பூ14
எவ்வித பரபரப்பும் இல்லாமல் பொழுது விடிந்தது தேவாவிற்கு அண்ணனின் பயணம் மட்டும் கொஞ்சம் வருத்தமாய் இருக்க முயற்சி செய்து அதையும் தேற்றி இருந்தவளின் கைகளில் போனை திணித்தான் ஜெயசந்திரன்.
"இதை வைச்சிக்கோ செல்லம்மா அம்மாகிட்ட நான் பேசிட்டேன்… போனுக்காக உன்னை எதுவும் சொல்லமாட்டங்க ஆனா நீயும் அதுக்கு ஏற்றார் போல நடந்துக்கனும் புரியுதா…" என்று தங்கைக்கு எடுத்துக் கூறியவன் "மறுபடியும் சொல்றேன் எச்சரிக்கையா இரு" என்று அவளுக்கு ஆயிரம் ஜாக்கிரதைகளையும் பத்திரங்களையும் கூறியவன் பயணப்பொதியுடன் சென்னையை நோக்கி கிளம்பி விட்டான்.
விசாகனின் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் தொடங்கி விட்டதால் அதற்கான பணிகளில் ஓய்வில்லாமல் சுற்றிக்கொண்டு இருந்தான். முழுதாய் இருவாரங்கள் கடந்த நிலையில் அங்கு இங்கு என எதேச்சையாக இரு முறை அவனை பார்த்திருந்தாள். இப்போழுது எல்லாம் விசாகன் அவள் கண்களுக்கு சிக்குவது இல்லை அவனுடைய வேலை பளு அவனை வாரிச் சுழற்றிக் கொள்ள தேவாவிற்கு ஆற அமர அவனை கண்களால் நிரப்பிக்கொள்ள ஒரு வாய்ப்பும் அமைந்தது.
"அட என்ன தம்பி நம்ம வீட்டுக்கு வர என்ன தயக்கம்... உள்ள வாங்க தம்பி... நீங்க உள்ள வாங்க "என்று வலுக்கட்டாயமாக விசாகனை அழைத்து வந்தார் சௌந்தரலிங்கம்.
சௌந்தரலிங்கத்தின் பேச்சை மறுக்க முயன்றும் அதற்கு அவர் செவி சாய்க்காமல் போக தயக்கமாகவே வீட்டிற்குள்ளே வந்தான் விசாகன்.
"மரகதம். யார் வந்து இருக்கா பாரு... கொஞ்சம் தண்ணீ எடுத்துட்டு வா" என்று மனைவிக்கு குரலை கொடுத்தவர் அவனுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
"அப்புறம் தம்பி வேலை எல்லாம் எப்படி போகுது… எப்போ ஃபேக்டரி ஆரம்பிக்க போறிங்க " என்று பேச்சை ஆரம்பித்தார்
"கட்டுமான வேலை போயிட்டு இருக்குங்க இன்னும் ஒரு ஐந்து ஆறு மாசத்துல முடிஞ்சிடும் அது முடிஞ்சதும் ஃபேக்டரிய ரன்பண்ணிட வேண்டியதுதான்" என்றான் விசாகன்
"ரொம்ப சந்தோஷம் தம்பி எல்லாம் நல்லபடியா நடக்கனும் என்று கூறிக்கொண்டு இருக்கும் போது தண்ணீரை கொண்டு வந்து கொடுத்த மரகதம் அவனை கண்டதும் மலர்ச்சியாக "வாங்க தம்பி வாங்க " என்று வரவேற்று "எப்படி இருக்கிங்க" என்றார் அவர்.
"நல்ல இருக்கேன் மா" என்று அவருக்கு கூறியவன் தண்ணீரை வாங்கி குடித்து விட்டு கிளம்ப எழுந்துக்கொள்ள "இருங்க தம்பி காபி எடுத்துட்டு வறேன்... நம்ம வீட்டுக்கு வந்துட்டு காபி கூட குடிக்காம கிளம்புறிங்க" என்று குறைப்பட்டுக் கொண்டு உள்ளே செல்ல முயன்றவரிடம்
"இருக்கட்டும்மா... இன்னொரு நாள் வறேன்"என்றான் விசாகன். அவனுக்கு இது எல்லாம் தர்ம சங்கடமாக இருந்தது… இது போல் யார் வீட்டிற்கும் செல்ல மாட்டான் ஏனோ இங்கு மறுப்பு கூற முடியவில்லை எதிலும் ஒரு அடி தள்ளியே நிற்கும் விசாகனுக்கு இவர்களின் உரிமை கலந்த பேச்சுக்கும் நடவடிக்கைகளுக்கும் தள்ளி நிற்க முடியவில்லை...
அதே நேரம் தேவசேனா கல்லூரியை விட்டு வீட்டிற்கு வரவும் சரியாய் இருந்தது. அவனை பார்த்தவள் அப்படியே ஒரு நிமிடம் வாசலிலையே நின்று விட்டாள்… வாசலில் நின்றிருந்தவளின் அரவத்தை உணர்ந்து விட்டவன் அவள் புறம் கூட பார்வையை திருப்பாமல் தான் கிளம்புவதாக கூறிட "சரி விடு மரகதம் தம்பி எங்க போயிட போறாங்க இனி நம்ம ஊர்லதான் பாதி நாள் இருக்கனும்" என்று பூடகமாக கூற புரியாமல் பார்த்தார் மரகதம்...
சௌந்தரலிங்கமோ சன்னமான சிரிப்புடன் "நம்ம ஊர் பெரியபள்ளிகூடம் ரிப்பேர் பண்ற வேலைய தம்பி தான் எடுத்து இருக்கு" என்று காரணத்தை கூறியவர் "நாங்களே பள்ளக்கூடத்தை சரிபார்த்து இருப்போம் தம்பி... ஆனா சரி செய்ய வேண்டியது நிறைய இருந்தது அதன்பிறகு ஊர் கூடி முடிவெடுத்து தான் அரசாங்கத்துக்கு எழுதி போட்டோம் நல்ல பலனும் கிடைச்சி இருக்கு நீங்க நல்லபடியா இந்த வேலையை முடிக்கனும்" என்று நிறைந்த மனதுடன் அவனுக்கு வாழ்த்தை கூறிட்டார்.
சௌந்திரலிங்கத்தின பேச்சை கேட்டதும் இனி அவனை காணும் சந்தர்ப்பங்கள் அதிகம் வாய்க்கும் என்று தேவாவின் மனது சந்தோஷத்தில் துள்ளியது... தாய் தந்தையார் கவனியாதவாறு தன்னை நிலைபடுத்திக் கொண்டவள் அப்போதுதான் வீட்டிற்குள் வருவதை போல் நுழைந்தாள்.
அவள் உள்ளே வரவும் " ரொம்ப நன்றிங்க….உங்க எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என்று அவருக்கு கூறியவன். ஒரு முக்கியமான வேலை இருக்கு அப்புறம் பாக்கலாங்க... இன்னொரு நாள் சாவகாசமா இதை பற்றி பேசலாம்" என்றவன் அவர்களிடம் விடைபெற்று வெளியே சென்று விட்டான்.
உள்ளே செல்ல எத்தனித்தவள் அவன் கூறி சென்றதும் அவளது கால்களும் சட்டென தடைபட "நீ ஏண்டி அங்கயே நிக்குற மந்திரிச்சி விட்ட மாதிரி… உள்ள வாயேன் உனக்கு தனியா வெத்தலை பாக்குவச்சி அழைக்கனுமோ?" என்று சிலையாய் இருந்த தேவாவை உள்ளே அனுப்பினார் மரகதம்.
அப்படியே அழைச்சிட்டாலும் என்று மனதில் நினைத்தாலும் வெளியே ஹீ ஹீ என்று அன்னைக்கு சிரித்தவாறே முகத்தை காட்டி உள்ளே சென்றவளின் கோபம் மட்டும் கட்டுக்குள் அடங்காமல் இருந்தது
"இவ ஏன் இப்படி இளிச்சிட்டு போறா வரவர கழுதை தேய்ஞ்சி கட்டெரும்பான கதையா இருக்கு இவ கதை" என்று மகளை நினைத்தவர் அவளுக்கு காபியை கலக்க சென்றார்.
அறைக்குள் நுழைந்தவள் ஜன்னலின் அருகே விழியகற்றாமல் அவன் போகும் பாதையையே பார்த்திருந்தாள். அவனுடைய புல்லட்டின் சத்தம் அடங்கும் வரை நின்றிருந்தவள் படுக்கையின் மீது அமர்ந்து நகைத்தை கடித்தவாறே
"அவரு என்னமோ என்ன பார்த்தாலே முகத்தை திருப்பிக்கிட்டு போறாரு... அப்படி முகத்தை திருப்பி போகும் அளவுக்கு நான் என்ன பண்ணேன்னுதான் எனக்கு ஒன்னும் புரியலை…' என்று நினைத்து குழம்பியவள் என்ன தான் ஓடுது உங்க மனசுல அதையும் தெரிஞ்சிக்காம லூசு மாதிரி எனக்குள்ள ஆசைய வளர்த்துக்குறேன்' என்று தனக்குள்ளேயே புலம்பி தள்ளினாள் தேவா.
தன் மனதிலேயே இருந்தால் எதுவுமே அவனுக்கு தெரியாமலேயே போயிடும் என்ற எண்ணம் தோன்ற விசாகனிடம் தன் எண்ணத்தை சொல்ல துணிந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் அடுத்த நாள் விடியலுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்…
…
"ஹேய் தண்ணிய கொண்டாற இவ்வளவு நேரமா டி" என்று திண்ணையில் அமர்ந்து கத்திக்கொண்டு இருந்தான் ரத்தினம்.
உள்ளே இருந்த அலமேலு தண்ணீரை மோந்து கொண்டு செல்ல அவரை வழி மறித்த அமுதா அதை வாங்கி கீழே விட்டெறிந்தாள்.
"என்னடி பண்ற அந்த ஆளு தொண்ட தண்ணி வத்த கத்திக்கிட்டு இருக்காரு டி" என்று மீண்டும் தண்ணீரை எடுக்க போக "இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அவருக்கு பயந்து பயந்து சாக போறம்மா" என்றிட்டாள் சற்று காட்டமாகவே
அவளின் காட்டமான பேச்சில் என்ன என்பது போல் அவளை பார்த்திட்டவர் "என்னடி பண்ண சொல்ற அந்த ஆளு நல்லா இருந்தா நான் ஏண்டி இது எல்லாம் செய்ய போறேன்" என்று கூற
"அப்போன்னு இல்ல இனி எப்பவும் அந்த ஆளுக்கு எதுவும் செய்ய கூடாது... அவர் பண்றதுக்கு எல்லாம் நாம அடங்கி போக போக தான் அவரோட துள்ளல் அதிகமாகுது… இனி எக்காரணத்தை கொண்டும் நீங்க அவருக்கு எதுவும் செய்ய கூடாது|அவ்வளவு தான் சொல்லிட்டேன்" என்று கோபத்துடன் கூறியவள் தனது வேலையை பார்க்க சென்றுவிட
மகளின் கோபத்திற்கும் குறை சொல்ல முடியாது… கணவர் செய்த செயல் அப்படி இருந்தும் இந்த நிலையில் இருந்தவருக்கு உதவி செய்ய வேண்டாம் என்று சொல்லியதற்கு வருத்தப்பட்டார் அலமேலு.
தொண்டை கிழிய கத்தினாலும் தண்ணீரை கொண்டு வராத மனைவி மேல் கோபம் அதிகரிக்க "அடியேய் என்னங்கடி ஆட்டம் காமிக்கிறிங்களோ, ஆட்டம்... பயம் விட்டு போச்சோ இருங்கடி எல்லாம் சரி ஆகட்டும் உங்களுக்கு வைச்சிக்கிறேன்" என்று தெருவில் நின்று குரலை கொடுத்தவன் வீதியை நோங்கி நடைபோட அல்லக்கை சொக்கனும் கையில் ஒரு பாட்டிலோடு வந்தான்…
"அப்பப்பா கை தூக்கவே முடியலடா" என்றபடி பாட்டிலை திறக்க சொன்ன ரத்தினம் அப்படியே சரித்துக்கொள்ள
கைவலியால் ரத்தினம் அவதிபடுவதை பார்த்த சொக்கன் 'நீ எவ்வளவு அடிச்சாலும் ஸ்டடியா போவியே, எப்படி கைய உடைச்சிகிற அளவுக்கு போன அண்ணே" என்றிட
"அத ஏண்டா கேக்குற? என் விதி இவளை அடிச்சிட்டு புல்லா மப்பேத்தி வந்துட்டு இருந்தேண்டா, அப்போ எது மேலயோ மோதினது தான் நியாபகம் இருக்கு விடிஞ்ச பிறகு தான் கை உடைஞ்சி போச்சின்னு தெரியும்… அஹ… அம்மா…" என்றான் ரத்தினம் உடைந்த கைகயை தொட்டு பார்த்தபடி…
….
மனதில் உறுதியோடு முடிவை எடுத்தவள் மறுநாள் காலையிலையே அவனிடம் கூறிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் இந்த மேகலாவை என்ன செய்வது என்று யோசிக்க அதற்கு தானகவே மேகலாவின் அத்தை மகள் உருவில் வழி கிடைத்தது.
மேகலாவின் அத்தையின் மகள் பூப்பெய்தி இருப்பதால் உடனே கிளம்ப வேண்டும் என்ற கட்டாயத்தால் அவளால் வரமுடியாது என்று தகவல் கூறி இருக்க அது வசதியாய் போனது தேவாவிற்கு கல்லூரிக்கு செல்லும் சாக்கில் பேருந்தில் ஏறியவளின் மனது தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது.
அவனிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்றுமனதில் ஒரு முறை ஓட்டிப்பார்த்தவள் கல்லூரி நிறுத்திமிடம் வந்தும் இறங்காமல் தொழிற்சாலை கட்டுமான வேலை நடக்கும் இடத்திற்கு சென்று இறங்கினாள். அரை மணி நேர பயணத்திற்கு பின் அவன் இருக்கும் இடத்தை அடைந்தாள்.
தற்போதுதான் நிலத்தில் வேலை செய்ய ஆரம்பித்து இருப்பதால் ஆரம்பகட்டமான வேலையில் இருந்தார்கள் தொழிலாளர்கள். அவனும் அங்கு தான் இருந்தான் தூரத்தில் இருந்து பார்க்கும் போதே அவனை அடையாளம் கண்டு கொண்டவள் தயக்கமாகவே உள்ளே சென்றாள்.
அவ்வளவாக ஆட்கள் நடமாட்டமில்லாத இடத்தில் தார் சாலைகளில் கணரக வாணங்களின் சத்தம் காதை கிழித்தது… நகரத்தை விட்டு ஒதுக்குபுறம் என்பதால் வீடுகளும் அவ்வளவாக இல்லை ஒன்று இரண்டு என அங்கு எழும்பி இருந்தது.
அவனும் சில வேலைகளை மேற்பார்வை இட்டபடி பேசிக்கொண்டே வர தூரத்தில் தன்னை நோக்கி ஒரு பெண் வருவதை பார்த்துவிட்டான். அருகில் வர வர முகம் தெளிவாய் தெரிய அது தேவசேனா என்று தெரிந்ததும் எதற்காக இங்கே வருகிறாள் என்ற கேள்வியோடு அவளை நோக்கி சென்றான்.
அவன் அருகில் வரவர கைகால்களில் ஒரு ஜில்லிர்ப்பு வந்தது. நடுக்கம் என்பதை தாண்டி மறத்தது போல் ஒரு உணர்வு வந்து சடன் பிரேக் இட்டு நின்று விட்டாள்.
விரைத்த முகத்துடன் அவளிடம் இரண்டு அடி இடைவெளி விட்டு நின்றவன் "யாரை பாக்க இவ்வளவு தூரம் வந்து இருக்க? இன்னைக்கு உனக்கு காலேஜ் இல்லையா?" என்றான் சந்தேகத்துடன்
"அது வந்து உங்களை பாக்கத்தான் வந்தேன்" என்று தயக்கத்துடனே கூற
முகத்தில் அதிர்ச்சியுடன் கூடிய சிந்தனை எழ "என்னையா என்னை ஏன் பார்க்கனும் அதுவும் தனியா வந்து பாக்குற அளவுக்கு என்ன முக்கியமான விஷயம்" என்றான் சற்றே கடுமையான குரலில்
முன்பிருந்த குரலுக்கும் தற்போது அவன் குரலுக்கும் உள்ள பேதமையை உணர்ந்தவள். தொண்டயை செருமி தன்னை நிலைபடுத்திக் கொண்டவள் "நான் நான் உங்களை" என்றதும் அவன் முகம் இன்னும் கடுமையை பூசிக்கொண்டு கண்கள் இடுங்க அவளை பார்த்தான்.
அவன் பார்வையில் உள்ளுக்குள் குளிர் பரவினாலும் முயன்று தைரியத்தை வரவழைத்தவள் "நான் உங்களை காதலிக்கிறேன்" என்று ஒருவாறாக தன் மனதிலுள்ளதை கூறியவளை உக்கிர பார்வை பார்த்தவன்
"போய்டு... இந்த இடத்தை விட்டு இப்பவே போயிடு... சின்ன பொண்ணாச்சேன்னு பாக்குறேன் இன்னொரு வார்த்தை இதுக்கு மேல பேசுன கடவாய் காணம போயிடும். என்ன வயசாச்சி உனக்கு, இன்னும் காலேஜ் கூட முடிக்கல அதுக்குல்ல காதல், கத்திரிக்கா… முதல்ல இந்த இடத்தை விட்டு கிளம்பு" என்று அவளை எச்சரித்தவன் விரட்டியவன் அவ்விடத்தை விட்டு நகர
"ஒரு... ஒரு நிமிஷம் நான் நல்லா யோசிச்சி தான் இந்த முடிவ எடுத்தேன்".
"என்ன யோசிச்சி கிழிச்ச… பேசாம எல்லாத்தையும் மறந்துட்டு படிக்கிற வேலைய மட்டும் போய் பாரு" என்று அவளிடம் சீறியவன் விடுவிடுவென அங்கிருந்து கிளம்பி விட்டான்.
உடனே ஏற்றுக்கொள்வான் என்று நினைத்து எல்லாம் அவள் இங்கு வரவில்லை ஆனால் அதை பற்றி யோசிக்க கூட தோன்றாமல் உடனே கிளம்பியவனை கண்டுதான் மனது வலித்தது தன்னை விடுத்து கோபத்துடன் சென்றவனை வெறித்து பார்த்து நின்றாள்