பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 17

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூ 17



அங்கு நடந்த சம்பவம் சுற்றுபுறத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்து விட சிறு கூட்டம் அவர்களைச் சுற்றி சேர்ந்து விட்டது. அவள் கையில் இருந்து வழிந்த ரத்தத்தைப் பார்த்துப் பதறியவன் “ஹேய் தேவா…” என்று அருகில் ஓடி அவளுடைய தளிர் கரங்களைப் பற்றிக்கொண்டு அவளைத் தாங்கி நின்றவன் முகத்தில் பதற்றம் நிறைந்து இருந்தது. கூடி இருந்தவர்களில் யாரோ ஒருவர் கைக்குட்டையைக் கொடுத்து “இதை கட்டுப்பா” என்றிட காயத்தில் சுற்ற பிடித்துக்கொண்டும் அதிக ரத்தம் வெளியேற, செய்வதறியாது திகைத்து நின்றவன் பொது இடம் என்று பாராமல் தன் சட்டையைக் கழற்றி அதைச் சுற்றி விட்டும் அதனையும் தாண்டி நனைத்துக்கொண்டு இருந்தது உதிரம்.


தோழியினைப் பார்த்து நின்றிருந்தவள் அவளின் நிலை கண்டதும் “அய்யோ தேவா” என்று அலறி விட்டாள் மேகலா…. சில நாழிகைகளில் அதிர்ச்சியின் பிடியில் இருந்து நடப்பிற்கு வந்தவள் அவளருகில் ஒடி வர அதற்குள் விசாகனும் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த ஆட்டோவை நிறுத்தி அவளை ஏற்றி இருந்தான் கூடவே மேகலாவும் ஏற பைக்கை விட்டு இவனும் அவர்களுடனே டிரைவர் சீட்டின் முன்னால் ஏறிக்கொண்டான்.


கீழே விழுந்திருந்த ரத்தினம் பிரச்சனை தன்மேல் திசைதிரும்பி விடக்கூடாதே என்ற எண்ணத்தில் அங்கிருந்து நழுவி விட்டிருந்தான்.


மருத்துவமனை வாசலில் இறங்கும் முன்னமே தேவாவின் நினைவு தப்பியிருந்தது. கன்னங்களில் தட்டியும் பயன் இல்லாமல் கண் முடி கிடந்தவளைப் பார்த்து பயம் தான் வந்தது… அவளுக்கு ஏற்பட்டு இருப்பது சிறு காயம் அல்லவே நரம்பை அல்லவா துண்டித்து இருக்கிறது வெட்டு அழம் என்பதால் அதிக ரத்தப்போக்கின் காரணமாக மயக்க நிலையில் இருந்தவளைக் கைகளில் ஏந்தியவன் மருத்துவமனைக்குள் சென்றான்.


எமர்ஜென்ஸி வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தவளுக்கு உடனே சிகிச்சையும் நடைபெற்றது. கையில் சுற்றி இருந்த சட்டை முழுவதும் ரத்தக்கரை தான். அவளுக்குச் சட்டையைக் கழட்டி சுற்றியதால் விசாகன் உள்பனியனுடன் இருக்க சுவற்றில் சாய்ந்தபடி நின்று இருந்தான்.


வக்கீலின் எண்ணில் இருந்து தொடர் அழைப்பு வர அதைத் தட்டமுடியாமல் எடுத்து காதில் பொருத்தி இருந்தவனை “ஹலோ விசாகன். எங்க இருக்கீங்க???” என்றார் அவர்.


அப்பேதுதான் நினைவுவந்தவனாக “சாரி சார் இன்ஃபார்ம் பண்ண மறந்துட்டேன். வர்ற வழியில ஒரு ஆக்ஸிடென்ட் அதான் உங்கள பார்க்க முடியல” என்று காரணத்தை கூற.


“இட்ஸ் ஓகே மிஸ்டர் விசாகன். உங்களுக்கு ஒன்னும் இல்லையே!!!” என்று கேட்க.


“ஒன்னும் ஒன்னுமில்லை சார்” என்றிட்டான்.


“சரி நீங்க அங்கயே இருங்க… கேஸ் விஷயம் நான் பாத்துக்குறேன்… பயப்பட வேண்டாம் எப்படியும் வாய்தா தான் வாங்குவான். நீங்க வந்து இருந்தா உங்ககிட்ட இது பத்தி பேசலாம்னு இருந்தேன்” என்றவர் யோசனையாக “சரி அடுத்த வாரம் முடியும் போது வாங்க பாத்துக்கலாம்” என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.


அவர் கூறிய எதுவும் அவன் மூளைக்கு உறைக்கவே இல்லை ஏதோ பேசினான் அவ்வளவே... காயம் பெரியதாக இருக்கவே அவளுடைய பெற்றவர்களுக்கு சொல்வது தான் சரி என்று நினைத்தவன் அவர்களுக்குக் கூறிவிட்டு துணைக்கு சுந்தரனையும் அழைத்து சட்டையும் கேட்டு இருந்தான். தொழிற்சாலைக் கட்டுமான வேலையை மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தவன் அவன் கூறிய இடத்திற்கு 30 நிமிடத்தில் வந்து சேர்ந்தான்.


நண்பனது சோர்ந்த முகமும் அவனுடைய உடையையும கண்டவனுக்கு மனது துணுக்குற்றது “என்னடா என்ன நடந்தது. ஏன்டா இப்படி நிக்குற???” என்று சட்டையைக் கையில் கொடுத்து கேட்டவனுக்கு நடந்ததை சுருக்கமாக கூறி அவள் காதல் சொன்னதை மட்டும் மறைத்து இருந்தான்.


அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தவளுக்கு பல்ஸ் ரேட் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க ஆரம்பித்து இருந்தது. வெளியே வந்த நர்ஸ் “அவங்களுக்கு O+ ப்ளட் தேவைப்படுது இமீடியட்டா ப்ளட் வேணும். எங்ககிட்ட இந்த ப்ளட் க்ரூப் ஸ்டாக் இல்ல. கொஞ்சம் சீக்கிரம் அரேஞ்ச் பண்ணுங்க. நாங்களும் ப்ளட் பேங்குக்கு இன்ஃபார்ம் பண்ணி இருக்கோம். ஆனா எப்படியும் இங்க கொண்டு வர லேட்டாகும் ப்ல்ஸ் ரேட் இறங்கறதால உடனே தேவைப்படுது” என்று அவசரப்படுத்தினார்.


அவன் முகம் பதட்டமானதைப் பார்த்த சுந்தரன் “நர்ஸ் என்னோட பிளட் O+ தான். நான் ரெகுலர் ப்ளட் டோனர் தான். நான் ப்ளட் கொடுத்து 6 மன்த் ஆகிறது. அதனால நானே கொடுக்குறேன்” என்று முன்னே வந்தான்.


சுந்தரனின் செயலில் சற்று ஆசுவாசபெறுமூச்சை வெளியேற்றியவன் அப்படியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். அவளைத் தூக்கி வந்த கைகளிலும் ஆங்காங்கே சிறு சிறு ரத்தக்கரைகள் இருந்தன.


மேலும் 1 மணி நேரத்திற்குப் பிறகு பதற்றத்துடன் வந்தனர் தேவாவின் பெற்றவர்கள். விசாகனை அங்கு பார்த்ததும் அருகில் வந்த சௌந்தரலிங்கம் “என்ன ஆச்சு தம்பி??? எப்படி இருக்கு புள்ளைக்கு???” என்று விசாரிக்க மேகலாவைக் கேட்டுக்கொண்டு இருந்தார் மரகதம். பெற்ற வயிறு அல்லவா மகளை நினைத்துத் துடித்தது. மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்த மகளுக்கு ஒன்று போனால் ஒன்று வருகிறதே என்று சௌந்தரலிங்கம் கலக்கம் கொண்டு விசாரித்துக் கொண்டு இருந்தார்.


“ஒன்னுமில்லைங்க அய்யா பயப்படாதீங்க” என்று ஆறுதலைக் கூறினாலும் அவனுக்கும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.


மரகதம் அழுது வடிந்து கொண்டு இருந்தார். “என் மகளுக்கு எதுவும் ஆகாமல் நல்லபடியா வரவேண்டும்” என்று எல்லா தெய்வங்களையும் வேண்டியபடி அமர்ந்துக்கொண்டு இருந்தார்.


சிறிது நேரத்திற்கு எல்லாம் வெளியே வந்த மருத்துவர் “பயப்படும் படி எதுவும் இல்லை. இப்போ நார்மலா இருக்காங்க மதியத்துக்குள்ள கண் முழிச்சிடுவாங்க” என்றவர் அங்கிருந்து செல்ல அப்போதுதான் மூச்சே வந்தது அவளைப் பெற்றவர்களுக்கு.


அவள் நலமுடன் இருக்கிறாள் என்று கேட்கும் வரை அங்கு நின்று இருந்தவனுக்கும் அப்போதுதான் மனதே நிம்மதியானது. பின் அவரிடம் கூறிக்கொண்டவன் தேவா கண் முழிப்பதற்கு முன்னறே அங்கிருந்து கிளம்பி விட்டான்.


மேகலாவிற்குத் தான் நேரில் கண்டதையும் தோழி தன்னிடம் சொன்னதையும் மனதிலேயே போட்டு உழட்டிக்கொண்டாள்.


“அந்த அண்ணா ஏன் அப்படிப் பதறினார். இவ லவ் பண்றது அவருக்கு புடிக்கலன்ற மாதிரி தானே சொன்னா. ஆனா இங்க நடக்கறதை பார்த்தா தலையெல்லாம் பிச்சிக்கலாம் போல இருக்கு. அவளுக்கு ஒன்னுன்னா இவரு பதட்டமா இருக்காரு” என்று யோசித்தவள் தேவாவிற்கு அடுத்து என்ன ஆகுமோ என்று நினைத்து மனதிற்குள் கிலி பிடிக்க ஆரம்பித்தது.


….


“என்ன அண்ணே அந்தப் பொண்ண இப்படி குத்திட்டீங்க???” என்று சொக்கன் நேரம் காலம் தெரியாமல் அவனிடம் பேச.


“அடச்சீ நாயே நான் அவளையா குத்த போனேன். நீயே என்னை காட்டிக்கொடுப்ப போல இருக்கே… அப்பா…. காட்டான் எப்படி அறைஞ்சான் சாப்பிடவே முடியல” என்று ஒரு பக்க கன்னத்தைப் பற்றியபடி பேச.


“என்னண்ணே லேசா அடிச்சதுக்கே கன்னம் வலிக்குதுன்னு சொல்றீங்க. இன்னும் ஓங்கி பல்கா விட்டு இருந்தா என்ன ஆகி இருக்குமோ” என்று சிரியாமல் சொல்ல.


ரத்தினத்திற்குத் தான் கடுப்பாகி போனது. “டேய் அவன் வயசுல நான் ஊருக்கே ரவுடி மாதிரி இருந்தேன்டா. வயசு ஆகுதுல்ல அதுக்கேத்தா போலதான் உடம்பு இருக்கும்” என்று அதற்கு ஒரு சப்பை கட்டு கட்டியவன் “வாடா கோர்ட்டுக்கு போவோம். அங்க எப்படியும் வரமாட்டான் நம்ம வக்கீலும் வாய்தா வாங்கி இருப்பான். அடுத்த முறை எம்பொண்ணை அவனுக்கு கட்டி வைச்சே ஆகனும். அதுக்கு சுமூகமா ஒரு பேச்சு வார்த்தைய நடத்தி எப்படியாவது மடக்கி போடனும்” என்று கூறியவன் கோட்டிற்கு வண்டியை விட சொன்னான்.


…..


“ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு அழுத்தம் இருக்க கூடாதுடா” என்று நண்பனிடம் கோபப்பட்டுக்கொண்டு இருந்தான் சுந்தரன்.


“இப்போ என்ன நடந்துச்சுன்னு இப்படி கோவப்படுற???” என்றான் விசாகன் சாதாரணமாக.


மருத்துவமனையில் இருந்து வந்தவர்கள் நேராக வீட்டிற்கு செல்லாமல் அவனுடைய தோப்பு வீட்டிற்குச் சென்றனர். அங்கு எப்போதும் தங்க மாட்டான் எப்போதாவது நேரம் கிடைத்தால் வருவான். அதற்காக ஒரு சில உடைகளை வைத்திருந்தான் அவன். வீட்டிற்குச் சென்றால் அப்பத்தாவிடம் விஷயத்தை சொல்ல நேரிடும் ஆகையால் தோப்பு வீட்டிற்கு வந்தான். இதுவும் கொஞ்சம் பெரிய வீடுதான். இரண்டு படுக்கை அறை குறளியலறை சமையல் கூடம் நடுகூடம் என்று அழகாகவும் அடக்கமாகவும் இருந்தது.


பெட்டியில் இருந்த சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு இருந்தவனை தான் சுந்தரன் திட்டிக்கொண்டு இருந்தான்.


அவன் கேள்வியில் விடுக்கென்று அவனைப் பார்த்தவன் “என்ன என்ன பண்ணேன்னு தெரியலையா. இல்ல தெரியாத மாதிரி நடிக்கறியா???” என்றான் கடுமையான முகத்துடன்.


“ஒழுங்கா விஷயத்தை சொல்லித் தொலையேன்டா. நானே கடுப்புல இருக்கேன். மேலும் மேலும் வெறுப்ப ஏத்தாத” என்று நண்பனுக்கு எச்சரிக்கை விட்டவன் வெளியே போடப்பட்டு இருந்த கயிற்றுக் கட்டிலில அமர்ந்தான்.


“ஆமா டா உனக்கும் ஒன்னும் தெரியாது அந்த பொண்ணு உன் பின்னாடி எதுக்கு சுத்தி வருதுன்னு கூட உனக்கு தெரியாது” என்று தடித்து விழுந்தது வார்த்தைகள்.


சட்டென நண்பனைப் பார்த்த விசாகன் “அப்போ உனக்கு எல்லாம் தெரியும். அவ என் பின்னாடி சுத்துறான்னும் உனக்கு தெரியும். இல்லையா???” என்றான் அழுத்தம் திருத்தமாக.


“ம் தெரியும். இதுல என்ன இருக்கு. அவ உன்னை விரும்புறா. அதுல தப்பு சொல்ல எதுவும் இல்லையே”


“டேய் அடிச்சேன்னு வை பல்லு அத்தனையும் பறந்துடும் சொல்லிட்டேன்” என்று வேகமாக எழுந்து அவன் அருகில் வந்தவன் “அது தெரிஞ்சும் நீ சப்போர்ட் பண்ணி இருக்க. இது தப்பு இல்லையா அவளுக்கு ஊக்கம் கொடுத்து தப்பை தப்பு தப்பா பண்ண வச்சி இருக்க” என்று ஆத்திரத்துடன்.


“தப்பா எது தப்பு. அவ கூட இருந்தா உன்னை மறந்து சிரிச்சது இல்லையா. அவளைப் பத்தி நினைச்சது இல்லையா. அவ உன் கூட இருந்தா எந்தக் கவலையும் உன்னை அண்டியதே கிடையாது... அவ கூட இருந்தா மட்டும் தான் உன்னால நல்லா இருக்க முடியும்... எனக்கு உன் வாழக்கையும் முக்கியம், தேவா வாழ்க்கையும் முக்கியம்” என்றவனைப் பார்த்து தன் கோவத்தைக் கட்டுப்படுத்திய விசாகன்


“எப்படி டா இப்படி வாய் கூசாம பேசுற. அவ சின்ன பொண்ணு அவளுக்கு தப்பு எது சரி எதுன்னு தெரியாது டா. நல்லா படிக்கற பொண்ணும் கூட இனி அவளை ஊக்கப்படுத்துறதை நிறுத்திடு.. சொல்றது புரியும் நினைக்கிறேன்.


எல்லாம் முடிஞ்சி போச்சு. இது பாலை இதுல எந்த செடியும் முளைக்காது ஈரமும் இருக்காது புரிஞ்சிக்க. எல்லாம் அவளோட போயிடுச்சி இது வெறும் கல்லு” என்றவன் முகம் இறுகிய கருங்கல் போல் உணர்ச்சிகளற்று இருக்க ஆலைக்கு செல்வதாக கூறியவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றான் போகும் அவனையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான் சுந்தரன். “மனசுல ஒன்னு வச்சிக்கிட்டு வெளியே ஒன்னு பேசற. எப்போடா மாறுவ” என்ற கேள்வியே எழுந்தது அவனுள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN