மயங்கினேன்....
உன் அக அழகில்...
தயங்கினேன்...
என் காதலை உரைக்க...
அந்த பிரமாண்ட மூன்றடுக்கு மாளிகை அன்று வழமைக்கு மாறாக அதிகாலை வேளையில் விழித்தெழுந்திருந்தது...
சூரியனின் வருகைக்காக எப்போதும் காத்திருக்கும் அங்கிருந்த சிறு தடாகத்தில் வீற்றிருக்கும் தாமரை கூட அன்று எதையோ கொண்டாடும் முகமாக மலர்ந்து தன் எதிர்ப்பார்ப்பை தெரிவித்திருந்தது....
அந்த மாளிகையின் இடப்புறமாக அமையப்பெற்றிருந்த தோட்டத்தில் உள்ள வேடந்தாங்கலில் விருந்தாளிகளாக தங்கியிருந்த பறவைகள் அரண்மனை விளக்கின் வெளிச்சத்தால் துயில் கலைந்து எழும்பி குரலெழுப்பிய வண்ணம் இருந்தது...
அருகே அமைக்கப்பட்டிருந்த மல்லிகைப்பந்தலில் நேற்று இரவு பூத்திருந்த மல்லிகை மலர்கள் தன் வாசனையை தென்றலுடன் கலக்கசெய்ய அதில் அந்த அரண்மையின் சுற்றுப்புறம் மனதுக்கினிய மணத்தை பரப்பியது...
இவ்வாறு வெளியுலகம் அந்த அரண்மனையின் விழிப்பிற்கு காரணம் தெரியாது குழம்ப அரண்மனை வீட்டினரோ பரபரப்பாக இருந்தனர்... வாசலில் வீட்டு வேலைக்காரப்பெண்கள் கோலப்பொடியின் தயவால் தம் கலைத்திறத்தை வெளிபடுத்த அந்த தாமரை வடிவ ரங்கோலிக்கோலம் வண்ண வண்ண நிறத்தில் நிறந்தீட்டப்பட்டு வாசலை நிறைத்திருந்தது.... இரு ஆண்கள் வாசலில் மாவிலை தோரணம் கட்ட ஒரு பெண்மணி கதவில் மஞ்சளால் ஓம் என்று வரைந்துக்கொண்டிருந்தாள்... வாசலைத்தாண்டி உள்ளே செல்லும் வழியில் ஆங்காங்கே அலங்காரங்கள் நடைப்பெற்ற வண்ணம் இருந்தது....
நடு சாலையின் வலப்புறமாக ஐயர் ஓமகுண்டத்தை தயார் பண்ணிக்கொண்டிருக்க அவருக்கு உதவியாய் இருவர் அங்கு நின்றுக்கொண்டிருந்ததனர்..
அவ்வாறு அந்த இடமே பரபரப்பாக இருக்க இவை அனைத்தையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார் அம்மாளிகையின் எஜமானி வசுமதி.. அவரவருக்கு ஏற்றாற் போல் வேலைகளை வழங்கியவர் தன் கணவனை தேட அவரோ தன் மச்சினன்மார்களுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்தார்..
அப்போது அவரை நோக்கி வந்தார் ரம்யா
“என்ன அண்ணி காலையிலேயே அண்ணாவை சைட் அடிச்சிட்டு இருக்கீங்க..?” என்று கேட்க
“ஏன் ரம்யா என்னை பார்த்தா சைட் அடிக்கிற மாதிரியா இருக்கு?? இந்த வயசுல எப்படிமா??” என்றவரை இடைமறித்தது மோகனாவின் குரல்
“ஏன் அண்ணி உங்க வீட்டுகாரரை நீங்க சைட் அடிக்கிறீங்க.... இதுல என்ன தப்பிருக்கு??” என்றவரின் கூற்றை ஆதரிக்கும் முகமாக வந்து சேர்ந்தார் ராகினி...
“அதானே... எங்க அண்ணனை எங்க அண்ணி சைட் அடிக்கிறாங்க... இதில் என்ன தப்பிருக்கு?? வாகினி நீ சொல்லு... இதில் என்ன தப்பு??” தன்னுடன் பிறந்த இரட்டையை துணைக்கழைக்க அவ்விடமே வசுமதியின் நாத்தனார் படையெடுப்பினால் சூழ்ந்தது....
ஆம் வசுமதியின் கணவர் பிரகஸ்பதியின் கூடப்பிறந்தவர்களே ரம்யா, ராகினி, வாகினி,மற்றும் மோகனா... பரம்பரை பரம்பரையாக பணத்திலேயே புரளும் பரம்பரையென்பதால் பணத்திற்கு எந்த குறையும் இருக்கவில்லை....பிரகஸ்பதிக்கு செல்வத்தில் குறைவில்லாத போதிலும் ஆடம்பரத்தை விரும்பவில்லை.... அதனாலேயே நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வசுமதியை விரும்பி கைப்பிடித்தார்...
முதலில் பிரகஸ்பதியின் குடும்பத்தினர் எதிர்த்த போதிலும் வசுமதியின் பாராபட்சமில்லாத அன்பினாலும் அனைவரையும் அரவணைக்கும் அன்பினாலும் காலப்போக்கில் அவரை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளத்தொடங்கினர்... பிரகஸ்பதி தன் தங்கைகள் நால்வரையும் நல்ல இடத்தில் திருமணம் முடித்துக்கொடுத்திருந்தார்... பிரகஸ்பதியின் தங்கைகள் நால்வரினதும் தலைதீபாவளி தொடக்கம் பிரசவம் வரை அனைத்தையும் வசுமதி பார்த்து பார்த்தே செய்தார்...
பிரகஸ்பதியின் தங்கை கணவர்கள் அனைவருக்குமே பிரகஸ்பதி மற்றும் வசுமதியின் மீது எல்லையற்ற மதிப்பும் மரியாதையும் உண்டு.. இதுவே இன்று வரை அந்த ஐந்து குடும்பங்களையும் ஒன்றிணைத்து வைத்திருந்தது...
பிரபஸ்பதி மற்றும் வசுமதி தம்பதிகளின் வாரிசு ஷாகர்...
ரம்யா மற்றும் ரவீந்திரனின் வாரிசுகள் ஆத்விக் மற்றும் ஆஷிகா...
ராகினி மற்றும் ரஞ்சித்குமாரின் சீமந்த புத்திரி ஆத்விகா
வாகினி மற்றும் ரமணனின் வாரிசுகள் கேஷிகா மற்றும் ஆதித்யன்
மோகனா மற்றும் கேஷவனின் இரட்டை புத்திரிகள் ரித்திகா மற்றும் கிருத்திகா...
இந்த பெரிய குடும்பத்தின் மூத்த ஆண்வாரிசான ஷாகரின் பிறந்தநாளை முன்னிட்டே அனைவரும் ஒன்றுகூடியிருந்தனர்.. அனைவரும் இங்கு வம்படித்து கொண்டிருக்க இவ்விழாவின் நாயகனோ தன் அறைக்கட்டிலில் படுத்தபடி போனில் தன் காதலியுடன் கொஞ்சிகொண்டிருந்தான்.
“ ஆது பேபி.... எங்க எனக்கு ட்ரீட்டு....??”
“.....”
“ஆமா... பர்த்டே பாயிற்கு நீ தான் ட்ரீட் தரனும்... அதுவும் நம்ம லவ் பண்ண தொடங்கி எனக்கு வர பெஸ்ட் பர்த்டே....சோ எனக்கு ஸ்பெஷல் ட்ரீட்....”
“....”
“அது நீ எனக்கு ஓகே சொல்லாம டிமிக்கி காட்டுன டைமில் வந்திருச்சி.... இல்லாட்டி நான் உனக்கு பார்ட்டி கொடுத்திருப்பேன்... ஆனா என்னோட பர்த்டே அப்படி இல்லையே...... சோ நீ தான் எனக்கு ட்ரீட் தர்ற....”
“....”
“அப்படீங்களா மேடம்..... மேடமிற்கு இப்படியெல்லாம் ஆசையிருக்கோ... சரி உன் ஆசையை ஏன் கெடுப்பான்??? நீ கேட்ட படி செய்திடலாம்...”
“.....”
“சரி ஆது... பூஜைக்கு டைமாகிருச்சி..... நான் குளிச்சிட்டு கீழே போகனும்.... இல்லைனு குடும்பமே என்னை தேடி அவங்க அவங்க சி.ஐ.டி படையை அனுப்பிருவாங்க... பிறகு அந்த வானரப்படை என்னை வகையா வைத்து செய்திடும்.... நாம ஆபிசில் பார்க்கலாம்... பாய் பேபிமா...” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.....
அவன் சொன்னது போல் அவன் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் அவன் சொன்ன சி.ஐ.டி படை அவனது கதவை தட்டி தம் வருகையை தெரியப்படுத்திக்கொண்டிருந்தது...
“அத்தான்... எங்க அத்தான்..... ஏன் வரலத்தான்... கதவை திறங்கத்தான்...” என்று ராகம் பாடினாள் ஆஷி என அழைக்கப்படும் ஆஷிகா...
“ஐயோ யாராவது பஞ்சு கொண்டு வந்து தாங்களேன்.... என் காதுல இருந்து ரத்தம் ஓவர் ப்ளோவில் வருது...” என்று அவளது பாடலை கிண்டல் செய்தாள் ஆது என அழைக்கப்படும் ஆத்விகா...
ஆத்விகாவை முறைத்த ஆஷிகாவை பார்த்து கிருத்தி
“ஏன் ஆஷி அவளை முறைக்கிற.... அவ எப்பவும் இப்படி ஒரு மொக்க ஜோக்கு தானே சொல்லுவா.... ஆனா என்ன இன்றைக்கு சரியான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கா... அதற்கு நான் அவளை பாராட்டியே ஆக வேண்டும்...” என்ற க்ருதிகாவிற்கு ஹைபை கொடுத்தாள் ரித்திகா...
“இதை நான் வழி மொழிகிறேன் மக்களே...” என்று இடையில் புகுந்து கொண்டாள் கேஷி என்றழைக்கபடும் கேஷிகா...
“என்ன கூட்டமா சேர்ந்து என்னை கலாய்க்கிறீங்களா??? அத்தான் இல்லைங்கிற தைரியத்தில் தானே இப்படி செய்றீங்க... இருங்க அவரு வரட்டும்...அப்போ இருக்குதுடி உங்க எல்லாத்துக்கும்...” என்று போலியாக ஆஷிகா முறுக்கிக்கொள்ள கேஷிகாவோ
“ஆஷி உனக்கு மட்டும் இல்லை... எங்க கூட மல்லுகட்டுனா அத்தானுக்கும் இதே நிலைமை தான்... அதனால கம்முனு இரு...”
“இருங்க பக்கீங்களா.... யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்.. அப்போ தெரியும் உங்களுக்கு...” என்ற ஆஷிகாவிடம் ரித்திகா
“ஏன் ஆஷி... எனக்கு ஒரு டவுட்டு... இங்க நாம மட்டும் தானே பேசிட்டு இருக்கோம்...இதுல பூனையும் யானையும் எங்கயிருந்து வந்தது..?? எனக்கு உன்னோட லாஜிக் புரியலை...??” என்று தன் அதிமுக்கிய சந்தேகத்தை ரித்திகா முன்வைக்க மற்ற அனைவரும்
“அதானே ....” என்று எடுத்து கொடுக்க அது தந்த கடுப்பில்
“அத்தான்..... இப்போ வெளிய வரப்போறீங்களா?? இல்லை நான் போய் சித்தி பெரியம்மா எல்லாரையும் கூட்டிட்டு வரவா??” என்று கதவை தட்டிக்கொண்டே கத்த அதில் கதவை திறந்தவனை பிறந்தநாள் கீதம் பாடி அனைவரும் தம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்...
“ஷாகர் அத்தான் இந்த க்ருத்தி,கேஷி, ரித்தி,ஆது எல்லோரும் என்னை கிண்டல் பண்ணுறாங்க அத்தான்... என்னன்னு கேளுங்க அத்தான்...” என்று பஞ்சாயத்தை அவனிடம் கொண்டு செல்ல ஆதுவோ
“அத்தான் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன்... ஏதும் சேதாரமான எங்ககிட்ட கேட்கக்கூடாது... இன்னைக்கு உங்க பர்த்டே வேற...இப்பவே சொல்லிட்டேன்...” என்று அவனை எச்சரிக்கை செய்ய ஷாகரோ இன்று அவர்கள் புல் போமில் இருப்பதை புரிந்து கொண்டு ஜகா வாங்கினான்...
“ஆஷிமா... அத்தான் பாவமில்லை.... அத்தானை விட்டுருமா...” என்று கெஞ்சினான் ஷாகர்...
“உங்களை நம்பி இதுங்க கிட்ட சவால் விட்ட எனக்கு இது தேவை தான்...” என்று தலையில் அடித்துக்கொண்டாள் ஆஷிகா..
“இதைதான் நாங்க முதலிலேயே சொன்னோம்.... நீ தான் எங்க அத்தான் வீராதி வீரர் சூராதி சூரர்னு சொன்ன.... இப்போ பார்த்தியா....இது தான் பெரியவங்க சொல்வதை கேட்கனும்னு சொல்லுறது.. சரி வா கீழே போகலாம்....” என்று ரித்திகா அழைக்க ஷாகர் சகிதம் அனைவரும் கீழே சென்றனர்..
அங்கு ஹாலில் அனைவரும் ஷாகரை எதிர்பார்த்திருக்க விழாவின் நாயகனோ தன் அத்தை பெண்களின் சகிதம் படிகட்டுக்களில் இருந்து கீழிறங்கினான்...
கீழிறங்கியவன் நேரே வந்து தன் அன்னை தந்தையின் காலில் வீழ்ந்து வணங்கிவிட்டு ஓமகுண்டத்திற்கு அருகில் சென்று அமர்ந்தான்..
அவன் அமர்ந்ததும் பூஜைகளை தொடங்கினார் ஐயர்... ஒருமணிநேரத்தில் பூஜை முடிவடைய அனைத்து சடங்குகளையும் முடித்துக்கொண்டு எழுந்தான் ஷாகர்...
பின் வீட்டுப் பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து வணங்கியவனை அனைவரும் ஆசிர்வதித்தனர்... காலை உணவை முடித்துவிட்டு பத்துமணியளவில் ஆபிஸ் கிளம்பிவிட்டான் ஷாகர்...
அவன் கிளம்பும் வேலையில் அவனை வழிமறித்த அவனது அத்தைப்பெண் படை அவனிடம்
“எங்க அத்தான் ட்ரீட்.கொடுக்காம போறீங்க... எங்களுக்கு ட்ரீட் எங்க??” என்று ரித்திகா அவனிடம் கேட்க
“இப்படி அஆபிஸ் கிளம்பிட்டீங்கனு உங்களை விட முடியாது.... எங்களுக்கு செட்டில் பண்ண வேண்டியதை செட்டில் பண்ணிட்டு போங்க...” என்று ஆத்விகா தொடர
“வாலுங்களா... உங்க விஷயத்துல ரொம்ப கவனமாக தான் இருக்கீங்க... இந்தா என்னோட டெபிட் கார்ட்... இப்போ வழியை விடுங்க....” என்று ஷாகர் செல்ல முற்பட
“அத்தான் ஈவினிங்.எங்க ட்ரீட்னு சொல்லாமல் போறீங்க....?? “ என்று ஆஷிகா கேட்க
“சாரிமா... இன்று என் ப்ரண்ட்ஸ் சில பேர் பார்ட்டி கேட்டுருக்காங்க... சோ நான் அவங்க கூட செலிபிரேட் பண்ணணும்... அதுனால எனக்கும் சேர்த்து நீங்களே செலிபிரேட் பண்ணுங்க... அதான் என்னோட கார்ட் உங்ககிட்ட இருக்கே...” என்றுவிட்டு அவர்கள் மேலும் கேள்வி கேட்கும் முன் அங்கிருந்து சென்றான்..
“ஆது எனக்கு இந்த அத்தான் மேல ஏனோ டவுட்டாவே இருக்குபா... இப்போ எல்லாம் நம்ம அத்தான்கிட்ட ஏதோ தேஜஸ் வந்த மாதிரியே இருக்கு... என்னமோ நடக்குது... அது மட்டும் தெளிவா தெரியுது..” என்று ஆஷிகா கூற
“ஆமா ஆஷி... இவ்வளவு வருஷமாக இல்லாம இப்போ எங்க இருந்து புதுசா பிரண்ஸ் கூட எல்லாம் பார்ட்டி போறாரு... சம்திங் ராங்....” என்று ஆதுவுடன் மற்ற மூவரும் ஆஷியின் கூற்றை ஒப்புக்கொண்டனர்...
ஆபிசிற்கு சென்ற ஷாகரிற்கு ஆபிஸில் வேலை பார்க்கும் அனைவரும் ஒரு சிறிய பார்ட்டி ஒன்று ஒழுங்கு செய்திருந்தனர்... அவனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக கம்பனி சார்பாக மலர்க்கொத்தொன்றை வழங்கினாள் அவனது பர்சனல் அசிஸ்டன்ட் ஆதிரா... ஒரு சின்ன சிரிப்புடன் ஒரு கள்ளச்சிரிப்பை கலந்து உதிர்த்து விட்டு பூங்கொத்த வாங்கியவனை அனைவரும் வாழ்த்தினர்... பின் கேக் கொண்டுவரப்பட்டு அவனை வெட்டச்சொல்லி கரகோஷம் எழுப்பி அவனை வாழ்த்தினர்.. கொண்டாட்டங்கள் முடிந்ததும் அனைவருக்கும் நன்றியுரைத்துவிட்டு தன் கேபினுக்கு சென்றான்...
அவன் சென்ற சிறிது நேரத்தில் கதவை தட்டிவிட்டு கையில் ஒரு தட்டுடன் உள்ளே வந்தாள் ஆதிரா..
“ஓய் பேபி... எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்ணுறது...” என்று அவளை பார்த்து கண்ணடிக்க
“சார் இது ஆபிஸ்.. நம்ம பர்சனல் ரிலேஷன்சிப்பை இந்த பிரமிசஸ்குள் எக்ஸ்ப்லிசிட் பண்ண வேண்டாம்..” என்று அவள் உணர்த்த
“ஓகே பி.ஏ மேடம் கூல்... டென்சன் ஆகாதீங்க.. சரி உங்க பாஸ்ஸாக கேட்குறேன்... ஏன் லேட்..”
“கேக் சர்வ் பண்ணிட்டு உங்களுக்கும் எடுத்துட்டு வர லேட்டாகிருச்சி சார்... சாரி....”
“கேக் கொண்டுவந்தீங்களே மேடம்.. அதை உங்க பாஸிற்கு கொடுக்கனும்னு தோன்றவில்லையா???”
“இந்தாங்க சார்..” என்று தன் கையிலிருந்த தட்டினை அவன் புறம் நீட்டினாள்..
தட்டை பிடிக்கும் சாக்கில் ஷாகர் அவள் கையினை பிடித்து இழுக்க அவள் அவன் மீது சரிந்தாள்... உடனடியாக விலக முயன்றவளை தடுத்த ஷாகர்
“பி.ஏ மேடம் உங்க பாஸிற்கு கிப்ட் ஏதும் இல்லையா?? உங்க பாஸ் அவரோட பர்த்டேக்கு உங்ககிட்ட இருந்து ஸ்பெஷல் கிப்ட் எதிர்ப்பார்க்குறாரு... நீங்க அதை பற்றி எதுவும் யோசிக்காமல் இருக்கீங்க.... உங்க பாஸ் பாவமில்லையா...” என்று அவள் செவிகளில் அவன் ரகசியம் பேச அதில் கண்மூடி மயங்கி நின்றவள் கண்விழித்து பார்த்த போது அவளது இதழ்களில் இருந்த அவனது பார்வை அவன் விரும்பும் பரிசை அவளுக்கு உணர்த்தியது... ஆனால் அதற்கான தகுந்த காலம் இதுவல்ல என்று அவளது மனசாட்சி அவளுக்கு உணர்த்த துள்ளி எழுந்தவள் அவனை விட்டு தள்ளி நின்றாள்....
“சார்... உங்களுக்கான கிப்ட்டை ஆபிஸ் முடிந்ததும் தாரேன்... இப்போ ஆளை விடுங்க... “ என்றவள் அவனது அறையிலிருந்து வெளியேறினாள்..
ஷாகரோ
“கள்ளி.. இப்படி என்னை சுத்தலில் விடுறதே இவளுக்கு வேலையாப்போச்சு... பிரபோஸ் பண்ணபோதும் அப்படி தான் பதில் சொல்லாமல் அவ பின்னுக்கு சுத்த வைத்தாள்... இப்பவும் அதையே பண்ணுறா... இரு ஆது பேபி.. ஒருநாள் என்கிட்ட வசமா சிக்குவ.. உன் பாஸ் யாருனு உனக்கு தெரியும்...” என்று தன்னிடம் கண்ணாம்பூச்சியாடும் தன் காதலியை அர்ச்சித்தவாறு தன் வேலைகளை கவனிக்கத்தொடங்கினான்..