விடிய விடிய தொலைந்த தூக்கம் விடிந்த பின் தான் அவர்களை தழுவியது... வெள்ளிக் கொலுசின் ஓசைக்கும், கண்ணாடி வளையல்களின் சிணுங்களுக்கும் சிறிது ஓய்வை கொடுத்திருந்த வேலையில், ஜன்னல் திரையின் இடைவெளியில் ஊடுருவிய சூரிய கதிர்களின் தழுவலில் கண்விழித்த விசாகன், மனைவியை விட்டு எழுந்துக்கொள்ள மனம் இல்லாமல் இமைகளை மூடி, அவளை அணைத்தாற்போலவே படுத்திருந்தான்.
கணவனின் கைவளைவில் தலை வைத்து இருந்தவளுக்கோ மெல்ல உறக்கம் கலைய விழி திறந்தவளின் அதரங்கள் இரவின் தாக்கத்தில் புன்னகையை சூடியது, விசாகனின் முகம் பார்த்தவள் அவன் உறங்குகிறானோ, என்று நினைத்து அவனின் உறக்கம் கலையாதவாறு மெல்ல விலகியவளை சட்டென இழுத்து அணைத்துக்கொண்டவன், "எங்கடி போற" என்று ஏக்கத்துடன் வினவியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
இந்த திடீர் தாக்குதலில் அதிர்ந்து பார்த்தவளின் இமைகள் வெட்கத்துடன் மூடிக்கொண்டது. அவனுக்கு எப்போதும் தேவாவின் அருகாமை வேண்டும், இனி ஒரு நொடி கூட அவளை விட்டு பிரிந்திருக்க மனமில்லாதவனுக்கு அவள் விலகி செல்வது அறவே கசந்தது.
அவன் அணைப்பிலும் அதில் தெரியும் வேகத்திலும் நெளிந்தவள் "என்ன இது? விடுங்க விடிஞ்சி எவ்வளவு நேரம் ஆகுது பாருங்க... வேலைக்கு ஆள் வந்து இருக்க போறாங்க" என்று மெத்தையிலிருந்து எழ முயன்றவளை விடாமல் தன் மடிதனில் அமரவைத்தவனின் முகம் சட்டென வாடியது
இதுவரை சிரிப்பும் கேலியுமாய் இருந்தவனின் முகம் வருத்தத்தில் தோயவும் அவனிடம் நெருங்கி அமர்ந்தவள் தன் விலகலால் தான் இப்படியோ என்று உள்ளுக்கும் பதறிப்போனவளாய் "என்னங்க ஏன் வருத்தமா இருக்கிங்க?" என்றாள்
அவளின் கரங்களை தன் கரங்களுக்குள் பொதிந்துக் கொண்டவன் "சா.. சாரி சனா" என்றான் குற்றவுணர்வுடன்.
"எதுக்கு? ஏன் சாரி எல்லாம் கேக்குறிங்க?..." என்றாள் இப்போது என்னவோ என மனம் படபடவென அடித்துக்கொண்டது வேற ஏதாவது கூறப்போகிறானோ என்று
"அது வந்து நீ படிக்கிற... உன் படிப்பை காரணமா, வைச்சித்தான் உன்னை நெருங்காம இவ்வளவு நாளா தள்ளியே இருந்தேன்… ஆனா நேத்து ஒரு வேகத்தில்" என்று மேலும் பேச முடியாமல் தயங்கியவன் அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, சாரி" என்று முடிப்பற்குள் அவனை இறுக்கமாக அணைத்து அவன் இதழை தன் இதழால் சிறை செய்து இருந்தாள்.
மெல்ல அவனை பிரிந்து ம்கூம் என்று தலையை இடம்வலமாய் ஆட்டியவள் "உங்களை விலகி இருந்தா தான் என் படிப்பு டிஸ்டர்ப் ஆகும்... உங்களை நினைச்சே எல்லாத்தையும் விட்டுடுவேன் ஹீரோ" என்று அவன் கண்களை சந்திக்க நாணம் கொண்டவளாக முகம் திருப்பிக்கொண்டாள்.
அவளின் வார்த்தைகளும் முக திருப்பலும் அவனுக்கு புது சுவராஸ்யத்தை கூட்ட "இந்த வெட்கமும் பேச்சும் தானே என்னை இன்னும் உன்கிட்ட இழுக்குது" என்று அவளை தன் புறம் திரும்பினான்.
செந்நிறமாய் சிவந்தவளின் தேன் சுலைகளை கொள்ளையிட்டவன் மீண்டும் அவளையும் கொள்ளை கொண்ட பின்பே விட்டான்.
"நீங்க ரொம்ப மோசம்... போங்க"
அவள் பேச்சில்உல்லாசமாய் சிரித்தவன் "எவ்வளவு மோசம்" என்று கண்ணடித்து கேட்டு அவளை இன்னும் சிவக்க வைத்தான் அவள் கணவன்.
"உங்களை நம்பவே கூடாது வெளியே முரட்டு பீஸ், உள்ளே அப்படியே அப்போசிட் சரியான கல்லூளி மங்கன்" என்று இதழ் வளைத்து அவனை சீண்டி எழுந்தவளை பிடிக்கும் நேரம் வாசலில் கதவை தட்டும் சத்தம் கேட்கவும், அவசரமாக பின்பக்கம் இருந்த குளியலறைக்குள் ஓடி மறைந்தாள் தேவா.
"ஏய் நில்லுடி" என்று பின்னே செல்ல பார்த்தவன் கதவு தட்டும் ஓசை மீண்டும் தொடரவே யார் என பார்க்க சென்றான்.
வாசலில் நின்றிருந்த முத்து, தில்லை கொடுத்து அனுப்பியதை கொடுக்கவும் அதை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவன் நேரம் ஆவதை உணர்ந்து சீக்கிரமே தேவாவுடன் கிளம்பியவன் விட்டிற்கும் வந்து சேர்ந்தான்.
அமுதாவின் திருமண பத்திரிக்கை வரவும் தில்லை குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வரவேண்டும் என்றார்
தேவா, விசாகன், அமுதாவுடன் முதல் பத்திரிக்கையை குலதெய்வத்திற்கு வைத்து வணங்கிவிட்டு வரவும் மனதிற்கு அத்தனை நிம்மதி தில்லைக்கு,
திருமணம் என்ற ஒன்று தன் பேத்திக்கு நடக்குமா? நடக்காதா? அவள் சம்மதிப்பாளா? என்று கவலைக் கொண்டவருக்கு இதோ பேத்தியின் கல்யாண பத்திரிக்கையை கண்ணார பார்த்துவிட அதிலேயே பாதி தெம்பு வந்திருந்தது அந்த பெரியவருக்கு .
குலதெய்வ வழிப்பாட்டிற்கு பின் சுந்தரன் குடும்பத்திற்கு சம்மந்தி முறை பத்திரிக்கை வைக்க சென்று வந்த விசாகன் அடுத்ததாக வந்து நின்ற இடம் தேவாவின் தகப்பனார் வீடு….
தேவா அவனிடம் சொல்லவில்லை என்றாலும் கூட மனைவியின் மனதை பற்றி அறிந்து வைத்திருந்தான். என்னதான் தான் நன்றாக பார்த்துக் கொண்டாலும் பெற்றவர்களின் நினைவும் உடன் பிறந்தவனின் நினைவும் அவளை வாட்டுவதை அறிந்துக் கொண்டதனால் சௌந்தரலிங்கம் வீட்டிற்கு வர முடிவெடுத்து இருந்தான்.
வீட்டு வாசலில் வெளிவேலையில் இருந்த மரகதம் சற்று துரத்திலேயே விசாகனின் கார் வருவதை பார்த்தார். காரிலிருந்து விசாகனும் தில்லையும் இறங்கி வருவதை கவனித்து விட அங்கிருந்த குழாயில் கையை கழுவியபடியே வந்தவர் "வாங்க மா... வாங்க மாப்பிள்ளை.." என்று வரவேற்று உள்ளே அழைத்தார்.
அவர் அழைத்ததும் "ஏத்தா மரகதம் எப்படி இருக்க?... வீட்டுக்கு ஒருக்கா வர்றது…." என்று மரகத்தினுடன் பேசியபடி தில்லை உள்ளே சென்று இருக்க, பின் தங்கி நடந்து வந்த விசாகன் தனக்கு ஏற்பட்ட முன் அனுபவத்தில் வாசலில் தயங்கியபடி நின்றவனை கண்டவர் "எய்யா அங்கயே நிக்குற? உள்ள வாயா…" என்றதும் தயக்கத்தை விட்டெறிந்தவனாக உள்ளே வந்தான் விசாகன்.
வந்தவர்களுக்கு தண்ணீரை எடுத்து வந்து உபசரித்தவர் "செத்த இருங்க மா…. இதோ வந்துடுறேன் மாப்பிள்ளை…" என்றவர் உடனே கணவருக்கு அழைத்து விட்டு அவர்கள் வந்திருந்த விஷயத்தை கூறிட தில்லை என்ற பெரிய மனுஷியின் பெயரில் சீக்கிரமே வீடு திரும்பி இருந்தார் சௌந்தரலிஙகம்.
"இதோ இப்ப வந்துடுவாங்க... தோப்புல கொஞ்சம் வேலை... அதான், வெள்ளனவே போயிட்டாக" என்றவர் அவர்களுக்கு குடிக்க காபியை கொண்டு வந்து நீட்டினார். "ஆத்தா எதுக்கு இப்படி பதறுற சித்த உக்காறேன்…. நீ அல்லாடுறது எனக்கு சங்கடமா இருக்கு" என்றவரின் அருகில் சென்ற மரகதம் "வராதவங்க வந்து இருக்கிங்க... அந்த சந்தோஷமே எனக்கு இப்படி ஆகுது... அதை விடுங்கமா நீங்க எப்படி இருக்கிங்க…., தேவா எப்படி இருக்கா…?" என்றதும்
அதில் சிரித்தவராக "நல்லா இருக்கேன்த்தா... என் பேத்தியும் நல்லா இருக்கா… என்ன நீ இல்லையேன்ற ஒரு குறைதான் அவளுக்கு" என்றவர் "என் பேத்தி மருமகளா, அந்த வீட்டுக்கு வந்த நேரம் எல்லா நல்ல விஷயமும் நடக்குது" என்று தேவாவை பற்றி சிலாகித்து கூறிட பெற்றவராய் மரகதத்திற்கு உச்சி குளிர்ந்து போனது.
அதற்குள் சௌந்தரலிங்கமும் வந்துவிட மரியாதை நிமித்தமாய் எழுந்து நின்றவனிடம் கை கூப்பி "வாங்க தம்பி... வாங்க உட்காருங்க…" என்றார் முகம் திருப்பாமல், அவரும் கேள்வி பட்டுக்கொண்டு தானே இருக்கிறார் மகள் வாழும் வாழ்க்கையை அப்படி ஒரு நிறைவான வாழ்க்கையை கொடுக்கும் மாப்பிள்ளைக்கு இந்த அளவு மாரியாதை கூட கொடுக்கவில்லை என்றால் எப்படி என்று நினைத்துதான் முகம் திரும்பாமல் பேசினார். ஆனாலும் கல்யாண விஷயத்தில் இன்னும் விசாகன் மேல் அவருக்கு கோவம் இருக்கத்தான் செய்தது அது கௌரவம் சம்மந்தப்பட்டதாச்சே உடனே விட்டுவிட முடியாமல் மருகினார்.
"வாங்க மா" என்று தில்லையை அழைத்து வணக்கத்தை வைத்தவர் "மரகதம், காபி போட்டியா" என்றிட்டார்
துணின் பக்கம் நின்றபடியே "கொடுத்துட்டேனுங்க" என்றார். என்ன நடக்கப்போகிறதோ என்று அவருக்குள் பயபந்து உருண்டுகொண்டு இருந்தது.
பூ பழம் வெற்றிலை பாக்கு இனிப்பு என்று அவர்கள் கொண்டு வந்திருந்த தட்டை பார்க்கவும் அமுதாவிற்கு கல்யாணம் என்று அரசல் புரசலாய் விஷயம் கேள்விபட்டிருந்தார். அதற்குத்தான் வந்திருப்பார்கள் என்று நினைத்திட அவர் நினைத்தது போலவே தில்லையும் மரகதத்திடம் அமுதாவின் கல்யாண விஷயம் பேசிக்கொண்டே இருந்தார்.
சிறிது நேர அமைதிக்கு பின் விசாகனே மௌனத்தை கலைத்து பேச ஆரம்பித்தான். "அய்யா நீங்களும் அம்மாவும் சேர்ந்து நில்லுங்க" என்றான்.
அவனுக்கும் அத்தை மாமா என்று கூப்பிட ஆசைதான் ஆனாலும் உறவே இல்லை என்று கூறும் போது எப்படி அழைப்பது என்று தயங்கியவன் மரகதத்தை அம்மா என்று அழைத்திருந்தான்.
அவன் சொல்லியபடி எழுந்து நிற்க அப்பத்தா என்று அழைத்தவன் தட்டை கொடுக்க சொல்லவும் "கண்டிப்பா அமுதா கல்யாணத்தை நீங்கதான் முன்ன இருந்து நடத்தி தரனும்". என்று விசாகன் தட்டை கொடுக்க கை நீட்டி வாங்கியவருக்கு என்ன பதிலை சொல்வது என்று பார்த்தார்.
நொடியில் அவரது நிலையை புரிந்து கொண்ட தில்லையோ "நிச்சயம் வரனுங்க அய்யா" என்றதும் அவருக்கு மதிப்பை கொடுத்து வருவதாக தலை அசைத்தார் சௌந்தரலிங்கம்.
எப்படியும் சௌந்தரலிங்கத்தை வரவைத்திட வேண்டும் என்று நினைத்தவன் "அமுதாவை பத்தி உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன்.... என் அத்தை பொண்ணு தான், இப்போ பெத்தவங்க ரெண்டு பேருமே இல்லை… உங்களை அவங்க ஸ்தானத்துல வைச்சித்தான் அழைச்சி இருக்கேன்... என்றவன் தொண்டையை செருமிக்கொண்டு
"நீங்க தேவாவுக்கு, அப்பா அம்மாவா வரவேண்டாம் எனக்கு மாமனார் மாமியராகக் கூட வரவேண்டாம்... அமுதா... அமுதாவுக்கு... அப்பா அம்மா ஸ்தானத்துல வந்து முன்ன இருந்து இந்த கல்யாணத்தை நல்லா நடத்தி தரனும் என்று கையை கூப்பி கேட்க விசாகனின் கனிவான பேச்சு அவரை அசைத்துத்தான் பார்த்தது.
மரகதத்திற்கு கணவர் என்ன சொல்லி விடுவாரோ என்று அவஸ்தையாய் இருந்தது... ஊரில் பெரிய மனிதனாய் மதிக்கும் மாப்பிள்ளையை அவமதிக்கும் படி ஏதாவது நடந்துவிட்டால் காலத்திற்கும் மனதில் வடுவாய் நின்று விடுமே என்ற பயம் அவருக்கு. அவர் நினைத்ததை போல் அல்லாமல் அமைதியாகவே வழியனுப்பி வைத்தார் சௌந்தரலிங்கம்….
விசாகன் தங்கள் வீட்டிற்குத்தான் சென்று இருக்கிறான் என்று தெரிந்த கணத்திலிந்து தேவாவிற்கு ஒரே நடுக்கம் தான்... அங்கே என்ன நடக்கின்றதோ என்று…. ஏற்கனவே தாலி பிரித்து போடும் விஷேஷத்திற்கு அழைக்க சென்றபோது நடந்தவைகளை அன்னையின் வாய்மொழியால் கேட்டு இருக்கிறாளே, அப்பா பேசிய பேச்சிக்களும், அத்தையின் ஆட்டத்தையும் அதனை நினைத்தே இப்போது உள்ளுக்குள் குளிர் பரவியிருந்தது.
குட்டி போட்ட பூனையை போல வாசலுக்கும் கூடத்துக்குமாய் நடையாய் நடந்தவளின் கையும் காலும் சில்லிட்டிருந்தது. இரண்டு மூன்று முறை மேகலாவிற்கு கூட அழைத்து விட்டாள்
"எதுக்கு இப்ப பயப்புடுற புள்ள... எதுவும் ஆகாது... உன் அப்பாரு ஒன்னும் உன் அண்ணனை போல மோசமில்லை... உன் அண்ணன்காரன் இல்லாததே பெரிய விசயம்னு நினை... மாமா நல்லபடியாதான் பேசுவாக…" என்று தேவாவிற்கு தைரியத்தை கூறி போனை வைத்து விட்டாள்.
காலையே அமுதாவும் தங்கள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அன்னையின் இல்லத்திற்கு சென்றுவிட வாசலிலேயே அவர்களுக்காக காத்திருந்த தேவாவின் பொறுமை காற்றில் பறக்க உடனே அன்னைக்கு அழைத்து விட்டாள்.
"ஹலோ … அம்மா... நான் தான் தேவா" பேசுறேன்.
"இரு, இரு... இதோ வறேன்.. என்று மகளுக்கு மெல்லிய குரலில் கூறியவர் போனை எடுத்துக்கொண்டு கொள்ளை புறத்துக்கு சென்று "சொல்லு தேவா எப்படி இருக்க?" என்றார்.
"அம்மா... நான் நல்லா தான் இருக்கேன்... இப்போ அதுவா முக்கியம்... என் நிலமை தெரியாம பேசுறியே?" என்று கடுகடுத்தவள் "அப்பா என்னம்மா சொன்னாரு?" என்றாள் அவஸ்தையாக, கேட்கும் போது குரலே அத்தனை வலியை தேக்கி இருந்தது.
"அட நீ வேற…. இங்க நடந்த கதையே வேற நானும், உன்னைப் போலத்தான் பயந்துட்டு இருந்தேன்.. ஆனாலும் மனசுல ஒரு நம்பிக்கை அப்படி எதுவும் சட்டுன்னு சொல்லிட மாட்டாருன்னு, அதே போலவும் அம்மாவும், மாப்பிள்ளையும் பேசவே, உன் அப்பாரு அப்படியே ஆடிப்போயிட்டார் போல... சத்தமே இல்லை" என்றார் சந்தோஷமான குரலில்.
"என்னம்மா இப்படி சொல்ற?... ஹீரோ ஏதாவது தப்பா பேசிட்டாராமா?" என்றாள் கவலையாக.
அவள் கவலையாக கேட்பதை எல்லாம் காற்றில் விட்டவர் "யாருடி அது ஹீரோ?" என்றார் முதல் கேள்வியாக.
"அம்மா... அது..வந்து…" என்று இழுத்தவள் "என் புருஷனைத்தான் அப்படி கூப்பிட்டேன்" என்று உண்மையை உடைக்க
"என்னடி இது ஹீரோனு கிண்டல் பண்றா மாதிரி கூப்பிடுற ஒழுங்க மாமான்னு கூப்பிடுற வழியை பாரு" என்று அதட்டியதும்.
"அய்யோ... அம்மா இப்போ அது ரொம்ப முக்கியம்… என்று கூறும் போதே அவரின் முறைப்பு போனில் தெரிந்ததோ என்னவோ "சரி சரி அப்படியே கூப்பிடுறேன்... அங்க நடந்ததை சொல்லேன்…" என்று கெஞ்சவும் மொத்தத்தையும் கூறிட கேட்டவளுக்கோ தன்னுடைய தந்தையா இது என்று நினைத்தாள்.
"அம்மா…. என்னால நம்பவே முடியல மா அப்பாவா இது…. இதே மாதிரி எப்படியாவது பேசி அப்பாவை கூட்டிட்டு வந்துடும்மா... அப்பாவை பாக்கனும் போல இருக்கு… ப்ளீஸ் மா" என்று தேவா கூறியதும்
மகளை நினைத்து தானும் கலங்கியவர் அவளின் மனநிலையை மாற்றும் பொருட்டு "என்னமோ நான் சொன்னதும் எல்லாம் நடக்குறா மாதிரியே பேசுடி... அவர் என்ன நினைப்பாரோ அதை தான் செய்வார்... நானும் பேசிப் பாக்குறேன்... அதுக்கு மேல அந்த ஆண்டவன் தான் கண்ணை திறக்கனும்" என்றவர் "ஏய் உன்னோட அப்பாரு கூப்பிடுறா மாதிரி இருக்கு... நான் அப்புறமா பேசுறேன்" என்று வைத்துவிட மறுபடியும் வாசலுக்கு வந்தவள் கணவன் வரும் பாதயை பார்த்திருந்தாள்.
"என்னங்க"
"ம்… சொல்லு சனா"
"ஹீரோ…"
ம் …. சொல்லுடி முக்கியமான பைலை பாக்குறேன்" என்றபடி பேச
'அய்யோ வரமாட்டதே…' என்று மனதில் புலம்பியவள் "மா… பச்… மாமா" என்றாள் திக்கி திணறியவளாக
அவள் மாமா என்றே அழைக்கவும் சட்டென தொடர்ந்திருந்த வேலையை விட்டு அவளை பார்த்தவன் "வா" என்று கை நீட்டி அழைக்கவும் சற்று தூரம்தள்ளி இருந்தவள் அவன் கைகளுக்குள் தன் கையை கொடுத்து அவன் அருகில் வந்தாள்.
"என்ன கூப்பிட்ட" என்றான் ஆசையாக அவள் அழைத்தது உள்ளுக்குள் அவ்வளவு சுகத்தை தந்தது..
"அது வந்து மா.. மா.. " என்று இடைவெளி விட்டு சொல்லவும்.
"இந்த வார்த்தை உன் வாயிலிருந்து வரவும், செம கிக்கா இருக்குடி" என்று தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் "என்ன புதுசா மாமா எல்லாம் கூப்புடுற வழக்கமா ஹீரோன்னு தானே கூப்பிடுவ சனா" என்றான் அவளின் நெற்றியில் முட்டியபடி
"இதுக்கு காரணமே உங்க அத்தை தான்... அதை நான் அப்புறம் சொல்றேன்... நீங்க அப்பாவை கூப்பிட போனிங்களே கல்யாணத்துக்கு வருவாங்களா?நீங்க என்ன நினைக்கிறிங்க" என்றாள் ஆசையாக அவள் கண்களில் அத்தனை அலைப்புறதல் அவரை காண வேண்டும் என்று
அவளை கட்டிக்கொண்டு வாகாக தன் மேல் சாய்ந்துக் கொண்டவன் "வருவாருன்னு நம்புவோம் சனா... நம்ம மேல கோவமா தான் இருப்பாரு... பரவாயில்லை ஆனா இதுக்கு நிச்சயம் வருவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…" என்றான். அவளின் தளிர் விரங்களில் தன் முத்திரையை பதித்தபடி.
பேச்சு திசை மாறிக்கொண்டு இருப்பதை கவனித்தவள் "மாமா" என்று அவனை மிரட்டிட அவள் மடி சாய்ந்தவன் அவளின் கன்னங்களில் இழைந்தபடியே "இப்போ சொல்லு இந்த மாமா எப்படி வந்தது" என்றான் ஆர்வமாக
"அப்பா வீட்டுல என்ன நடந்துதோன்னு நான் அம்மாவுக்கு போன் செய்தேனா... இடையில உங்கள வாய்தவறி ஹீரோன்னு சொலிட்டேன்... அதுல ஆரம்பிச்சது அவங்க அர்ச்சனை உடனே டோர, க்ளோஸ் பண்ணுட்டு அவங்க சொல்லுக்கு சரின்னு சொன்னதுதான் என்னை விட்டாங்க" என்றாள் சிரிப்புடன்
"சரியான ஓட்டை வாய்டி உனக்கு" என்றவன் அதன் பிறகு அவளை பேசவே விடவில்லை.
கல்யாண வேலையும் படுஜோராகத்தான் நடந்துக்கொண்டு இருந்தது… சொந்தங்களை அழைப்பது கோவில் வழிபாடு பந்தக்கால் ஊனுவது என்று ஒவ்வொன்றும் திருவிழா போன்று நடந்துக்கொண்டு இருந்தது.
இதோ அதோவென அவர்கள் எதிர்ப்பார்த்த திருமண நாளும் வந்துவிட முதல் நாள் பெண்ணிற்கு நலங்கு என்று அத்தை முறை மாமன் முறை இருப்பவர்கள் நலங்கு வைத்து சென்றனர்.
"தேவா ம்மா ப்ளீஸ் அண்ணனுக்காக இது ஒன்னு மட்டும் செய்டா" என்று சுந்தரன் போனில் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
"முடியவே முடியாது…. நாளைக்கு இந்நேரம் எல்லாம் உங்க கூடதானே இருக்க போறாங்க... அதுக்குள்ள என்ன அவசரம்" என்றாள் இந்த பக்கம்
"என்ன தேவாம்மா, நீயும் லவ் மேரேஜ் செய்து இருக்க ஆனாலும் என் லவ்வுக்கு ஒரு ஹெல்ப் பண்ண மாட்டுறியே" என்று குரலை பாவம் போல் மாற்றிக்கொள்ள
"அய்யே... இது செட்டே ஆகலண்ணே உன் மூஞ்சிக்கு…" என்று அவனை படுத்தியவள் "அய்யோ அண்ணே உன் அப்பாரு உன் பக்கம் வாராரு போல இருக்கு" என்றதும்
சட்டென நிமிர்ந்து சுற்றி முற்றி பார்த்தவன் பல்லை தடித்தபடி "தேவா மா' என்றான் கடுப்புடன்
"பொருண்ணே... அமுதான்னா சும்மா வா... இருங்க வறேன்" என்றவள் சந்தன நலங்குடன் இருந்த அமுதாவை நான்கு ஐந்து போட்டோ எடுத்து அனுப்பினாள்.
வெட்கத்தில் பூவாய் மலர்ந்திருந்தவளின் வதனத்தில் சொக்கிய சுந்தரனோ சீக்கிரமே இந்த பொழுது விடியனும் என்றபடி தன் வேலையை பார்க்க சென்றான்.