உன்மனச் சிறையில் 1

MadhuManohar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"கனம் நீதிபதி அவர்களே! இப்போது இந்த வழக்கின் இரண்டாவது சாட்சியான, வெய்ட்டர் மாணிக்கத்தை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."

ஒருமணி நேரமாக வழக்கு நடந்துகொண்டிருந்தாலும் எவ்வித நடவடிக்கையும் இன்றி நீதிமன்ற அறையே நிசப்தமாக அமர்ந்திருக்க, நீதிபதி அனுமதி வழங்கியதும் அந்த நபர் கூண்டில் ஏற்றப்பட, சத்தியப் பிரமாணத்தை வாங்கிக்கொண்டு அரசு வக்கீல் அமர, "யூ ப்ரொசீட்" என்றார் நீதிபதி.

தன்னெதிரில் கம்பீரமாக நிற்கும் அந்த வழக்கறிஞரின் கண்களை சந்திக்க முடியாமல் அங்குமிங்கும் பார்த்தபடி இருந்தான் அந்த சாட்சி.

தன் இரையை வட்டமிட்டுச் சுற்றிவரும் சிங்கத்தைப் போல மெல்ல அவன்முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள் வழக்கறிஞர் மீரா.

"மிஸ்டர் மாணிக்கம். ஜட்ஜ் ஐயாவுக்கு கேட்கற மாதிரி சொல்லுங்க. சம்பவம் நடந்த அன்னிக்கு சம்பவ இடத்தில நீங்க எங்க இருந்தீங்க, என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?"

அவளது குரல் மன்றத்தின் உயர்கூறையை அடைந்து எதிரொலிக்க, சாட்சி மாணிக்கம் லேசாகக் கனைத்துவிட்டுப் பேசத் தொடங்கினான்.

"மேடம் எனக்கு அன்னிக்கு நைட் ஷிப்ட் மேடம். லேசா தூக்கம் வர மாதிரி இருந்தது. அதான் கிச்சன் பக்கம் போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்னு போனேன். சரியா பின்பக்க வாசல்கிட்ட நிக்கும்போது தலைக்குமேல முதல்மாடியில டமார்னு சுடுற சத்தம் கேட்டதுங்க. அப்றம் நான் போய் என்னன்னு பாத்தப்போ அந்த சார் செத்துக்கிடந்தார். ரூம்ல யாரும் இல்ல. நான் கதவைப் பூட்டிட்டு கீழ போய் மேனேஜர் கிட்ட சொன்னேன். கொஞ்ச நேரத்தில மறுபடி போய் பாத்தப்போ போலீஸ் எல்லாம் வந்துட்டாங்க"

"ஓ.. சம்பவம் நடந்தப்போ குத்துமதிப்பா மணி எத்தனை இருக்கும்?"

"ஒரு மூணு மணி இருக்கும் மேடம்.."

"நீங்க தூக்கக் கலக்கத்துல இருந்தீங்க இல்லையா?"

"கீழ போகற வரைக்கும் மந்தமா இருந்தது மேடம்.. ஆனா துப்பாக்கி சத்தம் கேட்டதும் நல்லாவே முழிப்பு வந்துடுச்சுங்க"

"துப்பாக்கியா? துப்பாக்கி எப்போ வந்தது மாணிக்கம்? எதையோ சுட்டாங்கன்னு சொன்னீங்க.. எப்படி அப்படி சொன்னீங்க? வெடி வெடிச்ச சத்தமாகக் கூட இருக்கலாமில்லையா?"

வழக்கறிஞர்கள் கூட்டத்தினுள் சலசலப்பு ஏற்பட, அந்த இளம் காரிகையோ எவ்வித முகமாற்றமும் காட்டாமல் தனது கருப்பு அங்கியுடன் நளினமாக நடைபயின்றாள்.

"இல்லைங்க மேடம்.. அந்த சத்தம் கேட்டப்போவே துப்பாக்கி சத்தம் மாதிரித் தான் இருந்தது.."

"ஓ.. இதுக்கு முன்னாடி துப்பாக்கி சுடற சத்தம் கேட்டிருக்கீங்களா மாணிக்கம்?"

அவன் பதில் சொல்வதற்குள் எதிர்தரப்பு வக்கீல் எழுந்து நின்றார்.
" Objection யுவர் ஆனர் !"

நீதிபதியும் அவளும் கேள்வியாக அவரை ஏறிட, "வழக்குக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளைக் கேட்கறாங்க லாயர் மீரா" என்று குற்றம்சாட்டினார் அவர்.

அவள் சிரிப்புடன், "இல்ல சார். சம்பந்தம் இருக்கு. சாட்சியோட நம்பகத்தன்மையை தெரிவு செய்யறதுக்காக கேட்கறேன். I can establish the relevance"

"Objection overruled"

"சொல்லுங்க மாணிக்கம், துப்பாக்கி சுடும் சத்தத்தை இதுக்கு முன்னாடி எப்பவாவது கேட்டிருக்கீங்களா?"

"டிவில, சினிமால கேட்டிருக்கேன் மேடம்"

"அதெல்லாம் சவுண்ட் எஃபெக்ட் ஆச்சே சார்... பழைய படங்கள்ல ஒருமாதிரி சத்தம், இடைக்கால படங்கள்ல ஒருமாதிரி சத்தம், இப்ப லேடஸ்ட் படங்கள்ல ஒருமாதிரி சத்தம். அந்த சத்தத்தை வச்சு நீங்க துப்பாக்கியால தான் சுட்டாங்கனு கண்டுபிடிச்சுட்டீங்க, அப்படித்தான?"

அவர் பதிலின்றி நிற்க, நீதிபதி அவரது குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார்.

"சரி பரவால்ல. நீங்க சொன்ன மாதிரி மூணு மணியளவில துப்பாக்கியால சுட்டுத் தான் உங்க ஹோட்டல்ல தங்கியிருந்த சேட் ராம்சந்த் கொலைசெய்யப் பட்டார்னு வச்சிக்குவோம். ஏன் உங்களைத் தவிர யாருக்குமே எதுவுமே கேட்கல மாணிக்கம்?"

"மேடம் அவர் தங்கியிருந்தது ஏசி சூய்ட். பூரா கண்ணாடி கதவுங்க மேடம். வெளியே எந்த சத்தமும் கேட்காதுங்க. அந்த ரூமுக்கு நேர் கீழ இருந்த பாதையில நான் நின்னுட்டு இருந்ததால வென்ட் மூலமா சத்தம் கேட்டிருக்கும் மேடம்"

"கீழ இருந்த மத்தவங்களுக்கு யாருக்குமே கேட்கலையா?"

"நான் நின்னுட்டு இருந்தது கிச்சனோட பின்வாசல்ல மேடம். கிச்சனுக்கும் முழு ஏசி போட்டிருக்கறதுனால ரெண்டு டோர் இருக்கும். அப்றம் உள்ளேயும் எப்போதும் சத்தமா இருக்கும். அதைத் தாண்டி எதுவும் கேட்காது மேடம்"

"ரொம்ப தெளிவா யோசிச்சிருக்கீங்க போலயே..?"

"மேடம்...?!"

"இல்ல, கொலை பண்ணவன் தெளிவா யோசிச்சிருக்கான் போல.. சரி, உங்களுக்கு மட்டும்தான் துப்பாக்கி சத்தம் கேட்டது. ஒத்துக்கறேன். எத்தனை சத்தம் கேட்டது?"

"என்ன மேடம்?"

தனது மேசையை அடைந்து ஒரு ஃபைலைக் கையிலெடுத்து அசைத்தபடி, "ஃபாரன்சிக் ரிப்போர்ட் படி, இறந்துபோன ராம்சந்த்தின் உடலில் 'சில' துப்பாக்கிச் சூடுகள் இருந்ததாக குறிப்பிடப் பட்டிருக்கு. நம்ம சாட்சி சுட்ட சத்தத்தைக் கேட்டிருந்தா, அவருக்கு எத்தனை முறை சுட்டாங்கன்னும் தெரிஞ்சிருக்கும். இல்லையா யுவர் ஆனர்? அதனால, சொல்லுங்க மாணிக்கம். எத்தனை டமால் சத்தம் உங்களுக்குக் கேட்டது?" என வினவினாள் மீரா.

மாணிக்கம் கண்ணை அங்குமிங்கும் திருப்ப, மீராவின் பின்னால் அமர்ந்திருந்த இளம் வழக்குரைஞன் ஒருவன் அருகிலிருந்தவனிடம், "ரெண்டு குண்டு தானடா?" என சன்னமான குரலில் கேட்டான்.அவனும் தலையசைத்துவிட்டு திரும்பிக் கொண்டான். அதை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

சற்றே குழப்பத்துடன், "சரியா ஞாபகம் இல்லைங்க மேடம்.. ஏதோ ரெண்டு சத்தம் கேட்டதுன்னு நினைக்கறேன்" என்றான் மாணிக்கம்.

"இப்படியெல்லாம் சாட்சி சொல்லக்கூடாது மாணிக்கம். சரியா நாலு நாள் கூட ஆகல. நல்லா யோசிச்சு சொல்லுங்க, எத்தனை சத்தம் கேட்டீங்க?"

"ரெண்டுதான் மேடம்"

"உறுதியா சொல்றீங்களா?"

"ஆமா மேடம். ரெண்டுதான்"

எதிர்தரப்பு வக்கீல் தலையைப் பிடித்துக்கொண்டு மேசையில் சாய, மீரா வெற்றிப் புன்னகையுடன் நீதிபதியிடம் திரும்பினாள்.

"யுவர் ஆனர். இன்னிக்கு காலைல வந்த ஃபாரன்சிக் ரிப்போர்ட் படி, ராம்சந்த் இறந்தது ஒரே ஒரு குண்டால. A single bullet through the heart. நம்ம சாட்சிக்கு அதை சொல்லிக்குடுக்க இன்ஸ்பெக்டருக்கு நேரம் இல்லை போல. எனவே மாண்புமிகு நீதிபதி அவர்களே, இந்த சாட்சியின் பொய்யான கூற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த வழக்கின் உண்மைத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. எனது கட்சிக்காரர் ஒரு அப்பாவிப் பெண்மணி. தன் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகக் கூலி வேலை செய்பவர். அவர் மீது நியாயத்துக்குப் புறம்பாகக் குற்றஞ்சுமத்தி அவரைக் கைது செய்த காவல் அதிகாரிகளுக்கும் பொய் வழக்குப் பதிந்த அரசு வழக்கறிஞருக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். That's all sir"

நீதிபதியும் தலையை ஆமோதிப்பாக அசைக்க, மீரா கள்ளப் புன்னகையுடன் திரும்பி தனது அஸிஸ்டெண்ட்டான ஜானியை நோக்கிக் கையால் வெற்றிச்சைகை காட்டினாள். மாணிக்கத்தை நம்பவைக்க தான் போட்ட சின்ன நாடகம் வென்றுவிட்டதை அறிந்து அவனும் அருகிலிருந்தவனுடன் கைகுலுக்கிக்கொண்டான்.

அரங்கமே மூச்சடக்கி நீதிபதியின் தீர்ப்புக்காகக் காத்திருக்க....
 

Author: MadhuManohar
Article Title: உன்மனச் சிறையில் 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ada pavigala.. lawyera ithu........................
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN