எல்லாம் எனக்கு புரியும்னு… ஆனா நீ என்கிட்டயே உண்மை என்னன்னு சொல்ல மாட்டேன்ற… சரி இருக்கட்டும் ஆனா நேத்து நடந்ததை பத்தி நினைச்சி கவலைப்பட்டுட்டு இருந்தியா?, எனக்கு தான் ஒன்னும் ஆகலையே அப்புறம் அதை நினைச்சி ஏன் கவலைபடுற" என்றாள் மன்றாடும் குரலில்.
அவளை வெறுமையாய் பார்த்தவன் "எப்படி கவலைபடாம இருக்க முடியும்னு நினைக்கிற செல்லம்மா…. ஒரு நிமிஷம் என்ன நடக்க இருந்தது தெரியுமா!!!" என்றவனை நிதானப்படுத்தியவள் "அதான் அவர் வந்து காப்பத்திட்டாரே அண்ணா" என்றாள் கண்களில் பளபளப்புடன்.
'அதனால தான் அவன் தப்பிச்சான் என்று மனதில் நினைத்தவன் தங்கையை கவனியாது "ஆமா யாரவன் உன் பெயர் தெரியுது… அப்பா அம்மாவை தெரியுது…" என்றான் சற்றே எரிச்சலுடன்.
"அவரா!?! அவர் பெயர் விசாகன் இங்க தான் நமக்கு பக்கத்து ஊர்" என்றவள் "நம்ம நிலத்தை வாங்கினது கூட அவர்தான்" என்றாள் கூடுதல் தகவலாக.
நம்மை தவிர எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்கு என்ற எண்ணத்துடன் ம் என்றான் சுரத்தே இல்லாமல்
அவன் முகத்தை வைத்தே அண்ணனை கண்டுக்கொண்டவள் "ஏன் ணா ஏதாவது பிரச்சனையா?" என்றாள்
"அவனோட பஸ்ட் இம்பிரேஷனே பேட் இம்பிரஷன் தான் டா.. சரியான ரவுடி பய… மனசுல சண்டியருன்னு நினைப்பு… அவனை மறுபடி பார்க்க கூட நான் விரும்பல டா… அவன் உன்னை நேத்து தூக்கி வர்ரதை பார்த்ததும், இவன் யார் என் செல்லம்மாவை தொட்டு தூக்கறானேன்னு ஆத்திரம் தான் வந்துச்சி.. ஆனா உன் உயிரை காப்பாத்தி இருக்கான்ற ஒரே காரணத்தால தான் அவன் மேல கைய வைக்காம இருந்தேன்" என்றான் சற்றே எரிச்சல் நிறைந்த குரலில்.
"அண்ணா" என்றாள் அதிர்ச்சியான முகபாவத்துடன்
"என்னடா என்று பரிவுடன் கேட்டவன் இனி எங்கேயும் போகாதடா அப்படி போகவேண்டி இருந்தாலும் கவனமா இருக்கனும்" என்று தங்கைக்கு புத்திமதிகளை கூறி எச்சரிக்கை செய்தவன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
அண்ணன் கூறிய வார்த்தைகளே காதில் ஓயாமல் ஒலித்துக்கொண்டு இருந்தது.
அவர்கள் சந்தித்த முதல் நாளே ஒருத்தரை ஒருத்தர் முகம் திருப்பி போகற அளவுக்கு அவங்களுக்குள்ள என்ன வெறுப்பு… உங்களுக்கு நடுவுல நான் இருக்கேனே என்னை யாரும் பாக்க மாட்டிங்களா? என்றாள் பாவமாய்… இருந்தும் அவள் மனதில் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை அவன் எனக்கானவன் என்று அடித்து கூறியது.
எனக்கு நம்பிக்கை இருக்கு என் அண்ணா எனக்காக எதுவும் செய்வார் கண்டிப்பா எனக்காக அவரையும் ஏத்துக்குவார் என்று நினைத்தவள் திடத்துடன் இருந்தாள்… அடுத்து வந்த நாட்களில் அண்ணனுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று அனைத்து யோசனைகளையும் மூட்டை கட்டி வைத்தவள் அவனுடன் நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தாள்.
….
"உள்ள வாங்க உள்ளவாங்க" என்று வந்திருந்தவர்களை வாயார வரவேற்று வீட்டிற்குள் அழைத்து அமரவைத்தவர். இதோ ஒரு நிமிடம் என்று மகளின் அறைக்கு சென்றார் அலமேலு .
"என்னக்கா அவங்க வந்துட்டாங்களா" என்றபடி செல்லத்தாயி அமுதாவிற்கு பூவை வைக்க
"ஆமா புள்ள.. வாங்க வந்துட்டாங்க, என்று மகளை ஒரு முறை கண்களால் அளவிட்டவர் மனது நிறைந்து இருந்தது அமுதாவின் அழகை கண்டு. மகளின் அழகை கைகளால் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவர்..
"அம்மா தாயே அந்த ஆளு ஊருக்கு போயிருக்காரு வர்றத்துக்குள்ள எல்லாத்தையும் நல்லபடியா நடத்தி கொடுத்திடு சாமி என்று ஒரு நிமிடம் மனதாரக் கடவுளை பிரார்த்தித்து பின் செல்லத்தாயிடம் நான் சொல்லும்போது நீ கூட்டிட்டு வா புள்ள என்று கூறி வந்திருந்தவர்களை கவனிக்கச் சென்றார்.
சில சம்பிரதாய பேச்சி வார்த்தைகள் பேசி இருக்க
அங்கு இருக்கும் பெரியவர்களில் ஒருவர் நம்ம பெரிய வீட்டு பொண்ணு அப்படிங்கரதால தான்ம்மா இந்த சம்மந்தத்துக்கே சரின்னு சொன்னோம் என்றவர்
ஆமா எங்க உங்க புருஷன் என்றார்.
"அவரு அவரு முக்கியமான விஷயமா வெளியூர் போயி இருக்காருங்க திடீர்னு ஏற்பாடு பண்ணதால அவரால பயணத்தை தள்ளி போட முடியலைங்க" என்றிட
சரி என்று ஒத்துக்கொண்டவர் எங்களுக்கு பணம் காசு எல்லாம் பெரிசு கிடையாது மா நல்ல குடும்பமா இருந்தா போதும் என்றவர், பொண்ணையும் வர சொல்லிட்டா எங்க முடிவையும் உடனே சொல்லிடுவோம் என்றிட கணவனை நினைத்து வந்த கண்ணீரை முந்தானையில் துடைத்துக் கொண்டவர். இதோங்கய்யா வர சொல்லிடுறேன் என்று கூறி செல்லதாயை அழைத்து மகளை அழைத்து வர சொன்னார்.
கையில் காபி டிரேயுடன் வந்தவளை பார்த்தவர்க்ளுக்கு மிகவும் பிடித்துவிட அடுத்தகட்ட பேச்சை பேச ஆரம்பித்தனர். இந்தா போயிட்டு சொல்லி விடுறோம் போன் பண்றோம் என்ற பேச்சே எங்களுக்கு பிடிக்காதுமா… எதுனாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான் என்றவர். மற்றவர்களின் முகம் பார்த்தார் அனைவரின் முகத்திலும் ஒரு திருப்தியை கண்டவர் பார்வையாலையே மனைவியையும் மகனையும் கேட்க அவர்களும் சரி என்ற பின்னர்.
"எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சி இருக்கு.. வர்ற முகூர்த்தத்திலையே கல்யாணம் வச்சிக்கலாம் மா.. உங்க வீட்டு ஆளும் இருந்தா இன்னைக்கே தட்டை மாத்தி இருக்கலாம்… பரவாயில்லை, ஒரு நல்ல நாளா பார்த்து சின்னதா ஒரு நிச்சயம் வைச்சிக்கலாம்… சீர்செனத்தின்னு பெருசா எதுவும் வேண்டாம் உங்க சக்திக்கு செய்யுங்க, கால் காசானாலும் கௌரவமா இருக்கனும்னு நினைக்கிறவன் நான்…" என்று பேசியவர் பெண்ணின் சம்மதத்ததையும் கேட்டுக்கொண்டு இருந்த சமயம் அவர்களின் தாம்பூல தட்டு தெருவில் பறந்தது..
"எவன்டா அது என் பொண்ணுக்கு மாப்பிள்ளை… அப்பன் ஒருத்தன் குத்துக்கல்லாட்டம் இருக்கேன் என்னை ஒரு வார்த்தை கேட்காம தட்டை தூக்கிட்டு வந்திட்டிங்க.. வீடு துறந்து இருந்தா உள்ள நுழைஞ்சிடுறதா" என்று குடித்து விட்டு தள்ளாடியபடியே அங்கு இருந்த எல்லாரையும் பார்த்து கேட்க
"நீ… நீங்க யாரு" என்றார் மாப்பிள்ளையின் தகப்பனார்.
"ம் தோ நிக்கிறாளே இவளுக்கு தாலி கட்டினப் புருசன் நீ பாக்க வந்த பொண்ணுக்கு அப்பன் உனக்கு பதில் கிடைச்சிடுச்சி ல போயா வெளியே" என்று வாசலை நோக்கி கையை நீட்டி "எவன் வீடு, யார் வீடுன்னு விசாரிச்சி எல்லாம் வரமாட்டியா.. பொண்ணு இருக்குன்னு சொன்னா நாக்க தொங்கப் போட்டுக்கிட்டு வந்துடுவீங்களா? லூசு பயலுங்களா…" என்று வாய்க்கு வந்ததை பேசிட்டவர் "அவளாளதானே என் வாழ்க்கையே மாறப்போகுது அது பணத்தை அள்ளிக்கொடுக்கும் மகாலட்சுமி டா அவளை உன் வீட்டுக்கு அனுப்பிட்டு நான் நாக்கை வழிக்கனுமா? என் பிளானயே ஊத்தி மூட வந்தியோ!! போடா போடா வெளியே"
"டேய்" என்று மாப்பிள்ளை வீட்டார் சீற "சீ… இப்படி குடிச்சிட்டு வந்து கேவலமா பேசறாரு அந்த ஆளு… அந்த ஆளு கூட சரிசமமா பேசுறதா வாங்க மானம் போகறத்துக்குள்ள போகலாம்… என்று அந்த வீட்டு அம்மா கணவனை அழைக்க ஒரு கேவலமான பார்வையை அவன் மீது வீசியவர்கள் இந்த ஆளு இருக்கரவரை "உங்க பொண்ணுக்கு கல்யாணம் என்பதே நடக்காதுமா" என்று பாவமாய் கூறி புறப்பட்டு விட்டனர் அனைவரும்.
அவ்வழியாய் வந்த சுந்தரனின் கண்களில் இவையனைத்தும் சிக்கியது. "சீ இப்படி ஒரு தகப்பனா என்று நினைத்து அவளுக்காக பரிதாபபட்டவன் நாகரத்தினத்தின் ரகளையை காண சகிக்காமல் அந்த இடத்தை விட்டு அகன்றான்..
தகப்பனின் செயலில் மனம் உடைந்தவள் ஊரார் அனைவரும் ரத்தினத்தின் கூத்தை பார்த்து இருக்க மிகவும் அவமானமாய் உணர்ந்தவள் அழுகையுடன் வீட்டிற்குள் போய்விட்டாள். "வாடி என் சீமை சித்திராங்கி நான் இல்லாத நேரமா பாத்து வர சொல்லுவியா இவனுங்கள…" என்றவன் "உன்னை" என்று தெருவில் அத்தனை பேர் முன்னிலையிலும் அடிக்க அவன் வாயிக்கு பயந்து ஒருவனும் ஏன் என்று கேட்க முடியவில்லை அவன் வாயிலிருந்து வரும் அனைத்துமே தகாத வார்த்தைகள் அதற்கு பயந்தே தான் யாரும் அருகில் வரவில்லை… அடித்து அடித்து ஓய்ந்தவன் "அப்புறம் வந்து வைச்சிக்கிறேன்டி" என்று விட்டு மறுபடி சரக்கை சாய்த்துக் கொள்ளச் சென்றான்.
…..
டேய் அந்த ஆளு எல்லாம் மனுசனாடா சே மிருகத்துக்கு சமம் டா எல்லார் முன்னாடியும் வெட்கமே இல்லாம பொம்பளைய போட்டு அடிக்கிறான் டா அவன் வாயிக்கு பயந்தே ஒரு பயலும் கேக்க மாட்டுறான் என்றான் சுந்தரன் ஆதங்கத்துடன்.
நண்பனின் கொதிப்பை கண்டு புருவம் சுருக்கியவன் என்ன ஆச்சுடா என்றான்
இன்னைக்கு ஏதோ அந்த ஆளுக்கு தெரியாம பொண்ணு பாக்க ஏற்பாடு பண்ணி இருக்காங்க அமுதாவோட அம்மா.
திடீர்னு எங்க இருந்துதான் குதிச்சான் தெரியல அந்த ஆளு வந்தவங்கள ரொம்ப மோசமா திட்டிட்டான். அவங்களும் இவன்லாம் ஒரு ஆளுன்னுட்டு போயிட்டாங்க ஆனா இதை ஏற்பாடு பண்ண உங்க அத்தைக்குதான் என்று சிறிது தயங்கயவன் பின் பலத்த காயம் அந்த ஆள் போட்டு அடிச்சதுல மண்டை உடைஞ்சி ரத்தம் வந்துச்சி என்று ஆற்றாமையுடன் கூறினான் நண்பனிடம்.
முன்னர் போல் எரிந்து விழாமல் இருந்ததால் சுந்தரன் சொல்லிய சில விஷயங்கள் அவன் காதில் விழுந்தது. இருந்தும் எந்த பிரதிபலிப்பும் அவனிடத்தில் இல்லாமல் கணக்கு வழக்குகளை சரி பார்த்தவன் நாளைக்கு திங்கள் கிழமை நீ பேங்க் போயிட்டு வரும்போது இந்த செக்கை பேங்க்ல டெபாஸிட் பண்ணிடு என்று செக்கை கொடுத்தவன். அடுத்த மாசத்துல இருந்து வேலை ஆரம்பிக்குது. நாளைக்கு ஸ்கூல் ரிப்பேர் வொர்க் டென்டர் விடபோறாங்களாம் நோட்டீஸ் வந்து இருக்கு பதினைஞ்சு லட்சத்துக்கான வேலை… நாளைக்கு டவுனுக்கு போகனும், சீக்கிரம் வந்துடு என்று அவனை அனுப்பியவன் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராத பேரனை நினைத்து கவலை கொண்டார் தில்லை. வாசலில் பைக் நிறுத்தும் சத்தம் கேட்கவும் மணியை பார்க்க அது இரவு ஒன்று என்று காட்டியது. விரைவாக வெளியே வந்தவர் அவனை கண்டபிறகே ஆஸ்வாசமாக மூச்சை விட்டார். எப்படியும் பேரனிடம் நேடியாக எதுவும் கேட்க முடியாது என்று நினைத்தவர் அவனிடம் "ராசா சாப்பாடு எடுத்து வைக்கிறேன். வா ராசா" என்று பேரனிடம் கூறிட
"நீ போய் படு அப்பத்தா நான் பாத்துக்குறேன்". என்றிட்டான் அவன்.
"அட உட்காருய்யா இம்புட்டு நேரம் படுத்துட்டு தானே இருந்தேன். என் ராசாவுக்கு எடுத்து வைக்க எனக்கு வலிக்குமாக்கும் நீ சாப்பிட்டு வயிறு நிறைஞ்சாலே என் மனசு நிறையும் சாமி" என்று அவனுக்கு பரிமாறி அமைதியாய் சாப்பிட்டான்.
"என்னய்யா ஃபேக்டரி வேலை ரொம்ப இழுக்குதோ பாத்து யா நேரத்துக்கு சாப்பிட்டு வேலைய பாரு இந்த கட்ட இருக்கும் வரைக்கும் செய்யும் அதுக்கு அப்புறம்" என்று தொடர அவன் முகம் போகும் போக்கை பார்த்தவர் கப்பென்று வாயை மூடிக்கொண்டு "எதுவும் சொல்லல ராசா நீ சாப்பிடுயா" என்று கூறி குழம்பை ஊற்றினார்.
விடிந்தும் விடியாததுமாக வானம் இளமஞ்சள் நிறத்தில் இருக்க காலை வேலைக்கும் செல்லும் பரபரப்பிலும் "உனக்கு சேதி தெரியுமா யா? அந்த அலமேலு புள்ளைய நேத்து அப்படி போட்டு அடிச்சான் ஊர் முன்னால, பாவம் அது வயித்து எரிச்சல் அவனை சும்மா விடலயா" என்று ஒருவர் பேசிட
"என்னய்யா என்ன ஆச்சு" என்றார் மற்றொருவர்
"நேத்து மூச்சி முட்ட குடிச்சிட்டு எங்கேயோ விழந்து வாரி கைய ஒடிச்சிக்கிட்டு வந்து இருக்கான். இன்னும் மூனு மாசத்துக்கு அவங்க ரெண்டுபேரும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்" என்று அடுத்தவரும் பேசிக்கொண்டே சென்றார்.
அடுத்த நாள் எப்போதும் போல் காலை நண்பனை காண வந்து கொண்டிருந்த சுந்தரனுக்கு பேசிக்கொண்டே சென்றவர்கள் கூறிய செய்தி காத்து வாக்கில் காதுக்கு சென்றடைந்தது.