கவிதா மெடிக்கல் காலேஜ் பையனை விரும்ப அவனும் விரும்ப இப்போது அவன் கவிதாவிடம் தன்னை மறந்துவிடும்படி சொல்லிஇருக்க அதில் மனம் உடைந்து இவள் விஷம் சாப்பிட எப்படியோ அவளைக் காப்பாற்றி விட்டனர் சகதோழிகள். இதை அறிந்தவள் “அவன் யாருடி? எங்க இருக்கான்?” என்று ஆவேசமாகக் கேட்க
“அதோ அங்க கூட்டமா நின்னுட்டு இருக்கானுங்களே, அதில் அந்த கட்டம்போட்ட சட்டைதான் அவன்!” - ரம்யா
அன்று ஜுன்ஸ்சும் ஃபார்மல் ஷர்ட்டும் போட்டிருந்தவள் தன் த்ரிஃபோர்த் கையை இழுத்து விட்டுக்கொண்டே அந்தக் கூட்டத்தை நெருங்கியவள், சற்றும் யோசிக்காமல் அவளுக்கு முதுகுகாட்டி நின்றிருந்த கட்டம்போட்ட சட்டைக்காரனிடம் தன் இடதுகையை நீட்டி அவன் காலரைப் பிடித்து இழுத்து அவனத் தன்புறம் திரும்பியவள் அடுத்த நொடி அவன் கன்னத்தை அறைந்து இருந்தாள் மித்ரா!
அவனோ தனக்கு என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் “என்ன டா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? காதல்னா விளையாட்டா போச்சா? நீ காதலிப்ப! அப்பறம் வேணாம்னு சொல்லிட்டு போவ! உனக்காக இங்க ஒருத்தி சாகணுமா?” என்று கேட்டவள் மறுபடியும் அவனை அடிக்கக் கை ஓங்க,
அதற்குள் ஓடிவந்து அவள் கையைப் பிடித்துத் தடுத்த ரம்யா, “ஏய், இந்த கட்டம் போட்ட சட்ட இல்லடி! அதோ பக்கத்தில இருக்கானே ரெட்கலர் கட்டம் போட்ட சட்ட அவன் தான் டி!” என்று அவள் காதில் கிசுகிசுக்க அப்போதுதான் அடித்தவனையே சரியாகப் பார்க்க, அவனோ சும்மா வடநாட்டு ஹீரோ கணக்காக இருந்தான்.
அடி வாங்கிய கன்னத்தில் கைவைத்து பேந்தபேந்த முழித்துக் கொண்டிருந்தான் ஷியாம்சுந்தர்! அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவள், “சரிசரி... ஏதோ தெரியாம தப்பு நடந்துடுச்சி. டார்கெட் மிஸ் ஆயிடுச்சி, டோன்ட் டேக் இட் சீரியஸ் பிரதர்! மறப்போம் மன்னிப்போம்” என்று அவனிடம் சாதாரணமாகச் சொன்னவள் பின் பக்கத்திலிருந்த ரெட்கலர் சட்டைக்காரனைப் பிடித்து நன்றாக நாலு திட்டுத்திட்டி அவனை ஓர் வழி பண்ணிவிட்டு அறையிலிருந்த கவிதாவைக் கோபக்கனலுடன் பார்க்கச்சென்றாள் மித்ரா.
அங்கு சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்திருந்தவளை நெருங்கி, விட்டாள் ஒரு அறை! “ஏன் டி அதிமேதாவி, உனக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா? தப்பானவன காதலிச்ச சரி! அதுக்குப் பிறகாவது அவன விட்டுட்டு வரவேண்டியதுதான? எதுக்கு அவனுக்காக சாகப்போன? இதோ உன் பக்கத்துல இருக்கிற உன் அம்மா, தங்கச்சி, தம்பி பத்தி யோசிச்சு அவங்களுக்காக வாழமாட்ட! எவனோ ஒருத்தனுக்காக சாவியா? நல்லா இருக்குது டி நீ செஞ்சது!” என்று பக்கத்தில் நின்றிருந்த உறவுகளைக் காட்டிக் கோபத்துடன் திட்டி மறுபடியும் அவளை அடிக்கக் கை ஓங்க, அவளைத் தடுத்து நிறுத்திய ரம்யா.
“ஏய், அவளே உயிர் பிழைச்சி இப்போதான் வந்து இருக்கா. அதுக்குள்ள நீயே அவளை அடிச்சி சாகடிச்சிடுவ போல... கொஞ்சம் அமைதியா இரு டி” - ரம்யா
“உன் எதிர்க்க தான வெளிய அவன்கிட்ட பேசினன்? என்ன சொன்னான் அவன்? என்ன நடந்தாலும் இவள அவன் கட்டிக்கறதா இல்லனு சொல்லிட்டான் இல்ல? ஏன்னா அவன் காதல் உண்மையாறது இல்ல” என்று ரம்யாவிடம் சொல்லியவள்
பின் கவிதாவிடம் திரும்பி “இங்க பாரு, உன்னை உண்மையா விரும்பாதவனுக்காக செத்து உன் குடும்பத்தை அனாதையா விட போறியா இல்ல உன்மேல பாசம் வெச்சி உன்னச் சுற்றி இருக்கிற எங்களுக்காக வாழப்போறியா? எனக்குத் தெரியும் நீ கோழையில்ல. இது ஏதோ எமோஷன்ல செய்திருப்பனு நினைக்கிறேன். ஆனா ஒண்ணு, திரும்பவும் நீ சாக முயற்சி பண்ணி செத்தே போனாலும் உன் உயிரைப் பத்தியோ இல்ல உன் காதல பத்தியோ அவனுக்கு எந்தக் கவலையும் இருக்காது. அவன் பாட்டுக்கு அவன் வாழ்க்கையை சந்தோஷமாதான் வாழப்போறான்! அப்பறம் நீ ஏன் சாகணும்?
இன்னொன்னு யோசிச்சியா? இதனால உன்னப் பெத்தவங்களுக்கும் எவ்வளவு அசிங்கம் அவமானம்?! காதல் மட்டுமே வாழ்க்கை இல்ல, அதுவும் ஒரு பாகம் அவ்ளோதான்! நீ பொறந்ததுக்கான கடமையை மறந்து உயிர விடறது புத்தாசாலித்தனம் இல்ல. அவனுக்கு எதிரா நீயும் வாழ்ந்து காட்டணும், அப்பதான் நீ ஜெயிச்சதா அர்த்தம். தேங்காட்! நீ எல்லை மீறாமப் பழகினியே, அதுவரைக்கும் சந்தோஷம்! எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு வெளியில் வா, உன் வாழ்க்கையை நீ வாழு! என்ன புரிஞ்சிதா? என்று அவளுக்கு அறிவுரையைச் சற்று அதிகாரமாகச் சொல்லி அங்கிருந்து கிளம்பினாள் மித்ரா.
அதன் பிறகு கவிதா மனம்மாறி அவள் வாழ்க்கையை வாழ முடிவு எடுக்க, அந்த பாதிப்பிலிருந்து அவள் வெளியே வர கூட இருந்தவர்கள் அனைவரும் உதவி செய்தனர். மித்ராவின் நாட்களும் அவள் போக்குக்கு போய்கொண்டிருக்க, அந்த ஷியாமை அந்த வினாடிக்குப் பிறகு மறந்தே போனாள்மித்ரா. ஆமாம், இவ அடிச்சவங்கள எல்லாம் ஞாபகம் வச்சி இருக்கணும்னா எத்தனை பேர இவ ஞாபகத்தில் வச்சி இருக்கணும்?!
ஆனால் அடி வாங்கின ஷியாம் மட்டும் அவளை மறக்கவில்லை. ‘அவ அடிச்ச அடி, கோபத்துல அந்த கண்ணுல வந்து போச்சிபாரு ஒருநெருப்பு! ப்பா!.. என்ன கண்ணுடா சாமி?! கத்திப்பேசல, நிதானமாதான் பேசினா! ஆனா அதுக்கே அவள் வார்த்தைகள் ஒவ்வொண்ணும் சும்மா இடிபோல இருந்துச்சே!’ என்று அவள் தன்னை அடித்ததையும் மறந்து அவளை நினைத்துப் பெருமை கொண்டான் ஷியாம்.
திரும்ப எப்போது அவளைப் பார்ப்போம் என்று அவன் நினைத்திருக்க, அதற்கும் வழி வந்தது. மித்ராவுடைய காலேஜ் லெக்சரருக்கு திருமணம் நடக்க, அவர் ரிசப்ஷனில் மித்ராவும் அவள் தோழிகளும் கலந்து கொண்டனர். அங்கு ஷியாமும் வர, அவன் முதலில் அவளைப் பார்த்ததை விட இப்போது மித்ராவோ புடவைக் கட்டிப் பூ வைத்து கன்னம் குழிய சிரித்துப் பேசி அங்கு நடந்த அந்தாக்சரியில் கலந்துகொண்டுப் பாட, அதைப் பார்த்தவனோ முழுமையாக அவளிடம் விழுந்தே போனான் ஷியாம்!
அதன் பிறகு இன்னொருநாள் ஒரு பிரபல நடிகருடைய படம் ரிலீஸாக, அதற்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவிற்கு நண்பர்களுடன் சென்ற ஷியாம் அங்கு மித்ராவும். வந்திருப்பதைப் பார்த்தவன், ஷோ முடிந்த பிறகு அவளிடம் பேச நினைத்திருக்க, எதிர்பாராவிதமாக ஹீரோ இன்ட்ரோ சாங்குக்கு விசில் அடித்து தலைவிரி கோலமாக அவள் எழுந்து நின்று ஆடியதைப் பார்த்தவனோ திறந்த வாயை மூடாமல் ‘ஆம்பள பிள்ள நானே பேசாம உட்கார்ந்து பார்க்கறேன். ஆனா இந்தப் பொண்ணு என்ன இந்த ஆட்டம் போடுது!’ என்று நினைத்தவன் பிறகு கூட்டத்தில் அவளைத் தவறவிட, அன்றும் அவளிடம் பேசவே முடியாமல் போய்விட்டது.
முதல் சந்திப்பில் அவள் தைரியத்தையும், இரண்டாவது சந்திப்பில் அவள் அழகையும், மூன்றாவது சந்திப்பில் அவள் விளையாட்டுத்தனத்தையும் பார்த்து ரசித்தவன் மனதால் அவளைக் காதலிக்கவே ஆரம்பித்துவிட்டான் ஷியாம்! அதன்பிறகு அவள் பெயர் டிபார்ட்மெண்ட் என்று எல்லாம் தெரிந்துகொண்டவன் மறுமுறை அவள் சந்திப்புக்காக காத்துக்கொண்டிருக்க, அதற்கும் வழிவந்தது.
எப்போதும் தனக்குக் கிடைக்கும் நேரத்தையும் விடுமுறை நாட்களையும் ஓர் ஆதரவு அற்றோர் இல்லத்தில் சென்று கழிப்பாள் மித்ரா. அதை நிர்வகிப்பவர் ஒரு திருநங்கை. அங்கு இருப்பவர்கள் முக்கால்வாசிப்பேர் அவரைப்போல் திருநங்கைகளும் ஆதரவற்ற சிறுகுழந்தைகளும் மட்டுமே. அப்படி அவள் அங்கு சென்றுவருவது யாருக்கும் தெரியாது. ஏன் அவள் கூடவே ரூமில் தங்கிஇருக்கும் ரம்யாவுக்குக் கூடத் தெரியாது.
ஏன் என்றால் இவளுக்குத் தெரிந்தவர்கள் யாராவது அங்கிருக்கும் திருநங்கைகளைப் பார்த்து நேரிடையாக முகம் சுளிக்கவோ இல்லை மறைமுகமாக அவர்களைக் கேலியோ கிண்டலோ செய்தால் பிறகு, தனக்கு ஒரு தாய்வீடு போல் அங்கு போய் வரும் சுமூக உறவு இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தால் தான் மித்ரா யாரிடமும் சொல்லவில்லை. இன்னும் அவர்களை சகமனுஷியாக பார்க்கும் நிலை இந்த சமூகத்திற்கு வரவில்லை என்பது அவள் கருத்து.
ஓர் ஞாயிறு அன்று அவள் அந்த காப்பகத்திற்குச் சென்றிருக்க, அன்று அங்கிருக்கும் குழந்தைகள் மற்றவர்கள் அனைவருக்கும் வழக்கமாக நடக்கும் மருத்துவ பரிசோதனைக்கு ஒரு டாக்டர் குழு அங்கு வருவதாகவும் அதற்கு அனைவரையும் தயாராக இருக்கும்படி அங்கிருந்த அனைவரிடமும் அந்த காப்பகத்தின் மேலாலர் வசந்தி சொல்ல அதன்படியே அனைவரும் தயாராகக் காத்திருந்தனர்.
அவர் சொன்ன நேரத்திற்கு சற்று முன்னதாகவே தீபம் என்ற பெயரும், கீழே ‘நம்மால் சாதிக்க முடியவில்லை என்றாலும் சாதிக்க நினைப்பவர்களின் பாதையில் தீபமாக இருந்து ஒளி கொடுப்போம்’ என்று எழுதியிருந்த பெயர் பலகையடன் கூடிய கட்டிடத்தின் உள்ளே மருத்துவ வாகனங்கள் நுழைந்து அங்கிருந்த பெரியவர்கள் முதல் சிறியவர் வரை பரிசோதித்து மருந்து மாத்திரைகள் கொடுக்க அந்த குழுவில் ஷியாமும் இருந்தான்.
அங்கு வந்த உடனே அவன் மித்ராவைப் பார்த்து விட, அவள் அங்கும் இங்கும் ஓடி அங்கு இருப்பவர்கள் கேட்பதை எல்லாம் செய்ய, சில குழந்தைகள் டாக்டரிடம் வரவும் ஊசிக்கும் பயந்து அழ, அந்த குழந்தைகளைக் கொஞ்சிப் பேசி சமாதானப்படுத்தி அவர்களிடம் குழந்தையோடு குழந்தையாக மாறி சில பேரிடம் தாயாக இருந்து அன்புகாட்டி கண்டித்து வழிக்குக்கொண்டு வர, இதையெல்லாம் பார்த்த ஷியாமுக்கு ‘அன்று நம்மை அடித்த மித்ராவா இவள்?!’ என்று தான் முதலில் தோன்றியது. அவன் யார் என்றே தெரியாமல் அவனிடம் சகஜமாகப் பேசி அவன் கேட்பதை எல்லாம் செய்து கொண்டிருந்தாள் மித்ரா.
அங்கு வேலை செய்யும் வாட்ச்மேனின் மனைவி தான் சமையல் வேலைக்கு உதவியாக இருப்பவர். அவருக்கோ நேற்று சமையல் செய்யும் போது காலில் சூடான எண்ணெய் கொட்டி கொப்பளம் ஏற்பட்டு காயமாகி விட, அதை ஓர் துணியால் சுற்றிக் கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்தவளோ, ‘டாக்டர்ஸ் இங்க தான இருக்காங்க, அவங்கள கூப்பிட்டுக் காட்டிடுவோம்’ என்று நினைத்து அவர்களிடம் செல்ல, அங்கு அனைவருமே மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . ‘அவர்களை இப்போது எப்படி கூப்பிடுவது?!’ என்று நினைத்து உள்ளே செல்லத் தயங்கியவள் பிறகு வரலாம் என்று திரும்ப, அதே நேரம் ஷியாம் மட்டும் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து போனைப்பார்த்து கொண்டிருந்தவனை நெருங்கியவள்
“எக்ஸ்க்யூஸ்மீ டாக்டர், இங்க ஒருத்தவங்களுக்கு கால்ல எண்ணெய் கொட்டிடுச்சி. அவங்களால நடக்க முடியல. நீங்க வந்து கொஞ்சம் பார்க்க முடியுமா?” - மித்ரா
யாரிடம் பேச வேண்டும் என்று நினைத்தானோ அவளே தானாக வந்து பேச ‘சரி’ என்று கூறி உடன் சென்றான் ஷியாம்.
அந்தப் பெண்மணி காயத்துக்கு எந்த முதல் உதவியும் செய்யாமல் காயம் மிகவும் மோசமாக இருக்க, அவருக்கு டிரஸ்ஸிங் செய்து மாத்திரை எழுதிக் கொடுத்து ஊசிபோட்டவன், “இரண்டு நாளைக்கு ஒரு தடவை நிச்சயம் டிரஸ்ஸிங் பண்ணனும், இல்லனா செப்டிக் ஆகிடும்” - ஷியாம்
“அப்ப நீங்களே ரெகுலரா வந்து செய்துடுங்க டாக்டர்” - மித்ரா
அவள் அப்படிச் சொல்லவும் சற்று திகைத்துத்தான் போனான் ஷியாம்! ‘உங்களால வர முடியுமா டாக்டர்? பிளீஸ் கொஞ்சம் வாங்க, என்று கூப்பிடாம என்ன அதிகாரமா வா என்று சொல்றாளே!’ என்று நினைத்தவன்
மறுநொடி அதைவிடுத்து, “அவங்களுக்கு ஜுரம் இருக்கு. நான் ஊசிபோட்டிருக்கன். அதையும் மீறி ஜுரமோ அனத்தலோ இருந்தா எனக்கு போன் பண்ணுங்க” என்று அவன் தன் நம்பரை கொடுக்க சரி என்று வாங்கிக் கொண்டாள் மித்ரா.
பின் இருவரும் வெளியேவர “என்ன உங்களுக்குத் தெரியலையா?” - திடீர் என்று ஷியாம் கேட்க
“ஓ… நாம பார்த்து இருக்கோமா டாக்டர்? எங்க எப்போ? - மித்ரா
அவள் பதிலில் மறுபடியும் திகைத்தவன் “ஒரு மாசத்துக்கு முன்னாடி ஜி.எச்ல கவிதா என்ற மாணவியோட சூசைட் விஷயத்துக்காக அந்த பொண்ணுடைய லவ்வர அறையரதா நினைச்சி என்ன அறைஞ்சிட்டிங்களே, அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று தான் அறை வாங்கின விஷயத்தை அவன் சிரித்துக் கொண்டே சாதாரணமாகச் சொல்ல
மித்ரா தான் திணறிப் போனாள். ‘என்ன இவரு அதை சிரிச்சிட்டே சொல்றாரு?!’ என்று நினைத்தவள் சற்று யோசித்து அன்று செய்ததப் பிற்கு இன்று மன்னிப்பு கேட்க.
அதற்கும் சிரித்துக் கொண்டே “அப்பா.. எப்போ அடிச்சதுக்கு நீங்க எப்போ மன்னிப்பு கேட்கறிங்க?! அதுவும் நான் சொன்ன பிறகு! உங்களுக்கு ரொம்பவும் பெரியமனசுங்க” - ஷியாம்
“சாரி டாக்டர் நிஜமாவே உங்கள எனக்கு அடையாளம் தெரியல” - மித்ரா
அதன் பிறகு பொதுவாக ஒன்றிரண்டு வார்த்தை பேசியவர்கள் பிறகு விலகிச்செல்ல, அன்றைய மெடிக்கல் கேம்ப் முடிந்து அனைவரும் சென்றுவிட, அவன் சொன்னது போலவே மாலை வேளையில் அந்தப் பெண்மணிக்கு ஜுரம் வந்து மித்ரா அவனுக்குத் தெரியப்படுத்த. சிரமம் பார்க்காமல் திரும்ப வந்து அவர்களுக்கு வேண்டியதை செய்துவிட்டுப் போனான் ஷியாம்.
ஒரு நாள் விட்டு மறுநாள் மித்ராவே ஷியாமுக்கு ‘இன்னைக்கு அவங்களுக்கு டிரஸ்ஸிங் பண்ணனும் டாக்டர்’ என்று மெசேஜ் அனுப்ப, அதைப் பார்த்தவனோ ‘ஓகே’ என்றான் பதில் மெசேஜாக. பிறகு அவருக்கு செய்து முடித்து ‘டிரஸ்ஸிங் முடிச்சிட்டு வந்துட்டேன்’ என்று மறுபடியும் இவன் மெசேஜ் அனுப்ப, இப்படியே ஒருவாரம் பார்க்காமலே இருவரும் மெசேஜிலேயே பேசிக்கொண்டனர். பின் அங்கு அவள் வரும் நேரத்தை அறிந்து ஷியாம் எதேச்சையாக வருவதுபோல் வர, இருவருக்குள்ளும் முன்னைவிட சற்று அதிகமாகவே கலந்துரையாடல் நடந்தது. அதுவே பிறகு, ‘நான் இன்னைக்கு வரேன். உன்னால் வரமுடியுமா?’ என்று அவன் மித்ராவிடம் கேட்டு சந்திக்கும் அளவுக்கு வளர்ந்தது.
அவனிடம் நேர் கொண்ட பார்வையையும் தடுமாற்றம் இல்லாத பேச்சையும் பார்த்தவள், அவன் அழைப்பை ஏற்று அவனிடம் சகஜமாகப்பழக ஆரம்பித்தாள் மித்ரா. இருவரும் அரசியலில் இருந்து சினிமாவரை பேசி ஆராய்ந்தார்கள். அவரவர் கருத்தில் இருந்து வாதிட்டார்கள். நிறைய விஷயங்களைப் பேசித் தெரிந்து கொண்டார்கள். அவன் எங்கெல்லாம் மெடிக்கல் கேம்ப் போகிறானோ, அங்கெல்லாம் முடிந்தால் அவளையும் வரும்படி கேட்க, அவளும் சில நேரத்தில் ஒத்துக் கொண்டு சில இடங்களுக்குப் போய் வந்தாள். இப்படியாக ஒருவருடம் இருவருக்குள்ளும் நல்ல நட்பு வளர்ந்தது. அவளை விரும்பினாலும் அதை மறைத்து அவளிடம் நல்ல தோழனாகவே பழகினான் ஷியாம்.
அவன் இறுதி ஆண்டை முடிக்க, மித்ராவோ ஃபைனல் இயரில் இருக்க அன்று அவளை சந்தித்தவனோ அவளிடம் தன் குடும்பவிஷயத்தை அதிகமாகவே பேச ஆரம்பித்தான். அவன் தந்தை வெளிநாட்டில் இருக்க, வீட்டில் தாய் மற்றும் ஒரு தங்கையுடன் இங்கு வசிக்கிறான் என்பதுவரை அவளுக்கு அவனைப் பற்றி ஏற்கனவே தெரியும். அதனால் இன்று அதைத் தவிர்த்து வேறு விபரங்கள் சொன்னான் ஷியாம். அவன் தாய்க்கு தன் கணவரின் வீட்டுச்சொந்தங்கள் பிடிக்காமல் போக, இவன் உருவத்தில் தாத்தாவை போல் அதாவது மாமனார் போல் இருந்ததாலும் பிறந்ததில் இருந்து அவர்களிடம் ஒட்டுதலாக இருந்ததாலும், அவனிடம் அன்பு பாசத்தைக் காட்டாமல் வெறுப்பையும் ஒதுக்கத்தையும் அவன் தாய் காட்டி வந்திருக்கிறார்.
அவனுடைய ஐந்தாவது வயதில் தந்தையும் வெளிநாடு சென்று விட, என்றும் அவருடைய பாசமும் அரவணைப்புமே அவனுக்குக் கிடைக்காமலே போனது அது இன்று வரை தொடர்கிறது என்று அவன் சொல்ல இவை அனைத்தையும் கேட்டவள் ‘இப்போ இதை எல்லாம் எதுக்கு சொல்றான்?’ என்று யோசிக்க திரும்ப அவனே பேச ஆரம்பித்தான். “உன்ன நான் முதன் முதலில் பார்த்ததுல இருந்தே உன்ன எனக்குப் பிடிக்கும் மித்ரா! உன் துணிச்சல் தைரியம் தன்னம்பிக்கை எல்லாத்த விட உன் தாய்மை குணம்! முதல் தடவைக்கு அப்பறம் உன்ன இரண்டு தடவை பார்த்து இருக்கன். அதன் பிறகு பேசினதுல இன்னும் பிடிச்சிப் போச்சி!
ஐ லவ் யூ மித்ரா! என்ன கல்யாணம் பண்ணி எனக்கு நீ ஒரு மனைவியா இருக்கறத விட தாய் பாசமே கிடைக்காத எனக்கு அதைக் கொடுக்கற ஒரு தாயா நீ எனக்கு காலம் முழுக்க வேணும் மித்ரா! என்னுடைய படிப்பு முடிய தான் நான் இவ்வளவு நாள் இதசொல்லாமல் இருந்தன்” என்று அவள் கண்ணைப் பார்த்து நேரிடையாகத் தன் காதலைப் போட்டு உடைத்தான் ஷியாம்
அவன் தன் காதலைச் சொல்லி எனக்கு மனைவியா நீ வேணும்னு கேட்டிருந்தா அவனை விட்டு விலகி இருப்பாளோ என்னவோ?! ஆனால் எனக்கு நீ ஒரு தாயாக வேண்டும் என்று சொன்னதிலும் அதிலும் இப்படி பட்டென்று போட்டு உடைத்ததிலும் அவள் திகைத்து விழிக்க, அதைப்பார்த்தவனோ “நீ இப்பவே சொல்லணும்னு அவசியமும் இல்ல மித்ரா. நீ பொறுமையா யோசிச்சி நல்ல முடிவா சொல்லு” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல மித்ராவுக்குத் தான் குழப்பமாகிப் போனது!
‘இது வரை அவனிடம் பழகின வரை அவனை எனக்குப் பிடிக்கும் தான். ஆனால் அது காதல் இல்லையே! மனதில் இல்லாத காதலை நான் எப்படி பொய்யா கூட அவனிடம் சம்மதம் என்று சொல்ல? அதுக்காக ஒரு தாயின் இடத்தில் என்னை வைத்து என்னிடமிருந்து அன்பை எதிர்பார்க்கறவனிடம் இப்போ என்ன சொல்ல?’ என்று குழம்பிப் போனாள் அவள்.
அதன் பிறகும் அவன் அவளிடம் பேசினான் தான். ஆனால் திரும்ப அவன் காதலைச் சொல்லி அவளைத் தொந்தரவு செய்யவில்லை. மாறாக தினமும் அவன் தாயிடமிருந்து அவனுக்குக் கிடைத்த ஒதுக்கத்தைக் கூறினான். இப்படியாக ஒரு மாதம் செல்ல, ஒரு நாள் அவனிடமிருந்து போனும் இல்லை மெசேஜ்ஜும் இல்லை. இவள் பண்ணாலும் எந்த பதிலும் இல்லை. இரண்டு நாள் பொறுத்தவள் மூன்றாம் நாள் அவன் நண்பனிடம் விசாரிக்க, அவனுக்கு நான்கு நாளாக டைஃபாய்டு ஃபீவர் என்று அவன் தகவல் சொல்ல அன்றே ரம்யாவும் அவளும் அவனை நேரில் காண நினைத்து அவன் நண்பனிடமே வீட்டு முகவரியை வாங்கி ஷியாம் வீட்டிற்குச் சென்றனர்.
அவன் வீடோச கலவசதிகளும் கொண்ட அபார்ட்மெண்ட்டில் இருந்தது. சற்று மிடில் கிளாஸ்ஸில் இருந்து இப்போது தான் கொஞ்சம் மேலே வந்தவர்களாகத் தெரிந்தார்கள். அவன் ஃபிளாட்டைத் தேடிக் கண்டு பிடித்து அழைப்பு மணியை அழுத்த, ஒரு வயதான பெண்மனி களையாக சிரித்த முகமாகவே வந்து கதவைத் திறந்தவர், இவர்களை யார் என்ன ஏது என்று விசாரிக்க இவர்கள் ஷியாமின் தோழிகள் என்று சொல்ல, அவ்வளவுதான்! சிரித்த முகம் யோசனையாகவும் அஷ்ட கோணலாகவும் மாற பதிலும் சொல்லாமல் உள்ளேயும் கூப்பிடாமல் அவர் விருட்டென்று உள்ளே சென்று விட,
மித்ராவுக்கும் ரம்யாவுக்கும் தான் ஒரு மாதிரி ஆகிப்போனது. உடனேரம்யா “என்னடி நாம சரியான வீட்டுக்குத் தான் வந்தோமா இல்ல ஏதோ தப்பா வந்துட்டோமா?” என்று மித்ராவின் காதில்கிசுகிசுக்க, அந்த நேரம் பார்த்து வெளியே வந்த இன்னொரு வயதான பெண்மணி அவர்களைப் பார்த்ததும், “என்னங்க ஷியாம் ஐயாவ பார்க்கணுமா? உள்ள வாங்க ஐயா ரூம்ல தான் படுத்துட்டு இருக்காங்க” என்று சொல்ல “அப்பாடா!” என்று பெருமூச்சுடன் இருவரும் அவரை பின் தொடர்ந்து உள்ளே செல்ல,
அப்போது ஒரு அறையிலிருந்து ஷார்ட்ஸ்டி ஷர்ட்டுடன் சிறுவயது பெண் ஒருத்தி வெளியே வர, அவளைப் பார்த்தாலே தெரிந்தது அவள் ஷியாமின் தங்கை என்று! வந்தவள் இவர்களைக் கண்ணில் சிறு ஆர்வத்துடன் பார்க்க, “மேம் இவங்க ஷியாம் ஐயாவப் பார்க்க வந்து இருக்காங்க” என்று அந்த பெண்மணி சொல்லவும், இவளிடமும் அதே முகமாற்றம் தான்! அது வரை அந்த கண்ணிலிருந்த தோழமையும் ஆர்வமும் விலகி வெறுப்புமட்டுமே வந்தது.
பிறகு “ச்சூ..” என்ற அலட்சிய உச்சுக்கொட்டுடன் அவளும் சென்றுவிட, இவர்கள் இருவருக்கும் ‘ஐய்யோ! ஏன்டா இங்கு வந்தோம்?!’ என்று ஆனது.
பிறகு ஷியாமின் அறைக்குள் சென்று பார்க்க, அவன் மிகவும் சோர்ந்த நிலையில் படுத்துக்கிடந்தான். “தம்பி உங்கள பார்க்க வந்து இருக்காங்க. எழுந்திருங்கதம்பி” என்று அவர் அவனை எழுப்ப, சற்று சிரமப்பட்டே கண்ணைத் திறக்க. அதற்குள் மித்ரா, “இல்ல இல்ல வேண்டாம்! அவர் தூங்கட்டும் எழுப்ப வேண்டாம்!” என்று மறுக்க, அவள் குரலைக் கேட்டவன் கண்ணைத் திறந்து உடனே எழுந்து அமரமுயன்றான். ஆனால் அவனால் அதைச் செய்ய முடியாமல் சோர்ந்து போய்துவள, “வேண்டாம் ஷியாம்! நீங்க கஷ்டப்படாதிங்க. உங்களுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னாங்க. அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்” என்று மித்ரா அவனைப் படுக்கச் சொல்ல,
“தம்பி, இன்னைக்கு வீட்டுக்கு நான் சீக்கிரம் போறேன். உங்களுக்கு நைட் சாப்பிட என்ன வேணும்னு சொன்னா செஞ்சி வெச்சிட்டுப் போய்டுவேன்” என்று அந்த வயதான பெண்மணி கேட்க
“இல்லபாட்டி, எனக்குஎதுவும்வேணாம். நீங்க போங்க! பால் மட்டும் காய்ச்சி பிளாஸ்கில் வச்சிட்டுப் போங்க. எனக்குஅதுபோதும்” என்றான் சற்று சிரமமாக. பின் மித்ராவைப் பார்த்து “வாமித்ரா! நீ வரும் போது உன்ன வரவேற்க முடியாம நான் படுத்துக்கிடக்கிறேனே!” என்று அவன் கவலைப்பட
“ச்சச்ச.. உங்களுக்கு உடம்பு முடியாததுக்கு நீங்க என்ன செய்வீங்க? ஏன் நைட் சாப்பிட எதுவும் வேணாம்னு சொன்னிங்க? வெறும் பால் மட்டும் போதுமா? உங்க அம்மா கிட்ட சொல்லி வேற ஏதாவது செய்து தரச் சொல்லி சாப்பிடுங்க” - மித்ரா
“வேற என்ன செய்யச் சொல்ற மித்ரா? ஜுரம் வந்ததிலிருந்து வாய்க்கு இந்த நிமிஷம் ஒண்ணு பிடிக்குது மறுநிமிஷம் வேற பிடிக்குது. இதுல நைட் ஒன்பது மணிக்கு சாப்பிடறதுக்கு ஐந்து மணிக்கே நான் சொல்லவா?! அதான் வேண்டாம்னு சொன்னன்.
இன்னும் என்ன கேட்ட? எங்க அம்மா கிட்ட சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடவா? இவங்களாவது நைட் என்ன வேணும்னு கேட்டாங்க! எங்க அம்மா இதுவரை என் அறைக்கு வந்து நான் எப்படி இருக்கனு பார்க்கக் கூடஇல்ல! இந்த லட்சணத்துல சாப்பாடு கேட்க சொல்றியா? அப்ப அன்னைக்கு நான் சொன்னத நீ நம்பல! இல்லையா? வரும் போது நீ என் தங்கைய பார்த்தியா இல்லையானு தெரியல. என் அம்மாவோட அலட்சியத்தப் பார்த்துப் பார்த்து என் தங்கச்சியும் என் கிட்ட அப்படித் தான் இருப்பா.
இதுல, எனக்கு இது வேணும்னு இப்போ நான் யார் கிட்ட கேட்க? விடு மித்ரா! என் தலையெழுத்து, சாகரவரை எனக்கு யாரும் இல்லாமல் அநாதையா இருக்கணும்னு இருக்கு” என்று வேதனையாக சொன்னவன் சோர்வுடன் கண்களை மூடிக் கொள்ள, மித்ராவுக்குத் தான் கஷ்டமாகிப் போனது. பிறகு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு ரம்யாவும் அவளும் கிளம்பி விட, அன்று முழுக்க ஷியாமைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள் மித்ரா.
மித்ராவிடம் ஷியாம் காதலைச் சொன்னது ரம்யாவுக்குத் தெரியும். “என்னமித்ரா, இதுக்கப்பறமும் ஷியாமை வேண்டாம்னு நினைக்கிறியா? அவன் உன் கிட்ட காதலை எதிர் பார்த்திருந்தா நீ மறுக்கலாம். அவன் எதிர் பார்ப்பது தாயின் அரவணைப்பையும் அன்பையும் தான்! அவர் அன்று சொன்னதை இன்று உன் கண்ணால பார்த்துட்ட பிறகு என்ன சொல்லப் போற?” என்று அவளும் எடுத்துச் சொல்லவும், ஷியாம் விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்று திணறினாள் அவள்.
மித்ராவுக்கு அன்று இரவு தூக்கமே இல்லை. ‘ஷியாம் சாப்பிட்டானா? இப்போ எப்படி இருக்கானோ?’ என்று நினைத்து கவலைப்பட்டவள் இறுதியாக ஒரு முடிவுடன் விடியற் காலை மூன்று மணிக்கு அவன் போனுக்கு ‘நீங்க நினைக்கிற மாதிரியே காலம் முழுக்க உங்களுக்கு ஒரு நல்ல தாயா இருப்பேன்!’ என்று இவள் மெசேஜ் பண்ண, அவன் தூங்காமல் முழிச்சிருந்தான் போல! உடனே அதைப் பார்த்தவன் அவளுக்குக் கால் செய்ய, இவள் என்ன பேசுவது என்ற பதட்டத்தில் கட் செய்ய அவளைப் புரிந்து கொண்டவனோ, ‘மித்ரா, உண்மையா தான சொல்ற?’ என்று அவன் பதில் மெசேஜ் அனுப்ப
இவள் ‘ம்ம்ம்….’ என்று அனுப்பினாள்
‘ஐ லவ் யூ மித்ரா! ஐ லவ் யூ டியர்!’ - ஷியாம் அனுப்ப
…… இவளிடம் பதில் இல்லை
‘நீங்க இன்னும் தூங்கலையா?’ - மித்ரா
‘நீ இன்னும் தூங்கலையா?’ - ஷியாம்
இப்படி இருவரும் ஓரே நேரத்தில் மெசேஜ் பண்ண, இருவருக்குமே அதைப் பார்த்து சிரிப்பு வந்தது. பின் இருவரும் ஓர் குட்நைட் மெசேஜ் உடன் தூங்கிப் போனார்கள்.
மித்ராவும் ரம்யாவும் ஹாஸ்டலில் ஒரே ரூமில் தங்கியிருந்தனர். காலையில் ரம்யா எழுந்திருக்கும் போது மித்ரா தூங்கிக் கொண்டிருக்க, நைட் எல்லாம் அவள் தூங்கவில்லை என்பதை அறிந்தவள், அவளை எழுப்பாமல் ரம்யாமட்டும் காலேஜ் செல்ல, அப்படி நல்ல தூக்கத்தில் இருந்த மித்ராவைக் காலையில் எட்டுமணிக்கு அவள் போனுக்கு வந்த அழைப்பு தான் எழுப்பியது. தூக்கக் கலக்கத்திலே இவள் எடுத்து “ஹலோ” சொல்ல
“என்ன டியர், காலேஜ் கிளம்பிட்டியா?” என்று கேட்டது ஷியாமின் குதூகல குரல். அவன் சொன்ன டியரைக் கேட்டு அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்து சற்று யோசிக்க, அப்போது தான் நைட் நடந்தது எல்லாம் அவளுக்கு நினைவிற்கு வந்து பேசாமல் இருக்க, அங்க ஷியாமோ “என்ன மித்ரா, லைன்ல இருக்கியா?” என்று கேட்க
“ம்ம்ம்…. இருக்கேன். இப்போ தான் எழுந்தேன்” - மித்ரா
“ஓ… நான் கால் பண்ணவோ எழுந்தியா? சரிதூங்கு. ஆமாம், உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று அவன் கரிசனமாகக் கேட்க
“இல்ல, உடம்புக்கு ஒண்ணும் இல்ல. நைட் சரியா தூங்கல, அவ்வளவு தான். நீங்க சொல்லுங்க, உங்களுக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு?” - மித்ரா
“ஜுரம் இன்னும் போகல. ஆனா இப்போ கொஞ்சம் எனர்ஜிடிக்கா இருக்கன்” என்று சொன்னவன் இறுதியாக “ஏன் மித்ரா, நீ நேற்று நைட் மெசேஜ் அனுப்பினது உண்மை தான?” என்று சற்று இறங்கிய குரலில் அவன் கேட்க
இப்போதும் அவள் அமைதியாக இருக்க அங்கு ஷியாமோ, “மித்ரா!” என்று பதட்டத்துடன் கூப்பிட,
“ஷியாம், எனக்கு அம்மா அப்பா யாருமே இல்லை. அதனால நான் தாய்பாசம் அறியாதவள். உங்களுக்குத் தாய் இருந்தும் அந்த பாசத்தை நீங்களும் அறியாதவர் அதனால் உங்க ஏக்கம் எனக்குப் புரியும். சோ நான் உங்களுக்கு மெசேஜ்ல சொன்னது எல்லாம் உண்மை. நிச்சயம் சாகரவரைக்கும் உங்களுக்கு ஒரு நல்ல தாயா இருந்து பார்த்துப்பன். அன்று என்கிட்ட கேட்டதற்கு எனக்கு சம்மதம் தான்.
ஆனா, திருமண வாழ்க்கையில் அப்படி மட்டும் இருக்க முடியாதே. ஒரு மனைவியாகவும் தானே நான் உங்க கூட வாழணும்? இப்பவும் சொல்றேன் ஷியாம், எனக்கு உங்க மேல மனிதாபிமானம், தோழமை, அன்பு, பாசம் எல்லாம் இருக்கு. ஆனா துளியும் காதல் இல்ல! எனக்கு உங்க மேல காதல் வந்த பிறகு தான், ஒரு மனைவியா செய்ய வேண்டியத நான் செய்ய முடியும். அதுக்காக நான் மாறமாட்டேனு சொல்லல. எனக்கு கொஞ்சம்டைம் வேணும். அதுக்கு நீங்க வெயிட் பண்ணனும். இதுக்கு உங்களுக்குச் சம்மதமா? என்று கேட்டு தன் மனதில் எழுந்த சந்தேகங்களை மிகவும் தெளிவாக அவனுக்குப் புரியவைத்தாள் மித்ரா.
அவள் சம்மதம் சொன்னதைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சை வெளிட்டவன், “மித்ரா! கண்டிப்பா நான் வெயிட் பண்றேன். அதுக்காக உனக்கு காதல் வந்த பிறகு தான் நாம கல்யாணம் பண்ணிக்கனும்னு இல்ல. முதல்ல நாம கல்யாணம் பண்ணிப்போம். அதுக்கப்புறம் நீ சொல்ற மாதிரி நான் காத்திருக்கிறேன். நிச்சயம் என்னோட காதல் உனக்குள்ள இருக்கற காதலையும் தட்டிஎழுப்பும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. ஆனா நீ சம்மதம் சொன்னதே எனக்குப் போதும். ரொம்ப சந்தோஷமா இருக்கு. சரிமித்ரா! உனக்கு உடம்பு டயர்டா இருந்தா நீ தூங்கு. எனக்கு உடம்பு நல்லான உடனே உன்ன வந்து நான் பார்க்கிறேன்” என்று சொல்லி அவர்கள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஷியாம்.
இரண்டு வாரத்தில் உடம்பு சரியாகி விட, பிறகு நேரில் பார்த்துப் பேசிக் கொண்டனர். அவனிடம் சம்மதம் என்று சொல்லி விட்டதால் அவள், அதிகப்படியாக அவனிடம் பழகவில்லை. அவனும் தான்! ஒருவேளை, மித்ரா கொஞ்சம் ஒட்டுதலோடு பழகி இருந்தால் அவனும் அவளிடம் கொஞ்சல், சீண்டல், வழிசல் என்று இருந்திருப்பானோ?! பீச் சினிமா பார்க் என்று போனார்கள் தான். ஆனால் மித்ரா எதற்கும் இடம் கொடுக்காமல் அவனிடம் தள்ளியே இருந்ததால் அவனும் எப்போதும் போலவே இருந்தான். இப்படியாக மூன்று மாதங்கள் உருண்டோடியது.
ஓர் நாள் ரம்யா ஊருக்குப் போய் இருக்க, மித்ரா மட்டும் ஹாஸ்டலில் தனியாக இருந்த நேரம் ஷியாமிடமிருந்து போன்வர, அதை அட்டன் செய்ய “மித்ரா, நான் சொல்றதுக்கு என்ன ஏதுனு கேட்காத! நான் சொல்றத மட்டும் செய். நாளைக்குக் காலையில் ஆறுமணிக்கு ரெடியா இரு. ஹாஸ்டல் வாசலிலே வந்து உன்ன நான் பிக்கப் பண்ணிக்கிறேன். புடவை கட்டிக்கோ, பூ வளையல்னு போட்டுக்கோ. மீதிய உன்ன நேர்ல பார்த்த பிறகு சொல்றேன்” என்றவன் அவளிடம் பதிலை எதிர்பாக்காமல் போனை கட்பண்ணி விட,
‘என்ன ஏதுனு சொல்லாம, கிளம்புனா என்ன அர்த்தம்?!’ என்று கோபப்பட்டவள் ‘அதெல்லாம் வர முடியாதுனு!’ சொல்ல நினைத்து அவனுக்கு அழைக்க, ரிங்போனதே தவிர அவன் எடுக்கவில்லை. இவளும் விடாமல் அழைத்து அழைத்துப் பார்த்து சலித்துப் போனவள் ‘யாரோ ஃபிரண்டுக்கு மேரேஜா இருக்கும், அதான் வர சொல்றார்’ என்று நினைத்தவள் அவன் சொன்ன படியே காலையில் கிளம்பியிருக்க, அவன் கார் எடுத்து வந்தான். அதில் ஏறி அமர்ந்தவள் டிரைவர் சீட்டிலிருந்த அவனைப் பார்த்து, “என்ன கார் எல்லாம்?” என்று கேட்க அவனிடம் பதில் இல்லை.
‘சரிபோ! எப்படி இருந்தாலும் தெரியதான போகுது!’ என்று நினைத்து இவளும் அமைதியாகி விட கார் ஊர் எல்லையை எல்லாம் தாண்டி சற்று ஒதுக்குப் புறமாக சென்று நின்றது. அவளை இறங்கச் சொல்லி இவன். இறங்கி பின் சீட்டில் இருந்த இரண்டு மாலைகளையும் எடுக்க, ‘நாம நினைச்சது போலே யாருக்கோ திருமணம் போல!’ என்று நினைத்தவள், அவன் முன்னே செல்ல இவளும் பின்னால் சென்றாள். மரங்கள் அடர்ந்த இடத்தைத் தாண்டி உள்ளே சென்றால் ஓர் ஐயனார் கோவில் இருந்தது. அங்கு இவன் நண்பர்கள் யாரும் இல்லாமல் இவர்கள் மட்டும் பூட்டின கோவில் வாசலில் நிற்க
“என்ன ஷியாம், யாரும் இல்ல போல?! யாருக்குக் கல்யாணம்?” என்று அவள் சுற்றும் முற்றும் கண்களால் ஆட்களைத் தேட, அவனோ “நமக்குத் தான் கல்யாணம்” என்றான் நிதானமாக! அதைக் கேட்டு ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது போல் அவள் ஓர் அடி பின்னே நகர,
“இங்க பாரு மித்ரா! நான் சொல்றத பொறுமையா கேளு. நான் ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சி தான் இந்த முடிவ எடுத்திருக்கேன். அதுவும் ஒரு வாரமா யோசிச்சது. என் தங்கச்சி ஒரு மினிஸ்டரோட பையனக் காதலிக்கிறா. அவனும் தான்! ரெண்டு பேரும் பிடிவாதமா இருக்காங்க. அதுக்கு எங்க அம்மாவும் சப்போர்ட்டு. ஆனா அந்த பையனோட அப்பா ஒத்துக்கல. இதையெல்லாம் என் மாமா கிட்ட அதான் அம்மாவோட தம்பி கிட்ட சொல்லி எப்படியாவது அந்த பையனுக்கே என் தங்கச்சிய முடிக்கச் சொல்லி உதவி கேட்டு முடிக்கும் படி பிடிவாதமா இருக்காங்க என் அம்மா. அதுக்கும் என் மாமா உதவி செய்றனு சொல்லிட்டாரு. ஆனா அதுக்கு பதில்..” என்று கூறி அவன் அவள் முகம் பார்க்க
“அதற்கு பதில்?” என்றாள் இவளும் அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி. “எனக்கும் அவர் பொண்ணுக்கும் கல்யாணம் நடத்திவைக்க சொல்லி கேட்கறார் என் அம்மா கிட்ட” என்றான் தலையைக் குனிந்து கொண்டே
“அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க?” - மித்ரா
“மித்ரா, நான் என் மாமா கிட்டையும் அம்மா கிட்டையும் நம்ம காதல் விஷயத்த சொல்லல. சொன்னா என்ன வெளிய வர விடாம ஹௌஸ் அரெஸ்ட் பண்ணிடு வாங்க. கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க. அதனால நான் அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டனு மட்டும் தான் சொன்னன். இன்னொன்னு, அவங்களுக்கு என் சம்மதம் எல்லாம் முக்கியம் இல்ல!
நான் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன். பிடிவாதமா இருக்காங்க எங்க அம்மா. மாமாவோ அவர் பொண்ண தான் கட்டி கொடுப்பேனு பிடிவாதமா இருக்கார். அதுக்கு தான் இந்த முடிவு. நாம கல்யாணம் பண்ணிகிட்டு அவங்க முன்னாடி போய் நிக்கணும்! இப்போ மித்ரா தான் என் மனைவி, இதற்கு மேல் உங்களால் என்ன செய்ய முடியும்னு நான் கேட்கணும்!” என்றான் பல்லைக் கடித்து கொண்டு ஷியாம்.
அவன் பேசிய அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவள், “சரி, அதுக்கு எதுக்கு யாருமே இல்லாமல் இப்படி ஒரு திருட்டு கல்யாணம்? அதுவும் இந்த.காட்டுல! வேணாம் ஷியாம், கொஞ்சம் பொறுமையா இருந்து யோசிச்சிப் பாருங்க! அவசரத்தில எந்த முடிவும் எடுக்காதிங்க. நீங்க உங்க அப்பாகிட்ட பேசுங்க. அவர் என்ன சொல்றார்னு பார்த்துட்டுப் பிறகு முடிவு எடுக்கலாம்.
எனக்கும் தாத்தானு ஒருத்தர் இருக்கார். என்னதான் அவர் என்ன அவர் கூடவே வெச்சி வளர்க்கலனாலும் வளர்த்த கடமைக்காகவாது நான் அவர்கிட்ட நம்ம விஷயத்த சொல்ல வேணாமா? அவருக்குத் தெரியாம நான் எப்படி கல்யாணம் பண்றது? இதுல யோசிக்கறதுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதனால இப்ப வீட்டுக்குப் போகலாம் வாங்க” என்று அவனிடம் நிதானமாக எடுத்துச் சொல்லி அவள் முன்னே இரண்டு அடி வைக்க
“மித்ரா, இப்போ இந்த நிமிடம் இந்த கல்யாணம் நடக்கலனா அப்பறம் நான் வேற ஒருத்திக்கு சொந்தமாகிடுவன்! பிறகு உனக்கு நான் கிடைக்காமலே போய்டுவன்!” என்று அவன் அவளை எச்சரிக்க.
“பரவாயில்ல, நீங்க அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கங்க. பெத்தவங்கள நோகடிச்சிட்டு அவங்களுடைய கண்ணீரிலோ சாபத்திலோ நாம வாழ வேண்டாம்!” என்று இவள் முன்னை விட நிதானமாக எடுத்துச் சொல்ல
“அப்ப நீ என்ன காதலிக்கல! ஏதோ சும்மா கொஞ்ச நாள் என்கிட்ட பேருக்குனு பழகி இருக்க! நான் இல்லனாலும் உன்னால வாழ முடியும்னு சொல்ற. அதனால் தான் இன்னொருத்திக்கு என்ன விட்டுக் கொடுக்கற!” என்று ருத்ரமாக கத்தியவன் அவன் கையிலிருந்த மாலைகளைக் கீழே போட்டுவிட்டு கையில் வைத்திருந்த டப்பாவைத் திறந்து தாலியுடன் கூடிய மஞ்சள் கயிறை எடுத்தவன், “என்ன ஆனாலும் சரி, இதை உன் கழுத்தில் கட்டியே தீருவேன்!” என்று சொல்லிக்கொண்டே அவளை நெருங்க, ஒரு கையால் அவன் கையில் இருந்ததைப் பிடிங்கி தூர வீசியவள் அவன் பதட்டத்தில் அது எங்கே என்று தேடும் நேரத்தில் அவனைப் பிடித்து தள்ளினாள்.
அவளைப் புடவையில் வரச் சொன்னவன், வீட்டிற்குப் பயந்து அவன் மட்டும் பேண்ட் ஷர்ட்டில் வந்திருக்க, அவனைப் பிடித்துத் தள்ளும்போது அவன் வலதுபக்க பேண்ட் பாக்கெட்டில் வைத்த கார் சாவியின் கீசெயின் வெளியே நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் சற்றும் யோசிக்காமல் அதைப் பிடுங்கியவள், “நீங்க என்ன சொன்னாலும் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டன்! உங்க ஃபிரண்டு யாருக்காவது போன் பண்ணி வந்து உங்கள கூட்டிட்டுப் போக சொல்லுங்க. இப்ப நான் நீங்க எடுத்துட்டு வந்த கார்ல போறேன்” என்று வேகமாக சொன்னவள் அதே வேகத்துடன் அவள் அங்கிருந்து நடக்க, ஒரு பெண்ணிடம் காதலில் தோற்றுவிட்டோம் என்று நினைத்த அந்த ஆண்மகனோ அவளிடம்,
“நில்லு மித்ரா! காலையில நான் உன்கிட்ட பேசினதுக்கு அப்பறம் நான் என் போன ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டேன். நான் அத ஆன் பண்ண மாட்டன். நீ சொல்ற மாதிரி நான் யார்கிட்டையும் பேச மாட்டேன், என்கிட்டையும் யாரும் பேச முடியாது. நான் இங்கு வந்ததையும் யாரிடமும் சொல்லல. நீ இப்ப இங்கிருந்து போனாலும் நான் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டன். இங்கையே இருந்து செத்தாலும் சாவேனே தவிர நகர மாட்டேன்!” என்று பிடிவாதத்துடன் பேசியவன் அதே பிடிவாதத்துடன் அங்கையே உட்கார்ந்து விட,
அதைப் பார்த்த மித்ராவோ ஒரு வினாடி தான் தயங்கினாள். அடுத்த நொடி ஒரு அலட்சிய பாவத்துடன் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவள். ரூமுக்கு வந்து காலை டிபனை சாப்பிட்டவள் காலேஜ்ஜுக்கு போகாமல் அவள் துணிகளை துவைத்துக் காயவைத்துப் பின் தூங்கிவிட, மதியம் ஒன்றறை மணிக்கு லன்ச்சுக்கு அவள் பக்கத்து ரூம்மெட் வந்து எழுப்பும்வரை அவள் எழுந்திருக்கவில்லை. பிறகு எழுந்தவள் நிதானமாக சாப்பிட்டு விட்டு ஷியாம் நம்பருக்கு அழைக்க அது ஸ்விட்ச்ஆப் என்று வந்தது. திரும்பத் திரும்ப அழைக்க அப்படியே தான் வந்தது.
இந்த வினாடி வரை காலையில் அவன் சொன்னதை அவள் சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ மிரட்டுகிறான் என்று தான் நினைத்தாள். அதனால் தான் அவளால் சாதாரணமாக இருக்க முடிந்தது. ஆனால் இப்போது அவளால் அப்படி இருக்க முடியவில்லை. அவள் மனதுக்குள் ஏதோ பிசைய, ‘இப்போது என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவள் அவளுக்குத் தெரிந்த ஷியாமின் நண்பன் ஒருவனுக்கு அழைக்க, ‘தொடர்புக்கு வெளியில்’ என்று வந்தது. ‘இதற்கு மேல் தாமதிப்பது தப்பு!’ என்று நினைத்தவள் ஓர் சுடிதாரை எடுத்துப் போட்டுக்கொண்டு அதே காரிலேயே அந்த இடத்தை அடைய, அவள் காலையில் நினைத்ததுக்கு எதிர்மறையாக அதே இடத்திலேயே அமர்ந்திருந்தான் ஷியாம்.
நேரமோ மாலை ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்கே அந்த இடம் லேசாக இருண்டிருந்தது. மூச்சிறைக்க ஓடி வந்தவள், மனதில் முதல்முறையாக பயத்துடனே அவனை நெருங்கி “ஷியாம்!” என்று உளுக்க, அவள் வந்தது தெரிந்தும் அவன் அசையவில்லை. “ஷியாம், இந்த பிடிவாதம் வேண்டாம்! வாங்க போகலாம்” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து அவள் இழுக்க, அவள் கையை பட்டென்று தட்டிவிட்டவன் “என்ன தான் வேணாம்னு சொல்லிட்டுப் போய்ட்ட இல்ல? இப்ப ஏன் வந்த? போ!” என்றான் அன்னிய குரலில்.
“நான் எப்போ ஷியாம் உன்ன வேண்டாம்னு சொன்னன்? இப்போ கல்யாணம் வேண்டாம்னு தான சொன்னன்?” என்று சொல்லியவள் மீண்டும் அவன் கையைப் பற்ற நினைக்க, அதற்குள் ஷியாம் வெறிகொண்டவன் போல் தன் இரண்டு கையாலும் அவள் தோள்களைப் பற்றியவன், “எனக்கு இப்பவே இந்த நிமிஷமே நம்ம கல்யாணம் நடக்கணும்! இல்லனா நான் சாகணும்! எனக்கு தான் யாரும் இல்லையே?! பிறகு யாருக்காக நான் வாழணும்? நீபோ! உன் சந்தோஷம் தான உனக்கு முக்கியம்? உன் இஷ்டப்படி நீ வாழு!” என்று கத்தி அவளைப் பிடித்துத் தள்ளியவன் அவன் பக்கத்தில் மண்ணில் கிடந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து உடைத்து தன் கையைக் கீற, ரத்தம் கொட்டியது!
கீழே விழுந்த மித்ராவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அடுத்து அந்த பாட்டிலைத் தன் கழுத்தில் வைத்து, “பாரு மித்ரா, நான் ஏதோ சும்மா சொல்றனு நெனைக்கற இல்ல?! உன் கண்முன்னாடியே கழுத்த அறுத்துகிட்டு சாகப் போறன்” என்று சொல்லிக்கொண்டே பாட்டிலை அழுத்த, பார்த்துக் கொண்டிருக்கும் மித்ராவுக்கோ கை கால்கள் உதற நெஞ்சு படபடக்க கண்கள் இருட்டிக்கொண்டு வர, ‘ஐயோ என்னால் ஓர் உயிர் போய்விடுமோ?!’ என்று பயந்தவள் அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் அவள் காலையில் வீசியெறிந்த தாலியைத் தவழ்ந்தபடியே அந்த மண்ணிலிருந்து தேடி எடுத்தவள், தவழ்ந்தே சென்று அவன் எதிரில் மண்டியிட்டு அமர்ந்தவள், அந்த தாலியை அவனிடம் நீட்டி “கட்டு ஷியாம்!” என்று சொல்ல அவனோ பாட்டிலை விலக்காமலும் பேசாமலும் இருக்க.
அதைப் பார்த்தவள் கண்ணில் நீர் திரள, அவளே அந்தப் பாட்டிலை அவன் கையிலிருந்து பிடுங்கி வீசி எறிந்துவிட்டுப் பின் தாலிகயிற்றின் இரண்டு ஓரத்தையும் அவன் இரண்டு கைக்குள்ளும் வைத்துத் திணித்தவள் அவன் கட்டுவதற்கு வசதியாக அவன் இரண்டு கையையும் பிரித்து தன் இருதோள்களிலும் வைத்து, அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு “ப்ளீஸ் ஷியாம், தாலி கட்டு! நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்!” என்று கெஞ்சினாள் மித்ரா! அவள் கண்ணிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்ட அந்த கெஞ்சலும் இந்த கண்ணீரும் அவனுக்குப் புதிது! இப்படி ஒரு மித்ராவை அவன் இதுவரை பார்த்தது இல்லை! அது அவன் மனதைச்சுட, எந்த மறுப்பும் சொல்லாமல் அவள் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான் ஷியாம்.
முடிந்தது மித்ராவின் திருமணம்! அவள் கண்ட கனவுகள் எல்லாம் மண்மேடாகப் போக சொந்தபந்தம் இல்லாமல் ஐயர் இல்லாமல் மேளதாளம் இல்லாமல் ஏன் ஒரு அட்சதை கூட இல்லாமல் வனாந்திரக் காட்டுக்குள்ளே பாழடைந்த கோவிலில் ஒரு விளக்கு வெளிச்சம் கூட இல்லாமல் வவ்வால்கள் பறக்க ஆந்தைகள் கத்த வண்டுகளின் ரீங்காரத்தில் ‘யாருமே இல்லாத நாம் ஓர் அனாதை தான்’ என்ற அவள் எண்ணத்தை வலு சேர்ப்பது போல் அனாதையாகவே நடந்தது அவள் திருமணம்.

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 27
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.