பூ 31

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

விசாகன் படுத்த சிறிது நேரத்திலேயே உறங்கி இருந்தான். எப்போதும் நள்ளிரவை தாண்டி உறங்கி பழக்கப்பட்டவனுக்கு இன்று அதிசயமாக படுத்த சிறிது நேரத்திலேயே உறக்கம் கண்களை தழுவி இருந்தது.


தேவாவிற்கு தான் தூங்கா இரவாகி போனது அவனிடத்தில் என்னவோ தன் கண்ணீரை காட்டாது திடமாக பேசியவளின் விழிகள் அவள் படுத்ததும் தானாக மடை உடைந்து கண்ணீரை சுரந்தது . மெல்ல எழுந்து அமர்ந்தவள் திரும்பி அவனை பார்த்தாள். சீராக ஏறி இறங்கிய அவன் மார்புக்கூடு நன்றாக உறங்குகிறான் என்று கூறியது. மங்கிய விளக்கின் ஒளியில் அவனை காண அழகனாய் தெரிந்தான்… அவனுடனே இருக்க வேண்டும் என்று விரும்பிய வாழ்க்கை ஆனால் இன்று அதையே வெறுத்தாள்.


ஆழ்மனதில் அவன் மேல் கொண்ட காதலை பூட்டி வைத்தவள் அவனை அருகில் சேர்க்கவும் முடியாமல் விலக்கி நிறுத்தவும் முடியாமல் வாழ்க்கை என்னும் கடலில் தத்தளித்தாள்.


விடிய விடிய அவனையே பார்த்து மருகிக்கொண்டு இருந்தவள் அவன் அசைவில் தூங்குவது போல் மறுபடி படுத்துக்கொண்டாள். கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்த விசாகன் நேரத்தை பார்க்க விடியற்காலை நான்கை தொட்டு இருந்தது கைபேசியில், சோம்பல் முறித்தபடி தேவா படுத்திருந்த இடத்தைப் பார்த்தான்.


இரவு எப்படி படுத்தாளோ அதே வாக்கில் இப்போதும் படுத்துக்கொண்டு இருந்தாள். சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் என்ன நினைத்தனோ, சட்டென எழுந்து அவள் அருகில் சென்றவன் கையோடு கொண்டு வந்திருந்த போர்வையை அவள் மேல் போர்த்திவிட்டு மீண்டும் போய் படுத்துக்கொண்டான்.


படுத்துக்கொண்டு இருந்த தேவாவிற்கு அவன் காலடி ஓசை வெகு அருகில் கேட்கவும் மனம் திக் திக் என்று அடித்துக்கொண்டது. என்ன தான் அவனிடம் தைரியமாக பேசினாலும் உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்துக்கொண்டே தான் இருந்தது… அவன் தந்த அருகாமை, கழுத்தில் உறவாடிய தாலி, கணவன் மனைவி எனும் பந்தம் , இது எல்லாம் அவளை என்னமோ செய்தது... இறுக்க கண்களை மூடி படுத்திருந்தவளுக்கு அவன் போர்வையை போர்த்தவும் அப்பாடா என்று மனது ஆசுவாசமாகியது.


கள்ளன் எப்படி பயப்படுத்தராரு…!! அப்பா, ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்... என்று பெரூமூச்சி விட்டவள் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள். அறைக்குள், அதுவும் அவனுடன் இருப்பது அவளுக்கு மூச்சு முட்டியது எப்போதடா விடியும் அறையை விட்டு ஓடிவிடலாம் என்று கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு இருந்தாள் தேவா,


பூக்களை மொய்க்கும் வண்டினங்களின் ரீங்காரமும் இறைதேடி பறந்துச்செல்லும் பறவைகளின் கிரீச் கிரீச் சத்தமும் பொழுது புலர்ந்ததுக்கான அறிகுறியை தெரிவிக்க.


இதற்கு மேல் படுத்துக்கொண்டு இருக்க மனம் ஒப்பாமல் எழுந்தவள் சுற்றி சுற்றி அறையை நோட்டம் விட்டாள். குளிக்க வேண்டும், ஆனால் மாற்று உடை இல்லையே... நேற்று அவள், கட்டி இருந்த புடவையோடு தாலிக்கட்டி கூட்டி வந்திருந்தான் விசாகன். மாற்றுத்துணி என்று எதுவும் கொண்டு வரவில்லை… வீட்டிலிருந்து கொடுத்து அனுப்பியதையும் வேண்டாம் என்று திருப்பி அனுப்பி விட்டான்... நேற்றிரவு அணிந்திருந்த புடவையின் உபயம் கூட தில்லை தான்... இப்போது என்ன செய்வது எப்படி குளிக்காமல் வெளியேறுவது என்று சிந்தனையில் திருதிருக்க நின்றிருந்தாள்.


க்கூம் என்று செருமிய விசாகனின் செருமலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் தேவா


"எதுக்கு இப்ப பயப்படுற தேவா" என்றபடி தேவாவின் அருகில் வந்தான் விசாகன். நேற்று இரவு எதுவுமே நடக்காதது போல் அவன் சாதரணமாக பேசியது அவளுக்கு வியப்பாய் இருந்தது… 'அவர் தானா இல்ல நாம கனவு காணுறோமா!: என்றபடி படுக்கையை எட்டி பார்த்தாள் ஆள் இல்லை இது அவரே தான் என்ற முடிவுக்கு வந்து விட்டவள்.


"இல்ல திடீர்னு என் பின்னாடி சத்தம் கேட்கவும் பயந்துட்டேன்" என்றாள் சோர்வாக இரவு தூங்காததால் கண்கள் இரண்டும் சிவந்து சோர்வாக இருக்க அதை கண்டவன்…


"ஏன் கண்ணு ரெட்டா இருக்கு?" என்று கன்னத்தை தொட நீண்ட அவன் கரங்களை தவிர்த்து சற்று விலகி நின்றவள் "அது அது தெரியல" என்று திக்கி திணறி கூறினாள்.


அவள் தன்னை விலக்கி நின்றதும் அவளை கூர் பார்வை பார்த்தவன். "ம் சரி" என்று தேவாவை விட்டு விலகி நடந்தவன், பீரோவை திறந்து அதில் இருந்த சில பைகளை எடுத்து அவளிடம் கொடுத்தான்.


அவன் தன்னிடம் கோவித்துக்கொண்டு தான் செல்கிறானோ என்று நினைத்தவள் இப்போது அவளிடம் பைகளை நீட்டவும் அதை வாங்கிக் கொள்ளாமல் "என்ன.. என்ன இது.." என்றாள் அதை கண்களால் சுட்டி காட்டி


"வாய் இருக்குன்னு பேசுற இல்ல அதே போல கை இருக்குள்ள பிரிச்சி பாரு…" என்றவன் குளியலறையில் புகுந்து கொண்டான்


பல்லை கடித்து "ரொம்பத்தான்… சொன்னா முத்து உதிர்ந்துடுமா…" என்று முனுமுனுத்துக்கொண்டே பிரிக்க சில சுடிதார்களும் சில புடவைகளும் இருந்தது.


'இது எல்லாம் எப்போ வாங்கிட்டு வந்தாரு' என்று யோசித்தவளுக்கு நேற்று பொன்னியிடம் சில பைகளை கொடுத்தது நினைவில் வந்தது.. 'ஓ இதுக்குத்தான் வெளியே போனாரா' என்று நினைத்தவள் சுடி இருந்த பேகை கையில் எடுத்து அதை பிரித்தாள்.


குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் முகம் துடைத்தபடி "இன்னைக்கு சுடி வேண்டாம் புடவை கட்டிக்க வெளியே போகனும்" என்றவன் அவளின் பதிலை கூட கேட்காமல் கதவை திறந்து வெளியே சென்றுவிட்டான்.


'இதை கட்டியே ஆகனுமா?' என்று நினைத்து கவரை கட்டிலின் மேல் வைத்து, அதை பிரித்து பார்த்தாள். புடவை அதற்கு தோதான ரெடிமேட் பிளவுஸ் மற்றும் அவளுக்கு தேவையான சில ஆடைகளும் இருந்தது. 'இது எல்லாம் எப்படி அவருக்கு…. கடவுளே…' என்று தலையில் கை வைத்து கொண்டவளுக்கு வெட்கம் பிடிங்கி தின்றது அதை விட கோவம் அதிகம் வந்தது… எதுவா இருந்தாலும் இப்போ எதுவும் கேட்க முடியாத நிலை என்று ஒரு பெருமூச்சை வெளியேற்றியபடி குளியலறைக்குள் புகுந்து இருந்தாள்.


பாசிப்பச்சையில் கையளவு அகலத்தில் அடர்பச்சை கரையிட்ட பட்டுப்புடவையும் அதற்கேற்ற வேலைப்பாடுகளுடன் கூடிய ரெடிமேட் பிளவுஸும் அவளுக்கென்று அளவெடுத்து தைத்தது போன்று அழகாய் அம்சமாய் பொருந்தி இருந்தது… சில நகைகளை நேற்றே தில்லை கொடுத்து இருந்தமையால் அதிலிருந்து மிகவும் சன்னமான நகைகளை அணிந்து ஈரத்தலையை துவட்டியபடி நின்றிருந்தாள்.


அறையின் கதவை தட்டிய அமுதா அதை விலக்கியபடி "இந்தா தேவா காபி" என்று அவளுக்கு கொடுத்தாள்.


"சாரிங்க கொஞ்சம் லேட் ஆகிடுச்சி.. நானே வந்து இருப்பேன் ல நீங்க எதுக்கு" என்று தயங்கிய தேவாவை சமாதனப்படுத்திய அமுதா, "காபிய அம்மத்தா தான் கொடுத்து விட்டாங்க தேவா... நீங்க நிதானமாவே வாங்க" என்றவள் புன்னகைத்து அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.


அவளை பார்த்த தேவாவிற்கு ஒன்று மட்டும் விளங்கவே இல்லை விசாகனை விரும்பியவள் தன்னை எப்படி சகித்துக்கொண்டு சாதரணமாக இருக்கிறாள்.. இதுவரை ஒரு வெறுப்பான பார்வையை கூட அவளிடம் காணாதது அவளுக்கு வியப்பாக இருந்தது… 'ஒரு வேலை தனக்குள்ளேயே அனைத்தையும் போட்டு கலங்குகிறாளோ எல்லாம் தன்னால் தானா?' என்று நினைக்கையில் அவளுக்கு நெருப்பின் மேல் நின்றிருப்பது போல இருந்தது.


இதுற்குமேல் இந்த அறையில் இருக்க முடியாது என்று கிழே இறங்கி இருந்தாள். அப்போதுதான் உள்ளே நுழைந்த விசாகன் மனைவியின் முகம் பார்த்தான் பனியில் தோய்ந்த மலரைப் போல அழகுடன் இருந்தாள். "ஆனா ஏதோ மிஸ் ஆகுது" என்று அருகில் வந்தவன் தாயின் படத்தருகே இருந்த சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து வகிட்டில் வைத்தான்... கணவனின் இந்த எதிர்பாராத செயலில் திடுக்கிட்டு விழித்தாள் தேவா.


"இனி எப்பவும் வகிட்டுல பொட்டு வை தேவா" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவன் "நான் ரெடியாகிட்டு வந்துடுறேன், வெளியே போகனும்" என்று அறைக்குள் சென்றான்.


இவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை… நடந்த நிகழ்வில் ஆணி அடித்தார் போல ஒரே இடத்தில் நின்றிருந்தவளை தில்லையின் "தாயீ" என்ற அழைப்பு நிகழ் உலகிற்கு அழைத்து வந்தது.


"என்ன தாயீ அப்படி நிக்குற.. இப்படி வா…" என்று சற்று தள்ளி அழைத்து வந்தவர் முடிக்கு சாம்பிராணி புகை காட்டினார். "இப்படி ஈரமா இருந்தா தலையில நீர்கோத்துக்கும்த்தா… இனி தலை குளிச்சவுடனே நல்ல துவட்டி விடு கன்னு…" என்று கனிவாய் கூறியவர்


தளற ஆறவிட்ட முடியை முன் உச்சியில் கிளிப் வைத்து விரித்து விட்டு நெருக்க தொடுத்த மல்லியை அதில் தவழ விட்டு, திருப்பி அவள் முகம் பார்த்தார். என் ராசாத்தி என்று இரு கைகளை நெட்டி முறித்தவர். "போ தா, போயீ பூசை அறையில விளக்கு ஏத்து ஆத்தா" என்றார்.


அவள் விளக்கை ஏற்றவும் விசாகன் வரவும் சரியாய் இருந்தது. பூஜை அறையில் இருந்து விபூதியை வைத்துக்கொண்டு வெளியே வந்தவளை ஜோடியாக அமரவைத்து காலை உணவை பறிமாறினார் தில்லை. நல்ல வேலையாக அமுதா பறிமாறவில்லை மில்லில் வேலை இருப்பதால் அவள் சீக்கிரமாகவே சென்றிருந்ததாள் ஓரளவு உணவை உண்டு விட்டே எழுந்தாள் தேவா.


"கிளம்பு தேவா" என்றவன் தில்லையிடம் "அப்பத்தா டவுன் வரையும் போயிட்டு வந்துடுறோம்" என்றவன் காரை எடுத்தான்.


"அய்யா அப்படியே ஒரு எட்டு சாமுண்டிஸ்வரி ஆத்தா கோவிலுக்கு அழைச்சிட்டு போ ராசா" என்றதும் தில்லையிடம் மறுத்து பேச வந்தவன் காரில் அமர்ந்திருந்த தேவாவை பார்த்துவிட்டு "ம்" என்று தலையாட்டலோடு அங்கிருந்து புறப்பட்டான். வழி நெடுக்கிலும் மௌனத்தை மட்டுமே சுமந்திருந்தது அவளின் இதழ்கள், சாலையை வெறித்தபடி இருந்தது அவளது விழிகள், ஏசி காற்றிலும் அவள் படபடப்புடன் இருந்தை போல உணர்ந்தவன் "தண்ணி குடிக்கிறியா தேவா?" என்றான்.


"இல்ல வேணா" என்று சாலையின் பக்கமே கண்ணை பதித்திருந்தவள் "எங்கே போறோம்?" என்றாள்.


"அங்க போனதுக்கு அப்புறம் தெரிய போகுது... சரி கோவில் வந்துடுச்சி இறங்கி நீ போயிட்டு வா" என்று அவன் கூறியதும்


"நான் மட்டுமா... நீங்க?" என்றாள் கேள்வியாக


"நான் கோவிலுக்குள்ள வரமாட்டேன் தேவா... நீ போயிட்டு வா" என்றான் சலிப்பாக


அவன் அவ்வாறு கூறியதுமே "சரி யாருமே போக வேண்டாம்... வாங்க நாம கிளம்பலாம்". என்றாள் மறுபடி காரில் அமர்ந்து. திருமணம் முடிந்து முதல் முதலில் கோவிலுக்கு செல்பவளுக்கு தனியாய் போவதில் விருப்பமில்லை என்னதான் இந்த திருமணத்தில் மனம் ஒப்பவில்லை என்றாலும் அவன் கோவிலுக்கு வராததை மனம் ஏற்றுக்கொள்ள வில்லை அவன் வந்தே ஆகவேண்டும் என்று அடம் செய்தது.


"தேவா… போயிட்டு வா…". என்று பொறுமையாக கூறிட


"எப்போ ரெண்டுபேரும் ஒன்னா கோவிலுக்கு போறோமோ, அப்பவே நான் கோவிலுக்கு வறேன்" என்றவள் ஜம்பமாக காரில் அமர்ந்து இருந்தாள்.


தன்னையும் அவளுடன் இணைத்துக் கொண்டதை அதிசயமாக பார்த்தவன் சிறிது மௌனத்திற்கு பிறகு "வா" என்று அவளை அழைத்துச் சென்றான். 'இங்கயே பழைய வாழ்க்கையை பற்றி சொல்லி விடுவோமா?' என்று நினைத்தான் ஆனால் இப்போதுதான் அவளையும் மறந்து தன்னை அவளுடன் சேர்த்து சொல்லி இருக்கிறாள் இப்போது இருக்கும் சூழ்நிலையை கெடுத்துக்கொள்ள விரும்பாதவன் இன்னொரு நாள் சொல்லுவோம் என்று நினைத்து நாளை கடத்தி இருந்தான்.


(நீ எப்போ சொல்றது அந்த மரமண்டைக்கு எப்போ விளங்குறது இவ பைத்தியம் எப்போ தெளியறது நீ எப்போ குடுத்தனம் நடத்தறது உன் பாடு கஷ்டம் தான் )


அம்மனுக்கு அர்ச்சனை தட்டையும் விளக்கையும் வாங்கியவர்கள் சாமி தரிசனம் முடித்து தெப்ப குளத்திற்கு வந்தனர். தேவா மீனுக்கு பொறியை போட குளத்தில் காலை வைக்க போனபோது "தேவா நில்லு" என்றவன் அவள் ஒற்றை கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு இப்போ இறங்கி போடு என்றான்.


அவள் குளத்தில் விழுந்ததும் அவன் காப்பற்றியதும் ஞாபகத்திற்கு வர மெல்லிய வெட்கம் எழுந்தது அவளுக்கு அவன் தொடுகையும் படபடப்பை கொடுக்க அவன் காணதவாறு அதை மறைத்தவள் "விடுங்க நான் சரியாதான் நிக்குறேன்". என்றாள் மிதப்பாக


"நல்லாதான் நிக்கிற... இல்லன்னு சொல்லல... இப்படியே பொறியை போடு" என்று சற்று குரலை உயத்தியவனை உள்ளுக்குள் முனுமுனுத்து பொறியை போட்டுவிட்டு அவனுடன் மேலே வந்தாள். அதன் பின் கார் தார் சாலையில் பயணித்து நகரத்தை அடைந்து பெரிய ஜவுளி கடையின் முன் நின்றது.


இரவெல்லாம் முழித்ததின் பலனாய் காரில் அமர்ந்திருந்தவள் அப்படியே சாய்ந்த நிலையில் உறங்கிக்கொண்டு இருந்தாள். கோவிலுக்கு சென்றதன் அறிகுறியாக நெற்றியில் பூசப்பட்டு இருந்த குங்கும பிரசதம் அவளுக்கு மேலும் அழகை கூட்டிகாட்ட, காதோரத்திலிருந்து கன்னத்தை தாண்டி விழுந்திருந்த முடியை விலக்கி விட்டவன் "தேவா… தேவா எழுந்திடு" என்றான் மெல்லிய குரலில். மெல்ல கண்களை திறந்தவள் "வந்துட்டோமா சாரி தூங்கிட்டேன்" என்று முன்பக்க தோளில் சரிந்திருந்த கற்றை முடியை பின்பக்கம் எடுத்துவிட எழுந்த கையை பிடித்து தடுத்தவன் "அப்படியே விடு தேவா.. உனக்கு அழகா இருக்கு" என்று கூறி "சரி இறங்கு போலாம்". என்றான்.


'என்னது அழகா இருக்கா… இது என்னடா உலகமகா அதிசயமா இருக்கு…. எப்பவும் உர்ன்னு இருப்பாரு!!! இப்போ என் அழகு எல்லாம் அவர் கண்ணுக்கு தெரியுதா!!! ஒரே நாள்ல ஒட்டுமொத்த ஷாக்கையும் எனக்கு கொடுத்தா நான் என்ன செய்வேன் கடவுளே!!! .. மயக்கம் வராதது ஒன்னு மட்டும் தான் குறையா இருக்கு' என்று அவளுக்குள் புலம்பியபடி விசாகனை பின் தொடர்ந்தாள்.


தேவா ஜவுளி கடைக்குள் நுழைந்ததும் 'எதுக்கு இங்க வந்து இருக்கோம்' என்று தனக்குள் எழுந்த சந்தேகத்தை அவனிடமே கேட்டு விட "எனக்கு நேரம் போகல அதான் சுத்தி பாக்க கூட்டிட்டு வந்தேன்" என்று கிண்டலடித்தவனை முடிந்த மட்டும் கண்களால் சுட்டாள்.


"போதும் டி கண்ணாலையே எரிச்சிடுவ போல…. அதோ அதுதான் சுடி செக்ஷ்ன்... உனக்கு வேண்டிய அளவு சுடியை எடுத்துக்க" என்றான்.


"இப்போ எதுக்கு? அதுதான் நேத்து வாங்கி கொடுத்திங்களே அதுவே போதும்…" என்று மறுத்து கூறியவளிடம்


"அது எப்படி போதும் நான் ரெண்டு செட்டுதானே வாங்கிட்டு வந்தேன்... நீ காலேஜ் போகனும்னா எதை போட்டுட்டு போவ போய் எடுத்துக்க" என்றவன் அங்கிருந்த சேரில் அமர்ந்துவிட்டான்.


'என்னது காலேஜ் போகனுமா! நான் இதை யோசிக்கவே இல்லையே!! பரவாயில்லை நான் கேட்காமலையே மனசுல இருக்கறதை சொல்லிட்டாரு சரி போய் எடுப்போம்' என்று நினைத்தவள் சுடி செக்ஷ்னுக்குள் நுழைந்தாள். அவள் சென்று இரண்டு மணி நேரம் கடந்திருந்தது. 'சுடி செக்ஷனுக்கே இரண்டு மணி நேரமா அப்போ புடவை எடுக்க போனா இன்னைக்குள்ள வந்துடுவாளா?' என்று நினைத்தவன் சுடி கவுன்டருக்குள் நுழைந்தான்.


எதை எடுப்பது எதை விடுப்பது என்று தெரியாமல் துணிகளை புரட்டி புரட்டி பார்த்து திணறிக்கொண்டு நின்ற தேவா கண்களில் தென்பட அவள் அருகில் சென்றவன் "எடுத்துட்டியா தேவா" என்றான் சன்னக்குரலில்.


பாவமாக அவனைப்பார்த்தவள் "எனக்கு எது எடுக்கறதுன்னே தெரியல.. எனக்கு துணி எல்லாம் செலக்ட் பண்ண வராது... அம்மாதான் எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க…" என்றவளை ஒரு பார்வை பார்த்தான். பின் அவனே அவளுக்கு ஏற்றது போல் சில சுடிகளை தேர்ந்தெடுத்தான். அவன் எடுத்தது அனைத்துமே அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதன்பிறகு புடவை செஷக்னுக்கும் அழைத்து சென்றவன். அவளுக்கு பொருத்தமான புடவைகளை தேர்ந்தெடுத்தான். 'பரவாயில்லை நல்லாதான் எடுக்கறாரு' என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை . அந்த அளவிற்கு அவனுடைய தேர்வு இருந்தது.


அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கியவர்கள் அடுத்து சென்றது நகை கடைக்கு தான், வரவே மாட்டேன் என்றவளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றான்.


"எனக்கு அப்பத்தா கொடுத்த நகையே போதும் புதுசா எதுவும் வேண்டாம்" என்று மறுத்து பேசியவளிடம் "அது என் அப்பத்தா நகை அம்மா நகை... அது எப்படி இருந்தாலும் உனக்குத்தான்... ஆனா உனக்கு பிடிச்சா மாதிரி நகை வேணும் ல" என்று அவளின் மறுப்பை தட்டி கழித்து இந்த காலத்திற்கு ஏற்றார் போல சில நகைகளை தேர்ந்தெடுத்தவன் அதோடு சேர்த்து அவளுக்கு தாலி சரடையும் வாங்கி இருந்தான்.


தேனீயில் உள்ள பெரிய உணவகத்திற்கு சென்று மதிய உணவை முடித்தவர்கள் வீடு திரும்பி இருந்தார்கள் காலையில் இருந்து அலைந்திருந்ததால் சோர்ந்து போய் இருந்த தேவா வாங்கி வந்த அனைத்தையும் அப்பத்தாவிடம் காட்டிக்கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் கண்கள் சொருக சாய்ந்து அப்படியே கண் அசந்துவிட்டாள்.


"அம்மாடி" என்று அழைக்க வந்தவர் அவள் உறங்குவதை கண்டதும் எழுப்ப மனமில்லாமல் "அய்யா ராசா" என்று பேரனை அழைத்தார்.


உள்ளே அறைக்குள் இருந்தவன் தில்லையின் அழைப்பில் வெளியே வந்து பார்க்க பரப்பி வைத்திருந்த பைகளுக்கு பக்கத்தில் அசந்து உறங்கிக்கொண்டிருந்தவள் கருத்தில் பட "என்ன அப்பத்தா இங்க தூங்கறா?" என்றான்.


"புள்ள அசதில தூங்கிடுச்சி போல.. உள்ள கொண்டு போய் படுக்க வை பா" என்றதும் சற்று தயங்கியவனிடம் "உன் பொஞ்சாதிய தூக்கு ராசா... பாவம் எழுப்பினா புள்ளைக்கு தூக்கம் கலஞ்சிடும்" என்று தேவாவிற்காக பேச 'நீ சொல்லிட்ட அவ எழுந்தா, ஆடு ஆடுன்னு ஆடுவாளே... காலையில இருந்து நல்லா போயிட்டு இருந்த நாளை கெடுத்தா மாதிரி ஆகிடபோகுது' என்று மனதில் நினைத்தாலும் கைகள் இரண்டும் தன் மனையாளை சுமந்துகொண்டு இருந்தது.


அறைக்குள் சென்று கட்டிலில் படுக்க வைத்தவன் வைத்த கண் வாங்கமால் தூங்கும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்… இந்த அரை நாள் அவளுடன் செலவழித்தது அவனின் மனதிற்கு இதமாகவும் சுகமாகவும் இருந்தது.


(இந்த சுகம் ஆயுள் முழுக்க நீள வேண்டுமே குட்டச்சி குட்டைய குழப்பாம இருந்தா நல்லா இருக்கும்.)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN