பூ 28

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

கூவிளம் பூ
பூ.28


காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை தேவாவிற்காகவும் காத்திருக்கவில்லை காற்றில் அடித்து செல்லப்பட்ட காகிதம் போல் காலத்தால் அடித்து செல்லப்பட்டாள்... நிச்சயம் உறுதி செய்யப்பட்ட போதே பாதி உயிரை பறித்தது போன்றதொரு வலி இதயத்தில் பரவியது… ஏதோ ஒரு நம்பிக்கையில் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தாள்.


கல்லூரி இரண்டாம் வருடத்தில் அடி எடுத்து வைத்திருந்த அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவளை புரிந்து கொண்ட மேகலாவின் நட்பு தான் அந்த ஜீவன் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் என்ன ஆகி இருப்பாளோ ...


நிச்சயம் நடந்த பிறகு பயம் பற்றிக்கொள்ள தனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை என்பதை பற்றி அருணிடமே நேரடியாக பேசினால் என்வென்று தோன்றும் பொழுதெல்லாம், சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அதை செயல்படுத்த முடியாமல் போய்விடும்.


அந்தியூரில் விசாகனின் பள்ளிவேலை முடிந்து விட அவ்வூர் பக்கம் சென்றுவருவது வெகுவாக குறைந்திருந்த சமயத்தில் தான் அந்த ஊரிலேயே சில நிலங்கள் விற்பனைக்கு வர அதையும் வாங்கி விவசாயத்தை பார்க்க விசாகனுக்கு அந்த ஊரின் தொடர்பு கூடிக்கொண்டே போனது…


அமுதாவிற்கும் மில், தோப்பு, பண்ணையம், என்று நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு சென்றது. நாளபின்ன அவளுக்கு உதவும் என்ற எண்ணத்தில் அலமேலுவின் பெயரில் இருந்த வீட்டை வக்கீலின் மூலம் அமுதாவின் பெயருக்கு மாற்றி பத்திரபதிவு செய்திருந்தான் விசாகன். ஓரளவு அவள் வீட்டு பின்புறம் இருந்த தோட்டத்திலும் அவளுக்கு வருவாய் வருவது போல் வழிவகை செய்து இருந்தான்.


அமுதாவிற்கும் அனைத்தும் அத்துப்படி ஆகி இருக்க தில்லையின் மனதில் சிலவிபரித எண்ணங்களும் உதிக்காமல் இல்லை இருந்தும் பேரனின் மனதை அறியாமல் பேத்தியிடம் விஷயத்தை கேட்க கூடாது என்று அமைதியாக இருந்தார்… அப்பத்தாவின் மனதை அறியாதவனா விசாகன் தானாகவே அமுதாவின் திருமணம் பற்றி பேச்செடுக்க


"மாமா இப்போ எனக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை கொஞ்ச நாள் உங்க கூட எல்லாம் இருக்கேன் எனக்கு அம்மாவோட வாழ்க்கைய பார்த்து காதல் கல்யாணம் இது மேல எல்லாம் நம்பிக்கையே போயிடுச்சி" என்று கூறிவிட


"சரி புள்ள... உன்னை மீறி எதுவும் நடந்திட போறது இல்லை... இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் நல்ல குடும்பமா நானே பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்றான்.


பேரன், பேத்தியின் சம்பாஷனைகளை கேட்ட தில்லைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அலமேலுவின் வாழ்க்கையை பார்த்து அமுதா பயந்து இருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்து இருந்தது. அதை கொஞ்சம் கொஞ்சமாக தான் தெளிய வைக்க வேண்டும் என்று நினைத்தார். மெல்ல பேத்தியின் மனதில் விசாகனை பற்றிய எண்ணத்தை அறிய நினைத்தவர்.


"ஏந்தாயீ, அமுதா... சித்த இங்கன வந்து உட்காரு புள்ள பம்பரமா சுத்தி வேலை பாக்குறவ" என்று தன் அருகில் அமர அழைக்க


"சொல்லு அம்மத்தா... நான் என்ன வேலைய பார்த்துட்டேன்னு கவலைபடுறிங்க... என் வீட்டுல செய்ற பாதி வேலைய கூட இங்க செய்யல" என்றபடி முந்தியை உதறி விட்டு தில்லையின் அருகில் வந்து அமரந்தாள் அமுதா.


வந்து அமர்ந்தவளின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த தில்லையினை அழைத்து சொல்லு "அம்மத்தா என்னையே பார்த்துட்டு இருக்க... என்ன விஷயம்?" என்றாள் பேத்தி


"என் தாயீ... அப்படியே உன் ஆத்தாளை உறிச்சி வைச்சி இருக்க என்.ராசாத்தி" என்று நெட்டி முறிக்க


தாயின் நினைவில் கண்கலங்க அமர்ந்தவளை கண்டு வேதனைப்பட்ட தில்லை "நான் ஒரு கூறு வாறு இல்லாத கிழவி தெரியாம சொல்லிட்டேன் ஆத்தா" என்று அவளை சமாதனப்படுத்தியவர் "சரி இப்போ ஒன்னு உன்கிட்ட கேக்கேன் உண்மைய சொல்லனும்" என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.


கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டவள் "சொல்லு அம்மத்தா உண்மைய தானே சொல்லிட்டா போச்சி" என்றவளது குரல் பழைய நிலைக்கு திரும்பி இருந்தது.


"உன் மாமன கட்டிக்க ஆசைபடுதியா?" என்று கேட்டு விட்டார். வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த விசாகனுக்கும் தில்லையின் கேள்வி செவியை தீண்டி சென்றது. இதற்கு அமுதாவின் பதில் என்னவாக இருக்கும் என்று நினைத்து இருந்தவனுக்கு "இல்லை அம்மத்தா எனக்கு என் மாமன் இன்னொரு தாய் மாதிரி... அவரு எப்பவும் போல என்கூட நல்லபடியா பேசினா போதும், நான் என் அம்மா மாதிரி இருக்கேன்... என் மாமா என் அம்மாக்கூட பொறந்த என் பெரிய மாமா மாதிரி இருக்காரு... உறவுல எங்களுக்கு கட்டிக்கிற முறை இருந்தாலும் எனக்கு அண்ணன் தானே..." என்று கூறியதும் "அடி என் ராசாத்தி" என்று இரு கன்னம் பற்றி முத்தமிட்டார் தில்லை


அந்த வார்த்தைகளை கேட்டவனுக்கும் மனது குளிர்ந்து போனது. நடந்த உரையாடல்களை கேட்காதவன் போல உள்ளே சென்றுவிட்டான் விசாகன்.


அலமேலுவின் இறப்பு ரத்தினத்தினால் நிகழ்ந்தது என்று அவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் குடி பழக்கத்திற்கு மருத்துவ கவுன்சிலிங்கிற்கும் பரிந்துறை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


விசாகனின் ஃபேக்டரி வேலை முடியும் தருவாயில் இருக்க திறப்பு விழா பத்திரிக்கை வைக்க அந்தியூரில் தேவாவின் வீட்டு வாசல் படியில் நின்றிருந்தான்.


"அய்யா" என்று அழைத்து அவருக்காக காத்திருக்க சமையலறையில் வேலையாக இருந்த மரகதம் "தேவா யாருன்னு பாரு புள்ள... கை வேலையா இருக்கேன்" என்றதும்


புத்தகமும் கையுமாய் வந்தவள் வாசலிலையே அவனை பாரத்ததும் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் நின்று விட்டவளின் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டு ஆட்டம் காட்டியது.


மகள் சென்றும் இன்னும் யார் என தெரியவில்லையே என்று நினைத்த மரகதம் "என்ன புள்ள எம்புட்டு நேரம் ஆச்சி சொல்லி... போய் பாத்தியா இல்லையா?" என்று உள்ளிருந்து குரலை கொடுத்து அவளை மீட்டிட


"மா... தோ... இதோ போறேன் மா..." என்றவளின் குரல் அவளுக்கு கேட்கவில்லை தொண்டையை செருமி தன்னை சமன்படுத்தி கொண்டவள் "வா… வா… வாங்க..." என்று. திக்கி திணறி அவனை வரவேற்று சோபாவில் அமரச்சொல்லி கை காட்டியவள் சட்டென உள்ளே மறைந்துவிட்டாள்.


"மா.. அப்பாவை பாக்க வந்து இருக்காங்க வாங்க" என்று தாயிடம் கூறியவள் தனது அறைக்குள் புகுந்து கொண்டாள். எந்த நிலையிலும் வெளியே வந்துவிடக்கூடாது என்று சட்டமாக அமர்ந்துவிட்டாள்.


உள்ளிருந்து வந்த மரகதம் விசாகனை பார்த்ததும் "வாங்க தம்பி" என்று தண்ணீரை கொடுத்து விட்டு நிற்கவும் அய்யா இல்லிங்களா என்றான்.


"இல்லையே தம்பி... கல்யாணம் விசயமா வெளியே போயி இருக்காரு" என்ற மரகதம் இருங்க தம்பி மோர் கொண்டு வறேன் என்று உள்ளே நகர


அறைக்குள் செல்ல இருந்தவரை தடுத்து "எதுவும் வேண்டாங்க" என்றவன் மரகதம் கல்யணத்தை பற்றிக் கூறவும் "கல்யாணமா! யாருக்கு?" என்றான் எதையும் அறியாதவன் போல்... உள்ளே அமர்ந்து இருந்தவளுக்கு பத்து பச்சை மிளகாயை ஒன்றாக கடித்த காரத்தில் இருந்தவள் போல முகத்தை வைத்துக்கொண்டு 'ம் உங்க தாத்தாவுக்கு…. வந்து இருந்து முக்கிட்டு போயேன்… கேக்குறார் பாரு கேள்வி' என்று அவனுக்கு மானசீகமாக தலையில் ஒரு குட்டை வைத்தாள்.


அதை கேட்டுக்கொண்டே தண்ணீரை பருகிக்கொண்டு இருந்தவனுக்கு புரையேறி விட "பார்த்து தம்பி" என்று கூறிய மரகதம் "என்ன விஷயமா அவரை பாக்க வந்திங்க தம்பி அவர் வந்ததும் சொல்றேன்" என்றதும்.


"அய்யாவை பார்க்கத்தான் வந்தேன்.. சரி பரவாயில்லை, நல்ல விஷயமாத்தான் வெளியே போயி இருக்கார்... இந்தாங்க நீங்களே வாங்கிக்குங்க" என்று அழைப்பிதழ் ஒன்றை அவருக்கு நீட்டி "நம்ம ஃபேக்டரி திறப்பு விழா.. நிச்சயம் நீங்க குடும்பத்தோட வரனும் அய்யாக்கிட்டயும் சொல்லிடுறேன்". என்றவன் அங்கிருந்து புறப்பட்டு இருந்தான்.


'நல்ல விஷயமா!... இருக்கும்… இருக்கும்… உங்க ரூட்டு கிளியர் ஆகுதுல்ல நல்ல விஷயமாதான் இருக்கும் உங்களுக்கு" என்று ஆதங்கத்துடன் மூக்கு விடைக்க தனக்கு தானே கூறிக்கொண்டவள் அவனை பற்றியே சிந்தித்து கொண்டு இருந்தாள்.


இதற்கிடையில் தேவாவின் கல்யாண வேலையும் கலை கட்டி இருந்தது… அடிக்கடி ஜெயசந்திரன் ஊருக்கு வந்துப்போய் கொண்டு இருந்தான். அருண் இரு முறை தேவாவை காண்பதற்காகவே வந்திருந்தான். அவன் வரும் பொழுதெல்லாம் அவளுக்கு காய்ச்சலே வந்துவிடும் அளவுக்கு பதட்டம் கூடி போய் இருந்தது. அவன் மூன்றாம் முறை வந்த போது தைரியமாகவே சொல்லிவிட்டாள் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தன் தாயை நினைத்து தான் தேவா பயப்படுகிறாள் என்று தவறாக நினைத்தவன்


நீ எதை நினைச்சி பயப்புடுறன்னு புரியது தேவா உனக்கு நான் எப்பவும் பக்கபலமாதான் இருப்பேன். எதை நினைச்சும் நீ இனி கவலைபடாதே என்று கூறியவன் அங்கு நிற்கவில்லை தன்னை சமாதானபடுத்தி கல்யாணத்தை நிறுத்திவிட்டுவிட போகிறாள் என்று அச்சம் கொண்டவன் அன்றே ஊருக்கு புறப்பட்டு விட்டான்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க விசாகனின் தொழிற்சாலை திறப்பு விழா நாளும் வந்தது... வரமாட்டேன் என்று வீம்பு பிடித்து அமர்ந்து இருந்தவளை சௌந்தரலிங்கம் "எங்கயுமே வரமாட்டுறியே மா இது நமக்கு தெரிஞ்ச புள்ள இரெண்டு மூனு முறை வேற கூப்பிட்டு போச்சி அந்த மரியாதைக்காகவாவது வா மா" என்றிட வேறு வழி இல்லாமல் அவளும் கிளம்பி சென்றிருந்தாள்.


பூஜை வெகு விமரிசையாக ஆரம்பிக்கும் ஏற்பாடுகள் நடந்துக்கொண்டு இருந்தது தேவாவை பார்த்த தில்லை "வா… வா… தாயீ" என்று அவளை அழைத்து தன் அருகே நிறுத்திக்கொண்டார். சௌந்தரலிங்கத்தையும் அவரது மனைவி மரகதத்தையும் வரவேற்று அமரவைத்தவன் அவளை பார்த்தும் பார்க்கதவன் போல வந்திருந்தவர்களை கவனிக்க சென்றான். 'இதுக்குதான் சொன்னேன் நான் வரலைன்னு என்னையெல்லாம் யாரு மதிப்பா? அவங்க அத்த மக கண்ணுக்கு நிறைஞ்சி இருக்க, நான் தெரிவேனா அவருக்கு!!" என்று கடுகடுத்துக் கொண்டு இருந்தாள்.


அமுதாவும் ஃபேக்டரி வேலையில் உடன் இருக்க சுந்தரனும் விசாகனும் வந்தவர்களை வரவேற்றுக்கொண்டு இருந்தனர். விழா இனிதே தொடங்க இருக்க "அய்யர் நாழி ஆகிறது பொம்மனாட்டிகள் வந்து குத்துவிளக்கு ஏத்துங்கோ" என்று கூறிட


தில்லை தன் பக்கத்தில் இருந்த தேவாவை "போ தாயீ… அமுதா நீயும் போமா விளக்கு ஏத்துமா" என்று கூறினார்.


ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றிருந்தவள் "நானா!... நான் எதுக்கு பாட்டி?? நீங்க... இல்லன்னா இவங்க ஏத்தட்டும்" என்று தயங்கி பின்வாங்கி நிற்க


"அட என்ன தாயீ நீ கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணுங்க அந்த சாமிக்கு சமம் நீ கேள்விப்பட்டது இல்லையா? போடா மனசுல இந்த தொழில் நல்லபடியா வரனும் நினைச்சிட்டு விளக்கை ஏத்து... அமுதா நீயும் போ" என்றதும் தேவசேனாவும் அமுதவள்ளியும் குத்து விளக்கை ஏற்றினர். தேவாவிற்கு மட்டும் மனதிற்கு நெறுடலாகவே இருந்தது விசாகன் முருகனின் பெயர் நான் தேவா... தேவசேனா... அவங்க அமுதா... அமுதவள்ளியா... என்று கடுப்புடனே நினைத்துக்கொண்டு இருந்தாள்.


நாட்களும் விளையாட்டாய் ஓடிவிட திருமண நாளும் நிச்சயக்கப்பட்டுவிட்டது எதையாவது குடித்து விட்டு இறந்துவிடலாமா என்று கூட ஒரு முறை யோசித்து அதை செயல்படுத்தவும் முடிவெடுத்து விட்டாள். யாருக்கும் தெரியாமல் வயலுக்கு வைத்திருந்த பூச்சிமருந்தை கையிலெடுத்தவள் அதை குடிக்க போகும் சமயம் வீட்டில் டாமல் என்று ஏதோ விழும் சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே ஓடினாள்.


சமையலறையில் இருந்த மரகதம்தான் கீழே விழுந்து தையல் போடும் அளவிற்கு தலையில் அடிப்பட்டு இருந்தது அந்த சமயத்தில் தற்கொலை செய்வது தற்காலிகமாக தள்ளிபோனது மீண்டும் அதை நினைக்கும் போது தான் மடத்தனத்தில் என்ன காரியம் செய்ய இருந்தோம் என்று நொந்துக்கொண்டாள். எது வந்தாலும் பாக்கலாம் என்ற முடிவோடு எல்லவற்றையும் எதிர்கொள்ள தயாரானவள் அமைதியாகவே இருந்தாள். பத்திரிக்கை அடிப்பது முகூர்த்தப்பட்டு எடுப்பது, தாலிக்கு தங்கம் கொடுப்பது, பத்திரிகை வினியோகம் என்று வேலைகள் படு வேகமாக நடந்து கொண்டிருந்தது.


இதோ அதோவென அவளை பயமுறுத்திய கல்யாண நாளும் நெருங்கி விட்டது நாளை விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் இருந்தவளுக்கு இதைத்தவிர வேறு வழியே தெரியவில்லை என்றுமில்லாமல் தாயை கட்டி அணைத்துக்கொண்டவளின் கண்ணீர் துளிகள் அவரின் முதுகை ஈரமாக்கியதும் மகள் அழுகிறாள் என்பதை உணர்ந்தவர்.


தலையை தடவியபடி "என்ன தேவா மா?" என்றார் கரகரப்பான குரலில் அவருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது கண்ணுக்குள்ளேயே வைத்து பார்த்த மகளை முதலை வாயில் கொடுப்பது போல் இந்த கல்யாணத்தில் தள்ளிவிடுவதில் அவருக்கு துளியும் விருப்பம் இல்லை... என்னதான் அருண் நல்லவனாகவே இருந்தாலும் குடும்பம் என்று வரும்போது எல்லாவற்றையும் பார்த்துதானே ஆகவேண்டும் தன் மகள் எப்படி அங்கு காலம் தள்ள போகிறாளோ! என்று கலங்கினார்


"ஒன்னுமில்லமா உன்கூட கொஞ்சம் இருக்கனும் போல இருந்துச்சி…" என்று கூறி அவரை அமரசொல்லியவள் அவர் மடிமீது தலைவைத்து படுத்துக் கொண்டாள். 'இனி இந்த சொர்கம் கிடைக்குமா?' என்று நினைத்து அழுதாள்.


வார்த்தையில்லா மௌனம் அங்கே சூழலை கணக்க வைத்து இருந்தது.


தலையை கோதியபடி அமர்ந்து இருந்த மரகதம் நேரம் ஆவதை உணர்ந்து "சரி புள்ள நீ படு நாளைக்கு காலையில முகூர்த்தம் இருக்கு சீக்கிரம் எழும்பனும்" என்று கூறி அவளை மெத்தையில் படுக்க சொன்னவர் ஒரு முறைக்கு இருமுறை அவளை பார்த்தபடியே வெளியே சென்றார்.


விடிந்ததும் "தேவா மா கதவை திறம்மா... தேவா... நேரம் ஆகுது புள்ள… உள்ள என்னதான் புள்ள செய்ற… விளையாடாத புள்ள கதவை திற" என்று கதவை தட்டிக்கொண்டு இருந்த மரகதத்திற்கு இதயம் இரண்டு பங்கு வேகமாய் துடித்துக்கொண்டு இருந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN