அத்தியாயம்: 6

அழகு பதுமையென தூங்கும் தன் மனையாளின் முகத்தை அப்போதுதான் வெகு நெருக்கத்தில் பார்த்தான் வர்ஷித். அவ்வளவு நேரமிருந்த மன போராட்டங்கள் சிறிது அமர்ந்து, சற்று முன் பிறந்த மன அமைதியும் பனிக்காற்றின் ஈரப்பதமும் ஆதிகாவின் அழகை ரசிக்க தூண்டியது அவனுக்குள்.

முடிக்கற்றை ஒன்று வீசும் காற்றுக்கு ஏற்றவாறு நடனமாடும் மைதானமாக அவளது நெற்றி, தூங்கும் போது கூட கதை பேசுவது போல காட்சியளிக்கும் உருண்டை விழிகள், அந்த விழிகளுக்கு ஏற்ப இறைவனே இறங்கி வந்து வரைந்தது போல இரு கருமை நிற புருவங்கள், முகத்திலே கொஞ்சம் மேடிட்டு வளர்ந்து, மூச்சு காற்றை உள்ளே ஏற்றியும் வெளியே இறக்கியும் செயல்படும் மூக்கு என இது வரை எல்லாத்தையும் ரசித்தவன், அதற்கு கீழே இறங்கினால், நடக்க கூடாத விபரீதம் நேரிடும் எனும் பயத்தில் மனதை கடிவாளமிட்டு, இவள் தனக்கு என்றுமே கிடைக்க போவதில்லை, கிடைத்தாலும் தான் என்றுமே இவளை ஏற்க போவதில்லை என தன் மனதை அடக்கினான்.

தூங்கிய நிலையில் இருந்தலும், அவளது அதரங்களும் பற்களும் நடுங்கி கொண்டே குளிரின் வீரியத்தை

எடுத்துரைத்தது. அவள் தூக்கம் கலையாத வண்ணம், பையிலிருந்து போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டான். இவள் தனக்கில்லை என்றாலும் தன் கூட இருக்கும் சில நாட்கள் நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவெடுத்தான். ஆனால், இதை அவன் நிறை வேற்றுவானா...

என்னதான் தோள், வலி கொடுத்தாலும் சிறுபிள்ளை போல் தூங்கும் அவளது சோகத்தை சுமந்து கொண்டிருக்கும் முகத்தை தன் மேலிருந்து அகற்ற மனமில்லாமல் சுமந்து கொண்டே தானும் சீட்டின் மீது தலையை சாய்த்து தூங்கி போனான்.

சாலையில் வாகனங்களின் பேரிரைச்சல், இவர்களை விழிக்க செய்து தெரியப்படுத்தியது, சென்னை மாநகரம் வந்துவிட்டது என்று இல்லை இல்லை சென்னைக்கு தாங்கள் வந்துவிட்டோம் என்று.

சென்னைக்கு வரப்போகிறோம் என முடிவு செய்த பொழுதே, வர்ஷித் ஆகாஷிடம் போனில், " மச்சான் உன்னோட பிரண்ட் கவின் கிட்ட சொல்லி சென்னைல எனக்கொரு வீடு பாக்கசொல்லுடா ஒரு வாரத்துக்கு மட்டும்" என கூற, "சரி மச்சான் சொல்றேன், அவனுக்கே இன்னொரு வீடு இருக்குடா, நான் அவன்கிட்ட பேசிட்டு அவனோட நம்பரும் அட்ரஸும் அனுப்பி விடுறேன் டா"என பதிலளித்தான் ஆகாஷ்.

சென்னையில் இறங்கியதும் ஆதிகாவிற்கு படபட வென இருந்தது. வர்ஷித் ஆகாஷ் அனுப்பிய அட்ரெஸ்ஸை வைத்து அவனது நண்பனான கவின் வீட்டுக்கு ஆதிகாவை அழைத்து சென்றான்.

ஆகாஷ் கவினிடம் வர்ஷித்தின் வருகையை பற்றி கூறியிருந்தான். கவினும் அவனது மனைவியும் வர்ஷித்தையும் ஆதிகாவையும் நன்றாக உபசரித்தனர். அவர்கள் இருவரும் தங்கப்போகும் வீட்டிற்கு கூட்டி சென்று காட்டிவிட்டு, ஏதாவது உதவின கேளுங்க எனவும் கூறிவிட்டு, சமையலுக்கு தேவையான பொருட்களையும் இவர்களே ஏற்பாடு செய்து கொடுத்து வந்தனர்.

சென்னைக்கு வந்து சேர்ந்து வீடு பார்த்து முடிக்கும்போதே அன்றிரவு நெருங்கியது. காலையிலிருந்து ஒழுங்கா சாப்பிடாமல் இருந்ததால், தானே கடைக்கு சென்று இருவருக்கும் உணவு வாங்கி வரலாம் என முடிவு செய்த வர்ஷித், ஆதிகாவிடம் நாளைக்கு சமைச்சுக்கலாம் இன்னைக்கு வெளில வாங்கிட்டு வரேன் என்ன வேணும் என கேட்டதுக்கு, தயக்கமாக, 'இட்லி' என்றாள்.

அவன் சென்ற பிறகு, ஹாலிலே சுருண்டு படுத்துக்கொண்டாள். அப்பொழுது, ஆதிகாவிற்கு போனில் அழைப்பு வந்தது பெற்றோரிடமிருந்து. அவர்களிடம் பேசி முடித்து மறுபடியும் படுக்க போன போது, வர்ஷித் சாப்பாடு வாங்கி வந்தான். இந்த சாப்பாடு சாப்பிட்டு தூங்கு, காலையிலிருந்து ஒழுங்கவே சாப்பிடலைல என்றான். இருத்தட்டை கொண்டு வந்து வைத்தவள். அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல், நீங்களும் வாங்க சாப்பிடலாம் என்றாள். அதற்கு அவன், இல்லை இப்போ நீ சாப்பிடு எனக்கு பசிக்கல நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன் என்றான். அவள் மனதில் எனக்கு மட்டும் தான் பசிக்குமா, இவரும் தானே காலையிலிருந்து சாப்பிடல... என நினைத்தவள், அவனை மீண்டும் வற்புறுத்த விரும்பவில்லை. வர்ஷித்தும் அவளை பார்க்க விரும்பாமல், பேசி முடித்த மறு நொடியே உடையை மாற்றி டி ஷிர்ட்டும், முக்கால் பேண்டுடனும் வெளியேறினான்.

அவன் வெளியேறிய சில நிமிடத்திலே ஆகாஷ் அவனை போனில் அழைத்தான். பால்கனியில் நின்று அவனுடன் உரையாட ஆரம்பித்தான் வர்ஷித். 'என்னடா மச்சான் வீடு எல்லாம் ஓகே தானே, பாத்து போயிட்டீங்களா' என ஆகாஷ் கேட்க, வந்துட்டோம் டா நல்லா பேசுனாங்க, உபசரிப்பு எல்லாம் பலமா இருந்ததுடா என்றான் மன நிறைவுடன் வர்ஷித். நீ சாப்பிட்டியா என ஆகாஷ் கேக்க வர்ஷித்தோ, இன்னும் இல்லடா இப்போதான் வாங்கி கொடுத்துட்டு வந்தேன் அவ சாப்பிடதுக்கு அப்புறம் தான் நான் சாப்புடனும் என்றான். ஆகாஷ் "ஏன்டா அவுங்க கூட சாப்பிடலாம்ல இப்படியே எத்தனை நாள் இருக்க போற, உன்னோட பஸ்ட்ட மறந்துட்டு இவுங்க கூட பழகுடா எல்லாமே மாறும் என அறிவுரை மொழிந்தவன், சரி இப்போ எதுக்கு திருச்சி வேண்டாம்ணு சென்னை கேட்டிருக்க என்ன ஆச்சு என ஆகாஷ் கேக்க, இதற்கு வர்ஷித் என்னால அங்க இருக்கமுடியும்ணு தோணல அதான்டா கொஞ்சம் சேஞ்சுகாக சென்னை சூஸ் பண்ணேன்டா.ஆனால், என் வாழ்க்கையில இப்போ என்னென்னமோ நடந்து போச்சு, இப்போ ரொம்ப குழப்பமா இருக்குடா என்ன பண்றதுனே தெரியல, என வர்ஷித் கூறிய மொழிகளை கேட்ட ஆகாஷ், "என்ன குழப்பம் மச்சி" என கேட்டு முடிப்பதற்குள்ளவே வர்ஷித்தின் போன் சுவிட்ச்ஆப் ஆகியது சார்ஜ் இல்லாமல். வர்ஷித் நொந்து கொண்டே, இது கூட எனக்கு சதி பண்ணுது கொஞ்சம் நிம்மதியா இருக்க விடாதே இது...இது மட்டும் இல்லை எல்லாமே தான் என பார்வையை மனைவி மீது செலுத்தினான். உள்ளே சென்று சார்ஜ் போட்டுவிட்டு இவள் படுத்துவிட்டாளா என ஒரு நோட்டம் விட்டு சாப்பிட தொடங்கினான். மனித கோபத்தை எல்லாம் உயிரற்ற கருவியிடம் காட்டினால் அது தான் என்ன செய்யும்...

ஆதிகா உண்டு முடித்து, அறையில் சென்று கீழே முடங்கிக்கொண்டாள். படுத்தவுடன் காலையிலிருந்து அடக்கி வைத்த அழுகையையெல்லாம் தலையணையிடம் கொட்டி தீர்த்தாள். அவள் மனம் முழுவதிலும் விஷ்ணும் நியாபகங்களே நிரம்பி அவளை வாட்டியது. அவனும், தான் இருக்கிற சென்னையில் இருக்கும் போது தானே நம்மிடம் கடைசியாக பேசினான். அன்று அவன் பேசிய வார்த்தைகள் காற்றில் கலந்து அவளது செவி முழுவதும் ஆட்கொண்டது... பேசிய மனிதனுக்கு அழிவிருந்தாலும் பேசிய வார்த்தைக்கும் அதை உள்வாங்கிய காற்றுக்கும் அழிவு உண்டோ....

நிழல் அது தான் பிரிகிறதே...

நிஜம் அது தான் மறைக்கிறதே...

கண்ணும் கண்ணும் தவிக்கிறதே...

ஒன்றை ஒன்று தொலைக்கிறதே..

எத்தனை கனவு, எத்தனை ஆசை எல்லாமே கலைந்து விட்டதே. எல்லா பழியையும் விஷ்ணு மீது சுமத்தினாள் அந்த பேதை. இனிமேல், அவனுக்காக அழுக கூடாது. அவன் தானே என்னை விட்டு போனான், அவன் தான் வருந்தனும். நான் எதற்கு அழுகணும் என தன்னையே தேற்றிக்கொண்டாள். ஒட்டுமொத்த அவனது நினைவுகளையும் அழித்துவிடும்படி அழுது ஓய்ந்தாள்.

என்னடி மாயாவி நீ: 5

Last edited:
Author: Aarthi Murugesan Article Title: என்னடி மாயாவி நீ: 6 Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.