1.என் பார்வை உனக்கும் இரகசியமா?

Sankaridayalan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புத்தம் புது காலை..

பொன்னிற வேளை..

என் வாழ்விலே..

தினந்தோறும் தோன்றும்

சுகராகம் கேட்கும்..

எந்நாளும் ஆனந்தம்..

புத்தம் புது காலை..

பொன்னிற வேளை..


அந்த அமைதியான அதிகாலை வேளையில் இளையராஜாவின் இசையில் என்னை மறந்து லயித்திருந்தேன்… இயற்கை வளம் ததும்பும் அழகான கோத்தகிரியின் சாலையின் இருபுறமும் நெடித்துயர்ந்த மரங்கள் ஆதித்யனின் அதிகாலைக்கிரணங்களை சாலையில் முழுவதுமாக விழவிடாமல் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கண்ணாம்மூச்சி விளையாடிக்கொண்டிருந்தன . அந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்தில் விடுபட்ட ஒரு சில ஒளிக்கீற்றுகள் என் முகத்திலும் மேனியிலும்பட்டு அந்த குளிருக்கு இதமான உணர்ச்சியைத் தந்துகொண்டிருந்தன .





"வானு ஏன் பேசாம அமைதியா வந்துகிட்ருக்க என்ன ஆச்சு… " என என் அருகினில் அமர்ந்து காரை செலுத்திக்கொண்டிருந்த என் காதல் கணவன் ஹரி என்னைப் பார்த்துக்கேட்டார் .


"ஒன்னும் இல்ல ஹரி கொஞ்சம் பயமா இருக்கு … முதல்முறையா உங்க வீட்டுக்கு போறோம் . நீங்க வேற வீட்டுல ராணுவ கட்டுப்பாடே தோத்துடும்ன்ற அளவுக்கு ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன் இருக்கும்ன்னு சொல்லிருக்கீங்க . இப்படி ஒரு சிச்சுவேஷன எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியலை பயம் பாதி கவலை மீதி " நான் அவனின் கேள்விக்கு பதில் உரைத்தேன் .


" ஹ்ம்ம் புரியுது வானு ஆனா என்ன பண்றது . வேற வழியில்லாததால தானே நாம இப்படி ரகசியமா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாகிடுச்சு … உன்ன எந்த சூழ்நிலையிலயும் என்னால இழக்க முடியாது வானு. ஐ டோன்ட் வான்ட் டு டேக் எனி ரிஸ்க் இன் மை லைஃப்." . ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் அளித்தார் என்னவர் .


" உன்ன எந்த சூழ்நிலையிலயும் என்னால இழக்க முடியாது வானு " அவரின் சொற்கள் என் காதுக்குள்ளேயே ரீங்காரமிட்டு அவரின் என்மீதான அன்பில் என்னைப் பெருமைக்கொள்ளச் செய்தது .


" சரிங்க … உங்க வீட்ல எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க … பிகாஸ் உங்களுக்குதான் தெரியுமே அவங்களோட பிஹேவியர்ஸ் அன்ட் ஆட்டிட்யூட்ஸ் பத்தி … நீங்க கொஞ்சம் சொன்னீங்கன்னா நான் அதுக்கேத்த மாதிரி நடந்துப்பேன் ". என்று அவரின் வீட்டு ஆட்களின் குணாதிசயங்களைப் பற்றித் அறிந்து அதற்கேற்றவாறு நடந்துக்கொள்ளக் கேட்டேன். ஏனெனில் அவர் இதுவரை அவர் வீடு மிகவும் கண்டிப்பானது , நிறைய கட்டுபபாடுகள் இருக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர அவர் வீட்டு மனிதர்களின் தனிப்பட்ட குணங்களை என்னிடம் பகிர்ந்ததில்லை . அதனாலேயே இந்த கேள்வியை அவரின் முன் வைத்தேன் .


" இது எதுக்கு புதுசா வானு… இங்க பாரு வானு நீ யாருக்காகவும் உன்னை மாத்திக்கத்தேவையில்லை… நான் உன்னை உன்னோட கேரக்டரைத்தான் விரும்பினேன் . இப்படி மத்தவங்களுக்காக உன்னோட சுயத்தை நீ மாத்திக்கத் தேவையில்லை . அங்க வந்த பிறகு நீயே அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்க . ஏன்னா நான் இப்பவே அவங்களைப் பத்தி சொல்லி வச்சா என்னோட கண்ணோட்டத்துல இருந்து சொன்ன மாதிரி இருக்கும் அன்ட் அதுதான் உண்மையும் கூட . நீயே அவங்க கூடப் பேசி பழகும்போது அவங்களைப்பத்தின கருத்து உனக்கு வேற மாதிரி இருக்கும் இல்லையா ? அதனால நீயே அவங்க கூட பேசிப் பழகும்போது புரிஞ்சிப்ப… டோன்ட் வொர்ரி" என்று கூறியபடியே என்னைப் பார்த்து சிரித்தார் .


" அவர் எப்பொழுதுமே இப்படித்தான் . தன்னுடைய கருத்தை எவர் மீதிலும் ஏற்றி இதுதான் சரி அதுதான் சரி என்று சொல்லமாட்டார் . என்னை அவரின் பால் ஆகர்ஷணித்த குணங்களில் இதுவும் ஒன்று .

" வீடு வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் ஹரி ." நான் கேட்டேன்


" இதோ இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும் " அவர் கூறியவுடன் நெஞ்சம் கொஞ்சம் படபடத்தது என்னவோ உண்மைதான். சென்னையிலிருந்து ஓர் இரவு முழுவதும் பிரயாணித்தபோது இல்லாத படபடப்பு இந்த பத்து நிமிடத்தில் கிடைத்தது. கணவன் வீட்டு உறவுகளை சந்திக்கப்போகும் பயம் மனத்தினில் முண்டியடித்தது . என் புகுந்த வீட்டு உறவுகளை என்னவர் எனக்கு புகைப்படத்தில் கூட காட்டவில்லை . ஆனால் பொத்தாம்பொதுவாக ஓரளவு வீட்டில் செயல்படுத்தப்படும் கட்டுப்பாடுகளை மட்டும் சொல்லிவைத்திருந்தார்.


இதோ வந்துவிட்டது கணவனின் வீடு @ மாமியார் வீடு . அதைப் பார்த்தால் வீடு போலத் தோற்றமளிக்கவில்லை . ஒரு கோட்டையையே செதுக்கியிருந்தார்கள் . அவ்வளவு பெரிய கோட்டை . "இவ்வளவு உயரத்தில் எவ்வளவு பெரிய கோட்டை… எப்படி நிர்மாணிக்க முடிந்தது இவர்களால்"என்ற எண்ணம் என் மனதில் எழாமல் இல்லை...கோட்டையின் நுழைவு வாயிலில் இருந்த கேட்டே அந்த கோட்டையின் பிரமாண்டத்தைப் பறைசாற்றியது . எங்கள் காரினைப்பார்த்தவுடன் கேட்டின் அருகே நின்றிருந்த செச்யூரிட்டி பவ்யமாக எழுந்துநின்று கேட்டினைத் திறந்துவிட்டான் .


கார் கோட்டையின் உள்ளே நுழைந்ததுமே அங்கே வாயிலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த வேலைக்காரி " சின்ன ஐயா வந்துட்டாரு என்றவாறு உள்ளே ஓடினாள் .


அவர் காரின் இக்னீஷியனை அனைத்த நொடியே அவரை வரவேற்க அவரின் ஒட்டுமொத்த குடும்பமே வாயிலிற்கு வந்தது . ஆனால் யார் யார் என்னென்ன உறவுமுறை என்று மட்டும் எனக்குத் தெரியவில்லை.


அதுவரை புன்னகை பூத்தபடியே முகத்தை வைத்துக்கொண்டிருந்தவர்கள் அவருடன் கூடவே சேர்ந்து இறங்கிய என்னைப் பார்த்ததும் சந்தேகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். .


அக்கூட்டத்தில் படியத்தலைவாரி முகம் முழுக்க மஞ்சள்பூசி அளவான நெற்றியில் அழகாக குங்குமம் தரித்து சர்வ லட்சணமாக, ஒரு ஜாடையில் ஏறத்தாழ என் கணவனின் சாயலில் இருந்த நடுத்தர வயதுப் பெண்மணி அந்த சந்தேகப்பார்வை விலகாமலேயே " யாருடா இந்த பொண்ணு … ஃபோன்ல பேசும்போதுகூட உன்கூட யாரும் வர மாதிரி நீ சொல்லலியே " என்று கேட்டார். ஹரி ஒரு முறை அவரின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படத்தை என்னிடம் காட்டியிருந்தார். அதிலிருந்து அவர்தான் என் கணவரின் அம்மா என்று சுலபமாக கண்டுகொண்டேன். ஹரியின் அப்பா அவரின் அம்மாவின் அருகிலேயே நின்றிருந்தார். இவர்களைத் தவிர அனைவருமே எனக்கு பரிச்சையமில்லாத முகங்கள்.


" அம்மா இது வான்மதி … உங்க மருமக .. சாரிம்மா உங்களுக்கு சொல்லாமயே கல்யாணம் பண்ணிகிட்டேன். என்னோட சூழ்நிலை அந்த மாதிரிம்மா … தயவு செஞ்சு என் மன்னிச்சிடுங்க "கெஞ்சும் குரலில் சொல்லிக்கொண்டு இருந்தார் என்னவர்.


இதை அவரின் அம்மா மட்டுமல்ல யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது அவர்களின் முகம் போன போக்கிலேயே தெரிந்தது .


" என்னடா … என்ன சொல்ற நீ … ஏதோ இதுதான் நான் புதுசா வாங்கின ஃபோன் … நல்லா இருக்கான்னு பாருங்கன்னு சொல்ற மாதிரி வந்து சொல்ற … இது என்ன லேசுப்பட்ட விஷயம்ன்னு நினைச்சிட்டியா … நம்ப குடும்பத்துல உள்ள பழக்கம் என்னன்னு உனக்கு தெரிஞ்சும் இப்படி பண்ணிட்டு வந்து நிக்கறியே…" ஒரு நடுத்தர வயது இளைஞன் கேட்டார் . இவர்தான் என்னவரின் அண்ணணாக இருக்க வேண்டும் .


" இல்ல அண்ணா… என்னைப் புரிஞ்சிக்கங்க … வான்மதி ரொம்ப நல்ல பொண்ணு… அவளுக்கு என்னை விட்டா இப்போ யாருமே இல்ல … எனக்காக அவ குடும்பத்தையே விட்டுட்டு வந்துருக்கா அண்ணா… அவளை காலம் முழுக்க கண்ல வச்சு தாங்குவேன்னு வாக்கு கொடுத்துட்டு இப்ப திடீர்னு அவளை எப்படி விட்டுட்டு வரமுடியும் ". என்னவர் என்னை விட்டுக்கொடுக்காமல் பேசினார் .


ஹரியின் கூற்றுக்கு ஏதோ பதில் கூற எத்தனித்த அவரின் அண்ணனை தடுக்கும் விதமாக அதிகாரத்தொனியுடன் கையை நீட்டித்தடுத்த என் மாமியார் .


" உஷா அவனையும் அவன் மனைவியையும் உள்ள கூட்டிக்கிட்டு வா " என்றவாறு கட்டளையிடும் தொனியில் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் . உஷா என்று அவரால் அழைக்கப்பட்ட பெண் அதிர்ச்சி தொனிக்கும் முகபாவத்தை குறைத்து கொஞ்சம் முகத்தினை சகஜமாக்கிக்கொண்டு எங்களை உள்ளே அழைத்தார். பார்ப்பதற்கு கொஞ்சம் அமைதியானவராக தெரிந்தார் .


நான் என் ஹரியின் முகத்தினை சற்று மிரட்சியோடு பார்க்க அவர் என் கைகளை அழுந்தப்பிடித்தார் . அந்தப் பிடிப்பின் அர்த்தம் எனக்கு தெரியாததல்ல … நான் எப்பொழுதெல்லாம் கவலையாக உணர்கிறேனோ அப்பொழுதெல்லாம் உனக்கு நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சியை எனக்கும் ஊட்டும் பிடிப்பு. உன்னை எந்த நிலையிலும் கைவிடமாட்டேன் என்று சொல்லும் பிடிப்பு. இதை நானே அவரிடம் அநேக முறை கூறியிருக்கிறேன் . எனவே இந்த சமயத்தில் அவரின் இந்த செயல் எனக்கு ஆதரவளித்தது.


உள்ளே சென்ற பின்னர் நான் கொஞ்சம் இல்லை இல்லை மிகவும் பிரமித்துத்தான் போனேன் . வெளியில் தெரிந்த பிரமாண்டத்திற்கு சற்றும் குறைவில்லாமல் உட்புறமும் இருந்தது . எல்லாம் பழங்கால வடிவமைப்புகள் . அங்கிருந்த பொருட்களும் கலைநயமிக்க பழங்கால பொருட்களின் சாயல்களிலேயே இருந்தது . நவீனத்துவம் என்பதை அவ்வீட்டில் மன்னிக்கவும் கோட்டையில் தேடிப்பார்க்கத்தான் வேண்டும் .


" உஷா… அவனையும் அவன் மனைவியையும் கொஞ்சம் பூஜை அறைக்கு கூட்டிட்டுவா … " உள்ளேயிருந்து என் மாமியார் குரல் கொடுத்தார் .




ஹரியும் என்னை பூஜை அறைக்கு அழைத்து சென்றார். அழகான பூஜையறையில் நடுநாயகமாக பெரியதாக இருந்த காமாட்சியம்மன் விளக்கை பார்த்தவாறு "அவளை விளக்கை ஏத்தச்சொல்லு உஷா " என்றார் .


சுபத்ரா… என்ன சொல்ற… அவன்தான் ஏதோ பைத்தியக்காரத் தனமா பண்ணிட்டான்னா… நீ உடனே அந்த பொன்னை விளக்கேத்த சொல்ற"ஹரியின் அப்பா சுபத்ரா என அழைக்கப்பட்ட என் மாமியாரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.


"நான் என்ன பண்றேன்னு எனக்கு நல்லா தெரியுங்க… இதுல யாரும் தலையிடாதீங்க" என் மாமியாரின் பதிலில் மாமனார் அமைதியாகிவிட்டார்.அவர் மட்டுமல்லாமல் அங்கு குசு குசுவென்று பேசிக்கொண்டிருந்த அனைவருமே அமைதியாகினர்.


எனக்கு அகத்தில் ஊற்றெடுத்த மகிழ்ச்சி முகத்தின் வாயிலாக வெளிவந்தது . இவர் என்னை மருமகளாக ஏற்றுக்கொண்டு விட்டாரா ? எந்த ஒரு வீட்டிலும் விளக்கேற்றும் உரிமை மருமகளுக்குத்தானே தரப்படும் . ஆனால் இதுவரை என்னிடத்தில் எதுவும் பேசவில்லையே!"

எனக்குள்ளேயே கேள்வியினைக் கேட்டுக்கொண்டே காமாட்சி விளக்கை ஏற்றினேன். மனமுருகப் பிரார்த்தனை செய்து விட்டு பூஜையறையை விட்டு வெளியேறினோம் .


என்னை அங்கு யாருக்கும் பிடிக்கவில்லை என்பது மட்டும் அங்குள்ளவர்களின் முகச்சுளிப்பிலேயே அறிந்துகொண்டேன். அவர்களின் அந்த செயலும் நியாயம் தானே. திடீரென ஒரு புது மனிதர் நம் வீட்டிற்குள் நுழைந்து நம்மில் ஒருவராக புழங்குவது என்பது சற்று சிரமமான விஷயம்தானே … என்னால் அதை உணர முடிந்தது .


"உஷா இவங்க ரெண்டு பேரையும் அவங்க ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லு " சொல்லிவிட்டு விருட்டென்று அங்கிருந்து சென்று விட்டார் .


நானும் ஹரியும் முதல் மாடியில் வலதுபுறம் இருந்த மூன்றாவது அறைக்குச் சென்றோம் . அறை படுசுத்தமாக இருந்தது . ஹரியின வருகையையொட்டி தூய்மை செய்திருப்பார்கள் போல .


உள்ளே சென்றவுடன் என் தோளின் மீது கைவைத்து என்னை அவரின் புறம் திரும்பச்செய்தவர் " என்ன வானு ரொம்ப பயந்துட்டியா " என்று கேட்டார் . " இந்த சிச்சுவேஷன்ல பயப்படாம இருந்தாதான் அதிசயம் ஹரி… " என்றேன்.


" ஹாஹா… சரி சரி ரொம்ப தூரம் கார் ஓட்டிட்டு வந்தது டயர்டா இருக்கு நான் போய் குளிச்சிட்டு வந்துட்றேன் .... நீ அதுவரைக்கும் படுத்துட்டு இரு .. அப்புறம் எல்லாம் சாவகாசமா பேசலாம்" என்று கூறி குளியலறைக்குள் புகுந்தார் ஹரி.


சிறிது நேரம் அறையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த நான் பால்கனியிலிருந்து சில்லென்ற காற்று வரவே அங்கே சென்று சிறிது நேரம் நின்றிருந்தேன். எதேச்சையாக அருகிலிருந்த அறையின் பால்கனி கண்ணில் பட்டது . அங்கு ஒரு பெண் போல்கா டாட் இட்ட வெண்ணிற சேலையைக் கட்டிக்கொண்டு என்னையே முறைத்துக்கொண்டிருந்தாள் . அவளின் அப்பார்வையே என்னை நடுங்கச்செய்தது.


தொடரும்
 

Author: Sankaridayalan
Article Title: 1.என் பார்வை உனக்கும் இரகசியமா?
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN