7. என் பார்வை உனக்கும் இரகசியமா?

Sankaridayalan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாட்கள் நிமிடங்களாக மாறி அதன் போக்கிற்கு வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. நாங்கள் முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடத்திற்கு அடி எடுத்து வைத்தோம்.பாடத்திட்டங்கள் இன்னும் கடினமாக்கப்பட்டு இருந்தன.அது ஒரு பக்கம் இருந்தாலும் நானும் மயூவும் எங்களின் கல்லூரி வாழ்க்கையை இரசித்துக்கொண்டு தான் இருந்தோம்.


இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருக்க ஒரு நாள் மைக்ரோபியல் ஜெனிடிக்ஸ் பாடத்தைப் பற்றி எங்கள் துறைத் தலைவரே விரிவுரையளித்துக்கொண்டிருந்தார்.


நான் உன்னிப்பாக அவர் கூறுவதை கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.ஆனால் என்னை ஒழுங்காக பாடத்தைக் கவனிக்கவிடாமல் குசுகுசுவென்று என்னிடம் பேசிக்கொண்டே இருந்தாள் மயூ. "ஏய் கொஞ்சம் சும்மா இருடி… இந்தம்மா நடத்துறது ஏற்கனவே விளங்கலை… நீ வேற அதையும் கவனிக்க விடாம டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருக்கி… கொஞ்ச நேரம் அமைதியா இருந்து தொலையேன்" என கடுகடுத்தபடி கூறினேன் நான்.


நான் அவளிடம் பேசுவதை மட்டும் கண்டுவிட்ட என் துறைத்தலைவர் கோபத்துடன்"வான்மதி….ஸ்டாப் இட்... என்ன நடக்குது அங்க… எவ்வளவு முக்கியமான டாபிக்க பத்தி லெக்சர் எடுத்துட்டு இருக்கேன்… நீ என்னடான்னா நீயும் கவனிக்காம கூட இருக்குறவங்களையும் கவனிக்க விடாம பண்ணிட்டு இருக்க...உனக்கு இந்த டாபிக் அவ்வளவு ஈஸியா இருக்கா… கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்… என்னோட அடுத்த க்ளாஸ்க்கு நீ வரனும்னா இந்த டாபிக்ல ஒரு அசைன்மென்ட் ரெடி பண்ணி எடுத்துட்டு வரனும்...இல்லைன்னா என் க்ளாஸ்க்கே வராத… "என சம்பந்தமே இல்லாமல் என் மேல் காய்ந்தார் என் துறைத்தலைவர்.


"இல்ல மேம் நான் எதுவும் பண்ணலை மேம்… சாரி மேம்"என்ற என்னை


"ஷட் அப் வான்மதி… டூ வாட் ஐ சே "என்பதுடன் நிறுத்திக்கொண்டார்.


அட அவ பேசினதுக்கு இந்தம்மா என்னை வெளிய போக சொல்றாங்களே… பத்ததாதுக்கு இந்த புரியாத டாபிக்ல அசைன்மென்ட் வேறயா…என நினைத்த எனக்கு மயூவின் மேல் அடக்கமாட்டாமல் கோபம் வந்தது.


வகுப்பறையிலிருந்து கலங்கிய கண்களுடன் வெளியேறிய நான் எச்.ஓ.டி எழுதி வர சொன்ன அசைன்மென்ட் தலைப்பு உள்ள புத்தகத்தை எடுக்க எங்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு சென்றேன்.


பயாலஜி புத்தகங்கள் உள்ள வரிசைக்குச் சென்று மைக்ரோபியல் ஜெனிடிக்ஸ் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அப்படியே கல்லூரி கேண்டீனுக்குச் சென்றேன்.


புத்தகத்தை திறந்து பார்த்த எனக்கு தலைக்கு வெளியே பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருந்தது. ஒன்றுமே புரியவில்லை…


எப்பொழுதுமே எங்கள் எச்.ஓ.டி. அசைன்மென்ட் என்று கொடுத்துவிட்டால் அதை எழுதி கொடுத்தால் மட்டுமே போதாது அதை மற்ற மாணவர்கள் முன்னிலையில் விளக்கிக்காட்டவும் வேண்டும்… அது எழுதப்படாத விதி… ஆண் பெண் இரு பாலர்களும் பயிலும் கல்லூரி ஆதலால் எனக்கு இன்னும் உதறல் எடுத்தது. அனைவர் முன்னிலையிலும் மானம் போய்விடுமே… அப்போது "வான்மதி"

என்று என்னை யாரோ அழைக்கும் குரல் கேட்டது.


புத்தகத்தைப் பார்த்தபடி குனிந்திருந்த நான் என் பெயரைக் கேட்டவுடன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தால் அங்கு ஹரி முகத்தில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.


"நீ.. நீங்கலா… நீங்க எப்படி எங்க காலேஜ்க்கு… " முகத்தில் வலிய புன்னகையை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்.


"நான் உங்க காலேஜ்ல தான் என்னோட மாஸ்டர்ஸ் ஜாய்ன் பண்ணிருக்கேன் வான்மதி… இந்தப் பக்கமா வரும்போது உங்களைப் பார்த்தேன் அதான் ஒரு ஹாய் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்...சரி என்ன ஆச்சு… ஏன் புக்க பார்த்து அழுதுட்டு இருக்கீங்க...என்ன ஆச்சு…?"என என் கேள்விக்கு பதில் அளித்து அவனும் என்னை நோக்கி ஒரு கேள்வி அம்பை எய்தான்.


"இல்லையே… அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே... "என இன்னும் வலிய புன்னகையை என் முகத்தில் ஒட்ட வைத்தேன்.


"வான்மதி… பொய் சொல்லாதீங்க… ப்ராப்ளம் என்னன்னு சொன்னீங்கன்னா கண்டிப்பா என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்" என்றான் அவன்.


இவனிடம் உதவி கேட்கலாமா? என்று ஒரு கணம் சிந்தித்த நான் அதுதான் சரியென்று தோன்றவே அன்று நடந்த அத்தனையையும் சொல்லிவிட்டேன்.


"அட… நீங்க இதுக்குத்தான் இப்படி முகத்தை தொங்க வச்சிக்கிட்டு இருந்தீங்களா? இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு சொன்னீங்கன்னா உண்மையான பிரச்சனையை எப்படி ஃபேஸ் பண்ணுவீங்க… நீங்க ரொம்ப தைரியசாலின்னு நினைச்சேன்…சின்ன விஷயத்துக்கே இப்படி ஃபீல் ஆகுறீங்களே…. மைக்ரோபியல் ஜெனிடிக்ஸ் தானே…அது மேத்ஸ் மாதிரிதான் புரியாத வரையும்தான் ஆட்டம் காமிக்கும் ... புரிஞ்சிக்கிட்டா கான்ஸெப்ட் ரொம்ப ஈஸி ஆகிடும்… பீ கூல் வான்மதி… நான் உங்களுக்கு சொல்லித்தறேன்" என்று என்னை சமாதானப்படுத்தினான்.


அவன் அப்படி சொல்லவும் மனதுக்குள் அவ்வளவு கடின செமினார் டாபிக்கையே சுலபமா புரிய வச்சவர்… இதையும் நல்லாதான் சொல்லிக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தோன்றவே அவனிடம் "ரொம்ப தேங்கஸ் ஹரி… நான் நிஜமாவே ரொம்ப பயந்துட்டு இருந்தேன்…தாங்க் யூ சோ மச் ஹரி… " என்று அவனுக்கு நன்றி கூறினேன்.


புன்னகையுடன் எனக்கு அந்த பாடத்தை பற்றி விளக்க ஆரம்பித்தான் அவன்.அடுத்து வந்த ஒரு இருபது நிமிடங்கள் ஐந்து நிமிடங்களாக மாயமாய் மறைந்து போனது . அவ்வளவு எளிமையாக இருந்தது அவனது விளக்கம்.


"ஹரி… தேங்க்ஸ்…. தேங்கஸ் அ லாட்… இதே என்னவோ ராக்கெட் சைன்ஸ் அளவுக்கு மூளையை குழப்பும்னு நினைச்சிட்டு இருந்தேன்… ஆனா நீங்க சான்ஸே இல்ல அவ்வளவு ஈஸியா சொல்லிக்கொடுத்துட்டீங்க… " என்று கூறி என் நன்றகயைத் தெரிவித்தேன்.


"ஹாஹா… வான்மதி… ராக்கெட் சைன்ஸ் கூட புரிஞ்சி படிச்சா ஈஸிதான்… டோன்ட் வொர்ரி… நல்லா அசைன்மென்ட் எழுதுங்க… " என்றபடி புன்னகையுடன் அங்கிருந்து சென்றான் ஹரி….


செல்லும் அவனையே விழி விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.

அவன் அங்கிருந்து செல்லவும் மயூ என்னைத் தேடி கேன்டீனுக்கே வரவும் சரியாக இருந்தது. என்னைத் தேடி வந்தவள் என்னருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.


அவளைப் பார்த்தவுடன் மீண்டும் என் கோபம் தலைக்கேறியது. அவள்புறம் பார்க்காமல் நான் சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டேன்.


"வானு.. வானு… சாரிடி… நான் பண்ண தப்புக்கு மேம் உன்ன வெளிய அனுப்பிட்டாங்க…உனக்காக நான் பேச வரும்போது ஒரு முறை முறைச்சாங்க பாரு என் வாய் கம் போட்ட மாதிரி ஒட்டிக்கிச்சு…. சாரிடி… ப்ளீஸ் டி " என இத்தனை மன்னிப்பு கேட்பவளிடம் எப்படி என் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருப்பது.


"சரி சரி… விடு பரவாயில்லை...டைம் ஆகிடுச்சு வா வீட்டுக்கு போகலாம்" என அவளிடம் சமாதானக்கொடியை பறக்கவிட்டு இருவரும் பேருந்து நிறுத்தத்தை அடைந்தோம்.


"வானு… அசைன்மென்ட் டாபிக் டஃப் ஆச்சே… நோட்ஸ் எல்லாம் எடுத்துட்டியா…"என என்னிடம் கேட்டாள் மயூ.


"ஓ… அதெல்லாம் அந்த மேம் க்ளாஸ விட்டு வெளிய வந்ததும் எடுத்துட்டேன்…"என்றேன். ஏனோ அவளிடம் ஹரியைப் பற்றிக் கூற மனம் வரவில்லை.


என் வீட்டிற்கு சென்றதும் முகம் கழுவி விட்டு சோஃபாவில் வந்தமர்ந்தேன். என் அம்மா யசோதா மணக்க மணக்க சுடச் சுட ஃபில்டர் காஃபியை எடுத்து வந்து என் முன் நீட்டினார்.


அந்த காஃபியின் வாசத்தில் அந்த நாட்களின் அயர்ச்சியெல்லாம் காணாமல் போனது.


"அம்மா எப்படிம்மா நீ போட்ற காஃபி மட்டும் இவ்வளவு வாசமா டேஸ்ட்டா இருக்கு… கடையில கூட இந்த டேஸ்ட் வர மாட்டேங்குது… எங்க இருந்துதான் சமைக்க கத்துக்கிட்டியோ…." என என் அம்மாவையும் அவரின் காஃபியையும் ஒரு சேர புகழ்ந்துவிட்டு அவரைக் கட்டிக்கொண்டேன்.


"ஹ்ம்ம்… எங்க அம்மா சமைக்கும்போது பக்கத்துல இருந்து அவங்களுக்கு கூட மாட உதவி செஞ்சிட்டு கத்துகிட்டேன்… உன்னையும் உன் அக்காவையும் போல கிச்சன் பக்கமே எட்டிப்பார்க்காம இருந்துருந்தா எங்க அம்மா என் இடுப்பு எலும்பை உடைச்சிருப்பாங்க"என என்னைக் கேலி செய்தவரை பார்த்து முறைத்தபடி.


"உன்னைப் போய் பாராட்டினேன் பாரு என்ன சொல்லனும்… என் வாழ்க்கைல இது போல கேவலமான ஒரு காஃபியை நான் குடிச்சதே இல்ல… ஒரே பால் வாசனை " என்று கூறி என்னை அவர் செய்த கேலிக்கு அவரை பழி வாங்கிய திருப்தியடைந்துக் கொண்டேன்.


என் அம்மாவோ என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே… "வாலு… வாலு…வாயப் பாரு… அமைதியா காஃபிய குடி… நைட்டுக்கு குழிபணியாரமும் தக்காளி சட்னியும் உனக்கு ஓகேவா" எனக் கேட்டு அதற்கு என் சம்மதத்தை வாங்கியவுடன் மறுபடி கிச்சனிற்குள் சென்று மறைந்துவிட்டார்.


நானும் என் அம்மாவும் எப்பொழுதும் இப்படித்தான் ஒருவருக்கொருவர் கேலி செய்து விளையாடிக்கொண்டிருப்போம்.அதுவும் துணைக்கு என் அக்கா மீராவும் வந்துவிட்டால் ஒரே ரகளைதான்.


மீராவிற்கு திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. திருமணம் முடிந்ததும் நியூயார்க்கில் கணவனுடன் குடியேறியவள் வருடத்திற்கு ஒரு முறை சென்னைக்கு வந்து சென்று கொண்டிருந்தாள்.


அவளுக்கு ஒரு வயதில் அத்வைத் என்ற குட்டி வாண்டு உள்ளது. ஃபேஸ் டைமில் அவன் செய்யும் சேட்டைகளை கண்டுகளிப்பதுதான் எங்களின் பொழுதுபோக்கு.


எங்களின் சேட்டையெல்லாம் என் தந்தை சக்திவேல் எங்களின் வீட்டிற்குள் நுழையும் வரைதான்… அவர் வந்தவுடன் ஆளாளுக்கு கப்சிப் என்று மூச்சு விடும் சப்தம் மட்டுமே கேட்கும். பாசத்தை எல்லாம் அளவுக்கதிகமாக காட்டுபவர் தான். ஆனால் ஒழுக்கம் என்று வந்துவிட்டால் பாசம் காணமல் எங்கேயோ பறந்து சென்றுவிடும்.அவ்வளவு கண்டிப்பானவர்.காவல்துறையில் உயரதிகாரியாக இருப்பவரல்லவா…


அன்று இரவு உணவை முடித்துவிட்டு என் அறைக்குச் சென்று அசைன்மென்டை எழுதுவதற்காக புத்தகங்களை பிரித்து வைத்தேன். என்னையும் அறியாமல் ஹரியின் முகம் அந்த புத்தகத்திற்குள் வந்து போனதொரு பிரம்மை… மெல்லிய கீற்றாக ஹரியின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு மெலிதாக மின்ன ஆரம்பித்ததை என்னால் உணர முடிந்தது. இதுவரை எந்த ஆடவனின் மீதும் இந்த உணர்வு எழுந்ததில்லை… இவ்வளவு ஏன் செலிப்பிரிட்டி க்ரஷ் கூட எனக்கு இருந்ததில்லையே… இந்த புது உணர்வு ஒரு பக்கம் பிடித்திருந்தாலும் ஒரு பக்கம் அச்சத்தையே கொடுத்தது.


அந்த உணர்வை எடுத்து நன்றாக மூட்டைக்கட்டி மனதின் ஓரத்தில் போட்டுவிட்டு(போட்டுவிட்டதாய் நினைத்துக் கொண்டு) கண்ணும் கருத்துமாய் அசைன்மெண்டை எழுத ஆரம்பித்தேன்.


மறுநாளே எனது துறைத் தலைவரின் வகுப்பு இருந்தது. நன்றாக தயார் செய்து கொண்டு போன அசைன்மென்டை அவரிடம் சமர்ப்பித்தேன்.


என்னை ஏற இறங்கி நோக்கியவர் "வில் யூ எக்ள்ப்ளெய்ன் அபௌட் யுவர் அசைன்மெண்ட்?" என நான் எழுதிய அசைன்மெண்டை என்னையே விளக்கச் சொன்னார்.


"சுயர் மேம்" என்றபடி நேற்று ஹரி எனக்கு விளக்கிய அனைத்தையும் ஒரு குட்டி செமினார் போல அனைவருக்கும் விளக்க ஆரம்பித்தேன். அது முடிந்ததும் என் துறைத்தலைவரோ என் கையைப் பற்றிக் குலுக்கியபடி "வாவ் வான்மதி… யூ ஆர் சச் எ ப்ரில்லியண்ட் ஸ்டூடன்ட்… அருமையா இருந்துச்சு உன்னோட எக்ஸ்ப்ளனேஷன்… கீப் இட் அப் மை சைல்ட்" என்றபடி என்னைப் பாராட்டினார்.


இந்தப் பாராட்டிற்கு எல்லாம் காரணமான ஹரியை மீண்டும் என் மனது நினைக்க ஆரம்பித்தது. ஒரு முறை அவனைச் சந்தித்து நன்றி சொல்லிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன் நான்.


நான் என் இடத்தில் சென்று அமர்ந்ததும் என்னருகில் அமர்ந்திருந்த மயூ "ஏய் வானு… என்னடி… எப்படிடி இது… சூப்பரா இருந்துச்சு உன்னோட எக்ஸ்ப்ளனேஷன்… அந்த மேம்க்கே செம ஷாக்கிங்... எப்படிடி இது?யாராவது சொல்லிக்கொடுத்தாங்களாடி?...என விழிகளில் வியப்புடன் கேட்டாள்.


"அதெல்லாம் யாரும் சொல்லிக்கொடுக்கலை… நானே தான் புக்க ரெஃபர் பண்ணேன். கொஞ்சம் இன்டர்நெட்ல இன்ஃபர்மேஷன் கேதர் பண்ணேன் அவ்ளவுதான்..." என அவளிடம் உண்மையை மறைத்துக் கூறினேன்.மீண்டும் அவளிடம் ஹரியைப் பற்றிக் கூற என்னுள் ஏதோ தடுத்தது


"ஹ்ம்ம்… அவ்வளவு பெரிய அறிவாளி ஆகிட்டிங்க நீங்க… சரி சரி நீ சொன்னதை நான் நம்பிட்டேன்…" என்று கேலியாக கூறினாள்.


அவளின் பேச்சை திசை மாற்றும் பொருட்டு "அம்மா தாயே… இப்பதான் நான் ஒரு பனிஷ்மென்டை கம்ப்ளீட் பண்ணிட்டு வந்துருக்கேன். நீ மேம் க்ளாஸ் நடக்கும்போது மறுபடியும் என்கிட்ட பேசி என்னை திட்டு வாங்க வைக்காத.. ப்ளீஸ்"என்று கூறினேன்.


நான் அப்படிக் கூறியவுடன் என்னை ஒரு முறை முறைத்தவள் எனக்கு எதிர்ப்புறம் திரும்பிக்கொண்டாள்.அவளின் செய்கையில் சிரிப்பு வர நானும் எங்கள் துறைத்தலைவர் நடத்தும் பாடத்தை கவனிக்க ஆரம்பித்தேன்.


வகுப்பு முடிந்ததும் நானும் மயூவும் சாப்பிடுவதற்காக கேண்டீனுக்குச் சென்றோம். காலியாக இருந்த டேபிளில் அமர்ந்து கதை பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.


சரியாக அந்நேரம் பார்த்து "ஹாய் வான்மதி…உங்க அசைன்மென்டை மேம்கிட்ட சப்மிட் பண்ணிட்டீங்களா? என்றபடி திடீரென ஹரி எங்களுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தான்.


எனக்கு அவன் திடீரனெ வந்தமர்ந்தது பதட்டத்தையே கொடுத்தது. இதுவரை மயூவிடம் எதையுமே மறைக்காத நான், இவனைச் சந்தித்தைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே… அவன் மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ச்சியாய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
 

Author: Sankaridayalan
Article Title: 7. என் பார்வை உனக்கும் இரகசியமா?
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN