நெஞ்சம் 7

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
திபாகரனுக்கு நேரில் சென்று தன் மனைவியை அழைத்து வர விருப்பம் தான்... அதை செய்ய முடியாமல் போக முதல் காரணம்... அவனுக்கான அலுவலக வேலைகள். இரண்டாவது... மனைவிக்காக என்றாலும் மாமனாரின் வீட்டிற்கு செல்ல அவனுக்கு விருப்பம் இல்லை என்பது தான்...

இவ்விரண்டையும் விட... எங்கே தன்யா அவன் முகம் நோக்கி... நான் வர மாட்டேன் என்று சொல்லி அவள் பிடிவாதமாக மறுத்தால்... ஒன்று மனைவி மேலுள்ள அதீத காதலில்... அவளை அவளின் விருப்பத்திற்காக மாமனார் வீட்டிலேயே விட்டு வந்து விடுவான்... இல்லை என்றால் தன் காதல் மேலுள்ள பற்றில்... மனைவியின் விருப்பத்திற்கு இடம் தராமல் அவள் மறுக்க... அவளைத் தன்னுடைய தோளில்... சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்தாலும் வந்திருப்பான்.

இப்போதுள்ள அவன் மனநிலையில் இது இரண்டில் எது நடப்பதும் உறுதி என்பதால் தான் தன்னுடைய வேலையை காரணம் காட்டி... மாமனார் வீட்டிற்கு செல்வதை மறுத்து விட்டான் இவன். ஒருவேளை தன்யா வீட்டில் இவன் வரவை யாராவது எதிர்பார்த்திருந்தால், சென்றிருப்பானோ என்னமோ... குறைந்தபட்சம் தன்னவளாவது! அது இல்லை என்னும் போது... ஒதுங்கி கொண்டான் இவன்.

மகிழ்வரதனும்... மருமகனின் செயலை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.. தாய் என்ற முறையில் சசிரேகாவாவது மகளை அழைத்து சென்று புகுந்த வீட்டில் விட்டிருக்கலாம். அவளுக்கு தான் திபாகரன் குடும்பத்தையே பிடிக்காதே.

“மகிழ், அதுங்க எல்லாம் லோ கிளாஸ் peoples... எப்படி தான் அந்த குடும்பத்திலே நம்ம பொண்ண... கட்டி தர சொல்லி உங்க அம்மா ஒற்றை காலில் நிற்கறாங்களோ... அதையும் நீங்க கேட்டு வந்து... என் கிட்ட சொல்றீங்களே.... ஏன் மகிழ் இப்படி இருக்கீங்க?” முதல் முறை திபாகரனைப் பற்றி பேசும்போதே.... இப்படியாக பொரிந்து தள்ளி விட்டாள் சசிரேகா.

அதன் பிறகு இன்று வரை ஒவ்வொரு முறையும்... அவள் படிக்கும் பாட்டு திபாகரன் குடும்பம் என்றாலே அவர்கள் தி சீப் ஃபேமிலி என்பது தான்.... அவர்கள் இருக்கும் திசையில் கூட தன் மகளின் கால் தடம் பதிவதை விரும்பாத சசிரேகா.... தற்போது மட்டும் மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்ப சம்மதிப்பாரா என்ன... அங்கு தமிழரசி மாதிரி இங்கும்... சசிரேகா ஆயிரத்தெட்டு முட்டுக்கட்டைகள் இட்டார் தான்.

ஆனால் மகிழ்வரதன் கொஞ்சம் நியாய குணம் உள்ளவர் என்பதால்.... மனைவியின் மறுப்பை எல்லாம் கிடப்பில் போட்டார். இது எல்லாவற்றையும் விட சசிரேகாவுக்கே சிறிது யோசனை தான்... ஒருவேளை மகளுக்கே கூட நடந்த இத்திருமணத்தால்... விதுனதிபாகரன் மேல் பிடித்தமோ என்று... அந்த பிடித்தம் கூட அவன் வீட்டில் சென்று மகள் நான்கு நாள் இருந்தால்... காணாமல் போய் விடும் என்ற நம்பிக்கையில் தான் தற்போது தன்யாவை திபாகரன் வீட்டிற்கு அனுப்ப சம்மதித்தார் அவர்.

தன்யா இங்கு அவள் கணவன் வீட்டிற்கு வர... நேரமோ அந்தி பொழுதை நெருங்கி இருந்தது. இவள் இறங்கியதும்... காரோட்டி, அவளின் உடமைகளை எடுத்து வெளியே வைத்து விட்டு அவளுடனே நிற்க, “நீங்க கிளம்புங்க தாத்தா... நான் போய்க்கிறேன்...” இவள் அவரை அனுப்ப...

அவளை சிறு வயதிலிருந்து வளர்த்தவர் அல்லவா... அந்த பாசத்தில் அவர் சிறிதே தயங்க, “தாத்தா.. இது என் கணவன் வீடு... என் வீடு... நான் போய்க்கிறேன்... நீங்க கிளம்புங்க...” தன்யா மறுபடியும் அழுத்தி சொல்ல... மனமே இல்லாமல்... சிறு தலை அசைப்புடன்... விலகிச் சென்றார் அந்த முதியவர்.

படிகளில் ஏறியவள்... வீட்டினுள்ளே ஆள் அரவமற்ற நிலையில் நிலைக்கதவு திறந்திருப்பதைக் கண்டவள்... தயக்கத்துடன் அழைப்பு மணியை அழுத்த இவள் எத்தனித்த நேரம்.... பின்வாசல் வழியே... தாயும் மகளும்... சுவாரசியமாக பேசிய படி வீட்டின் உள்ளே பிரவேசிக்க... அதில் சித்ரா மட்டும் தன்னை கண்டு கொண்டதை அறிந்த தன்யா.... தன் வரவை முன்னிறுத்தி சிநேகமாய் அவளைக் கண்டு புன்னகைக்க.... அவளோ முகத்தில் வெறுப்புடன் தன்யாவைக் கண்டும்... காணாதவள் போல்.... மிக இயல்பாய் தாயுடன் சேர்ந்து நடந்து வந்து... அங்கிருந்த சோபாவில் அமர... தன்யாவோ அவமானத்தில் தலை கவிழ்ந்தாள். தமிழரசியோ... மருமகளின் புறம் முதுகு காட்டி அமர்ந்து கொள்ள... இப்போது தன்யா கூனிக்குருகி நிற்கும் கோலத்தைக் கண்டு சந்தோஷத்தில் மிதந்தாள் சித்ரா.

சித்ராவுக்கு அண்ணியான தன்யாவை ஆரம்பத்திலிருந்தே அறவே பிடிக்காது. தன்யாவின் அழகையும்.... அவள் வீட்டு வளத்தையும் கண்டு பொறாமையில் எப்போதும் வெந்து மடிபவள். அதிலும் சசிரேகாவின் கட்டளையால்... இன்று ஒரு பார்பி டால் போல் காக்ராசோலியில்... கண்ணைப் பறிக்கும் வைரங்கள் ஜொலிக்க... வந்து நிற்கும் தன்யாவைப் பார்த்து இன்னும் வயிறெரிந்தாள் சித்ரா.

கணவன் வீட்டில் தனக்கு கிடைத்த அவமதிப்பில்.... மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல்... தன்யா தவித்து நிற்க..

அந்நேரம், “அண்ணி வந்திட்டிங்களா...” என்று கேட்ட படி தவமதி மாடியிலிருந்து இறங்கி வர...

இவளோ அதற்கு பதிலாய் சிறிதே புன்னகைக்க...

பதிலுக்கு மகிழ்ச்சியுடன் பெரிதாய் புன்னகைத்த தவமதி, “என்ன அண்ணி இங்கேயே நின்னுட்டிங்க.. உள்ளே வாங்க அண்ணி...” என்று உரிமையாய் அழைக்க

மகளின் குரலுக்கு திரும்பி பார்த்த தமிழரசி... அங்கு மருமகளைக் கண்டதும்... எனக்கும் உனக்கும் சம்மதம் இல்லை என்பது போல் முகத்தை திருப்பிக் கொள்ள.... தன்யாவுக்கு கண்கள் கலங்கியது.

அதை கவனிக்காமல், “உள்ளே வாங்க அண்ணி” என்று தவமதி பிடிவாதமாய் அழைக்க

“இல்ல... முதல் முறை வீட்டுக்கு வந்திருக்கேன்... ஆ.. ஆரத்தி எடுக்கணும்னு சொல்லுவாங்க...” எப்போதோ அவள் பாட்டி சொன்னதை வைத்து தன்யா சற்றே நினைவுபடுத்த...

தவமதி தாயைக் காண... அவரோ, “அதெல்லாம் புதுசா வர்றவளுக்கு தான்... நீ என்ன புதுசா.... இரண்டு வருஷத்திற்கு முன்னே கட்டிட்டு வந்தவ தானே... அதனாலே நீ பழசு தான்.... அதான் வந்திட்டியே... பிறகு என்ன...” என்று நீட்டி முழங்க.... விழிகளை ஒரு வினாடி மூடிக் கொண்டாள் தன்யா.

உண்மை தான்.. தன்யாவுக்கும் திபாகரனுக்கும் திருமணம் நடந்து இரண்டு வருடம் கடந்து விட்டது தான். ஆனால் அதில் இன்று தான் முதல் தடவையாக கணவன் வீட்டிற்கு வருகிறாள் இவள். அதன் பொருட்டே தன்யா இவ்வாறு சொன்னது.. அதற்கு அவளுக்கு கிடைத்தது என்னமோ மாமியாரிடமிருந்து உதாசீனம் தான்.

இவள் இன்னும் தயங்கி நிற்க, “வாங்க அண்ணி...” என்று அவளை அழைத்த தவமதி... பின் மாடியைப் பார்த்து, “குலமதி.. அண்ணி வந்திருக்காங்க.. கீழ வா...” என்று அவளையும் அழைக்க...

நின்ற இடத்திலிருந்து சிறிதும் அசையாத தன்யாவோ, “உன் அண்ணா எங்கே?” என்று தவமதியிடம் கேட்க

“அண்ணா இன்னும் ஆபிஸிலிருந்து வரல அண்ணி...” சின்னவள் சொன்ன நேரம்.... முகம் வாட அடுத்த நொடி உள்ளே பிரவேசித்திருந்தாள் தன்யா. அவள் மனம் கணவனை எதிர்ப்பார்த்து இருந்தது என்னமோ உண்மை தான்.

இப்போதும்... நீ எங்களுக்கு யாரோ என்பது போல்.. சித்ராவும்... தமிழரசியும்... அமர்ந்திருக்க... இவளுக்கு தான் எங்கு செல்ல வேண்டும் என்பதே புரியாத நிலை. அந்நேரம், “அண்ணி.. அது அண்ணா ரூம்.. வாங்க நான் உங்களை அழைச்சிட்டு போறேன்...” தவமதி அவளை அழைத்து செல்ல

“வந்துட்டா சீமாட்டி... என்ன பார்... என்னிடம் உள்ள பணத்தைப் பார் என்று காட்ட... வந்திருக்கிற பவுச பார்... நாங்க ஒண்ணும் இல்லாதவங்க என்றதை குத்திக் காட்ட.... எல்லா நகையையும் பூட்டிட்டு வந்திருக்கா பார்... சீக்காளி...” என்று தமிழரசி மருமகள் காதுபடவே முணுமுணுக்க...

மனதில் பலத்த அடிவாங்கினாள் தன்யா. இப்போது மட்டும் இல்லை, அப்போதிலிருந்தே... அவளின் நோயைக் குறித்து யார் பேசினாலும்... மனதால் துவண்டு தான் போவாள் அவள்.

உடனே வேறு உடைக்கு மாறியவள்... நேரம் போனது தெரியாமல்... தவமதியுடனும்... குலமதியுடனும் பேசிக் கொண்டிருக்க... இரவு எட்டு மணி வாக்கில் அறைவாயிலில் வந்து நின்ற தமிழரசி, “ஏய்... குலமதி... உன் அண்ணன் இரவு வர தாமதம் ஆகுமாம்... நம்மளை சாப்பிட சொல்லிட்டான்... நீயும் தவமதியும் சாப்பிட வாங்க...” என்று மகள்களை மட்டும் உயர்த்த குரலில் உணவுக்கு அழைத்து விட்டு செல்ல...

ஆனால் தவமதியோ, “அண்ணா வர லேட் ஆகுமாம்... அண்ணி, அப்போ நான் போய் நம்ம மூணு பேருக்கும் இங்கேயே சாப்பிட... உணவை எடுத்துட்டு வரேன்...” என்றவள்... தான் சொன்ன மாதிரியே சென்று உணவை எடுத்து வர... அவர்கள் இருவருக்காக பேருக்கென்று உண்டாள் தன்யா.

அவர்கள் இருவரும் இருக்கும் வரை தன்யா பெரிதாய் வருந்திக் கொள்ளவில்லை. அதே குலமதியும்... தவமதியும் படுக்க சென்ற பிறகு... இவளுக்குள் பல வாதங்கள்.

‘அப்பா வீட்டிலிருந்து என்னை அழைச்சிட்டு வர தான் இவருக்கு நேரம் இல்ல... வந்த பிறகு வந்திட்டியான்னு ஒரு வார்த்தை கேட்கல. இதோ.. இப்பவும் விரைவா வீட்டுக்கு வர முடியலயாமா... அந்தளவுக்கு நான் அவருக்கு வேண்டாத மனைவி! பிறகு எதற்கு என்னை திருமணம் செய்துக்கணும்?

ஏன்னு உனக்கு தெரியாதா தன்யா... அவர் என்ன உன்னை விரும்பியா திருமணம் செய்துகிட்டார்?’ இப்படியாக வாதங்களுக்கு இடையே... கேள்வியும் இவளே பதிலும் இவளுமாய் இருந்தவளோ... அதன் பிறகு கணவன் அறையில் இருக்க விரும்பாமல் பக்கத்திலிருந்த விருந்தினர் அறைக்கு சென்று படுத்தவளுக்கே... உறக்கம் வருவேனா என்று கண்ணாமூச்சி காட்ட...

அதில் கழிவிரக்கம் கொண்டவளின் மனமோ சித்ராவின் உதாசீனத்தையும்... மாமியாரின் வெறுப்பையும் கண் முன்னே கொண்டு வர... அதில் தன் இயல்பையும் மீறி அவளுள் கோபம் படர.. அதில் கணவன் எந்நேரம் வந்தாலும்... அவனிடம் சண்டையிடும் நோக்கத்தில் எழுந்து வந்து ஹாலில் வந்தமர்ந்தவள்... சிறிது நேரத்திற்கு எல்லாம் அதே வாக்கிலேயே... கண்ணயர்ந்துவிட....

எவ்வளவு நேரமோ… திடீரென்று ஏதோ உள்ளுணர்வு தோன்றவும்... இவள் விழி மலர்த்தி வாசலைக் காண... அங்கு தலை வாசல் கதவில் நின்றிருந்த திபாகரனோ... இமைக்கவும் மறந்தவனாக... மனைவியைத் தான் ஆழ்ந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த பார்வையில் என்ன இருந்தது... இவளால் அறிய முடியவில்லை... ‘இவர் எப்போது வந்தார்?’ என்ற எண்ணத்தில் இவள் எழ.... தன்னவளின் அசைவில் களைந்தவனோ... மறு நொடி விறுவிறு என்று தங்கள் அறைக்குள் சென்றிருந்தான் அவன்.

“ஒன்றரை வருடம் சென்று பார்ப்பதால் எனக்கு தான் பேச்சு வரவில்லை.. இவர் பேசினால் என்ன?” என்று முணுமுணுத்தபடி கணவனுக்கு உணவு எடுத்து வைக்க சமையலறை பக்கம் நகர்ந்தாள் பெண்ணவள்.

குளித்து முடித்து வந்த
திபாகரன்.. அதே ஆழ்ந்த பார்வையை மறுபடியும் மனைவி மேல் தொடர ... இவளோ அதை கண்டு கொள்ளாதவள் போல்... உணவு மேஜையில் உணவை எடுத்து வைத்தவளோ, “சாப்பிட வாங்க” என்று கணவனை அழைக்க

தன் பார்வையை மாற்றிக் கொள்ளாமல்... அங்கிருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்து குடித்தவன், “நான் பாக்டரியிலேயே சாப்பிட்டேன்.... அதுவும் இல்லாமல் மணி இப்போ பத்தரை” என்று இவன் சொல்ல

“அது எப்பவோ செரிமானமாகி இருக்கும்... இடியாப்பாம் தான் இருக்கு.. இப்போ ஒரு தடவை சாப்பிட்டா ஒன்றும் ஆகாது...” பிடிவாதத்துடனே சொன்னவள் அதே பிடிவாதத்துடனே இடியாப்பத்தை ஒரு தட்டில் எடுத்து வைக்க... மனைவியை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி சேரில் வந்து அமர்ந்தவனோ இன்னோர் தட்டில் இடியாப்பம் வைத்து அவளையும் சாப்பிட சொல்ல...

கணவனிடம் சண்டை போடவேண்டும் என்று நினைத்ததை எல்லாம் மறந்தவளாக, “நான் எட்டு மணிக்கே சாப்பிட்டேன்.. நீங்க சாப்பிடுங்க...” என்க

“எனக்கு நீ சொன்னது தான்.. சாப்பிடு ரிது...” என்று இவன் அழுத்தி சொல்ல

முதன்முறையாக கணவன் தன்னை பெயர் சுருக்கி அழைத்ததை உள்வாங்கியவளாக.. அதன் பின் மறுக்க தோன்றாமல் அவனுடன் உணவை உண்டாள் தன்யா.
உண்டு முடித்ததும் இருவருமாக அந்த இடத்தை சுத்தம் செய்ய, “இனி எனக்கு பாக்டரி விஷயமா வீட்டுக்கு வர தாமதம் ஆகலாம்... அதனால் இனி நீ எனக்காக காத்துட்டு இருக்காம சாப்பிட்டு படு... என் கிட்ட இன்னோர் சாவி இருக்கு நான் வந்துப்பேன்....” கணவன் சொல்ல

இவளோ, “பரவாயில்லை.. ஒரு வருடம் தானே... இருக்கிறேன்...” என்று பட்டும்படாமல் சொல்ல...

இவ்வளவு நேரம் சூழ்ந்த கனத்த அமைதியின் முடிவில்... இவ்வார்த்தைகள் அவனைத் தாக்க... “மாமா உன்னை விட்டுட்டுப் போகும் போது என்ன சொன்னார்... என்னை கேட்டாரா?” இவன் பேச்சை மாற்ற....

பெண்ணவளிடம் மவுனம் மட்டுமே... அவள் தான் தந்தையுடன் வரவில்லையே... யாருமற்ற அநாதை போலல்லவா இங்கு வந்தாள்?...

அவளின் மவுனத்தை... ‘மாமனார் அவ்வளவு கோபத்தில் சென்றிருக்கார் போல..’ என்று தவறாக யூகித்தவனோ,
“என்னால் வர முடியாத சூழ்நிலை ரிது... மாமா அதீத கோபத்துடன் போனாங்களா” அதையே இவன் வாய் விட்டு கேட்டு விட...

பாத்திரம் தேய்க்கும் வேலையில் இருந்தவளோ... அதை அப்படியே விட்டுவிட்டு கணவன் பக்கம் திரும்பி, “டாடி கோபப்படல... ஏனென்றால் என்னை டாடி இங்கே அழைச்சிட்டு வரல... நான் மட்டும் தான் வந்தேன்....” என்று ஒரு அறிவிப்பு குரலில் சொன்னவள் மறுபடியும் திரும்பி நின்று வேலையைத் தொடர...

இவனுக்குள் அதிர்வு... “என்னடி சொல்ற!... யா... யாரும் இல்லாம தனியா வந்தீயா?” அதிர்ச்சியில் இவனுக்கு குரலே எழவில்லை... ‘முதல் முறை கணவன் வீடு வருபவள்... யாரும் உடன் இல்லாமலா வந்தாள்.... என்னிடம் சொல்லியிருக்கலாமே... அந்தளவுக்கா நான் இவளுக்கு வேண்டாதவனா ஆகிட்டேன்?’ தான் பேசவில்லை என்பதையும்... மனைவியிடம் தன்னுடைய போன் நம்பர் கூட இல்லை என்பதையும் மறந்தவனாக... கோபம் எழ.. மனைவியை உறுத்து விழித்தான் இவன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN