நூல் அறுந்து காற்றுக்கு தக்கபடி அடித்து செல்லபட்ட பட்டங்களை போல இதுவரை அலைபாய்ந்துக் கொண்டு இருந்தவர்களின் வாழ்க்கை ஒரே நேர்க்கோட்டில் பயணத்தை மேற்கொண்டு இருந்தது. அவனுக்காக இரவெல்லாம் தூங்காமல் பயத்துடனே முழித்துக்கொண்டு இருந்தவளுக்கு தொடர் பரிட்சை நடந்துக்கொண்டு இருந்தது. இன்றும் பரிட்சை தான் அழுதுக்கொண்டே இருந்ததாலும், பயம், சோர்வு, அழுத்தம் என்று அனைத்தும் அவளை தாக்க அழுதுக்கொண்டே அவன் மேலேயே சாய்ந்து இருந்தவளை மெல்ல உறக்கம் தழுவிக்கொள்ள அவளை பூவைப்போல கட்டிலில் படுக்க வைத்து இருந்தான் விசாகன்.
தன்னை கண்டதும் இருக்கும் இடம் சூழ்நிலை என அனைத்தும் மறந்து தன்னை அனைத்துக்கொண்டு அழுதவளின் முகம் வாடிப்போய் இருந்தது. தில்லை மற்றும் சுந்தரனின் மூலம் இரவு அவள் தவித்த தவிப்பை அறிந்தவன் அவளின் வெண்டை விரல்களில் தன் அச்சாரத்தை பதித்து தலையை வருடி விட்டான். அவனுக்கும் துளி உறக்கம் இல்லை காயம் சிறிது தான் என்றாலும் மருந்தின் வீரியம் வேறு அவனை கொஞ்சம் சோர்வுடன் காட்டியது, மெல்ல கண்களை மூடியவனின் கருவிழிகளுக்குள் அவளை முதன் முதலில் கண்ட காட்சிதான் ஓடியது தன்னை அறியாமலேயே ஒரு இளமுறுவள் உண்டாக இனியும் தூங்க முடியாது என்று எழுந்து அமர்ந்து விட்டான்.
அவள் படுத்து இரண்டரை மணி நேரம் இருக்கும் "சனா சனா" எந்திரிடா என்று அவளை எழுப்பியவன் குரலில் அடித்து பிடித்து எழுந்தவள் "நான்…. எப்படி தூங்கினேன்" என்று கண்களை கசக்கிக்கொண்டே கேட்டாள்.
"அந்த ஆராய்ச்சியை அப்புறம் பாத்துக்கலாம்... முதல்ல முகம் கழுவிக்கிட்டு வந்து இந்த காபியை குடி" என்றான் விசாகன். அவளை பார்த்துக்கொண்டே பேசியவனிடம்,
"நீங்க வேற விளையாடாதிங்க ஹீரோ இன்னைக்கு எக்சாம் இருக்கு புக்கையே தொடலை... கடவுளே, நேரம் வேற ஆகுது" என்றபடி கட்டிலை விட்டு பதற்றத்துடன் இறங்கியவள் தடுமாறிட பிடிமானத்திற்கு பக்கத்தில் இருந்தவனின் அடிபட்ட கையை தெரியாமல் பிடித்து விட்டாள்.
"ஸ்". என்று வலியில் கையை பிடித்தாலும் "ஹே… பாத்து சனா என்ன அவ்வளவு அவசரம் எங்கேயாவது விழுந்து வாரி வைக்கப்போற" என்று அவளுக்காக விசாகன் அக்கறையுடன் கூறிட
"அச்சோ, இறங்கற அவசரத்துல தெரியமா கைய புடிச்சிட்டேன் வலிக்குதாங்க... சாரிங்க... சாரி" என்று அவனின் கையை பற்றி வருடிக்கொண்டு கூறியவளுக்கு அவனுக்கு வலிக்குமே என்று நினைக்கையில் கண்கள் கலங்கி விட்டது..
"அவளின் பதற்றத்தையும் கலங்கிய கண்களையும் கண்டவன் அவளை சமாதனம் செய்யும் பொருட்டு "அய்யோ…. சனா இங்க பாருடி அவ்வளவா வலிக்கல... தெரியாம தான்டி பட்டுச்சி... வேணும்னேவா செய்த , இதுக்கு எல்லாம் அழுவியா? இங்க பாரு? என்னை பாரு" என்றிட அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் "
சாரி, சாரி…" என்று கூறியவளின் எண்ணத்தை திசை திருப்ப "ஆமா உனக்கு பரிட்சைக்கு நேரமாகுதுல" என்று ஞாபகபடுத்த அவனின் கையை பார்த்துக்கொண்டே "எனக்கு உங்களை விட எதுவும் பெரிசு இல்லை ஹீரோ… இன்னைக்கு இல்லனா அப்புறம் சேர்த்து எழுதிக்கிறேன்... உங்களுக்கு இன்னும் வலி இருக்கா?" என்று கேட்கையில் குரலும் கலங்கியே வந்தது.
அந்த வார்த்தைகளை கோட்டவனுக்கோ அவளை அள்ளி அணைத்து அப்படியே அவனுள் இறுக்கி கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவளை வேண்டாம் என்று ஒதுக்கிய காலத்திலும் இதே அன்புடன் தானே அவனை சுற்றி சுற்றி வந்தாள். ஒவ்வொரு முறையும் அவளுடைய காதலில் தன்னை பிரம்மிக்க வைத்துக்கொண்டு இருந்தவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.
என் வாழ்க்கையை மாற்றி எழுத வந்தவள்!
என்னையும் முற்றிலும் மாற்றியவள்! தனக்குள்ளயே சிரித்துக்கொண்டான் அட நானும் கவிஞன் தான் பா என்று எதுவும் பேசாமல் அமைதியாய் இருப்பவனை நிமிர்ந்து பார்த்தவள் "என்னங்க" என்றிட எதுவும் கூறாமல் அமைதியாய் இருக்க "என்னங்க உங்களுக்கு வலிக்குதா " என்று உலுக்கினாள்.
"ஹாங்" என்று திடுக்கிட்டு விழித்தவன் "என்ன சனா? என்ன கேட்ட?" என்றான்
"என்னத்த கேட்டேன்… உங்களுக்கு வலிக்குதான்னு தான் கேட்டேன்" என்றிட்டதும்
கண்ணை சிமிட்டி இல்லை என்று புது மொழி பேசியவனை விழி விரித்து பார்த்தாள். என்ன என்பதாய் அவன் புருவம் உயர்த்த எச்சிலை கூட்டி விழுங்கியபடியே இல்லை என்று இடவலமாக தலை ஆட்டியவள் அவன் கண்களை காண முடியாமல் எழுந்து குளியலறைக்குள் ஓடி மறைந்து விட்டாள். அவளுக்காக கொண்டு வந்த காபி ஆறி போய்விட அமுதாவிடம் வேறு கொண்டு வந்து அவளிடம் கொடுக்க சொன்னான்.
குளித்தும் கூட என்னவோ உடல் அசதியாய் இருந்தது குடித்த காபியும் அவளுக்கு சேரவில்லை போல அனைத்தையும் வெளியேற்றியவள் தூக்கமின்மையால் வந்த அசதி அதனால் தான் இந்த வாந்தியும் என்று தனக்கு தானே நினைத்து அவனிடம் இதனை பற்றி கூறிடாமல் அவனுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை கொடுத்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.
இன்றும் சுந்தரனை வரச்சொல்லி அவளை அனுப்பி வைத்திருந்தான்.
அவனே கொண்டு விட வேண்டும் என்று ஆசைதான் ஆனால் அவள் கட்டாயம் ஒய்வு எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி பிடிவாதமாக கூறிய பின் சரி என்று ஒத்துக்கொண்டவன் சுந்தரனை அனுப்பி இருந்தான். கூடத்தில் நாற்காலியில் அமர்ந்து இருந்தவனுக்கு எண்ணம் எங்கேங்கோ பயணித்து இறுதியாய் அவனுடைய தேவதையிடமே வந்து அடங்கியது.
விசாகன் அமரந்திருப்பதை பார்த்த தில்லை "என்னய்யா உட்காந்து இருக்க??? சித்த ஓய்வு எடுக்கறது" என்று அவன் அருகில் வந்து அமரவும்.
"படுக்கனும் அப்பத்தா சரி நீ சாப்பிட்டியா" என்றான் அவரின் கையில் இருந்த தூக்கை பார்த்தபடி
"நான் திங்காமலா! அது எல்லாம் ஆச்சு…. எனக்கு என்ன குறை இருக்கு என் பேத்திக இருக்கையிலே... நான் திங்காம இருந்தா சும்மா இருப்பாங்களா? அதுவும் உன் பொண்டாட்டி அவ்வளவு தான் எனக்கு அறிவு இருக்கான்னு, ஆரம்பிச்சி என்னால தான் நீ அடங்காம இருக்கறன்றதுல முடிப்பா" என்று சிரித்தவர் "நம்ம முத்து பொஞ்சாதிக்கு உடம்புக்கு முடியல, அதான் சாப்பாடு கொடுத்து விட எடுத்து வந்தேன்" என்றவர் முத்துவை அழைத்து கொடுத்து அனுப்பி இருந்தார்.
தில்லை தேவாவை குறிப்பிட்டு சொல்லவும் அவளுடயை நினைவில் சன்ன சிரிப்புடன் அவன் இருப்பதை பார்த்தவர் மனதில் பெரும் பூரிப்பு எப்போதும் சிடுசிடுவென கோபத்தோடு இருப்பவன், இப்போதேல்லாம் குளிர்ந்த மழையாய் இருப்பதை பார்க்கவும் மனது குளிர்ந்து விட்டது, இதற்காக தானே இத்தனை வருடம் எல்லா தெய்வங்களையும் தொழுதுக்கொண்டு இருந்தார். மனம் தன்னை போல கடவுளுக்கும் இதற்கு காணரமான தேவாவிற்கும் சேர்த்து நன்றியை கூறியது.
தன் முகத்திலேயே நிலைத்திருந்த தில்லையின் கண்களை கவனித்த விசாகன் "என்ன அப்பத்தா ஏதாவது சொல்லனுமா? முகத்தையே பாக்குற? என்றான்.
"ஒன்னுமில்ல யா உன் உருவத்துல உன் அப்பனை பாக்குறேன்... நான் பெத்தவன்,என்னை பாத்துக்க அவன் பெத்தவனை எனக்கு விட்டுவெச்சிட்டு போய் இருக்கான்…. உன்னை பாத்துக்க நல்ல மருமகளை தேடி வச்சிருக்கா எம் மருமக" என்று நெகிழ்ந்து அவர் கண்கள் கலங்கி விட
"பச் அப்பத்தா என்ன இது கண்ணை துடை" என்று கூறியவன் "நல்ல விஷயம் பேசலாம்னு பார்த்தா இப்படி கண்ணு கலங்குற" என்று கடியவும்.
"இல்லையா நான் அழுகல… இது பூரிச்சி போய் வந்த கண்ணீர் யா என்று கூறி கண்களை துடைத்துக் கொண்டவர் "என்ன நல்ல விஷயம் சொல்லு யா?" என்று அவளுடன் முன்னால் நகர்ந்து வந்து உட்கார்ந்து கேட்க
"நம்ம அமுதாவுக்கு வரன் பாக்கலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற அப்பத்தா" என்றான் அவரின் விருப்பம் கேட்க
கண்களை துடைத்தபடியே 'பூ இம்முட்டு தானா,நான் ஏதோ நீ என்று கூற வந்தவர் தேவா படிப்பதை மனதில் நிறுத்தி 'தானும் மற்றவர்களை போல குழந்தைகளை நினைத்து விட்டோமே' என்று தன்னை திட்டிக்கொண்டவர் "பாக்கனும்யா அவளுக்கும் ஒரு நல்லா வாழ்க்கை அமைஞ்சா நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்" என்று மனதில் இருப்பதை வாய் தவறி கூறிவிட்டார்.
தன் பேச்சுக்கு அவன் சுடும் பார்வையில் சற்று சுதாரித்தவர் "எம் பேரன் பேத்திகளுக்கு பொறக்க போற பிள்ளைகளை கொஞ்சிக்கிட்டு அப்படி ஓரமா இருப்பேன்னு சொல்ல வந்தேன்" என்று மாற்றி கூறவும் அவனுக்குமே தில்லையின் திடீர் மாற்றம் கண்டு சிரிப்பு வந்துவிட்டது. அதே மனநிறைவுடன் "சரி அப்பத்தா ஜோசியரை வரசொல்லி ஜாதகத்தை கொடுத்து விடு, நானும் அவர் கிட்ட பேசிக்கிறேன்... காசு பணத்தை விட குணம் ரொம்ப முக்கியம்னு சொல்லிடு அப்பத்தா... அமுதா போற இடத்துலையாவது மனசு நிம்மதியா ஒரு வாழ்க்கைய வாழனும்" என்றவன் தனது அறைக்கு சென்றான்.
ஜோசியரை அழைத்து ஜாதகத்தை கொடுத்த தில்லை பொன்னியை அழைத்து வயலில் வேலை செய்பவர்களுக்கு மோரை கலக்க சொன்னவர் பேரனிடம் கூறிவிட்டு வயற்காட்டிற்கு நடையை போட்டார்.
"என்ன புள்ள ஏன் ஒரு மாதிரியா இருக்க?" என்ற மேகலாவிற்கு "தெரியல கலா... ஏதோ கொஞ்சம் அசதியா இருக்கு நைட் வேற அவரு வீட்டுக்கு வரலியா தூக்கமே இல்ல அதான் போல" என்று காரணம் கூறிட
"அப்படியா சரி கொஞ்சம் நேரம் கண்ண மூடி படு.. மேம் வந்தா சொல்றேன்" என்று அவளை தோள் மேல் சாய்த்துக்கொள்ள "வேணா கலா, நைட்டும் படிக்கல காலையிலும் படிக்க முடியல" என்று புக்கை திறந்து வைத்தாள்.
"புக்கை மூடி வை புள்ள... இத்தனை நாள்ல படிக்காதை இப்ப ஒரே மூச்சில படிச்சிடுவியா?" என்று அவளின் புத்தகத்தை எடுத்து பைக்குள் வைத்தவள் "கொஞ்ச நேரம் கண்ணை மூடு" என்று அதட்டிய பிறகே தேவா கண்களை மூடினாள். தேர்வை எழுதிக்கொண்டு இருந்தவளுக்கு தலைவலி ஆரம்பமாகி இருந்தது எப்படியோ சமாளித்து தேர்வை எழுதியவளுக்கு எப்போதடா வீட்டிற்கு செல்வோம் என்று இருந்தது.
சாமளித்து கொண்டு வீட்டிற்கு வந்தவளுக்கு லேசாய் உடல் சுட்டது கூட தலைவலியும் வேறு வாட்டி எடுத்து. அவள் வரும் நேரம் விசாகன் வீட்டில் இல்லை பஞ்சாயத்து யூனியன் வரை ஏதோ அவசர வேலை விஷயமாக சென்றிருந்தான் என்று தெரியவர அதுவே அவளுக்கு சாதகமாக போய்விட்டது. அவன் வருவதற்குள் மாத்திரையை போட்டுக்கொண்டாள் தேவா.
அவளுக்கு விசாகனிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை தனக்கு காய்ச்சல் என்று கூறிவிடுவாள், ஆனால் அதன் பிறகு அவளை குண்டுகட்டாக கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுவானே, ஏற்கனவே ஒரு முறை அதைதானே செய்து இருந்தான். இன்றும் அந்த ஊசியை நினைக்கையில் இந்த உடல் வலியே போதும் என்று நினைத்துவிட்டாள் இந்த கிறுக்கு… ஓரளவு தலைவலியும் காய்ச்சலும் மட்டுப்பட்டிருந்தது. சொல்லப் போனால் அது வந்த சுவடே இல்லாமல் போய் இருந்தாலும், இந்த உடல் அசதி மட்டும் அப்படியே இருக்க கண்கள் ஒருவித சோர்வை பெற்றிருந்தது... அதே சமயம் வெளியே சென்றிருந்த விசாகனும் வீட்டிற்கு வந்து இருந்தான்.
அவனை கண்டதுமே தன் சோர்வை அவனிடம் காட்டிக்கொள்ள விரும்பாதவள் மலர்ந்த முகத்துடனே வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் அவன் எதிரே நின்றாலும், இப்படி அடிப்பட்டு இருக்க ஒரு நாள் ஒய்வை கூட எடுக்காமல் அலைந்து திரிகிறானே என்று கோபம் கொண்டவள் "எங்க போய் இருந்திங்க? அதுக்குள்ள ஊரை பாக்க கிளம்பியாச்சா? நீங்க என்ன சின்ன குழந்தையா? உங்க பின்னாடியே ஆள் சுத்திக்கிட்டு இதை பண்ணாதே இதை செய்யாதேன்னு சொல்ல…" என்றாள் படபடவென
வந்ததும் விசாகனை தேடியவள் அவன் இல்லை என்றதும் சோர்வுடன் இவ்வளவு நேரமாய் இருந்த இடமே தெரியாமல் அறைக்குள்ளயே சுத்திக்கொண்டு இருந்தவள் புருஷனை கண்டதும் மிரட்டுவதை பார்த்த தில்லைக்கு வியப்பும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
தன் உயரத்திற்கு அவள் தோரணையுடன் நின்று திட்டுவதை சுவராஸ்யத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு இதழில் சிறு புன்னகையும் குடிகொள்ள
அவன் சிரிப்பை கண்டவள் "என்ன சிரிப்பு... நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க எனக்கென்னன்னு சிரிச்சிட்டு இருக்கிங்க... அடிப்பட்டு இன்னும் முழுசா ஒரு நாள் கூட தாண்டல அதுக்குள்ள ஊர் நிலவரத்தையும் தொழில் நிலவரத்தையும் தெரிஞ்சிக்க போயாச்சில்ல... என்னதான் நினைச்சிட்டு இருக்கிங்க உங்கள பத்தி" என்று சிறிதும் இடைவெளியின்றி பேசியவளின் உதட்டசைவில் மேல் பித்தானாலும்
'யாரை நினைப்பேன் எல்லாம் என் ஆளைத்தான்' என்று அவளுடைய கேள்விக்கு முனுமுனுத்தவன் கூடத்தில் இருந்த தில்லையை பார்க்க அவரும் சிரித்தபடியே பேத்தியிடம் பேரன் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சியை சுவரஸ்யமாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். "சரி போனது தப்பு தான் அதுக்கு இப்ப என்ன தான் பண்ணனும்" என்றான் தில்லையின் பக்கத்தில் அமர்ந்தபடி அவளிடம் சரணாகதி ஆனதுபோல்
"இதையும் என்கிட்டயே கேளுங்க?" என்று அதற்கும் அவனிடம் காய்ந்தவள் "நீங்க வயசானவுங்க தானே பாட்டி? ஊர்ல இருக்க நியாயத்தை எல்லாம் பேசுவீங்க.…. இவர் கிட்டமட்டும் அடங்கி ஒடுங்கி போய்டுவிங்களா... அவர் வெளியே போகும் போதே ஏன் எதுக்குன்னு கேள்வி எல்லாம் கேட்க மாட்டிங்களா…" என்று தில்லையை பந்தாடியவளின் வார்த்தைகள், "அப்படி உங்களை யாரும் கேக்காதபடி கண்ணாலையே மிரட்டி மாத்தி வைச்சி இருக்கிங்க" என்று கணவனையும் பாரபட்சம் இன்றி பதம் பார்த்தது…
"அய்யா ராசா நீ எது செய்தாலும் இனி என் தலை உருளும் போல" என்று தில்லை பேரனின் காதை கடிக்க "இங்க மட்டும் என்னவாம் அப்பத்தா... கேள்வி பாத்தல்ல விளாசி எடுக்குறாளே" என்று அதனையும் ரசித்தே கூறி இருந்தான் விசாகன்.
இருவரின் மெல்லிய பேச்சினையும் பாரத்தவள் அதை கேட்க முடியாத கடுப்பில் "அங்க என்ன முனுமுனுப்பு? அப்போவே அடக்கி வைச்சி இருந்தா இந்த சண்டியரை இந்நேரம் வழிக்கு கொண்டு வந்து இருக்கலாம்…"
"எல்லாத்துலையும் ஒரு அதட்டல் மிரட்டல் போட்டு உங்களையே கைகுள்ள தானே வைச்சி இருக்காரு" என்று தில்லையிடம் காய்ந்தவள் கணவன் தன்னையே பார்ப்பதை கண்டு
"போங்க போய் கொஞ்சமாச்சும் உடம்பை பாருங்க" என்று அவனையும் அறைக்கு அனுப்பியவள் தானே அவனுக்கு ஒரு பழசாற்றையும் கலந்து எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்.
இவ்வளவு நேரம் மழையடித்து ஓய்தது போன்று இருந்தது அங்கு இருந்தவர்களுக்கு இதையெல்லாம் இமைகொட்டாமல் ஒரு ஓரமாய் நின்று பார்த்துக்கொண்டு இருந்த அமுதா தில்லையிடம் "அம்மத்தா ஒரு நிமிஷம் என்ன நடந்துன்னே புரியல!!! மாமா முகத்துல எவ்வளவு சந்தோஷம் பாத்திங்களா!! தேவா பேச பேச அவரும் அவளுக்கு கட்டுபட்டு நின்னது பாக்கவே கண்கொள்ளா காட்சியா இருந்தது... எல்லாரையும் அடக்கி ஒடுக்கி வைச்சி இருந்தவர் எப்படி மாறிட்டார்" என்று அதிசயத்தை கண்டது போல குரலில் அத்தனை ஆச்சிரியத்தை வைத்து கூறினாள் அமுதா.
அவரின் முகத்திலும் மகழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்து இருக்க "எங்க உன் மாமானும் ஒத்த மரமா நின்னுடுவானோன்னு மனசு கிடந்து தவிச்சது கண்ணு... எந்த சாமி கண்ணை தொறந்துதோ அந்த புள்ள வந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமா சந்தோஷத்தை திருப்பிடுச்சி" என்றவர் 'தன் பேத்தியும் இது போல ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கைபட்டு சந்தோஷமாய் வாழ வேண்டும்' என்று அந்த சாமுண்டி தாயை மானதர வேண்டிக்கொண்டு அவளிடம் இன்று விசாகன் ஜோசியரை அழைத்து ஜாதகம் பார்க்க சொன்னதை கூறினார்.
"அப்பத்தா... நான்... எனக்கு…" என்று தயங்கியவளை
"மூச் வாயத் தொறந்து எதையும் சொல்லிடாத ஆத்தா… உனக்கு ஒரு நல்லதை பண்ணா தான் இந்த கட்டை போறப்போ நிம்மதியா போகும்…" என்று மறுபேச்சு பேசமுடியாதவாறு அவளின் வாயடைத்தவர் தான் இங்கு அமர்ந்து இருந்தால் வேறு ஏதாவது பேசி அதை மறுத்து விடுவாளோ என்று அங்கிருந்து எழுந்து சென்று விட அமுதா சோர்ந்த மனதுடன் அறைக்குள் சென்றாள்…