பூ.26

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

சுந்தரனிடம் இருந்து வந்த பதில் அவளை முற்றிலும் உடைய செய்து இருந்தது. 'அதனால தான் என்னை வெறுத்திங்களா ஹீரோ' என்று உள்ளுக்குள்ளே குமுறினாள் முயன்று தன் எண்ணத்தை திசைதிருப்ப முயன்றாலும் அவனிடத்திலேயே நிலைத்து நின்று அவளை வாட்டியது. இரவெல்லாம தலையணையை கண்ணீரால் நனைத்தவளின் மனதும் உடலும் சோர்ந்து போய் இருந்தது.

கிழக்கில் தன் ஆதிக்கத்தை செலுத்திய செங்கதிரவனின் வெளிச்சம் நிலமகளின் மேல் மையல் கொண்டு ஆரத்தழுவிய காலை நேரத்தில் அனிச்சை செயலாக கல்லூரிக்கு கிளம்பி சென்றவளின் வதனம் பெற்ற தாயின் மனதில் பயத்தை கொடுத்தது.

'எந்த நாளும் இல்லாம இவ ஏன் இப்படி இருக்கா…? இவ முகமே சரியில்லையே ரொம்ப கவலையா வேற தெரியுறாளே! என்று வருந்தியவர் "உடம்புக்கு ஏதாவது பண்ணுதா புள்ள" என்று கேட்டிட அவளிடத்தில் இருந்து எந்த பதிலும் இல்லாமல் வெறுமையான பார்வையே பதிலாய் தர "ஏன் டி இப்படி கிடந்து என் வயித்துல புளிய கரைக்குற எதுவா இருந்தாலும் வாய திறந்து சொல்லி தொலை டி" என்று புலம்ப மட்டுமே முடிந்தது அவரால்

கால்போன போக்கில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தவளை பார்த்த மேகலாவிற்கு "என்னடி ஒரே நாள்ல மெலிஞ்சி போயிட்ட...

முகமும் சரியில்ல... என்ன புள்ள காய்சலடிக்குதா?" என்று அதிர்ந்து அவளை தொட்டு பார்க்கவும்.

தன் சிந்தனையில் சுழன்று கொண்டு இருந்தவள் அவள் கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதியாய் இருக்க "ஏய் தேவா என்னடி செய்யுது?" என்று தோள்தொட்டு உலுக்கவும் கனவில் இருந்து முழிப்பது போல் மேகலாவை பார்த்தாள் தேவா

மேகலாவின் கேள்வி மூளையை சென்றடைந்ததிற்கு சான்றாய் அமைதியாய் அதே சமயம் அழுத்தமாய் "எல்லாம் முடிஞ்சிடுச்சி டி…. எல்லாம் முடிஞ்சே போச்சி…" என்று உணர்ச்சிகளற்ற குரலில் கூறியவள் கண்கள் மட்டும் கலங்கி நீர்திவளைகள் உருண்டோட அன்று ஒரு பெண்ணுடன் விசாகனை கண்டதையும் சுந்தரனிடம் கேட்டு அறிந்ததையும் உரைத்தவள் "எங்க அண்ணனும் என்னை புரிஞ்சிக்கல நான் விரும்புருவனும் என் காதல புரிஞ்சிக்கல காதலிக்கறது அவ்வளவு தப்பா கலா…? நான் நல்ல பொண்ணு இல்லையா…? என்ன பொண்ணுடின்னு கேக்குறாரு!! நானா போய் என் லவ்வை சொன்னதுனால அவர் கண்ணோட்டத்துல நான் கெட்ட பொண்ணா ஆகிட்டேன் போல!!" என்று விரக்தியாய் தோழியிடம் கூறிட அதே சமயம் விசாகனும் அவ்வழியே வர அவனை கண்டவளின் பார்வையில் வெறுப்பு கோவம், தவிப்பு இயலாமை என்று அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு அவன் மீதான கசப்பை உமிழ்ந்தது.

இதோ இந்த தேவா புதியவள். அவளை வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கிய போது அவனையே சுற்றி சுற்றி வந்தவள் அவன் மனதில் வேறு ஒரு பெண் இருக்கிறாள் என்பதை அறிந்ததும் அவனை காதலித்த தன்னையே அவள் வெறுத்தாள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவே கூடாது என்று மனதில் உரு போட்டுக்கொண்டாள். இருந்தும் விசாகன் தங்களை கடந்து சென்ற போது தன்னை கண்டதும் அவன் முகம் மாறியதோ என்று ஒரு நிமிடம் நினைக்க அடுத்த நிமிடமே இறுகிய முகத்தோடு இருந்தவனை தான் கண்டாள் தேவா... அங்கே ஒரு ஜீவன் நிற்கிறாள் என்பதை கூட காட்டிக்கொள்ளாமல் அவளை கடந்து சென்று விட்டான் விசாகன் அவன் வெறுப்பை பார்த்த தேவாவின் மனம் சுக்கல்சுக்கலாய் உடைந்தது போல கலங்கிபோனாள்.

விசாகனின் பின்புறம் அமர்ந்து இருந்த சுந்தரன் அவளின் தோற்றத்தை கண்டதும் திகைத்து போனான். இரவெல்லாம் அழுததின் பலனாய் கண்கள் இரண்டு கோவை பழத்திற்கு இணையான சிவப்பில் இருக்க முகம் வாடி உருவத்திலும் மாறுதல் ஏற்பட்டது போல நின்றிருந்தவளை பார்க்கவே பாவமாய் இருந்தது.

விசாகனிடம் இது பற்றி பேசலாம் என்றால் தேவசேனா என்ற பெயரை கேட்ட அரை மாத்திரை நேரத்திலையே பத்து ஊர் வேப்பிலையை ஒன்றாய் கட்டி சாமி ஆடுபவனிடம் என்ன சொல்லி மலை இறக்குவது… இதில் தேவாவிற்கு தான் எவ்விதத்திலும் உதவமுடியாமல் போனதில் மிகவும் வருத்தப்பட்டான்.

"ஹேய் என்னடி அங்க பாக்குற? அதுதான் ஒன்னுமில்லன்னு நீயே சொல்லிட்டியே அப்புறம் என்ன புடலங்கா பீலிங்கஸ் கிடக்குது விட்டு தள்ளுடி…" என்றவள்

"மரியாதையா மனசுல இருக்கறதை குப்பையா நினைச்சி வெளியே தூக்கி போட்டுட்டு இருக்க வேலைய பாரு புள்ள… நீ யாரு எப்படின்னு எங்களுக்கு தெரியும் உன்னை புரிஞ்சிக்காத ஆளுக்கு போய் நீ ஏன் உன்னை நோகடிச்சிக்கிற"

"இனியாச்சும் உன்னை பாத்துக்க... நீ எப்படி இருக்க பாரு டீ" என்று அவனை கண்டதும் தோழியின் நிலையை கண்டு கோபத்துடன் அவளிடம் கூறியவள் பேருந்து வரவும் "வா புள்ள முதல்ல இங்க இருந்து போவோம் இன்னையோட இந்த லவ்வுக்கு தலைய சுத்தி ஒரு முழுக்கு போடு" என்று கோவத்துடன் கூறியவள் அவளை இழுத்துக்கொண்டு பஸ் ஏறினாள்.

நொடிகள் நிமிடங்களாயின நிமிடங்கள் நேரங்களாகின நேரங்கள் நாட்களாகின நாட்கள் வாரங்களாக உருண்டோட தேர்வுகளும் முடிந்து கல்லூரி விடுமுறையும் ஆரம்பமாகியது

விசாகனின் அரிசி ஆலையில் அமுதா கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டு இருந்தாள். அரிசி ஆலை மட்டுமில்லாமல் குத்தகை வரவுசெலவு, பண்ணை மற்றும் தோப்புக்களின் கணக்கை கூட அவள் தான் பாத்திருந்தாள். சுந்தரனுடன் விசாகனும் நெல் மூட்டைகளை ஏற்றிவிட உதவிக்கொண்டு இருந்தனர். அவ்வப்போது தாங்களே இறங்கி வேலைசெய்யவும் தயங்க மாட்டார்கள்... நண்பர்கள் இருவரும் ஒருவாறு மூட்டையை ஏற்றி வண்டியை அனுப்பியவர்கள் ஆஸ்வசமாய் வந்து உட்காரவும் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தாள் அமுதா.

"ஏன் மாமா இங்கன தான் வேலையாளு செய்றாங்கல்ல உங்களை யாரு மூட்டை தூக்க சொன்னா" என்று விசாகனிடம் கேட்கவும்

"நம்ம மில்லு வேலை தானே…? இதுல நாம வேலைய பார்த்த என்ன குறைஞ்சா போயிடபோறோம்… அடுத்தவன் வர்ற வரையும் எதுக்கு காத்துக்கிட்டு இருக்கனும்?... எனக்கு தெரிஞ்ச வேலைய செய்யறது ஒன்னும் தப்பில்லையே???". என்று அவளுக்கு பதிலை கொடுத்து தண்ணீரை வாங்கி குடித்தவன் நண்பனுக்கும் தண்ணீரை கொடுத்தான்.

"அது சரி" என்று தலையை ஆட்டிக்கொண்டவள் "மாமா இன்னைக்கு அம்மத்தா என்னைய சீக்கிரம் வரசொல்லுச்சி ஏதோ ஜவுளி எடுக்க போகனுமா நான் கிளம்பவா" என்றவள் கம்ப்யூட்டர் மாணிட்டரை ஷட்டவுன் செய்து கொண்டு இருந்தாள்.

"சரி புள்ள நீ வீட்டுக்கு கிளம்பு" என்றவன் "சுந்தரா எனக்கும் ஸ்கூல் பில்டிங் வொர்க்ல கொஞ்ச வேலை இருக்கு டா நானும் கிளம்புறேன்" என்றபடி பைக்கில் ஏறி இருந்தான் விசாகன்.

அந்தியூருக்கா போற? இருமாப்ள நானும் வறேன்" என்று சுந்தரனும் கிளம்பிட

"நீ எங்கடா வர?... நான் போயிட்டு உடனே வந்துடுற போறேன் அதுக்கு நீயும் எதுக்கு தண்டமா?.. . என்ற அவன் அவசர பதிலில் "நீ எதுக்கு இப்படி பதறுற மாப்ள... எனக்கும் அந்த பக்கம் வேலை இருந்தது... என் அண்ணன் குத்தகை காசை வாங்கிட்டு வர சொன்னான் சரி நீ போறியே கூட வரலான்னு கேட்டா தண்டம்னு சொல்ற" என்று கூறிட

"பதர்றாங்களா யார் ரா பதறா?... எதுக்கு பதறனும்... உன் உப்பு சப்பு பெறாத கேள்விக்கு எல்லாம் என்னால பதிலை சொல்ல முடியாது… வேலைய பாருடா வந்துட்டான் பதர்ற, பந்தா காட்டுறேன்னு…" என்று கடுப்புடன் மொழிந்து விட்டு சென்ற விசாகனை விசித்திரம் கலந்த பார்வை பார்த்தான் சுந்தரன்..

"அமுதா இது உன் மாமான் தானே?" என்று ஆச்சரியத்துடன் வினவிட

"அஹ்… உங்களுக்கு எப்படி தெரியுதா?? சாட்சாத் என் மாமனே தான்" என்று சத்தியம் செய்யாத குறையாக அவள் சொல்வதை கேட்டதும்.

"உன் மாமன் தான் யாரு இல்லன்னு சொன்னது... ஆனா ரெண்டு மாசமா அவன், ஆளே சரியில்ல கோபப்படுவான்தான். ஆனா இப்போ எல்லாம் ரொம்பவே கோவப்படுறான் விசித்திரமா நடந்துக்குறான். வீட்டுலயும் இப்படித்தான் சுத்தரானா" என்றான் சந்தேக கண்ணோடு

"எனக்கு எதுவும் வித்தியாசமா தெரியல... அவர் எப்பவும் போலதான் இருக்காரு உங்க கண்ணுக்குத்தான் ஏதேதோ தெரியுது" என்றபடி மில்லின் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு "நான் கிளம்புறேன்" என்று வெளியில் சென்றவளை "பார்த்து போ" என்றவன் அவனுடைய வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.

அரை மணி நேரத்தில் சுந்தரனுடைய வேலையும் முடிய பைக்கில் வந்துகொண்டிருந்தவன் அமுதா ஒருவனுடன் கத்திக்கொண்டு இருந்ததை பார்த்ததும் ஏதோ தவறாக இருப்பதை போல் தோன்றிட அருகில் சென்றான்

" ஏய் என்னடா கொழுப்பா ஒரு முறை சொன்னா புரியாதா... ஏன்டா என் பின்னாடியே வர்ற, பரதேசி உன்னை" என்று செருப்பை கழட்டி அடிக்க போகவும் சட்டென்று அவள் கை பிடித்த சுந்தரன் "அமுதா என்ன பண்ற" என்று அவள் அடித்துவிடாமல் தடுத்து இருந்தான்.

"விடுங்க... என்னை விடுங்க... அவனை அடிச்சா தான் அவனுக்கு புத்தி வரும்" என்று கையை உருவ முயன்றவளை கட்டுபடுத்திக் கொண்டே பக்கத்தில் இருந்த ஆடவனிடம் "நீ யாரு இவ ஏன் உன் மேல இவ்வளவு கோவமா இருக்கா?" என்றான் சுந்தரன்.

அவனோ "நான் அவங்கள காதலிக்கிறேன்" என்று கூறி முடிக்கவில்லை "இதுக்கு தாண்டா... இதுக்கு தான் உன்னை அடிக்கனும்னு சொல்றேன்" என்று கூறியவளை "அமுதா" என்று உலுக்கி "கொஞ்ச நேரம் அமைதியா இரு" என்று கத்தியவன் அவனிடம் "திரும்பி இந்த ஊர் பக்கம் உன்னை பாக்க கூடாது ஓடிப்போய்டு" என்று அவனை விரட்டி விட

"இனிமே இவ இருக்க பக்கம் கூட வரமாட்டேன்" என்று கையெடுத்து கும்பிட்டவன் தலைதெறிக்க ஓடி இருந்தான். அவன் சென்றுவிட்டதை உறுதி செய்த பின்னரே இவளின் கைகளை விடுவித்தான் சுந்தரன்.

"ஒருத்தன் லவ்வ சொன்னதுக்கா இப்படி கொலை வெறியா அடிக்கிற இது உனக்கு ரொம்ப அதிகமா தெரியலையா அமுதா…"

"எது அதிகம்... இது ரொம்ப ரொம்ப கம்மி... லவ்வு இந்த இழவு லவ்வுல தானே முக்காவாசி பேரோட வாழ்க்கையே பாழாக்கி வைச்சிருக்கானுங்க பரதேசிங்க"

"அவனுங்கள செருப்பாளேயே அடுச்சி கொல்லனும் என் ஆத்திரம் தீர" என்றவளை அதிர்ந்த பார்வை பார்த்தவனின் மனதில் 'அவனுக்கு சொந்தகாரில இவ... இவளும் இப்படித்தா இருப்பா... இவ கிட்ட மாட்டுறவன் டங்குவார கிழிக்காம விடமாட்டா... நல்ல வளர்த்து இருக்காங்க மா ஒத்தரோசா உன்னை' என்று நினைத்தவன்

"அவனுங்கள அப்புறம் அடிக்கலாம்.முதல்ல கையில கிடக்குறத கீழே போடு பாக்க என்னை அடிக்கிறா மாதிரி இருக்கு" என்றதும் உடனே கீழே போட்டு அதை காலில் அணிந்தவள் "சரி நா வீட்டுக்கு கிளம்புறேன்... அம்மத்தா காத்துட்டு இருக்கும்" என்றாள் அமுதா.

"இன்னும் எவனாவது வந்து செருப்படி வாங்கவா..வேணா தாயே வண்டில ஏறு வீட்டுல கொண்டு விடுறேன்" என்றவனை தயக்கமாக பார்த்தவள் அதன் பிறகு ஏறி அமரந்திருந்தாள். "எப்பா என்ன காரம் டா சாமி பொம்பள விசாகனை பார்த்த மாதிரியே இருக்கு" என்று நினைத்தபடி வண்டியை உயிர்ப்பித்து கிளம்பி இருந்தான்.

தேவா வெளியே செல்லும் ஏதோ ஒரு தருணம் விசாகனை காண நேரிடுகிறது… எதேச்சையாக ஒரு முறை விசாகனோடு பார்த்த பெண்ணை ஜவுளிக்கடையில் தில்லையுடன் பார்க்க நேரிட அப்போதுதான் தெரிந்தது அவள் விசாகனின் அத்தை பெண் அமுதா என்று எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்றை சேர்த்து தவறாக புரிந்துகொண்டவள் அவன் அத்தை மகளைத்தான் காதலிக்கிறான் என்று தவறாகவே நினைத்தாள்.

அவனை மட்டுமே கண்டாள் என்றால் கூட பரவாயில்லை மனதை கட்டுபடுத்திக்கொள்வாள் ஆனால் அமுதாவுடன் விசாகனையும் பார்க்க நேரிடுகையில் தன் மனதில் ஒரு வலியை உணர்வாள் அதனாலேயே அவள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளையே அடைந்து கிடக்க அதற்கும் வேட்டு ஒன்று வந்து விழுந்து ...

பள்ளி வேலையும் முடிவடையும் தருவாயில் இருக்கையில் சௌந்தரலிங்கம் வீட்டிற்கு விசாகன் வந்திருந்தான்.

"அய்யா" என்று உள்நோக்கி குரலை கொடுத்திட்டவன் வாசலிலையே நின்றான். விஸ்தாரமான வாசல் பகுதியில் இருபக்கமும் திண்ணையும் அதனை ஒட்டி இருந்த புங்கைமரத்தில் இருந்து காற்றும் வீச இதமாய் இருந்தது... மாலை வேளையாதாலாள் பண்ணையில் வேலைமுடிந்து அப்போதுதான் வீட்டிற்கு வந்திருந்தார் சௌந்தரலிங்கம்.

வாசலிலேயே நின்றிருந்த அவனை பார்த்ததும் "வாங்க.. வாங்க தம்பி... என்ன அங்கேயே நிக்கறிங்க, யாரோ மாதிரி" உள்ள வாங்க என்று அழைத்து அமர வைத்தவர்

"என்ன சாப்புடுறிங்க தம்பி" என்று அவனை வினவியவர் "மரகதம்…" என்று மனைவியை அழைத்தார்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க அய்யா... உங்கள பாத்து பேசத்தான் வந்தேன்" என்றதும்

"அதுக்கென்ன தம்பி தாராளமா பேசலாம்... அதுக்கு முன்னால ஏதாவது குடிங்க" என்றவர் மறுபடி மனைவியை அழைக்க

கொள்ளையில் மரகதம் வேலையாக இருக்க அறையில் இருந்த தேவா தான் வேறு வழியின்றி அவர்கள் முன்னால் வந்து நின்றாள். 'உங்களை பாக்கவே கூடாதுன்னு தான் வெளியேவே வரலை.. இங்கேயும் வந்தா நான் எங்கதான் போவேன்... என்னை மட்டும் ஏன் இப்படி சோதிக்கற கடவுளே…' என்று மனசீகமாக கடவுளையும் அவனையும் சாடியவள் அமைதியாக தந்தையை பார்த்தாள் மறந்தும் அவன் புறம் பார்வையை திருப்பவில்லை முன்பென்றால் துள்ளிகுதித்து முதல் ஆளாய் வந்திருப்பாள் இப்போது வெளியே வந்து நிற்கவே சங்கடமாய் உணர்ந்தாள்.

அவனும் சாதரணமாக தான் இருந்தான். முகமும் முந்தைய நாட்களை காட்டிலும் வசீகரத்தை கூட்டி காட்டியிருந்தது.

மகள் வந்து நின்றதும் "அம்மா எங்க தேவா" என்றிட

"கொள்ளையில மாட்டுக்கு தண்ணி காட்டுறாங்க" என்றிட்டதும் "தம்பிக்கு காபி கொண்டாம்மா" என்றிட சரி என்பதை போல் நகரந்தவள் சமயலறை வருவதற்குள் ஒருவழியாகி போனாள் எதற்காக வந்திருப்பான் என்று சிந்தித்தபடியே காபியை கலக்கியவள் இயந்திரகதியில் அவன் முன்னால் டிரேவை நீட்டினாள்.

அவளை பார்த்தும் பார்க்காதவன் போல காபியை எடுத்துக்கொள்ள இந்த லுக்கை கொடுக்கத்தான் வீடு வரையும் வந்திங்களா?' என்று பற்களை கடிக்கத்தான் தோன்றியது அவனது உணர்ச்சிகளற்ற முகத்தை பார்த்து இருந்தும் முயன்று தன்னை நிதானபடுத்தியவள் தந்தையிடம் ஒன்றை நீட்டிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

"அப்புறம் தம்பி பேக்ட்ரி எதுவரைக்கும் வந்து இருக்கு எப்போ ஓப்பனிங்" என்று விஷயத்தை துவக்கிட

"இன்னும் இருபது சதவிகித வேலை தான் இருக்கு அய்யா... ஒரு மாசத்துக்குள்ள ஓப்பனிங் வைச்சிடலாம்னு இருக்கேன் அய்யா கட்டாயம் குடும்பத்தோட வரனும்" என்றிட்டதும்

"நீங்க சொல்லனுமா?... நம்ம வீட்டு விசேஷம் தம்பி... நாங்க இல்லாமலா" என்று சந்தோஷத்துடன் கூற "அப்புறம் அய்யா நான் வந்த விஷயமே வேற... ஆரம்பிச்ச ஸ்கூல் வேலை இந்த இரண்டு வாரத்தோட முடியப்போகுது... அதுக்கு அடுத்த நாள், ஒரு சின்ன விழா மாதிரி வைக்கலாம்னு நினைச்சி இருக்கேன்... ஊர் பெரியவங்க நீங்க எல்லோரும் வந்து கலந்துக்கனும்னு கேட்கத்தான் வந்தேன்" என்றான் சிரித்தபடி

"பாருங்களேன்... நீங்க இப்போதான் ஆரம்பிச்சா மாதிரி இருந்தது அதுக்குள்ள எவ்வளவு நாள் ஓடிடுச்சி" என்று வியப்பை கூட்டி கூறியவர் "வந்துடுறேன் தம்பி... நம்ம ஊர்ல பங்கஷன் வராம இருப்போமா ஜமாய்ச்சிடலாம்" என்றவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றான். முன்பெல்லாம் கூப்பிட்டால் கூட வீட்டின் உள்ளே கூட வராதவன் இப்போது இரண்டு வாரங்களில் மூன்று முறை வந்து, இருந்து, சௌந்தரலிங்கத்திடம் பேசிவிட்டே சென்றான். இது என்ன சோதனை என்று அவளால் நினைக்க மட்டுமே முடிந்தது கூடுமான வரையில் அவன் முன்னால் வருவதை தவிர்க்கத்தான் பார்ப்பாள் ஏதோ ஒரு சந்தர்ப்பம் அவனை கண்பது போல் அமைந்துவிடும்

எப்போதும் எதையாவது யோசிப்பது போல் உட்கார்ந்து கொள்ளுவதும் இல்லை கொள்ளையில் உள்ள பூச்செடிகளின் அருகில் அமர்ந்து கொள்ளுவதுமாக இருப்பதை பார்த்து ஒரு நாள் பக்கத்து வீட்டு அன்னம் "என்ன புள்ள வீட்டுக்குள்ளயே இருக்க... வா புள்ள கோவிலுக்காவது போயிட்டு வருவோம்" என்று அழைக்க பிடிவாதமாய் மறுத்த தேவாவை மரகதம் வற்புறுத்தி அனுப்பி வைத்திட அழையா விருந்தாளியாய் அவனுடனான அன்றைய பைக் பயணம் நினைவில் வர கண்களில் கண்ணீர் தடயங்கள். அன்னம் பார்க்காதவாறு அதை மறைத்து முகத்தை இயல்பாய் வைத்துக்கொண்டாள் தேவா.

"என்ன டி அதிசயமா இருக்கு…" என்றிட என்ன என்பதை போல் பார்த்த தேவாவை கண்ட அன்னம்.

"எப்பவும் ஓயாம பேசுவ... இப்போ வாயையே திறக்க மாட்டுறேயே?.

இது அதிசயம் இல்லையா?..." என்று சொல்லி அவளை கேளி செய்தும் கூட சின்ன சிரிப்புடன் அமைதியாய் கடந்தவளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் அன்னம்.

"அந்த வீணா போன உங்க அத்தகாரி வந்தாலும், வந்தா…. நீ நீயா இல்ல புள்ள அவ வாயிக்கு நீயெல்லாம் எந்த மூளைக்கு... கழுதைக்கு மூக்கு வேர்த்துடும், நாம அவளை பத்தி பேசினா கூட…. அந்த அளவுக்கு உடம்பு முழுக்க காது வைச்சிக்கிட்டு யாரு என்ன பேசுவாங்க நாம என்ன சொல்லலாம்னு அலையும்" என்றிட

அன்னத்தின் பேச்சிற்கு வெறுமையான பார்வையை பதிலாய் கொடுத்தவள் அமைதியாய் வர "நல்லா கும்பிட்டுக்கோ புள்ள… கண்டிப்பா உன் வேண்டுதல அந்த தாய் நிறைவேத்திடுவா…" என்று கூறி வேண்டிக்கொள்ள சொன்னார்.

ஏதோ ஒரு நப்பாசை இவராவது தனக்கு உதவிட மாட்டாரா என்ற ஏக்கத்துடன் கண்களை மூடி அம்மன் முன்னால் நின்றவள் 'தாயே உனக்கு என் மேல என்ன கோவம்... எனக்கு ஏன் இந்த கஷ்டத்தை கொடுக்குற?... என்னால முடியல... என்னால இந்த சித்தரவதைய அனுபவிக்க முடியல... எனக்கு வாழனும்னு ஆசையே இல்லை, ஆனா சாகவும் துணிச்சல் வரமாட்டங்குது... நான் ஆசைபட்டு நினைச்சது நடக்கலனாலும் பரவாயில்லை…. ஆனா நான் கனவுல கூட, நினைக்காத கல்யாணம் என் கண்ணு முன்னாடி நடந்துடுமோன்னு பயமா இருக்கு... எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடு தாயே... அதுக்கு ஈடா என் உயிரை வேணாலும் எடுத்துக்க இந்த கல்யாணம் மட்டும் நடக்க கூடாது….' என்று மனம் உருகிட பிராத்தித்தவளின் கண்ணீர் துளிகள் கன்னத்தை தாண்டி வழிந்தது.

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN