நீலநிற ஆகாய மங்கை சற்றே மஞ்சளை அரைத்து பூசியது போன்று தோற்றத்தில் இருந்தது வானம். சாயங்காலம் நேரத்தில் முகத்தில் பட்டு இதமாய் வருடிய தென்றல் காற்று, அவள் கூந்தலை கலைத்து சென்றது.
காற்றில் கலைந்து கன்னத்தில் விழும் முன்கற்றை முடியை காதோரம் எடுத்து விட்டவள் தன் பெரிய வயிற்றை ஒரு கையால் பத்திரபடுத்தி, மறுகையால் கணவனின் கையை பற்றி அடிமேல் அடி வைத்து தங்க தேர்போல் அசைந்து கோவிலுக்கு சென்றுக் கொண்டு இருந்தாள் தேவா.
அடர்ந்த பாக்கு நிறத்தில் மெல்லிய ஜரிகை வேய்த்த புடவை தேவாவின் பூ உடலை தழுவி இருந்தது. கண்ணையும் உடலையும் உறுத்தாத சில நகைகளை அணிந்து இருந்தவளுக்கு தாய்மையில் மெருகேறி இருந்த கன்னங்கள் பளபளத்தது...
கூடவே இடைதாண்டிய முடியில் இரண்டு சரம் குண்டு மல்லிகை இடம் பெயர்ந்து அவளின் கூந்தலை அலங்கரித்துக் கொண்டு இருக்க, நெற்றி வகுட்டில் குடியிருந்த குங்கும பொட்டும் வில்லென வளைந்த இரு புருவங்களுக்கு மத்தியில் வைத்திருந்த வட்ட பொட்டும் அவளை பேரழகியாய் காட்டியது. மனைவியின் கையை பற்றி நடந்த விசாகனுக்கு அவள் நடந்துக் வருவது கவலையாய் இருந்தது.
"சனா முடியலையா டி" என்றான் அவள் மூச்சு வாங்க நடந்து வருவதை பார்த்து கவலையாக
"பச்... வீட்டிலிருந்து கிளம்பி பத்து நிமிஷம் கூட ஆகல.... அதுக்குள்ள என்ன முடியலையான்னு கேள்வி" என்றாள் அவனை பார்த்து சிரித்தபடி
"உனக்கு மூச்சி வாங்குது டி" என்று கூறியவன் "வா அந்த திண்ணையில உட்கார்ந்துட்டு போலாம்" என்று அக்கறையாய் அவள் கைபிடித்து அழைத்துச்செல்ல
அவன் கையை இழுத்து அவனை நிறுத்தியவள் "அய்யோ ... உங்க கூட... தாங்க முடியலங்க இங்க இருக்க கோவிலுக்கு இத்தனை அக்கப்போறா.... தினமும் இப்படி சண்டித்தனம் பண்றிங்க... நடந்தா மூச்சி வாங்கத் தானே செய்யும்.... அதுக்கு நடக்காமையே இருக்க முடியுமா " என்று சலித்துக் கொண்டலும் அவன் அக்கறையில் மனம் தித்திக்கத்தான் செய்தது.
"எங்க இருந்தா என்னடி நடக்கறது என் பொண்டாட்டி... பாரு முகம் எவ்வளவு சோர்ந்துடுச்சி" என்றவனின் கண்கள் முழுவதும் காதலால் நிறைந்திருந்தது.
அவள் காதல் பார்வையில் வெட்கம் கொண்டு "மாமா..." என்று அழைத்து "ஆளுங்க எல்லாம் பாக்குறாங்க... கொஞ்சம் ரோட்டை பாரத்து நடங்க என் முகத்துல எதுவும் எழுதி ஒட்டலை" என்றவள் நக்கலாக கூற வந்தாலும் குரலில் மகிழ்ச்சி திளைத்திருந்தது.
பேச்சும் சிரிப்புமாகவே கோவிலுக்குள் நுழைந்தவர்கள் அம்மனை வணங்கி பிராகாரத்தினை சுற்றி வந்தனர்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டமாகவே இருக்க சில பல நலவிசாரிப்புக்கள் முடிந்து கோவில் மண்டப படியில் அவளை அமர வைத்து, அவளுக்கு கீழ் படியில் தேவாவினை பார்த்தார் போல் விசாகனும் அமர்ந்துக் கொண்டான்.
காலை மாலை இரு வேலையும் காலாற நடக்க வேண்டும் என்ற மருத்துவரின் ஆலோசனைனையின் பெயரில் தில்லையின் அனுபவத்தின் பெயரிலும் கோவிலுக்கே வரமாட்டேன் என்று கூறி வந்தவன் அவளை வாரம் இரு முறை கோவிலுக்கும் பக்கத்தில் இருக்கு சில இடங்களுக்கும் அழைத்துச் சென்று வந்தான். இன்றும் அதே போல கிளம்பி இருந்தனர்.
ஒரு கையை வயிற்றில் வைத்தபடி அமர்ந்து இருந்தவளுக்கு அவனை விட்டு பிரிந்து எப்படி இருக்க போகிறோம் என்று நினைக்கவே கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. இது எட்டாம் மாதம் என்பதால் அடுத்த மாதம் வளைகாப்பிற்கு நாள் குறித்து இருந்தனர். அதனாலேயே கலக்கமாக இருந்தாள்.
பேச்சும் சிரிப்புமாய் இருந்தவள் திடீரென முகம் மாறியதை கண்டவன் "என்ன சனா எங்கயாவது வலிக்குதா?" என்றபடி நீட்டி இருந்த அவள் பாதங்களை பிடித்து விட்டான்.
"மாமா...." என்று பதறி அவன் கையை பற்றியவள் "என்ன பண்றிங்க இது கோவில் என் காலை விடுங்க" என்று அவனிடமிருந்து தேவா சட்டென்று காலை இழுத்துக் கொண்டாள்.
"ஆமா, இது கோவில் தான்... நான் இல்லைன்னு சொல்லலியே... வயித்துல புள்ளையோட இருக்க நீயும் சாமிக்கு சமம் என் அருமை பொண்டாட்டியே" என்று அதற்கும் ஒரு விளக்கத்தை கொடுத்தவனை நெகிழ்ந்து பார்த்தவள்.
"நான் கண்டிப்பா வீட்டுக்கு போய் தான் ஆகனுமா மாமா? என்றாள் உள் சென்ற குரலில் அந்த குரலே சொன்னது உன்னை விட்டு என்னால் பிரிந்து இருக்க முடியாது என்று.
"ம் அப்புறம்" என்றான் சுவரஸ்யம் குறையாத குரலில்
அவன் குரலில் கோவம் கொண்டவள் "மாமா என்று எரிச்சலான குரலில் அழைத்து முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள
அவளின் கோவம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் அதுவரை சாதரணமாகவே இருந்த விசாகன் "கண்டிப்பா நீ போகனும் செல்லம்மா" என்றபோது அவன் குரலும் அவளை நினைக்கையில் கொஞ்சம் கரகரத்தது.
"ஏன் இப்படி அடம் புடிக்கிறிங்க மாமா... உங்களை விட்டு நான் எப்படி இருப்பேன் உங்களுக்கு பரவாயில்லை யா என்னை பிரிஞ்சி இருக்கறது" என்று கரகரத்த குரலில் கூறியவளுக்கு மூக்கு நுனி சிவந்து கலங்கிய விழிகளில் கண்ணீர் துளிகள் இப்பவோ அப்பவோவென விழ காத்துக் கொண்டிருந்தது.
மெல்ல அவள் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் சிறை செய்துக் கொண்டவன் உன் சந்தோஷத்துக்காக தானே டா இது எல்லாம்... நீ எவ்வளவு ஏங்கி இருப்ப அங்க போய் இருக்கனும்னு, உங்க அம்மா கையால சாப்பிடனும், அப்பா கூட இருக்கனும், அண்ணன் கூட சண்டை போட்டு விளையாடனும்னு, அதுக்கான வேலை இப்போ வந்து இருக்கு செல்லம்மா.... எதையும் நினைக்காம நீ போய்ட்டு வா டா" என்றான் அவள் உள்மனம் ஏங்கியதை வைத்து
அவன் அனுப்பவதற்கான காரணம் அறிந்திருந்தாலும் அவனை பிரியும் ஏக்கத்தில் "என்னை பாக்க நீங்க வருவிங்களா?" என்றாள் அவனிடமிருத்து கரத்தை விலக்காமலேயே
"ஏய் என்ன டி இப்படி கேக்குற உன்னை பார்க்காம என்னால மட்டும் இருக்க முடியுமா டி" என்றான் அழுத்தமான குரலில்
அவன் குரல் என்ன சொன்னதோ "ம்" என்று சின்ன குரலில் தெரியும் என்பதாய் தலை அசைத்தாள் .
"உன்னை காதலிச்ச போதே உன்னை பார்க்க வரனும்னு உங்க ஊர்லயே இடம் வாங்கி போட்டவன் சனா.... அப்போவே ஒரு காரணத்தை தேடி உன்னை பார்க்க வந்தவன் இப்போ நீ என் உரிமையானவ இப்ப போய் வராம இருப்பேனா நிச்சயம் வருவேன்டா" என்றான் அவளை சமாதனப்படுத்தும் விதமாக
அந்த சமாதானம் அவளை கொஞ்சம் தேற்றவே சரி என்று தலை அசைத்து தன் சம்மதத்தை உறைத்தாள்.
சுந்தரனுக்கும் அமுதாவிற்கும் பெண் குழந்தை பிறந்து 5 மாதம் ஆகி இருந்தது. இன்னும் அமுதாவை சுந்தரன் வீட்டிற்கு அனுப்பவில்லை நல்ல நாள் பார்த்து அனுப்புவதாக கூறியிருக்க அவனே அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்கின்றான்.
தேவாவிற்கு உடல் தேறி இருந்தாலும் வாந்தி மட்டும் நின்றபாடில்லை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிட்டது அனைத்தும் வெளியேறி இருக்கும். அதனாலேயே மனைவியை இன்னும் கவனம் எடுத்து பார்த்துக்கொண்டான்.
அவ்வப்போது தேவாவை காண மரகதமும் சௌந்தரலிங்கமும் வந்து சென்றனர். அவளுக்கு இருந்த ஒரே கவலை அண்ணன் ஏன் இன்னும் வந்து என்னை பார்க்கவில்லை இன்னும் ஏன் என்னிடம் பேசவில்லை என்பதாய் இருக்க "என் மேல உனக்கு என்ன இன்னும் கோவம் போகல இல்ல... நீயா வந்து பேசுற வரை,நானா உன் கிட்ட பேசமாட்டேன் போடா" என்று அவளும் வீம்பாய் இருந்தாள்.
ஜெயசந்திரனுக்கும் ஆசை தான் தங்கையை பார்க்கவேண்டும் அவளிடம் பேச வேண்டும் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் பேசுவது என்று தவித்துக் கொண்டு இருந்தவன் 5 ம் மாதம் பூ முடிக்ககூட செல்லவில்லை இப்போது அவளே வளைகாப்பிற்கு பின் வீட்டிற்கு வருவாள் என்று மரகத்தின் மூலம் தெரிந்த பிறகு இறக்கை இல்லாமல் வானில் பறந்தான்.
நேரமும் காலமும் காற்றை விட வேகமாய் பயணம் செய்ய தேவாவின் வளைகாப்பு நாளும் வந்தது. வீடே விழாகோலாம் கொண்டிருக்க, வண்ணமலர்களின் அலங்கரமும் மாவிலை தோரணமும் வாசலில் வரைந்த மாக்கோலமும் இருபக்கமும் வாழை மரங்கள் என அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
உற்றார் உறவினர் அங்காளி பங்காளி முதல் தெரிந்தவர் அறிந்தவர் என அனைவரையும் வரவழைத்து இருந்தார் தில்லை. தன் வம்சத்தை தழைக்க வைத்த வாரிசை கொடுத்த தேவாவின் வளைகாப்பை சீறும் சிறப்புமாய் ஊரே மெச்ச தன் பேத்தியின் மனம் குளிர நடத்த வேண்டும் என்று ஆசைக் கொண்டவர் இன்னும் அதே நிமிர்வுடன் சுறுசுறுப்பாய் அனைத்தையும் முன்நின்று நடத்திக்கொண்டு இருந்தார்.
தேவாவின் வீட்டினரும் தில்லையை போலவே எல்லோரையும் அழைத்திருத்தார். குறிப்பாக சாந்தலட்சுமியின் கணவர் அழகன்பெருமாளுக்கு போனை செய்து விஷயத்தை விளக்கியதும் அவருக்கு பெருத்த சந்தோஷம் தேவாவை அரவணைத்து சேர்த்துக்கொண்டதில், அதே மகிழ்வுடன் "நாங்க எல்லோரும் வளைகாப்புக்கு வந்துடுறேம் மச்சான்" என்று கூறிட
சௌந்தரலிங்கத்தகற்கு தான் சற்று கலக்கமாக இருந்தது சாந்த லட்சுமியை நினைத்து .
"மாப்பள" என்று தயங்கிட நிறுத்திட "என்ன மச்சான் உங்க தங்கச்சிய பத்தி யோசிக்ககறிங்களா?" என்று சரியாய் விஷயத்தல யூகித்து விட
சற்று அதிர்ந்தாலும் அது உண்மை எனும் பட்சத்தில் வாயை திறக்காமல் நின்றார் சௌந்தரலிங்கம்.
"உங்களுக்கு இந்த கவலையே வேண்டாம் மாச்சா... இப்போலாம் உங்க தங்கச்சி சப்பிட மட்டும தான் வாய திறப்பாளக்கும்" என்று அதிர்ந்து சிரித்தவர் "சந்தோஷமா நிம்மதியா வேலைய பாருங்க மச்சான் நாங்க கண்டிப்பா வர்றோம்" என்றார்.
"ரொம்ப நன்றி மாப்பிள்ள நான் லட்சுமிய நினைச்சிதான் பயந்தேன்... இப்போ நீங்களே தைரியம் சொன்ன பிறகு என்ன வாங்க
பாத்துக்கலாம்" என்று கூறிட
"நான் பாத்துக்குறேன் மச்சான் கவலையில்லாம வேலைய பாருங்க" என்று தைரியம் கூறியவர் வளைகாப்புக்கு அருணையும் கூட்டிட்டு வறேன் என்று கூறியிருந்தார்.
அதே போலவே மூடிய வாயை திறக்கவே இல்லை சாந்தலட்சுமி எந்த கேள்விக்கும் தலையாட்டலையும் ஆமா இல்லை என்ன பதில் மட்டும் இருந்தது அவரிடம், கூடவே அருணும் வந்திருந்தான் முன்னே விட இன்னும் வசிகரமாய் இருந்தான். சௌந்தரலிங்கத்தின் தம்பி துரை மற்றும் அவரது மனைவி இளையராணி மகனுடன் வந்திருந்தனர். நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அங்கம்பக்கத்தினர் என தேவாவின் ஊரிலிருந்து இரண்டு வேன்களில் வந்து இருங்கி இருந்தனர்.
ஜெயசந்திரனுக்கு வளைகாப்பிற்கு வரவேண்டும் தங்கை தங்கை கணவர் என்று உரிமையுடன் பேசவேண்டும் என்று ஆசை இருந்தாலும் இந்த முறை அவனால் விசேஷத்தில் கலந்துக் கொள்ள முடியவில்லை... ஏதோ கண்ணுக்கு தெரியாத திரை ஒன்று அவனை தடுத்துக்கொண்டே இருந்தஇருந்தான்
விசாகனிடமும் தன்னியல்பை விட்டு இறங்கி வரமுடியாமல் தங்கையிடமும் பாசத்தை காண்பிக்க முடியாமல் தவித்தவனுக்கு அதே நேரம் தான் ப்ராஜெக்ட் விஷயமாக பெங்களூர் செல்ல கட்டாயம் வர.
பெங்களூருக்கு துணிந்து கிளம்பிவிட்டான் ஜெயசந்திரன்.
அண்ணன் வரவில்லை என்ற செய்தி கேட்டப் பின் அவன் மேல் அதிக கோவத்துடன் தான் இருந்தாள் தேவா.
முறுக்கிய மீசையும் ட்ரிம் செய்யப்பட்ட தாடியுமாய் பட்டு வேட்டி சட்டையில் ஆண்மையின் மிடுக்கில் அழகனாய் இருந்த விசாகன், வந்தவர்களை வரவேற்றவனின் பார்வை மனைவியின் வருகையை எதிர்பார்த்து அடிக்கொரு தரம் மாடிப் படிகளைத் தொட்டு மீண்டது.
கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட பிரிந்திறாதவளை பிரிய வேண்டுமா என்று மனம் சண்டித்தனம் செய்து அவனிடமே சண்டையிட்டது
சுந்தரன் அமுதாவை தேடவும் மாடி ஏறிய தில்லை அலங்காரம் செய்து கொண்டு இருந்த அமுதாவிடம்
"உன் புருசன் ரொம்ப நேரமா உன்னை தேடுறான்... என்னன்னு போய் பாருத்தா" என்று கூறிட.
"என்னவாம் அம்மத்தா அவருக்கு??? இப்போதானே பிள்ளைய கொடுத்துட்டு வந்தேன்... அதுக்குள்ள என்ன வந்துடுச்சி?? ஒரு மணிநேரம் கூட பாத்துக்க முடியாதாமா" என்று தேவாவிற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தவள் கேட்கவும்.
"உன் புருசனுக்கு தான் தெரியும்... நான் கேட்டா சொன்னாதானே போய் என்னன்னு கேளுத்தா போ" என்றார் சிரித்தவாறு
"பச்... என்ன அமுதா அண்ணா ஏதோ கூப்பிடுறாங்க போய் பாருங்க அதான் மேகலா இருக்கா ல நான் பாத்துக்குறேன்" என்று கூறி அவளை அனுப்ப முயன்றாள் தேவா
கையில் இருந்த பூ சரத்தை மேகலாவிடம் கொடுத்தபடி "உங்க அண்ணனுக்கு வேற வேலை இல்லை... கொஞ்ச நேரம் அந்த குழந்தைய வைச்சிருக்க முடியாது... அதுக்குதான் கூப்பிடுவாறு வேற எதுக்கு" என்று அவனை பற்றி கடுப்பாக கூறியவள் "இதுல அண்ணனுக்கு தங்கச்சி சப்போர்ட் வேற" என்று சலித்தபடி "இதை வைச்சிடு மேகலா" என்று கூறிவிட்டு தில்லையினை தாண்டி கீழே சென்றாள் அமுதா.
போகும் பேத்தியின் கோபத்தை கண்டு நகைத்த தில்லை தேவாவிடம் திரும்பி கையில் கொண்டு வந்த பெட்டியை கொடுத்து "இது பரம்பரை நகைத்தா... இது மொத்தத்தையும் போட்டே கூட்டிட்டு வாத்தா என் பேத்திய" என்று மேகலாவிடம் கூறியவர் "அழகு தங்கம் என் ராசாத்தி" என்று தேவாவை கண்ணம் வழித்து நெட்டி முறித்து "சீக்கிரம்தா கீழே உங்களுக்காக தான் காத்துக்கிட்டு இருக்காங்க... அதுவும் குறிப்பா உன் புருசன்" என்று தேவாவிடம் கூறிட
அவர் கூறியதும் வெட்கம் கொண்டு புன்னகைத்த தேவா அவர் கொண்டு வந்த நகைகளை கண்டு அதிர்ந்தாள்.
"அச்சோ பாட்டி... இதுவே போதும்... இன்னும் இந்த நகையெல்லாம் எதுக்கு" என்று கூறியவளை தடுத்து
"என் வீட்டு மருமகன்னா சும்மாவா? அப்படி ஜொலிக்க வேணா? கண்ட சிரிக்கி இனி என் பேத்தியை நாக்கு மேல பல்லு போட்டு ஒத்த வார்த்தைய பேச முடியாதுல" என்று அவளை அடக்கி அமரவைத்தவர் "நீ போடுத்தா" என்று மேகலாவிடம் பொருப்பை ஒப்படைத்து நடையை கட்டினார்.
கையில் 6மாத குழந்தை பூஜிதாவுடன் நின்றிருந்த சுந்தரன் அமுதாவை கண்டவுடன் இப்போதுதான் உயிர் வந்தது போல இருந்தது ப்பா என்று பெருமூச்சை வெளியேற்றினான்.
"என்னங்க தேடினீங்களா?"
"ஆமா அமுதா குட்டி.." என்றிட அவனை முறைத்தாள் அமுதா.
மனைவியின் முறைப்பைக் கண்டு "சரி சரி ஆமா அமுதா" என்றான் சுந்தரன். பொது இடங்களில் இந்த குட்டி எல்லாம் வேண்டாம் என்று கராராய் கூறியிருந்தாள் ஆனால் எப்போதவது அவனுக்கு வாய் தவறி வந்துவிடும்
"எதுக்குங்க கூப்பிட்டிங்க அங்க எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா?" என்றாள் பாதியில் அழைத்து விட்டானே என்ற கடுப்பில்
"அமுதாம்மா இங்க குட்டிமா நிக்கமாட்டுறா டி அம்மாகிட்டயும் நிக்கல.. எனக்கு வேலை இருக்குடி நீ கொஞ்சம் பசியாத்தியாச்சி கொடு" என்றான் குழந்தை வாயில் கை வைப்பதை பார்த்து
அவன் பம்மியதில் லேசாக இதழ் வளைத்து சிரித்திட அதை கண்டுவிட்டவன் "ஏண்டி சிரிக்கிறது கூட உன் மாமங்காரனை ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே அளவா சிரிக்கிற... அவன்லாம் எப்பவோ மாறிட்டான்டி... நல்லா என்னை பார்த்து சிரிச்சாதான் என்ன?" என்று கேட்க
அவன் கேள்விக்கு முறைப்பையே பதிலாய் கொடுத்தவள் "ஏண்டா குட்டிமா... அப்பாவை படுத்திட்டிங்களா" என்று குழந்தையின் வாயிலிருந்து கையை எடுத்துவிட்டு "கொஞ்சம் இருங்க பாப்பாவுக்கு ஏதாவது கொடுத்து கூட்டிட்டு வறேன்" என்று சமையலறை பக்கம் சென்றாள்.
சுந்தரன் விசாகனுடன் நின்றுக் கொள்ள இருவருமாக பேசி சிரித்தபடி விருந்தினரை வரவேற்றுக்கொண்டு இருந்தனர்.
அரைமணி நேரம் சென்றிருக்க வயதில் மூத்த சுமங்கலி பெண் ஒருவர். "அம்மாடி அமுதா, புள்ளைய அழைச்சிட்டு வந்து உட்கார வைத்தா நேரம் போகுது" என்று கூறிட
உடலை அதிகம் உறுத்தாத பிஸ்தா நிற காஞ்சி பட்டில் இளசிவப்பு நிற பார்டர் புடவை எங்கும் பரவியிருக்க, அதில் தங்கமாய் ஜொலிக்கும் வெண்ணை திருடும் கண்ணனின் உருவம் ஆக்காங்கே பதிந்த புடவையும், தில்லை கொடுத்த பரம்பரை நகையும், தேவாவிற்கு அழகை கொடுத்தாலும் அவள் வயிற்றை சாய்த்து நடந்து வரும் பேரழகில் தன் மனதை பறிகொடுத்து அவள் மேல் இருந்து விழிகளை அகற்ற முடியாமல் திண்டாடினான் விசாகன்.
ஒவ்வொருவராக நலங்கு வைத்து வளையலை அடுக்கி பூ தூவி ஆசிர்வதிக்க அடுத்து வந்த மரகதமும் சௌந்தரலிங்கம் நான்கு ஜோடி தங்க வளையல்களை அணிவித்து நலங்கு வைத்து ஆசிர்வதித்தனர்.
அமுதாவும் அவளது கணவன் சுந்தரனும் இரண்டு ஜோடி தங்க வளையல்கள் அணிவித்து நலங்கு வைத்து சென்றனர்.
துரை அவரது மனைவி இளையவும் சித்தப்பா செய்வதாக கூறி இரண்டு ஜோடி தங்க வைளையல் அணிவித்து ஆசி வழிங்கினர்.
அடுத்த வந்த சாந்தலட்சுமி கண்ணாடி வளையல்களை அடுக்க போக அருண் அவரை நிறுத்தி தன் சட்டை பையில் வாங்கிவந்திருந்த தங்க வளையல்களை கொடுத்து அணிவிக்க சொல்ல முகமே விழுந்து விட்டது அவருக்கு, தலையழுத்தே என்று அதை அணிவித்துவிட்டு சத்தமில்லாமல் வந்து அமர்ந்து கொண்டார்.
அடுத்த வந்த தில்லை பேத்திக்கு வைர வளையல்களை அணிவித்து "என் வம்சத்தை தழைக்க வைச்சிட்டாத்தா... என் கண்ணு" என்று சபையில் அவளை உச்சி முகர்ந்து வாழ்த்திட அவளுக்கு கண்களே கலங்கி விட்டது.
எல்லாவற்றுக்கும் மகுடமாய் ஒரு ஓரத்தில் மனையாளின் முக மாற்றத்தையும் பூரிப்பையும் கண்டு கொண்டிருந்தவனை "என்ன மாப்ள அங்கயே நின்னுட்ட? தங்கச்சி உனக்கும் நலங்கு வைப்பாங்கன்னு எவ்வளவு ஆசையா இருக்கு... இப்படி ஓரமா நிக்குற வா மாப்ள... வா டா..." என்று சுந்தரன் விசாகனை அழைக்க
"டேய் சும்மா இருடா" என்று கூறி வெட்கப்பட்டு நின்று கொண்டவனை அருணும் சுந்தரனும் வலுக்கட்டாயமாக தேவாவின் பக்கத்தில் அமரவைத்து அவனுக்கும் நலங்கு வைக்க போக அங்கே பெரும் சிரிப்பலையே எழுந்து அடங்க வெகு நேரமாகியது.
அவர்கள் செய்த அலப்பறையில் தனியாக கொடுக்க வைத்திருந்த பரிசு வெளியே தெரிந்து விட்டதும் நலங்கு வைத்த முகத்துடனே அவளை பார்த்தவன் தான் கையில் வைத்திருந்த ஆரத்தை தேவாவிற்கு அணிவித்து விட்டான்.
அன்று மாலையே நல்ல நேரம் பார்த்து தேவசேனாவை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். விசாகனுக்குத்தான் அவள் இல்லாத அறைகுக்கூட போக பிடிக்கவில்லை வெகு நேரம் கூடத்தில் அமர்ந்து இருந்தவனை தில்லையின் குரல் கலைத்தது.
"என்னய்யா இன்னும் தூங்கலையா? சித்த படுத்து எந்திரி ராசா" என்று அவன் தலையை வருடவும்.
"படுக்கனும் அப்பத்தா" என்றவன் கண்ணில் அவள் இல்லாத வெறுமை இருந்தது.
"என்னய்யா" என்றார் ஆதுரமாய்.
"பச் அவ இல்லாதது என்னமோ போல இருக்கு அப்பத்தா" என்றான் சலிப்பு தட்டிய குரலில்
"எனக்கும் தாய்யா... புள்ள இல்லாதது வீடே வெறிச்சோடி போயிருக்கு... அந்த புள்ள பேச்சும் சிரிப்பும் தான் இந்த வீட்டுக்கே அழகு ராசா... நாளைக்கு முத வேலையா புள்ளைய போய் பார்த்துவிட்டு வரனும்... என் கண்ணுக்குள்ளயே இருக்கா" என்றார்.
இவனுக்குமே அதே எண்ணம் தான் ஆனால் எவ்வாறு செல்வது என்ற யோசனையில் அல்லவா அமர்ந்து இருக்கிறான்.
என்னதான் மகளிடம் சீராடினாலும் அந்த வீட்டிற்கு மாப்பிள்ளை என்று உரிமையாய் சென்று வந்ததில்லை ஏதோ ஒன்று தடுக்கிறது ஒருவேளை ஜெயசந்திரன் தங்களை ஏற்றுக் கொள்ளாததா என்று கூட நினைத்தான் ஆனால் வாய்விட்டு சொல்ல முடியவில்லை
எப்படியும் நாளை சாயங்காலம் கோவிலுக்கு வரசொல்ல வேண்டும் என்று நினைத்தபடி அமரத்திருந்தவனுக்கு தில்லை சொன்ன விஷயங்கள் பாதி காதிலே விழ வில்லை.
"சரிய்யா நேரம் ஆகுது பாரு போய் பாடுய்யா" என்றவர் தானும் எழுந்து சென்றார். விசாகனுக்கு அவள் இல்லாத அறைக்கு செல்லக்கூட பிடித்தமில்லாமல் அமர்ந்திருந்தவன் முயன்று தனதறைக்கு சென்றான்.
ஒரு பக்கம் அவள் காலையில் கழற்றி வைத்திருந்த கண்ணாடி வளையல்கள் கண்ணில் பட அதை எடுத்து பார்த்தான். பின் கட்டிலில் ஓரத்தில் அவள் மாற்றிய புடவையை எடுத்து வாசம் பிடித்தவன் அதனை அணைத்தபடியே கண்களை மூடினான்.
அடுத்த பத்து நிமிடத்தில் போன் ஒலிக்க எடுத்து பார்த்தவனுக்கு முகம் மலரந்துவிட்டது. முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவன் "சனா" என்றான் அழ்ந்த குரலில். அவன் குரலே அவளை எவ்வளவு தேடுகிறான் என்பதை கூற கேட்டுக்கொண்டே இருந்தவளும் கொஞ்சம் தவித்துத்தான் போனாள். எப்போதும் கண்டிப்பும் மிரட்டலுமாய் ஆளுமையுடன் இருப்பவன் இப்படி சோர்ந்து இருப்பது அவளுக்கு என்னவோ போல் இருக்க "மாமா ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு" என்றாள்
மனைவி தன்னை அறிந்துக் கொண்டாளே என்று உணர்த்தவன் "அதுவா தூங்கிட்டு இருந்தேன் சனா அதான் ஒரு மாதிரி இருந்து இருக்கும்... ஆமா நீ இன்னும் தூங்கலையா மணி பதினொன்னு ஆகுது" என்றான் சதாரண குரலில்.
"தூங்கனும் மாமா... தூக்கமே வரலை உங்களுக்கு மட்டும் எப்படி தூக்கம் வருது" என்றவளது குரலில் கொஞ்சம் கோபம் இருந்தது.
"எல்லாம் வரும்... சரியா... இப்போ போனை வைச்சிட்டு கண்ணை மூடி தூங்கு உனக்கு முழிச்சா வாமிட் வேற வரும்" என்றான் குரல் கட்டளை இடுவதை போல இருந்தாலும் அதில் அக்கறையும் இருந்தது.
"ம்" என்று சோர்ந்து வந்தது குரல் உடனே "நாளைக்கு வருவிங்க தானே" என்றாள் அவன் வரவேண்டுமே என்ற தவிப்பில்
"ம் ஒரு முக்கியமான வேலை இருக்கு வரனும்... நாளைக்கு சாயங்காலம் ரெடியா இரு... கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்" என்றான். தனது ஆவலை அவளிடம் மறைத்தபடி
தேவாவுக்கும் அவன் வறேன் என்று சொன்னதே போதுமாய் இருக்க தோண்டி துருவி வேறு விஷயத்தை கேட்காமல் போனை வைத்துவிட்டு உறங்க முற்பட்டாள்.