பாகம் 7

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவள் சமையலில் குற்றம் கண்டான்.அவள் அயர்ன் செய்து வைத்திருந்த ஆடைகளை திரும்பவும் அயர்ன் செய்ய சொன்னான்.
போதாக்குறைக்கு சொந்த அலுவல் காரணமாய் விடுப்பில் சென்றிருந்த செக்ரட்டரி ரீனா வரும் வரை இவளை அந்த பொறுப்பில் அமர்த்தினான். அலுவல் விஷயங்கள் எதுவும் தெரியாத சிம்மி பெரிpதும் தவித்துப் போனாள்.

தனிமையில் அவனுடன் இருக்கும் நேரமெல்லாம் நரகமாய் போனது சிம்மிக்கு. மித்திரன் இருக்கும் நேரம் மட்டும் அனிஷ் சிம்மியை சீண்டுவதில்லை, முடிந்த மட்டும் மித்திரனிடமிருந்து பல வேலைகளை சிம்மி கற்றுக்கொண்டாள். அனிஷ் எவ்வளவு சீண்டினாலும் சிம்மி எதிர்க்கவில்லை.வாய் திறந்து வார்த்தைகளை அநாவசியமாக உதிர்ப்பதுமில்லை.நாளுக்கு நாள் அவன் கொடுமைகள் கெடுபிடிகள் அதிகரித்தன. இதில் வீட்டு வேலைகளும் சேர்ந்துக் கொண்டன.

சிம்மி சோர்ந்துப் போனாள்.மித்திரனை கண்டால் மட்டுமே சிரிப்பாள்.அனிஷ் முகம் கண்டால் அவள் முகம் அனிச்ச மலராகி விடும்.அனிஷிற்கு கடுப்பாய் வந்தது.எதற்கும் பிடிகொடுக்காமல் இருக்கும் சிம்மியை அவனுக்கு பிடிக்கவில்லை. தான் சீண்டும் பொழுது சிம்மி எதிர்க்கவேண்டும் என்று எதிர்ப்பார்த்தான்.அவளோ எதற்கும் தயார் என்பது போல் மௌனமாய் அவன் தரும் தொல்லைகளை சகித்துக்கொண்டாள்.

அவனுக்குள் எதோ ஒன்று செய்தது.மெல்ல மெல்ல அவன் மனம் சிம்மி பக்கம் சாய்வதை அவனால் உணர முடியவில்லை.
தொலைவில் அவள் நடந்து செல்வதை மறைந்திருந்து இரசித்திருக்கின்றான். மித்திரனோடு அவள் சிரித்து பேசுகையில் அவனுக்குள் காந்தியது.அதற்கும் அவளை திட்டவே செய்தான்.முதல் சந்திப்பிலே தன்னை திருடியவளை அனிஷ் இன்னமும் உணரவில்லை.
எதற்காக அவளை திருமணம் செய்ய வேண்டும்?எதற்காக தன் பெற்றோரிடம் அடம் பிடிக்கவேண்டும்.இந்த சிம்மி ஏன் தன்னை இப்படி சலனப்படுத்த வேண்டும்?.

தனிமையில் பல இரவுகளை சிம்மியை பற்றிய நினைவுகளில் அனிஷ் தன்னையே தொலைத்திருக்கின்றான்.
அவன் கேள்விகளுக்கு விடைத் தெரியும் நாள் வந்தது வெகு விரைவில்.அனீஷுடன் பயின்ற நண்பர்களுடன் விஸ்லரில் தங்களின் தங்கும் விடுதியில் ஒரு வாரம் விடுமுறையை கழிக்க ஏற்கனவே அவன் திருமணத்திற்கு முன்பாகவே ஏற்பாடு செய்திருந்தான்.

பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் நண்பர்கள் அனைவரும் திருமணம் ஆனவர்களே.அதில் பாதி மணவிலக்கு பெற்றும்
பாதி திருமணத்தால் நொந்தவர்களும் அடங்குவர்.கையில் மதுப்புட்டி ஆட அவனவன் அவன் வீட்டுக்கதையை அவிழ்த்து விட்டான்.

"பொண்ணாடா அவ,பேய் பேய், பணப்பேய், எப்ப பார்த்தாலும் லேடிஸ் கிளப்லதான் இருப்பா" இஞ்சினியர் ராஜேஷ் புலம்பினான்.

"டேய் மச்சான் ,எனக்கு வாய்ச்சது பஜாரிடா,என்னையே ஒரு நாலு வாட்டி அறைஞ்சுட்டா, இப்போ கோர்ட்ல கேஸ் ஓடுது.என்ன கருமத்திற்கு கல்யாணம் பண்ணேனு தெரியல,இதுல தமிழ் நாட்டு பொண்ணை தேடிப்பிடிச்சு கட்டனேன்.எனக்கு தேவைதான்".மருத்துவன் மகேஷ் தன் பங்கிற்கு புலம்பித்தள்ளினான்.

"உன் கத என்ன மச்சான்?அங்கயும் அதேதானா?மிதுன் கேட்க கன்னதில் குழி சுழிய அனிஷ் சிரித்தான்.

அவனுடைய சிம்மி இவர்களைப் போல இல்லவே.எப்பவும் சிரித்த முகமாய் எளிமையான அலங்காரத்தில் அவன் குறிப்பறிந்து நடப்பவளாயிற்றே. மெல்ல அவன் நினைவுகளில் சிம்மி வியாபிக்க ஆரம்பித்தாள்.அவளை பார்த்த முதல் நாள் முதல் நேற்று வரை சிம்மி சிம்மி..அவள் மட்டுமே அவன் மனதில்.

அதற்கும் மேல் அவனால் அங்கிருக்க முடியவில்லை.சிம்மி தனியாக இருப்பாள் என்பது உறைத்தது. நண்பர்களிடம் அவசர வேலை இருப்பதாக கதை கூறிவிட்டு டொரோந்தொவிற்கு பறந்தான்.அவன் கண்களுக்கு சிம்மி இப்பொழுது தேவதைப் போல தோன்றினாள்.
அனிஷின் திடீர் மாற்றம் சிம்மிக்கு வியப்பளித்தது.ஒரு வார விடுமுறைக்குச் சென்றவன் மறுநாளே வந்து நின்றால் அவளுக்கு எப்படியிருக்கும்? அவன் இல்லை என்ற தைரியத்தில் பல நாட்கள் தொடாதிருந்த மணிச்சலங்கை அவள் கால்களில் இடம் பிடித்திருந்தது.

சந்தன நிற நாட்டிய புடவையில் இடைவரை புரளும் கூந்தலை ஜடை பின்னி தன் மனம் போன போக்கினில் கள்வரே கள்வரே எனும் பாடலுக்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள்.சிம்மிக்கு ஆட வரும் என்பது அனிஷிற்கு தெரியாது.
தன்னிடமிருந்த மாற்று சாவியில் வீட்டு கதவைத் திறந்தவனை சலங்கைச்சத்தமும் பாட்டும் வரவேற்றன.

மெல்ல ஓசைப்படாமல் சென்றவன் கண்களுக்கு விருந்தாய் அவனுடைய சிம்மி ஆடிக்கொண்டிருந்தாள்.
அவள் ஆடி முடிக்கும் வரை அமைதியாய் இரசித்தவன், பின் குரல் எடுத்தான்.

"வாவ்,அம்மணிக்கு நல்ல ஆட வருதே,ஒருநாள் நான் ஊர்ல இல்லனா,உனக்கு இவ்ளோ குஷியா சிம்மி?" சிரித்துக்கொண்டே கேட்டான்.அங்கே அவனை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

அதிர்ச்சியில் சிம்மி உறைந்து நின்றாள்.
"என்மேல உனக்கு ரொம்ப ஆசையா சிம்மி?கள்வரே கள்வரேனு உருகிற,அத நான் அருகில் இருக்கும் போதே நல்ல உருகியிருக்கலாமே? அவனுக்கு அவளை கேலி செய்யவேண்டுமென தோன்றவே, சிம்மிக்கு பற்றிக்கொண்டு வந்தது. எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

இப்பொழுதெல்லாம் அனிஷ் சிம்மியை சீண்டுவதில்லை. அவளை சுடும் சொற்களால் வாட்டுவதும் இல்லை.கிண்டல் கேலியுடன் நிறுத்திக் கொள்வான்.அவனுடைய திடீர் மாற்றம் சிம்மிக்கு வேறு விதமாய் தோன்ற, அன்பை ஆயுதமாக்கி தாக்கலாம் என நினைக்கிறானா?தாங்க முடியாமல் கேட்டே விட்டாள்.

"ஏன் இந்த திடீர் மாற்றம் அனிஷ்,என்ன பலி வாங்கரேனு சொல்லிட்டு இப்ப நீங்க இப்படி பண்றதுக்கு காரணம் என்ன?இதுவும் உங்க டாச்சர்ல ஒண்ணா?இப்ப எனக்கு சந்தேகம் வருது,என்ன பலி வாங்கறேனு சொல்லிட்டு ரஜீவ் கொலை பண்ணியிருப்பிங்களோ?"
சிம்மி அனிஷை தாக்கினாள்.

கோபத்தில் அனிஷின் கை முஷ்டி இறுகியது. "இதுக்கும் மேல நான் பொறுத்துப் போக மாட்டேன்.நீங்கதானே ரஜீவ்வ கொன்னது?யூ ர் அ கிரிமனல், அ லாயர் "சிம்மி கத்தினாள்.

பாளாறென அனிஷின் முரட்டு கரம் சிம்மியின் கன்னத்தைப் பதம் பார்த்தது.கோபத்தில் அவன் கண்கள்சிவக்க,"தட்ஸ் ட லிமிட் சிம்மி,மைண்ட் யுவர் வொர்ட்ஸ்!..நீ என்ன முட்டாளா?உன்ன பலி வாங்கறதுக்காக நான் ஏன் ரஜீவ்வ கொல்லணும்?அதுக்கு முன்பே உன்ன ஒரு வழி பண்ணியிருக்கமாட்டேனா?அப்புறம் உனக்கு என்ன மனசில பெரிய அப்ஸ்சரானு நினைப்பா?எவ்வளவு ஒரு கேவலமான எண்ணம் உனக்கு.அறுவருப்பா இருக்கு.உன்ன பார்க்கவே எனக்கு பிடிக்கல!" அறை கதவை வேகமாக சாத்திவிட்டு அனிஷ் சென்றான்.

திக்பிரமைப்பிடித்தது போல இருந்தது சிம்மிக்கு.கன்னத்தில் அறை மெல்ல உறைத்தது.விரைந்து தோழிகளை செல்லில் தொடர்பு கொண்டவள் அவர்கள் திட்ட மேலும் கலவரமானாள்.

"உனக்கு அறிவே இல்லையா சிம்மி?என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க?அனிஷ் சமூகத்தில் ஒரு பெரிய புள்ளி,இப்படி கீழ்தரமா உங்கிட்ட நடந்துக்குவாரானு கொஞ்சமாச்சும் யோசிச்சியா?உனக்கு கல்யாணம் ஆயி இத்தனை நாட்களில் உங்கிட்ட தவறா கூட அவர் நடந்துக்கலை.உன்ன டார்ச்சர் பண்ணாலும் அவர் எல்லையை மீறலையே.நீ ரொம்ப அவசரப்பட்டுட்ட சிம்மி"சில தடவை நேரில் அனிஷ்சை சந்தித்த நம்பிக்கையில் மாயா அனிஷிற்கு ஆதரவாய் பேசினாள்.

"மாயா சொல்றது சரிதான் சிம்மி,உங்க அம்மாவ கொஞ்சம் நெனைச்சுப்பாரு. இப்பதான் ஆண்டி கொஞ்சம் சிரிக்கறாங்க,அது உனக்குப் பொறுக்கலையா?"அர்மிதா அடுத்த கணையை தொடுக்க,சிம்மிக்கு ஏந்தான் இவங்களுக்கு கால் பண்ணோம்னு ஆச்சு.மனதில் தெளிவில்லா ஒரு கலவை நிலை உருவெடுக்க சிலையாய் அமர்ந்திருந்தாள் சிம்மி.

அன்றிரவு அனிஷ் வீட்டிற்கும் வரவில்லை.அலுவல் காரணமாய் விஸ்லருக்கு செல்ல அவளை தன் பெற்றோர் வீட்டில் தங்கிக்க சொல்லி மெசேஜ் மட்டும் அனுப்பியிருந்தான்.இரவில் மித்திரனோடு வீடு திரும்பிய மருமகளைக் கண்டு பெரிதும் மகிழ்ந்துப்போனார் மீனாட்சி. "வாம்மா சிம்மி,இப்பதான் இந்த அத்தைய பார்க்க வழி கிடைச்சதா?உன் புருசன் உன்ன இங்க தனியே அனுப்ப இப்பதான் மனசு வந்ததா?இருக்கட்டும் அவனை அப்புறம் கவனிச்சிக்கிறேன்" வாஞ்சையாய் மருமகளை வரவேற்றார்.

"இது அனிஷின் அறை,இங்கேயே தங்கிக்கமா",கையில் பாலோடு அறையை காண்பித்த மாமியாரை மென்மையாக நோக்கினாள். "பால குடிச்சிட்டு தூங்கு சிம்மிமா,நாளைக்கு பேசிக்கலாம்,குட் நைட்".மீனாட்சி சென்றவுடன் அனீஷின் அறையை சிம்மி பார்வையிட்டாள்.மிகவும் சுத்தமாய் நேர்த்தியாய் இருந்தது அவன் படுக்கையறை.

அறை சுவர்களில் அவனது பால்ய வயது படங்கள் முதல் அவர்களின் திருமண படம் வரை அழகாய் மாட்டி வைத்திருந்தான்.
இளவல்களுடன் சிரிப்பும் கேலியுமாய் அந்த படங்களில் அனிஷ் ரொம்பவே அழகாய் இயல்பாய் இருந்தான். அட இவனுக்கு சிரிக்க கூட வருதே.. என்பது போல் அதிசயமாய் அவன் புகைப்படங்களை சிம்மி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்றைய இரவு அவன் நினைவுகளில் கரைய மறுநாள் பொழுது சிம்மிக்கு அழகாகவே விடிந்தது.இதுவரை மாமியாருடன் சிம்மி தங்க நேர்ந்ததில்லை. பூப்போல தாங்கிய மாமியார் மாமனாரை சிம்மிக்கு ரொம்பவே பிடித்திருந்தது.அனீஷை பற்றி அவள் அறியாத பல விஷயங்கள் அவளுடைய மாமியார் வாயிலாக தெரிந்துக்கொண்டாள்.

இளம் வயதில் அப்பாவின் தொழில் பொறுப்பை ஏற்றவன், பல சறுக்கல்களுக்குப் பின் அதில் வெற்றியும் கண்டான்.
முசுடு போல் இருப்பவன் பல தொண்டூழிய நிறுவனங்களுக்கு கணிசமான தொகையை மாதா மாதம் அனுப்பி வந்தான். கல்லுக்குள் ஈரம் போல் இந்த கடுவன் பூனைக்கு இப்படி ஒரு மனசா?வியந்துப் போனாள் சிம்மி.மெல்ல மெல்ல அனிஷின் மேல் அவளுக்குள் ஒர் ஈர்ப்பு ஒட்டிக் கொண்டது.

மாயாவோடும் அர்மிதாவோடும் அடிக்கடி அனீஷை பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள்.
எப்பொழுது அவன் வருவான் எனும் ஏக்கமும் அவள் மனதை அரிக்கத் தொடங்கிவிட்டது. சிம்மியின் பேச்சிலிருந்து அவள் மனம் அனீஷை வெகுவாக காதலிக்கத் தொடங்கிவிட்டதை அவள் தோழிகள் இருவரும் உணர்ந்துக்கொண்டனர்.

ரஜீவ் இவர்களின் பால்ய சினேகிதன் என்பதாலும் வேலை படிப்பு என்று மாயா அர்மிதா சிம்மியை விட்டு சென்றதாலும் துணையாக அவன் இருப்பான்,சிம்மியின் எதிர்காலம் பாதுகாப்பாய் அமையும் என்பதாலுமே சிம்மி-ரஜீவ் திருமணத்தை தோழிகள் இருவரும் ஆதரித்தனர்.ஆனால் அவர்களிடையே நட்பை தவிர காதல் என்ற ஒன்று எட்டிப்பார்க்க வாய்ப்பில்லை என்பதை மாயாவும் அர்மிதாவும் நன்கு அறிந்து வைத்திருந்தனர். இப்பொழுது சிம்மியின் இந்த மனமாற்றம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

விரைந்து இது பற்றி அனீஷிடம் பேசவும் முடிவு செய்தனர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN