என்னடி மாயாவி நீ: 5

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்: 5

வெகு நாட்களுக்கு பிறகு நிம்மதியாக தூங்கி சந்தோசமாக கண்களை மலர வைத்தான் ராகேஷ். தூக்கத்திலிருந்து தன்னை விடு வித்து கொண்டு சோம்பலை முறித்து இனி தனக்கு எதிரி என்பதே கிடையாது என நினைத்து மனதுக்குள் கர்வப்பட்டுக்கொண்டான்.

இனிமேல் சித்தப்பா சொத்தையும் நம்மதான் ஆளப்போறோம், அவருக்குதான் வாரிசு இல்லையே நம்மதான் தனிகாட்டு ராஜா என கற்பனையை வளர்த்துக்கொண்டான். ராகேஷ், சித்தப்பாவிடம் உங்க கம்பெனியை தானே பார்த்துக்கொள்கிறேன் என கேட்டதுக்கு, 'தனக்கு ஒரே மகனான விஷ்ணுக்கு தான் தனது கம்பெனியும் சொத்தும் சேரும் எனவும், எனக்கு பிறகு தன் மகனே இதையெல்லாம் பார்த்துக்கொள்வான்' என திட்டவட்டமாக கூறினார் சுப்பிரமணியன்.

விஷ்ணுவும் ராகேஷும் சித்தப்பா பெரியப்பா முறையில் அண்ணன் தம்பி முறை ஆவர். இருவரின் தாத்தா விஸ்வமூர்த்தி தனது இரு மகன்களான ராமநாதனையும் சுப்பிரமணியனையும் பாகுபாடின்றி நன்றாகவே வளர்த்தார். இருவரும் நன்றாகவே படித்தனர். கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு தானாகவே கம்பெனி வைத்து நடத்தும் அளவுக்கு திறமை வாய்ந்தவராக தேறினார். ஆனால், ராமநாதனோ குறுக்கு வழியில் தொழிலை நடத்தினான். இதனால், வருமானமும் செழுமையாக வருகை தந்தது. ஆகையால், இவரால் இந்த தொழிலை கை விட முடியவில்லை. ஆனால், சுப்பிரமணியனோ இதற்கு எதிர்மறை குணம் படைத்தவர். தனது கம்பெனியை நேர்வழியில் நடத்தி சிறு தொகை வந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொள்வர். நேர்மையையே பின்பற்றும் இருவரின் தந்தைக்கு மூத்த மகனின் செயல் பிடிக்காமல் அறிவுரை வழங்கினார். இதை கேட்கும் மனநிலையில் ராமநாதனோ இல்லை. தந்தை சொல் கேட்காமல் தனது வேலையை தொடர்ந்தார். மூத்த மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர் அவரது பெற்றோர், அப்பயாவது பொறுப்பு வரணும் என. அடுத்து, சுப்பிரமணியனுக்கும் திருமணம் முடித்து வைத்தனர். விஸ்வமூர்த்தி சொத்தை தனது இரு மகன்களுக்கும் சரி பாதியாக பிரித்து எழுதி கொடுத்தார். மறுவருடமே சிங்கக்குட்டிகள் போல இரு மகன்களும் ஆளுக்கொரு வாரிசுகளை வெளிப்படுத்தினர். சுமுகமாக போன குடும்பத்தில் பிறகுதான் பொறாமை என்னும் குண்டு வெடித்தது.

குறுக்கு வழியில் சம்பாதித்த ராமநாதனின் கம்பெனியில் நஷ்டத்துக்கு மேல் நஷ்டமே குவிந்தது. சுப்பிரமணியனுக்கு தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தது. பொறாமையை தூண்டிவிட்டது ராமநாதனுக்கு, இவனுக்கு மட்டும் லாபமாக குவிகிறது என. இதனாலே இரு குடும்பமும் பிரிந்தது. ஒற்றுமையாக இருந்தவர்கள் ஆளுக்கொரு திசை என நகர்ந்தனர். ராமநாதனுக்கு வளர்ந்து வரும் தன் தம்பியின் வளர்ச்சியின் மீது மோகம். அவனது சொத்தை தானே ஆளவேண்டும் என்னும் வெறி ராகேஷுக்கும் ஊறியது. இதுவே, ராகேஷ் விஷ்ணுவை கொல்ல காரணமாகும்.

அவனது பழியுணர்ச்சி, தந்தையின் ஆசை, சுப்பிரமணியன் மறுத்ததால் ஏற்பட்ட பகை, சொத்து மீதுள்ள மோகம் என எல்லாமே ஆட்கொண்டு அவனை ஆட்டிப்படைத்து விஷ்ணுவை கொல்ல வைத்தது. விஷ்ணுக்கு அப்புறம் தனக்கே எல்லா சொத்தும் வந்துவிடும என்ற நம்பிக்கையில்...

ஆனால், இவனின் எல்லா திட்டமும் அரங்கேராது என்பது இவனறியா கடவுளின் திட்டமாகும்...

வர்ஷித் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால், விடியற்காலையில் தான் தூக்கத்தை தழுவினான். தூங்கி இரண்டு மணி நேரத்திலேயே அலாரம் அடித்து சென்னைக்கு புறப்படுவதை நியாபக படுத்தியது.

கண் விழித்தவன் புரண்டு ஆதிகா படுத்திருக்கும் பக்கம் திரும்பி படுத்தான். அலாரம் சத்தத்தில் கண்களை விழித்து, துடைத்து கொண்டே வர்ஷித் படுத்திருக்கும் பக்கம் திரும்பி படுத்தாள் ஆதிகா, எதேச்சையாக.

இருவரும் ஒரே நேரத்தில் எதிர் நோக்கும்போது இருவிழிகளும் ஒரு நிமிடம் சந்தித்து மீண்டன. வர்ஷித் ஒரு வெற்று பார்வையை அவளிடம் செலுத்தி, "கிளம்பு இன்னைக்கு சென்னைக்கு போகணும்" என்றான்.

வர்ஷித் முதலில் திருமணம் முடிந்து, தான் மட்டுமே சென்னைக்கு போவதாக அவனது மாமாவிடம் கூறினான். அதற்கு அவர்தான், நீ மட்டும் தனியா போறதுக்கா உனக்கு மெனக்கெட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறது. ஒழுங்கா அந்த பொண்ணையும் கூட்டிட்டு போ என்றார் கட்டளையாக. அவர் கூறும்போது அவரது வார்த்தையில் சிக்கிய மெனக்கெட்டு என்கிற வார்த்தை வர்ஷித்தை காயப்படுத்தியது என்னவோ உண்மை தான். தனக்கென்று பெற்றோர் இருந்திருந்தால் இதை அவர்கள் பாரமாக எடுத்திருக்க மாட்டனர். நமக்கு தான் அது கொடுத்து வைக்கலயே என எண்ணி மனதை தேற்றி கொண்டான்.மாமா கூறிய பிறகு இதனை மறுக்கமுடியாமல் வர்ஷித் அவளை தன்னுடன் அழைத்து செல்ல சம்மதித்தான் முழு மனதில்லாமல்.

வர்ஷித் கூறியதற்கு ஆதிகாவும் சரி என்று தலையை மட்டும் அசைத்துnதனது பதிலை தெரிவித்தாள் பயந்த விழிகளோடு...

பொழுதும் பளபள வென விடிந்தது. இருவரும் வீட்டை விட்டு கிளம்பும் நேரமும் வந்தது. தன் காதல் கண்ட ஏமாற்றமும், அதனின் வலியும், திருமணம் முடிந்து வீட்டை விட்டு பிரியும் சராசரி பெண்ணிற்குரிய சோகமும் போட்டி போட்டு கொண்டு துயரத்திற்குள் ஆதிகாவை மூழ்கடித்தது. ஆதிகா தந்தையையும் தாயையும் கட்டி தழுவி கொண்டு கண்ணீர் சிந்தினாள். இருவரும் மகளிற்கு, "இன்னும் கொஞ்ச நாள் தானே, அப்புறம் இங்க வந்துருவிங்க அழுக கூடாது போய்ட்டு வாங்க" என கூறினார். அவளின் தாயோ," பாத்திரமா பாத்துக்கோ அவர நீ தான் மாத்தணும் எல்லாமே சரி ஆகிடும்" என அறிவுரை கூறினார் மகளுக்கு. சுதா மட்டும் வர்ஷித் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதை பார்த்து அவனின் நடவடிக்கையை கண்டுபிடித்தார், போக போக சரி ஆகிடும் என நம்பினார். இங்கு நடந்த எதையும் வர்ஷித் கண்டுகொள்ளவேயில்லை. போய்ட்டு போன் பண்ணுங்க என கூறி வழியனுப்பி வைத்தனர் ஆதிகாவின் பெற்றோர்.

ஆதிகா வர்ஷித்துடன் அவனது மாமாவும் பேருந்து நிலையம் வரை சென்று அவர்களை சென்னை பஸில் ஏற்றிவிட்டு, தன்னுடைய ஊருக்கும் பஸ் ஏறினார்.

பேருந்தில் ஜன்னல் ஓர சீட்டில் ஆதிகாவும் அவளுக்கு அருகில் வர்ஷித்தும் அமர்ந்திருந்தான். வெகு அருகில் அமர்ந்திருந்தும் இருவரது உடல், ஒருவரையொருவர் தொடும் தூரத்தில் இருந்தும் தொடாமல் இருந்தது, உடல் மட்டும் இல்லை மனமும் அப்படிதான். பேருந்து பயணத்தை தொடங்கியது.

மதி மறைந்து, ஆதவன்
ஆட்சியை தொடங்க,
பறவைகள் கூட அமைதி
காக்காமல் கூச்சலிட்டு
தங்கள் இருக்கையை
தெரிவிக்க, மக்கள்
பரபரப்பாக வேலையில்
ஈடுபட,
இப்பேருலகமே அமைதியை
இழந்துகொண்டிருந்தது,
இவர்கள் இருவரை தவிர,
அந்த காலை பொழுதில்...

ஆதிகா திரும்பி வர்ஷித் என்ன செய்கிறான் என கூட பார்க்காமல் ஜன்னல் பக்கமே தலையை பதித்திருந்தாள். வர்ஷித்தா இதற்கு சளைத்தவன்? அவனும் ஆதிகாவை கண்டு கொள்ளாமல் போனையே பார்த்துக்கொண்டு வந்தான்.

பேருந்து வேகமாக செல்லுவதால் , பனிக்காற்றும் புயலென வீச, குளிர் தாங்க முடியாமல் ஆதிகா அணித்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை இழுத்து போர்த்தியிருந்தாள். அவனோ, உள்ளே குளிர்ந்தாலும் வெளியில் குளிர்வதை அவன் வெளிக்காட்டி கொள்ளவில்லை.

சிறிது நேரம் இப்படியே நகர, வர்ஷிதிற்க்கு போனை பார்த்துக்கொண்டே வருவதால், போர் அடித்தது. கொஞ்ச நேரம் கழித்து தன் தோளில் பாரம் ஏறுவதை உணர்ந்தவன், சற்று திரும்பி கண்களை ஆதிகா மேல் பதித்தான். அவளோ, சிறு பிள்ளை போல், இவன் தோள் மீது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.



என்னடி மாயாவி நீ: 4


என்னடி மாயாவி நீ: 6
 
Last edited:

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN