பூ 18
கையில் கட்டுடன் படுத்து இருந்தவளுக்கு முழிப்பு மெல்ல எட்டி பார்த்தது… மெதுவாக கண்களை திறந்தவளுக்கு முதலில் தெரிந்தது தாயும் தந்தையும் தான் பின் அவளின் விழிகள் வெளியே விசாகனின் உருவத்தை தேடி அலைந்து சுற்றி மறுபடியும் பெற்றவர்களின் மேல் நிலைத்தது.
மகளின் அருகே இருந்த மரகதம் தேவாவின் தலையை வருடியவாறே "என்ன புள்ள என்னை பயமுருத்திக்கிட்டே இருக்க" என்று மகளிடம் பேசியவர் "கருவேப்பிலை கொத்தாட்டம் ஒத்த பொம்பள புள்ளைய வைச்சிருக்கேன். தவமா தவம் இருந்து கிடைச்ச புள்ள இன்னைக்கு ஆஸ்பிட்டல்ல வந்து படுத்து இருக்கு" என்று கூறும் போதே கண்களில் நீர் திரண்டு விட்டது அவருக்கு, மரகதம் என்று சௌந்தரலிங்கம் சற்று அதட்டலாக அழைக்கவும் முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டவர்
"எந்த கொள்ளி கண்ணு என் குழந்தை மேல பட்டுதோ புள்ளைக்கு நாளுக்கு ஒன்னு வருது" என்று தன் ஆதங்கத்தை கொட்டியவர் முதல்ல குலதெய்வத்துக்கு ஒரு பொங்களை வைக்கனும். அந்த மகமாயி என் புள்ளைக்கு ஒரு கஷ்டத்தையும் கொடுக்க கூடாது என் புள்ளைய எந்த ஆபத்தும் அண்ட கூடாது" என்று கூறியவரை தொடர்ந்து
"செய்யலாம் மரகதம் எல்லாம் செய்யலாம்... புள்ள முதல்ல எழுந்து நல்லபடியா வரட்டும் அப்புறம் எல்லாத்தையும் பாக்கலாம்". என்று மனைவிக்கு பதிலை கொடுத்து சமாதனபடுத்தியவர் மகளின் வாடிய முகத்தை பார்த்து "எப்படி இருக்கு மா" என்றார் வாஞ்சையாக
"பரவாயில்ல பா" என்று தந்தையிடம் கூறியவள் தாயின் கைகளை பற்றி "அதான் ஒன்னும் இல்லையே அழாத மா" என்று தாயையும் சமாதனபடுத்தியவளின் மனம் விசாகனின் பார்வையோ ஆறுதலான பேச்சோ இல்லாமல் தவித்து போய் இருந்தது.
'இவ்வளவு தான ஹீரோ நீங்க... என்னை பார்க்கனும்னு கூட தோணலையா உங்களுக்கு… நான் தான் புத்தி கெட்டுப்போய் உங்க பின்னால வறேனா? ஒரு பர்சன்ட் கூட என் மேல உங்களுக்கு விருப்பமே வரலையா…' என்று நினைக்கும் போதே கண்களில் ஓரம் ஈரம் உண்டாகியது.
"மரகதம் நான் போய் புள்ளைக்கு ஜூஸ் வாங்கிட்டு வறேன் ரொம்ப ரத்தம் போயிடுச்சாம் புள்ள பலவீனமா வேற இருக்கும்" என்று கூறிய சௌந்தரலிங்கத்திடம் "ஏங்க அந்த தம்பி போயிடுச்சா?" என்றார் மரகதம்.
"ஆமா மரகதம் இவ்வளவு நேரம் இங்க தானே இருந்தாரு அவருக்கும் வேலை இருக்கும் ல ஒன்னா ரெண்டா அவருக்கு இருக்கிற வேலைக்கு இங்க இருந்ததே பெரிய விஷயம்" என்றவர் "அதுமட்டுமில்லாம தேவா நல்லா இருக்கான்னு தெரிஞ்ச பிறகுதான் தம்பியே போச்சி... ஏதோ தெருவுல போற நாயி குடிச்சிட்டு ஓரமா போகாம அவனுங்க போட்ட சண்டையில என் பொண்ணு மாட்டிக்கிட்டா, அந்த தம்பி சட்டையெல்லாம் ரத்தம் இந்த மாதிரி உதவி செய்றவங்க எல்லாம் ஒரு சிலர் தான் இருப்பாங்க." என்று சௌந்தரலிங்கம் அவனை பற்றி சிலாகித்து பேசிட
'நம்மள பத்தி அப்பாகிட்ட சொல்லாம காப்பத்தி இருக்காரு ஹீரோ… நல்ல வேலை, நான் எதுக்கு அவரை பார்க்க போறேன்னு சொல்லி இருந்தா என் கதி என்ன ஆகி இருக்குமோ... சாரி உங்களை புரிஞ்சிக்காம கோவப்பட்டுட்டேன். நான் நல்லா இருக்கேன்னு தெரிஞ்சிக்கிட்டு தான் போனிங்களா... நீங்க சோ ஸ்வீட் என்னோட ஹீரோ எப்பவும் நல்லவராதான் இருப்பாரு.' என்று அவனை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு இதழ்களுக்கு ஓரம் எழுந்த இளமுருவலை தடுக்க முடியவில்லை... அன்னை தந்தை தன்னை அறியதவாறு அதை மறைத்தவளுக்கு கையின் வலி கூட குறைந்தது போல் தெரிந்தது.
…..
அதற்கு அடுத்த நாளே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் தேவா அன்று சாயங்காலமே ஊருக்கு வந்து இறங்கி இருந்தான் ஜெயசந்திரன். தந்தையின் மூலம் விஷயத்தை கேள்விபட்டவனின் கால்கள் அங்கே நிற்கவில்லை மறுநிமிடமே அந்தியூருக்கு புறப்பட்டு விட்டான். தங்கையை காண வேண்டுமென்று, சோபாவில் சாய்ந்து அமர்ந்து இருந்தவளின் வதனம் அவனை வருத்தம் கொள்ள வைக்க தேவாவின் முன்னால் வந்தவனை கண்டவள் "அண்ணா" என்று மகிழ்ச்சியுடன் அழைத்து எழுந்து கொண்டாள்
"ஏய் தேவா பார்ந்து பார்த்து" என்று அவளை பிடித்துக் கெண்டவனை வேண்டும் மட்டும் முறைத்தவள் "என்ன அண்ணா நீயும் என்னை சின்ன புள்ள மாதிரி பாத்துக்கற? எனக்கு கையில தான் அடி பட்டு இருக்கு காலில் இல்ல நிக்க முடியும்." என்று சிணுங்களாய் கூற
தனக்காக அவளின் சோர்ந்த முகத்தையும் மறைத்து நலமாக உள்ளவள் போல் பேசியவளின் காயம் ஏற்பட்ட கையை பார்த்த ஜெயசந்திரன் "என்ன கண்ணம்மா எத்தனை முறை உனக்கு சொல்லிட்டு போனேன் கவனமா இரு கவனமா இருன்னு." என்று வருத்தமாய் கேட்க
"அண்ணா... பச்.." என்று சலித்தவள் அவன் வருத்தம் போகமால் இருப்பதை பார்த்து "ஏய் சந்திரா… ஒன்னுமில்ல டா நீ பயந்து போற அளவுக்கு… நான் என்ன வேணுன்னா இப்படி பண்ணிக்கிட்டேன். ஏதோ ஆக்ஸிடன்டல இப்படி ஆகிடுச்சி விடுடா ணா." என்றாள் அதிகாரமான பாவனையில்
அவளது டா என்ற அழைப்பு வேலை செய்ய "என்ன டி வாயி உனக்கு உன்னை விட பெரியவனை டா போட்டு பேசுற பேச்சே குறை டி அதுவே உனக்கு கண்ணு என் புள்ளைய எந்த கொள்ளி கண்ணு பார்த்துச்சோ திரிஷ்ட்டி பட்டு போச்சி" என்று அண்ணனையும் தங்கையையும் உட்கார வைத்தவர் உப்பு மிளகாயை சுற்றி அடுப்பில் போட்டு விட்டு வந்தார்.
"எப்போ வந்த யா, நீ வர்றதா ஒரு வார்த்தை சொல்லலியே சாமி" என்று மரகதம் மகனிடம் கேட்க
"நேத்து நைட்டுதான் மா. அப்பா தேவாவ பத்தி சொன்னாரு, உயிர் பொழச்சி வந்து இருக்கா... என்னால எப்படி அங்க இருக்க முடியும். இரண்டு நாள் தங்கறது கூட கஷ்டம் நாளைக்கு நைட்டே கிளம்பனும் தேவாவ பாக்கனும்னே வந்தேன்…" என்று கூறியவனின் கரங்களை பற்றிக்கொண்ட தேவா அண்ணனின் தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டாள்.
தங்கையின் தலையை மெல்ல வருடி விட்டவனின் செய்கையில் மனம் நிறைந்த மரகதம் இவங்க எப்பவும் இதே பாசத்தோடவும் அன்போடவும் இருக்கணும் என்று நினைத்தவர் இரவு உணவை தயாரிக்க சென்றார்.
வலது மணிக்கட்டில் அடிப்பட்டு தையல் போடப்பட்டு உள்ளதால் அவளுடைய வேலையை அவளால் செய்துக்கொள்ள முடியவில்லை உணவு ஊட்டுவது முதல் குளிக்க வைப்பது வரை மரகதம் தான் அவளை பார்த்துக்கொண்டு இருந்தார். இரவு நேரத்தில் தோழியை காண வந்த மேகலாவிற்கு தேவாவின் அண்ணன் ஜெயசந்திரன் வந்து இருப்பது தெரியாது. தெரிந்து இருந்தால் நிச்சயம் இந்த பக்கம் கூட தலைவைத்து படுத்து இருக்க மாட்டாள்
தேவா என்று வந்த மேகலாவை அவள் அறையில் இருப்பதாக மரகதம் கூறிட அங்கேயே சென்றாள்.
அலைபேசியில் எடுத்த விசாகனின் புகைபடத்தை பார்த்துக்கொண்டு இருந்த தேவசேனா மேகலா வந்ததை கவனிக்கவில்லை. அதே சமயம் பின்பக்கத்தில் இருந்த வந்த சந்திரனும் அவனுடைய அறைக்கு செல்ல எத்தனிக்கையில் அவளின் பேச்சி சத்தம் அவனை தடைசெய்தது.
தோழி எதையோ ஆர்வமாக பார்க்கிறாள் என்று அருகே வந்து அலைபேசியை பார்த்ததில் ஆஜானுபகுவாய் கட்டடவேலையில் நின்றிருந்த விசாகன் கண்ணுக்கு பட்டான்.
"என்னடி மறுபடி ஆரம்பிச்சி இருக்க உனக்கு இது நல்லா இருக்கா? எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து மீண்டு வந்து இருக்க தெரியுமா!!!" என்று அதட்டிய மேகலாவின் குரலில் உள்ள விஷயம் தான் அவனை தடை செய்தது.
'இவ என்ன சொல்ற என்ன ஆரம்பித்து இருக்கா தேவா' என்று அவன் இன்னும் கூர்ந்து கவனிக்க தெடங்கினான்.
"ம் உன் லுக்கு விடுற வேலையை தான்... இங்க பாரு புள்ள தலை தப்பிச்சதே தம்புறான் புண்ணியம் அவரை பார்த்த நாள் முதலாவே உனக்கு சோதனை காலம் தான் அவரை பார்க்கும் போது எல்லாம் ஏதோ ஒரு ஆபத்து உனக்கு வருது... எனக்கு என்னமோ மனசு பகீர்ன்னு இருக்கு புள்ள" என்று மனதில் இருப்பதை மறைக்காமல் கூறினாள் மேகலா
"நீ ஏன் கலா அப்படி நினைக்கிற ஒவ்வொரு முறை ஆபத்துலயும் என்னை இவர் தான் காப்பத்துறாரு காலம் முழுக்க இவர்தான் காப்பத்த போறாருன்னு ஆண்டவன் காமிச்சதா நினைச்சி பாறேன்." என்று இவள் ஒரு விளக்கம் தர
"நல்லா இல்லடி, இது சுத்தமா நல்லாவே இல்ல வேலியில போறத எடுத்து வேட்டிக்குள்ள விட்டா மாதிரி ஆகிடப்போகுது" என்று மேகலா பயம் கொள்ள
"ஸப்பா என்னடி பிரச்சனை உனக்கு எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் விடு" என்று தோழிக்கு தைரியம் கூறியவள் சிறிது நேர அரட்டைக்கு பின் வீடு திரும்பும் சமயம். வெளியில் அவனிடம் மாட்டிக்கொண்டாள் மேகலா.
அவளுக்கு முன்னால் வந்தவனை இருட்டில் தெரியாது மோதி நின்றிட்டவள் இது என்ன தூண் இங்க இருக்கு முதல்ல இல்லையே என்று தொட்டு பார்க்க அவள் தன்னை தொடும் முன் விலகி தூர நின்ற ஜெயசந்திரன் "கண்ணை நல்லா திறந்து பாரு." என்று சீற்றமாக அவன் கூறிட
அவன் குரலை கேட்டதும் 'அய்யோ இன்னைக்கு செத்தோம் டா சாமி' என்று நினைத்துக் கொண்டாள்.
"அது.. நான்.. அவ.." என்று உளறியபடி இருந்தவளை "சீ நிறுத்து சும்ம பயந்தா மாதிரி நடிச்சிக்கிட்டு" என்று அதட்டலுக்கு பிறகே அவள் வாய் மூடியது.
"உண்மைய ஒழுங்கா சொல்லு நீ என்னமோ சொல்லிட்டு இருந்த தேவா கிட்ட என்ன அது?"
"அது என்ன.. அது காலேஜ்... இல்ல இல்ல.. நோட்ஸ் பத்தி சொல்லிட்டு இருந்தேன். இரெண்டு நாள் வரல அவ அதனால"
"ஓ… அதனால புக் கூட எடுத்துட்டு வராம, நோட்ஸ் அவகிட்ட ஓப்பிக்க வந்தியா?" என்றான் கடினமான குரலில்.
அது வந்து எப்படியோ மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் "ஆமா" என்று கூறிட
"அடிங்க பொய்யா சொல்ற? என்ன பேசிட்டு இருந்திங்க நீயும் அவளும்"
"இல்ல ஒன்னும் இல்ல" என்றிட்டதும் ஜெயசந்திரன் அதட்ட அழ ஆரம்பித்தவளை மிரட்டிட "நீங்க என்னை பயம்புறுத்துறீங்க நாங்க அதை தான் பேசிட்டு இருந்தோம்". என்று உறுதியாக கூறியவளின் தலையில் நங்கென கொட்டியவன் "நல்லா பொய் பேசுற. மாரியாதையா என்ன நடக்குதுன்னு உண்மைய சொல்லிட்டு ஓடி போயிடு. இல்ல உங்க வீட்டுக்கே வந்து உங்க அம்மா அப்பா முன்னாடியே விசாரிப்பேன்". என்று பயம் வைக்க மொத்த உண்மையையும் உளறி வைத்து விட்டாள் கலா அவள் கையில் காயம் எப்படி ஆனது உள்பட.
அவள் கூறியதும் முகம் இறுகியவன் அப்படியே சமைந்து நின்று விட இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்த மேகலா அங்கிருந்து எடுத்த ஓட்டத்தை வீட்டிற்கு போய் தான் நிப்பாட்டி இருந்தாள்.
வெளியே இருந்து வீட்டுக்குள் வந்தவனை உணவுண்ண அழைக்க அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் கைகால் அலம்பி விட்டு வந்து அமர்ந்தான்.
"எங்க சாமி போயிட்ட? உன்னை அறைல எல்லாம் தேடினேன்". என்ற தாயின் கேள்விக்கு "இங்க தாம்மா இருந்தேன்". என்று பதிலை கொடுத்தான். தந்தையின் தொழில் விஷயத்தை பற்றி எப்போதாவது ஊருக்கு வரும் சமயம் விசாரிப்பான் ஆனால் இன்று சிந்தனை முழுதும் தேவாவின் மேல் இருந்தது... அவள் நடவடிக்கைகள் எதுவும் மாறியது போல் தெரியவில்லை ஆனால் ஆளே மாறி போய் இருக்கிறாள் என்று மேகலாவிடம் கேட்ட பின் தான் தெரிந்து இருந்தது. அவளையே பார்த்து சாதத்தை அலைந்து கொண்டு இருந்தவனின் கைகளில் ஒரு தட்டு தட்டிய தேவா "சாப்பிடு ணா என்ன இருக்கு என் முகத்துல?" என்று கேலி பேசி அவனை சாப்பிட வைக்க பெயருக்கு உண்டவன் அவன் அறைக்கு சென்று விட்டான்.
இரவு உணவை உண்ட பின் படுக்க சென்றுவிட வெகு நேரத்திற்கு பிறகு தேவாவின் அறைக்கு வந்த ஜெயசந்திரன் அவள் தூங்கிவிட்டாள் என்று உறுதிசெய்து கொண்டதும் அவளின் அலைபேசியை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தான்.
அவள் மட்டும் பயன்படுந்தும் அலைபேசியாக இருந்தபடியால் பாஸ்வேர்ட் எல்லாம் வைக்கவில்லை அவன் அழுத்தவும் நேரடியாக திறந்துகொண்டது.
நேராக கேலரிக்கு சென்றவன் அதை அழுத்த நூற்றிற்கு மேற்பட்ட விசாகனின் புகைப்படம் அவளுடைய அலைபேசியில் இருந்ததை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டான் ஜெயசந்திரன்.
தங்கையை சிறு குழந்தையாகவே பாவித்து வந்தவனுக்கு அவள் செயல்கள் மிகவும் அதிர்ச்சியை அளித்தது. அதுவும் அவளுக்கு விசாகனை பிடித்து இருக்கிறது என்று தெரிந்துக் கொண்டவனுக்கு பேரதிர்ச்சியே… இரவு முழுவதும் சிந்தனையிலையே இருந்தவன் விடியும் முன்னமே எழுந்து விட்டிருந்தான்.
….